நாற்பது மற்றும் ஐம்பதுகளில் வினூ மன்கட், விஜய் ஹஜ்ஸாரே, அறுபதுகளில் வெங்கட்ராகவன், சந்திரசேகர் பிறகு எழுபதுகளில் கவாஸ்கர், குண்டப்பா; என்றெல்லாம் பழம் புராணக்கதைகள் கேட்டும், லேசாக விவரம் தெரிய ஆரம்பித்ததும் எண்பதுகளில் கபில்தேவ், அஜ்ஸாருதீன், சாஸ்திரி, ஸ்ரீகாந்த், மஞ்ரேக்கர். தொன்னூறுகளில் சச்சின், திராவிட், பிறகு ஷேவாக், யுவராஜ், தோனி, ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி என்று கால ஓட்டத்தில் மாறிக்கொண்டே செல்லும் கிரிக்கெட்டன்களை நினைவுகூரும்போது மட்டையான்கள் பற்றித்தான் எப்போதும் நினைவு வருகிறது. கபில்தேவ் என்னும் பந்தோனைத் தவிர வேறு எந்தப் பந்தாண்டியும் நினைவுக்கு வருவதில்லை. காரணம் இந்தியப் பந்தாண்டி எவனும் அனல் பறக்கும் பந்து வீச்சை வீசியதில்லை. பெயர் வாங்கிய அனைவரும் சுழல் அல்லது மாங்காய் உருட்டுதான். எரப்பள்ளி ப்ரஸன்னா, ரோஜர் பின்னி போன்றோர்கள் பெயரெல்லாம் இவ்விஷயத்தில் அடிபடும்.
கொஞ்சம் கொஞ்சமாக விவரம் தெரிந்து கையில் பிடித்து மட்டையை ஆடப் பழகியபோது, வெங்சர்க்கார், கிர்மானி, சேத்தன் ஷர்மாவெல்லாம் வீட்டுக்கு அனுப்பப்பட்டு, புதிய தலைமுறை கட்டை மாயாவிகளான மஞ்சுரேக்கர், ரவி ஸாஸ்த்ரியெல்லாம் வந்துவிட்டிருந்தனர். நான் போட்டிகளை ஓசி க/ வெ தொலைக்காட்சிப் பெட்டியிலோ, டிச்சடியில் கொசுக்கடி வாங்கி சொரிந்துகொண்டே, எண்ணெய் வழிந்துகொண்டு நாறும் மண்டையை முன்னூறு கொசுக்கள் வட்டமிட முன்வரிசையில் நின்றுகொண்டிருப்பனின் தோள் வழியே கால்களை எக்கி எக்கி தொ. கா விற்பனைக் கடைகளிலும் காணுகையில் கேட்டறிந்து கற்றுக்கொண்ட கிரிக்கெட் நுணுக்கங்கள் வெகு சிலவைதான். ஆனால் பொறுமையாக உட்கார்ந்து யோசிக்கையில், ஸ்ரீகாந்த், மற்றும் கபில் தேவ் ஆகிய இருவர் மட்டும் அணித்தேர்வில் பழைய உ.கோ அனுபவம் என்ற ஒன்றைத்தவிர வேறு தகுதிகள் ஏதுமில்லாமல் உள்ளே நுழைந்து அணியில் ஒட்டிகொண்டிருந்தார்கள் என்று விளங்கியது. ஏனென்றால், தொன்னூற்று இரண்டு உ. கோவானது, எண்பத்தேழில் துணைக்கண்டத்தில் நடந்ததற்கு முந்தைய பதிப்பான எண்பத்து மூன்றில் இங்கிலாந்தில் நடந்ததன் மறுபதிப்பு, அதில் விளையாடிய அனுபவம் மற்றும் ‘சீனியாரிட்டி’ காரணமாக இவர்களை மட்டும் கொண்டுவந்தார்கள். மற்றவர்களைக் கொணர்ந்தால் அது வீண் சுமை அல்லது அவர்களே நினைத்தாலும் அதில் பங்கேற்ற பகுதி பேருக்கு மூட்டு வாதமும் முடக்கு வாதமும் வந்துவிட்டபடியாலும், ஒரு சமநிலைப்படுத்தும் முயற்சியாகவும், கிரிக்கெட்டின் பொற்காலம் தொடங்குவதை அறிவிக்கும் விதமாகவும், உலகக் கிரிக்கெட்டில் வண்ணக் கோமாளி உடைகளும் பகலிரவு வெளிச்சதில் ஆடும் அவல ஆட்டத்தில் ஈடுபடவேண்டிய கட்டாயம் தவிர, அணிக்குள் இள ரத்தத்தையும் வேறு பாய்ச்சியே ஆகவேண்டும் என்னும் அழுத்தம் இருந்ததும் கூட ஒரு காரணம்தான்.
நம் பக்கத்து எதிரி நாட்டில், ரிவர்ஸ் ஸ்விங் கண்டுபிடித்தும், பந்துவீச்சில் தொடை நடுங்கி மட்டையர்களின் முகரையைப் பெயர்ப்பதுமாக ரகளையாக யுகப்புரட்சி நடத்திக்கொண்டிருந்த அதே தொன்னூற்று இரண்டு உ. கோ காலகட்டத்தில், இங்கு இன்னும் கவாஸ்கரிடம் ஞானப்பால் குடித்து வளர்ந்த பாச்சி குட்டி பயல்கள் கட்டை போட்டு, கட்டை போட்டு நூறு பந்தில் தொண்ணூற்றை மட்டையை உயர்த்தி உயர்த்தி எந்நேரமும் திட்டிவாயிற் காப்போனின் கையில் பந்தை விட்டு வீணடித்துக்கொண்டும், மீந்த பத்தில் தொட்டவை ஒன்பதில் எந்த அவரசகதியுமில்லாமல் நடந்தோடியும், ஒன்றில் விதையில் அடிவாங்கியோ ஆட்டமிழந்தோ கூடாரம் திரும்பிக்கொண்டிருந்தனர்.
மட்டை விவகாரம்தான் அவ்விதம் என்றால், பந்துபிடியின்போது, மட்டை மைனர்கள் பலர் எல்லைக்கோட்டில் ‘மட்டையத்’ திமிருடன் ஓய்வெடுக்கச்சென்று காறி உமிழ்ந்துகொண்டே வெய்யிலில் வெந்து, காய்ந்து போன ரசிகைகளுக்கு இரவுவிடுதி எண்ணைக் கொடுத்துக் கொண்டிருக்கையில் நத்தை வேகத்தில் பந்து ஊர்ந்து அருகில் வரும்போது மட்டும் ஒயிலாக ஒற்றை முட்டிக்கால் மண்டியிட்டு அதைப் பிடித்தெறிந்துவிட்டு, குளிர் கண்ணாடி செருகப்பட்ட மண்டையுடன் எல்லைக் கயிறு நோக்கி மீண்டும் ஓய்வு நிலைக்கு வந்து விடுதித் தொடர்பெண்ணின் ஐந்தாம் மற்றும் ஆறாம் இலக்கத்தையும் கொடுத்து முடித்தார்கள். காறி உமிழ்ந்தும், தொடையிடுக்கில் தேய்த்தும் பந்தின் மாண்பை அழித்து, நோகாமல் நான்கடி நடந்து வந்து சுழற்பந்து என்ற பெயரில் சூரத்தேங்காய் விட்டெறிந்துவிட்டு, அதை மட்டைமனிதன் எல்லைக்கோட்டுக்கு விளாசியடித்ததும் தொ.காவில் கண்டு ஊர் சிரிக்கிறது என்பதால் தலையை பக்கவாட்டில் ஆட்டுவதுமாக இருந்தனர் பந்தாண்டிகள்.
சீர்திருத்தம் செய்கிறேன் பேர்வழி, சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்றுவிட்டு நாறிக்கொண்டிருக்கும் பன்றித்தொழுவத்தை அதில் உண்டு கொழுத்து, பிரண்டுகொண்டிருக்கும் பன்றிகளை கையில் குச்சியை எடுத்து வெளுத்து விரட்டிவிட்டு, நன்கு டெட்டால் போட்டு அலம்பி விட்டுவிட்டு, மீண்டும் கிழப் பன்றி ஜோடி ஒன்றை மட்டும் பிடித்துவந்து முள்ளங்கி பத்தைகளை வெட்டிப்போட்டு, ஊற வைத்த சோயா மொச்சையை அதில் போட்டு பிரட்டி வைத்து, தொட்டியில் கழுநீர் ரொப்பி தீவனம் கலந்து வைத்து மின் விசிறியைப் போட்டுவிட்டு ஸுஸ்ருதை செய்தால் எப்படி இருக்குமோ அப்படி மஞ்சுரேகர் மற்றும் மனோஜ் பிரபாகர் போன்ற பிட்டம் கொழுத்த தடி தண்டகப் பிண்டங்களை அணியில் வைத்திருந்தது இந்தியத் தேர்வுக் குழு. அப்போது நன்கு உருண்டு திரண்டு கெழுமீன் போலவும், குண்டர் படை போலவும் அராத்தாகத் (இங்கு நான் இலக்கியக் கலைமாமணி பொற்கிழி வாங்கி சோர்ந்துபோன எழுத்தாளரின் அள்ளக்கையைக் குறிப்பிடவில்லை) திரிந்துகொண்டிருந்த இலங்கை அணி உலகக்கோப்பை அரையிறுதி தொட்டு அடுத்த சில வருடங்கள் வரை படு தெனாவெட்டாக வேண்டும்போதெல்லாம் இந்தியாவை அடித்துத் துவைத்து துவம்சம் செய்து தன் வெறியைத் தீர்த்துக்கொண்டது. அஸ்ஜார், காம்ப்ளி, பழைய ஜடேஜா, சித்து போன்றவர்கள் மட்டும் அவ்வப்போது வீறு கொண்டெழுந்தார்கள், அசகாய சூரர்களாகி இருபது, முப்பது, அவ்வளவு ஏன்? ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நூறே கூட அடித்தார்கள். வேண்டுமென்றேதான் சச்சின் மற்றும் திராவிட் பற்றி இங்கு குறிப்பிடவில்லை. ஏனென்றால், சச்சின் கடவுள் என்றால், திராவிட் அரண். அவ்விருவரையும் பற்றி இங்கு எழுதி கெட்ட கர்மாவை சம்பாதித்துக்கொள்ள விரும்பவில்லை. நல்லதோ கெட்டதோ, கடவுள் கடவுள்தானே?
தொன்னூறுகள் கடந்து இரட்டைக்கோபுங்கள் வீழ்ந்தபிறகுதான், இந்தியாவில் மைனர் குஞ்சு மட்டையான்களுக்கு இனிமா கொடுக்கப்பட்டு மேற்கொண்டு பத்தியச் சோறும் போடப்பட்டது. கங்குலி என்னும் வங்காளி ரோஷக்காரன் தலைமையில் இறுதிப்போட்டி வரை சென்று மீண்டும் ஆஸ்திரேலியாவால் பிளக்கப்போட்டு அடிக்கப்பட்டது. அதற்குப் பிறகான காலங்களில் அடி, மிதி, உதை வாங்குதல் பிறகு வட்டியும் முதலுமாகத் திரும்பக்கொடுத்தல், பழி தீர்த்தல், என்று இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கு தேவையான அனைத்து போதை வஸ்துக்களும் தாராளமாகக் கிடைத்தன. கிரிக்கெட் வெறி முற்றி, பதினொன்றில் இன்னொரு கோப்பையையும் வென்றது. இங்கு தோணி பற்றி சொல்லவேண்டும் ஆனால் விரிவாகச் சொல்ல முடியாது. ஒரே வரியில் வேற்று மொழியில், அதில் பேசினால் போடா என்று தேநீர் சட்டை போடும் மொழியில் சொல்வதானால் “ஏக் பிஹாரி, செள பே பாரி”. அதாவது ஒரு பிஹாரியை, நூறு பிஹாரியிலிகளால் கூட சமாளிப்பது கடினம்.
என்னைப் பொறுத்தவரை முதன் முறை கோப்பையை வென்ற காலத்துக்கும் இரண்டாம் முறை வெல்வதற்கு சற்று முன் காலத்துக்கும் நிலவிய பற்றாக்குறை மற்றும் பட்டினி வெற்றி காலம்தான் கிரிக்கெட்டின் பொற்காலம் என்று அடித்துக் கூறுவேன். நான் அவ்வாறு கூறுவதற்குக் காரணம் என்னவெனில் இடைக்காலத்தில், பாகிஸ்தானியர்களின் கலிஃபோர்னியாவான அமீரகத்தில் நடக்கும் பந்தயங்களில் இந்தியா ஐந்தில் ஒன்றில்தான் வெல்லவேண்டும் என்பது விதி. மீறி வென்றால், என்ன நடக்கும் என்பது நிழலுலகத்தாருக்கே வெளிச்சம். இது ஒருபுறமென்றால், இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் வீட்டோ பவர் என்ற ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு; முரளீதரனை சுழல் என்ற பெயரில் மாங்குத்து குத்துகிறான், தூக்கி எறிகிறான் என்றெல்லாம் பழி சுமத்தி, அதிகாரம் கைகளில் இருக்கும் இறுமார்ப்பில் கண் மண் தெரியாமல் அம்மணக்குண்டி ஆட்டம் ஆடினர். தொண்ணூற்று ஆறு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியிடம் மண்ணைக்கவ்வியது. விக்கெட்டுகள் அதிகம் எடுக்காதிருந்தாலும், முரளீதரன் ஆஸ்திரேலிய மட்டையான்களின் மென்னியை பிடித்த பிடியைத் தளர்த்தவில்லை, அதிக ஓட்டங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. ஆஸ்திரேலியாவின் கயவாளித்தனம் எடுபடவில்லை. உ.கோ இறுதிப்போட்டியில் இலங்கையிடம் வாங்கிய செருப்படித் தோல்விதான் ஆஸ்திரேலிய மூளைகளை குயுக்தியுடன் யோசிக்க வைத்தது. பழுப்புத்தோல் கொண்ட துணைக்கண்ட மூன்றாந்தர அணியிடம் அடிவாங்குவதா என்னும் இனவாதத் திமிர் மேலோங்க, அவர்களது போக்கு மோசமடைந்துகொண்டே போய் தொன்னூற்று ஒன்பதில், அடிலைட் மைதானத்தில், இலங்கை அணித் தலைவன், போட்டியைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்யுமளவு போனது. ரணதுங்க என்னும் இலங்கை கிரிக்கெட்டின் மீட்பன், முரளீதரனை அரணாக நின்று காத்தான். இது போன்ற திமிரையும் அதிகாரத்தையும், மிரட்டல்களையும், அடக்குமுறையையும் எதிர்த்து, நிமிர்ந்து நின்று களமாடும் எத்தர்களின் வீர தீர சாகசங்கள்தான் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்திருந்தன. நாட்வெஸ்ட் ஸீரீஸில், மீசையை மொழுமொழுவென மழித்த வங்கச் சிங்கம் கங்குலி, மேல் சட்டையைக் கழற்றிய நிகழ்வு வெள்ளை மேட்டிமைத் திமிரடக்கலில் இந்தியர்களின் பங்கு.
இதே காலகட்டத்தில் புக்கிகளின் பிடியில் சிக்கி இந்திய, பாகிஸ்தானிய கிரிக்கெட்டின் மானம் கப்பலேறியது. கருப்பு ஆடுகள் பல சிக்கின. வசதியாக பம்பாய் லாபி வேறு. அதை எதிர்த்துபோராடி முதுகெலும்புள்ள ஜக்மோஹன் டால்மியா மேற்கு வங்கத்திலிருந்து ஒரு கங்குலியைக் கொண்டுவந்தார், அவர்தான் அணித் தலைவனான சிலகாலத்துக்குள்ளேயே சட்டையைகழற்றி சுழற்றுமளவு வெற்றியைக் கொண்டாடும் அதிர்ஷ்டத்தைப் பெற்றிருந்தார். அதற்குப் பிறகான ஒரு குறுகிய காலத்துக்கு மேற்கு வங்கத்திலிருந்து மட்டையான்களும், திட்டி வாயிற்காப்போன்களும் புற்றீசல் போல் வரிசையாகப் புறப்பட்டு வந்து, சோபிக்காமல் சோடை போன வண்ணமிருந்தனர். பெங்களூரு லாபி இன்னொருபுறம், அதன் வாயிலாக வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி, அணில் கும்ப்ளே, ஸ்ரீநாத், சுஜித் சோம்சுந்தர், தொட்ட கணேஷ் என்றெல்லாம் தினுசு தினுசாக ஆள் அனுப்பிக்கொண்டிருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து ‘அவாள்கள்’ மட்டும் தேசிய அணிக்குத் தேர்வாகிறார்கள் என்கிற பரப்புரை பரவலாவதற்கு முந்தைய காலகட்டத்தில் இங்கிருந்து அனுப்பப்பட்ட ‘டேவிட் கவர்’, குச்சிகளுக்கு வெளியே போகும் எந்தப் பந்தையும் எவன் சொல் பேச்சுக்கும் அடங்காமல் தெனாவெட்டாக நோண்டிவிட்டும், கிண்டிவிட்டும், அதாவது ஸ்கூப் ஆடி, ஸ்கூப் ஆடி ஆட்டமிழந்து அதை ஒரு கைப்பழக்கமாக வைத்துக்கொண்டிருந்த காரணத்தால் விலக்கப்பட்டு, சீரழிந்து பிற்காலத்தில் தமிழ் படங்களிலெல்லாம் தலையைக்காட்டி வாழ்க்கையை ஓட்ட நேர்ந்தது.
இத்தனை பிரச்சனைகளுக்கும் நடுவில், சந்தடி சாக்கில் கபில்தேவ் ஐ.ஸீ.யெல்லைத் தொடங்கி ஜ்ஸீ டீவி வாயிலாக நான்கு போட்டிகளைக்கூட நடத்தியிருப்பாரா என்பது சந்தேகமே, அதற்குள் அதைக் கருவறுப்பதற்கென்றே வந்தது ஐ.பிஎ.ல் என்னும் பொறுக்கி ஆட்ட முறை. கிரிக்கெட் அன்றோடு ஒழிந்தது.
தமிழ்நாட்டில் எப்படி சினிமாவையும் வாழ்க்கையையும்,
சினிமாவையும் மொழியையும்,
சினிமாவையும் வழங்கு சொற்களையும்,
சினிமாவையும் உணவையும்,
சினிமாவையும் இசையையும்,
சினிமாவையும் வரலாற்றுப் பெருமையையும்,
சினிமாவையும் கலாச்சார அடையாளத்தையும்,
சினிமாவையும் அரசியலையும்,
சினிமாவையும் நகைச்சுவை உணர்வையும்,
சினிமாவையும் குழந்தைகளின் பெயர்களையும்,
சினிமாவையையும் கல்வி கேள்வியையும்,
சினிமாவையும் அடிப்படை சூடு சுரணையையும்,
சினிமாவையும் இனமானத்தையும்,
சினிமாவையும் தன்மானத்தையும்,
சினிமாவையும் நுகர்வையும்,
சினிமாவையும் வாழ்வியல் முறையையும்,
சினிமாவையும் மனிதனின் தனித்துவத்தையும்,
சினிமாவையும் பிரஞ்ஞையையும்,
சினிமாவையும் தனிமனித நுண்ணறிவு அளவுகோலையும்,
சினிமாவையும் அதனிடம் சோரம் போன ஆன்மாவையும்
பிரிக்க முடியாதோ, அதே போல் இந்திய அளவில் – கிரிக்கெட்டையும் மதத்தையும், கிரிக்கெட்டையும் பாலிவுட்டையும், கிரிக்கெட்டில் அரசியலையும், ‘கிரிக்கெட்’ அரசியலையும், அரசியலில் கிரிக்கெட்டையும் பிரிக்கவே முடியாது எனலாம். அக்காலத்தில் சந்தையை இழந்த தமிழ் நடிகைகள் எப்படி வழமை மாறாமல் ‘தோல்’ தொழிலதிபர்களை மணந்தார்களோ, அதேபோல் ஹிந்தியில் சந்தையை இழந்த மூத்த நடிகைகள் மட்டையான்களின் மட்டைக் கைப்பிடிதான் வேண்டும் என்று அடம் பிடித்துத் தேர்ந்தனர். பழைய கிழ மட்டையான்கள் வலுவான கட்சியிடம் ‘புட்டவைப்பான்’ வாங்கி, அதில் நின்று வென்று பாராளுமன்றம் போயினர். நடிகைகளுடன் அறை இட்டு ஏறுவது, சூதாட்டத்தில் ஈடுபடுவது, கொலைகள் செய்துவிட்டு சிக்காமல் தப்புவது என்று உலகில் உள்ள அனைத்து ஹராம்களுக்கும் முகாமாக விளங்கியது கிரிக்கெட்.
ஐ.பி.எல் வந்து அனலில் ஊற்றிய அரை பீப்பாய் பெட்ரோலாய் எல்லா சீர்கேடுகளும் அமிழ்த்துவாரில்லாமல் வானுயர கொழுந்து விட்டு எரிந்தன. தீமைகளின் ருத்ர தாண்டவத்தில் விளைந்த சில நன்மைகளாய், அடிமட்டத்திலிருந்து வரும் கிரிக்கெட் கனவு காணும் வீரர்களுக்கு அதிர்ஷ்டக்காற்று வீசியது. குப்பையிலிருந்து கோபுரத்துக்குச்சென்ற வீரர்கள் ஐபிஎல் காசில் மாளிகைகள் கட்டினர். ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் எடுபிடியாக இருந்த ஐ.ஸி.ஸி, ஐபிஎல்லில் புழங்கும் பெரும்பணத்திற்கு வாயைப் பிளந்து பி.ஸி.ஸிக்கு வாலாட்டும் நாயாக மாறிப்போனது. இது வரை நடந்ததெல்லாம் இயற்கையான சீரழிவு. இனி வருவதெல்லாம் பொறுக்கித்தனத்தின் விளைவால் உச்சத்துக்குச் சென்ற செயற்கைச் சீரழிவு.
உலகெங்கும் நடக்கும் கிரிக்கெட் பந்தயங்கள் எங்கு, எப்போது நடக்கவேண்டும்? ஐபிஎல் முடிந்து இந்திய வீரர்கள் எப்போது ஸ்வஸ்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் உணர்வார்கள்? துபாய் நுகர்வுத் திருவிழா எப்போது முடியும்? எப்போது அதிலிருந்து மீளும் இந்தியப் பணமுதலைகளை முதலில் ஐபிஎல் டிக்கெட் விற்பதன் மூலம் உள்ளே இழுக்கலாம்? பிறகு அங்கு வரும் சந்தையை இழந்த ஹிந்தி நடிகைகளுக்கும் பெருமுதலைகளுக்கும் மஞ்சம் விரித்து, பூப்போட்டு பணத்தேட்டை போடலாம்? போட்ட பிறகு ஐஸிஸியிடம் போட்டிகளை எப்படி இடம் மற்றும் நேரம் இந்திய அணிக்குத் தோதாக மாற்றச்சொல்லலாம்? எந்தப்போட்டியில் எந்த அணி தோற்றால் சுவாரசியமாக இருக்கும்? என்று பதினைந்து புள்ளி ஐந்து பில்லியன் டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில் சொன்னால் தோராயமாக ஆண்டுக்கு ஒருலட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாய் என்னும் பேய்ப்பணத்தை வைத்திருக்கும் நிறுவனத்தின் தொடுப்பு வீடாகச் செயல்படும் பிஸிஸிஐ, அதன் ஏஜென்ட்டாகச் செயல்படும் ஐஸிஸி என்று தீய சக்திகள் அனைத்தும் இணைந்து திட்டம் தீட்டின. உலக மொத்தத்திலிருக்கும் அனைத்து கிரிக்கெட் வீரர்களையும், கிரிக்கெட் வாரியங்களையும் அடுத்த நூறு வருடங்களுக்கு அடிமையாக வைத்திருக்குமளவு பணமும் அதன்மூலம் கிடைக்கும் அதிகார பலமும் ஐபிஎல், பிசிசி மற்றும் அதனிடம் மானத்தை அடமானம் வைத்த ஐசிசி இவைகள் சேர்ந்து நடத்தும் பந்தயங்கள்தாம் ஆசியக்கோப்பை, சாம்பியன் சுழற்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் மற்றும் உலகக் கோப்பை போன்றவை.
இப்படிப்பட்ட பண சாம்ராஜ்ஜியம் நடத்தும் ஐபிஎல் என்னும் பெருங்கேட்டிற்கு உலகெங்கும் ரசிகக் குஞ்சாமணிகள்! உண்டு கொழுத்து உறக்கம் வராக்குறைக்கு, விசில் போடு, குசில் போடு என்று குடும்பம் குடும்பமாக இங்கு அமெரிக்காவில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் போட்டிக்கு இருபது முப்பது தமிழ் குடும்பங்கள் சேர்ந்து பெரிய பூங்காக்களையும் வண்ணத்திரைகளையும் ஆயிரக்கணக்கான டாலர்கள் வாரியிறைத்து முன்பதிவு செய்து, போட்டி தொடங்கும் பல மணிகளுக்கு முன்பே பிரியாணி கிண்டித் தின்றுவிட்டு டம்ப் ஷரட்ஸ், புட்டலோனா, ஊம்ப்லிங்க்ஸ் என்று விளையாடிக்கொண்டும் தமிழ் திரைப்படத் தேவிடியா பாடல்களுக்கு கூடிக் கும்மியடித்துக்கொண்டும், கார்களுக்கு கிரிக்கெட் தீமில் ‘தலை’, ‘புழை’, ‘முலை’ என்றெல்லாம் டாலர்களை வாரி இறைத்து எண் பலகை வாங்குகிறார்கள். பேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தில், ஒரே குடும்பத்தில் இரு கார்கள் அருகருகில் நிற்கின்றன, ஒரு காரின் குண்டியில் அதன் எண் பலகையில் ஒன்றில் ‘தல’ என்றும் இன்னொன்றில் ‘போடு’ என்றும் எழுதியிருக்கிறது. இங்கு துட்டை விட்டெறிந்தால் போதும் ஒரே குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ சேர்ந்து மூன்று கார்களை ஒரே நிறம் மற்றும் தரத்தில் வாங்கி ஒன்றில் ‘Mutti’ அடுத்தடுத்தவைகளில் முறையே ‘Pottu’ மற்றும் ‘Oombu’ என்றல்லாம் பதிவெண்ணுக்கு பதிலாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட எண் பலகைகளை வாங்கி மாட்டிக்கொள்ளலாம். தான் கெட்ட குரங்கு நந்தவனத்தையும் கெடுத்ததாம் என்பதுபோல் எந்தச் சூதுவாதும் அறியா, தமிழில் ஒரு வார்த்தை கூடப் பேசத்தெரியா தமது வாரிசுகளையும் கூட ஐபிஎல் மற்றும் தமிழ் சினிமா விஷத்தைப் புகட்டிக் கெடுக்கிறார்கள் இங்குள்ள தமிழர்கள்.
சரி புலம்பெயர் தமிழர்களைக்கூட ஒழிந்து போ, இனத்துக்கு இனம்போல் பணத்துக்கு பணம்தான் சேரும் என்று விட்டு விடலாம். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு என்ன கேடு என்று புரியவில்லை. அப்பன், ஆத்தா மண்டையைபோட்ட தினத்தில் கூட, பிணத்தைக் கொண்டு சென்று குழியில் வீசிவிட்டு வந்த மறு நிமிடமே குடித்துவிட்டு, மொட்டைத்தலையுடன் ஆடிக்கொண்டே பக்கத்து தியேட்டரில் சென்று நெல்சன் படம் போட்டிருக்கிறதா, அட்லீ படம் போட்டிருக்கிறதா என்று பார்க்கிறார்கள் அல்லது ஐபிஎல் என்னும் சூதாட்டத்தை மணிக்கணக்கில் உட்கார்ந்து விவாதிக்கிறார்கள். உங்களையெல்லாம் நான் ஒன்று கேட்கிறேன், நீங்களெல்லாம் சோற்றில் உப்புப் போட்டுத்தான் தின்கிறீர்களா, அல்லது அதில் மூத்திரம் பெய்து பிசைந்தது உண்கிறீர்களா? இரண்டாயிரத்து இருபத்து மூன்று ஐபிஎல் இறுதிப்போட்டியில், சென்னை அணியில் எத்தனை தமிழர்கள் விளையாடினர்? சரி தமிழர்கள் கூட வேண்டாம், எத்தனை சென்னையைச் சேர்ந்த வீரர்கள் விளையாடினர் நீங்கள் மானங்கெட்டுப்போய் அதற்கு விசில் போடுவதற்கு? ஆரம்ப காலகட்டத்தில் கூட அணிக்கு இருவரோ மூவரோ கட்டாயம் அணியின் சொந்த மாநிலத்திலோ, நகரத்திலோ இருந்து வீரர்களை வைத்திருக்கவேண்டும் என்று கண் துடைப்பு விதி ஒன்றை வைத்திருந்தது ஐபிஎல் நிறுவனம். காசு வர வர, காலப்போக்கில் அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. எந்தச் சுரணையுமில்லாமல் உங்களது பொன்னான நேரத்தையும், பொருளையும், வியர்வையையும், தன்மானத்தையும் அடகு வைப்பதால்தான், அவர்கள் அங்கு எந்த லஜ்ஜையும் இல்லாமல் ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்யம் அமைக்கிறார்கள். ஒரு விஷயத்தில் இந்த மார்வாடிகளைப் பாராட்டியே ஆகவேண்டும் ஏனென்றால், ‘தமிழ்ப் பெருமையைப்’ பறை சாற்றும் சீயெஸ்க்கே அணிக்கு ஒளிந்திருந்து விசில் போட்டுக்கொண்டிருந்தனர் மும்பை, அஹமதாபாத் மார்வாடிகள். முதலில் நான் புல்லரித்துப் போய் புளகாங்கிதம் அடைந்தாலும், அறிவு விழித்துக்கொண்டு ஆராய்ச்சி செய்தால், சந்தையில் லிஸ்ட் செய்யப்படாத சீயெஸ்க்கே பங்குகளை அறுபது ரூபாய்க்கு வாங்கி, இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு விற்றுவிட்டு வெற்றி விசில் போட்டுகொண்டே, நடிகைகளைக் கிளப்பிக்கொண்டு சத்தமில்லாமல் மாலத்தீவுக்கு பறந்து சென்றனர்.
பிசிசியிடம் உள்ள அதிகாரத்தின் மூலம் பாகிஸ்தான் என்னும் கடந்த எழுபத்தைந்து வருடங்களாக இந்தியாவிடம் வாலாட்டும் சொறிநாயை கிரிக்கெட் ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி, இந்தியாவிடம் மண்டியிடவைத்த ஒரு விஷயத்தில் வேண்டுமானால் பாராட்டலாம். தீவிரவாதத்தை ஸ்டேட் பாலிசியாக வைத்திருந்த, சீனாவிடம் சோரம் போன, பாகிஸ்தானில் அடுத்த வேளை உணவுக்கு தட்டில் போ(Bo)ட்டியும், நிஹாரியும், ரொட்டியும் இருக்கிறதோ இல்லையோ, கிரிக்கெட் ஸ்கொர் என்ன? பாபர் ஆஸம் ஐம்பது அடித்தாரா, ரிஸ்வான் எத்தனை கேட்ச் பிடித்தார்? என்றெல்லாம் கேட்கவைத்து மக்களை கிரிக்கெட் போதையில் வைத்திருக்கிறது ராணுவம். அனுதினமும் இந்தியாவுக்குள் குண்டு வெடித்துக்கொண்டே, பேச்சு வார்த்தைக்கு வா, காஷ்மீர் பற்றி பேசலாமா என்றெல்லாம் வம்பிழுத்துக்கொண்டிருந்த அடிமுட்டாள் பிச்சைக்கார பாகிஸ்தானை, கிரிக்கெட் பட்டினி போட்டுக் கதறவைத்த விதத்தில் வேண்டுமானால் ஐபிஎல்/ பிசிசிஐயின் பராக்கிரமத்தையும் ராஜதந்திரத்தையும் மெச்சலாம். அழுகுனியாட்டம் ஆடும் அயோக்கியர்களிடம் எந்த ஆயுதத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். காந்தியை தேசப்பிதாவாக வரித்திருக்கும் இந்தியா வன்முறை என்னும் ஆயுத்தை மட்டும் என்றைக்கும் கையில் எடுக்காது, அதற்கு பதில் கிரிக்கெட் ராஜதந்திரத்தைக் கடைபிடிக்கும் அதில் வெற்றியும் பெறும் என்பதை நிரூபித்துவிட்டது என்கிற ஒரு விஷயத்துக்கு வேண்டுமானால் ஒரு சிறு பாராட்டு. மற்றபடி பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியை ஏதோ வாழ்வா சாவா அணு ஆயுதப்போராக ஊதிப் பெரிதுபண்ணும் போக்குக்கு, புட்டத்தில்தான் வெளுத்து விட வேண்டும். எனக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மீது எந்தக் காழ்ப்பும் கிடையாது. அந்நாட்டின் ஸ்திரத்தன்மையில்லாத் தலைமை காரணமாக, துணைகண்டக் கிரிக்கெட்டின் தலை சிறந்த அணியானது அரசியலில் சிக்கித் தவிப்பதுதான் உண்மையில் வருத்தமளிக்க வைக்கிறது. தீவிரவாதத்தைக் கைவிடு, பேச்சு வார்த்தை நடத்தலாம், தீவிரவாதத்தைக் கைவிடு கிரிக்கெட் உறவு வைத்துக்கொள்ளலாம், என்று பேசிப்பேசியே, முட்டாள் பாகிஸ்தானை ஒரு துப்பாக்கி ரவையைக்கூட செலவழிக்காமல் சீனா பக்கம் தள்ளி கடனில் சிக்க வைத்து மூச்சு முட்ட வைத்தது மட்டும் நல்லதொரு கிரிக்கெட் ராஜதந்திரம்.
இவைகளெல்லாம் ஒரு புறமிருந்தாலும், சமீப காலத்தில் அருவருக்கத்தக்க வகையில் ஆசியக்கோப்பையில் எல்லை மீறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். மற்ற போட்டிகளுக்கு இல்லாத வகையில் பாரத-பாகிஸ்தான் அணிகளுக்கிணையிலான போட்டிகளுக்கு மட்டும் மழை பெய்தால் ரிஸர்வ்ட் நாட்களில் விளையாட என்று நாட்களை ஒதுக்கியது. எப்படியாவது இந்தியாவையும் பாகிஸ்தானையும் இறுதிப்போட்டியில் மோத வைத்துவிடுவதற்காக முனைப்புடன் பிசிசியின் கைகூலியாகச் செயல்பட்டது ஐசிசி என்பது பிராது. ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால்தான் சில்லறை அதிகம் என்பது கணக்கு. அப்படியென்றால், இலங்கையும், நேபாளமும், வங்கதேசமும் தெருவில் திரியும் பூனைகளைப் பிடித்து சிரைப்பதற்கா கிரிக்கெட் அணி வைத்திருக்கின்றன? இதுதான் திமிர், இதன் பெயர்தான் அதிகார துஷ்ப்ரயோகம். ஒரு காலத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் இருந்த கட்டற்ற வீட்டோ பவர் என்னும் அதிகாரம், இன்று எழுதப்படாத வீட்டோ அதிகாரமாக மாறி பன்மடங்கு விஸ்வரூபம் எடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் குவிந்திருக்கிறது. அது நடந்துகொள்ளும் விதமோ, அதிகாரம் கை மாறியதும், அது கிடைத்த இறுமார்ப்பில் கண் மண் தெரியாமல் ஆடும் அற்ப சர்வாதிகாரியின் மனநிலையை ஒத்துள்ளது. இவை அனைத்துக்கும் உச்சகட்டமாக, அஹமதாபாத்தில் நடக்கும் இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியை மைதானத்தில் நேரில் காண உச்சபட்சமாக தலைக்கு ஐம்பது லட்ச ரூபாய் கட்டணமாம்! தீபாவளிக்கு இட்டிலிக்கு குடல் கறிக்குழம்பும் மத்தியானத்துக்கு எலும்பு கறியும் சோறும் தின்று கொண்டிருக்காமல், அதிகாலையில் எழுந்து வெஞ்சனமில்லா நீசத்தண்ணி குடித்துவிட்டு வெறும் வயிற்றில் ஆறு கிலோ மீட்டர் சைக்கிளில் சென்று இரண்டு அவித்த முட்டைக்காக என்சிசி பரேடு செய்யும் சின்சியர் மாணவன் போல் செயல்பட்டு சந்திர மண்டலத்துக்கு பிச்சையெடுத்து பிச்சையெடுத்து அறிவியல் வளர்த்த நிறுவனம் ஒன்று ராக்கெட் விட்டால், இங்கு சோற்றுக்கே காவடியெடுக்கும் நிலைமையில், நிலாவுக்கு ராக்கெட் ஒரு கேடா என்று ‘வேக்கியானமாக’ கூவும் கூட்டம், ஐம்பது லட்ச ரூபாய் கிரிக்கெட் நுழைவுச்சீட்டு பற்றியெல்லாம் கேள்வி எழுப்பாமல், பட்டறையை சாத்திக்கொண்டு வாளாவிருக்கும்.
இதுபோல் குருட்டு அதிர்ஷ்டத்தில் கிடைத்த அதிகாரத்தை வைத்து பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவி பேயாட்டம் ஆடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒன்றே ஒன்றை நினைவுறுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். உலகில் கலிங்க, சேர, சோழ, ரோம, கிரேக்க, பாரசீக, சுல்தான்கள், நவாபுகள் மற்றும் மொகலாய சாம்ராஜ்ஜியங்கள் கூடத்தான் இருந்தன. இன்று அவை வரலாற்றில் இருந்த தடம் கூட இல்லை. நினைவிலிருக்கட்டும், அது யாராகவும் இருக்கட்டும்.
எஸ். ப்ரஸன்ன வெங்கடேசன்
தமிழ் நாட்டில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். வட்டார வழக்கில், மற்றும் அது சார்ந்த வாசிப்பில் ஆர்வம் மிக்கவர். அமெரிக்காவில் பணியாற்றுகிறார். எழுத்தில் ஆர்வம் மிக்கவர். இவரது புனைவுகளில் சில, ஒரு தொகுப்பாக நடுகல் சென்ற வருடம் வெளியிட்டிருக்கிறது.