01

மறு கன்னத்தையும் பிறகு எல்லா பாகங்களையும் காட்டியாயிற்று. அறைகிறாய்.

புறம் போதாது அகமும் வேண்டும் என்கிறாய்.

கொடுத்தாகிவிட்டது.

இரண்டும் போதாது உயிர் வேண்டும் என்கிறாய்.

கொடுத்தாகிவிட்டது.

எல்லாம் இனிதே முடிகிறது.

இப்போது வந்து  உன்னொடு பேசவில்லை என்று கோபிக்கிறாய்!

சவம் எப்போது பேசியிருக்கிறது என்கிறேன்.

கேசாதி பாதம் வரை நோக்கிவிட்டு இரண்டு பேதி மாத்திரைகளை விழுங்குகிறது காதல்.

0

02

இப்போதுதான் கை கழுவுகிறேன் என்கிறாய்.

எப்போதோ ஆகிவிட்டது இப்போதுதான் உனக்கு தெரிகிறது என்றவாறு தொப்புளின்மீது பம்பரம்விடத் தயாராகிறது காதல்.

03

மீண்டும் எல்லாவற்றையும் முதலில் இருந்துத் துவங்குவோமா என்கிறேன். எதற்கு என்கிறாய்.

பழுக்கக் காய்ச்சிய தங்கக் கம்பியால் வாயில் சூடு போடுகிறது காதல்.

0

04

கவிதைக்கு எதிர்க் கவிதை எழுதுகிறாய்.

எழுத்தாளர் ஆகிவிட்டாய் என்கிறேன். இல்லை இல்லை எழுத்தாளரின் இரசிகர் ஆகிவிட்டேன்  என்கிறாய்.

இந்தப் பொழப்புக்கு பேசாம அங்க போயி அந்த வேலை பாக்கலாம் என்றபடி குதியாய்க் குதிக்கிறது காதல்.

0

05

எதற்காக பேசுகிறாய் என்கிறாய். கவிதைக்காக என்கிறேன்.

‘மிக எளிய வழியில் சாவது எப்படி’ என்னும் சோபல் பரிசு பெற்ற புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்கிறது காதல்.

0

06

இப்போது தெரிகிறதா யாருக்கு கொழுப்பென்று? என்கிறேன். நமக்கு என்கிறாய்.

அட! என்று அதிர்ந்தவாறு  இவ்வுண்மையைப் போற்றி  இணையோடு கூடப்போகிறது காதல்.

0

07

சாப்பிட்டாயா? என்கிறாய். மறுத்துவிட்டாயே! என்கிறேன். எப்போது? என்கிறாய். விவரிக்கிறேன்.

உங்களுக்கெல்லாம் வேற வேலை புண்ணாக்கே இல்லையா? என்றபடி உடல் முழுக்க சகதியுடன் வரப்புக் கட்டிக் கொண்டிருக்கிறது காதல்.

0

08

காதல் என்றால் என்ன என்கிறாய்.

ஒன்றுமில்லை நம் மரணத்தின்பின் ‘டீ காஃபிலாம் வேண்டாம்’ என்றவாறு தொண்டை கமற சற்று அதிகமாய் கதறுவது என்கிறேன்.

‘நீ யார்னு எனக்குத் தெரியும். மூடிட்டு இந்தாண்ட வா’ என்றவாறு பொடி தூவிய மாங்காய் கீற்றில் ஒன்றை பிய்த்து வாயில்போட்டுக்கொண்டே அன்பு செய்கிறது காதல்.

0

09

உன்னை கடித்துத் தின்ன வேண்டும் போல் உள்ளது என்கிறேன்.

வம்படியாய் என் வாயைத் திறக்கச் சொல்லி சொத்தைப் பற்களை விரல்விட்டு எண்ணிக் காட்டுகிறது காதல்.

0

10

நான் உனக்கு சலித்துவிட்டேன்போல என்கிறாய்.

என் முகம் பார்க்காமல் ‘கழுதைக்கி பட்டாத்தான் புத்திவருது’ என்றவாறு செதில் நீக்கப்பட்ட மீன்களைத் துண்டாக்குகிறது காதல்.

0

11

இன்னும் எவ்வளவு காலம் என்கிறேன். பதிலின்றி நிற்கிறாய்.

ஒரு பூரானைப் பிடித்து ஜட்டிக்குள் எறிந்துவிட்டு, ‘என்ஜாய் என்ஜாய்!’ என கிசுகிசுக்கிறது காதல்.

0

12

என்மீது உனக்கு அக்கறையே இல்லை என்கிறாய். ஏன் அவ்வாறு சொல்கிறாய் என்கிறேன்.

அன்றே பூரானுக்குப் பதில் கையளவு கட்டெறும்பை அள்ளிப் போட்டிருக்க வேண்டும் என்கிறது காதல்.

0

13

காதலர் தினம். ரோஜாவனம். வண்ணத்துப் பூச்சிகள் கொஞ்சும் அந்தி.

‘என்னை எவ்வளவு நேசிக்கிறாய்’ என்கிறாய் / என்கிறேன்.

என் கையை எடுத்து ‘அங்கே’ வைத்து ‘இன்னும் சற்று அழுத்திப்பிடி’ என்றவாறு கிறங்கும் தன் விழிகளை இறுக மூடிக்கொள்கிறது காதல்.

0

14

நீயொரு போலி என்கிறாய்.

எருக்கம் பஞ்சின் விதையில் தொங்கியவாறு கொண்டாட்டத்துடன்  பறந்துக் கொண்டிருக்கிறது காதல்.

0

15

உதட்டில் முத்தம் தா என்கிறாய். தருகிறேன்.

அவ்வளவுதான். இனி எல்லாம் சரியாகிவிடும்.

என்றவாறு  தன் செருப்பின் அடியில் ஏறிகிடக்கும் முட்களை பிடுங்குவதில் மும்முரமாயுள்ளது காதல்.

0

16

செத்துத்தொலை என்கிறாய்.

வெளுத்த தன் மயிர்களுக்கு வண்ணம் பூசும் வேலையை நீ பார் என்கிறது காதல்.

0

17

நினைத்துக் கொண்டார்போல் அலைபேசியில் அழைத்து  கூப்பிட்டாயா என்கிறேன். இல்லையே என்கிறாய். சரி பாருங்கள் என்றவாறு அழைப்பைத் துண்டிக்க முயல, ‘ஆம்ஆம் அழைத்தேன் பேசு!’ என கெஞ்சுகிறாய்.

எல்லாவற்றிற்கும் ஒரு அளவு உண்டு என்றவாறு தன் பின்பக்கத்தைச் சொரிந்து கொள்கிறது காதல்.

0

18

உன் நினைவு அனிச்சம் பூவின் அடர்த்தியென எப்போதும் என்மீது படர்ந்துள்ளது என்கிறேன்.

சற்றே உற்றுப்பார்த்து  ‘தேறுவது கடினம்’ என்கிறது காதல்.

0

19

பாடலை தூதாக அனுப்புகிறாய்.

பல நேரங்களில் அதில் ஏதும் புரிவதில்லை என்கிறேன். அன்பிருந்தால் புரியுமென்கிறாய். எதை பற்றி யார் பேசுவது என்கிறேன்.

வளர்கிறது.

இறுதியாக நம்முள் குடியிருக்கும் அதீத மேன்மை வெளிவர ஒருவரையொருவர் ‘அன்பு’ செய்கிறோம். தரையெங்கும் உதிரம் சொட்டிக்கிடக்கிறது.

தன் அரைக் கை சட்டைப் பையிலிருந்து சுருட்டினை எடுத்து பற்றவைத்தபடி நகர்கிறது காதல்.

0

20

நீ வேண்டும் என்கிறேன்.

மயிர்தான் உள்ளது என்று காணாமல் போகிறாய்.

இப்போது நீயும் அந்த கறுத்து நீண்ட மயிரும் வெகு பாதுகாப்பாக உள்ளீர்கள்.

தன் உள்ளாடை ஓட்டையை ஊசி நூல்கொண்டு சரி செய்தபடி உள்ளது காதல்.

0

21

உன்னிடம் பேசிய பிறகு கொஞ்சம் – ரொம்பக் கொஞ்சம் மகிழ்வாக உள்ளது என்கிறாய்.

நல்ல வெயில் நேரத்தில் விளக்கெண்ணெய் தேய்த்தல் தலையின் மயிர்க்கும் அதற்குள் மூளைபோன்று ஏதேனும் இருப்பின் அதற்கும் நல்லது என்கிறது காதல்.

0

22

‘லவ்யூ’ தவிர எல்லாமும் சொல்லியாகிவிட்டது என்கிறேன்.

‘நாயி நக்கிப்போட்ட தேங்காய் நீயென்று’ இப்போதாவது புரிந்துகொள் என்றவாறு ஊரின் பழுத்த கிழடென உச்சந்தலை மயிரை வாகாய் இழுத்து சொடக்கொன்று போட்டுக்காட்டுகிறது காதல்.

0

23

ஆப்பிள் வேண்டுமா கொய்யா வேண்டுமா என்கிறாய்?

ஊட்டும் விரல்கள் மட்டும் போதும் என்கிறேன்.

‘நக்க மாட்டாதவனுக்கு நானூறு நாக்காம்’ என்று கண்ணொடு கண் நோக்கி நிற்கிறது காதல்.

0

24

‘கிளம்புறப்போ சொல்லிட்டுப் போக மாட்டியா’ என்கிறேன்.

நீங்க ‘பிசியா இருப்பீங்கள்ல’ என்கிறாய்.

உண்மைதான். ‘நான் பிசியாத்தான் இருப்பேன். ஆனா, நீ ப்ரீயாதான இருப்ப! சொல்லிட்டுப் போக என்ன கேடு’ என்கிறேன்.

தன் கையிலுள்ள பிஸ்கட்டை தொலைத்த குழந்தையின் உடல்மொழியுடன் அருகே வந்து ‘உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக்கொள் என்கிறது’ காதல்.

0

25

‘பிடித்தவர்கள் எங்கிருந்தாலும் இரசிப்பேன்’ என்கிறாய்.

அதுவரை உள்ளங்கையில் தடவி நெற்றியில் தேய்த்துக்கொண்டிருந்த கோடாரி தைலத்தை பாட்டிலோடு தொண்டைக்குள் சரித்துக்கொள்கிறது காதல்.

0

26

‘இப்போதெல்லாம் நீ பழைய மாதிரி இல்லை’ என்கிறாய். ‘ஏன் அப்படிச் சொல்கிறாய்’ என்கிறேன். ‘உனக்கே தெரியும்’ என்கிறாய். ‘அப்படியா! அப்படி ஏதும் தோன்றவில்லையே’ என்கிறேன்.

கயிற்றுக் கட்டிலில் வெகு நிம்மதியாய் மல்லாந்துப் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறது தனது காதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு வந்திருந்த காதல்.

0

27

உன் கடமையைச் செய் என சினக்கிறாய்.

சற்று எரிச்சலோடு பேசுகிறேன். எதற்காக கோவப்படுகிறீர்கள் என்கிறாய். எரிச்சலுக்கும் கோபத்திற்குமான வேறுபாட்டை உணர்த்த விரும்பமின்றி வெளியேறுகிறேன்.

சப்தத்துடன் ரீல்ஸ் பார்த்தபடி அலைபேசித் திரையைத் தடவித்தடவி நகர்த்திக் கொண்டுள்ளது காதல்.

0

28

ஒரு செல்ஃபி அனுப்பேன் என்கிறேன்.

எப்போது எடுத்ததை அனுப்பயென வினவுகிறாய்.

உள்ளது உள்ளவாறு உடனே எடுத்து அனுப்புவதன் பெயர்தானே செல்ஃபி என்னும் ஐயத்தோடு வீற்றிருக்க காலத்துடன்  கபடி விளையாடியபடி உள்ளது காதல்.

0

29

மார்கழி திங்கள் என்றால் என்ன நினைவிற்கு வரும் என்கிறாய். நாயை நாய் துரத்தும் என்கிறேன். முறைக்கிறாய். ஏன் தவறாகச் சொல்லிவிட்டேனா என்கிறேன்.

தன் வாய்க்குள் கைக்குட்டையை நுழைத்துக்கொள்கிறது காதல்.

0

30

நமக்கு மணம் முடிந்திருந்தது. நம் அளவிற்கு வளர்ந்த மகள் இருந்தாள். ஆனால் இப்போது போலவே அப்போதும் தனித்திருந்தோம் என்கிறேன். பகல் கனவா என்கிறாய். இல்லை அதிகாலை கனவு என்கிறேன்.

மண்வெட்டியின் பிடியால் கனவின் உச்சி மண்டையில் அடித்துக் கொண்டிருக்கிறது

காதல்.

0

சுஜித் லெனின்

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவரான இவர் 2016 முதல் அச்சு மற்ரும் இணைய இதழ்களில் நுண்கதைகள் எழுதி வருகிறார். 2023 ஜனவரியில் ’பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்’ என்கிற சிறுகதை தொகுப்பு எதிர் வெளியீடு வாயிலாக வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *