மனிதத்துக்கு அப்பால்..
—–
கூர் மங்கிய பொழுதில்
உரசிக்கொள்ளமலிருக்க
அருகிருந்த மரத்தடியில்
அடைக்கலமானேன்
அத்துணை வெப்பத்தைக்கொட்டவிடிலும்
வெக்கை வதைத்துத் தள்ளியது
ஈரம் தூவிய நிழல் அடந்த
அந்த மரத்தடியில்
சொர்க்கம் இருந்தது என்பேன்
நம்புவீர்களா?!
ஆம்
அந்த
அந்திப் பகல் பொழுதில்
யார் கண்ணிலும் நான் படவில்லை
எச்சிப்பருக்கையும் எனக்கில்லை
குடலுக்குள் குரூரமாய் படரும்
பசிக்குள் சிக்கிக்கொண்டேன்
உண்மைதான்
என் வயிறின் பசிக்கான
ஆழ அகல வரைபடம்
அவர்களிடம் இருக்க
வாய்ப்பில்லை தான்
ஆனாலும் ,
பத்து கிராம் பரிவைக்கூட காட்ட யாரிடமும் மனமில்லை
அலைந்து அடைந்த குளமொன்று நீட்டிய நீரில் பசியாறி
தடுமாறி நடக்கையில் தான் கண்டேன்
அம்மரத்தை.
மறுக்காத மரத்தின் காலடியில்
விழுந்தேன்
எழுந்தேனா என்று
என்னை அறியாத இவ்வூர்காரர்கள் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்
எனக்கும் தெரியவில்லை…
முனைவர் கி அன்பு
சென்னை அ.மா.ஜெயின் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராக பணிபுரிகிறார். ஏராளமான விருதுகள் பெற்றுள்ள இவர் 50 கவிதைப்புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். முனைவர் பட்டம்: 2020 கலித்தொகையில் அக இலக்கிய மரபுகள் -ஓர் ஆய்வு. ஆய்வியல் நிறைஞர் பட்டம்: 2005 குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில் பக்தி நெறி. சென்னையில் வசிக்கிறார்.