ரம்ஜான் நெருங்கும் போதோ எனது வேலைகளில் இக்கட்டான சூழ்நிலைகளிலோ குழப்பமான நிலையிலோ எனது குருநாதரின் ஞாபகம் கிளர்ந்தெழுந்து. என் மனதை நெகிழச்செய்வதோடு இக்கட்டான அந்நிலையை கடக்க, சரி செய்ய அவரின் உத்திகள் தலைகாட்டி என்னை அச்சூழ்நிலையிலிருந்து தப்பிக்க, வெளியேற, முடித்துவைக்க பெரும்பாலான சமயங்களில் உதவியிருக்கிறது.
இஸ்மாயில் என்கிற இஸ்லாமியர் எனது குருநாதராக பரிச்சயமானதே வித்தியாசமான முறையில் வைண்டிங் செய்து கொண்டிருந்தது தான். நான் வேலை கற்றுக் கொள்ள ஆரம்பித்ததிலிருந்து அப்போது வரை வைண்டிங் செய்ய கையால் சுற்றும் பார்மர் எனும் கருவியோ, மரத்தால் செய்த ஐந்தடுக்கு, ஒரே நேரத்தில் மூன்று காயில்கள் சுற்றும் மர உருளைகளை வைத்து தான் செய்வார்கள்.
இவர் அவையென்றும் இல்லாமல் வெறும் கையினாலும் கால் கட்டைவிரல் கொண்டும் சுற்றி எவ்வளவு பெரிய மோட்டர் என்றாலும் காயிலை சுற்றியதை பார்த்தவுடன் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன்.
எனக்கு அப்போது வரை வீட்டு வயரிங் மட்டுமே தெரியும்.
அவர் வேலை செய்து கொண்டிருக்கும் கடைக்கு பக்கத்தில் தான் நானும் கடை வைத்திருந்தேன். அவர் வேலை செய்யுமிடம் குழவிகளுக்கு பிடி போடும், கொத்துமிடம் அக்கடையின் ஒனரிடம் வரும் கிரைண்டர் மோட்டர்களுக்கு குருநாதர்தான் வைண்டிங் செய்து கொடுப்பார் ஒரு நாளைக்குள் மூன்று நான்கு மோட்டார்களுக்கு வைண்டிங் செய்து முடித்து விடுவார் .
ஒரு தடவை தேவைக்காக என்னிடம் ஸ்பேனர் வாங்க வந்த போதுதான் எனக்கும் அவருக்கும் நேரிடையான அறிமுகமானது. தயக்கத்துடனே ஸ்பேனர் கொடுத்து விட்டு திருப்பிதரும் போது எனக்கு வைண்டிங் வேலைகள் கற்றுத்தரும்படி கேட்டுக் கொண்டேன்.
தயக்கமின்றி வேலைகளை கற்றுக் கொடுத்தார். குழவிகளுக்கு பிடி போடும் கடையில் அவருக்கும் ஒனருக்கும் மனத்தாங்கலால் எனது கடைக்கு வந்து தன் வேலைகளை செய்து கொள்வதோடு எனக்கும் கற்றுக் கொடுத்தார். கடையின் பூட்டிற்கு மூன்று சாவிகள் போட்டு அவரிடமும் ஒன்று கொடுத்து கடைக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வந்து போவது போல ஏற்பாடு செய்து கொடுத்தேன்.
நாளடைவில் நெருக்கம் அதிகமானது அப்போதுதான் அவரிடமுள்ள கெட்ட பழக்கம் வெளிய தெரிந்தது. மதுப்பழக்கம் அவரிடம் விக்கிரமாதித்தன் வேதாளம் போல தொற்றிக் கொண்டு விலகாமலிருந்தது தெரிந்தது.
சம்பாதிக்கும் பணத்தில் முக்கால் பாகம் குடித்தே அழிப்பார். அவரிடம் அதை பற்றி பேசினாலும், விளக்கி சொன்னாலும் கேட்க மாட்டார். வேலை செய்வதில் கனிசமான பங்காக எனக்கும் பணமும் தொழிலும் சொல்லிக் கொடுத்தார்.
அவரிடம் தொழில் இருந்தது எந்த வகையான மோட்டர் என்றாலும் அனாசயமாக செய்வார், மோட்டரில் அவருக்கு தெரியாத விசயமே இல்லை இத்தனைக்கும் அவர் படிக்காதவர் அனுபவமே அதிகம் கொண்டிருந்தார். அத்தனையும் தெளிவாக கற்றுக் கொடுத்தார். அடிப்படை தெரியுமாதாலும் ஐடிஐ எலக்ட்ரீஸ்யன் கோர்ஸ் படித்திருந்ததாலும் அவரே பாராட்டும்படி வேலைகளை கற்றுக் கொண்டு செய்து வந்தேன்.
ஒரு தடவை போதை அதிகமாகி கடையின் மேஜை மேலேயே படுத்து விட்டார். திரிபேஸ் பெரியமோட்டர் ஒன்றிற்கு பணம் வாங்கியிருந்ததால் அதில் அதிகம் குடித்திருந்தார். நானும் எனது நண்பரும் சேர்ந்து வண்டியில் வைத்து அவர் வீட்டை விசாரித்து வீட்டில் கொண்டு விட்டோம். அப்போதுதான் முதன்முறையாக அவரின் வீட்டை பார்த்தேன் அதிர்ச்சியடைந்தேன். ஒரு சந்தில் கூரை வீட்டில் வாடகைக்கு இருந்தார். அவரின் மனைவியும் நான்கு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.
ஏற்கெனவே என்னைப்பற்றி சொல்லியிருந்தமையால் அறிமுகப்படுத்திக் கொண்டபோது வரவேற்று அவரை படுக்கையில் கிடத்திவிட்டு வெளியே வந்தோம். நான்கு பெண் குழந்தைகளில் ஒருவர் மட்டும் நல்ல சிவப்பாகவும் மூன்று பெண் குழந்தைகளும், ஆண்குழந்தையும் கறுப்பாக இருந்தனர். பெரிய பெண்ணும் மூன்றாவதாக பிறந்த பையன் மட்டுமே பள்ளிகளுக்கு சென்று வருவதாக தெரிவித்தார். நான் அவரை அண்ணி என்றே அழைத்தேன். குருநாதரும் அண்ணியாரும் நல்ல கறுப்பு. காலப்போக்கில் என்னையும் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். எல்லா குழந்தைகளும் சித்தப்பா எனறே அழைத்தனர். கடைசி பெண் குழந்தையான மெகருன்னிசா மட்டும் மற்றவர்களை விட அன்போடும் பாசத்தோடும் பழகுவாள். ஒவ்வாரு ரம்ஜான் போதும் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டாடுவேன். பிள்ளைகளுக்கு துணிமணி, இனிப்புகள் அவர்களுக்கு தேவையான என்னால் முடிந்த பண உதவிகளையும் செய்து கொடுத்தேன்.
குடிப்பழக்கம், புகைப்பழக்கம் தவிர மற்றபடி குருநாதர் சிறந்தவர். பழகுவதிலும் பிள்ளைகளிடம் பாசமும் நேசமும். கடைக்குட்டியிடம் அதிக பற்றுதல் கொண்டவர். வரும் கஸ்டமர்களிடமும் திறமையாக பேசி பணம் வாங்குவதிலும் வேலை முடித்துத் தருவதிலும் எனக்கு முன்னோடி அவர் தான்.
அதிக குடியினாலும் புகைப்பிடித்ததாலும் உடல்நிலை அவ்வப்போது கெடத் தொடங்கியது.
வாங்கும் வேலைகளும் முடிக்கப்படாமலும் அதற்காக வாங்கிய பணம் குடியினாலும் உடல் நிலையை பார்த்துக் கொள்ள செலவானதாலும் கடையில் அவர் வந்து வேலை செய்ய முடியாமலானது. அவ்வேலைகள நானே பெறுப்பேற்று முடித்துக் கொடுத்தேன். மேலும் மேலும் செய்ததால் பணக்கஷ்டமும் மனக்கசப்பும் ஏற்பட்டது. தொழில் கற்றுக் கொடுத்த குருநாதர் என்பதால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன்.
எப்பொழுது வருவார், வேலைகளை எப்படி வாங்குவார் எனத் தெரியாது. கடையில் மோட்டார் பிரித்த நிலையிலும் அதில் இருக்கும் செப்பு வயர்கள் எடுக்கபபட்டிருக்கும். நாளாக நாளாக எனக்கும் சுமை அதிகமானது. பெரிய மோட்டார்கள் எனபதால் ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். அவரிடம் மன்றாடி சொல்லிப்பார்த்தும் திருத்தவில்லை எனபதால் கடைக்கு வர வேண்டாம் என சொல்லி அவரிடம் கொடுத்த சாவியை வாங்கி வைத்து கொண்டேன். குடும்பத்திற்கு அவருக்கு தெரியாமல் உதவிகளை செய்தும் வந்தேன். உடல்நிலை காரணமாக பெரிய பெண்ணுக்கும் அடுத்த பெண்ணிற்கும் உடனடியாக திருமண ஏற்பாடு செய்து எளிமையாக முடித்து வைக்கப்பட்டது .
அதிகம் புகைத்ததால் நுரையீரல் அதிகம் பாதிப்பும், குடியினால் உடல் நிலையும் சரியில்லாமல் அதிகம் அவதிப்பட்டார். அண்ணியார் ஒன்றும் சொல்ல முடியாமல் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைக்கழிக்கப்பட்டு கடும் வேதனையடைந்தார். குடிக்க, புகைக்க அவரை தடுக்க முடியாமல் மன்றாடி அழுதழுது உடல் உருக்குலைந்து போனார். பிள்ளைகள் பயத்துடனும் கையறு நிலையிலும் இருந்தனர். என் பங்கிற்கு நானும் அவரிடம் கெஞ்சிப் பார்த்துவிட்டேன் மசியவில்லை .
மீண்டும் மீண்டும் குடித்ததாலும் புகைத்தாலும் மரணித்தார். கடைசி நேரத்தில் கடைக்குட்டியை அழைத்து கை கோர்தபடியே தன் இறுதி மூச்சை விடுவித்தார்.
அவருக்கு பிறகு உதவிகள் தேவையின் போதும் ராம்ஜான் பண்டிகைக்கும் அவர்கள் வீட்டிற்கு சென்று என்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்தேன். எவ்வளவு நல்ல மனிதர் ஏன் இவ்வகையில் அழிந்தார். என்ற கேள்வியை அண்ணியாரிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை. எனக்கும் தெரியல என்பார் அவரை போல அன்பான கணவர் கிடைப்பதரிது. ஒரு தடவை கூட போதையிலும் என் மீது கை ஓங்கியதில்லை என்பார்
உங்களிடம் ஒன்று சொல்லியே ஆக வேண்டும். அவருக்கு இது பிடிக்காது எனத் தெரியும் என்றபடி சுற்றி பார்த்து யாருமில்லை என உறுதிப்படுத்திக் கொண்டு. எங்களுக்கு பிறந்த நான்காவது குழந்தைக்கு பிறகு கருத்தடை ஆப்ரேசனுக்காக ஆஸ்பத்திரிக்கு போய் செய்து கொண்டு திரும்பும் போது கிடைத்ததுதான் அந்த ஐந்தாவது பெண் குழந்தை. இது இப்போது என்னையும் உங்களையும் தவிர யாருக்கும் தெரியாது. அவர் ரெம்ப நல்லவர் என்றபடி கதறி அழுதார்.
நான் கனத்த மனதுடன் குருநாதரின் நினைவோடு கண்கலங்க அமர்ந்திருந்தேன்.
++
கலியபெருமாள்
தொழில் மோட்டார் ரீவைண்டர். தஞ்சாவூரை சார்ந்தவன். வேலை நேரம் போக வாசிப்பதுதான் ஒரே செயல் 35 ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். இப்பொழுது கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிவருகிறேன்.