தொலாக்கெணறு – வாசிப்பு அனுபவம்.
மதன் ராமலிங்கத்தின் தொலாக்கிணறு சிறுகதைத் தொகுப்பு ஒரே வாசிப்பில் ..உள்ளம் பூரிப்பில்.
முதலில் மதனுக்கு வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்வோம்..ஒரு கதாசிரியனாக முதல் தொகுப்பிலே கலையும் கதையும் கூடி வந்திருக்கிறது.
அண்மையில் மறைந்த இராசேந்திர சோழனின் எட்டுக்கதைகள் போல் மதனின் எட்டுக்கதைகள் இதில்.
· கிணறு வெட்டும் கதைசொல்லி
· கிணற்றில் இறங்கி மோட்டாரைத் தூக்கி நேராக வைக்கும் கதைசொல்லி
· வாபூசையின்போது கட்டிங் தேடி அலையும் திருப்பூர் பனியன் கம்பெனி கட்டிங் மாஸ்டர் கதைசொல்லி
· சாயப்பட்டறையின் பாய்லர் தொழிலாளர் கதை சொல்லி
· பொழிச்சிக்கு அப்பா வளர்க்கும் எருமைக் கெடாவுக்கு விசம் வைக்கும் சுப்பு மாமாவின் சாவில் காறித்துப்பும் கதை சொல்லி
· சேடை ஓட்டி எள் விதைக்கும் பண்ணையமாக கதைசொல்லி
மதன் பல அவதாரம் எடுத்து கதை சொல்லியிருக்கிறார். எட்டுக்கதைகளில் ஒன்பது மரணங்களை நிகழ்த்திப் பார்க்கிறார்.
Ø எருமைக்கிடாவுக்கு விசம் வைத்த சுப்பு மாமனுக்கு நல்ல சாவு..
Ø எருமை வீட்டுக்காரருக்கு மனம் பேதலித்த சாவு
Ø சகுந்தலா மற்றும் தாமரை என்னும் இரண்டு அருமையான பெண்கள் பூச்சி மருந்தும் எலி பேஸ்ட்டும் தின்று சாகிறார்கள்.
Ø சந்தேகப் பேர்வழி சம்பத் வடநாட்டுக்காரியைக் கிண்டல் பண்ணும்போது வடக்கன்ஸ்களால் வெளுக்கப்பட்டு அதன் விளைவாக சாவைத் தழுவுகிறான்.
Ø தாமரையின் கணவனும் தாமரையின் மாம்பழக்கலர் சேலையில் தொங்குகிறான்.
Ø கடைசிக் கோடி என்னும் கடைசிக் கதையில் பெரியதம்பி வயோதிகம் காரணமாகச் செத்துபோக, அவருடைய தம்பியான சின்னத்தம்பியும் அவனுடைய மனைவியான சாந்தாயாவும் மின்சாரம் தாக்கி உயிரிழக்கிறார்கள்
இப்படி ஒன்பது மரணங்களைத் தாண்டி இத்தொகுப்பில் அன்பின் தரிசனங்களை ஊமை பாஷையில் உலகத்து நீதி பேசும் செல்லமுத்தன், ஊர் எருமைக் கெடேரிகளுக்கு தோதாக எருமைக்கிடாவை பொழிக்குத் தயாராக வைத்திருக்கும் ரமேஸின் அப்பா, பால்யத்தில் தன்னைக் காப்பாற்றிய சம்பத்தின் பழிச்சொல்லைக் கண்டுகொள்ளாமல் அவனுக்கு உதவ ஓடிவரும் முத்துக்குமார்,தொழிலாளிகக்கு சோற்றையும் கறியையும் வாரி வாரி வைக்கும் அன்னபூரணி தாமரை இவர்கள் மூலமாக ரசவாதி போல மயிலிறகால் தடவிச் செல்கிறார்.
உலகம் போரும் அமைதியுமானது போல வாழ்வு கொண்டாட்டமும் மரணமும் கொண்டதுதானே..
அங்கங்கே காறித்துப்பும் கதைசொல்லி வைக்கம் முகம்மது பஷீர் மாதிரி பீடி பிடிக்கவும் தவறுவதில்லை.
பாடைச்சுழி மற்றும் கடைசிக் கோடி என்று தலைப்பிட மதனுக்கு ரொம்ப தைரியம் இருப்பதைபோலவே தொலாக்கிணறு கதையில் காமடி சரவெடி போட்டு பகடியாட்டம் ஆடியிருக்கிறார்.
தொழிலாளர்களின் கஷ்டங்களையும் முதலாளிகளின் கொட்டங்களையும் குரலை உயர்த்தாமல் பதிவு பண்ணிய மதன், சகுந்தலா வந்தாளில் கண் கலங்கவும் செய்துவிடுகிறார்.
‘’குமார். முத்துக்குமார், சம்பத், செல்லமுத்தன், சகுந்தலை’’-மதனுக்கு மிகவும் பிடித்த பெயர்கள் போல..வெவ்வேறு கதைகளில் வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு மீண்டும் சூட்டி அழகு பார்க்கிறார். சில நேரங்களில் இந்தக் குமார் அந்தக் குமார்தானா என்று தேடிப்பார்க்கும் ஆவலை உருவாக்கி நகுலன் போல’’ வந்தது எந்த ராமச்சந்திரன்’’ என்று குழம்பி ரசிக்கும் விளையாட்டை ஒரு கேன்டி கிரஷ் போல வாசகனுக்கு உருவாக்கிக் தருகிறார்.
சில கதைகளை நாயின் ஊளையிடலோடும், குரைத்தலோடும் , உற்றுப்பார்த்தலோடும் முடிக்கும் மதன் நாயை ஒரு குறியீடாக்குறார் போல.
முதல் தொகுப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு கனமாகவும் , வாழ்வியலோடு தொடர்பானதாகவும், மனதுக்கு அணுக்கமாகவும் கதாபாத்திரங்களை உலவவிட்டு கொங்கு மண்ணின் மணம் கமழ கெடா விருந்து படைத்திருக்கிறார் மதன். கதைகளில் வீசும் வாசம் அப்படி.
அசும்பு என்ற முதல் கதையில் இப்படி எழுதுகிறார் மதன்..
‘’கெணறு கங்கையல்லோ..
வாய்க்காலில் கரும்புச்சாறு மாதிரி தண்ணீர் போய்க்கொண்டிருந்தது.’’
வாசித்துப் பாருங்கள்..
தொலாக்கெணற்றில் ஊறிவரும் தண்ணீர் ‘’கண்ணீராய் துளிர்க்கும்.. கற்கண்டாய் இனிக்கும்…’’
இன்னும்கூட நுணுக்கமான கலைஅம்சமான கதைகளை மதன் படைப்பார். அவருக்கு அருமையான எதிர்காலம் உள்ளது. வாழ்த்தும் அன்பும்.
நடுகல் வெளியீடு
விலை- 140.
தொடர்புக்கு :- 9865442435
சுப்பு அருணாச்சலம்.
நான், சுப்பு அருணாச்சலம் என்ற பெயரில் 1998 முதல் சிறுகதைகளும் கோகிலாராஜ் என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறேன். நெய்வேலி சொந்த ஊர்.
ரேகை பதிந்த வீடு எனது முதல் தொகுப்பு 2002 -ல் வந்தது. சுந்தரசுகன் எனது யுத்தம் என்ற முதல் கதையை வெளியிட்டது. பிறகு ஆனந்த விகடன், கணையாழி,செம்மலர், சதங்கை,தினமணி கதிர் முதலிய இதழ்களில் கதைகளும் கவிதைகளும் வெளிவந்தன.