குட்டியானை அம்முலுவின் கும்மாளங்கள்

அத்தியாயம் – ஐந்து

பனிக்காட்டில், அம்முலு குட்டியானை தன் நண்பர்களோட சேர்ந்து குழிக்குள்ள விழுந்திருந்த கலா யானைக் குட்டியைக் காப்பாற்ற அருமையா திட்டம் போட்டுச்சு.

அம்முலு மிகச்சிறிய உருவம் கொண்டிருந்த மோகனன் முயல்குட்டியை முதலில் புதர்களுக்குள் மறைஞ்சு மறைஞ்சு போய் கலாவின் நிலமையை தெரிஞ்சு கொண்டு, கலாவிடம் அலறாமல் குழிக்குள் செத்துக் கிடப்பது போல நடிக்கச் சொல்லி அனுப்பிச்சு.

அங்க கலா யானைக்குட்டியை கடத்திட்டுப் போக வந்த கூட்டத்தைச் சேர்ந்த மூணு ஆளுங்க தான் முதல்ல வந்தாங்க.

காசி யானைக்குட்டி மற்றும் அதோட நண்பர்கள் அம்முலு சொன்ன மாதிரியே  பெரிய புதர்களுக்குப் பின்னால் போய் ஒருத்தர் மேல ஒருத்தர் கால் வைச்சு தூரத்துல இருந்து பார்க்க  பெரிய யானைங்க நிக்கறது போல காட்டிக்கிட்டாங்க.

அம்முலு தானும் தன்னோட அப்பா கஜா மாதிரி கனமான குரலில பிளிறிச்சு.

அம்முலு சொல்லித் தந்த மாதிரியே மீனா முள்ளம்பன்றி அந்த ஆளுங்க காலுக்குள்ள புகுந்து தன் உடம்பில் இருந்த முட்களால கிழிச்சு காயப்படுத்திட்டு ஓடிபோச்சு. சேஷு மரத்தில இருந்து திடீர் திடீர்னு அவங்க மேல பாய்ஞ்சு முகத்தில பிராண்டிட்டு ஓடிடிச்சு.

 அவங்க கையில பெரிய வேல், கடப்பாரைன்னு ஆயுதங்கள் வச்சிருந்தாங்க. ஆனால்கூட இந்த சின்னச் சின்ன பிராணிகள் அதிவேகமா தாக்குதல் நடத்துனதுல அவங்க நிலை குலைஞ்சு போயிட்டாங்க. தவிர பக்கத்துல பெரிசு பெரிசா யானைங்க வேற நிக்குதுன்னு நினைச்சு குலை நடுங்க வந்த வழியே தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடிட்டாங்க.

அவங்க கூட்டத்தைச் சேர்ந்த மற்ற ஆளுங்க கிட்ட போய், அங்க நடந்த வினோத தாக்குதலைப் பற்றி நடுங்கி கிட்டே சொன்னாங்க. அவங்க காலுல மற்றும் முகத்தில ரத்தம் வழிஞ்சதைப் பார்த்து மத்தவங்களுக்குக் கோவம் வந்துச்சு.

“அதென்ன? என்ன நடக்குதுன்னே தெரியாம தாக்குதல் நடந்திருக்கு. என்ன வகை மிருகங்கள் அப்படி திட்டம் போட்டு உங்களைத் தாக்குச்சு? பொதுவா, மனுஷங்களான நாம தான இப்படியெல்லாம் தந்திரங்கள் செய்வோம்?” அப்படின்னு அவங்களுக்குள்ள பேசிகிட்டாங்க.

அந்த மூணு பேருடைய காயத்துக்கும் மருந்து போட்டு அவங்களை அங்கயே ஓய்வெடுக்கச் சொல்லிட்டு; மீதியிருந்த எட்டு ஆளுங்களை அந்த கூட்டத்தோட தலைவன், கலா யானைக்குட்டி விழுந்து கிடந்த குழி இருந்த இடத்துக்கு கூட்டிக்கிட்டுப் போனான்.

தலைவன் காட்டைப் பத்தியும் காட்டுல வாழுற எல்லா மிருகங்களைப் பத்தியும் நல்லா தெரிஞ்சு வச்சிருந்தான். பயங்கர மிருகங்களான புலி சிங்கத்துக்கு கூட பயப்படாத தைரியசாலி அவன். அதனால, அவன் முன்னால போனான். மத்தவங்க அவன் பின்னாடியே போனாங்க.

முதலில் அந்த இடத்துக்குப் போகும்போது யாரும் எந்த சத்தமும் போடாம அமைதியா இருக்கணும்னு சொல்லிட்டான். அந்த இடத்துக்குப் போய் மெல்ல நல்லா சுத்திப் பார்த்தான்.

புதருக்குப் பின்னாடி இருந்த யானை உருவம் பெரிதாவும் ஆனால்,தும்பிக்கை சின்னதாகவும் இருக்கறதை கவனிச்சுட்டு, மெல்லிய குரலில் “டேய், புதருக்குப் பின்னால மறைஞ்சுருக்கிறது பெரிய யானைங்க இல்லை. எல்லாம் குட்டி யானைங்க. ஒண்ணு மேல ஒண்ணு காலை வச்சு பெரிய யானைகள் மாதிரி காட்டிக்குதுங்க. பயப்படாதீங்க, அதுங்க நம்மகிட்ட வராது. பயப்படும்” என்று சொன்னான்.

மற்றவர்கள் கொஞ்சம் “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டு நிம்மதியானாங்க. அதேசமயம், “அட, இந்த குட்டி யானைங்க என்ன ஜோரா திட்டம் போட்டு நம்மள ஏமாத்திடுச்சுங்க” என்று ஆச்சரியப் பட்டார்கள்.

அவன் அப்படிச் சொன்ன அதே சமயம், அம்முலு தன் அப்பா போல் குரலை மாத்திக்கிட்டுப் பிளிறிச்சு. முதல் இரண்டு நொடி தலைவனே கொஞ்சம் ஆடிப்போய்ட்டான். மற்ற ஆட்களும், “அண்ணே, கேட்டீங்களா? பெரிய ஆனையோட சத்தம் வந்துடுச்சு” என்று சொல்லி நடுங்கினாங்க.

ஆனால், பிளிறலோட இறுதியில கொஞ்சம் ‘தம்’ குறைஞ்சு போச்சு அம்முலுவுக்கு. உடனே, அந்தத் தலைவன் “டேய், முட்டாப் பசங்களா. அது பெரிய யானை இல்லடா. குட்டிதான். குரலை மாத்தி நம்மள டபாய்க்கப் பாக்குது. இத்துணூண்டு குட்டிக்கு என்னா வில்லத்தனம்?” என்று சிரிச்சுட்டே சொன்னான்.

மற்ற ஆட்கள் “அட, ஆமா. குட்டி யானையோட குரல் மாதிரி தான் இருக்கு. தேவையில்லாம பயந்துட்டோம். அண்ணன்னா அண்ணந்தான். எவ்வளவு சரியா கண்டுபுடுச்சுட்டாரு பாரு” என்று அவனுக்கு ஐஸ் வச்சாங்க. 

அவங்க திட்டமெல்லாம் வீணாயிடுச்சேன்னு அம்முலு கொஞ்சம் வருத்தமா ஆயிடுச்சு. ஆனா, மீனா திடீர்னு புதருக்குள்ள இருந்து தலைவனை பார்த்து ஓடுச்சி. ஆனால், அந்தாளுக்குதான் எல்லா மிருகங்களைப் பத்தியும் தெரியுமே. அதனால, அவன் “டக்”குனு எகிறி குதிச்சு, மீனா கிட்ட வந்த நொடி ரெண்டுகாலையும் ஒரே நேரத்துல மேல தூக்கிட்டான். அதனால் மீனாவால அவன் காலைக் குத்திக் கிழிக்க முடியலை. ஓடிப்போய் எதிர்ல இருந்த புதரில மறைஞ்சுகிச்சு.

“ஆஹா, இந்த பனிக்காட்டுல மிருகங்கள் எல்லாமே ரொம்ப புத்திசாலியாவும் ஒத்துமையாவும் இருக்குதுங்கடா. யானைக்குட்டியை நாம எடுத்துட்டுப் போயிடக்கூடாதுன்னு எல்லாம் சேர்ந்து நம்ம கூட மோத வந்திருக்கு. அதனால, நாமளும் கொஞ்சம் அதிக எச்சரிக்கையாதான் நடந்துக்கணும்” என்று சொன்னான். “அப்படியாண்ணே. சரி. சரி” அப்படீன்னு மிச்சவங்கெல்லாம் மண்டையாட்டினாங்க.

அவர்கள் எல்லா பக்கமும் கூர்ந்து கவனிச்சாங்க. அப்போ ஒரு மரத்தோட அடர்ந்த கிளையில் மறைஞ்சு உட்கார்ந்திருந்த சேஷுவுக்கு பயத்தில இதயம் திக் திக்குன்னு அடிச்சுது. ஆனால், நல்லவேளையா அவங்க கண்ணுல சேஷு படல.

அந்த ஆளுங்களுக்குத் தங்களோட திட்டம் தெரிஞ்சு போச்சுன்னு அம்முலு மாதிரியே மற்ற குட்டி யானைகளுக்கும் புரிஞ்சுடுச்சு. அவங்க எல்லாம் இனிமேல் என்ன செய்யலாம்னு கூடி பேசுறதுக்காக கொஞ்சம் தள்ளிப் போனாங்க. யானைக்குட்டிங்க எல்லாம் பயந்து ஓடிப்போச்சுன்னு நினைச்சுகிட்டு அந்த ஆளுங்க கலா யானைக்குட்டி விழுந்து கிடந்த குழி கிட்டப் போனாங்க.

குழிக்குப் பக்கத்துல ஆட்களோட காலடி சத்தம் வர்றதை கண்டுகிட்ட கலா, மோகனன் முயல்குட்டிச் சொல்லித் தந்தபடி ஒருபக்கமா சாய்ஞ்சு படுத்துகிட்டு, கண்ணை மூடிகிச்சு. மேலேயிருந்து குழிக்குள்ள முதல்ல எட்டிப் பார்த்த ஆள் “அண்ணே, குழியில விழுந்து குட்டியானை செத்துப் போச்சுன்னு நினைக்கிறேன். பாருங்க, அப்படியே விரைச்சுப் போய் அசைவே இல்லாம கிடக்குது” என்று கத்தினான்.

கூட்டத் தலைவன் “அவசரப் படாதடா. விழுந்த வேகத்துல மயக்கமா கூட இருக்கலாம். மொதல்ல நாம் கொண்டு வந்திருக்கிற கேன்ல இருந்து தண்ணீ ஊத்துங்கடா. எழுந்திருக்குதான்னு பார்க்கலாம்” என்றான். உடனே, அவன் கூட்டாளிகளில் ஒருவன் தன் கையிலிருந்த வெள்ளைநிற கேனில் இருந்த தண்ணீரை கலா யானைக்குட்டியின் மீது கொட்டினான். “என்ன நடந்தாலும், அசையாமலிரு” என்று மோகனன் சொல்லிக் கொடுத்திருந்தபடியால், கலா அசையாமல் படுத்திருந்தது.

