‘கார்த்திகாவைப் பார்த்துட்டுப் போகலாமோ..?’
ஒரு வேலை காரணமாக கீரனூருக்குப் போன ராகவனுக்கு இந்த எண்ணம் உதித்தபோது வேலையை முடித்துவிட்டு பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த மாஸ்டர் பேக்கரியில் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
இந்த ஊருக்குப் பலமுறை வந்திருந்தாலும் இந்த முறைதான் இந்த ஊரிலும் தனக்கு ஒரு உறவு இருக்கு என்பதும் அவளைப் போய் பார்த்துவிட்டுப் போனால்தான் என்ன என்ற எண்ணமும் அவனுக்குத் தோன்றியது. இதற்குக் காரணம் ஆறு மாதத்துக்கு முன் நடந்த நிகழ்வுதான் என்றாலும் அதன்பின் இதே கீரனூருக்கு இரண்டு முறை வந்து சென்றிருக்கிறான். அப்போதெல்லாம் இந்த எண்ணம் தோன்றவும் இல்லை, அப்படியே எழுந்தாலும் ‘அதெல்லாம் வேண்டாம்’ என அதை அடித்து உள்ளயே புதைத்துவிட்டு கிளம்பி விடுவான்.
இந்த முறை ஏனோ போகலாமா என எழுந்த எண்ணம் போய்த்தான் பார்ப்போமே என்ற நிலையில் மாறி நின்றது.
ஆறு மாதத்துக்கு முன்னர் இதே போல் ஒரு வேலை காரணமாக திருச்சிக்கு வந்திருந்தவன், சத்திரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோதுதான் அவளைப் பார்த்தான். கார்த்திகா மாதிரி இருக்கே அவள்தானா என அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளும் இவனையே பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தாள்.
அவள்தானா என்ற நினைப்புடன் அறிமுகமில்லாத பெண்ணிடம் எப்படிப் போய் பேசுவது என்ற யோசனையுடன் அவன் இருக்கும் போதே ‘சார் நீங்க…. ராகவன்… வெளிமுத்தி ராகவன்தானே’ என்று கேட்டாள் அருகில் வந்து நின்று கொண்டு.
‘ஆ… ஆமாங்க… ஆமா நீங்க..?” என யோசிப்பது போல் நெற்றியைத் தேய்த்து “கா… கார்…. கார்த்திகாதானே..?” என்றான்.
“ஆமா…” என்று சிரித்தாள். அந்தத் தெத்துப்பல் சிரிப்பு அவனை சின்ன வயதுக்கு இழுத்துப் போய் கார்த்திகாவின் அழகான முகத்தைக் காட்டி மீண்டும் பேருந்து நிலையத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தியது. தலை எல்லாம் நரைத்துப் போய், மிகவும் ஒல்லியாக மொத்தமாக மாறியிருந்தாள்.
“நல்லாயிருக்கீங்களா அத்தான்” அடுத்த நிமிடம் உறவோடு ஒட்டிக் கொண்டாள்.
அத்தான் என்ற வார்த்தையைக் கேட்டதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. எத்தனையோ பேர் சொல்லியும் அண்ணனில் இருந்து மாறாதவளை வாழ்க்கை மாற்றியிருக்கிறது போலும் என நினைத்துக் கொண்டு “நான் நல்லாயிருக்கேன்… ஆமா கார்த்தி… நீ எப்படியிருக்கே..? எங்கே இருக்கே…?” என உரிமையோடு தான் எப்போதும் அழைக்கும் கார்த்திக்கு மாறியிருந்தான்.
“நான் நல்லாயிருக்கேன். கீரனூர்ல இருக்கேன்”
“ஓ… நீ அங்க இருக்கே… இங்கே இருக்கே… அங்கே பார்த்தோம்… இங்க பார்த்தோம்ன்னு ஊருக்குள்ள பல கதைகள்” சிரித்தான்.
“நம்ம ஊரு ஆட்கள் யாரையும் இத்தனை வருசத்தில் நான் பார்த்ததேயில்லை. உங்களைத்தான் முதன் முதலில் பார்க்கிறேன்” தெத்துப்பல் தெரிய மீண்டும் சிரித்தாள். இந்தச் சிரிப்பு மனிதனை எத்தனை முறை பித்துப்பிடிக்க வைத்திருக்கிறது என நினைத்துக் கொண்டான்.
“ஊருதான் பல கதை கட்டுமே…” அவனும் சிரித்தான்.
“நீங்க ஊர்லதான் இருக்கீங்களா…?” பேச்சை வேறு பக்கம் மாற்றுகிறாள் எனத் தோன்ற, “ஆமா… ஊர்லதான் மாமாவோட பிஸினஸை நான் பார்த்துக்கிட்டு இருக்கேன்”
“ம்”
“வா கூல்டிரிங்கஸ் எதாவது குடிக்கலாம்” என்றபடி முன்னால் நடந்தான்.
அவன் பின்னே நடந்தவள் “காபி குடிக்கலாம்” என்றாள்.
“அத்தை, மாமா எல்லாரும்…” அதற்கு மேல் கேட்காமல் காபியை வாயில் வைத்து உறிஞ்சினாள்.
“ம்… அப்பா இறந்துட்டாங்க…” சொல்லிவிட்டுத் தலையைத் தாழ்த்திக் கொண்டான்.
அவளும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.
அவன் அவளை நிமிர்ந்து பார்த்த போது கண் கலங்கியிருந்தது.
“விதிதானே எல்லாத்தையும் நிர்ணயம் பண்ணுது. அவருக்கு விதி வந்துச்சு போயிட்டார்… உன் வாழ்க்கையையும் அதே விதிதானே நிர்ணயம் பண்ணுச்சு… விதிதானே நமக்கு குடும்பம் நிர்ணயித்து வச்சிருந்த வாழ்க்கையையும் மாத்துச்சு”
அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. வேறு எது குறித்தும் குறிப்பாக அவளின் குடும்பம் பற்றி ஏனோ கேட்கவேயில்லை. அவள் கேட்காமல் அவனும் எதையும் சொல்ல நினைக்கவில்லை.
அவள் கையில் இருந்த காபி டம்ளர் லேசாக ஆடுவதை உணர்ந்தான்.
“நீ எப்படியிருக்கே..?” மீண்டும் கேட்டான்.
“இருக்கேன்…” என்றவள் கையில் வைத்திருந்த செல்போனில் மணி பார்த்து “கிளம்பலாமா…? வேலை இருக்கு” என்றாள்.
பேருந்து நிலையத்துக்கு மீண்டும் வந்த போது “இது என்னோட நம்பர்” எனச் சொல்லி அவளின் செல்போன் நம்பரைச் சொன்னதும் சேமித்துக் கொண்டான். ஏனோ அவனின் நம்பரை அவளுக்குக் கொடுக்கவில்லை அவளும் கேட்கவில்லை.
நம்பர் வாங்கியவன் இதுவரை ஒரு போன் கூட பண்ணவில்லை. பண்ண நினைத்ததும் கிடையாது.
காபியைக் குடித்துவிட்டு வெளியில் வந்தவன் காரில் ஏறி அமர்ந்து அதை மெல்ல நகர்த்தினான்.
கார் முன்னோக்கி நகர, நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.
கார்த்திகா அவனின் சொந்த அயித்தை பெண்தான். அதுவும் உள்ளூரில் தங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயேதான் அவர்கள் வீடும்.
அவனை விட ஐந்து வயது இளையவள். அவனுக்கு அவள்தான் என குடும்பத்தில் பேசி வைத்திருந்தார்கள்.
கார்த்திகா அவனை எப்போதும் அண்ணே என்றுதான் அழைப்பாள். ஊரில் சிலர் ‘என்னடி கட்டிக்கப் போறவன அண்ணே… அண்ணேன்னு கூப்பிடுறே… அவன் உங்கழுத்துல தாலி கட்டுனாலும் அண்ணேன்னுதான் கூப்பிடுவியா மொற கெட்டவளே’ எனக் கேலி பண்ணும் போதெல்லாம் லேசாக சிரித்து மழுப்பி விடுவாள்.
அவளின் அம்மா கூட பலமுறை ‘அவனை அண்ணன்னு கூப்பிடாதேடி… மச்சான்னு சொல்லு, இல்லேன்னா இந்தக் காலத்துப் புள்ளய கூப்பிடுறமாரிக்கி அத்தான்னு சொல்லு, அதுவுமில்லன்னா வாங்க போங்கன்னு கூப்பிட்டுப் பழகு’ எனச் சொன்ன போதெல்லாம், `அடப் போம்மா அங்கிட்டு’ எனக் கோபப்பட்டுக் கத்தியிருக்கிறாள்.
‘நம்ம செல்வம் மாமா வீட்டுல தனக்காவெல்லாம் அவங்க அயித்தய அக்கான்னு கூப்பிடுதுக… அதுககிட்ட போயி அயித்தயின்னு கூப்பிடுங்கடின்னு சொல்லு போ’ எனக் கத்துவாள்.
‘அதுக்கு அந்த அண்ணனுக்கு கல்யாணம் ஆகும் போது அவுக ஆத்தா ஏழு மாசம், அதுக்கு நாச்சி பொறந்த கொஞ்ச நாள்ல செல்வன்னனுக்குத் தனம் பொறந்தா… அவ அக்கான்னு கூப்பிட்டதால அதுக்குப் பின்னாடி பொறந்ததெல்லாம் அக்கான்னு கூப்பிடுதுக. அதுவும் இதுவும் ஒண்ணாடி. நாளக்கி கட்டிக்கப் போறவன அண்ணன்னு கூப்பிட்டு தாலி கட்டினதும் மச்சான்னு சொன்னா நல்லாவா இருக்கும்’ என அவளும் பதிலுக்கு கத்தும் போதெல்லாம் ‘நாங் கட்டிக்கிறேன்னு எப்பச் சொன்னேன். நீங்களா எதயாச்சும் வளத்துக்காதீங்க’ எனச் சொல்லுவாள்.
சின்ன வயதில் கார்த்திகா மீது ராகவனுக்கு அவ்வளவு ஈர்ப்பெல்லாம் இல்லைதான் என்றாலும் அவன் மாஸ்டர் டிகிரி படிக்கப் போனபோது அவள் பள்ளி இறுதி ஆண்டில் இருந்தாள், அவளின் அழகும், தெத்துப் பல் சிரிப்பும் அவனுக்குள்ளும் அவள் மீதான ஆசையை மெல்ல வளர்க்க ஆரம்பித்தது. அவ நமக்குத்தானே என்ற எண்ணமும் அவ்வப்போது எழுந்து அவனைக் கிளர்ச்சியடையச் செய்யும். வேண்டுமென்றே அயித்தை வீட்டுக்கு அடிக்கடி போவான். அப்போதெல்லாம் அவனின் அப்பத்தா ‘அங்கயே போயி கெடக்காதடா… அவ உனக்குத்தான். எவனும் இழுத்துக்கிட்டுப் போகமாட்டான்’ எனக் கேலியாய் சிரிப்பாள்.
இருபத்தைந்து வருடத்துக்கு முன்னால் அவள் கல்லூரி இராண்டாம் ஆண்டு படித்த போது ராகவன் திருப்பூர் பக்கம் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு மதிய நேரத்தில் குளிக்க கண்மாய்க்குப் போறேன் என்று போனவள் திரும்பவேயில்லை… எல்லாப் பக்கமும் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.
குறி, கோடாங்கியில் எல்லாம் கெழக்கே போயிருக்கான்னு சொல்ல அந்தத் திசையில் எல்லாம் தேடி ஓய்ந்தபோது தங்களுக்கு ஏற்பட்ட கேவலத்தைத் தாங்காது அவளின் அம்மா ஒருநாள் உத்திரத்தில் தொங்கிவிட்டாள்.
ராகவன் கல்யாணமே வேண்டாமெனத் திருப்பூர் பக்கமே கிடந்தான். அவனை மெல்ல மாற்றிக் கல்யாணம் பண்ணி வைத்தார்கள். மாமனார் ஊரில் பெருந்தலை என்பதால் மாப்பிள்ளைக்கு உள்ளூரிலேயே தொழில் வைத்துக் கொடுக்க, இன்று அவனும் நல்ல அந்தஸ்த்தில் ஊருக்குள் இருக்கிறான்.
யோசனை எங்கெங்கோ பயணித்துத் திரும்பியபோது காரை ஒரு ஓரமாக நிறுத்தி கார்த்திகாவின் நம்பருக்குப் போன் பண்ணினான்.
இரண்டு முறை அடித்ததும்தான் எதிர்முனையில் எடுக்கப்பட்டது.
“அலோ யாருங்க..?” கார்த்திகாவின் குரல்
“கார்த்தி”
“ஆமா நீ…. நீங்க ராகவத்தானா…?” குரல் வியப்பில் விரிந்தது.
“ம்… கண்டுபிடிச்சிட்டே..”
“குரல் ஞாபகத்துல இருந்துச்சு… அதுபோக உங்க குரல்ல லேசா மாமா சாயல்… சரி… நல்லாயிருக்கீங்களா…?”
“இருக்கேன். கீரனூர் வந்தேன்… உன் ஞாபகம் வந்துச்சு. அதான் பார்த்துட்டுப் போகலாம்ன்னு”
எதிர்முனை பேசாமல் இருந்தது.
“கார்… கார்த்தி”
“ம்…” குரல் உடைந்திருந்தது.
