கரோனா தீநுண்மி காலத்துக்குப் பிறகும் தொடர்ந்து முகக்கவசத்தைப் பயன்படுத்தும் வெகுசில மாநகரவாசிகளில் இராமநாதனும் ஒருவர்.
அடிப்படையில் “சுத்தம் சோறு போடும்” என்ற கொள்கையில் பற்று கொண்டவர் இராமநாதன். இந்த விஷயத்தில், வீட்டில் அவர் பரிசுத்த கறார். குடும்பத்தினருக்கும் இவருக்கும் இடையே வரும் மோதல்களில் 60 சதவிகிதத்துக்கும் மேல் இந்தக் கொள்கை சார்ந்ததாகத்தானிருக்கும். வீட்டிலேயே இப்படி என்றால், வெளியில், கேட்கவா வேண்டும்?
பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்களை உடனடி ஆவேசத்துடன் தட்டிக் கேட்கத் தயங்காதவர். இவர் கண்டிப்பு காட்டிய ஆரம்ப காலங்களில் அது மிதமான வாக்குவாதங்களில் முடிந்துவிடும். சில வேளைகளில் அசுத்தம் செய்தவர், இவரது அறிவுறுத்தலை ஏற்று “திருந்தியது” போலக் காட்டிவிட்டுச் செல்வதும் உண்டு. இப்போதெல்லாம் இராமநாதன் வாயைத் திறக்க முடியாது. திறந்தால், தனது வாய்க்குள் துப்பிவிடுவார்களோ என்று கலங்கிப் போயிருக்கிறார். புதிய தலைமுறையினர் அல்லது 2K கிட்ஸ் வகையறாக்கள் ஏதாவது திறந்திருந்தால் துப்பிவிடுகிறார்கள் என்பது அவரது பார்வை.
இப்படித்தான் அன்றொரு நாள், ஒரு பிரபலமான மாலுக்கு – பேரங்காடி வளாகத்துக்கு ஊரிலிருந்து வந்திருந்த உறவினர்களுடன் சென்றிருந்தார். வலப் பக்கம் இருந்த கடையிலிருந்து விருட்டென்று வெளியே வந்த ஒரு இளைஞன் – கனிந்த இளைஞன் என்று சொல்ல முடியாது – விடலைக்கும் இளைஞனுக்கும் இடையே உள்ளது போன்ற தோற்றம் – எதிரே பக்கவாட்டில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியில் படாரென்று எச்சிலை துப்பிவிட்டுத் திரும்ப முற்பட்டான். பாக்கு போட்டிருப்பான் போல… எச்சில் கலராக விழுந்தது. கண்ணால் கண்ட இராமநாதனுக்கு, திடீர் கொதிப்பு ஏற்பட்டது.
“அறிவிருக்கா உனக்கு…. துப்பறதுக்கா வச்சிருக்கு இது?”
இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத அவன், “குப்பைத் தொட்டி வேறு எதுக்கு வச்சிருக்கு… எங்களுக்குத் தெரியாது…” என்றான் சற்றே கலாய்க்கும் தொனியில்.
“இது டிரை வேஸ்ட் போடறதுக்கு… உன்ன மாதிரி எச்சி துப்புறதுக்கு இல்ல… ரெஸ்ட் ரூம் இருக்குல்ல இங்க. அங்க போய் துப்பு.”
“அப்படின்னா நான் செகண்ட் ஃப்ளோர் போயித்தான் துப்பணும்… இல்லேன்னா எங்க ஷாப்ல, அத கட்டிக்கொடுக்க சொல்லுங்க” – வெடுக்கென்று சொல்லிவிட்டு வேகமாக கடைக்குள் நுழைந்துவிட்டான்.
இராமநாதன் படபடக்கும் உடல்மொழியுடன் கடைக்குள் நுழையப் போனார். கூடவந்த உறவினர்கள் தடுத்து நிறுத்தி, ஆசுவாசப்படுத்தினார்கள்.
“மாமா, நீங்க ஏன் இதிலெல்லாம் தலையிடுறீங்க…”
“நம்ம கண் முன்னாலே நடக்குது… இதக்கூட தட்டிக் கேட்கலைன்னா, எப்படி?”
“நம்ம கண் முன்னாலே என்னெல்லாமோ நடக்குது. எல்லாத்தையும் நீங்க சரிபண்ணிடுவிங்களா…..பேசாம வாங்க” – உறவுக்காரன் சொன்னதை மனைவியும் வேகமாக ஆமோதித்தாள். இது வேறு வடிவம் எடுக்கும் என்று புரிந்த இராமநாதன் நடையைக் கட்டினார்.
ஒரு வாரத்துக்கு முன்பும் இப்படித்தான் மாட்டிக்கொண்டார்.
மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்துக் கொட்டுவதற்காக தனித்தனி தொட்டிகளை சிறிய பேட்டரி வாகனத்தில் வைத்துக்கொண்டு வீதி, வீதியாக வருகிறார்கள். இதற்காக ஒரு விழிப்புணர்வுப் பாடலையும் தயாரித்து ஒலிக்கவிடுகிறார்கள். அதைக் கேட்டு வீடுகளிலிருப்பவர்கள் குப்பைகளை பொறுப்புடன் பிரித்து எடுத்துவந்து கொட்டுவார்கள் என்று மாநகராட்சி எதிர்பார்க்கிறது.
முற்றிலும் இப்படி நடந்துவிட்டால் நமது சமூகத்தில் துப்புரவுப் புரட்சி வந்துவிட்டதாகக் கருதலாம். அப்படி ஏதும் வரவில்லை.
குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், காலையில் வெளியில் செல்லும் போது அல்லது வேலைக்கு செல்லும் போது தங்கள் வீட்டுக் குப்பைத் தொட்டிகளை குடியிருப்பு ஓரமாக வைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். வாகனத்தை கொண்டு வந்து நிறுத்தி, துப்புரவு ஊழியர் ஒவ்வொன்றாக எடுத்துக் கொட்டிவிட்டுச் செல்ல வேண்டும். சிலர் அவருக்கு எப்போதாவது சிறு ஊக்கத்தொகை கொடுப்பார்கள். பலர் அதுபற்றி யோசிப்பதே இல்லை. கரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில், நமது மக்களுக்கு துப்புரவு ஊழியர்கள் மீது “திடீர்ப் பாசம்” பொங்கி வழிந்தோடியதும் அது சமூக ஊடகத்தை சொட்ட, சொட்ட நனைத்ததும் பலருக்கு நினைவிருக்கலாம்.
“என்னக்கா… கிச்சன் வேஸ்ட்டையும் மத்ததோட கலந்து கொடுக்கறீங்க… பிரிச்சு போடுங்க” என்று துப்புரவு ஊழியர் ஒரு இல்லத்தரசியிடம் ஆதங்கத்தைக் கொட்டினார்.
“காலைலே குழந்தைங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்புற டென்ஷனே எங்களுக்கு பெரிசா இருக்கு… இதுல நாங்க எங்க பிரிச்சு கொட்டறது…” விட்டேத்தியாகப் பதில் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
அதிகாலை தொடங்கி மதியம் ஒரு மணி வரை ஷிப்ட். துப்புரவு ஊழியர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் குப்பைகளை சேகரித்து, அதை மக்கும், மக்காதவை என்று பிரித்து சாலையோரம் அல்லது சாலையின் நடுவிலிருந்து கொஞ்சம் தள்ளி நிறுத்தப்பட்டிருக்கும் பெரிய குப்பைத்தொட்டிகளில் போட்டுவிட்டு போக வேண்டும். குப்பை லாரியில் வரும் ஊழியர்கள் அதை எடுத்துச் செல்வார்கள். பெரும்பாலான வீடுகளில் இரண்டையும் கலந்து கொட்டுவதால், அதைப் பிரிப்பதற்கே, ஷிப்ட் நேரத்துக்கு மேல் ஆகும். அதற்கெல்லாம் தனிச் சம்பளம் கிடையாது.
இந்த விவரமெல்லாம் இராமநாதனுக்கு தெரியும். சுய ஆர்வத்தில் விசாரித்து அறிந்து வைத்திருப்பார். வீட்டிலிருந்தால் அவரே இரண்டு வாளிகளையும் கொண்டு வந்து தனித்தனியாக கொட்டிவிடுவார். வீட்டிலிருப்பவர்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று உத்தரவு. கூடியவரை அவர்களும் கடைப்பிடிக்கிறார்கள். “வீட்டிலிருப்பவர்கள் சரியா பிரிச்சு போடுறாங்களா…” என்று துப்புரவு ஊழியரிடமே கேட்டறிவது வழக்கம்.
அன்று கடைக்குப் போய்விட்டு திரும்பி வரும் நேரத்தில், இவரது வீட்டருகே குப்பை வாகனம் நின்றிருந்தது. பாட்டும் ஒலித்தது. குடியிருப்புவாசிகள் தங்கள் வீட்டு சிறிய பிளாஸ்டிக் வாளிகளைக் கொடுக்க, துப்புரவு ஊழியர் ஒவ்வொன்றாக வாங்கி, கொட்டிக்கொண்டிருந்தார். பாடல் முடிந்தது. வாகனத்தை பின்பக்கம் எடுத்து திருப்பி, செல்வதற்கு ஆயத்தமானார்.
“ஏம்ப்பா… குப்பை எடுக்க வந்தா சத்தம் கொடுக்கறதில்லையா…?” பக்கத்து குடியிருப்புவாசி அதிகாரத் தோரணையுடன் துப்புரவு ஊழியரிடம் கேட்டார்.
“அதான் பாட்டு போடறமோ சார்…. உங்களுக்கும் கேட்டுருக்கும். இப்பத்தான் எல்லோரும் கொடுத்து முடிச்சாங்க… அதான் கிளம்பறேன்” என்றார்.
“நாங்களெல்லாம் இரண்டாவது மாடில இருக்கோம். நீங்க ஏதாவது பாட்டு போடுவீங்க… அது குப்ப பாட்டுன்னு எங்களுக்கு எப்படி தெரியும்…” என்று பேச்சை சூடாக்கினார்.
“தினமும் வண்டி வரும்போது அந்தப் பாட்டுதானே போடறோம். எல்லாத்துக்கும் தெரியும் சார்…”
“எனக்கு தெரியாதுப்பா… சத்தம் கொடுத்தால்தான் வரமுடியும்…”
“வீடு, வீடாப் போயி சத்தம் கொடுக்க முடியாது… சார். அதுவும் நீங்க மாடில இருக்கீங்க…”
“அப்படின்னா எங்க சொல்லணுமோ அங்க நான் சொல்லிக்கிறேன்….”
இராமநாதனுக்கு இதைத் தாங்க முடியுமா…? களத்தில் குதித்துவிட்டார்.
“வேலைய ஒழுங்கா செய்ற ஆள மிரட்டுறீங்களா…” என்று பக்கத்து குடியிருப்புவாசியைப் பார்த்துக் கேட்டார்.
“உங்களுக்கென்ன… நான் அவன்கிட்ட கேக்குறேன்… பொத்திக்கிட்டு போங்க” என்று பதில் வர, இராமநாதனுக்கு அதிவேகமாக கொதிநிலை உயர்ந்தது.
“மாநகராட்சி வாகனம் வரும்போது, ஒழுங்கா குப்பையை கொண்டுவந்து கொட்ட வேண்டியது உங்க பொறுப்பு. அதை கொட்ட துப்பில்ல… பேச்சு மட்டும்….” என்று இழுத்தார் இராமநாதன்.
பதிலுக்கு, “நீங்க நல்லா குப்பை கொட்டுவீங்கன்னு தெரியும்….” என்பதோடு நிறுத்தியிருந்தால் வேறுமாதிரி போயிருக்கும். “ஏம்ப்பா… இவரையும் வண்டில ஏத்திட்டு போப்பா…” என்று சொல்லிவிட்டு “மக்கவே மக்காது…” என்று சற்று குரலை இறக்கிச் சொல்லிவிட்டார், பக்கத்து குடியிருப்புவாசி.
அவ்வளவுதான். இராமநாதன் வெடிக்க, துப்புரவு ஊழியர் அதிர்வுடன் பின்வாங்கி, வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டார்.
இந்த மோதலின் முதல் தகவல் இதர குடியிருப்புவாசிகளை சென்றடைய சிலபல நிமிடங்களானது. சண்டை உக்கிரத்தில் இருந்த போது, பலர் மாடியிலிருந்து இறங்கிவந்தார்கள். இராமநாதன் பக்கம் நியாயம் இருப்பதாகத் தெரிந்தும், யாரும் ஆதரவாகக் குரல் கொடுக்காமல், “இதுக்கெல்லாம் போயி…. இவ்வளவு டென்ஷனாகலாமா….” – “ரெண்டு பேரும் படிச்ச ஆளுங்க….” – “பக்கத்து, பக்கத்துல இருந்துகிட்டு…. அசிங்கம் சார்…” என்பது போன்ற பேரறிவுரைகளுடன் “அமைதியை” நிலைநாட்ட முயன்றார்கள்.
“தெரு முழுக்க கேட்கிற மாதிரி பாட்டு போடறாங்க… அது அவருக்கு கேட்கலையாம். அவருக்கு காது கேட்குமான்னு கேளுங்க முதல்ல…” என்று இராமநாதன் குறையாத ஆவேசத்துடன் கேட்டார்.
“இவரு கன்னத்துல ஒண்ணு கொடுத்து அந்த சத்தம் கேட்குதான்னு டெஸ்ட் பண்ணி பார்க்கவா…? நீங்களெல்லாம்தான் சாட்சி… சார்” – பக்கத்து குடியிருப்புவாசி இன்னும் சூடாக்கினார்.
சூழ்ந்திருந்த குடியிருப்புவாசிகள், சண்டையை விலக்க வந்ததே தப்பு என்பது போல ஒருவருக்கொருவர் பார்வையால் பேசிக்கொண்டார்கள். திடீரென்று ஒருவருக்கு “ஐடியா” உதித்தது. இருவரது வீட்டுக்கும் சென்று அவரவர் மனைவிகளிடம், “நிலைமை மோசமாவதற்குள் உங்கள் கணவரை வந்து அழைத்துச் செல்லுங்கள்” என்று கலக்கமூட்டி கீழே வரச் செய்துவிட்டார்.
“இங்க என்ன… வம்பிழுத்துகிட்டிருக்கீங்களாமேன்னு….” கேட்டுக்கொண்டே வந்தார் பக்கத்து குடியிருப்புவாசியின் மனைவி. அவ்வளவு நேரம் வேறுமாதிரி பேசிக் கொண்டிருந்தவர், அலைவரிசையை அப்படியே மாற்றி, “அதெல்லாம் ஒண்ணுமில்லமா… கார்பேஜ் கிளியர் பண்ண வந்தான்ல…. அது பற்றி ஐஸ்ட் ஒரு டிஸ்கஷன்…” என்று பம்மி, மனைவியைப் பின்தொடர்ந்தார்.
கணவரை முறைத்தவாறே “மேல வாங்க…” என்று ஆணைக்குரல் கொடுக்க, மேற்கொண்டு வளர்க்கத் தெம்பு இல்லாமல், பின்சென்றார் இராமநாதன்.
சமாதானம் செய்ய வந்த இதர குடியிருப்புவாசிகளுக்கு பிரச்சினை சட்டென்று இப்படி முடிவுக்கு வந்ததில் திருப்தி. சமயோசிதமாக, இரண்டு பேரின் மனைவிமார்களையும் ஸ்பாட்டுக்கு அழைத்துவந்த முதல்மாடி சுந்தரேசனை எல்லோரும் கைகொடுத்து “ஸ்மார்ட் மூவ்” என்று பாராட்டினார்கள்.
“நம்ம அபார்ட்மென்ட் அசோஷியேஷன் அடுத்த செகரட்டரி நீங்கதான்….” என்று ஒருவர் முன்மொழிய, மற்றவர்களும் பலத்த குரலுடன் ஆமோதித்துவிட்டு, கலைந்து செல்ல முற்பட்டார்கள்.
“இப்பல்லாம் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது சார். அதை டயலூட் பண்ற, இல்லேன்னா திசைதிருப்புற மாதிரி இன்னொன்னுகூட லாக் பண்ணிட்டீங்கன்னா, அப்போதைக்கு நீங்கதான் வின்னர்.” – அந்தக் குடியிருப்பில் தான் அடிக்கடி பேசும் ஒருவரிடம் தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு பலமாகச் சிரித்தார், சுந்தரேசன்.
“இப்பகூட நம்ம இராமநாதனுக்கும் பக்கத்து பிளாக் காரனுக்கும் இடையே நடந்த இந்த சண்டை முடியல சார். நிறுத்தி வைக்கப்பட்டிருக்கு. இன்னொரு சந்தர்ப்பத்துல இதவிட பலமா வெடிக்கும், பாருங்க…” – என்று சொல்லிவிட்டு மீண்டும் அதிரடியாகச் சிரித்தார் சுந்தரேசன்.
பிரச்சினை முடிந்ததாக நம்பியிருந்த அந்தக் குடியிருப்புவாசி, சற்றே மிரட்சியுடன் சுந்தரசேனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
சமையலுக்கு இடையே கறிவேப்பிலை வாங்குவதற்காக இறங்கி வந்த சுந்தரேசனின் மனைவி, பிரச்சினையில் கணவன் தலையீட்டையும் அதைத் தொடர்ந்த உரையாடலையும் கீழ் வீட்டின் ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள். அது சுந்தரேசனுக்கு தெரியாது.
பிறர் வியக்க வாழ்ந்த தருணத்தின் பெருமிதத்தைச் சுமந்தவாறே, தெரு முனையிலிருந்த கடைக்குச் சென்று, அனுபவித்து ஒரு “தம்” போட்டார் சுந்தரேசன். ஒரு பாக்கை வாங்கி வாயில் போட்டுக்கொண்டே திரும்பிவந்தார். வீட்டருகே வரும்போது, சாலையோரம்கூட ஒதுங்காமல், நடந்தவாக்கிலேயே எச்சிலை துப்பினார்.
சற்றே கொதிநிலை அடங்கியிருந்த இராமநாதனுக்கு, மேலே பால்கனியிலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்ததில் மீண்டும் எகிறியது. “நேரில் பார்க்கும்போது உனக்கு இருக்கு…” என்று அவருக்குள் பதுங்கியிருந்த தூய்மைச் சிங்கம் கர்ஜித்தது.
“சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக்கனவுகளில்… பெண்ணல்ல நீ எனக்கு வண்ணக் களஞ்சியமே…” என்ற பிரபலமான பாடல் கீழ் வீட்டு டி.வி.யில் ஒலித்துக்கொண்டிருந்தது. ரசனையுடன் கூடவே மெல்லப் பாடியவாறு, வீட்டில் மனைவி வழியாக ஒரு பிரச்சினை வெடிக்க காத்திருக்கிறது என்பது தெரியாமல், படியேறினார் சுந்தரேசன்.
*****
சுகதேவ்.
மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் வெளியான கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. 2019-ல் வெளியான கவிதைத் தொகுப்பு “ஒவ்வொரு கணமும்”