அவர் எங்களுக்கு எப்படி அறிமுகமானார் என்பது இப்பவும் வியப்பாகவே உள்ளது . நானும் எனது நண்பரும் கணிப்பொறி வரைகலை ஆபிஸ் ஒன்றை புதிதாகத் துவங்கியிருந்தோம். அருகில் சிறிய கடைகளும், நிதி நிறுவனங்களும், மெக்கானிக் ஒர்க்ஷாப்களும் இருந்தன. அவர்களுடன் பழக சில நாட்கள் ஆயின.
ஒரு மாதம் கடந்த நிலையில் , ஆபிஸ் வாசலில் அவர் உறங்கிக் கிடந்தார். அவரை எழுப்ப தயங்கினாலும் , ஆபிஸை திறக்க அவரை அவரை எழுப்பித்தான் ஆகவேண்டும். அழுக்கேறிய சட்டை, நைந்து கிழிந்த டெனிம் ஜீன்ஸ், கழுத்தை மறைக்கும் பாசிகள், உறக்கத்திற்கு முன் விடுவிக்கப்பட்ட மங்கலான மூக்குக் கண்ணாடி இதனுடன் வலக்கையை தலைக்குக் கொடுத்து உறங்கிக் கிடக்கும் அவரின் தோற்றம் பார்ப்பவர்களின் பார்வையில் பரிதாபத்தைத் தொற்ற வைக்கும்.
’அய்யா.. அய்யா.. கொஞ்சம் எந்திரிங்க ஆபிஸைத் திறக்கனும்’ என்றேன் அவரிடம்,
சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. மீண்டும் ஒரு முறை முயற்சித்து பலனில்லை என்றதும்.. அய்யா என்ற கழிவிரக்கம் இப்பொழுது யோவ் எனசுயநலமாக மாறி அவரை எழச்செய்தது. கண்களைச் சுருக்கி விரித்துப் பார்வையைச் செலுத்தி சுதாரித்து எழுந்தவர்..
’ஹலோ குட்மார்னிங் சார்..சாரி பார் தி டிஸ்டபர்ன்ஸ்.. எக்ஸ்கியூஸ் மீ ..’ என்றவாறு சட்டென தனது உடைமைக எடுத்துக் கொண்டு நகர்ந்து நின்றபடி என் பார்வை அவர்மேல் விழும் தருணத்தில் என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
ப்ச்ச்..இன்னைக்கு காச வாங்காம நகரமாட்டாம் போல..எவம் மூஞ்சில முழிச்சனோ எனச் சலித்தவாறு.. நகைமுரணாய். அய்யா என்ன வேணுங்க..என்றேன் விரட்டும் தொனியில்.. `நத்திங் சார்.. ஷேல் அய் க்னோ யுவர் குட்நேம் ப்ளீஸ்..’ எனக் கேட்டவாறு புலமைக்கும் , தோற்றத்திற்கும் தொடர்பில்லை எனும் அறிஞர்கள் சொல்லை நிரூபித்தார். அதிலும் அவர் கேட்ட கேள்விக்கான பதிலை அவர் பேசிய மொழியிலேயே தரவேண்டியதில்லை என்ற தளர்வு என்னை சற்று ஆசுவாசப்படுத்தியது.
`எம்பேரு முருகனுங்க’.
`வாவ் நைஸ் நேம்.. முருகன் சார் ப்ளீஸ் கிவ் மீ தட் மாப் , அய் வில் க்ளீன் தட் ஏரியா விச் அய் வாஸ் ஸ்லீப்டு..’ எனக்கேட்டதும், மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என எழுத்தாளர் ஜி. நாகராஜன் சொல்லியிருந்தது நிரூபணமானது. ஆம், அவர் மனித நிலையிருந்து விலகி ஒரு மகோன்னத நிலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். சற்றுமுன்னம் அவர் மேல் காட்டிய சலிப்பும்,வெறுப்பும் இந்த ஒற்றை வார்த்தையால் மனிதன் என்ற என் பிம்பத்தை சல்லி சல்லியாக நொறுக்கி விட்டிருந்தார். அவர் ஒரு மனம் மாற்றுத் திறனாளி என்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. சக மனிதனுக்கு சிரமம் தராமல் நடந்துகொள்ள, மனிதத்துடன் நடந்துகொள்ள மனம் பிறழ்ந்த நிலையை எட்டினால்தான் சாத்தியப்படுமோ என்றெல்லாம் தோன்றியது.
`அய்யா நானே பாத்துக்கறேன்..’ என்றதும் விடுவிடுவென நடந்தவர் சட்டெனத் திரும்பி வந்து.. `முருகன் சார் மன்னிக்கனும் ஒரு ரெண்டுவார்த்தை பேசலாமா/?’ என்றார். கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தது. இவரோடுபேசிக்கொண்டிருப்பதை பார்த்துக் கடக்கும் அனைவரின் பார்வையிலும் அலசப்படும் எனது குணாதிசயம், ஏறி இறங்கும் மரியாதை, இவன் யார் என்ற உள்ளத் தோண்டல்கள் இவற்றை நான் உணராதவனில்லை இருந்தும் அதை மறைக்க முயன்று விழிபிதுங்கி நின்றேன். அதனைப்பற்றி அவர் கவலைப் படாதவராய்… `
`மை நேம் இஸ் திருநாவுக்கரசு.. அய் க்னோ கிராபிக் டிசைன்.. ஆல் டைப்ஸ் ஆப் ஆர்ட் வொர்க்ஸ்.. அய் சா யுவர் ஆபிஸ் போர்டு. இட் வாஸ் வொன்டர்புல். தாய்க்கும் குழந்தைக்குமான பாசத்தை , அன்பை அந்த ஆர்ட் வெளிப்படுத்திச்சு. சச் எ கிரேட் ஒன் சார். ஆர் யூ வொர்க்ட் திஸ் இமேஜ் இன் போட்டோஷாப்?’ என நிறுத்தியவரை, `அஞ்சே நிமிசம் ஆபிஸைக் கிளீன் பண்ணியதும் உக்காந்து பேசலாம்’ என்றேன். அதை மறுத்தவராய், `நான் சொல்லவர்ரத சொல்லிர்ரேன் அதர்வைஸ் ஐ பர்காட் எவ்ரிதிங்.. நேத்து நைட் சாப்பிட்டு வர்ரப்பத்தான் போர்ட்ல இருந்த ஓவியத்தப் பாத்தேன். அம்மாவின் அரவணைப்பில் மகிழும் குழந்தை.. ப்ச்..எனக்கு எங்கம்மா நியாபகம் வந்திருச்சு. அவங்ககூட பேச ஆசையா இருஞ்சு. தென் ஐ ஸ்லெப்ட் ஹியர்..ஷி கேம் இன் மை ட்ரீம் அண்ட் ப்லெஸ்டு மீ லாங் லிவ் மை சன். அப்படியே.. அப்படியே….. கண்கலங்க ஏம்மா என்ன விட்டுப் போனன்னு சொல்லி அவங்க காலக் கட்டிட்டு அழுகறேன்.. முழிச்சுப் பார்த்தா வாட் எ மிராக்கிள் நீங்க நிக்கறீங்க..’ அவர் இதைச் சொல்லி முடித்ததும் எனக்குள் ஒரு குற்றவுணர்ச்சி உருப்பெற்றது. அதனை வெளிக்காட்டாமல் புன்னகைத்து வைத்தேன். சட்டென அவரது அலைபேசி ஒலிக்க , அதை எடுத்துப் பேசத்துவங்கிய மறுகணமே மறுமுனையில் பேசுபவரை அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் அர்ச்சித்துக்கடந்தார். அவர் பேசியபடி கடந்ததும் மனம் கல்லெறிபட்ட குளமாய் அலையடிக்கத்துவங்கியது. யார் இவர்? இவருக்கு எதனால் இப்படி ஆனது? யாரிடம் இதைக் கேட்டறிவது? என்றெல்லாம் மனதுக்குள் பேசியபடியே அன்றைய பணிக்குள் மூழ்கினேன்.
அடுத்து வந்த நாட்களில் எங்களது ஆபிஸ் வாசலில் அவர் உறங்கவில்லை. சில நாட்களில் பகலிலும், ஏதேனுமொரு நாளில் அதிகாலையிலும் அலைபேசியில் யாரிடமோ தர்க்கம் செய்தபடி இருப்பார். அவரைக் காணும் பொழுதெல்லாம் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள மனம் ஆர்வம் கொள்ளும். அவ்வப்பொழுது அக்கம் பக்கத்துக் கடைக்காரர்களிடம் விசாரித்ததில்.. அந்தாளு ஒரு மாதிரி, நல்லாவே பேசுவான் திடீர்னு டேப்பரா மாறி கெடாசுவான்.. மெண்டலுங்க! அந்தாளப் பத்தி எதுக்கு இவ்வளவு ஆர்வமா விசாரிக்கறீங்க என்ற எதிர் கேள்வியைப் பெற்றுத் திரும்புவேன்.
சரியாக ஒரு மாத காலம் என் கண்ணில் அவர் படவேயில்லை. திடீரென ஒரு நாள் பெயர் பெற்ற மனநல மருத்துவமனைக்காக விசிட்டிங் கார்டு அடிக்க வந்தார். பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பின்னர் அவருக்கென நேரம் ஒதுக்கி டிசைன் செய்து கொடுத்தேன். ஓரிரு நாட்களில் டிசைனை பிரிண்ட் செய்ய முன்பணம் கொண்டு வருவதாய் சொல்லி விட்டுச் சென்றார். அவர் சென்ற பின்னர், இந்த மருத்துவ மனையில் யார் இவரிடம் இந்தப் பணியை வழங்கியிருப்பர்? இல்லை இவரே வேண்டுமென்று அடிக்கறாரா? போன்ற பதிலற்ற குழப்பமான கேள்விகள் கர்ப்பம் தரிக்க பிண்ணிப் பிணையும் சர்ப்பங்கள் போல மனதில் பிணைந்தது. இருப்பினும் கார்டை டிசைன் பண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் , அதற்கான படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்ய அவர் வழிகாட்டிய இணையதள முகவரிகள் என்னை பிரம்மிக்கச் செய்தன. முகவரிகள் அனைத்தும் உலகத்தரம் பெற்றவை.
ஒரு மாதத்திற்குப் பின்னர் ஓய்வு நேரத்தில் நானும் எனது நண்பரும் உரையாடிக் கொண்டிருந்தோம். எனது அலைபேசிக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
-ஹலோ.. மேடம் சொல்லுங்க .. ஆமாங்க முருகன்தான் பேசுறேன், மறுமுனையில் அவர் டிசைன் செய்து சென்ற மருத்துவமனையின் உயர் பொறுப்பிலிருக்கும் பெண் மருத்துவர் அழைத்திருந்தார்.
-ஆமாங்க மேடம். அரசு சாருங்களா? சரிங்க அப்படியே பண்ணிடறேன். நன்றிங்க மேடம். அழைப்பைத் துண்டித்ததும், யாரு மாப்ள லைன்ல என நண்பர் வினவினார்.
-நம்ம அரசு இருக்கார்ல அவருக்கு ட்ரீட்மெண்ட் குடுக்குற டாக்டரம்மா.. இடைல எங்கடா ஆளு காணுறது இல்லேன்னா இப்பத்தான் தெரிது.
-ஏம்மாப்ள ஆஸ்பிட்டல்ல இருந்து எஸ்சாயிட்டாரா?
-இல்ல மாப்ள, இப்பவும் ட்ரீட்மெண்ட்லதா இருக்காராம். அதும் அவருக்கிருக்கிற வியாதிய சரி பண்ணனும்னா அவருக்குப் பிடிச்சத செய்ய விடனுமாம். இவரு ஒரு காலத்துல கிராபிக் டிசைனரா இருந்திருக்காராம்.
-ஓ அதான் விசிட்டிங் கார்டு டிசைன் பண்ண வந்தாராமா?
-ஆமாம்.. மாப்ள டாக்டரம்மாதா பண்ண சொன்னாங்களாமம். இப்ப அமௌண்ட் கொடுத்துவிட்டிருக்காங்களாம். பிரிண்ட் போட்டு அனுப்பிருங்க மறுபடியும் அங்க வராம பாத்துக்கறேன்னாங்க! என்றதும்,
-பாத்தா நல்ல மனுசனாட்டமா தெரிது எதனால இப்படி ஆச்சோ? என நண்பர் பேசி முடிக்க.. எனக்குள்ளிருக்கும் அவரின் பிம்பம் உயரத்துவங்கியது. உச்சகட்ட கோபத்தையோ, வெறுப்பையோ வெளிப்படுத்தத் தவறியோ, அன்பு காட்ட யாருமின்றி தனித்தலைய நேர்ந்ததாலோ, மனதிற்குள்ளேயே குமைந்து அவரின் எண்ணத்தில் முடிச்சு விழுந்து இந்நிலைக்கு அவர் ஆட்பட்டிருப்பார் என்பது எனது எண்ணம். ஏன் நான் மட்டும் அவரிடம் பரிவு காட்டுகிறேன்? கட்டுகளற்று உலவும் அவரிடம் கடிவாள வாழ்க்கை வாழும் நான் பரிவு காட்டுவது பொதுச் சமூகத்தில் என் போலவே அவரும் ஒரு சக மனிதன் என்ற அந்தஸ்த்தையும், கௌரவத்தையும் பெற வேண்டுமென்ற உந்துதலா? வேறு எது? அவர் இழந்த வாழ்வை கட்டாயம் என்னால் மீட்டிட இயலாது. இருப்பினும் அவரின் இருண்ட பக்கங்களைத் தேடித் தெரிந்து கொள்வதின் முனைப்பு எனக்கே பிடிபடவில்லை.
ஒரு வாரம் கழிந்த நிலையில் வந்த அவர் விசிட்டிங்கார்டைப் பெற்றுச்சென்றார். நாட்கள் செல்லச் செல்ல வேலைப் பழுவின் காரணமாய், அவரை எங்கேனும் கண்ட ஓரிருவர் தரும் தகவல் மட்டுமே அவரின் இருப்பை எங்களுக்கு அடையாளப்படுத்தியது. இவ்வாறாக உருண்டோடிய சில மாதங்களுக்குப் பின்னர் ஒரு சைட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தோம். எனது அலைபேசி புதிய எண்ணை முகத்தில் காட்டி அதிர்ந்தது. அழைப்பை ஏற்று, ஹலோ … யாருங்க? என்றேன்.
-யா.. கேன் ஐ ஸ்பீக் டு முருகன் சார்! என்றது எதிர்முனைக்குரல்.
-முருகந்தான் பேசுறேன்.. என முடிக்கும் முன்னமே, நீங்க அரசுங்களா! என்று அவரின் குரல் பரிச்சியத்தை வைத்து நானே கேட்டுவிட்டேன்.
-எஸ்..எஸ்.. அரசு ஸ்பீக்கிங். ஹவ் ஆர் யு முருகன் ? ஆர் யு இன் ஆபீஸ்?
-நான் கொஞ்சம் வெளிய வந்துட்டங்க.. சாயந்தரம்தான் வருவேன்.
-ஓ…. ஐசீ….. வீ.. வில்.. மீட்.. இன்… தி…. ஈவ்னிங் . பை.
பதிலுக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்து விட்டார்.
மாலை நேரம் ஆபிஸுக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில். நைட்டு வீட்டுக்கு வர்ரப்ப மார்க்கெட்ல ஏதாச்சும் நல்ல கீரையாப் பாத்து வாங்கிட்டு வாங்க என்ற மனைவியின் குரல் அசரீரியாய் ஒலிக்க. மார்க்கெட்டுக்குள் நுழைந்தேன். நேராக கீரை விற்கும் கடை முன்னம் நின்றதும் , சிகப்பு நிற பற்கள் காட்டி வரவேற்ற அம்மாவுக்கு அரசு சாரின் சாயல். அவரின் அம்மாவாக இருக்குமோ? கேட்கலாமா? வேணாமா ? என்ற போராட்டத்தை எந்தக் கீரை வேணுங்கண்ணு குரல் உடைத்தது.
-நல்லதாக் குடுங்கம்மா..
-காட்டுக் கீரை இருக்கு வாங்கிக்கிறயாப்பா? உடம்புக்கு நல்லதுப்பா.
-மத்த கீரையில இல்லாதது இதுல மட்டும் என்ன இருக்குங்கம்மா?
-இதப் பதியம் போட்டு வளர்க்கவேண்டியது இல்ல….. எந்தத் தண்ணிக்கும் தானா வளரும்…. ருசி மாறாது…. கட்டு 10 ருபாதா எடுத்துக்க சாமி! என்றதும் அந்தம்மாவின் பேச்சுக்கு மறுபேச்சின்றி இரண்டு கட்டுக்களைப் பெற்று ஆபீஸ் திரும்பினேன்.
ஆபிஸூக்குச் சென்று கதவு திறக்கையில், டிப்டாப் ஆசாமி ஒருவர் என்னைப் பெயர் சொல்லி அழைத்தார். யாரென்று அறிய முற்படுகையில் மீண்டும் அதே குரல்..
-முருகன் சார் கான்ட் யூ ரிமெம்பர் மீ யா? என்றதும், மனதுக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி. ஆம் அந்த டிப்டாப் ஆசாமி அரசு சார்தான்.
-என்ன சார் சினிமா மாஸ் ஹிரோவப் போல செம சேஞ்ச் ஓவர் காட்டுரீங்க..சினிமாலயே நடிக்கலாம் போல! என்றேன்.
-தேங்க் யு முருகன் சார் உங்களைப் போல வெல்விஷ்ஷர்ஸ் அண்ட் காட்ஸ் கிரேஸ்னாலதா , ஐ ஏம் கோயிங் டு டைரக்ட் ஒன் ப்லிம். இத சொல்லிட்டுப் போகத்தா வந்தேன்.
-ஷாக் மேல ஷாக்கா கொடுக்கறீங்க..வாழ்த்துக்கள் சார். படம் பூஜை போட்டாச்சுங்களா? என்ன பேருங்க? ஹிரோயின் செலக்ட் பண்ணிட்டிங்களா? எனக்கும் நடிக்க சான்ஸ் தருவீங்களா உங்க புண்ணியத்தில நானும் வளந்துக்கறேன்! என்றேன் நான்.
-ஒய் யு ஆஸ்கிங் லைக் திஸ்? டெப்பனட்லி ஐ வில் கிவ் யு த சான்ஸ். ஒரு வித பரவசத்துடன் கூறினார்.
-த நேம் ஆப் தி ப்லிம் இஸ் “காட்டுக் கீரை”. என படத்தின் பெயரை அவர் உற்சாகமாகக் கூறிவிட்டு.
ஐ லவ் சுமிதாபாட்டீல்.. நேஷனல் அவார்டு வின்னர். அந்தமாதிரி ஹிரோயினத் தேடுறேன். வாட் எ டேலண்டட் வுமன் ஷி இஸ்.
-என்ன சார் வித்தியாசமா கீரப் பேர படத்துக்கு வச்சிருக்கீங்க..எனக்குறுக்கிட்டேன்.
-முருகன் சார் இது அவார்டு வின்னிங் படமா வரும். தியேட்டர்ல படம் பாக்குற ஒவ்வொருத்தரோட உச்சியப் பிடிச்சு உலுக்கும். தட் டைம் யு ஆர் நியர் பை மீ.. ஐ வில் ஷோ யூ.. என்றவரின் பேச்சில் தன்னம்பிக்கை தெரித்தது.
-ஒன் லைன் ஸ்கிரிப்ட் சொல்லுங்க சார்! என்றதும்.
-முருகன் சார் உலக மனோதத்துவ நிபுணர் சிக்மெண்ட ப்ராய்டை உங்களுக்குத் தெரியுமான்னு ஐ டோன்ட் க்னோ.. பட் அவரோட பார்வையிலிருந்து இத எழுதிருக்கேன். சொந்தங்களால் கைவிடப்பட்ட ஒருவன் தனிமையில புழுங்கி, சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்டு, மத்தவங்க தன்ன பைத்தியம்னு சொல்றத ஏற்கச்சகிக்காம தன்ன ஒரு மனுசன்னு நிரூபிக்கப் போராடுபவனோட கதைன்னு அவர் முடிக்கவும் சற்றே எனக்குத் தலை சுற்றியது. அவரைப் பற்றி அவரே என்னிடம் சொன்னது போல பட்டது அந்த ஸ்கிரிப்ட். பேச்சினூடே தனது அலைபேசியை வைத்துவிட்டு வெளியே சென்று எதையோ சாதித்து முடித்த நிம்மதியில் சடவு முறித்தவர் சிரித்தபடி வந்தார்.
-ஓக்கே முருகன் ஐ ஹேவ் லாட் ஆப் வொர்க்ஸ் டு டன் பார் திஸ் ப்லிம். ஐ வான்ட் டு மூவ். சி யு சூன் என்றுவிட்டு . தனது அலைபேசியைக் காதில் வைத்து … யா..யா.. ஐ ஆம் தி டைரக்டர் அரசு! எனக்கடந்தார். அப்பொழுது நான் அதிர்ந்தபடி கவனித்துக் கொண்டுதான்இருந்தேன், அவரது அலைபேசிக்கு எந்தவொரு அழைப்பும் வந்திருக்கவில்லை.
சில நாட்கள் கழித்து நாங்களும் ஆபிஸைக் காலி செய்து வேறிடம் சென்றுவிட்டோம். ஆபிஸ் இருந்த கட்டிடத்தை இடித்து விட்டு அப்பார்ட்மெண்ட் கட்டிவிட்டனர். எதேச்சையாக ஒரு நாள் அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்று கொண்டிருந்தேன். பழைய நினைவுகள் காற்றில் கலந்து மனதை ஆக்கிரமித்தது. அந்நினைவுகளுடனே எங்களின் ஆபிஸ் இருந்த பகுதியை உற்று நோக்கினேன், அன்று முதன் முதலாக அவர் உறங்கிக் கிடந்த தரையில் காட்டுக்கீரைகள் முளைத்திருந்தது.
மகிவனி
எனது பெயர் சு.மகேந்திரவர்மன். மகிவனி என்ற பெயரில் படைப்புகளை எழுதிவருகிறேன். கனத்தைத் திறக்கும் கருவி என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளேன்.கோவையில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிவருகிறேன்.