“ஏய் என்னாச்சு…? வர வேண்டான்னா அப்படியே வண்டியை விட்டுருவேன்”
“இ… இல்ல வாங்க… வாங்க… முதல் முறையா என்னையப் பார்க்க வாரேன்னு ஒரு உறவு சொல்றதைக் கேட்டேனா அதான்” உடைந்தாள்.
அவன் பேசவில்லை.
“உங்க வீடு எங்க இருக்குன்னு கூகுள் மேப்பல அனுப்ப முடியுமா…? போன்ல நெட் வச்சிருக்கியா..?”
“ம்.. இருக்கு. அனுப்புறேன்” வேகமாச் சொன்னாள்.
“இதான் வாட்சப் நம்பர்… அனுப்பு” எனச் சொல்லி கட் பண்ணிவிட்டு, இறங்கி பழங்களும் சுவீட்டும் மல்லிகைப் பூவும் வாங்கிக் கொண்டான்.
அவள் அனுப்பிய லொகேசனுக்கு காரைச் செலுத்தி, இடத்தை அடைந்த போது அந்த வெயிலிலும் வாசலிலயே நின்று கொண்டிருந்தாள்.
அவன் இறங்கி அவளைப் பார்த்துச் சிரித்தான்.
‘வாங்கத்தான்’ என்றபடி வேகமாய் அவன் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டாள்.
வாயிற்படியைக் கடந்து உள்ளே போனவள் ‘இந்தப் பக்கம் வாங்கத்தான்’ எனப் பெரிய வீட்டைச் சுற்றிக் கொண்டு போன சந்தில் பயணிக்க அந்த வீட்டின் பின் பக்கம் நாலு ஓட்டு வீடுகள் வரிசையாய்… அதில் இரண்டாவது வீட்டுக்குள் கூட்டிப் போனாள்.
எந்த வசதியும் இல்லாத அந்த வீட்டைப் பார்த்தவன் “இதுலயா இருக்கே கார்த்தி” என்றான்.
“ஆமாத்தான்… இதுக்கென்ன நல்லாத்தானே இருக்கு” சிரித்தபடி பிளாஸ்டிக் சேரை எடுத்துப் போட்டாள்.
உட்கார்ந்தவனுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு சுவரில் சாய்ந்து நின்றாள்.
“உக்காரு” என்றான்.
“இருக்கட்டும்த்தான்”
அவன் பேசவில்லை. தண்ணீரைக் குடித்துவிட்டு சொம்பை கீழே வைத்தான்.
“இதெல்லாம் எதுக்கு வாங்கிட்டு வந்தீங்க…?”
“மொத தடவை வாறேன்… சும்மா வரமுடியுமா..?”
“நான் போன் நம்பர் கொடுத்து ஆறு மாசமிருக்குமில்ல… இதுவரை போனே பண்ணலயில்ல நீங்க…” வருத்தமாய் கேட்டாள்.
அவன் ஒன்றும் பேசாமல் பார்வையை வேறு பக்கம் ஓட விட்டான்.
“அன்னக்கி நீங்க உங்க நம்பரும் தரலைதானே… இவளுக்கு எதுக்கு நம்ம நம்பர்ன்னு நினைச்சிருப்பீங்க இல்லையா..?” சற்றே சோகமாய் வார்த்தைகள் வந்தன.
“ஏய் அப்படியெலாம் இல்லை… ஏனோ மறந்துட்டேன்”
“ம்…”
“நீ ஓடி… சாரி… நீ வந்ததுக்கு அப்புறம் நம்ம வீடுகள்ல நடந்ததெல்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்காது. அந்தக் கோபம், வலி எல்லாம் எனக்குள்ள நீண்ட காலம் இருந்துச்சு. சத்தியமாச் சொல்றேன் உன்னைய திருச்சியில பாக்கும் போதெல்லாம் நான் பக்குவப்பட்டவனா, வயது கொடுத்த முதிர்ச்சியில அந்த கோபத்தீயை அணைச்ச மனிதனாத்தான் இருந்தேன். ஏனோ மனசு உனக்கு நம்பர் கொடுக்க, போன் பண்ண விரும்பலை” மனதில் உள்ளதைச் சொன்னான்.
அவள் ஆமோதிப்பது போல் தலையாட்டி, வந்த அழுகையை மறைக்க உதட்டைக் கடித்து முகத்தைத் திருப்பிக் கொண்டு முந்தானையில் துடைத்தாள்.
“உம்மேல அத்தன நம்பிக்கை வச்சித்தான் படிக்க வச்சாங்க… நீ வந்ததுக்கு அப்புறம் பல நாள் ரெண்டு பேரும் சாப்பிடாம கெடந்தாக. நம்ம குடும்பமே உன்னயத் தேடுச்சு. சில வருசத்துக்கு அப்புறமாச்சும் நீ பேசியிருக்கலாம்… வந்திருக்கலாம். ம்… அப்படியே எங்களை எல்லாம் மறந்துட்டே” பேச்சை நிறுத்தியவன் “நீ போயி மூணே மாசந்தான்… அயித்த வீட்டு உத்தரத்துல…” பேச முடியாமல் நிறுத்தினான்.
அவள் உடைந்தாள். சத்தமாகவே அழுதாள்.
அவள் ஓயட்டும் எனக் காத்திருந்தான்.
“என்னத்தான் பண்ண… எனக்கு அவரைப் பிடிச்சிருந்துச்சு. வீட்டுல சொன்னா உங்களத்தான் கட்டிக்கணும்பாங்க. அதான் அப்படி ஒரு முடிவு. அது உங்க எல்லாரையும் பொறுத்தவரை தப்பான முடிவுதான் ஆனா என்னையப் பொறுத்தவரை சரியான முடிவு. நாம இன்னமும் சாதியில ஊறித்தான் இருக்கோம். அப்படியே நான் தேடி வந்திருந்தாலும் இந்த உயிர் மிஞ்சியிருக்காதுங்கிறதுதானே… அதுதானே உண்மை. அவரு வீட்டுப் பக்கம் எங்களை ஏத்துக்கத்தான் செஞ்சாங்க. இருந்தாலும் தனியாத்தான் இருந்தோம்”
“ம்… உன் பிள்ளைங்க என்ன பண்றாங்க…?”
விரக்தியாய் சிரித்தாள்.
“பசங்க…?” மெல்ல இழுத்தான்.
“என்னோட வயித்துக்கு அந்தப் பாக்கியம் இல்லத்தான்” வெறுமையாய் சிரித்தபடி வயிற்றில் கை வைத்துக் கொண்டாள்.
“சாரி”
சிரித்தாள். “எல்லாத்துக்கும் சாரிங்கிறது இப்ப பேஷனாகியிருச்சு போல. எங்களுக்கு குழந்தை பிறக்கல… டாக்டர்க்கிட்ட பார்த்தோம். எனக்குத்தான் பிரச்சினை. அப்ப அவரோட வீட்டுல வேற கல்யாணம் பண்ணுடா… கூட்டியாந்தவள அங்கிட்டுத்தானே விட்டுட்டு வான்னு எல்லாம் சொல்லத்தான் செஞ்சாங்க, ஆனா அவரு அப்படிப்பட்ட மனுசரில்லை. ரொம்ப நல்லவர். என்னய விட்டுக் கொடுக்கல… எனக்குத்தான் எதுவுமே ரொம்ப நாள் நிலைக்கலை”
ஏதோ புரிந்தவனாய் “அவரு… இப்போ..?”
“நான் தனியா இருக்கேந்தான்… நாலு வருசம் குழந்தை இல்லேங்கிற வருத்தத்தோட, என் வீட்டுக்காரரோட அன்பைச் சுமந்து மகிழ்ச்சியா வாழ்ந்தேன். அம்புட்டுத்தான், கடவுள் போதும்ன்னு முடிவு பண்ணிட்டான்” அவளின் கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.
“கார்த்தி… அப்ப அவரோட வீட்டார் கொஞ்சம் கொஞ்சமா மனச மாத்தி உங்கிட்ட இருந்து…” பதட்டமாய் கேட்டான்.
“அய்யோ… அவர எங்கிட்ட இருந்து அவங்க பிரிக்கலை… பிரிச்சது லாரித்தான்…” பேசாமல் அப்படியே சுவரோடு சாய்ந்து அமர்ந்தாள்.
என்ன சொல்வதெனத் தெரியாமல் தவித்தவன் கண்களை சுற்றிலும் ஓட விட்டவன் வலது புறச் சுவரின் மேலே பார்த்தான்.
அங்கே மாலைக்குள் சிரித்துக் கொண்டிருந்தான் அவளின் கணவன்.
எதுவும் பேச முடியாமல் அவன் அமர்ந்திருக்க, அவள் எல்லாத்துக்குமாய் உடைந்து அழுது கொண்டிருந்தாள்.
###
பரிவை சே,குமார்
கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் விருப்பம். இதுவரை எதிர்சேவை, வேரும்
விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார் என்ற புத்தகங்கள்
வெளிவந்திருக்கின்றன. எனது கதைகள் பல போட்டிகளில் வெற்றி
பெற்றிருக்கின்றன. எதிர்சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர்
விருதும் , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன் பொற்கிழி விருதும் பெற்றிருக்கிறேன்