ஆஷா ஞானமரியம்
ராகவன் விழித்ததும் கண்ணைக் கசக்கி உறக்கம் கலைக்கும் முயற்சியில் படுத்திருந்தான்.
இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை…ஊரச் சுத்திட்டு வெட்டப் பயலுக கூட தண்ணியடிச்சுட்டு சுத்தாத…பேசிக்கொண்டே லொட்டென டீ தம்ளரை தரையில் வைத்தாள் அமுதா.
கருமமே…காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா…இன்னைக்கு நாள் விளங்குமாடி… கத்தியபடி எழுந்தான் ராகவன்.
கத்தாத… புள்ள தூங்குறான்.. எனக்கு வீட்ல வேல இருக்கு… நீ பாட்டுக்கு எழுப்பி விட்டுட்டு போயிராத..
சொல்லிக்கொண்டே அழுக்கு துணிகளை எடுத்தாள்.
வாய் கொப்பளித்துவிட்டு வந்தவன் டீ தம்ளரை பார்த்து மீண்டும் கத்தினான்.
ஏண்டி.. பால் டீ இல்லையா…?
காசில்ல…பால் வாங்கல…அவனை பார்க்காமல் பதில் மட்டும் சொன்னாள்.
அதான் ஏன்னு கேட்டேன்… ராகவன் முறைத்தபடி கேட்டான்.
நீ நோட்டுக் கட்டு சம்பாதிச்சு குடுத்திட்ட.. நான்தான் வெறும் டீ வச்சு குடுக்கிறேன்…உனக்கு இந்த தேயிலை தண்ணியே அதிகம்.. எரிச்சலுடன் பேசினாள்..
என்னடி.. காலையிலருந்து எரிஞ்சு விழுற…அறைஞ்சேன்னு வை…
இது ஒன்னு தான் குறை…அடிச்சு கொல்லு… தேங்காய் உடைக்க புள்ளய தூக்கிட்டு நான் போறேன் … இந்த பய அந்த வெயில்ல என்கூட சீரழியுது..நீ வேலைக்கு போறேன்னு தினமும் போற.. தினமும் தண்ணியடிச்சுட்டு வர்ற..நான் என்ன பண்ணட்டும் சொல்லு..பேச பேச அழுகை வந்தது அமுதாவிற்கு..
ஓ…அப்போ மகாராணி வேலைக்கு போய் எனக்கு சோறு போடுற.. அப்படித்தானே…இனிமேல் உன் கையால பச்சத்தண்ணி கூட குடிக்கமாட்டாண்டி இந்த ராகவன்.. டீ தம்ளரை வீசி விட்டு வெளியே நடந்தான் ராகவன்.
தினமும் நடக்கும் நாடகம் தானே.. இன்னும் கொஞ்ச நேரத்துல வரும் சோறு எடுத்து வைன்னு.. சலித்துக்கொண்டு துவைக்கும் வேலையை ஆரம்பித்தாள்.
எல்லாம் நம்ம நேரம்.. அடுத்து ரெண்டு பொட்ட புள்ள இருக்குனு காரணம் காட்டி படிப்பையும் கெடுத்து கட்டிவைச்சு கடமையை முடிச்சுட்டாங்க.. இந்த வீட்டை தவிர என்ன இருக்கு.. கொஞ்சம் குடிப்பாரு.. மத்தபடி மாப்ள தங்கம்னு சர்டிபிகேட் வேற.. மனக்குமுறலுடன் துணிகளை துவைத்தாள்.
ஏய்.. அமுதா.. பையன் அழுறாண்டி..
எதிர்வீட்டு அக்கா அழைக்கவும் நினைவுகளில் இருந்து மீண்டாள்.
அம்மா வந்துட்டேண்டா… குழந்தையை கொஞ்சிவிட்டு பல் தேய்க்க அனுப்பினாள்.
இவன் வேற காலையிலே ஆடிக்கிட்டு எங்க போனான்னு தெரியலையே.. மனம் ஒரு நொடி ராகவனை தேடியது.
கருவேலங்காட்டுக்குள் மரத்தடியில் அமர்ந்து நண்பர்களுடன் மதுவருந்திக் கொண்டிருந்தான். தேர்தல் முதல் நேற்று நடந்த தெரு சண்டை வரை விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
ஏன் மச்சான் தேர்தல் வாக்குறுதிலமது ஒழிப்பு வரப் போகுதாமே.. ராகவன்
வரட்டும் பாக்கலாம்…
வர வர இந்த சிக்கன் கடைக்காரன் பீஸ் கம்மி பண்ணிட்டான்.. நூறு ரூவாய்க்கு எண்ணி பத்து துண்டு வச்சிருக்கான்.. ஒருநாள் அவனுக்கு இருக்கு.. ஆத்திரப்பட்டான் இன்னொருவன்.
இப்போ ஒரு பாட்டு வந்திருக்கு…ஒருத்தி ஆடுறா…எப்பா…என்னா உடம்பு தெரியுமா….கொச்சையாக விமர்சித்தபடி காலி பாட்டிலை தூக்கி எறிந்தான் சக நண்பன்.
ஏண்டா அதை தூக்கி வீசின.. கத்தினான் ராகவன்.
வெறும் பாட்டில் தானே.. என்னமோ சரக்கோட தூக்கி வீசுற மாதிரி பதறுற…
இல்லடா.. அதை தூக்கி வீசினா நம்ப கால்ல தான் குத்தும்..
ராகவன் சொல்றது சரி.. இந்த
முள்ளுக்காடு நம்மளோட குட்டி பார். போதையாகி மல்லாந்தா கூட எவனும் கண்டுக்கமாட்டான். நம்மளோட குட்டி நந்தவனம்டா…
சிரித்தான் இன்னொருவன்.
அது மட்டுமில்ல மச்சி.. இந்த காலி பாட்டில வித்து பொழைக்கிறவங்க இருக்காங்க.. பீர் பாட்டில் ஒண்ணு ஒரு ரூவாய்க்கு வாங்குறாங்க.. பாவம் குப்பை பொறுக்கிறவங்களுக்கு நம்மளால சின்ன வருமானம்.. பொழச்சி போகட்டும் டா.. இனிமேல் பாட்டில உடைக்காதடா….
ஆமாடா மச்சி.. இங்கயே பாரு பத்து பாட்டில் கிட்ட கிடக்கு.. எல்லாத்துக்கும் கணக்கு போடுவான். நம்ப ராகவன்.. பெருமையாக சொன்னான் இன்னொருவன்..
நம்மளால நாலு பேர் நல்லாருக்கணும் மச்சான். கெத்தாக பேசிக்கொண்டிருந்தான் ராகவன்.
அமுதா பேரம் பேசிக்கொண்டிருந்தாள்
கரெக்டா விலை சொல்லுங்க.. பெரிய பாட்டில் தனியா சின்ன பாட்டில் தனியா மூட்டைல இருக்கு.. கூடவே இந்த அலுமினிய பாத்திரம் இருக்கு..
கணக்கு கரெக்ட் தான்மா.. எடை கணக்கு..நம்பலைன்னா ஒவ்வொண்ணா எண்ணனும்…மொத்தமா 135 ரூவாய்க்கு இருக்கு.. கூட பதினைந்து ரூவா சேர்த்து போட்டு 150 ரூவா தாரேன்.. இல்லனா நாளைக்கு வரேன்.. இப்போ எண்ணிட்டு இருக்க நேரமில்லை.. ஞாயிற்றுகிழமை நாளு…நாலு பக்கம் போனா தான் வியாபாரம் பார்க்க முடியும் சலித்துக்கொண்டே சொன்னார் பழைய பொருள் வாங்குபவர்.
தேங்காய் குடோனில் தினமும் காலையில் தேங்காய் உடைத்து வெயிலில் காய வைக்கணும். மதியத்துக்கு மேல் முன்தினம் உடைத்து காயவைத்திருந்த தேங்காய்களை சிரட்டை தனியாக தேங்காய் பருப்பு தனியாக பிரித்து எடுத்து காய வைக்கணும்.. வெயிலில் வேலை செய்வது கடினம் தான்.. ஆனால் குழந்தையும் வைத்துக் கொண்டு வேலை செய்ய வசதியாக இருந்தது அமுதாவிற்கு. இந்த வாரம் குழந்தைக்கு காய்ச்சல் என்று சம்பளத்தை முன்கூட்டியே வாங்கிவிட்டாள். பத்தாதற்கு ஒரு நாள் லீவு வேறு…காசு கேட்டால் ஓனர் திட்டுவாரு.. ரெண்டு நாள் வேலைக்கு போய்ட்டு தான் காசு கேக்க முடியும்.
வீட்டுக்கு போகும் வழியில் கருவேலங்காட்டில் இருந்து எடுத்து வந்த பாட்டில் தான் இருக்கும் ஒரே வழி. இப்போ பேரம் பேசி வர்ற 150 ரூவாயும் இல்லாம போயிரும்.. எல்லாம் நம்ம தலையெழுத்து…சலித்துக் கொண்டே கணக்குப்போட்டாள் அமுதா.
ஏம்மா என்ன சொல்ற.. நாளைக்கு வரட்டுமா..
இல்லண்ணே.. எடுத்துக்கோங்க.. வேகமாக சொன்னாள்.
சரி.. பாத்திரம் வேணுமா..? காசு வேணுமா…? தன் வண்டியில்
வைத்திருந்த பொருட்களை காட்டி கேட்டார்.
பொருள் ஒண்ணுமே வேணாம்.. காசு குடுங்க..
அவரை பொறுத்தவரை பழைய பொருட்கள் வாங்கி பதிலுக்கு புதிய பாத்திரங்கள் விற்றால் லாபம். அமுதா காசை கேட்கவும் கொடுத்து விட்டு பொருட்களை அள்ளி வண்டியில் போட்டார்.
அமுதா அந்த காசை கையில் சுருட்டி பிடித்தபடி பாதையில் ராகவன் முகம் தெரிகிறதா என்று ஒரு நொடி பார்த்தாள்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை.. கையில் காசோடு பார்த்தால் இதுவும் போயிரும் என்ற பயம் அவளுக்கு.
ஓட்டமும் நடையுமாக பையனை தூக்கிக் கொண்டு அருகிலிருக்கும் கடையை அடைந்தாள்.
அண்ணே.. ஒரு கிலோ அரிசி குடுங்க..
காசு இருக்கா.. பழைய பாக்கியே இன்னும் தரல..
காசு இருக்கு..ஒரு கிலோ அரிசி,கால் லிட்டர் பால், ஒரு பிஸ்கட் என கையில் வைத்திருக்கும் காசுக்கு அளவாக பொருட்கள் வாங்க ஆரம்பித்தாள்.
ராகவன் வருவதற்குள் ராகவன் போன்றவர்கள் வீசிய காலிக் குப்பியின் கருணையால் அன்றைக்கான உலை வைக்க போனாள் அமுதா.
===

