”சர்வேஷ், மேத்ஸ் ஹோம்வொர்க் பண்ணிட்டியா?” பரபரத்தான் ராஜூ.

“நா முடிச்சுட்டேன். நீ போடல்லயா?”

“ஆமாடா! ப்ளீஸ், உன் நோட்டு குடேன். சீக்கிரம் காபி பண்ணிட்டு தரேன்”

“போடா! நா தர மாட்டேன்! சார் கிட்டா நல்லா திட்டு வாங்கு! “

“டேய், இன்னிக்கி மட்டும் குடுடா! நேத்தி நா அப்பாவேட சூப்பர் மார்கெட் போயிட்டேன். அதனாலதான் ஹோம்வொர்க் பண்ணல. எனக்கு அப்பா டார்க் ஃபேண்டஸி வாங்கிக் கொடுத்தாரு”

ராஜூவின் கைகள் அவன் பையைத் திறந்து டார்க் ஃபேண்டஸியை எடுத்தன.

சர்வேஷின் முகம் மலர்ந்தது.

அவன் கைகள் மேத்ஸ் நோட்டை எடுத்தது.

டார்க் ஃபேண்டஸியும் மேத்ஸ் நோட்டும் இடம் மாறின.

ராஜு ஹொம்வொர்க்கை சீக்கிரம் முடித்துவிட்டு சாக்லெட்டில் கொஞ்சம் திரும்ப வாங்க வேண்டும் என நினைத்தான்.

வெளியில் விளையாடிக் கொண்டு இருந்த மாணவர்கள் உள்ளே நுழைந்தனர்.

“டேய், ராஜூ, காபி அடிச்சு ஹொம்வெர்க் பன்ணிகிட்டு இருக்காண்டா” எவனோ கத்தினான்.

“சர்வேஷ், என்னடா திங்கிற? எனக்கும் தா” ரஞ்சித் கேட்டான்.

சர்வேஷ் அவனைத் தள்ளிவிட்டான்.

ரஞ்சித் கீழே விழுந்தான். அவன் வேண்டுமென்றே தானாகத் தான் விழுந்தான். தன் கையை வலிய நீட்டி, சர்வேஷ் கையில் இருந்த சாக்லெட்டைத் தட்டி விட்டான்.

கொழ கொழ சாக்லெட் பென்ச்சிலும் தரையிலும் சிதறியது.

செம கோபத்தில் சர்வேஷ் கீழே விழுந்த ரஞ்சித்தை காலால் உதைத்தான்.

ரஞ்சித் இயல்பாக நடிப்பதில் வல்லவன். அவன் “அய்யோ அம்மா”எனக் கூக்குரல் இட்டான்.

பிற பையன்கள் அவனைக் கைத்தாங்கலாக எழுப்பி, பென்ச்சில் அமர வைத்தனர்.

இந்தக் கலவரத்தில், ராஜு கணக்குப் பாடத்தை முடிக்காமல் பராக்கு பார்த்துக் கொண்டு இருந்தான். தன்னுடைய சாக்லெட் அநியாயமாக கீழே சிதறிவிட்டதே என்ற சோகம் வேறு!

ராஜூவின் பையில் இன்னோரு சாக்லெட் இருப்பதை நோட்டம் விட்ட சர்வேஷ், “டேய், ராஜூ நோட்டைத் தாடா!“ எனச் சத்தம் போட்டான்.

“இருடா, இதோ முடிச்சுட்டுத் தரேன்”

“இருங்கடா ரெண்டு பேரையும் சார் கிட்ட மாட்டி விடரேன்” ரஞ்சித்.

“வேணாண்டா, ரஞ்சித்து, நா உனக்கு எவ்வளவு தரம் புப்பிள் ஊதறதுக்குக் கொடுத்து இருக்கேன்” ராஜூ.

”நோட்டைக் கொடுறா” சர்வேஷ் தன் நோட்புக்கை இழுத்தான்.

“போடா, தர மாட்டேன். பாதி தான் போட்டு இருக்கேன் .சாக்லெட் கொடுத்துட்டு தான வாங்கினேன்” ராஜு.

“அதான் பாதி வேஸ்ட் ஆயிடுச்சே! அதனால பாதி போட்டா போதும் கொடுடா”

“ராஜூ, நானும் போட்டு இருக்கேன் கணக்கெல்லாம். என் நோட்டு தரவா?” சங்கர். “எனக்கும் டார்க் ஃபேண்டஸி தான் வேணும்”

”இந்த ராஜூ பய இன்னொரு சாக்லெட் வச்சி இருக்கானா? அப்ப நாமளும் சண்டையைப் போடுவோம்” என நினைத்த ரஞ்சித் மீண்டும் தன் கத்தலை ஆரம்பித்தான்.

“ஆ! டேய் அண்டங்காக்காய்களா! நா ஒத்தன் அடிபட்டு அழுது கிட்டு இருக்கேன். எனக்கு தான் தரணும் அந்த சாக்லெட்டை!”

சர்வேஷ் திடிரென ராஜூ பைக்குள் கையை விட்டு, சாக்லெட்டை எடுத்துக் கொண்டு ஓடத் துவங்கினான்.

சங்கர் அவனைப் பின்னல் இருந்து தள்ள, ரஞ்சித் அவன் காலை இடறி விட்டான்.

ராஜூவும், சர்வேஷ் கையில் இருந்த சாக்லெட்டைத் தட்டிப் பறிக்க முயன்றான்.

இந்தக் களேபரத்தில் சர்வேஷின் நோட்டு பென்ச்சின் ஒரத்தில் தொங்கியது .

பிற மாணவர்களும் சாக்லெட் போராட்டத்தில் கலந்து கொண்டதால், ”நாயே, பேயே, மன்கி, டான்கி, எச்சகல, ஓணான்” மற்ற இன்னபிற கலைச்சொற்களின் தாராளப் பயன்பாடும், நோட்டு புத்தகங்கள் கிழிந்ததும் தான் நடந்தது.

காலைப் பிரார்த்தனைக்கான மணியோசை ஒலித்தது கூட அவர்களுக்குக் காதில் விழவில்லை.

வகுப்பாசிரியரும் கணக்கு ஆசிரியருமான நாகநாதன் வகுப்புக்குள் வந்து, “என்ன நடக்குது இங்க? ப்ரேயருக்கு போங்க!“ என விரட்டினார்.

“ரஞ்சித் என்ன ஆச்சு? ஏன் ட்ரெஸ் இப்படி அழுக்கா இருக்கு?”

ரஞ்சித் தன் புலமை மிகு நடிப்பாற்றலைத் தொடங்கும் முன், “சரி, சரி, முதல்ல ப்ரேயருக்குப் போங்க”என்றார்.

அதற்குப் பின், இரண்டாவது பாட வேளையில் தான், நாகநாதன் சார், ரஞ்சித்தையும் மற்றவர்களையும் விசாரணைக்கு அழைத்தார்.

கணக்குப் பாடத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை யார் விளக்குவது என்ற வாக்குவாதம் தான் நடந்தது. அதில் தான் சர்வேஷின் நோட்டும் கிழிந்தது என எல்லோரும் துண்டைப் போட்டுத் தாண்டாத குறையாக சொன்னார்கள்.

சர்வேஷ் கணக்கு போடுவதில் திறமைசாலி! ராஜூ கணக்கு பண்ணுவதில் திறமைசாலி! 

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். சென்னை, மேக்ஸ்முல்லர்பவன், ஜெர்மன் கல்வியகம், கேந்திரிய வித்யாலயாவுடன் இணைந்து அளித்த திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழி பயின்று, ஜெர்மனி, மேன்ஹெய்ம் நகரில் ஜெர்மன் பயின்றார்.கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ் நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், இந்து தமிழ்திசையின் மாயாபஜார் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. அவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *