கார்த்திகேயன் மாகா கவிதைகள்

1

இருத்தலை உணர்த்த:

 உன்னோடு சேர்ந்து தோழி எடுத்த ஒரு செல்பியை அனுப்பி இருந்தாய்

அணு அணுவாய் உன்னை

 இரசித்து விட்டுத் திரும்பினேன்

 லேசாக உன் அழகு

உன் தோழியினைக் கொஞ்சம் காட்டிக் கொடுத்தது

உன் தோழியும் கொஞ்சம் அழகுதான் என்றேன்

 கோபித்துக் கொள்ளும் இமோஜிகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறாய்

நீ அனுப்பிக் கொண்டே இரு

அடுத்தடுத்த

செல்பிகளையும் கோபம் கொப்பளிக்கும் இமோஜிகளையும்

நான் இரசித்துக் கொண்டே இருக்கிறேன்

நீ அனுப்பும் யாவற்றையும்

நம் இருத்தலை ரசித்துத் தானே உணர்த்த வேண்டும்.

2

தொழுவத்துக் காதல் :

நாம் ஒரு தேவலோக அந்தப்புரத்தில்

முத்துடைத்தாமம் மிகச் சூழ்ந்த பந்தலில் எல்லாம்

சந்தித்துக் கொள்ளவே இல்லை

சாணி அள்ளும் தொழுவத்தில்

எனது தட்டுக்கூடையைத் தூக்கி விடுகிறாய்

கையில் சூடான

 சாணிப்பால் ஒழுக ஒழுக

 பச்சையம் வழியும் பயிர்களுக்கு அதைக் கவளம் கவளமாக

 ஊட்டி விட்டுப் பின் நகர்கிறேன் கோவைக் கொடி

இறுக்கத்தைப் போல

பின் நின்று சுற்றி வளைக்கிறாய்

எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது

 உனக்கும் எனக்குமான

பழம் பிறப்பு.

3.

 அவனுக்கு

 இரவு என்பது

 ஒரு உழைப்பு சுரண்டும் கருவி

600 ரூபாய் கூலியில் பாதியைத் திருடிக் கொண்டு போய் விடுகிறது

இத்தனைக்குப் பிறகும் அவன் ஒரு முட்டை மாஸ்

சாப்பிட்டுத் தான் ஆக வேண்டுமா? எனத் தன்

மதுக்குவளையைப் பார்த்துக் கேட்கிறான்

 பதிலோ

 குடல் சொல்கிறது

” சூடாகக் கொண்டு ” என்று .

மீதி 300 ரூபாயினைத் தூங்கும் குழந்தையின் உள்ளங்கையில்

சொருகி விட்டுச் சாய்கிறான்

குழந்தையோ இறுகப் பிடுத்திக் கொண்டு உறங்குகிறது

தன் தந்தையின் உழைப்பை.

000

கார்த்திகேயன் மாகா

‘பெவிலியனில் காத்திருக்கும் தலைகள் (2014) கவிதை நூலும், அன்பின் நெடுங்குருதி (2023) கவிதை நூலும் வெளிவந்துள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *