தோஷிகாஸூ கவாகுச்சி
“One instant love is
a pitcher of cold water
a hot cup of coffee the next.
―C.W.Bryan
லேசான மழைச் சாரலின் போது சூடான மணமிக்க காபியை அருந்துவது அலாதியானது. ஒரு கையில் பிடித்த புத்தகமும் மறுகையில் காபி கோப்பையுடனும் இருக்கும் கணம் எத்தனை மகிழ்வானது. அத்தகையதொரு சூழலில் தான் இந்நூலை வாசிக்கத் துவங்கினேன்.
ஜப்பானில் 17ஆம் நூற்றாண்டில் டச்சு மாலுமிகளால் காபி கெய்ஷா பெண்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. இரவு நீண்ட நேரம் விழித்திருப்பதற்காக அவர்களுக்கு காபி வழங்கப்பட்டது. Meiji அரசனின் காலத்தில் காபி பிரபலமாகத் துவங்கியது. 1908 ஆம் ஆண்டில், பல ஜப்பானியர்கள் பிரேசிலுக்கு குடிபெயர்ந்து காபித் தோட்டங்களில் பணியாற்றச் சென்றனர். பிரேசில் காபி கொட்டை தயாரிப்பில் முன்னணியில் இருந்தது. அதன் காரணமாக தற்போதும் பிரேசிலில் ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களைக் காணலாம். நாகசாகியில் பிறந்த Tei Eikei முதல் காபி கஃபேவை 1888ல் Kahichakan என்ற பெயரில் Edo (Tokyo)வில் துவக்கினார். இது ஒரு காபி புரட்சிக்கு வித்திட்டது. ஜப்பானிய கலாசாரத்தில் காபியை உட்புகுத்தியதில் Kahichakan முக்கிய பங்கு வகித்தது. பாரம்பரிய ஜப்பானிய காபி ஹவுஸ் Kahichakan. வெளிச்சம் குறைவான அறைகள், காபி தயாரிக்க தொன்மையான உபகரணங்கள், அடர் நிறத்திலான மரச்சாமான்கள், அமைதியான சூழ்நிலை, பின்புலத்தில் மெல்லிய இசை என அந்த காபி கஃபேக்கள் விளங்கின. எனினும் ஜந்தாண்டுகளில் அவரது தொழில் நஷ்டமடைந்தது. காபி கஃபேக்கள் மூடப்பட்டன. பின் 1930 களில், Tadao Ueshima காபி கஃபேக்களை மீண்டும் துவக்கி வெற்றிகரமாக நடத்தினார். அதன்மூலம் பெரும் புகழ் பெற்றார். “ஜப்பானிய காபியின் தந்தை” என்றும் அழைக்கப்பட்டார்.
1980 இல் அனைத்து ஜப்பானிய காபி சங்கத்தை நிறுவுவதில் Tadao Ueshima பெரும் பங்கு வகித்தார்.சங்கலித் தொடர் காபி கஃபே- “cafe Paulista” 1911-ல் ஜப்பானிய மக்களுக்கு அறிமுகமாகத் தொடங்கியது.
ஜப்பானில் காபி வெறும் பானமாக மட்டுமல்லாமல், சமூக சடங்குகளின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இடம் பெறத் துவங்கியது.
வேகமான வாழ்க்கைச் சூழலில் ஒரு அமைதியான கணத்தினை காபி கஃபேக்கள் அளிக்கின்றன. மரபான காபி தயாரிக்கும் முறை பெரிதும் மதிக்கப்படுகிறது.
கஃபேக்கள் தனித்தன்மையுடன் வடிவமைக்கப்படுகிறது. கஃபேயின் உட்புறச் சுழல் அழகிய நிகழ்விடமாக கட்டமைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோப்பை காபியும் அர்ப்பணிப்பின், அக்கறையின், அன்பின் அடையாளமாக கருதப்படுகிறது.
நாவலின் களமாக இருக்கும் காபி கஃபே ஃபுனிகுலி ஃபுனிகுலா நூற்றாண்டு பழமையானது. பாரம்பரியமிக்கது. இதனை மையமாகக் கொண்ட புனைவு தான் காபி குளிர்வதற்கு முன்-Before coffee gets cold.
இது அவரது முதல் நாவல். 2010-ல் நாடகமாக எழுதப்பட்டு பின் 2015 -ல் நாவலாக வடிவம் கொண்டது. நல்ல கவனத்தைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக மேலும் மூன்று நாவல்களை கவாகுச்சி எழுதினார். Tales from the café (2017), Before your memory fades (2018), Before we say goodbye (2021). இறுதியாக நான்காவதாக Before we forget kindness (2023) வந்தது. ஆங்கில மொழிபெயர்ப்பு செப்டம்பர் 2024ல் வெளியிடப்பட்டது.
காபி குளிர்வதற்கு முன் மிக குறைந்த கதாப்பாத்திரங்களைக் கொண்டது. 9 நபர்கள் உடன் ஒரு அமானுஷ்யப் பெண். இவர்களைச் சுற்றிப் பிணைந்து மனித மனதினை ஊடுருவிப் பார்க்கும் நாவல்.
நாவலின் முக்கிய அம்சம் தான் தவறவிட்ட ஒரு கணத்தை மீண்டும் வாழ்ந்துப் பார்ப்பது. அதன் மூலம் அக்கணத்தில் செய்திட்ட சில பிழைகளை சரி செய்ய முயல்வதன் வழியாக வாழ்வின் அடுத்த கட்டத்தை தகவமைத்துக் கொள்வது.
கஃபேயில் ஓர் இருக்கை உள்ளது. அது அதில் விரும்பி அமரும் வாடிக்கையாளர்களை கடந்த காலத்தின் ஒரு குறிப்பிட்ட தருணத்திற்கு அழைத்துச் செல்லும். குறிப்பிட்ட மீச்சிறு கால இடைவெளிக்குள் மீண்டும் நிகழ்காலத்திற்கு திரும்பிட வைக்கும்.
நாவல் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட நான்கு நிகழ்வுகளை விவரிக்கிறது. ஒவ்வொரு நிகழ்வும் தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த காலப் பயணத்தை மேற் கொள்ள விரும்பும் நபர்களையும், அந்நிகழ்விற்கு செல்ல விரும்புவதற்கான பின்னணியையும், நிகழ்விற்குப் பின்பான மாற்றங்களையும் அலசுகிறது. வெவ்வேறு வாடிக்கையாளர்கள் காலப் பயணத்தில் பின்நோக்கிச் சென்றாலும் அனைத்து நிகழ்வுகளிலும் குறிப்பிட்ட கதாப்பாத்திரங்கள் அங்கேயே வீற்றிருப்பது கவனத்தை ஈர்க்கிறது.
நான்கு நபர்கள் காலப் பயணம் மேற் கொள்கிறார்கள். பிரிந்து சென்ற காதலனை சந்திக்க விரும்பும் காதலி (Fumiko kiyokawa-Goro katada),அல்ஸைமர் நோயால் நினைவை இழந்து வரும் கணவரை செவிலிப் போல் கவனித்துக் கொள்ளும் மனைவி (Mr. Fusagi-Ms. Kohtake),விபத்தில் உயிரிழந்த தங்கையை காண விழையும் சகோதரி (Yaeko Hirai-Kumi Hirai), தனக்கு பிறக்க இருக்கும் மகளை சந்திக்க எதிர்காலத்திற்குப் பயணிக்கும் தாய் (Kei Tokita-Miki) என நால்வர் வெவ்வேறு நாட்களில் பயணிக்கிறார்கள்.
கடந்த காலத்திற்கானப் பயணம் ஆபத்துகள் இல்லாமல் வராது. சில விதிகளுக்கு உட்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். விதிகளை சரியாக பின்பற்றாவிட்டால், மிக முக்கியமாக கால அளவை தவறவிட்டால் அக்காலத்திலேயே தங்கிவிட நேரிடும்.
*கடந்த காலத்தின் ஒரு குறிப்பிட்ட தருணத்திற்கு பயணப்படும் நபர் தனக்கு வழங்கப்படும் தனித்தன்மையான காபி குளிர்வடையை ஆகும் நேரம் மட்டுமே அக்காலத்திற்குள் இருக்க முடியும். காபி முழுமையாக குளிர்வடையும் முன் அதை முழுமையாக அருந்திட வேண்டும்.
*ஒருவர் ஒருமுறை மட்டுமே பயணப்பட முடியும்.
*அந்த கஃபேவிற்கு அவர்களுடன் வந்தவர்களை மட்டுமே சந்திக்க இயலும்.
*கடந்த காலப் பயணமோ, எதிர்கால பயணமோ நிகழ்காலத்தை எவ்விதத்திலும் மாற்றாது.
*அப்பயணம் முழுவதும் அக்குறிப்பிட்ட இருக்கையில் மட்டுமே அமர்ந்திருக்க வேண்டும்.
இவ்விதிகளின்படி காபி அருந்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் நிகழ்காலத்திற்கு திரும்ப இயலாமல் போன ஓர் பெண்மணிதான் அவ்விருக்கையில் அமானுஷ்யமாக வீற்றிருக்கிறார். தொடர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டு காபி அருந்துவது மட்டுமே அவரின் ஒரே செயல். அவரை யாரும் தொடவும் இயலாது. ஓய்வறைக்கு செல்வதற்கு மட்டுமே அவர் அந்த இருக்கையிலிருந்து எழுந்துச் செல்வார். அங்கிருந்து திரும்பி மீண்டும் அவ்விருக்கையில் அமர்வதற்கான சிறு கால இடைவெளியில் தான் கடந்த காலத்திற்கு பயணம் செய்ய விரும்பும் நபர் அவ்விருக்கையில் அமர்ந்து செல்ல விரும்பிய தருணத்திற்குள் உட்புக முடியும்.
முதல் நிகழ்வில் தன் காதலன் வேலை வாய்ப்புத் தேடி அமெரிக்காவிற்கு செல்ல இருப்பதை கூறும் போது கோபித்துக் கொண்டு விடை கொடுத்தனுப்பிய காதலி, அந்த நிகழ்வை சரி செய்து அவனை அன்போடும், மகிழ்வோடும் வழியனுப்ப கடந்த காலத்திற்கு செல்கிறாள். அப்போதும் தான் சொல்ல வந்ததை கால நெருக்கடியில் சரியாக சொல்ல முடியாமல் போனாலும் மனத் திருப்தியுடன் நிகழ்காலம் திரும்புகிறாள்.
இரண்டாம் நிகழ்வில் அல்ஸைமர் நோயால் நினைவை இழந்திருக்கும் தன் கணவனிடமிருந்து அவர் தர விரும்பிய கடிதத்தைப் பெறுவதற்காக அவரின் மனைவி கடந்த காலத்திற்குள் பயணிக்கிறார். அவரின் கணவர் அவரை நினைவு கொண்டிருந்த கால கட்டத்திற்கு செல்லும் மனைவி கணவரிடமிருந்து ஒர் கடித உறையைப் பெறுகிறார். அதிலுள்ள கடிதத்தில் “அவள் யார் என்று தான் மறந்தாலும் அவள் எப்போதும் தன் மனைவியாகவே இருக்க வேண்டும்”என எழுதியிருப்பதைக் கண்டு உணர்ச்சிப் பொங்க கண்ணீர் விடுகிறார்.
மூன்றாம் நிகழ்வில் தன் குடும்ப தொழிலில் பங்கேற்க விருப்பமின்றி தாய், தந்தை, தமக்கையை விட்டுப் பிரிந்து தான் விரும்பியபடி சுதந்திரமான வாழ்க்கையை வாழும் பெண் .தன்னைத் தேடி கஃபேவிற்கு வரும் தங்கை சந்திக்கக் கூட விரும்புவதில்லை. தங்கை கொடுத்து விட்டுச் செல்லும் துண்டுச் சீட்டுகளை வாசிக்க ஆர்வம் காட்டுவதுமில்லை. அவ்வாறு இவளை சந்திக்க வரும் தங்கை ஒரு நாள் வழியில் எதிர்பாரவிதமாக விபத்தில் சிக்கி இறந்து விடுகிறாள். அவளின் இறுதிச் சடங்கிற்கு சென்று வருபவள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறாள்.
தன் தங்கையின் மரணத்திற்குப் பின் அவள் அளித்துச் சென்ற துண்டுச் சீட்டுகளை வாசிப்பவள் பெரும் குற்ற உணர்வுக்கு உள்ளாகிறாள். தன் தங்கையின் முகத்தை காண விரும்பியும் அவளிடம் மன்னிப்பு கோரவும் கடந்த காலத்திற்குள் பயணிக்கிறாள். அப்போது அவர்களிடையேயான உரையாடல் தனித்துமானது. வலிமிகுந்தது.
நான்காவது நிகழ்வு எதிர்காலத்திற்குள் பயணிப்பது. குழந்தைப்பேறின் போது இறக்க நேரிடும் என்றளவிற்கு மிகவும் பலவீனமான, சிக்கலான உடல்நிலையைக் கொண்ட கருவுற்றிருக்கும் அந்த கஃபேயின் உரிமையாளரின் இளம் மனைவி. தனக்கு பிறக்க இருக்கும் பெண் குழந்தையைக் காண எதிர்காலத்திற்குள் பயணிக்கிறார். 15வயதிலிருக்கும் அப்பெண்ணை அவள் காண்பதும், அவளிடம் உரையாடுவதும் மிகவும் உணர்வுபூர்வமானது. தாய்மையின் உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தும் தருணமது.
கடந்த காலத்திற்கான அவர்களின் பயணம் இறுதியில் அவர்களுக்கு உணர்த்துவது என்ன என்பது தான் நம் மனதில் படைப்பு எழுப்பும் கேள்வி? ஒருவர் வாழ்க்கையைச் தேர்வு செய்யும் விஷயங்களில் எவ்வித தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதும், ஆழமான உணர்ச்சிகளை, தவித்தலையும் மனதின் பிரதிபலிப்புகளை, போராட்டங்களை, நம்பிக்கைகளை,இணைத் தேர்வுகளின் முக்கியத்துத்தை, உறவுகளின் சிக்கலான தன்மையைப் பற்றியும் அறியத் தருகிறது.
தங்களின் இழப்புகளை, காயங்களை, தவறுகளை எதிர்க்கொண்டு நிவர்த்தி செய்துக் கொள்ள ஆழ்மனம் ஏங்குகிறது. அந்த ஏக்கத்தை போக்கிக் கொள்ளும் ஒரு நல்வாய்ப்பை காலப் பயணம் வழங்குகிறது. கடந்த காலத்திற்கு செல்வது என்பது நிகழ்காலத்தை மாற்றுவது அல்ல. அது இயலாது என அவர்கள் தெளிவுற அறிந்தே இருக்கிறார்கள். கடந்த காலப் பயணம் நிகழ்காலத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றபோதிலும் எதிர்காலத்தை தன்னம்பிக்கையுடன்,மகிழ்வுடன் எதிர்கொள்ளும் ஆற்றலை, சக்தியைத் தருகிறது.
“மேடான இடத்திலிருந்து தாழ்வான பகுதிக்கு தண்ணீர் செல்கிறது. அது இயல்பான புவியீர்ப்பு விசையின் விளைவு. மனித உணர்ச்சிகளும் புவியீர்ப்பு விசைக்கு ஏற்ப செயல்படுகின்றது. நாம் யாருடன் பந்தம் வைத்திருக்கிறோமோ, யாரிடம் நம் உணர்வுகளை ஒப்படைத்திருக்கிறோமோ அவர்களிடமிருந்து பொய் சொல்லி விடுபடுவது கடினம். உண்மை வெளிவர விரும்புகிறது என்கிறார் கவாகுச்சி.
நாவலின் பிற கதாப்பாத்திரங்களும் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். கஃபேயின் உரிமையாளர் Nagare Tokita. தன் வாடிக்கையாளர்களுக்கு தரமிக்க காபியை மட்டுமே வழங்க விரும்புபவன். அதற்கான காபி கொட்டைகளை தேடியலைந்து வாங்கி வருபவன். தன் வாடிக்கையாளர்களை மரியாதையுடனும் நட்புடனும் அணுகுபவன்.
அதேபோல் அவனது உறவுக்காரப் பெண்ணும், கடந்த காலப் பயணத்திற்கான காபி சடங்கை நிகழ்த்துபவளுமான kazu Tokita. இவரது மூதாதையர் வழி வந்தவர் மட்டுமே இச்சடங்கினை நடத்த இயலும். இவருக்குப் பின் இவரது மகள் காபி சடங்கினை நடத்துபவராக இருப்பார். எவ்வித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் தன் பணியை கவனமாக மிகச் சரியாக நிகழ்த்துபவள். வாடிக்கையாளர்களுக்கு பயணத்தின் விதிகளை அழுத்தம் திருத்தமாக கூறி விளக்குபவள். அவர்களை காலப் பயணத்திற்கு தயார்படுத்துபவளும் அவளே.நிகழ்காலத்திற்கு திரும்பிய பின் அவர்களை ஆசுவாசப்படுத்துபவளும் அவளே. தன்னலமற்றவள். இனிமையானவள். மனிதர்கள் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும், அவற்றை கடந்து செல்லும் வலிமை அவர்களுக்கு எப்போதும் இருக்கும் என்று Kazu உறுதியாக நம்புகிறாள். நாற்காலி ஒருவரின் இதயத்தை மாற்றினால் அதற்கு அதன் நோக்கம் தெளிவாக உள்ளது என்பது அவளின் நம்பிக்கை.
காலப் பயணம் மேஜிக்கல் ரியலிசம் அல்ல. அறிவியல் புனைவும் இல்லை. வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கவல்ல மந்திரக் கோலும் அல்ல. மாறாக இது மனிதர்களின் பலவீனம், இழப்பு, துக்கம், அர்த்தமுள்ள உறவுகளுக்கான ஏக்கம் பற்றிய நுண்ணியமான பார்வைத் தருவது. சிறிய நாவல். நேர்த்தியான மொழியில் சொல்லப்பட்டுள்ளது.
நாவலின் எதிர்மறையான விஷயம் என்றால் அது காலப்பயணம் மேற் கொள்ளும் நால்வரும் பெண்களாக இருப்பது. ஒரு பெண் தன் உறவில் எத்தகைய பாத்திரத்தை கைக் கொள்ள வேண்டும் என்பது பழமையான கருத்தாக்கத்தின் வெளிப்பாடாக உள்ளது. தங்களின் செயல்களுக்காக வருந்தி தான் சார்ந்த ஆணுக்காக, தன் குடும்பத்திற்காக தன் சுயத்தை மாற்றிக் கொள்பவராக இருப்பது. பாரம்பரிய ஆணாதிக்க வெளிப்பாட்டின் வடிவமான ஒரு “இலட்சியப் பெண்ணை“ ஆசிரியர் உருவாக்குகிறாரோ என்ற சந்தேகம் வருகிறது.
இந்நாவலின் வெற்றியைத் தொடர்ந்து மேலும் நான்கு நாவல்களை தோஷிகாஸூ கவாகுச்சி படைத்துள்ளார். இந்நாவலைப் போன்றே வெவ்வேறு நான்கு நபர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக காலப் பயணம் மேற் கொள்கின்றனர். மூன்றாவது நாவலில் kazu Tokita விற்கு பதிலாக அவளது மகள் சடங்குகளை நிகழ்த்துகிறார். காபி கஃபேயும் வேறு ஒன்றாக வருகிறது.
இந்நாவல் Ayuko Tsukahara இயக்கத்தில் Cafe Funiculi Funicula என்ற பெயரில் திரைப்படமாகவும் வந்துள்ளது. ஒரு நாவல் படமாக்கப்படும் போது என்ன நிகழுமோ அதுவே இந்நாவலுக்கும் நிகழ்ந்துள்ளது. அமைதியாக ஆர்பாட்டமில்லாமல் ஓர் நதியைப் போல் நம்முள் உணர்வுபூர்வமாக ஒன்றிப் போகும் கதாபாத்திரங்கள் திரையில் ஆர்ப்பரிக்கும் வெள்ளமென பாய்ந்து அந்நியமாகிறார்கள்.
நாவலின் இறுதிப் பகுதியிலிருந்து முற்றிலும் வேறாக திரைப்பட முடிவு அமைந்திருப்பது பெரும் நெருடலைத் தந்தது .KazuTokita ஆக வரும் Kaumi Arimura-வின் நடிப்பு அருமை.
வாருங்கள் காபி குளிர்வதற்கு முன் கடந்த காலத்தின் சிறப்பான ஓர் தருணத்திற்கு சென்று வரலாம்.
இந்நாவலைப் பற்றி அறிமுகம் தந்த சகோதரி சந்திரிகாவிற்கும், இந்நாவல் பற்றின சிறு பதிவொன்றை எழுதியிருந்த திரு. சரவண மாணிக்கவாசகத்திற்கும் நன்றி.
00
அ.முனவர் கான்
முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர்.