அதே சமயம், குழிக்குப் பக்கத்தில் இருந்த எறும்புப் புத்தின் பின் மறைந்திருந்த மோகனன்,  “எறும்பு அண்ணே, கலா யானைக்குட்டி பாவம்ணே; நீங்கல்லாம் போய் முயற்சி பண்ணா, அந்த ஆளுங்களோட இன்னும் கொஞ்ச நேரத்தை வீணடிக்கலாம். கலா உங்க எறும்புப் புத்தை காலால் எட்டி உடைச்சு விட்டிருக்குன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும், நீங்கள்ளாம் அதை மறந்து, பெரிய மனசு பண்ணி, கலாவுக்கு உதவி செய்யணும்” என்று கைகூப்பி மெல்லிய குரலில் கெஞ்சிச்சு.

எறும்புக் கூட்டமும் “சரி. உதவறோம்” அப்படின்னு சொல்லிட்டு சாரை சாரையா கிளம்பிப்போய் குழிக்குள்ள கவனமா இருந்த அந்த ஆளுங்க கால்களை சரமாரியா கடிக்க ஆரம்பிச்சுது. “ஐயோ, அப்பா, எப்படி இவ்வளவு எறும்புங்க வந்துச்சு?” என்று துள்ளி குதிச்சு அங்கேயிருந்து நகர்ந்து ஓடிப்போய் நின்னாங்க.

அந்த சமயத்தில், காசி செய்தி சொல்லியனுப்பியதால், கஜாவின் தலைமையில் பெரிய யானைகளின் கூட்டம் வந்து கொண்டிருந்தது. அம்முலுதான் முதலில் அவர்களைப் பார்த்தது. “அப்பா. ஏய், எல்லாரும் அங்க பாருங்க. நம்ம அப்பா அம்மா எல்லாரும் வந்துட்டாங்க. இனிமே கவலையில்லை” என்று சந்தோஷமாக கத்தியது. மற்றவர்களும் ரொம்ப மகிழ்ச்சியா குதிச்சாங்க.

அதே சமயம், கலாவை எடுத்துச் செல்வதற்கான சின்ன லாரி ஒன்றும் அங்கு வந்து சேர்ந்தது. அந்த மனிதர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த தடியான கயிறுகளை குழியின் நாலாப் பக்கத்திலிருந்தும் வளையங்கள் செய்து கலாவின் கழுத்திலும் உடம்பிலும் விழும்படி போட்டு, லாரியின் பின்பக்கம் இருந்த பெரிய இரும்பு கிளிப்பில் கயிற்றைக் கட்டி கலாவை மேலே தூக்கி விட்டார்கள். மெல்ல குழிக்குப் பக்கத்தில் படுக்க வைத்தார்கள்.

அருகில் வந்து விட்ட யானைக்கூட்டத்துக்கு தலைமை தாங்கி வந்த கஜா தன் தும்பிக்கையை உயர்த்தி ஒரு கம்பீரமான பிளிறலை செய்தது. “அண்ணே, யானை சத்தம் அண்ணே” என்று ஒருவன் சொல்ல, “அடபோடா, அந்த குட்டியானை சும்மா மிரட்டிப் பாக்குது. நீ கண்டுக்காம வேலையைப் பாரு” என்றான் அவர்களின் தலைவன்.

ஆனால், அடுத்த சில நொடிகளில் திமு திமுவென்று பத்து பன்னிரெண்டு பெரிய யானைகள் புதர்களை துவம்சம் செய்தபடி வருவதை மற்றொருவன் பார்த்து விட்டான். “அண்ணே, நீ சொன்னது தப்பு. அது குட்டி யானை இல்லை. கொம்பன் யானை. திரும்பிப் பாருண்ணே” என்று கத்திக் கொண்டு லாரி பக்கமாக ஓடிப்போனான்.

திரும்பிப் பார்த்த தலைவனுக்கும் அப்போதுதான் நிலமையின் விபரீதம் புரிந்தது. குட்டி யானையைக் காப்பாற்ற யானைக்கூட்டமே வந்து விட்டது என்று தெரிந்ததும், “டேய், ஓடுங்கடா. யானைக்கூட்டமே வந்திருச்சு” என்று சொல்லிவிட்டு மேலே தூக்கியிருந்த கலாவை அப்படியே தரையில் விட்டு விட்டு தலைதெரிக்க ஓடிபோய் எல்லோரும் லாரியில் ஏறிக் கொண்டனர்.

