குட்டியானை அம்முலுவின் கும்மாளங்கள் – 3

பனிக்காட்டில் இப்போது மழைக்காலம் முடிந்து இளவேனிற்காலம் தொடங்கி விட்டது. அது கோடையின் தொடக்க காலமாக இருப்பதால், இளஞ்சூடு கொண்ட பருவநிலை நிலவும்.

காடு முழுவதும் புதுப்புது செடி கொடிகள் செழிப்பாக வளர்ந்து இருந்தன. குத்துச் செடிகளிலும், கொடிகளிலும், மரக்கிளைகளிலும் வண்ண வண்ணமாக பூக்கள் பூத்து வாசனை வீசிக்கொண்டிருந்தன. சிறு பூச்சிகள், எறும்புகள், வெளியில் திரிந்து கொண்டும் இரை தேடித் தங்கள் புற்றுகளுக்குள் சேர்த்து வைப்பதிலும் கவனமாக இருந்தன. அப்போது தானே அடுத்து வரப் போகும் மிகுந்த வெப்பமான கோடை காலத்தில் அதிகம் வெளியே வராமல் இருக்க முடியும்? நத்தைகள் அந்த இளம் சூடு தந்த இன்பத்தில் தங்கள் ஓட்டு முதுகை அசைத்து அசைத்து உல்லாசமாக இங்கும் அங்கும் உலாவிக் கொண்டிருந்தன.

முதல்நாள் அம்முலுவின் யானைக்கூட்டத்தில் இருந்த செவிலி என்ற பெண் யானைக்கு ஒரு ஆண் யானைகுட்டிப் பிறந்திருந்தது. அதனால், அன்று முழுவதும் அந்தக் கூட்டத்து யானைகள் ஒரேயடியாக மகிழ்ச்சியில் திளைத்தன. எல்லோரும் பொய் அந்தக் குட்டிப்பயலை பார்த்து ஆசி வழங்கி விட்டு வந்தன.

இளசான மூங்கில் கிளைகளை பெண் யானைகள் பார்த்து பார்த்துக் கொண்டு வந்து செவிலிக்குத் தந்து வாழ்த்தினார்கள். மலையோரத்தில் இருந்த கரும்புக் கொல்லைக்குப் போய் நன்கு வளர்ந்த கரும்புகள் சிலவற்றை அம்முலுவின் அப்பா கஜா தலைமையில் வேறு நான்கு பெரிய ஆண் யானைகள் கொண்டு வந்து அவற்றைத் துண்டாக்கி மொத்த கூட்டத்துக்கும் இனிப்பு வழங்கினார்கள். மொத்தத்தில் அந்தக்  குட்டி யானைப் பிறந்ததை அந்த யானைக்கூட்டமே கொண்டாடி மகிழ்ந்தது.

அதுவரை தான் பிறந்ததிலிருந்து இரண்டு வருடமாக எல்லோரும் தன்னையேக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்ததை எண்ணிப் பார்த்த அம்முலுவுக்கு கொஞ்சம் வருத்தமாகப் போய் விட்டது.

“அம்முலு, நீயும் வா. போய் அந்தக் குட்டிப் பயலைப் பார்த்து வாழ்த்தி விட்டு வரலாம். இன்றிலிருந்து நீ பொறுப்பாக நடக்க வேண்டும். இனிமேல் நீ குழந்தையில்லை. உன்னை விடச் சிறிய குட்டி வந்து விட்டது. ஞாபகம் வைத்துக் கொள். பெரியவளாய் லட்சணமாய் உன் லூட்டிகளை மூட்டை கட்டி வச்சுட்டு, அம்மாப்பா சொல்றபடி கேட்டு நல்லபிள்ளையாய் இருக்கணும். சரியா?” என்று அம்மா காமாட்சி சொன்னதும் ‘சுள்’ என்று கோபம் வந்து விட்டது அம்முலுவுக்கு. ஆனால், வெளிக்காட்டிக் கொள்ளமல் துடுக்காக “சரியா சொல்லும்மா. அம்மா பேச்சைக் கேட்கணுமா? அப்பா பேச்சைக் கேட்கணுமா? ஏன் கேட்கிறேன்னா. நீ எப்பவும் என்னைக் கண்டிச்சுக்கிட்டே இருப்ப. ஆனால், அப்பா என்னை உற்சாகப் படுத்திகிட்டே இருப்பார்.” என்றது.

காமாட்சிக்குப் பக்கத்தில் நடந்து கொண்டிருந்த அவரது தோழி செண்பா யானை அம்முலு சொன்னதைக் கேட்டு சிரித்து விட்டது. காமாட்சிக்கு ரொம்ப அவமானமாக இருந்தது.

கோபத்தோடு அம்முலுவை முறைத்துப் பார்த்து விட்டு, “எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து வாயாடாதே அம்முலு. உன்னை விட ஒரு வயசுதான் பெரிசு அந்த கலா யானைக்குட்டி. ஆனால், அது தன் அம்மா பேச்சை ஒரு நாளும் தட்டுவதே இல்லை. உன்னை மாதிரி வாயாடுவதும் இல்லை. அதைப் பார்த்தாவது புத்தி வர வேண்டாமா உனக்கு?” என்று சத்தமாகத் திட்டியதும், அம்முலுவின் முகம் வாடி விட்டது.

“அம்மா. நான் இப்போ குட்டிப்பயலைப் பார்க்க வரல​. நீ போ. நான் அப்பாவோட அப்புறமா போய் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி அங்கேயே நின்று விட்டது.

சிறிது தூரம் போனதும் காமாட்சி “செண்பா. இந்த அம்முலுவை நினைச்சா எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு. அவளோட அப்பா நிறைய செல்லம் கொடுத்துக் கெடுத்துட்டார். குட்டி யானைங்க கத்துக்க வேண்டிய நிறைய விஷயங்களை இரண்டு வயசாகியும் அம்முலு இன்னும் சரியா கத்துக்கவே இல்லை. நான் சொல்லித் தந்தாலும் காதுல வாங்கிக்கறதே இல்லை. ம்.. என்ன செய்யறதுன்னே தெரியலை” என்று கவலையுடன் சொன்னது.

பதிலுக்கு செண்பா, “காமாட்சி. நான் ஒண்ணு சொன்னா நீ கோவிச்சுக்க மாட்டியே?” என்று கேட்டது. “சேச்சே.. நீ சொல்றத நான் ஏன் தப்பா எடுக்கப் போறேன். நீ என் உற்றத் தோழியாச்சே செண்பா. தயங்காம சொல்லு” என்றது காமாட்சி.

“இங்க பாரு காமாட்சி, அம்முலு நீ கவலைப் படற மாதிரி அசடோ, அடங்காப் பிடாரியோ கிடையாது. பல தடவை, அம்முலு புத்திசாலித்தனமா பேசறது, நடந்துக்குறதை நான் பார்த்திருக்கேன். ஆனால் நீ அம்முலுவை ரொம்ப மட்டம்தட்டிப் பேசறமாதிரி தோணுது. இப்பக்கூட அந்தக் கலா யானைக்குட்டி கூட ஒப்பிட்டு நீ பேசினதுல அம்முலுவோட முகம் வாடிப் போயிருச்சு. குழந்தைகள் சரியா இருக்கணும்னு புத்தி சொல்ற பெற்றோர்களும் தங்கள் கிட்ட இருக்குற சின்னச் சின்னக் குறைகளை சரி படுத்திக்கணும் இல்லையா?” என்று கேட்டது.

காமாட்சிக்கு அப்போதுதான் தான் செய்யும் தவறு புரிந்தது. “ஆமாம் செண்பா. நீ சொல்றது மிகவும் சரிதான். நம் குழந்தைகளை ரொம்பக் கடுமையா கண்டிக்காம அவர்களோட சின்ன சின்ன தப்புகளை  பொறுமையா எடுத்துச் சொல்லி அவங்களுக்குப் புரிய வைக்கணும். அப்புறம் எல்லா குழந்தைகளும் திறமைசாலிகள் தான். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு தனித்திறமை நிச்சயம் உண்டு. அதைக் கண்டுபிடிச்சு அவங்களை அதுல ஊக்கப் படுத்தணும். மற்றவங்களோட ஒப்பிட்டுப் பேசவே கூடாதுன்னு புரிஞ்சுகிட்டேன். உன்னுடைய சரியான அறிவுரைக்கு மிக்க நன்றி” என்று சொன்னது காமாட்சி.

அதன் பிறகு தோழிகள் இருவரும் செவிலி யானை இருந்த இடத்துக்குப் போனார்கள்.

** **

தங்களின் இருப்பிடத்தில் வாடிய முகத்தோடு உட்கார்ந்திருந்த அம்முலுவைப் பார்த்து விட்டு அதன் இனிய நண்பர்கள் முயல்குட்டி மோகனன், முள்ளம்பன்றி குட்டி மீனா, நரிக்குட்டி சேஷூ மூவரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். “அம்முலு, என்னாச்சு உனக்கு? ஏன் சோகமாக இருக்கே?” என்று கோரஸாகக் கேட்டார்கள்.

“ப்ச்சு. ஒண்ணுமில்ல. எப்பவும் போல எங்கம்மா கடிச்சு உட்டுட்டுடாங்க. அவங்க திட்டினதுகூட பரவால்ல​. ஆனா, அந்த ஆந்தமுழி கலா யானை இருக்கால்ல, அவளோட என்னை ஒப்பிட்டு அவதான் சூப்பர்னு சொல்லிட்டாங்க” என்று வாட்டத்தோடு சொன்னது அம்முலு.

“சீச்சீ.. அந்தக் கலா யானையா? அவ எவ்வளவு திமிர் பிடிச்சவ? எங்களை எல்லாம் வேணும்னே விரட்டிட்டு வந்து பயமுறுத்துவா?” என்று எரிச்சலோடு முகத்தைச் சுளித்தபடி சொன்னது நரிக்குட்டி சேஷூ.

“ஆமாம், இரண்டு நாள் முன்னாடி நான் ஆசையாய் மண்ணிலருந்து மரவள்ளிக் கிழங்கை கஷ்டப்பட்டு தோண்டியெடுத்து சாப்பிடலாம்னு இருந்தப்போ திடீர்னு பக்கத்துல தமதமன்னு பிளிறிக்கிட்டே ஓடிவந்தா அந்தக் கலா யானைக்குட்டி. நான் எங்கே என்னைய மிதிச்சு சட்னி பண்ணிடுவாளோன்னு பயந்து ஓடினப்ப என் கையில இருந்த கிழங்கு கீழே விழுந்துடுச்சு. அப்போ அது, ‘ஹோ ஹோ பயந்துட்டியா.. ஓடு ஓடுன்னு’ என்னைக் கிண்டல் பண்ணி சிரிச்சுக்கிட்டே ‘இந்தக் கிழங்கு எனக்குத்தான்னு’ சொல்லி அப்படியே வாயில போட்டு கபளீகரம் பண்ணிட்டுச்சு. உங்கம்மா அதைப்போய் நல்லதுன்னு எப்படிச் சொன்னாங்க? அம்முலு நீதான் சமர்த்து?” என்று கண்களைப் படபடவென அடித்தபடி சொல்லி விட்டு அம்முலுவின் குட்டித் துதிக்கையைக் கட்டி முத்தமிட்டது மோகனன் முயல் குட்டி.

முள்ளம்பன்றி மீனா “அம்முலு இதுக்கா நீ இவ்ளோ வருத்தப்படற? என்னெயெல்லாம் எங்கம்மா குறை சொல்லாத நாளே கிடையாது. ஏன்னா, நாமெல்லாம் வீட்டுல நல்ல பசங்க மாதிரி நடிச்சுட்டு வெளியில அட்டகாசம் பண்ணற சேட்டைக்காரங்க இல்லை. நீ கவலைப்படாத அம்முலு. உன் நல்ல குணத்தை உங்கம்மா சீக்கிரமா புரிஞ்சுப்பாங்க” என்று ஆறுதல் சொல்லியது.

அதே சமயம் அங்கு வந்த கலா யானைக்குட்டி இந்த நண்பர்களைப் பார்த்ததும் நக்கலாக சிரித்தது. பிறகு “என்ன அம்முலு, எப்பவும் இந்த பயந்தாங்கொள்ளிங்க கூடவே சுத்திட்டு இருக்க? அப்புறம் உனக்கு நீ யானைங்கிற நினைப்பே போயிரும். யானைன்னா காட்டில இருக்கிறதுலேயே பெரிய உருவம் கொண்ட பலசாலி மிருகம். சிங்க ராஜா கூட யானைகிட்ட வம்பு வச்சுக்காது. நீ என்னடான்னா இந்த தக்குளூண்டுப் பசங்க கூடத் திரிஞ்சு நேரத்தை வீணடிக்கிற. என்னைப்பார் நான் என் வயசு யானைகள் கூட மட்டும்தான் நட்பு வச்சுப்பேன்” என்றது.

அம்முலு “கலா, உன் நண்பர்களோட நீ இரு. ஆனால், என் நண்பர்களை குறைச்சு பேசினா எனக்குப் பிடிக்காது. அவங்கதான் எங்கூட எப்போதும் இருப்பாங்க. ஆபத்து நேரத்துல சுயநலமே பார்க்காம உதவி செய்யறவங்கதான் உண்மையான நண்பர்கள். அவங்க பலம், உருவம் பார்த்து அவர்களைக் கேலி செய்வது தப்பு. உனக்கும் இந்த உண்மை ஒருநாள் புரியும்” என்றது.

அம்முலு சொன்ன வாய் முகூர்த்தம் அப்படி ஒரு நிகழ்ச்சி மறுநாளே நடந்து விட்டது.

அப்படியென்ன நடந்தது?

– தொடரும்

இராஜலட்சுமி

பொருளியல் பட்டதாரி – சென்னை கிறித்துவ கல்லூரி. முதுநிலை பட்டம் மனிதவள மேம்பாடு துறையில். அமேஸான் ப்ரைம், மாக்ஸ், நெட்பிளிக்ஸ் ஆகிய ஓடிடி தளங்களில் இந்தி மற்றும் ஆங்கில படங்கள், வெப் சீரியல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்..

கன்னி நெஞ்சின் ஓவியம் – சரித்திர குறுநாவல், கண்ணோடு காண்பதெல்லாம் – காதல் குறுநாவல், ஒரு இனிய மனது – அமானுஷ்ய நாவல், மறக்கத் தெரிந்த மனம் நாவல்- குடும்ப நாவல், கொலை நோக்குப் பார்வை – க்ரைம் நாவல் என் இதுவரை புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

1. திருப்பூர் சக்தி விருது 2024 தமிழிலக்கிய பணிக்காக.

2. மலர்வனம் 2023 சிறந்த எழுத்தாளர்

3. வளரி கவியரங்கம் 2023

4. புதுச்சேரி தமிழ்ச்சங்கம் பாப்போட்டி  2023.

5. லயோனஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம் 2024.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *