அத்தியாயம் – நான்கு
நம்முடைய பனிக்காட்டில், அம்முலுக் குட்டியானை, “கலா, உன் நண்பர்களோட நீ இரு. ஆனால், என் நண்பர்களை குறைச்சு பேசினா எனக்குப் பிடிக்காது. அவங்கதான் எங்கூட எப்போதும் இருப்பாங்க. ஆபத்து நேர்த்துல சுயநலமே பார்க்காம உதவி செய்யறவங்கதான் உண்மையான நண்பர்கள். அவங்க பலம், உருவம் பார்த்து அவர்களைக் கேலி செய்வது தப்பு. உனக்கும் இந்த உண்மை ஒருநாள் புரியும்” என்று சொன்னது இல்லையா? சரியாக அதற்கு அடுத்த நாள் கலா யானைக்குட்டியும் அதன் நண்பர்களான வேறு சில குட்டி யானைகளும் விளையாடிக் கொண்டே வழக்கமான விளையாட்டுத் திடலைத் தாண்டி அவர்களுடைய கூட்டம் இருந்த பகுதியிலிருந்து தொலைவில் இருந்த வேறொரு இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
இப்போதெல்லாம் காட்டு மிருகங்களைப் பிடித்து வருவது, கூண்டில் அடைத்து வளர்ப்பது மற்றும் அவைகளுக்கு பயிற்சி அளிப்பது எல்லாமே சட்ட விரோதம் ஆகி விட்டது. வனவிலங்குகள் காட்டில் சுதந்திரமாக வாழ அவைகளுக்கு எல்லா உரிமையும் உண்டு. அவைகளை நம் மகிழ்ச்சிக்காக பிடிப்பது உபயோகிப்பது பெரிய தவறு இல்லையா?
ஆனால், இந்தக் கதை நடந்த போது, அதாவது நம்ம அம்முலுக்குட்டி சிறு குழந்தையாக இருந்த அந்தக் காலத்தில், காட்டு யானைக் குட்டிகளைப் பிடிப்பதற்கு ‘குழி முறை’ என்ற மிகவும் பழமையான ஒரு முறை இருந்தது. அது என்னவென்றால், யானைக்குட்டிகளை பிடிக்க நினைக்கும் ஆட்கள், யானைப் பாதைகளில் நான்கைந்து மீட்டர் ஆழத்துக்குப் ஒரு பெரிய குழியை வெட்டுவார்கள். அந்தக் குழியை மேல்புறத்தில் நல்ல பெரிய சதுரமாகவும், குழியின் கீழ்ப்பகுதியில் மேற்புறத்தைக் காட்டிலும் சிறிய சதுரமாக இருக்கும்படியும் அமைப்பார்கள். அப்போது தான் மேற்பகுதியில் இருந்து அடித்தளப் பகுதி சரிவாக இருக்கும். யானைக்குட்டி குழிக்குள் விழும்போது அடிபடாமல் தடுக்கவும், சறுக்கு மரத்தில் குழந்தைகள் சறுக்குவது போல மெல்ல இறங்கவும் இந்தச் சரிவு உதவும். குழிக்குள் இரண்டு மீட்டர் ஆழத்திற்கு மென்மையான மரப்பட்டைகள், அதிகம் முற்றாத மரக்கிளைகள் மற்றும் புல் மூட்டைகளைப் போட்டு மெத்தைபோல் நிரப்புவார்கள்.
குழியின் மேற்புறத்தில் மூங்கில் குச்சிகளால் ஆன ஒரு மெல்லிய தட்டியை வைத்து அதன் மேல் புல் மற்றும் இலைகளைப் போட்டு மூடி விடுவார்கள். இதனால் குழி வெட்டிய அடையாளமே இல்லாமல் தரை இயற்கையாக தோற்றமளிக்கும். அந்தக் குழி தோண்டப்பட்டபோது எடுக்கப் பட்ட மண் அங்கிருந்து அகற்றப்பட்டு விடும்.
குழியில் யானைக்குட்டி உடனே சிக்கி விடாது. சில நாட்களாவது காத்திருக்க வேண்டும். அதனால், அந்த ஆட்கள் தினமும் வந்து குழியை பரிசோதிப்பார்கள், தவிர யானைக்குட்டி விழும்போது எக்காளம் ஊதுவது ஒரு கிலோமீட்டர் தூரம் வரை அதனுடைய அலறல் கேட்கும். ஆகையால், குட்டி யானை சிக்கியதும், செய்தி தேவையான நபர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு விடும். கும்கிகளுடன் (பயிற்சி பெற்ற யானைகள்) நிபுணர் மாவுத்துகள் ஆகியோர் வந்து சிக்கிய குட்டி யானையை குழியிலிருந்து விரைவாக வெளியே கொண்டு வருவார்கள் – அதிகபட்சம் பத்து முதல் பனிரெண்டு மணி நேரத்திற்குள் குட்டியைக் குழியிலிருந்து எடுத்து விடுவாரகள்.
யானைக்குட்டி தன் கூட்டத்தோடு வரும்போது விழுந்து விட்டால் பெரும்பாலும் யானைக்கூட்டம் மனிதர்களை அண்ட விடாது விரட்டி, குட்டியைக் காப்பாற்றி விடும். ஆனால், ஒரிரு யானைகளாக இருந்தால் அவைகள் மனிதர்கள் போடும் கூச்சலுக்கும் பட்டாசு அல்லது தீப்பந்தங்களுக்கு பயந்து ஓடி விடும். ஆனால் யானைக்குட்டித் தனியாக வந்து விழுந்து விட்டால், அதை அந்த ஆட்களிடமிருந்து காப்பாற்றுவது மிகவும் கடினம்.
விளையாடிக் கொண்டே வெகு தூரம் வந்து விட்ட பனிக்காட்டின் யானைக்குட்டிகள் ஒரு இடத்தில் வந்து நின்றன. அந்தப் பகுதியில் ஒரு ஓடை இருந்தது. நல்ல நீர் இருப்பதால் அடிக்கடி யானைகள் அங்கு வருமென்று தெரிந்து வைத்திருந்த ஒரு யானைபிடிக்கும் குழுவினர் அந்த இடத்தில் ஒரு குழியைத் தோண்டி மூடி வைத்து விட்டுப் போயிருந்தார்கள். விளையாடியதால் தாகம் எடுத்த யானைக்குட்டிகள் அந்த நீரோடையின் சத்தத்தைக் கேட்டு நீர் அருந்தச் சென்றன. எல்லோருக்கும் முன்னால் முந்திரிக் கொட்டைபோல் முந்திக் கொண்டு ஓடியது கலா.
“ஏய் கலா. நில்லு. ஓடாதே. இது புது இடம். ஏதாவது ஆபத்து இருக்கக் கூடும்” என்று பிளிறியது அதன் தோழன் காசி என்ற யானைக்குட்டி. ஆனால், பிடிவாதமும், தான் என்ற திமிர்வாதமும் கொண்ட கலா அதைக் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. தன் இஷ்டத்திற்கு தலை தெரிக்க ஓடியது. சிறிது தூரத்திலேயே மற்ற யானைகளின் கண்களிலிருந்து மறைந்து ஓடைப் பக்கம் ஓடியது. சில விநாடிகளில் அந்த ஆட்கள் வெட்டி வைத்திருந்தக் குழி பற்றித் தெரியாமல் புல்தரையென்று நினைத்துக் காலை வைத்ததும் மூங்கில் தட்டி உடைந்து சர்ரென்று பள்ளத்தில் சறுக்கிக் கொண்டு விழுந்தது. விழும்போது அது பிளிறிய சத்தம் சுற்று வட்டாரத்தையே கலக்கி விட்டது.
கலாவின் அலறல் கேட்டவுடன் அதன் பின்னால் வந்து கொண்டிருந்த மற்ற யானைக்குட்டிகள் பயத்தில் ஆடிப்போய் நின்று விட்டன. காசி தான் முதலில் பேசியது ‘ஐயைய்யோ, கலா மனுஷங்க வெட்டி வச்சக் குழியில விழுந்த்துட்டா போல இருக்கு. ஆபத்து, ஆபத்து” என்று பதறியது. உடனே மிச்ச யானைகள் “அடப் பாவமே. இப்போ நாம என்ன செய்யறது? நாம எல்லோருமே சின்ன யானைங்க. கலாவைக் காப்பாற்றப் போனால், அந்த ஆட்கள் நம்ம மேல நெருப்பு பந்தம், வெடின்னு தூக்கி எரிவாங்களே. என்ன செய்யறது?” என்று யோசித்தபடி நின்றன.
** ** **
அதே சமயம், காட்டில் சிறிது தொலைவில் விளையாடிக் கொண்டிருந்த நம்ம அம்முலு மற்றும் அதன் நண்பர்களுக்கும் கலாவின் அவலக் குரல் கேட்டு விட்டது. “சேஷு, மீனா, மோகனன், உங்களுக்கு அந்த அலறல் சத்தம் கேட்டுச்சா?” என்று கேட்டது அம்முலு. மூவரும் கோரஸாக “ஆமாம், அம்முலு நல்லாவே கேட்டுச்சு. பாவம், யாரோ ஆபத்துல இருக்காங்க போலிருக்கு” என்றார்கள்.
“யாரோ இல்ல நண்பர்களே, அது நம்ம கூட்டத்தைச் சேர்ந்த கலாவோட பிளிறல்தான். எனக்கு அதோட குரல் நல்லாவே தெரியும். வாங்க, நாம போய் என்னாச்சுன்னு பார்க்கலாம்” என்றது அம்முலு. சேஷு, “அம்முலு, இது நமக்குத் தேவையா? அந்த திமிர் பிடிச்ச கலாவுக்கு நல்லா வேணும். நம்மையெல்லாம் எவ்வளவு கேவலமா பேசிச்சு? நீ எதுக்கு அதுக்குப் போய் உதவணும்னு நினைக்கிற?” என்று கோவமாகச் சொல்லிற்று.
“தப்பு சேஷு, ஒருத்தர் ஆபத்தில இருக்கறது தெரிஞ்சா நம்மால முடிஞ்ச உதவியை கட்டாயம் செய்யணும். ஆபத்து காலத்துல அவங்களோட பழைய தவறுகளைக் காரணம் காட்டி உதவாமல் இருப்பது பெரிய தவறு. தயவுசெஞ்சு எங்கூட வாங்க எனதருமை நண்பர்களே” என்று மிகவும் அன்புடன் கேட்டுக் கொண்டது அம்முலு.
மீனா, “ஏய் சேஷு, அம்முலு சொல்றதுதான் சரி. நாமெல்லாரும் வேற வேற இனத்தைச் சேர்ந்த விலங்குகள்தான். ஆனாலும், இந்தக் காட்டுக்கு நாமெல்லாரும் குழந்தைகள். அதனால, நமக்குள்ள எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் நம்மள்ள யாருக்காவது ஆபத்துன்னு வரும்போது அந்த வேறுபாடுகளை மறந்துட்டு ஒருத்தருக்கொருத்தர் உதவிடணும். வாங்க போகலாம்” என்று உறுதியாகச் சொன்னது. உடனே நண்பர்கள் நால்வரும் அலறல் வந்த திசையை நோக்கி ஓடினார்கள். சிறிது தூரத்தில் கலாவோடு வந்திருந்த யானைகளின் குழாம் கவலையுடன் நின்றிருப்பதைப் பார்த்து அங்கு போனார்கள்.
அம்முலு முதலில் “காசி, என்னாச்சு? கலா தானே இப்படிக் கதறுவது?” என்று கேட்டது. “ஆமாம் அம்முலு. கலாதான் அலறுது. நாங்க எல்லாரும் இங்கயிருக்க ஓடைக்குத் தண்ணி குடிக்க வந்தோம். நான் சொல்ல சொல்லக் கேட்காம கலா வேகமா எல்லாரையும் முந்திக்கிட்டு ஓடிச்சு. அப்போ மனுஷங்க நம்மள பிடிக்க வெட்டி வச்சிருக்கிற குழியில விழுந்துடுச்சுன்னு தோணுது” என்று வாட்டமான முகத்தோடிருந்த காசி யானைக்குட்டிச் சொன்னது.
“என்ன காசி இது? விழுந்துடுச்சுன்னு அனுமானம் பண்ணிட்டேல்ல? அப்போ போய் காப்பாத்தாம ஏன் எல்லாரும் இப்படி சும்மா நிக்கிறீங்க?” என்று படபடப்போடு கேட்டது அம்முலு. “அதானே, நண்பர்கள் ஆபத்துன்னு கத்தறபோது உடனே ஓடிப்போய் உதவ வேண்டாமா?” என்று நொடித்தது சேஷூ. “நீ சொல்றது சரிதான் சேஷூ, ஆனால், கலா விழுந்தக் குழி மனுஷங்க தோண்டி வச்சது. கலாவோட பிளிறல் கேட்கிற தூரத்தில தான் அவங்க இருப்பாங்க. சீக்கிரமே இங்க வந்துடுவாங்க” என்றது காசி. “அதனால? கலாவுக்கு ஒத்தாசை பண்ண மாட்டீங்களா? அந்த ஆளுங்க கலாவை கடத்திக்கிட்டுப் போனாலும் பரவாயில்லையா?” என்று பதறியது மோகனன். “அப்படியில்லை. அவங்க கிட்ட தீப்பந்தம், வேல் குச்சி, வெடி எல்லாம் இருக்கும். நாம பக்கத்துல போனா, அதையெல்லாம் உபயோகிச்சு நம்மை விரட்டுவாங்க. அதான், எங்க கூட்டத்துலயே கலாவுக்கு அடுத்தபடியா ரொம்ப வேகமா ஓடற யானைக்குட்டியை நம்ம கூட்டம் இருக்குற இடத்துக்கு ஓடிப்போய் நம்ம அப்பாம்மா மற்றும் பல பெரிய யானைகளை உதவிக்கு கூட்டிட்டு வரச்சொல்லி அனுப்பிட்டோம்” என்று சோகமாக சொன்னது மற்றொரு யானை.
“அதுசரிதான். உதவி வருவது கண்டிப்பா தேவை. அதுக்காக உதவி வர வரைக்கும் ஒண்ணுமே செய்யாம கோழைத்தனமா நிப்பீங்களா? நான் உருவத்துல ரொம்ப சின்னதா இருந்தாலும், ஒரு ஆபத்துன்னு வந்துட்டா, என் உடம்பை சிலிர்த்து முட்களை வெளியே நீட்டிக்கிட்டு எதிரிகளை ஆக்ரோஷமா தாக்குவேன். அம்முலு, இவங்கல்லாம் பாக்கறதுக்குப் பெரிய உருவம் – யானைகள் என்று பெயருக்குதான். ஆனால், சுத்த பயந்தாங்கொள்ளிங்க. நண்பர்களே வாங்க, நாம நாலுபேரும் சேர்ந்து கலாவுக்கு நம்மால முடிஞ்ச உதவியைச் செய்யலாம்” என்று வீர முழக்கமிட்டது முள்ளம்பன்றிக் குட்டி மீனா.
அதன் வீரத்தைப் பார்த்து அதன் நண்பர்களுக்கு மட்டுமின்றி மற்ற யானைக்குட்டிகளுக்கும் கூட வேகம் வந்து விட்டது. அவர்கள் சார்பில் காசி பேசியது “அம்முலு, மீனா சொல்வது ரொம்ப சரி. நாங்களும் உங்ககூட உதவிக்கு வரோம். நீதான் நம்ம குட்டியானைகளிலேயே நல்ல புத்திசாலி. நீ தலைமை ஏற்றுக்கோ. என்ன செய்யணும்னு வழிகாட்டு. நாங்க அப்படியே செய்யறோம் என்றது.
** ** **
அம்முலு மிகச்சிறிய உருவம் கொண்டிருந்த மோகனன் முயல்குட்டியைப் பார்த்து “நண்பா, முதலில் நீ புதர்களுக்குள் மறைந்து மறைந்து சென்று கலாவின் நிலமையைத் தெரிந்து கொண்டு வா. கலாவிடம் அலறாமல் குழிக்குள் செத்துக் கிடப்பது போல நடிக்கச் சொல். நண்பர்கள் எல்லோரும் இங்கே பக்கத்தில்தான் இருக்கிறோம். செய்தி அனுப்பி விட்டதால் இன்னும் சற்று நேரத்தில் பெரிய யானைகளின் கூட்டமும் வந்து விடும். பயப்படாமலிரு என்றும் சொல்” என்று சொல்லி அனுப்பியது.
பிறகு, “காசி நீயும் உன் நண்பர்கள் அனைவரும் பெரிய புதரின் பின்னால் போய் அந்தக் குழி இருக்கும் இடத்துக்கு அருகில் நான்கு புரங்களிலும் மறைந்து கொள்ளுங்கள். மனிதர்கள் வந்தால் சுற்றுமுற்றும் யானைகள் உள்ளதா என்று பார்ப்பார்கள். அப்போது இரண்டு இரண்டு பேராக ஒருவர் மேல் ஒருவர் கால் வைத்து தூரத்திலிருந்து பார்க்கும் போது பெரிய யானை நிற்பது போல காட்டிக் கொள்ளுங்கள். அதேசமயம், என்னால் என் அப்பா கஜாவைப் போல் குரலை பெரிது படுத்திப் பிளிர முடியும் என்பதால் நான் பிளிறி அவர்களுக்கு பீதி கிளப்புகிறேன்.
மீனா அப்போது நீ தனியே நிற்கும் மனிதனாக பார்த்துப் புதரிலிருந்து வேகமாக வெளியேறி அவன் கால்களுக்கு இடையில் புகுந்து உன் முள்ளுடம்பை சிலிர்த்து அவன் கால்களைக் கிழித்து எதிரில் இருக்கும் புதருக்குள் ஓடி மறைந்து கொள். அவன் கத்திக்கொண்டு தவிக்கும் போது, சேஷூ நீ மரக்கிளை மீதிருந்து அவன் மேல் குதித்து அவன் முகத்தில் பிராண்டி விட்டு புயலென புதருக்குள் மறைந்து விடு. பிறகு இருவரும் புதர்களை பயங்கரமாக அசைத்துக் கொண்டு இங்கும் அங்கும் ஓடுங்கள். அவர்கள் யானைகளை மட்டும் தான் எதிர்பார்த்திருப்பார்கள். ஆகையால், வேறு உருவமே என்னவென்று பார்க்க முடியாத விலங்குகள் தாக்கினால் பயந்தும் குழம்பியும் விடுவார்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டமெடுப்பார்கள். தவிர, யானைக்குட்டியை பிறகு வந்து கூட்டிச் செல்லலாம் என்று நினைப்பார்கள். ஆனால், கலா குழிக்குள் செத்து விட்டது போல் அசைவின்றி கிடப்பதைப் பார்த்து விட்டால், செத்துப் போன யானைக்குட்டி எதற்கும் உதவாது என்று எண்ணி ஒரேயடியாகப் போய் விடவும் வாய்ப்புண்டு. பெரிய யானைகள் வரும் வரை மனிதர்களை இப்படித்தான் சமாளிக்க வேண்டும். ஆனால் ஒன்று” என்று சொல்லி நிறுத்தியது அம்முலு.
“ஆனால் என்ன அம்முலு? எதுவாக இருந்தாலும் சொல். பரவாயில்லை” என்று ஊக்கப்படுத்தியது காசி. “ஆனால், இந்த மாதிரி குயுக்தியான திட்டங்களை நிறைவேற்றும் போது சிலசமயம் நம்மில் யாருக்கும் கூட உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை வரலாம். ஏனென்றால் மனிதர்கள் ஆறு அறிவு படைத்தவர்கள் நம்மைக் காட்டிலும் சிறப்பாக யோசிக்கக் கூடியவர்கள். அதனால் அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கணும்னு எங்கம்மா அடிக்கடி அறிவுறுத்துவாங்க. அதுபற்றிதான் யோசிக்கிறேன்” என்று பதில் சொன்னது அம்முலு.
”அப்படியா? ஆனால், நம்மை விட அறிவு அதிகம் கொண்டவர்கள் நம்மை விட நல்லவர்களாக அல்லவா இருக்கணும்? அதை விட்டு அவங்க நம்மை மாதிரி வன விலங்குகளை பிடிச்சுட்டுப்போய் அடிமைப் படுத்த நினைப்பது தப்புதானே? தப்பு செய்யற அவங்களுக்கே நிறைய தைரியம் இருக்கும்போது எந்த தப்பும் செய்யாத நமக்கு அவங்கள விடவும் தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கணும் இல்லையா?” என்று சொன்னது சேஷூ. உடனே அந்தக் குழுவில் இருந்தவர்களுக்கு மறுபடியும் வேகமும் வீரமும் வந்து விட்டது. அம்முலு சொன்ன திட்டத்தை செயல் படுத்த அவர்கள் ஒன்றாகக் கிளம்பினார்கள்.
அவர்களின் முயற்சி நிறைவேறுமா? கலா யானைக்குட்டி பத்திரமாக மீட்கப் பட்டு விடுமா? பெரிய யானைகள் உதவிக்கு வந்து சேர்ந்து விட்டனவா? இதையெல்லாம் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
** ** **
இராஜலட்சுமி
பொருளியல் பட்டதாரி – சென்னை கிறித்துவ கல்லூரி. முதுநிலை பட்டம் மனிதவள மேம்பாடு துறையில். அமேஸான் ப்ரைம், மாக்ஸ், நெட்பிளிக்ஸ் ஆகிய ஓடிடி தளங்களில் இந்தி மற்றும் ஆங்கில படங்கள், வெப் சீரியல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்..
கன்னி நெஞ்சின் ஓவியம் – சரித்திர குறுநாவல், கண்ணோடு காண்பதெல்லாம் – காதல் குறுநாவல், ஒரு இனிய மனது – அமானுஷ்ய நாவல், மறக்கத் தெரிந்த மனம் நாவல்- குடும்ப நாவல், கொலை நோக்குப் பார்வை – க்ரைம் நாவல் என் இதுவரை புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
1. திருப்பூர் சக்தி விருது 2024 தமிழிலக்கிய பணிக்காக.
2. மலர்வனம் 2023 சிறந்த எழுத்தாளர்
3. வளரி கவியரங்கம் 2023
4. புதுச்சேரி தமிழ்ச்சங்கம் பாப்போட்டி 2023.
5. லயோனஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம் 2024.