லாரி டிரைவர் பயத்தில் உறைந்து போய் வண்டியை கிளப்பக்கூட மறந்து உட்கார்ந்திருந்தான். அவன் பக்கத்தில் ஏறி உட்கார்ந்த தலைவன் “டேய், என்னடா வேடிக்கைப் பாக்குற? எடுடா வண்டிய. இல்லேன்னா எல்லாரும் இன்னிக்கு சட்னி ஆயிடுவோம். யானைங்க கொலவெறியில வருது.” என்று சொல்லி அவனைப் பிடித்து உலுக்கிய பிறகுதான் அவன் வண்டியைக் கிளப்பினான்.

கலாவின் அம்மா யானையும், காமாட்சியும் செண்பாவும் குட்டியானை கலாவிடம் ஓடிப்போனார்கள். “கலா, என்னாச்சும்மா, எழுந்திரு” அப்படீன்னு அவங்க அம்மா கூப்பிட்டும் கூட கலா கண்ணைத் தொறக்கவேயில்லை. அம்முலு “கலா, போதும் நடிச்சது. நாங்கதான் வந்துட்டோமே, ஏந்துரு” என்று சொன்னதும் தான் கண்ணைத் திறந்துச்சு. அதுக்கு ஒண்ணும் ஆகல என்று தெரிஞ்சு அதோட அம்மா ரொம்ப சந்தோஷப் பட்டுச்சு.

அதுக்குள்ள, அந்த லாரியை ரொம்ப தூரத்துக்கு துரத்தி விட்டுட்டு மற்ற யானைகளும் அங்க வந்தாங்க.

எல்லோரும், அம்முலுவோட சமயோசித புத்தியையும், தைரியத்தையும் வெகுவா பாராட்டினாங்க.

அதோட, மற்ற எல்லா விலங்குகளையும் அவங்களோட உதவி செய்யற மனப்பாங்குக்காகவும், குழுவாக இணைஞ்சு சாதிச்ச வெற்றிக்காகவும் ரொம்பவே வாழ்த்தினாங்க.

அன்னியிலேர்ந்து, கலாவும் அம்முலுவோட நட்பு வட்டத்துல இணைஞ்சுடுச்சு. தவிர, கர்வமா நடக்கறதையும் விட்டுட்டு எல்லோரோடையும் அன்பாவும் நட்பாவும் பழக ஆரம்பிச்சுடுச்சு.

00

இராஜலட்சுமி

பொருளியல் பட்டதாரி – சென்னை கிறித்துவ கல்லூரி. முதுநிலை பட்டம் மனிதவள மேம்பாடு துறையில். அமேஸான் ப்ரைம், மாக்ஸ், நெட்பிளிக்ஸ் ஆகிய ஓடிடி தளங்களில் இந்தி மற்றும் ஆங்கில படங்கள், வெப் சீரியல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்..

கன்னி நெஞ்சின் ஓவியம் – சரித்திர குறுநாவல், கண்ணோடு காண்பதெல்லாம் – காதல் குறுநாவல், ஒரு இனிய மனது – அமானுஷ்ய நாவல், மறக்கத் தெரிந்த மனம் நாவல்- குடும்ப நாவல், கொலை நோக்குப் பார்வை – க்ரைம் நாவல் என் இதுவரை புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

1. திருப்பூர் சக்தி விருது 2024 தமிழிலக்கிய பணிக்காக.

2. மலர்வனம் 2023 சிறந்த எழுத்தாளர்

3. வளரி கவியரங்கம் 2023

4. புதுச்சேரி தமிழ்ச்சங்கம் பாப்போட்டி  2023.

5. லயோனஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம் 2024.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *