காதில் விழுந்த தறிச் சத்தம்

எம்.கோபாலகிருஷ்ணனின்”அம்மன் நெசவு” நாவல்

ம்பிக்கைகள் மாய எதார்த்தம் கொண்டவை. இருப்பினும் எப்போதுமே அப்படியல்ல, வாழ்வின் ஓட்டத்திற்கு ஆற்றல் தரும் நம்பிக்கைகள் வாழ்வின் எதார்த்தமாகவே நிலைத்து விடுகின்றன. வாழ்வில் இருந்து கனவுகளும் கனவுகளில் இருந்து வாழ்வின் கூறுகளும் உதயமாகின்றன.  உண்மையில் அவை விலகியிருந்தால்தானே எதார்த்தத்திலிருந்து பிசகி மாயமாவதற்கு?

ஒருவேளை நம்பிக்கைகள் முழுவதையும் மனிதனிடமிருந்து துண்டித்தால் வாழ்வின் உயிரோட்டம் இயந்திரத்தின் விசையால் இயங்கும் வெறுமையை மட்டுமே பிரதிபலிக்கும். எம்.கோபாலகிருஷ்ணனின் எழுத்து இழைக்கண்டு போல் தீர்ந்து போகாமல் நீள்கிறது. 

எங்கள் ஊர் உயிரோடு இருப்பதன் அடையாளமாக இருந்தது ஓயாது ஒலிக்கும் தறிகளின் சத்தம். நெசவாளர்களின் இயக்கம் எண்ணற்றக் குடும்பங்களின் வெறுமையை இல்லாமல் செய்ததோடு வறுமையின் ஓலத்தையும் விழுங்கிக் கொண்டது. பதினான்கு வயது வரை தறிகளின் சத்தமில்லாமல் என்னுடைய நாட்கள் கழிந்தது இல்லை. என் தாத்தாவும் ஆயாவும் தறிக்குழியில் இறங்கக் கூடியவர்கள்.  கைத்தறி கைலிகளுக்கு பெயர்போன எங்கள் ஊரில் பட்டுத்தறி நெசவாளர்கள் சொற்பமாகவே இருந்தார்கள். எங்கள் பகுதியில் தறியடிப்பது செட்டியார்களுக்கு மட்டுமேயான  தொழிலாக இருந்தது இல்லை.

படையெடுப்பும் அச்சமும் நிலையின்மையும்  நிலவிவரும் தேசத்தில் ஒவ்வொரு இனக்குழுவும் இடம்பெயர்ந்து வாழ்வாதாரம் தேடுவதென்பது சர்வசாதாரனமாக நிகழக்கூடியது. கைத்தொழில் தெரிந்திருப்பவன் எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்ள இயலும். அப்பொழுதெல்லாம் சொல்வார்கள்; தறியடிக்கத் தெரிந்தால் எங்கு சென்றாலும் காலாட்டிக் கொண்டே சாப்பிடலாமென்று. நெசவு தொழிலைத் தனியொருவனால் மட்டுமே செய்ய முடியாது. இதனாலேயே அது சமூகத்தின் சிதறலையும் தடுத்து விடுகிறது. குடும்பத்தையும் சமூகத்தையும் பிணைக்கும் தொழில்களில் நெசவுக்கே முதலிடம்.

தேவாங்கு செட்டிகளின் குலதெய்வமான சௌடேஸ்வரி  அம்மனின் ஆதி வரலாற்றோடு அவர்களின் உயிர் ஆதாரமாக விளங்கும் குலத்தொழிலான கைத்தறி பட்டு சேலைகள் நெசவுமுறையில் சந்திக்கும் இன்னல்களையும் “அம்மன் நெசவு”  பதிவு செய்கிறது.

இசுலாமிய ஆக்ரமிப்பாளர்கள் மூலம் பூர்வீக பூமியிலிருந்து தங்கள் தெய்வத்தோடும் தொழிலோடும் நகர்ந்து பல்வேறு பகுதிகளில் குடியமருபவர்கள் அங்குள்ள பெருங்குடிகளின் இன்னலுக்கு உள்ளாவது வேதனை.

அவிநாசிக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் வேரூன்றிய பட்டு நெசவு செய்யும் செட்டியார்களோடு அங்கு பெருங்குடிகளாக அமர்ந்திருக்கும் கவுண்டர்கள் மோதலை நிகழ்த்துகிறார்கள்.   எம்.கோபாலகிருஷ்ணன் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து விதவிதமான சம்பவங்களை இழையிழையாகப் பிரித்து இணைக்கிறார். இதனால் துடிப்பு மிகுந்த ஒற்றை நாடி நாவலாக ஒலிக்கிறது. தனித்து ஒலிப்பதாலேயே அதிகமான அதிர்வையும் கடத்துகிறது.

பாவு நீட்டலுக்கு ஊறு விளைவிக்கும் மாடுகள் போல் எங்கள்  பகுதியில் பன்றிகள் புகுந்து விடும். ஆனால் பன்றி மேய்ப்பவர்கள் வசவுகளை பொருட்படுத்தாமல் அடிக்கடி படையெடுப்பார்கள். சிலசமயம் வாய்த்தகராறு அடிதடியாகவும் மாறிவிடும்.

அடக்குமுறை மற்றும் அத்துமீறல்களுக்கு அடிப்படையானது சாதி அபிமான செல்வாக்கும், பண்ணையார் தனமும் மட்டுமல்ல… சுயநல அரசியல், பிரச்சனைகளின் மூலம் அதுவே. ஒவ்வொருமுறையும்  பிரதானம் பாமரனுக்கு தரிசனமாகி விடக்கூடாது என்பதற்காகவே குழப்பங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எல்லாம் மேடை பேச்சின் வாய்ச் சவடால்கள். மனிதர்களின் குறுகிய எண்ணத்தை மீறிய அரசியல் எழுச்சிகளின் தீர்க்கமெல்லாம் அதிகார நாற்காலியின் மீதேறி அதில் அமர்வதோடு முடிந்து விடுகிறது.

சுயமரியாதை கட்சியிலிருந்து வெளியேறி அண்ணாதுரை கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கும் காலக்கட்டத்தில் நிகழும் கதையில் பழைய காங்கிரஸ் என்றாலும் புதிய திமுக என்றாலும் நெசவாளிகள் மீதான வன்மம் அவர்களின் அச்சத்தைக் குறைப்பதற்கு பதில் அதிகரிப்பதற்கான சூழலையே ஏற்படுத்துகிறது.

வரலாற்றில் அப்போதும் எப்போதும்   தங்களை தற்காத்துக் கொள்வதற்கு பின்வாங்குதல் ஒன்றை மட்டும் உபயமாகக் கருதும் இனம் உரிமைக் குரலையும் உணர்ச்சி பெருக்கையும் மறைக்கும் முயற்சிகள் வியர்த்தமானவை. “இங்க இவங்க இம்சை தாளாம அந்த ஊருக்கு போறோம். அங்க இன்னொருத்தன் வந்து இன்னொரு விதமா பிரச்சனை தருவான். அப்புறம் வேற இடம் பார்க்கிறதா…?” அம்சவேணிகளின் கேள்விகளை சமூகம் உதாசீனம் செய்கிறதா? இல்லை, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தப்பித்து வெளியேறும்போது ஆற்றில் பேழையுடன் விட்டுவிட்டு வந்த செளடேஸ்வரிடம் மன்னிப்பு கேட்கும் சடங்காக முனை மழுங்கிய வாளால் தங்கள் உடலை காயப்படுத்திக் கொள்ளும் திருவிழாக்கள் மூலமாகவே கோபத்தையும் இயலாமையும் துக்கத்தையும் நிவர்த்தித்துக்கொள்ள போகிறதா?

பாவப்பட்டவர்கள் எப்போது இடம்மாறிச் சென்றாலும் தங்கள் உடைமைகளோடு சேர்த்து குலதெய்வத்தையும் தறிக் கட்டைகளையும் சுமந்து செல்கிறார்கள்.

இன்று கைத்தறிகளின் எதிரொலியைக் கேட்க முடியவில்லை. உயிர்ப்புடன் இயங்கிய கிராமம் பின்மதியத்தில் உழலும் நோயாளியாகி விட்டது.  எழுத்தாளர் கல்கி புதுப்பேட்டையின் (பண்ணுருட்டி அருகில்) தறிச்சத்தம் குறித்து எழுதியிருக்கிறார். என் பள்ளி பருவ இறுதியில் அழிவின் விளிம்பில் வேறுவழியின்றி பழக்கமில்லாத வேலைக்கு மாறிய நெசவாளிகளின் ஒருவர் முகத்திலும் பழைய கம்பீரத்தைப் பார்க்க முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக  அருங்காட்சியாகத்தின் பொக்கிஷம் போல் சில கைத்தறிகள் இன்றும்  இயங்கிக் கொண்டிருப்பதாக நம்புகிறேன். ஆமாம், நம்பிக்கைகள் மாய எதார்த்தம் கொண்டவை…

காதில் விழுந்த தறிச் சத்தத்தைக் கேட்கும் போதே மனம் அடங்கி சாந்தமடையத் தொடங்கியது. ஊரின் பழைய உயிர்ப்பு கிளர்ந்து உலவத் தொடங்கியதுபோல் தறிகளின் ஓசை காற்றில் நிறைந்து வீதிகளில் பரவியது.”  என்கிற எம்.கோ வின் வரிகள் மூலம் மனம் பழையக் காலத்திற்குள் அனுமதியின்றி நுழையும் இன்பம் அலாதியானது. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

++

மஞ்சுநாத்

பன்முகத்தன்மை கொண்ட தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். 2003 முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வாசகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.

புதுச்சேரியைப் பூர்விமாகக் கொண்ட இவர் தற்போது புதுச்சேரி – பாகூர் பகுதியில் வசித்து வருகிறார். பள்ளிக் கல்வியை பண்ணுருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையிலும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை வரலாற்று அறிவியலும், சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மருந்தாளுநர் கல்வியும் நிறைவு செய்தவர்.

துடிப்பான ஊர் சுற்றியான இவரது பட்டியலில் இமயமலை சிகரங்கள் ஒவ்வொரு ஆண்டும் நீங்காமல் இடம் பெறுகின்றன. பாரம்பரிய தமிழர் மருத்துவமான சித்த மருத்துவத்தின் மருந்து செய்யும் கலையில் திறன் பெற்றவர். தற்போது புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவரது முதல் சிறுகதை தொகுப்பு “குதிரைக்காரனின் புத்தகம் (2021) ” முதல் கட்டுரைத் தொகுப்பு “டால்ஸ்டாயின் மூன்று கண்கள் (2022)” [அகநாழிகை வெளியீடு] இலக்கிய வாசகர்களின் கவனத்தை பெற்றள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *