மிகுந்த ஆங்காரத்துடன் முழு வலுவையும் உபயோகித்து வெட்டியதால், சேலை முழுவதும் இரத்தக் கறையுடன்,  அருவாளை கைத்தடி போல் நிற்பதற்கு ஏதுவாக ஊன்றி, அம்மன் கோவிலின் கிழக்கில் உள்ள வேப்பமரத்தின் அடியில் கோவிந்தம்மா மூச்சிரைக்க நின்றுக் கொண்டிருந்தாள்… தரையில் துண்டாகக் கிடந்த ஆட்டு தலை தன்னியல்பாக நகர்ந்து குருதி பீச்சியடித்தது.

தரையில் ஊன்றிய அருவாளை எடுத்தால் நிற்க முடியுமா எனத் தெரியவில்லை… களைப்பின் மிகுதியில் கோவிந்தம்மாவின் கண்கள் செல்வத்தைத் தேடின. சுற்றி இருந்த கூட்டத்தில் செல்வத்தின் முகம் தென்படவில்லை. இந்தமுறையும் கோவிந்தன் தான் கண்ணுக்குப் புலப்பட்டான்.  வேண்டுமென்றே குரலை உசத்தி அதட்டலாக  அழைத்தாள்.

அது அவளின் இயல்பு. கோவிந்தனுக்கும் நன்கு தெரியும். வேகமாகக் கெந்தி கெந்தி நடந்து வந்தான். அவனை வெடுக்கெனத் தன்பக்கம் இழுத்த கோவிந்தம்மா, தோளில் ஒரு கைபோட்டு மூச்சிரைத்தாள். தரையில் ஊன்றிய அருவாளை இன்னமும் தூக்க முடியாமல் மணிக்கட்டு தடுமாறியது.

மூச்சு வாங்கிக் கொண்டே  ”அடுத்தது யாருய்யா…”  எனக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டாள். கோவிந்தன் அமைதியாக அவளது காதில் “மொத்தம் ஏழு கெடா தான். எல்லாம் முடிஞ்சிச்சி…” எனச் சொன்னான்.

 “ஒரு தலைகூட பொதுக்கு போயிடக்கூடாது. எல்லாமே நம்ம வீட்டுக்கு வந்துரனும் … என்ன பூசாரி கேக்குதா?” என்ற கோவிந்தமாவின் குரல் சத்தமாக ஒலித்தது. விபூதி அடித்து ஆமாம் சொல்ல வைத்தது போல் பூசாரி  வேகமாகத் தலை அசைத்தார்…

“ஆடு மாரி நல்லா தலைய ஆட்டு! ஒரு நா உன்ன வெட்டுறேன் பாரு!!” எனச் சொல்லிக்கொண்டே, கோவிலை ஒட்டியிருந்த ஊர் பொதுக் கிணற்றில் தண்ணீரை எடுத்து தலைக்கு ஊற்றினாள். கிணற்றின் பின்பகுதியில் நெல் காயவைக்கும் களம் இருந்தது, களம் முடிந்த இடத்தில் ஒரு அடுப்பு, அடுப்பைத் தாண்டியதும் வரிசையாகத் தென்படும் குடிசைகளில் இருப்பதிலேயே சற்றுப் பெரிய வீடு கோவிந்தம்மாவுடையது. படுக்கையறை, சமையலறைத் தவிர, தேங்காய் குவித்து வைக்கும் அறை, நெல் மற்றும் தானியங்கள் பாதுகாக்கும் அறை… வீட்டின் வெளிய மூன்று அடி தொலைவில் கீற்று மறைப்பு கொண்ட குளியலயறை.. மண்மலை பாலக்காடு கிராமத்தில் வசதி படைத்த வீடு…

சொந்தமாக பத்து எருமைகள். பத்து எருமைகளில் மூன்று சினை, ஆறு சொசைட்டி பால், மற்றொன்று வீட்டுப் பால் எருமை,  அஞ்சு ஏக்கர் மேட்டுக் காடு, இரண்டு ஏக்கர் கருப்புக் காடு… கருப்பு காடு என்பது களிமண் காடு… வெறும் வாழை, தானியம், குச்சுக் கிழங்கு போடக் கூடியது… மேட்டுக் காடு என்பது செம்மண் காடு.. நெல், மஞ்சள், சோளம் போடக்கூடியது… கூடவே ஐம்பத்தி மூன்று தென்னைகள் மற்றும் வாய்க்கால் ஓரமாக மூப்பது தேக்கு மரங்கள், தண்ணீர்த் தொட்டியை ஒட்டி வரிசையாக எலுமிச்சை மரங்கள். சப்போட்டா, ரெண்டு கொய்யா, ஒரு மா மரம், ஒரே ஒரு முருங்கைமரம், வைக்கப்போர், அடிக்கடி தூறுவாரத் தேவையில்லாத ரெண்டு கிணறுகளை  ஒட்டி பெரிய மா மரமும்  அரசமரம்… இது போக ஆறு வெள்ளாடுகள், எண்ணப்படாத கோழிக் குஞ்சுகள், மூணு பொட்டை, இரண்டு சேவ, கருப்பாண்டி நாய், புருசன் கோவிந்தன், ஒத்தப் புள்ள செல்வம். இவையே கோவிந்தம்மாவின் சொத்துகள்…

இன்னமும் கடாவெட்டு முடிந்தபாடில்லை. குடம் குடமாய் மஞ்சள் தண்ணிர் ஊத்தியும் கடைசி கடா,  வெட்ட சம்மதம் தெரிவிக்கவில்லை. உள்மூச்சு கூட விடாமல் அமைதிகாத்து விறைப்பாக நின்றது. கூட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவன் தான் குளிக்காமல் கோவிலுக்கு வந்ததால் தான் ஆடு சம்மதம் தெரிவிக்கவில்லை என எண்ணி, மனதுக்குள் சாமியிடம் மன்னிப்பு கேட்ட அடுத்த நொடியே, ஆடு உடலைச் சிலுப்பியது. கோவிந்தம்மா தனது முழு வலுவையும் இழுத்து வைத்து ஆட்டை இரண்டாக்கினாள். இன்னும் ஆட்டின் கண்களில் துடிப்பு மிச்சமிருந்தது. பூசாரி எதையும் பெரிதாகப் பொருட்படுத்தாமல் ஆட்டின் கால் உருப்படிகளை எண்ணி உரச் சாக்கில் போட்டுக் கொண்டான். குண்டான் நிறைய ஆட்டின் தலைகள். பூசாரி அக்குண்டானைத் தனது தலையில் வைத்துச் சுமந்தபடி, கோவிந்தம்மா வீட்டை நோக்கி நடந்தான்.

“என்னத்துக்கு இப்டி அலையறாளோ… ஊர அடிச்சி உலையல போடுறா… சாண்டையைநக்கி மவ…” என கடுகடுவென மேகலா சமையல் வேலையைப் பார்த்தபடி கோவிந்தம்மாவை வசைப்பாடினாள். காய்ந்த மிளகாய்களைப் பிய்த்து நெருப்பில் எறிய, அது வெட்டிய ஆட்டுத் தலையைப் போல் குதிக்கின்றன.

கோவிந்தம்மா, “இந்தாடி மேகலா ஒரு பொவுணி தண்ணி விலாவு…” சொல்லி, கட்டியிருந்த சேலையை உதறினாள்… வெட்டிய தலைகள் வருகிறதா என புங்கை மரத்தை எட்டி கண்கள் தேடின.

”ஏய் செத்த நீராராம் இருந்தா ரவுக்குண்டு எடுத்துட்டு வா… தொண்ட காஞ்சி கிடக்கு” மேகலா இருக்கும் திசையை நோக்கி கோவிந்தம்மா கேட்டாள்…

“இதுக்கு ஒன்னுதான் குறச்ச.. இப்ப நல்ல வழிஞ்சி பேசுவா.. வேல முடிஞ்சிததும்,  நம்ம குண்டிய காயவிடுவா… இத கேக்க வழி இல்ல, கட்டிட்டு வந்த நாயிக்குத் துப்பில்ல. பின்னாடியே ரயில் பெட்டிமாரி இன்னும் சுத்துறான்“ மேகலா மனதுக்குள் பொருமினாள். அடுத்த விநாடியே முகத்தை இயல்பாக வைத்தபடி வெற்றுப் புன்னகையுடன்,  “இந்தா அத்தை“ என ரோட்டா நிறைய நிறைய நீராராம் கொடுத்தாள்.

வாங்கிய சுடுக்கு தெரிவதற்குள் வெறும் ரோட்டாவை மேகலாவிடம் கோவிந்தம்மா நீட்டினாள். மேகலா செல்வத்தை எதிர்பார்த்து வீட்டினின் வடக்கே உள்ள மேட்டுக்காட்டைச் சல்லடையாக்கினாள்… “ஏய் இந்தாடி எப்ப பாரு புறணில கண்ண வச்சிரு…” கோவிந்தம்மா பேச்சு சூடானது…

“இல்ல எத்த முத வண்டியப்ப வீட்ட விட்டு போன மனுசேன் இன்னும் காணாம்…” 

 “வழுக்குமரம் பாக்க சின்னவன் கூட கூட்டமா போனுங்கனு நெனைக்கிறேன்… நீ போ ஈறுகுச்சியும், கொடுவாயும் எடுத்துட்டு வா… “  என சொல்லிய கோவிந்தம்மா, வீட்டினின் வெளியே உள்ள அடுப்படி பக்கத்தில் மலைப்போல் குவிந்து கிடந்த கொட்டாங்குச்சிகளில், வட்டம் நேராக உள்ள ஒரு கொட்டாங்குச்சியைத் தேர்ந்து எடுத்து, குந்த ஏதுவான வேய்ந்த பச்சைக் கீத்தை இழுத்து போட்டு அடுப்புக்கு நேராக அமர்ந்தாள்.

கோவில் கிணற்றைச் சுற்றியுள்ள வேப்பமரங்களில் தூங்கணாங்குருவிக் கூடு போல் கோவிந்தம்மா வெட்டிய ஆடுகளைத் தொங்கவிட்டு தோல்களை ஊர் இளசுகள் உரித்துக் கொண்டிருந்தனர்… குவளையில் இருந்த தண்ணீரை குழந்தைகள் உள்ளங்கையில் அள்ளி  வழுவழுப்பான உரித்த ஆட்டின் மேல் தெளித்து விரல்களில் சறுக்கி விளையாடினர்… ஒரு பக்கம் பெரிய தெட்ச்சாவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து இரு பெண்கள் ஆட்டின் குடல்களைக் அலசி, குடலில் ஒட்டியிருந்த ஆட்டுப்புழுக்கைகளை விளக்கமாத்துக் குச்சியை வைத்துக் கழிவைச் சுத்தம் செய்தனர்… பூசாரி செவுடன் கோவிலின் சூலத்துக்கு முன் இருந்த ஆட்டின் தலைகளை எடுத்து குண்டானில் போட்டான். 

கோவிந்தம்மா, காய்ந்த மட்டைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி அடுப்பில் புகைமூட்டினாள்… பூசாரி நடக்கையில், வேட்டி “டப் டப்” என அவனது காலிடுக்குகளில் தட்டிச் சத்தம் கொடுத்தப்படியே இருந்தது… பூசாரி பாதுகாப்புக்கு வேட்டியில் ஒரு கையும், தலைமேல் இருந்த குண்டானில் ஒரு கையும் வைத்தபடி வந்தான்… பூசாரியின் தடுமாற்றம் கோவிந்தம்மா கண்ணுக்கு அடுப்பின் கருப்புகை இடைவெளியில் தெரியவும், “ யோவ் பூசாரி! குண்டான செத்த இறக்கி வச்சிட்டு… வேட்டிய இழுத்து கட்டி வந்தா என்ன தலையா முழிகிட போவுது…”

“இல்லக்கா இன்னும் ரெண்டு அடிதானே … ந்தா… வந்துட்டேன்… ஒரு கைப் புடி… ஒடியா…”

”ஆமா ஒடி வரேன்…”

“ஏய் மேகலா ஓடியா… பூசாரி விழப்போறான் … ஓடியாடீ…” என அலப்பறை விட்டாள்…

உள்ளே  வேலையாக இருந்த  மேகலா.. கோவிந்தம்மாவின் சத்தம் கேட்டு கையிலிருந்த கொடுவாளைக் கீழ போட்டு ஒடி வந்தாள். பூசாரி தலையிலிருந்த குண்டானைக் கைத்தாங்களாக வாங்கித் தரையில் வைத்தாள்… பூசாரி நிம்மதி பெருமூச்சுவிட்டு வேட்டியை இழுத்துக் கட்டினான்…

“ஏய் கொடுவா எடுத்துட்டு வா… என்ன இன்னும் உள்ள ஆராஞ்சிக்கிட்ட கிடக்க…” என  கோவிந்தம்மா மேகலாவைப் பார்த்துக் கேட்டாள்…

“இல்ல எத்த… சத்தம் கேட்டு ஒடியாந்தேன்…”

“இல்ல எத்த … நொல்ல எத்த … போடீ எடுத்துட்டு வா  நேரம் ஆவுதுல…”

“எந்த ஊருலயும் இல்லாத கணக்கா இவ ஆடுற… ஏமாந்த புருசேன் கிடைச்சானா… இப்படித் தான்… ஒரு பொம்பளை இப்படி ஊர் பாக்குற மாறி ஆங்காரமா ஆடு வெட்டிட்டுக் கிடக்குறா… மனுசியா இவளாம்… அதுக்குள்ள இவளுக்கு வயித்தக் கிள்ளுது எல்லாத்தையும் பொசிச்சு இப்பவே தின்னுப்புடுனும்” சத்தமின்றி முணுமுணுத்தபடி, மேகலா கிழே கிடந்த அருவாளையும், கீத்தில் சொருகியிருந்த ஈறுகுச்சியையும் எடுத்து கோவிந்தம்மாளிடம் கொடுத்தாள்…

அதற்குள் கோவிந்தம்மா உள்ளங்கை மொத்தம் உள்ள வேப்பங்குச்சிகளை ஆட்டின் வாயைப்பிளந்து பற்களின் இடையே சொருகி தலையை வாட்ட ஆரம்பித்தாள்… மேகலா கொடுத்த அருவாளை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள். பூசாரி உரச் சாக்கில் வைத்திருந்த கால் எலும்புகளை எடுத்து வந்து கோவிந்தம்மா அருகில் உட்கார்ந்தான். அவள் வாட்டிய பிறகு மீத அனலில் அவனது உருப்படிகளைப் பொசுக்கிடலாம் என நினைத்து அவளுக்கு ஒத்தாசை செய்தான்…

அந்நேரம், மேட்டுக்காட்டு வரப்பில் பாடை தூக்குவது போல் வலப்பக்கம் ஒரு ஆள், இடப்பக்கம் ஒரு ஆள் என இருபது பேர் சேர்ந்து நாற்பது அடியுள்ள தேக்கு மரத்தைத் தூக்கி கொண்டு வந்தனர். இவர்களுக்கு வழிகாட்டியாக செல்வம் முதல் ஆளாக கட்டளைகளைக் கூறிக்கொண்டு வருவதைப் பார்த்து,  புருசனை நினைத்து உள்ளூர பூரிப்படைந்தாள் மேகலா.

‘நல்ல நாளுமா குடிக்காம ஊர் விழாவுக்கு தலைவர் மாரி வேலை செய்றான்’ என்ற மேகலாவின் ஆசுவாசம் முகத்தில் தெரிந்தது…

செல்வம் மரத்தைத் தூக்கிக் கொண்டு வரும் திசையைப் பூசாரி காட்டவும், கோவிந்தம்மா தொலைநோக்கிப் பார்த்தாள்.

“யோவ்… அங்க பாருய்யா செல்வத்த… எம்புட்டு பாரமான மரத்த தூக்கி வரான்னு…”, பற்களைக் காட்டியவாறு கோவிந்தம்மா பூசாரியிடம் சொன்னாள்…

“ஆமாக்கா… இளச்செட்டு ஆள் எல்லாமுமே தான் கூட வருது போல…”

“யோவ்… இருந்தாலும் முன்ன புடிக்கிறவானுக்கு தான் எல்லா பாரமும் இறங்கும்…”

”ஆமாக்கா…ஆமாக்கா…” எனப் பூசாரி கோவிந்தம்மாவின் வார்த்தைகளுக்கு தன்னை முழுதாய் ஒப்புகொடுத்தவன் போல் ஆமோதித்தான்…

”எங்காடீ குமார் பையன்..”

“தெரியில அத்தை… அவருகூடத்தான் போனான் நெனைச்சேன்…”

“நல்ல நெனைச்சடீ… புள்ளயப் பாத்துக்க துப்பில்ல… “

“அக்காவோ! அங்க பாரு உன் பேரன… “

செல்வம் மரத்தின் அடிப்பாகத்தைச் சுமந்தபடி முதல் ஆளாக வந்தான்… மரத்தின் நுனிக்கொம்பில் குமார் ஆடி ஆடித் தொங்கி வருவதை கோவிந்தம்மா பார்த்து ரசித்தாள்…

“பாத்திய்யா… பூசாரி… அப்பன மாரி உச்சியப் புடிச்சி வரான் பாரு… இந்தவாட்டி என் பேரன் தான் அவுப்பான் பாரு மஞ்சத்துணிய…”

“ஆசையப்பாரு அக்காவுக்கு அதுக்குள்ள.. எப்புடியும் இந்தாட்டியும் உன் மவேன் தான் அவுப்பான்… அதுல்லாம மஞ்சத்துணில இந்தாட்டி தங்ககாசு வக்கிறதா பேச்சு வருது…”

எதைச் சொன்னால் கோவிந்தம்மா மனசு குளிரும் என்று பூசாரிக்குத் தெரியும்… செல்வம், செல்வம்,  செல்வம்!! மகன் பெயரை பேச்சில் ஒன்றுக்கு பல முறை எடுத்தால் போதும், அவளது கன்னங்கள் வெல்லப்பாகு போல் ஆகிவிடும்…

செல்வம் மூச்சு வாங்காமல் வருவதைப் பார்த்து மேகலா சந்தோஷம் அடைகிறாள்.. மரத்தை கோவிந்தம்மாவின் வீட்டின் முன் உள்ள களத்தில் அனைவரும் ஒரு சேர ”ஆவு” எனச் சத்தமிட்டு இறக்கி வைக்கின்றனர். ஊர் ஆசாரி நலுக்கை தனது உதவியாளுடன் மரத்தை சோதித்துப் பார்த்தான்…

“நல்லா நேரா தான் இருக்கு… ஆனா, உசரம் எட்டு அடி அதிகமா இருக்கே…” என ஆசாரி சொல்லவும், “நலுக்கை ஒழுங்கா இழைச்சு கொடுய்யா… என் பேரனே ஏறிடுவான்…” என்ற கோவிந்தம்மா நக்கலாகச் சிரித்தாள்…

“அதுக்குள்ள கோவிந்தம்மா.. போனமுட்ட மூப்பத்தி மூணு அடி உசரத்தை ஏற முடியாம… முக்குனாங்க… அப்புறம் எண்ணெய்யல்லாம் துணியை வச்சி துடைச்சிதானே மஞ்சத்துணிய அத்தான் செல்வம்… அதான்”

”நலுக்கை இழைக்கறத மட்டும் பாரு… இளசெட்டு மட்டும் நம்பி நான் சொல்லுல… பொடுசா இருந்த என் பேரேன் செட்டு எல்லாம் நல்ல வளந்துருச்சி… நீ இழை… இந்த வாட்டி மேல மூணு தண்ணீ அடிக்கிறதுக்குள்ள மஞ்சத்துணி கீழ கிடக்கும் பாரு…”

“நீ சொன்னா செரி தான்“ என ஆசாரி நலுக்கை மஞ்சப்பையில் இருந்து இழைப்புளியை எடுத்துச் சரிசெய்ய, உதவியாள் ஒரு முனையையும், ஆசாரி மற்றொரு முனையையும் பிடித்து இழைக்க ஆரம்பித்தனர்… அதை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கோவிந்தம்மா, அடுப்பில் பொசுங்கிக் கொண்டிருந்த ஆட்டுத் தலையை கவனிக்க மறந்து போனாள். ஆட்டுக்காது நெருப்பில் அதிகமாக பொசுங்கி உப்பி, “டப்” என சத்தம் எழுப்ப, சுதாரித்து ஆட்டின் தலையை மறு பக்கமாக திருப்பி வாட்டினாள்…

மரத்தைக் களத்தில் இறக்கிய செல்வத்தின் கூட்டாளிகள் வீட்டின் பின்புறத்திற்குச் சென்று வரிசையாகக் குந்தினர்… அவர்கள் ஒளிந்து ஒளிந்து போவதைப் பார்த்த மேகலாவுக்கு விசயம் புரிந்து போனது. கூட்டத்தில் இளையவன் மாணிக்கம் பாக்கெட் சாராயங்களை ஆளுக்கு ஒன்று எனக் கொடுத்தான். செல்வம் பாக்கெட்டின் ஓரத்தில் லேசாக ஓட்டைப் போட்டுக் குடித்தான். அவனது செய்கையை அனைவரும் நகலெடுத்தனர். மேகலா ஒதுங்க போவது போல் அவனை நோட்டம்விட்டபடி வரவும், செல்வம் முறைத்தான். அந்தப் பார்வை அவளைப் புகுந்த வீட்டுக்கு அனுப்பி விடும் தொனியில் இருந்தது…

‘நல்ல நாளு அதுவுமா வாயக் கொடுத்துட்டு…’ என மேகலா யோசித்து அடைக்காக்கும் கோழியைப் போல் வீட்டின் அடுப்படியில் தஞ்சம் புகுந்தாள். போதை தலைக்கு ஏறியதும் ஒவ்வொரு ஆளாக வீட்டின் முன்பு வந்தனர்… ஆசாரி மரத்தை முழுவதுமாக இழைத்து முடித்திருந்தார்… மாணிக்கம் கீரிஸ் டப்பா, விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பசை, கத்தாழை எல்லாவற்றையும் ஒரு பெரிய கோணியில் கொண்டு வந்து கொட்டினான். போதையில் அனைவரும் மரத்தை ஊன்ற ஏதுவான இடம் தேடினர். போதையில் இவர்கள் தேடிய நிதானத்தைப் பார்த்து கோவிந்தம்மா எழுந்து போய் இடத்தைக் காட்டினாள். செல்வத்தின் மகன் குமார் குழி தோண்ட ஆரம்பித்தான்… பொசுக்கியத் தலைகளை பூசாரியும், கோவிந்தம்மாவும் கொட்டங்குச்சியில் சுரண்டினார்கள்… ஆட்டின் முடி பொசுங்கி பொசுங்கி மொட்டையானது… நெருப்பில் வெந்த கொம்புகள் விரல் பட்டவுடன் ஒடைந்தன…

 “யோவ் பூசாரி அழுத்தி சுரண்டாத தோல் பேந்துக்கப் போவுது…” கோவிந்தம்மா அதட்டும் தொனியில் சொன்னாள்… அடுப்பின் மூலையில் இருந்த மஞ்சள் தூளை எடுத்து மொட்டை அடித்த ஆட்டின் தலையில் பூசிக் குளிப்பாட்டினாள். ஆட்டின் முகம் மஞ்சள் ஏறி மின்னியது. நெருப்பில் நன்கு பழுத்த காதுகளை அடியோடு வெட்டி  தனது மடியில் சுருட்டினாள். ஒரு காதை மட்டும் எடுத்து தனது மகன் செல்வத்தை நோக்கிப் போனாள். கோவிந்தம்மா எழுந்த சுருக்கில் பூசாரி ஆட்டின் கால்களை வாட்ட ஆரம்பித்தான்.

”டேய் இவ்வளவு எண்ணெயைத் தடவாதிங்க”, போதையில் மரத்தை விட்டு தரையில் தடவும் ராஜனைப் பார்த்து கோவிந்தம்மா கிண்டலாகச் சொன்னாள். கோவிந்தம்மா குரலைச் கேட்டுச் சுதாரித்துக் கொண்டவன், மீண்டும் போதையில் தரையிலே தடவினான்… காற்றில் மரம் ஆடாமல் இருக்க பாதுகாப்புக்கு வழுக்கு மரத்தின் நுனியில் இரு நீண்ட கயிறுகளைக் கட்டி ,ஒன்றை கோயில் உச்சியிலும், மற்றொன்றை ஊரின் பெரிய வேப்பமரத்திலும் கட்ட செல்வம் ஆயத்தமானான்.

“கன்னு… செல்வம் இந்தா…” என ஆட்டின் காதைத் தின்னக் கொடுத்தாள்… அவன் வாங்கி அப்படியே வாயில் போட்டுக் கொண்டான்… இன்னொரு காதை குழி நோண்டிய பேரனுக்கு ஊட்டி விட்டாள்…

“கன்னு… ரெண்டு கயிறு போடாத… மூணு போடு…”

“செரிம்மா…”

“மூணாவது கயிற வாட்டர் டேங்க மேல கட்டு… நல்ல வலுவா நிக்கும்…நீங்க பொத்து பொத்துனு மரத்திலே விழுவீங்க… அதுவும் கெடையான் ஞானசேகர் விழுந்தான் மரமே பெட்டுனு போயிடும்” கோவிந்தம்மா சொல்படி மூன்று மூலைகளில் கயிறைக் கட்டி மரத்தை நிமிர்த்தத் தொடங்கினர்… மரத்தில் வழுவழுப்பு தன்மை கொழுப்பு கறி போல் இருந்தது.. ஒருவன் கயிறை வாயில் கவ்விக்கொண்டு வேப்பமரத்தில் தாவினான்… இன்னொருவன் கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டு கோயிலின் உச்சிக்கு ஏறினான்… செல்வம் தோள்பட்டையில் கயிறைச் சுற்றி வாட்டர் டேங்க் உச்சிக்குச் சென்றான்… மற்ற ஆட்களாலும் மரத்தை இன்னும் முழுதாக நிமிர்த்த முடியவில்லை வழுவழுப்பு அதிகமானதால் ரொம்பவே திணறினர்… மேகலா கொடுத்த சாக்கின் உதவியோடு மரத்தை ஐந்து அடி நிமித்தினர்… மீதி மரத்தை நேராக நிறுத்த மூன்று மூலையிலும் கயிற்றை வலுக்கொண்டு இழுத்தனர்… மரம் கோயிலின் கொடி மரத்தை விட உயரமாக நிமிர்ந்தது… செல்வம் வலுக்கொண்டு டேங்கின் “ப“ வடிவிலான கம்பியில் கயிற்றை இழுத்து சுருக்குப் போட்டான்… வழுக்கு மரத்தை விட வாட்டர் டேங்க் உயரமானது… செல்வம் டேங்கில் இருந்து மரத்தின் உச்சியைப் பார்த்தான் ”ஒரே சறுக்கலில் வழுக்கு மரத்தின் உச்சிக்குப் போயிடலாம் போல“ என எண்ணினான்… கோவிந்தம்மா வழுக்கு மரம் தனது களத்தில் நிற்பதைப் பார்த்து பெருமிதமானாள். ஊரே அவளது களத்தில் கூடி நிற்கும் அதிகாரப் பார்வையில் மரத்தின் உச்சியை அண்ணாந்து பார்த்தாள்…

”டேய் மாணிக்கம்! எங்கடா மஞ்சத்துணி… பொசக்கட்ட பயலுங்களா… இறக்குங்கடா மரத்த…” என வெகுண்டாள்…

போதையில் அனைவரும் மஞ்சத்துணியைக் கட்ட மறந்திருந்தனர்…

“குமாரு! உங்க தாத்தான்கிட்ட போயி மஞ்சதுணி வாங்கியா..” என பேரனிடம் கோவிந்தம்மா சொல்லவும், சிறுவன் குமார் ஒட்டம் எடுத்தான்…

 ”யோவ் கவுத்த விடு, கவுத்த விடு” என மாணிக்கம் கத்தினான். மரத்திலும், கோவில் கோபுரத்திலும் இருந்தவர்கள் கயிற்றை அவிழ்த்தனர்… பறவைகளின் இசை மற்றும் காற்றின் அலைச்சலைத் தவிர வேற எதுவும், உச்சியில் நிற்கும் செல்வத்துக்குக் கேட்கவில்லை… ஆகாயத்தில் பறப்பது போல் போதையில் மிதந்தான்,  இதனைக் கவனித்த ஒரு சிறுவன் விறுவிறுவென டேங்கில் ஏறினான்… கோவிந்தம்மா கை உடைந்து போகும் அளவுக்கு கை அசைத்துப் பார்த்து விட்டாள். ஏறிய சிறுவன் செல்வத்தின் தோளைத் தட்டிக் கூப்பிட்டுச் சொன்னான். மரம் இறக்கப்பட்டது… குமாரும் தங்கக்காசு முடிந்த மஞ்சப்பையைக் கொண்டு வந்து கோவிந்தம்மாவிடம் கொடுத்தான்…

“இன்னைக்கி நீ தான் இத அவுக்கப் போற…” குமாரின் உச்சிமுகர்ந்து வழுக்கு மரத்தின் நுனியில் கட்டினாள்… மரம் மீண்டும் நிமிர்ந்தது.. கீழே இறங்கிய செல்வத்தோடு  மாணிக்கம் மட்டுமே உறவாடினான், மற்றவர்கள் கறிச்சோறுக்காக வீட்டுக்குச் சென்றனர்… ஊர்ப் பெண்கள் மஞ்சள் தண்ணீரைக் கலக்கிக் கொண்டு, சிலர் கழினித் தண்ணிர்க் குடத்தையும் எடுத்துக் கொண்டு கோவிந்தம்மாவின் களத்துக்கு வந்தனர்…

கோவிந்தம்மா குளிக்க ஆயத்தமாகி…

“மேகலா சுடத்தண்ணீ எடுத்துட்டுவா…” எனக் கேட்டாள்… சுடுதண்ணீர் போட மறந்திருந்தாள் மேகலா… இதைப் பெரும் பிரச்சனையாக ஊதிப் பெரிதாக்கி வழுக்குமரம் போட்டி பாக்க வந்த ஊர் மக்களின் முன்னால் கோவிந்தம்மா மகனுடன் சேர்ந்து மேகலாவை அடித்துப் புரட்டினார்கள்… ஊர் மக்கள் யாரும் வாயைத் திறக்கவில்லை. குமார் மட்டும் கஷ்டப்பட்டான். கலைப்பில் செல்வம் மாணிக்கத்துடன் சேர்ந்து மேகலாவைத் திட்டியபடியே மீதமுள்ள சாரயங்களையும் குடித்துத் தீர்த்தான்… மாணிக்கம் மறுநாள் தொழிலுக்கு வைத்திருந்த பாக்கெட்கள் அனைத்தும் வெடிக்கப்பட்ட பலூன்கள் போல் தரையில் கிடந்தன. கோவிந்தம்மா தண்ணீரைக் காய வைத்துக் குளித்து, அவள் போக்கில் தாமதமாக வழுக்கு மரப் போட்டியை ஆரம்பித்தாள்.. 

மஞ்சள் தண்ணீர் அடிக்க அடிக்க இளவட்டங்கள் மரத்தில் ஏற ஆரம்பித்தனர். ஒரு பக்கம் கிணற்றில் இருந்து தண்ணீரை வெள்ளம் வெள்ளமாக இறைத்து ஊத்தினர். போதையில் இருந்தவர்கள் முகம் தெளிய தெளிய அடித்தனர்… கோவிந்தம்மா புதுச் சேலையுடன் அவளை ஆமோதிக்கும் கூட்டத்தின் மத்தியின் நின்று, பொசுக்கிய ஆட்டுக் காதுகளைத் தின்றபடி வேடிக்கை பார்த்தாள்… மரத்தில் பத்து அடி கூட ஏற முடியாமல் அனைவரும் சிரமப்பட்டனர்…

கோவிந்தம்மா தின்னும் ஆட்டுக் காதுகளை மனதுக்குள் எண்ணியபடியே மேகலா பக்கத்தில் நிற்கும் மல்லிகாவிடம் “எப்புடிதான் இம்புட்டு திங்கிறாளோ… மனுசியா இவளாம்… இந்தாடி மேகலான்னு ஒன்னு கொடுத்துருப்பாளா?.. வாயில கேன்சர் புண்ணு வந்துதான் சாவுனும் இவளாம்… காது பாரு ஒன்னு ஒன்னும் விரைப்பா முறுக்கு மாறி இருக்கு… அத ஒரு வாட்டி மறந்தாப்புல குழம்புல போட்டுடேன்… அது போதுமே ஆயி, மவன் ரெண்டு பேரும் சேந்து என்ன புரண்டு எடுத்துப்புட்டாங்க… மாமியாகாரி சொன்னது சரிதான் குழம்புல போட்ட காது வழவழப்பா போச்சி… நானும் கீழ போட மனசு இல்லாம தின்னுத் தொலைச்சேன்… இங்கப் பாரு வெத்தல மடிச்சி வைக்கிற வாய்ல மாறி ஒவ்வொரு காதா வைக்கிறத பாருடி … அவ திங்கிறதுல என் நாக்க கடிச்சுத் தொலைக்கிறேன்“ ரகசியம் போல் முணுமுணுக்கும் மேகலாவைக் கவனிக்கமால் மல்லிகா மரம் ஏற முடியமால் வழுக்கி வழுக்கி விழும் இளவட்டங்களை ரசித்துக் கொண்டிருந்தாள்…

இப்போது மரத்தின் உச்சியை அன்னாந்து பார்க்க பார்க்க போதையில் இருந்தவர்களுக்கு எல்லாம் தலை சுற்றியது.  ‘ஏன்டா இவ்வுளவு வளத்தி வச்சோம்’ என செல்வம் இப்போது வருந்தினான். தன் மகன் குமாரை செல்வம் தூக்கி தூக்கி எறிந்து பார்த்தான். பாதி மரத்தைக் கூட யாராலும் தாண்ட முடியவில்லை… பக்கத்து ஊரில் இருந்து வந்தவர்கள் கிண்டல் அடித்துச் சிரித்தனர்…

“உள்ளுர் ஆட்களை விலகச் சொல்லுங்க நாங்க ஏறி காட்டுறோம்” சத்தமாகச் சவால் விட்டனர். செல்வம் யாரிடமும் சொல்லாமல் மாணிக்கத்திடமிருந்த கடைசி பாக்கெட்டையும் குடித்துப் போதையில் வாட்டர் டேங்கில் ஏறினான்… முறை மாமன்கள் வாயில் கழுனி தண்ணீரை அடித்து வயசுப்பெண்கள் கொண்டாடினர். போதையில் அதையும் குடித்தனர். அவர்களின் வயிறு பிள்ளைதாச்சியைப் போலானாது.

செல்வத்துக்கு போதையில் அடவயிறு முட்டியது… வாட்டர் டேங்கில் மேலும் ஏற முடியாமல் மிகவும் சிரமப்பட்டான்… மூச்சு முட்ட டேங்கின் மேல் ஏறி அவனது வீட்டுக் களத்தைப் கழுகுப் பார்வை பார்த்தான்.

அனைவரும் ஜே ஜேவென கத்தினர். மேகலா தன் புருசனின் அடாவடித்தனத்தை நினைத்துப் பொறுமினாள்… செல்வம் டேங்கில் கட்டிய கயிறில் சறுக்கியபடியே மரத்தை நோக்கி வந்தான்… சாகசக்காரன் போல் கத்தியதைப் பார்த்து ஊரே அவனைப் பைத்தியக்காரனாகப் பார்த்தது. தேங்காய் நாற்றுக் கயிறு என்பதால் பாதி தூரம் வந்ததுமே அதை இறுக்கமாகப் பற்றியிருந்த செல்வத்தின் கைகளில் இரத்தம் வரத் தொடங்கியது. போதையை மீறிய வலியில் கத்தினான். அவன் வலியில் துடிப்பதை கீழிருந்து வேடிக்கை பார்த்த எவருக்கும் காரணம் விளங்கவில்லை. பல் இளித்துக்கொண்டு செல்வத்தின் பறத்தலை நினைத்துச் சிறுப்பிள்ளை போல் குதுகலித்தாள் கோவிந்தம்மா. செல்வத்தின் உள்ளங்கைகள் காந்தின. ஒவ்வொரு கையாக மாறி மாறி பற்றிக் கொண்டான். வலி தலைக்கேறிய நொடியில் கயிற்றில் இருந்து முற்றிலுமாகப் பிடி தளர்ந்தது. கத்தியவாறு கைப்பிடியை விட்டான். சுழன்று சுழன்று தரையில் பொத்தென விழுந்த செல்வத்தின் உடல் இரண்டாகப் பிளந்தது…

ஊரே மயான அமைதி சூழ்ந்தது… அம்மன் கோவிலை போதையில் உள்ளவர்கள் தகர்த்தனர். ஊர்ப் பெரியவர்கள் யாரும் தடுக்க முன்வரவில்லை. டவுனில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட செல்வத்தின் உடல் துணியால் கட்டி ஊருக்கு திரும்பியது… மஞ்சள் துணியில் சுற்றி இருந்த தங்கக்காசை நெற்றிக் காசாக வைத்து  பிணத்தைத் தூக்கினார்கள்.

நீண்ட அழுகையை வடித்தாள் கோவிந்தம்மா. மூன்று நாட்கள் அழுகைக்கு பின் திடமானாள் மேகலா… பித்துக்குளி போல் ஆகிவிட்டாள் கோவிந்தம்மா… வீட்டிற்கு அறிவிக்கபடாத அதிகாரியாக தன்னை தானே மாற்றி உருவெடுத்தாள் மேகலா…

ஊருக்கு ஸ்கூல் பஸ்கள் வந்தன. குமார் தனது குழந்தையை ஆங்கில பள்ளிக்கு அனுப்பி வைத்தான். பதினைந்து ஆண்டுகள் கழித்து ஊர்ப் பொது கூட்டத்தை குமார் கூட்டினான். திருவிழா அறிவிப்பு விடுத்தான். ஊர் கொண்டாடியது. அம்மன் கோயிலைச் சரிசெய்து,  ஊருக்கு புதிதாக அய்யர் வந்து கும்பாபிஷேகம் செய்தார். பூசாரி ஒத்தாசை செய்தார்… ஊரில் உள்ள புறம்போக்கு இடத்தில் பத்துக்குப் பத்துக் குடிசையில் கோவிந்தம்மா கஞ்சிக்கு ஏங்கினாள்… குமார் மகன் அவ்வப்போது அவளுக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பான். ‘செல்லப் பேராண்டி’ என பொக்கை வாயில் முத்தம் கொடுப்பாள் கோவிந்தம்மா…

திருவிழா களைக்கட்டியது. வரிசையாக பலி கொடுப்பதற்கு ஆடுகள் நின்றன. மேகலா சாமி ஆடிக்கொண்டே கையில் அருவாளுடன் வந்து ஆட்டின் இரத்தங்களை தெறிக்கச் செய்தாள். சேலையை அவிழ்த்து ஜாக்கெட்டுடன் உட்கார்ந்து ஆட்டின் தலைகளைப் பொசுக்கினாள். குமார் போதையில், கூட்டாளிகளுடன் ப்ளூடூத் ஸ்ப்க்கீரில் பாட்டு போட்டு ஆடிக் கொண்டு இருந்தான். 

நெருப்பில் சுட்ட காது ஒன்றை மேகலா வந்து மகனிடம் கொடுக்கிறாள்… அவனோடு போதையில் ஆடியவன் காதைப் பிடுங்க முயல்கிறான்.. குமார் சுதாரித்து ஓட,  அவனும் போதையில் துரத்துகிறான்… கிணத்தடியில் குந்திய கோவிந்தம்மாவை நோக்கி ஒடி வருகிறான்.. கிழவியைப் பார்த்தவுடன் கிழவியிடம் காதைத் தூக்கி ஏறிய, கிழவியின் மடியில் வந்து விழுகிறது… அதைக் கவனிக்காமல் தூரத்தி வந்தவன் இன்னும் குமாரை விரட்டிக் கொண்டிருக்கிறான்…

கோவிந்தம்மா எழுந்து மடியில் இருந்த ஆட்டுக் காதை தனது செட்டுப் பல்லில் மெல்ல முடியாமல் வீட்டையும், களத்தையும் பார்க்கிறாள்…

“பாட்டி எங்க காது” என பிரேம் கேட்கிறான்…

பதில் சொல்லமுடியாமல்…. வாயைத் திறக்க முடியாமல்… ரப்பர் போல் வெந்த காதை வாயை மூடி மென்னுகிறாள்…

சதீஷ் கிரா

எனது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள துறையூர். கோயம்புத்தூரில் பொறியியல் படித்தேன். தற்போது சினிமாத் துறையில் பணியாற்றி வருகிறேன். இலக்கிய வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். ‘காது தின்பவள்’ எனது முதல் சிறுகதை.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *