சாந்தரம் மழ பேஞ்சதனால மடத்துக்குள்ள பெயலுக சிரிச்சுக்கிட்டும் பேசிகிட்டும் இருந்தானுக. நல்லா சரியான மழ. அதனால மடத்துச் சன்னல் வழியா மழ தண்ணி மடத்துக்குள்ள வந்துச்சு. அந்தத் தண்ணிய சின்னப் பெயலுக எத்தி வெளாடும் போது அங்னயிருந்த பெருசுக “பேயமக்கா ஈர நேரத்துல தண்ணிய எத்தி விட்டுக்கிட்டு. சாமத்துல படுக்க எடம் இருக்காது. சும்மா கெடங்கடா”னு கத்திக்கிட்டு இருந்தாங்க.

ஆரோக்கியம் சின்ன தூக்குச் சட்டியை எடுத்துக்கிட்டு வெறும் மேலோட தமிழன் டீ கடைக்கு போனா. போகும்போது வாடகாத்து அடிக்கவும் ரெண்டு கையும் பின்னாடி கட்டிக்கிட்டு காத்த ஒடம்புக்குள்ள இழுத்துகிட்டான். மடத்து வழிய நடந்து போகும்போது “ஏலே பூச்சக்கள்ளா காப்பி வாங்கவா”னு டைசன் கேக்கவும் “ஆமாடா செவத்த பொச்சுக்காரா”னு அவென பாக்காம சொல்லிட்டு நடந்து போனான்

“ஏடி காப்பி வாங்க ராமமூர்த்தி கடைக்கு போகாத. நம்ம தமிழன் டீ கடைக்கு இல்லாட்டி மணி டீக்கடைக்கு போடா ஒக்காஉண்ட”

“அது தெரியும்டி”னு மடத்துலருந்து நேரா போயி சிமெண்டு தெருவழியா நடந்து திலீப்பன் வீட்டு வழியா போயி கெழக்காம திரும்பி கொஞ்சம் தூரம் நடந்தா தமிழன் டீ கட. கடையில யாரும் இல்லையாக்கும்னு நடந்து வந்துகிட்டே நெனச்சா.

பெஞ்ச மழயில தண்ணி வாறங்கல்ல ஓடிக்கிட்டு இருக்கு. அந்தத் தண்ணியில சகதியும் பழைய துணியும் செத்தையும் வருது. வாறங்கல்ல ஓடுற தண்ணி மேற்கருந்து கெழக்காம போகுது. மேற்காம பள்ளர் தெரு இருக்கு. அவனுக சாக்கடையிலருந்து வர்ற தண்ணியும் அந்த வாறங்கல் வழியா கெழக்காம வரும். தமிழன் டீக்கடை இருக்குறது ஓடத்தெரு. அந்தத் தெருவுல சாக்கடையிலும் தண்ணி போகுது தெருவுலையும் தண்ணி போகுது. தண்ணி வடிஞ்சதுக்கு அப்புறம் அந்த தெருவ பாத்தா சகதியும் மண்ணுமா இருக்கும். சாக்கடை நாத்தம் மூன்னு நாளைக்கு போகாது

இவெ கடயில யாரும் இல்லையாக்கும்னு அப்பிடியே தெக்காம நடக்க போனவன “மாப்ள எங்க போற”னு இன்னாசுமுத்து கேட்டாரு. கடைக்குள்ள நின்னுகிட்டு

“மாமா இருக்கியா! யாரும் இல்லையாக்கும்னு ராமமூர்த்தி கடைக்கு காபி வாங்க போலாம்னு நடந்தே. நீ கூப்பிட்ட.”

“நீங்களுமா அந்த கடைக்கு போறீங்க. நம்ம கடயில எந்த ஒக்காஉண்ட டீ குடிக்க”

“ஏ மாமா இப்பிடி சொல்லுற. நானெல்லாம் ஒகிட்ட இல்லாட்டி மணிகிட்டதா காப்பி வாங்குவேன். நீங்க ரெண்டு பேரு இல்லாததுக்கு ராமமூர்த்திகிட்ட வாங்குவேன். அவெகிட்ட வாங்க கூடாது. வேற வழி இல்ல என்ன செய்றது”

“இந்தக் காலத்து எளந்தாரிகு இந்த நெனப்பாது இருக்கே. நம்ம சாதிக்காரன் கிட்ட வாங்கணும்னு. ஆனா இந்த வாரம் பாரு சின்னப்ப தலயில துண்ட போட்டுக்கிட்டு நம்ம தெருக்காரன்ட்ட எவென்டையும் டீ வாங்கி குடிக்க மாட்டான்”னு சொல்லிட்டு அவரு குடிச்ச டீ  கிளாஸ்ச பக்கத்துல இருந்த தண்ணியில கழுவிட்டு பால் சட்டி பக்கத்துல வச்சாரு. அந்த டம்ளர் சில்வர் டம்ளர்தா.

“குடுங்க; டீயா காப்பியா”னு கேட்டு அவெ தூக்குச்செட்டிய வாங்கி தெறந்து லேசா சுடு தண்ணியில அந்த சட்டிய கழுவிட்டு ரெண்டு கரண்டி சீனிய அள்ளி அந்த சட்டியில போட்டுக்கிட்டே “ஏலே சின்னப்பா; டீ குடிக்கிறியா. மலைக்கு”னு கேட்டார்.

அவர பாக்காம “அதெல்லாம் குடிச்சிட்டே”னு மேற்காம திரும்பி திலீப வீட்டு வழியா நடந்து அவர் வீட்டுக்கு போனாரு

“டீ போடுங்க. இவெ நம்ம தெரு கடயில காபி குடிக்க மாட்டானோ மாமா”னு ஆரோக்கியம் சின்னப்பன் நடந்து போறதப் பாத்துகிட்டே கேட்டான்

“இவாளிகளுக்கு நம்ம கடயில குடிச்சா மரியாதை கொறச்சலாம். சாலியர் தெருக்காரன் ராமமூர்த்தி கடயில குடிச்சா கவுரவமா. இவாளிகளுக்குள்ள அப்பிடி ஒரு நெனப்பு. இவெ மட்டுமில்ல இன்னும் ரெண்டு மூணு பேரு இருக்காளிக. அந்தக் காலத்துல நமக்கு டீ காபி போட்டு குடிக்க வக்கு இல்ல. இப்ப ஏதோ கையில காசு வரவும் நம்மளே கட போட்டா இந்த கண்டாரெளிக இன்னமும் அங்க குடிச்சப் பழக்கத்த விடுறதா இல்ல. ராமமூர்த்தி கடயில நம்ம தெருக்காரனுக்கும் பள்ளப் பெயலுகளுக்கும் கண்ணாடி கிளாஸ். சாலியர் தெருகாரனுக்கு மொதலிமார் தெருக்காரனுக்கு சில்வர் டம்ளர். அவனுக தெருக்காரனுகளுக்கு ராமமூர்த்தி கட பக்கத்துல திண்ண இருக்கு. அதுல அவனுக ஒக்காந்துக்கிருவானுக. நம்ம கண்டாரளிக அவெ கடைக்கு எதுத்தாப்புல வாறங்கல் இருக்கு அதுல ஒக்காந்து டீ காபி குடிக்க. அந்த வாறங்கல்ல அவெனுக பீயும் மொத்தரமும் ஓடிக்கிட்டு இருக்கும். அந்த வீச்சம் அப்பிடி வரும். இல்லன்னா அந்த கடைக்கு வடக்கு பக்கத்துல மண்ணு தரயில ஒக்காந்து டீ காபி குடிப்பாளிக. இவனுங்களுக்கும் பள்ளப் பெயலுகளுக்கும் சக்கிலிய பெயலுகளுக்கும் குடுக்கிற கண்ணாடி கிளாச சுடு தண்ணிய விட்டு கழுவ மாட்டான். அப்பிடியே பச்சத்தண்ணில முக்கி அந்த கிளாஸ எடுத்து காபி போட்டு குடுப்பான். இவாளிகளும் அத வாங்கி குடிப்பானுக. நம்ம இவாளிகளுக்கு சுடு தண்ணில டம்ளர கழுவி காப்பி குடுத்தாலும் இவாளிய பொச்சு அங்கதா போகுது.இந்த வித்தியாசத்தை இவாளிகளுக்கு புரிய மாட்டேங்குது. என்ன செய்ய. ராமமூர்த்தி கடைக்கு யாரு வர்றா. பறப்பெயலுகளையும் பள்ளப்பெயலுகளையும் தவிர. என்ன அவென் தெருக்கறன் அஞ்சாறு பேரு வருவானுக. இவாளிகதா அவனுக்கு த் துட்டக் கொண்டுகிட்டு போய் வளிய போய் குடுக்கிறானுக”னு டீய போட்டு அந்த சட்டிய எடுத்து அவென்ட குடுத்தார்.

“இன்னொரு தடவ இவாளிகள அங்கன பாத்தேன் வையாம வரக்கூடாது மாமா. நானும் பள்ளிக்கொடம் போகும்போது பாப்பேன். நீங்க சொல்றது சரிதான். இவாளிகளுக்கு கண்ணாடி கிளாஸ் அந்தச் சாலியர் தெருகாரனுக்கு சில்வர் டம்ளர். அந்த வாறங்கல் மேல ஒக்கார இல்லாட்டி அங்ன தரயில ஒக்கார. இது மட்டுமா நம்ம அவெ கடயில இருக்கிற வடய தொட்டு எடுக்க விடமாட்டான். நமக்கு வட வேணும்னா ராமமூர்த்திதா எடுத்து தருவான். ஆனா அவெ சாதிக்காரன் மட்டும் வடய தொட்டு எடுத்து திம்பா. இம்புட்டு கேவலமா அவெ கடயில டீ குடிக்கணுமா. நாளைக்கு காலையில வச்சுக்கிறேன் இவாளிகள”னு டீக்கு அஞ்சு ரூபாயை குடுத்துட்டு டீச்சட்டியை வாங்கிட்டு வீட்டுக்கு போனா

மறுநா காலையில இந்த சுன்னிமக்க ராமமூர்த்தி டீக்கடையில இருந்தாளிகனா வையாம விடக்கூடாதுன்னு வெரசா குளிச்சிட்டு தின்னுட்டு பேண்டு சட்டைய போட்டுக்கிட்டு கையில அக்கவுண்டன்சி நோட்டும் அக்கவுண்டன்சி புத்தகத்தைம் எடுத்துட்டு பள்ளிக்கொடத்துக்கு போக நடந்து போனா. இவெ போறத பாத்தாரு இன்னாசிமுத்து. எதும் சொல்லிக்கிறல. நேத்து பெஞ்ச மழயில தர ஈரமாதா இருக்கு.

தெக்கமா இவெ மட்டும் வெக்கு வெக்குனு நடந்து போனா. ராமமூர்த்தி டீக்கட வர்றதுக்கு முன்னாடியே ராசு ஜெகதீசு நந்தோணி வாறங்கல் மேல ஒக்காந்திருந்தத பாத்தான். அவுங்களுக்கு வயசு முப்பது முப்பத்தஞ்சு இருக்கும். அதுக்கு நேரா சின்னப்பனும் சமாதானமும் ஈர மண்ணுல குத்த வச்சுக்கிட்டு காபி குடிச்சுக்கிட்டு இருந்தாங்க. இவங்களுக்கு வயசு அறுவது அறுவதஞ்சு இருக்கும். இவெ அங்ன வரவும் இவாளிகள பாக்குறா இன்னாசிமுத்து மாமா சொன்னது மாணிக்க அப்பிடியே நடந்திருக்கு.

நோட்டையும் புத்தகத்தையும் கையில புடிச்சுக்கிட்டே “நம்ம தெருகுள்ள ஒன்னுக்கு ரெண்டு டீக்கட இருக்கு. அங்ன டீ குடிக்க மாட்டீங்களா. இவுங்கட்ட வந்து துட்டு குடுத்து டீ வாங்கி குடிச்சா யாரு வசதியாவா?. இவருதான் வசதியாவாரு. நம்ம தெருகாரன்ட்ட குடிச்சாவாது இன்னும் கொஞ்சம் வசதியாவான். பாரு ஒங்களுக்கு கண்ணாடி கிளாசு அவுங்க தெருக்காரங்களுக்கு சில்வர் டம்ளர்ல காப்பி. ஏ மச்சான் இங்க இந்த வீச்சமெடுத்த எடத்துல ஒக்கார்றதுக்கு பதிலா தமிழன் டீக்கடையில திண்ண இருக்கு. மணி டீக்கடையில மரகட்ட போட்டு இருக்கான். நம்ம வேல செஞ்சு ஏ மச்சா இவெனுககிட்ட வந்து துட்ட குடுக்கணும்”னு சொல்லவும் “தம்பி ஒங்களுக்கு நா சில்வர் டம்ளர்லதா காப்பி குடுப்பேன்”னு ராமமூர்த்தி டீ கிளாஸ கழுவிக்கிட்டு சொன்னாரு

“நீங்க யாருக்கு குடுப்பீங்கன்னு எனக்கு தெரியாதா. ஒங்கள எதுத்து பேசுறவனுக்கு அந்த டம்ளர்ல குடுப்பீங்க. என்ன மாதிரி படிச்ச பெயலுக வந்தா குடுப்பீங்க. அதே டம்ளர ஒங்க தெருகாரனுக்கு காபி குடுக்க மாட்டீங்க. சில்வர் டம்ளரையும் ரெண்டா பிரிச்சு தானே வச்சிருக்கீங்க”னு சொல்லிட்டு “நீங்க எல்லாம் எதுக்கு இவெகிட்ட வந்து டீ காபி குடிக்கணும். நம்ம தெருவுலதா டீக்கட இருக்கு. அது மட்டுமா இப்ப பலசரக்கு கட இருக்கு. திம்பண்டம் கட இருக்கு. சின்ன பெயலுக நாங்களே இவுங்க கடயில பொருளு வாங்குனா இவுங்க பணக்காரங்களா ஆகிருவாங்கன்னு நம்ம கடயில வாங்கி திங்கோம்”னு சொல்லிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து போனா. பஸ் புடிச்சு பள்ளிக்கொடத்துக்கு போக.

அவெ என்ன சொன்னான் ஏது சொன்னான்னு இவாளிகளுக்கு காதுல விழுந்துச்சா இல்லையானு தெரியல. ஆனா ராசு ஜெகதீசு நந்தோணி எந்திரிச்சு இவெ பேசுனத பத்தி பேசிக்கிட்டே வீட்டுக்கு வந்தானுக. சின்னப்பனும் சமாதானமும் அங்னையே இருந்தானுக.

000

என்னுடைய பெயர் அ. பிரகாஷ்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருக்கிறேன்

நான் “கிணத்து மேட்டுப்   பனமரம்” சிறுகதை. தொகுப்பு ஒன்று எழுதி இருக்கிறேன்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *