1) கொஞ்ச காலம்
திசைக் கொன்றாக
எல்லோரும் கலைந்திருக்கிறோம்
மையமாக நிற்கும் சக்தி
முனையை பற்றி கொண்டு
சுழல்கிறோம்
அனைவரின் நிழலும்
ஒவ்வொரு நாளும்
சக்தி மையத்தின் மேல்
கைகளை அடுக்கி வைத்து
பிரமாணம் எடுத்துக்
கொள்கின்றன
இன்னும் கொஞ்ச காலம்தான்
என்று
அந்த கொஞ்ச காலம்
பக்கத்தில் இருந்த
கொஞ்ச காலத்திடமும்
அதையே சொல்கிறது
வெகு தொலைவில் இருக்கும்
கொஞ்ச காலத்தின்
காது வரைக்கும்
செய்தி போய் சேர்ந்து விட்டது
இனி கொஞ்ச காலத்திற்கு
எந்த கவலையும்
இல்லாமல் இருக்கலாம்
2) வண்ண உடை அணிந்த நிழல்கள்
ஒரே நாளில்
என்னிடமிருக்கும்
எல்லா பொருட்களும்
நீல நிறமாக மாறிவிட்ட அன்று
நான் உன்னை சந்தித்தேன்
இல்லை
நீ நினைப்பது போல் இல்லை
எனது பொருட்கள்
பச்சோந்திகள் இல்லை
வண்ணங்களின் கடவுள் நான்
எனது கண்களின்
கட்டளையின் படி
பொருட்கள்
நிறங்களை மாற்றிக் கொள்ளும்
நமது முதல் உறவின் போது
உனக்கு பிடித்த கத்தரிப்பூ
நிறத்திற்கு
எல்லா பொருட்களையும்
நான் மாற்றி விட்டதை –
வண்ண உடைகளை
அணிந்திருந்த
நமது நிழல்களின் நடனத்தை –
நாசிகளின் மேல் ஏறி நின்று
ஆயிரம் கண்களுடன் விரிந்த
நம் மூச்சுக் காற்றின் தோகையை
நீ காணவே இல்லை
உன் அகக்கண்களின் இமைகளும்
அப்போது மூடி இருந்ததைப்
பார்த்தேன்
3) உதிரிப்பூக்கள்
(@) சுண்டி விட்டேன்
பூ என்றாள்
பூத்துக் கொண்டே
தரையிறங்குகிறது நாணயம்
(@) யோனியை
வெட்டுக் காயமென்று எழுதிய
சித்தர் பாடலுக்கு
வாத்சாயனர்
எழுதிய உரையைப் படித்து
அதிர்ந்து போனேன்
சீ.. இப்படி எல்லாம் கூடவா
சிந்திப்பார்கள்
(@) குட்டி என்ஜினை
அள்ளியணைத்து
வயிறு முட்ட பால் கொடுக்கும்
தாய் எஞ்சினையும்
அடுத்த தலைமுறை
பார்க்கத்தான் போகிறது
(@) உனது அல்குலின்
பெருமிதத்தில்
மார்புகளின் திமிரில்
பின்னழகின்
பைத்திய அசைவுகளில்
நானிருக்கிறேன்
(@) நெருப்பாலான
இரண்டு மெழுகுடல்களில்
எரிகின்றன திரவச் சுடர்கள்
கரையும் நெருப்பு திவலைகளில்
ஒளியின் நீர்மை
4) குடுவையின் ஆட்சியில்
கடல் நீரை கண்ணாடி
குடுவையில் கொண்டு வந்து
உணவு மேசை நடுவில்
வைத்திருந்தேன்
அங்கிருந்து
அறையின் சகல பொருட்களையும்
ஆட்சி செய்து கொண்டிருந்தது
குடுவை
அதனுள் இருந்த
துண்டு கடலுக்குள்
இரண்டு வயோதிக
நுண்கிருமிகள்
பெயரன் பெயர்த்திகளோடு
கடலாடிக் கொண்டிருந்தன
மூடி வழியே கசிந்து
கொண்டிருந்தது
கடலின் சந்தோஷம்
இது போன்ற அன்பான
நேரங்களில் என் இதயம்
குழந்தையாகி
நினைவுகளை பொம்மைகளாக
எடுத்து விளையாட
துவங்கி விடும்
அங்கும் நடந்தது அதுதான்
குடுவையின் ஆட்சியில்
எல்லோரும் மகிழ்ச்சியாக
இருந்தோம்
5) நிழல் குளியல்
வெளியை நோக்கி பாய்கின்றன
பச்சை நதிகள்
பறவைகள் மட்டுமல்ல
நிழல் குளியல் தெரிந்தால்
நாமுமதில் நீராடலாம்
நதிக்கரை எங்கும்
மணல் மணலாய்
காற்றின் மூலக்கூறுகள்
கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்
கருத்துக்கு தெரிகின்றன
நதி எங்கும் நீந்தும்
ஒளியின் குஞ்சுகளை
பறவைகளே
வளர்த்தெடுக்கின்றன
வெளிக்குள் பாய்ந்தோடி
மறைந்து விடாமல்
நதியை பிடித்து வைத்திருப்பதும்
பறவைகளின் காதல்தான்
இந்த பௌர்ணமி நாளில்
உலகமே இன்று நதிக்கரையில்
ஒரு ராபின் பறவைக்காக
காத்துக் கொண்டிருக்கிறது
வசந்தத்தை திறக்கும் பாடல்
அதனிடம்தானே இருக்கிறது
6) அழாதீர்கள் இசைக்கருவிகளே
தாங்களே தங்களை
இசைத்துக் கொள்ளும்
மேகங்கள் மரங்கள் போன்ற
இசைக்கருவிகள் மட்டும்
இருக்கட்டும்
மற்ற தந்திக் கருவிகள்
தாளக் கருவிகள் அனைத்தையும்
அழித்து விடுங்கள் என்று
யார் ஆணையிட்டது
அழாதீர்கள்
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை
நீங்களும் இருங்கள்
அவைகளும் இருக்கட்டும்
மேகங்களும் மரங்களும்
மெல்லிய குரல்களால்
பாடும்போது மட்டும்
நீங்கள் உங்கள்
கட்டை குரலில் கணைப்பதை
கொஞ்சம் நிறுத்தி வையுங்கள்.
00

