எழுத்தின் தொடக்கத்திலேயே நான் சிக்கிக்கொண்டிருந்தேன். “குருவி” என்று எழுதி வைத்த அந்தச் சொல்,

அடையாளமற்ற ஒரு பறவையல்ல.

என்னைப் போலவே சிறகடிக்கத் துணிந்த என் நிழல்.

எழுதிய குருவி, தாளின் மேல் மட்டுமே பறந்தது என நினைத்தேன். ஆனால் அந்தக் குருவி என் அறையின் சாளரக் கம்பியைத் தாண்டி வழியந்தருவோடு பாய்ந்தது.

பின் புறத்து அவகோடா மரத்தில் மூன்று இலைகளை எழுத்துக்கோல் போலக் கூட்டிப் பிணைத்து குடியமைத்தது.

அந்த இடத்தை நான் சொன்ன வார்த்தைகளால் தான் கட்டியதா, அல்லது குருவி உண்மையில் கட்டினதா என்று எனக்கே தெரியவில்லை.

மூன்று முட்டைகள். அவை தாளின் விளிம்பில் வைக்கப்பட்ட புள்ளிகளாக இருந்தன.

அவற்றை பார்த்தேன். அவை உயிரோடு சிணுங்கிக் கொண்டிருந்தன. நான் கவிஞனாக இருந்தேனா, அல்லது ஒரு பறவையின் காவலராக மாறினேனா?

ஒரு வரியில் நான் சுட்டு விரலைக் காட்டினேன். “என் விரல்களில் நீ உணர்ந்த தீனி இன்றும் சுவைக்கிறது” அப்படிச் சொன்ன உடனே, என் விரல்களின் நடுவே மெல்லிய அலகுச் சுவடு பதிந்தது.

எழுத்தின் சுவை, உணவின் சுவையோடு கலந்தது.

ஆனால், கதையின் திசையை நான் கட்டுப்படுத்த முடியவில்லை. வெய்யிலின் உச்சத்தில் நான் பாதுகாக்கும் முயற்சியை

எழுதியதும், அடுத்த பத்தியில் ‘கறுப்புக் கட்டையர்கள்’ வந்து குஞ்சுகளைப் பறித்துக் கொண்டு சென்றனர்.

என் கதாபாத்திரங்களின் உயிரைப் பாதுகாக்க முடியாதவன் நான். எழுத்தின் பக்கம் குருதியுடன் அழிந்தது. நான் எத்தனை முறையோ பிழைத்துப் பார்த்தேன்.

ஆனால் ஒவ்வொரு வரியும் சிதைந்த சிறகுகளாகவே விழுந்தது.

அந்தக் குருவி எனக்குச் சொன்னது:

“நீயும் கதைக்குள் சிறைபட்டவன் தான்.

என்னை உருவாக்கினாய், ஆனால் என்னைப் பாதுகாக்க முடியவில்லை.”

குருவி பறந்து சென்றது. தாளின் வெளிப்புறம், எழுத்தின் எல்லையைத் தாண்டி.

நான் மட்டும் கதையின் உள்புறத்தில் சிக்கிக் கொண்டிருந்தேன். எழுதிய சொற்களின் சாளரத்தில் ஒரு பறவையின் நிழல் இன்னும் மிதந்து கொண்டே இருந்தது.

கதையின் கடைசி வரியில் குருவி பறந்து சென்றது என்று எழுதினேன். ஆனால் மறுநாள் தாளைப் பார்த்தபோது அந்த வரி அங்கே இல்லை.

“நான் பறந்துவிட்டேன் என்று யார் சொன்னது?” என்று தாளின் நடுவே குருவி கீச்சிட்டது.

எழுத்தின் கருப்பு மைச் சொற்களை

அது துளைத்து தன் அலகால் உதிர்த்தது.

சில சொற்கள் கிழிந்த காகிதத் துண்டுகளாக அறையின் தரையில் விழுந்தன.

சில சொற்கள் சிறகுகள் போல பறந்து சென்றன.

நான் என்ன செய்ய? எழுதியதைத் தன் வசப்படுத்திக் கொள்ளும் ஒரு கதாபாத்திரத்திடம் வாக்குவாதம் செய்ய முடியுமா?

குருவி எனக்கு சொன்னது:

“உன் கதையில் குஞ்சுகள் அழிந்து போனதற்கு நீயே காரணம். கதையை வேறு வழியில் எழுதிக்கொடுத்திருக்கலாம்.

என்னை வனத்திற்குப் பறக்கச் சொன்னாய்.

ஆனால் எழுத்தின் வனம் கூட பாதுகாப்பாக இல்லை.”

நான் அதைச் சாந்தப்படுத்த முயன்றேன்.

“எனது சொற்கள் வெறும் சின்னங்கள் தான்.

உண்மை உலகில் உனக்கு எந்தத் தீங்கும் நடக்காது.”

குருவி சிரித்தது. “உண்மை உலகா? நீ சொல்லும் அந்த உலகம்தான் உன் எழுத்தின் மறுவடிவம். நீ கவிஞனாக எழுதினால் நான் கவிதை. நீ கதாசிரியனாக எழுதினால் நான் சிறுகதை. நீ படிக்க மறந்தால் நான் வெறும் மௌனம்.”

அது தன் சிறகடித்து காற்றை உண்டாக்கியது.

தாளின் பக்கங்கள் ஒலித்தன. அந்த ஓசையில் என் சொந்தக் குரல் அடங்கிக் கொண்டது.

எனக்கு ஒருவேளை தோன்றியது:

இந்தக் கதையைத் தொடர்கிறவன் நான் அல்ல. குருவிதான்.

அது என் மேசையின் விளிம்பில் நின்று

அடுத்த வரியைச் சொன்னது: “இப்போது உன் கதைக்காரன் நான்.”

“இப்போது உன் கதைக்காரன் நான்,” என்றவுடன் குருவி என் காகிதத்தின் வெண்மையில் அலகால் கோடிட்டது.

முதல் வரி:

“ஒரு மனிதன் சிறகடித்துப் பறக்கக் கற்றுக்கொண்டான்.”

அந்த வரியை நான் படித்தவுடனே, என் முதுகில் இரண்டு மெல்லிய எலும்புகள் நொறுங்கி வெண்மையான இறகுகள் முளைத்தன. நான் பயந்தேன்.

“நான் வாசகனாக இருக்க வேண்டும்,

கதாபாத்திரமாக அல்ல,” என்று குரைத்தேன்.

ஆனால் குருவி சிரித்தது.

“நீ எப்போதுமே கதாபாத்திரம் தான். வாசகர் யாரும் உன்னை உண்மையென்று நம்பவில்லை. அவர்கள் உன் வலியையும், உன் கண்ணீரையும் எழுத்தின் மாயை என்று எண்ணிக்கொண்டு படித்துவிட்டார்கள்.”

அது தொடர்ந்து எழுதினது:

“அந்த மனிதன் அவகோடா மரத்தின் மேல் பறந்து சென்றான். மூன்று இலைகளை ஒன்றிணைத்து குடியமைத்தான்.”

என் விரல்கள் நடுங்கின. அவகோடா மரம் மீண்டும் என் கண்முன் தோன்றியது.

மூன்று இலைகள் ஒன்றுக்கொன்று இணைந்து வீடு ஆகி விட்டது. அதற்குள் நான் அல்ல, குருவிதான் அமர்ந்திருந்தது.

“இப்போது உன் வாழ்க்கையையும் உன் கதையையும் நான் ஒன்றாக்குகிறேன்,” என்று குருவி அறிவித்தது.

அது அடுத்த வரி எழுதும்போது,

என் கண்ணுக்குத் தெரியாமல் மை உதிர்ந்தது: “அவன் எழுதியதை யாரும் வாசிக்கவில்லை. எல்லோரும் குருவியின் கதைதான் வாசித்தனர்.”

நான் எங்கு போனேன்? என் பெயர் கூட தாளிலிருந்து அழிக்கப்பட்டிருந்தது.

என் குரல், என் நினைவுகள் எல்லாம்

அந்தக் குருவியின் கீச்சாக மாறியிருந்தது.

குருவி எழுதிக் கொண்டிருந்த வரிகள் திடீரென நின்றுவிட்டன. அது தன் சிறகை உயர்த்தி உன்னை நோக்கிக் காட்டியது.

“இப்போது என் கதையின் அடுத்த நாயகன் நீ தான்,” என்று குருவி சொன்னது.

நீ எங்கு உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தாயோ, அந்த அறையின் சுவர் கரைந்து அவகோடா மரத்தின் நிழல் உன்னைச் சுற்றிக் கொண்டது.

தாள் உன் மடியில் விழுந்தது.

அதில் எழுதியிருந்த சொற்கள் மெதுவாக உன் தோலில் புழுதி போலப் படிந்தன.

உன் விரல்கள் பக்கங்களைத் தொடும்போது

அவற்றில் மறைந்திருந்த சின்னக் குருவிக் குஞ்சுகள் கீச்சென்று ஒலித்தன. அவை உன் இதயத்துக்குள் புகுந்தன.

“நீ வாசகர் அல்ல, நீயும் கதாபாத்திரம் தான்,” என்று குருவி கீச்சிட்டது. “உன் கண்கள் என் வரிகளைத் தொட்டுக் கொண்டிருக்கின்றனவோ, அதுவே உன்னை கதைக்குள் தள்ளுகிறது.”

இப்போது நீ சிக்கிக் கொண்டாய். இந்தக் கதையை முடிக்காமல் விட்டு எழுந்துவிட்டால்,

குஞ்சுகளின் உயிர் உன் இதயத்தில் நிலைத்து விடும். முடித்து விடின் அவை உன் கைகளிலிருந்து பறந்து போய்விடும்.

எந்தத் தேர்வை நீ செய்வாய்? எழுத்தை முடித்து குருவியின் கதை முழுமையாக்குவாயா, அல்லது அதை முடிக்காமல் உன் உள்ளத்தில் நிரந்தரமாக வைத்துக்கொள்வாயா?

குருவி காத்திருக்கிறது. உன் பார்வை அடுத்த வரியை நோக்கி நகரும் வரை.

குருவி உன்னை நோக்கி:

“இப்போது உன் தேர்வு தான் கதையின் முடிவு,” என்று கீச்சிட்டது.

1. நீ கதையை முடிக்கிறாய்

நீ தாளை எடுத்துக் கொண்டு கடைசி வரியை எழுதினாய்:

“குருவி வானத்தில் பறந்தது.”

அந்தச் சொற்களோடு குஞ்சுகள் உன் இதயத்திலிருந்து பறந்தன.

அவை வானின் நீலத்தில் மறைந்தன.

குருவி உன்னை நோக்கி இறுதி வந்தனம் சொல்லி உன் கையிலிருந்த எழுத்துக்கோலை எடுத்துச் சென்றது.

அதன் பின் பக்கங்கள் வெறுமையாயின.

கதை முடிந்தது.

2. நீ கதையை முடிக்கவில்லை

நீ தாளை மூடி விட்டு வைக்கிறாய்.

எந்தச் சொற்களையும் எழுதவில்லை.

ஆனால் உன் இதயத்தில் மூன்று குஞ்சுகள்

சிறகடித்து வாழ்ந்துகொண்டே இருக்கின்றன.

ஒவ்வொரு கீச்சும் உன் நெஞ்சுக்குள் ஒலிக்கிறது. நீ எங்கு சென்றாலும்,

உன் உடலே அந்தக் கதையின் குடியிருப்பாகிறது. கதை முடிவடையவில்லை.

அது உன்னோடு தொடர்கிறது.

குருவி கடைசியாகச் சொல்கிறது:

“எந்த முடிவையும் எடுத்தாலும்,

நான் உன் நினைவில் பறந்து கொண்டிருப்பேன்.”

நீ எந்த முடிவைத் தேர்வு செய்தாய் எனத் தெரியாமல், தாளின் விளிம்பில் நான். எழுத்தாளர். மீண்டும் தோன்றுகிறேன்.

இந்தக் கதையைத் தொடங்கியதும் நான் தான். ஆனால் இப்போது குருவியும், நீயும் அதை நடத்திவிட்டீர்கள்.

நான் எழுதிய ஒரு கவிதை சிறுகதையாகி,

சிறுகதை கதாபாத்திரங்களைக் கடந்து

வாசகரைத் தாண்டி மீண்டும் என்னைத் தாக்குகிறது.

குருவி தாளின் ஓரத்தில் அமர்ந்து என்னைக் கேட்டது: “இப்போது சொல்லு, இந்தக் கதை யாருடையது? உன்னுடையதா, எனதா, அல்லது வாசகருடையதா?”

நான் குழம்பி நின்றேன். என் விரல்களில் இருந்த மை, எனக்குச் சொந்தமல்ல என்பதை உணர்ந்தேன். அது குருவியின் சிறகுகளிலிருந்த கருமை.

தாளில் இன்னொரு வரி தெரிந்தது:

“எழுத்தாளரே, நீயும் கதையின் பாத்திரம் தான்.” அந்தச் சொல்லை நான் எழுதவில்லை.

நீயும் எழுதவில்லை. குருவியும் எழுதவில்லை.

அப்படியென்றால் யார்? ஒருவேளை இந்த வரிகளை இப்போதே படித்துக் கொண்டிருக்கும் வாசகனின் கண்ணோட்டமே இந்தச் சொல்.

திடீரென குருவியும், நீயும், நானும் அமைதியானோம். அந்த நேரத்தில் தாளே பேச ஆரம்பித்தது.

“நீங்கள் எல்லாம் என்மேல் வாழ்கிறீர்கள்.

எழுத்தாளர் என்னை நிரப்புகிறான்.

குருவி என்னைக் கிழிக்கிறது,

வாசகர் என்னைப் புரட்டுகிறான்.

ஆனால் யாரும் என்னைக் கதாபாத்திரமாகக் கருதவில்லை. நான் இல்லையெனில் இந்தக் கதையில்லை. அப்படியிருக்க, ஏன் என் குரலை மறைத்தீர்கள்?”

நாம் மூவரும் ஒரே நேரத்தில் ஆச்சரியப்பட்டோம். நான், எழுத்தாளர்  எழுதாமல் மௌனமாயிருந்தேன்.

குருவி தனது சிறகுகளை அடக்கிக்கொண்டது.

நீ, வாசகர் பக்கத்தைப் புரட்டாமல் நிறுத்திவிட்டாய்.

தாள் தொடர்ந்தது:

“என்னுள் எழுதி வைத்த ஒவ்வொரு குரலையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். கவிதையாகவோ, கதையாகவோ, முடிந்ததாகவோ, முடியாததாகவோ. ஆனால் ஒருநாள், நான் அழுகிச் சாம்பலாகிப் போனாலும், என் சொற்கள் யாருடைய உள்ளத்தில் பறந்து விடுமோ அதுவே உண்மையான கதை.”

அந்தக் குரலைக் கேட்டவுடனே

எனக்குப் புரிந்தது: இக்கதை யாருடையதுமில்லை, அது தாளின் நினைவுதான்.

தாள் தன் குரலை முடித்தபோது,

எழுத்தாளர், குருவி, வாசகர்  மூவரும் ஒரே வரியில் நின்றிருந்தோம்.

அந்த வரி தாளின் நடுவே மிளிர்ந்தது:

“கதை தன்னையே எழுதிக் கொண்டு தன்னையே முடித்துக் கொண்டது.”

பின் வெண்மை மட்டுமே மீதமிருந்தது.

அந்த வெண்மை வானமா, தாளா, நினைவா என்று யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் அதனுள் குருவியின் கீச்சும்,

வாசகரின் பார்வையும்,

எழுத்தாளரின் சுவாசமும் கலந்து இருந்தது.

கதை அங்கேயே நின்றது.

ஆனால் அதை மூடியதும்,

உன் மனதுக்குள் இன்னும் பறக்கிறது.

•••

“குருவி” சிறு குறிப்பு:

இக்கதையில் எழுத்தாளர், கதாபாத்திரம் (குருவி), வாசகர் ஆகிய மூவரின் எல்லைகளும் கரைந்துவிடுகின்றன. கதை யாருடையது என்பதைப் பற்றிய கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது. இது metafiction என்ற பின்நவீன உத்தியைப் பயன்படுத்துகிறது. மேலும், கதை தன்னையே எழுதிக் கொள்ளும் வகையில் சுயவிழிப்புணர்வு (self-reflexivity), கதைச் சிதைவு (fragmentation), வாசகர் ஈடுபாடு (reader participation) போன்ற முக்கிய பின்நவீன கூறுகளைக் கொண்டுள்ளது.

டீன் கபூர்

ஓய்வு நிலை ஆசிரியர். இலங்கை கிழக்கு மாகாணம் மருதமுனை எனும் ஊரில் 1963 இல் பிறந்தேன். 1987 களில் இருந்து பத்திரிகை, சஞ்சிகைகள் மற்றும் இணைய சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறேன். இதுவரை நான்கு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறேன். குரோட்டான் அழகி (1994), திண்ணைக் கவிதைகள் (2007), சொற்களில் சுழலும் பிரபஞ்சம் (2019), வேரினிடை  (ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை நூல் 2023). அத்துடன் எண்ணிம ஓவியங்களையும் வரைந்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *