சிறிது நேரத்துக்குள் அந்த இடம் ஒரு மிகப் பெரிய விருந்துக்குத் தயாரானது.
வட்ட வடிவமான பாறையின் மேல் இரண்டு வாழை இலையைக் கொண்டு வந்து வைத்தனர் அப்புவும், சுப்புவும். அந்த இலையில் இனிப்பான தேன் அடைகள், சுவைமிகுந்த ரம்புட்டான்,மங்குஸ்தான், நட்சத்திர பழம், மல்பெரி,மாம்பழம், நன்கு கனிந்த பலாச் சுழைகள்,பழம் என்று வரிசையாக வைத்தனர்.
“நண்பா நீ எங்களின் வருந்தாளி. வா வந்து வயிறாரச் சாப்பிடு .பிறகு நாம் பேசலாம் “என்றான் சுக்ரீவன்.
குப்பனுக்கு பழங்களைக் கண்டதும் பசி அதிகரித்தது சோர்வு மறைந்தது. அவன் வேகவேகமாகப் பழங்களை உட்கொள்ள ஆரம்பித்தான். பலாப் பழம் என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும் . அதிலும் செம்பருத்தி எனப்படும் சொந்தூரப் பலாப் பழம் என்றால் அலாதிப் பிரியம். எனவே பலாப் பழங்களை ஒன்று விடாமல் உண்டு முடித்தான்.
வயிறு நிறைய உண்டு முடித்ததும் ” போதும் சுக்ரீவா. இதற்கு மேல் என்னால் கொஞ்சம் கூடச் சாப்பிட முடியாது , எனக்கு இப்போது குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்” என்றான்.
உன் காலுக்குக் கீழே தான் நதியே ஓடுகிறது அள்ளிக்குடி நண்பா, உன் தாகம் தீரும் மட்டும் தண்ணீர் குடி” என்றான் சுக்ரீவன்.
குப்பன் தன் இருகைகளைக் கூட்டித் தண்ணீரை அள்ளிப் பருகினான். “ஆஹா! ஆஹா! என்ன சுவை ?என்ன சுவை? , சுக்ரீவா! இந்த நதி நீர் இத்தனை சுவையாக உள்ளதே. இதற்கு என்ன காரணம்?”.
” குப்பா! இந்த நதி மலைகளில் இருந்து உருவாகிறது. இங்குள்ள மலைகளில் ஏராளமான மருத்துவக் குணமுள்ள மூலிகைகள் இருக்கிறது .ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ருசியும் உண்டு.இந்த நதி அந்த மூலிகைகளைக் கடந்து தான் வருகிறது. அதனால் தான் மூலிகைகளின் மருத்துவக் குணங்களும் , சுவையும் இந்த நதியில் கலப்பதால் நீர் சுவையாக இருக்கிறது. அது மட்டும் இல்லை குப்பா இங்கு மலையில் அருவி விழும் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தேனீக்கள் கூடு கட்டி வாழ்கின்றன .அந்த தேனீக்களின் கூடுகளைக் கடந்து வருவதனால் அருவி நீருக்கு இனிப்பு சுவையும் கூடுதலாகக் கிடைக்கிறது”.
“ஓ…, இது தான் சங்கதியா ?அதனால் தான் இந்த நீர் இவ்வளவு சுவையாக இருக்கிறதா?. அது சரி குப்பா ‘ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். இந்த நீர் தானே குற்றாலத்தில் அருவியாகக் கொட்டுகிறது. ஆனால் அந்த நீர் இத்தனை சுவையாக இருப்பதில்லையே ஏன்?” .
“அது எப்படி, நீங்கள் இருக்கும் இடத்தில் சுத்தமும் சுவையும் இருக்கும் குப்பா?” என்றான் சுக்ரீவன்.
” அட என்னப்பா நீ .நானும் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். எதற்கு எடுத்தாலும் எங்களையே குறை சொன்னா எப்படிப்பா?. இதற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் சொல்லு”
” சொல்வது என்ன நேரிலேயே காட்டுகிறேன் என்னோடு வா ” என்ற படி சுக்ரீவன் நடக்கத் தொடங்கினான் . அவன் பின்னே குப்பனும் மற்ற குரங்களும் நடக்க ஆரம்பித்தனர்.
சிறிது தூரம் சென்ற பின்னர் சுக்ரீவன் நின்றான். தன் பின்னால் வந்த குப்பனிடம் , இங்கு உள்ள நீரைக் குடித்துப் பார் என்றான் சுக்ரீவன். குப்பனும் அந்த நீரை ஆவலோடு அள்ளிப் பருகினான் .ஆனால் நீரில் முன்பு இருந்த சுவையோ இப்போது இல்லை.
“என்ன இது நாம் முன்பு நீர் அருந்திய இடத்திற்கும் இதற்கும் பெரிய தூரம் ஒன்றும் இல்லை. ஆனால் இந்த நீர் மட்டும் ஏன் இப்படி உள்ளது? “.
“அங்கே பார் உனக்கே உண்மை விளங்கும் என்று ஓர் திசையைச் சுட்டிக் காட்டினான்”. குப்பனும் சுக்ரீவன் காட்டிய திசையைக் கண்டான்.
மலையில் இருந்து தேன்அருவியாகக் கொட்டும் நீர் நதியாகச் சில தூரம் பயணித்து மீண்டும் மற்றொரு மலையில் இருந்து குற்றாலஅருவியாக விழுகின்ற இடம் அது . அந்த மலைகளில் விளிம்பில் தூய்மை அணைஆடைகள்(நாப்கின்), நெகிழிப்பைகள்,நெகிழிப்புட்டிகள்,மதுப் பாட்டிகள்,குழந்தைகளுக்கான அணையாடைகள்(டையாப்பர்) , கிழிந்த துணிகள், வழலைக் கட்டி(குளியல் சோப்),சீயக்காய் குழம்பு(ஷாம்பு ) பைகள் என்று ஏராளமான நெகிழிப் பைகள் குப்பைகளாக மாறி மலையிருந்து விழும் அருவியை அடைத்துக் கொண்டு இருந்தது.அந்தக் குப்பைகளைக் கடந்து நதி நீர் அருவியாக மலை முகட்டில் இருந்து வடிந்து கொண்டிருந்தது.
” என்ன குப்பா? இப்பொழுதாவது ஒத்துக் கொள்கிறாயா நீங்கள் இருக்கும் இடத்தில் சுத்தமும் சுவையும் இருக்காது என்று”.
“ஆமா, நீ சொல்வதும் சரிதான் . எங்களின் அலட்சியம் மற்ற உயிர்களுக்கு மட்டும் இல்லை எங்களுக்குமே தீமையைத் தான் தருகிறது. சில அடி தூரத்திற்கு முன்னர் சுவையாக இருந்த தண்ணீர் நாங்கள் வீசி எறியும் குப்பைகளால் சுவையை இழந்து விட்டதே” என்று வருந்தினான் குப்பன்.
இப்படியே நாம பேசிட்டு இருந்தா இருட்டிடும் தலைவரே. நாம் போக வேண்டிய இடத்திற்கு போக முடியாது வாங்க. நாம நடந்து கொண்டே பேசலாம் என்றான் மருதன்.
சுக்ரீவன் குப்பனைக் கூட்டிக்கொண்டு தன் நண்பர்களோடு நடக்கத் தொடங்கினான். கொஞ்சத் தூரம் சென்றதும் கருகிப் போன மரங்கள் ஆங்காங்கே காட்சி அளித்தன. அதைக் கண்ட குப்பன் என்ன மருதா இங்க இருக்குற மரங்களுக்கு என்ன ஆச்சு?. ஏன் இவை எல்லாம் இப்படிக் கருகிப் போய் உள்ளது ?என்றான்.
” காட்டுக்குள் சுற்றுலாவரும் உங்களைப் போன்ற மனிதர்கள் தங்களோட இன்பத்திற்காக நெருப்பு மூட்டிச் சமைக்கின்றனர், சிலர் வெண்சுருட்டு(சிகரெட்) பிடிக்கின்றனர் அவற்றை முறையாக அணைக்காமல் அப்படியே விட்டு விட்டுச் செல்வதால் வந்த வினை தான் இந்தத் தீ விபத்து”.
” அய்யோ !இங்க நிறைய மரங்கள் எரிந்து போயிருக்கே மருதா” ?வருத்தமாகக் கேட்டான் குப்பன்.
குப்பா உன் கண்ணுக்கு எரிந்து போன மரங்கள் மட்டும் தான் தெரிகின்றது .ஆனால் இது போன்ற விபத்துக்களில் சிக்கி எங்களில் எத்தனை எத்தனை உயிர்களை நாங்கள் இழக்கின்றோம் தெரியுமா?.அவைகளை கணக்கிட முடியாது நண்பா. காட்டுத் தீக்குள் எங்களின் உறவுகளைப் பலி கொடுத்து விட்டு எங்களில் அனாதையாக எத்தனையோ பேர் வாழ்கின்றனர். ஏன் நம்ம சுக்ரீவனும் இப்படிப் பாதிக்கப்பட்டவன் தான் குப்பா”.
“நீ என்ன சொல்லுற மருதா?”.
“சுக்ரீவன் குழந்தையாக இருந்த போது நடந்தது அந்த விபத்து . அதை விபத்து என்று கூடச் சொல்ல முடியாது குப்பா. ஒரு மனிதனின் அலட்சியம் அன்று எத்தனை உயிர்களை விழுங்கியது தெரியுமா?. கோடை விடுமுறையில் வந்த சுற்றுலாப் பயணிகளில் சிலர் விதிகளை மீறிக் காட்டுக்குள் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்தனர். வந்தவர்களின் கைகளில் வெண்சுருட்டு வேறு. அதனை புகைத்தவாறே சுற்றிப் பார்த்தவர்கள் விதவிதமாகப் புகைப்படம் எடுத்துவிட்டு சென்றனர் .செல்லும் போது அதுவரை தாங்கள் புகைத்துக் கொண்டு இருந்த அந்த வெண்சுருட்டை முறையாக அணைக்காமல் அப்படியே காட்டில் வீசி எறிந்துவிட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற சில மணி நேரத்துக்குள்ளாகவே அந்த வெண்சுருட்டில் இருந்த கங்கு காற்றில் அதிகமாகித் தீயாக அருகில் இருந்த காய்ந்த இலைகளில் பற்றியது. அவ்வளவுதான் குப்பா கண் இமைக்கும் நேரத்தில் அந்தத் தீ குபுகுபுவெனப் பற்றிக் காட்டு மரங்கள் எங்கும் பற்றி எரியத் தொடங்கிடுச்சு. சுக்ரீவன் பிறந்து மூதினம் தான் ஆகியிருந்தது. அதனால் அவனைக் காப்பாற்ற எடுத்த முயற்சியில் சுக்ரீவனின் தாயும், தந்தையும் தீக்கு இரையாகினர். எங்களால் சுக்ரீவனை மட்டும் தான் காக்க முடிந்தது. அதுவும் அவனை முழுமையாகக் காப்பதற்குள் தீயின் வெம்மையில் அவனின் வால் சற்றுக் கருகி விட்டது. அதற்கு பின் அவனுக்கு வால் முளைக்கவே இல்லை”.
“ஓ..ஓ..,அதனால் தான் சுக்ரீவனுக்கு வால் இல்லையா? “.
“ஆமாம் …, “
” நம்முடைய மகிழ்ச்சியானது மற்றொன்றைக் காயப்படுத்தக் கூடாது .அப்படிப் பிறரைக் காயப்படுத்திவரும் இன்பம் எப்போதும் துன்பத்தையே கொடுக்கும்”என்பதை நான் நன்றாகப் புரிந்து கொண்டேன் மருதா.
பேசிக்கொண்டு இருக்கும் போதே குப்பனுக்கு வயிறுவலிப்பது போன்ற உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. மருதா என்னால் நடக்க முடியவில்லை வயிறு ரொம்ப வலிக்கிறது என்ற படியே அருகில் இருந்த மரத்தின் நிழலில் அமர்ந்தான்.
” பயப்படாதே நண்பா” கொஞ்சம் பொறுத்துக் கொள் நான் இப்போதே வருகிறேன்” என்று கூறிவிட்டு சுக்ரீவன் வந்த திசையை நோக்கி ஓடினான். சில நொடிகளில் திரும்பி வந்தவனிடம் ” எங்கே சென்றாய் ? ” என்றான் குப்பன்.
” உன் வயிற்று வலிக்கு மருந்து கொண்டு வரச் சென்றேன்’’ என்றான் .
” மருந்தா? எங்கே மருந்து? ” என்றான் குப்பன்.
” இதோ மருந்து” என்று தன் உள்ளங்கைக்குள் வைத்திருந்த பலாப்பழக்கொட்டைகளைக் காட்டினான் சுக்ரீவன்.
” என்ன சுக்ரீவா? நீ மருந்து கொண்டு வந்ததாகச் சொன்னாய் . ஆனால் உன் கையில் நாம் சாப்பிட்டுவிட்டு போட்ட பலாப்பழத்தின் கொட்டைகள் தானே இருக்கிறது? ” என்றான் குப்பன்.
” நண்பா நீ கேட்ட துண்டா உணவே மருந்து, மருந்தே உணவு என்று . அது போலத் தான் இதுவும். உன்னுடைய இந்த வயிற்று வலிக்குக் காரணம் நீ அதிகமாக சாப்பிட்ட பலாச் சுழைகளே. நான் அப்போதே கவனித்தேன் நீ அதை விரும்பி உட்கொண்டதால் தான் நான் எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டேன். “
பலாச்சுளைகளைச் சாப்பிட்டு வயிற்று வலி வந்தது என்னமோ உண்மை தான். ஆனால் அதற்கு இது எப்படி மருந்தாகும்? சுக்ரீவா.
கொஞ்சம் பொறு குப்பா என்று கூறிய சுக்ரீவன், அருகில் கிடந்த காய்ந்த சருகுகளையும்,சுள்ளிகளையும் ஒன்று கூட்டினான். இரு கூழாங்கற்களை எடுத்து ஒன்றோடு ஒன்றாக உரசினான். அதிலிருந்து வந்த தீக்கங்குகளை அப்படியே அந்த சருகில் காட்டி தீயை மூட்டினான்.
உருவான தீக்குள் தான் கொண்டுவந்த பலாக்கொண்டையைப் போட்டான் . கொட்டை கருகிவிடாமல் இருக்கச் சிறு குச்சி ஒன்றை எடுத்து நன்றாக திருப்பிவிட்டு அதை வேகவைத்தான். சுட்ட பலாக்கொட்டையை ஆறவைத்து குப்பனிடம் உட்கொள்ளக் கொடுத்தான் .
பலாக்கொட்டை உண்ட கொஞ்ச நேரத்திலேயே குப்பனின் வலி மறைந்தது.
சுக்ரீவா! என்ன ஆச்சரியம்?. என் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டதே. உண்மையிலேயே இது சிறந்த மருந்துதான் என்று பாராட்டினான் குப்பன்.
குப்பா ! இயற்கைக்கு நம்மைவிட அறிவு அதிகம். அதற்கு எதை எப்படிச் சரிசெய்ய வேண்டும் என்று நன்றாகத் தெரியும்.
” சுக்ரீவா! இயற்கைக்கு அறிவு உள்ளாதா என்ன? “
” ஆம், குப்பா! இயற்கைக்கு அறிவு உண்டு. உன்னைவிட, என்னைவிட அது அறிவானது தெரியுமா? மண்ணுக்குள் விழும் எதையும் மக்கவைக்கும் குணம் கொண்டது இயற்கை. ஆனால் தன்னக்குள் விழும் விதைகளையும்,கொட்டைகளையும் முளைக்கவைக்கிறதேஅது எப்படி?. அழுகிப்போன பழங்களை மண்ணில் வீசினால் அவற்றில் இருக்கும் விதைகள் மக்காமல் பழங்கள் மக்கி உரமாகிறது. விதைகளோ மரமாகிறது அது எப்படி? . இதற்கெல்லாம் காரணம் இயற்கையின் அறிவே.எதை உரமாக்க வேண்டும் ?எதைப் பயிராக்க வேண்டும் ?என்பதைப் பற்றிய அறிவு இயற்கைக்கு உண்டு குப்பா”.
” இந்த இயற்கைக்குள் இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள்
கொட்டிக்கிடக்கிறதோ சுக்ரீவா”.என்றபடியே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
அப்போது வழியில் சில காலடித்தடங்களைக் கண்டு நின்றுவிட்டான் சுக்ரீவன் .

ரா.சண்முகவள்ளி
கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.
இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம், வானவில், நான் போன்ற மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன.