சுக்ரீவன் நின்றதற்கான காரணம் தெரியாமல் அவனின் அருகில் வந்த குப்பன் அப்போது தான் கவனித்தான் அங்கு வழியில் புலியின் காலடித்தடம் இருந்தது.

”அய்யோ ஆபத்து இங்கே புலி இருக்கிறது சுக்ரீவா வா நாம் வேறு திசையில் சென்றுவிடுவோம்” என்று பதறினார் குப்பன்.

“குப்பா அச்சத்தைவிடு. இது ஆபத்துக்கான அறிகுறி தான் ஆனால் இந்த ஆபத்தை நாம் சரிசெய்யாமல் சென்றால் பேராபத்து ஏற்படும்” என்றான் சுக்ரீவன்.

”பேராபத்தா……,”

”ஆமாம் குப்பா பேராபத்து தான்.இந்தக் காலடித்தடங்களை நன்றாக கவனித்துப் பார். இது புலியின் காலடித் தடம் தான். ஆனால் அந்தக்காலடி தடம் முழுவதும் இரத்தம் நிறைந்துள்ளது” என்றான் மருதன்.

”அட ஆமா நான் பயத்துல இதைக் கவனிக்கவே இல்லையே மருதா. என்ன ஆனது அந்த புலிக்கு ஏன் இப்படி அதன் காலடித்தடத்தில் இரத்தமாக இருக்கிறது?”.

“அதைத்தெரிந்துகொள்ள நாம் அங்கு சென்றாக வேண்டும்”  என்று அருகில் இருந்த மரத்திலிருந்து கிழக்குத் திசையைக்காட்டினான் சுக்ரீவன்.

அனைவரும் சுக்ரீவன் காட்டிய திசையை நோக்கிச் சென்றனர்

”சுக்ரீவா! எனக்கு ரொம்பப் பயமாக இருக்கிறது. காலடித் தடத்தில் இருக்கும் இரத்தத்தைப் பார்த்தால் அதற்கு நிச்சயம் அடிபட்டுள்ளது என்று நினைக்கிறேன். இப்பொழுது நாம் அதனிடம் சென்றால் அது கோவத்தில் நம்மைக் கடித்துவிட்டால் என்ன செய்வது?வேண்டாம்.சுக்ரீவா நாம் திரும்பிப் போய்விடலாம் வா” என்றான் குப்பன்.

“திரும்பி நீ எங்கே செல்வாய் குப்பா?”

“இது என்ன கேள்வி சுக்ரீவா? என் வீட்டுக்குத் தான்.”

“இந்தப் புலியை இப்படியே நீ விட்டுவிட்டுச் சென்றால் உன்னால் உங்கள் ஊரில் வாழமுடியாது குப்பா. ஒருவேளை இந்தப் புலியின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அது இந்தக் காட்டையும், உங்கள் ஊரையும் பாதிக்கும் குப்பா”.

“ஒரு வேட்டையாடும் மிருகம் இறந்தால் காட்டில் அதற்கு இரையாகும் உயிர்களுக்கு நன்மை தானே. நீயோ அதனால் காடும், ஊரும் பாதிக்கப்படும் என்கிறாயே எப்படி சுக்ரீவா?”.

”அதுதான்  வண்ணத்துப்பூச்சி விளைவு குப்பா”.

”என்ன வண்ணத்துப்பூச்சி விளைவா? அப்படி என்னறால் என்ன சுக்ரீவா?”

”சொல்கிறேன் கேள்,  இயற்கை பல சிக்கலான அமைப்பைக்கொண்டது . அது எப்போதும் ஒன்றை ஒன்று சார்ந்து பின்னிப்பினைந்திருக்கும். நாம் தான் அதைக் கவனிக்கத் தவறுகிறோம். ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஒரு சிறிய சிறகசைவு கூட ஒரு பெரும் புயலின் போக்கையே மாற்றிவிடும் வல்லமை கொண்டது. அதுபோலக் காட்டில் நடக்கும் ஒரு சிறு மாற்றங்கள் கூட ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்திலும் பெரும் மாற்றத்தை விளைவிக்கக்கூடும் இதைத்தான் வண்ணத்துப்பூச்சியின் விளைவு”

”இயற்கையின் உயிர் நாடியே காடுகள் தான். இந்தக் காடுகள் தங்களை எப்போதும் புதுப்பித்துக்கொண்டே இருக்கும். காடுகள் தங்களோட வளர்ச்சிக்குப் பறவைகளையும், தேனீக்களையும் மட்டும் நம்பி இல்லை அவை முயல்,மான்,பன்றி போன்ற தாவரப்பட்சிகளையும் நம்பியுள்ளது இவை தான்  காடுகளை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க உதவுகிறது. ஆனால் அதில் ஒரு சிக்கலும் இருக்கு”.

”என்ன சிக்கல் சுக்ரீவா?…,”

”இவைகள் பணி என்பது எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதும், இனப்பெருக்கம் செய்வதும் தான். இப்படி இவைகள் எண்ணிக்கையில் அதிகமானால் அது காட்டுக்கே ஆபத்தாகிவிடும். காடு மட்டும் அல்ல இவைகளின் அபரிமிதமான எண்ணிக்கைகள் நீர்நிலைகளையும், வளங்களையும் அழித்தால் நாட்டுக்குள்ளும் தண்ணீர்த் தட்டுப்பாடு,வறட்சி எற்படும்.அதனால் தான் அதனைக் கட்டுக்குள் வைத்திட இவற்றை வேட்டையாடும் உயிர்களையும் இயற்கை படைத்தது.

புலி காட்டின் பாதுகாவலன். ஒரு புலி உயிர் வாழ ஆயிரம் சதுர கிலோமீட்டர் காடு தேவை. தான் வாழக்கூடிய இந்தப் பரப்பளவைப் பாதுகாப்பாகவும் அந்த இடத்தில் உள்ள உயிர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் கொண்டது புலி. இப்படிப் பட்ட புலிகள் இறந்தால் காடும்,நாடும் என்னாவது?”.

பேசிக்கொண்டே அனைவரும் புலியிருக்கும் இடத்திற்கு வந்தனர். முன்புறம் இருக்கும் இடது கால் பாதத்தில் கண்ணாடிச் சில்லுக் குத்தி இரத்தம் கசிந்தபடி வலியில் உறுமிக்கொண்டு இருந்தது புலி.

குப்பனுக்குப் புலியின் உறுமலைக்கண்டு ஒரு புறம் பயமும் மறுபுறம் பாவமாகவும் இருந்தது. சுக்ரீவன் குப்பன் அருகில் வந்தான் குப்பனின் தோளைத்தொட்டு “குப்பா இப்போது உன்னால் தான் இந்தப் புலிக்கு உதவ முடியும். நீ மனது வைத்தால் இதன் வலியைத் தீர்க்க முடியும்”  என்றான்.

“என்னால் என்ன செய்ய முடியும்”? சுக்ரீவா

“புலியின் பாதத்தில் குத்தியுள்ள அந்தக் கண்ணாடிக் சில்லை  நீ அகற்றினால் போதும் குப்பா” என்றான் மருதன்.

“நான் எப்படிப் புலியின் அருகில் போகமுடியும்? வலியில் இருக்கும் அது என்னைக்கொன்றுவிட்டால் என்ன செய்வது மருதா?” பயந்தவாரு கேட்டான்.

“நீ தைரியமாக வா நானும் உன் உடன் வருகிறேன் “என்று குப்பனின் கையைபிடித்து புலியிடம் அழைத்துச்சென்றான் சுக்ரீவன்.

புலியின் அருகில் வந்ததும் “நண்பரே தங்களுக்கு உதவவே நானும் எனது நண்பனும் வந்துள்ளோம் எங்களை உங்களுக்கு உதவிபுரியவிட வேண்டும்” என்று பணிவோடு கேட்டான் சுக்ரீவன்.

புலியும் தன் காலை அவர்கள் முன் நீட்டியது. குப்பன் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு புலியின் பாதங்களைப் பற்றினான் . உடைந்த கண்ணாடிச் சில் ஆழமாகப் புலியின் பாதத்தில் குத்தியிருந்தது அதை லாவகமாக எடுத்தான் குப்பன். அப்புவும்,சுப்புவும் சில மூலிகைகளைக் கொண்டுவந்து குப்பனிடம் நீட்டின. “இதை நன்றாகக் கசக்கி அந்தச் சாறை பாதத்தில் விடு குப்பா கண்ணாடி குத்திய இடத்தில் சீல் வைக்காமல் விரைவாக ஆற இது உதவியாக இருக்கும்” என்றனர்.

குப்பனும் அவர்கள் கூறியபடியே செய்தான். புலிக்கு ஓரளவு வலி குறைந்தது.

வலி குறைந்ததும் புலி பேசத்தொடங்கியது “நண்பா யார் இவர்? இவர் ஏன் உங்களோடு இருக்கிறார்” என்று கேட்டது சுக்ரீவனிடம்.

“நண்பா! இவர் தான் குப்பன் எங்கள் நண்பன்” அறிமுகப்படுத்தினான் சுக்ரீவன்

“அப்படியா? அப்படியெனில் எனக்கும் நண்பன் தான். வணக்கம் நண்பா” என்றது புலி.

“என்ன குப்பா! அமைதியாக இருக்கிறாய் என்ன ஆனது”? என்றான் மருதன்.

“இந்தப் புலிக்கு ஏற்பட்ட காயத்தை நாம் சரிசெய்துவிட்டோம். ஆனால் நமக்குத் தெரியாமல் எத்தனையோ விலங்குகள் இதுபோல் பாதிக்கப்பட்டு இருக்கும் தானே அவற்றின் வலியை யார் சரி செய்வது மருதா?”. இந்த நிகழ்வுக்கு எல்லாம் எங்களைப்போன்ற மனிதர்களின் கேளிக்கைகளும், அலட்சியங்களும் தான் காரணம் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நண்பா! குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் மட்டும் அல்ல காட்டுக்கும் கேடு என்று மக்கள் உணரவேண்டும் அப்போது தான் இதுபோல் நீங்கள் துன்பங்கள் உங்களுக்கு நேராமல் இருக்கும்”.

“உன்னில் ஏற்பட்ட இந்தப் புரிதல் அனைவரிடத்திலும் வந்தால் மாற்றம் நிச்சயம் உருவாகும் குப்பா நீ வருந்தாதே” என்றது புலி.

“சரி நண்பா! நீ ஓய்வெடுத்துக்கொள் நாங்கள் வருகிறோம்” என்று விடைபெற்றுக்கொண்டு அனைவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

மலைப்பாங்கான பகுதியில் இருந்து அனைவரும் கீழே இறங்கிப் பழத்தோட்டத்துக்கு வந்தனர்.

“நண்பா நீ உன் இடத்திற்குச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. அப்புவும் சுப்புவும் உன்னை உன் வீடுவரை கொண்டுவிடுவார்கள். இதுவரை பொறுமைகாத்து எங்களோடு பயணித்து எங்களின் இன்னல்களைப் புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பா சென்று வா” என்றான் சுக்ரீவன் .

“சுக்ரீவா உங்களின் கஷ்டங்களைக் கூறினீர்கள் ஆனால் சரிசெய்ய என்ன செய்யவேண்டும் எதுவும் சொல்லவில்லையே?  “.

”எங்களின் இந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்ய நீங்கள் எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும் குப்பா. நீங்கள் இவ்வாறு எங்களுக்கு உணவு கொடுக்கும் முன்னர் எங்களுக்கு உணவு வழங்கியது யார்?. எங்களுக்காக உணவுகளை நாங்கள் தானே இயற்கையிலிருந்து எடுத்துக்கொண்டோம்.  இனியும் நாங்க அப்படியே வாழ்ந்து கொள்கிறோம். உங்களுடைய அன்பை இப்படி உணவு வழங்குவதன் மூலம் காட்டாமல் நாங்கள் வாழும் காட்டுகளுக்குள் வந்து கண்ணாடி புட்டிகள்,நெகிழப்பைகள், குப்பைகள் எல்லாம் போட்டு அழிக்காமல், எங்கள் பாதைகளைத் தடுத்து வேலி போடாமல், எங்களை எங்களுடைய இடத்தில் நிம்மதியாக வாழ விடுங்கள் குப்பா. எங்களுக்கான தேவைகளை இயற்கையே தீர்த்து வைக்கும் . நீங்கள் இயற்கையை தீர்த்துக்கட்டாமல் இருந்தால் மட்டும் போதும்.” சுக்ரீவன் பேச பேச குப்பன் தலைகுனிந்து நின்றான்.

“எங்களை எங்களின் இயல்பில் வாழவிடுங்க. எங்களில் எதையும் தேடாதீர்கள். எங்கள் மேல் எதையும் திணிக்காதீர்கள்” என்றான் மருதன்

”சுக்ரீவா நானும் என்னுடைய அறியாமையினால் உங்களுக்குச் சில  கெடுதல்கள் நடந்திட நானும் ஒரு வகையில் காரணமாகிவிட்டேன். இனி இதுபோல் நடக்காது என்னால் முடிந்த அளவு இதை மற்றவர்களுக்கும் புரியவைக்க முயற்சிக்கிறேன் நண்பா” என்றான் குப்பன் .

குப்பன் மனம் வருந்துவதை புரிந்துகொண்ட சுக்ரீவன் அவனைச் சிரிக்கவைப்பதற்காக,

“ஆயிரம் தான் சொன்னாலும் நீ கொடுக்கும் தர்பூசணியின் ருசியே தனிதான்னு நம்ம பசங்க சொன்னாங்க. அடுத்த தடவ சந்திக்கும் போது எனக்குக் கொஞ்சம் பழங்கள் தருவாயா?” என்று கேட்டான் .

இதைக்கேட்டதும் குப்பனும் மகிழ்ச்சியோடு “நிச்சயம் கொண்டு வருகிறேன்.  நீயும் ஊருக்குள்ள வந்த என் வீட்டுக்கு வா” என்றான் குப்பன்.

“அய்யோ ஊருக்குள்ள நா வரணுமா, வேண்டாம் டா சாமி அப்பறம் ஊருக்குள் வந்து அட்டகாசம் புரிந்த யானை,காட்டில் இருந்து தப்பிவந்த கரடி அட்டகாசம் என்று எங்களின் பங்காளிகள் தலைப்புச் செய்திகளில் வருவது போல் நானும் தலைப்புச் செய்தியில் வர விரும்பவில்லை நண்பா” என்றான் .

சுக்ரீவன் சொன்னதைக்கேட்ட குப்பன் சிரிக்க ஆரம்பித்தான் அவனின் சிரிப்பைக் கண்ட சுக்ரீவனும் மற்றக் குரங்குகளும் சிரிக்கத் தொடங்கின.

”குப்பா! நீ இது வரைக்கும் எங்கள் இனத்தின் பசியைப் போக்கி எங்களுக்கு உன்னால் முடிந்த பல உதவிகளைச் செய்துள்ளாய் அதனால் எங்கள் சார்பாக உனக்கு ஒரு பரிசு கொடுக்க ஆசைப்படுகிறோம்” என்றான் சுக்ரீவன்

சுக்ரீவனும், மருதனும் மற்றக் குரங்குகளும் குப்பன் அருகில் வந்தனர்.  அனைவரும் ஒன்றாகக் குப்பனை அணைத்துக்கொண்டனர். “குப்பா எங்கள் ஆயுள் உள்ளவரை நீ காட்டிய அன்பை நாங்கள் மறக்க மாட்டோம். உன் பேரன்பிற்குக் கைமாறாகக் கொடுத்திட எங்களிடம் அன்பைத்தவிர வேறென்றும் இல்லை நண்பா” என்றனர்.

குப்பன் கண்கள் கலங்கச் சுக்ரீவனையும் மற்றக் குரங்குகளையும் கண்டான். “மகிழ்ச்சியாக இங்கிருந்து நீ விடைபெற்றுச் செல் குப்பா, அப்பு சுப்பு நீங்கள் குப்பனை பத்திரமாக அவனின் இருப்பிடத்திற்குக் கொண்டு சேர்த்துவிடுங்கள்” என்று கட்டளையிட்டான் சுக்ரீவன்.

குப்பன் சுக்ரீவனிடமும், மருதன் மற்றும் மற்றக் குரங்குகளிடமும் விடைபெற்று அப்பு சுப்புவுடன் சென்றான்.

போகும் வழியில் சுப்பு கேட்டான் “ஆமா குப்பா! இனி மேல் நீ என்ன செய்யப் போகிறாய்” .

“நானா? நான் உங்களுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கப்போகிறேன்” என்றான் குப்பன்

“என்ன? மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கப் போகிறாயா?”எனக் குழப்பத்துடன் கேட்டனர் அப்புவும் சுப்புவும்.

“ஆமாம் நண்பர்களே! உங்களுக்குத் தினமும் பழங்களையும்  தண்ணீரையும் வழங்குவதற்குப் பதிலாக அவை உங்களுக்கு இயற்கையாகவே கிடைக்க ஏற்பாடு செய்யப் போகிறேன். இனி நாள் தோறும் என்னால் முடிந்த அளவு பழ மரங்களை நடவு செய்ய போகிறேன், காடுகளில் உங்களின் நீர்த் தேவைக்காகக் குளங்களையும் அருவிகளையும் சுத்தம் செய்யப்போகிறேன். பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்பார்கள் அல்லவா? அதைப்போல உங்களுக்கு உணவு அளிப்பதைவிட உங்களுக்கு உணவளிக்கும் இயற்கையைப் பேணிப்பாதுகாப்பது சாலச்சிறந்தது தானே? அதைத் தான் இப்படி கூறினேன் “என்றான் குப்பன்.

குப்பனின் இருப்பிடம் வந்ததும் அப்புவும் குப்புவும் அவனை ஆர்தழுவி விடைபெற்றுக்கொண்டு சென்றனர்.

முற்றும்.

ரா.சண்முகவள்ளி

கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.

இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம்,  வானவில், நான் போன்ற  மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *