போர்க்கால பொம்மைகள்

சாலை காலியாக இருக்கிறது. வண்ணங்கள் நிறைந்த சாலையில் இப்போது சிவப்பும் சிதறிய உடல் பாகங்களுமே காய்ந்து கிடக்கின்றன.

ஒரே வாரத்தில் இவ்வளவு மாற்றங்கள். அவ்வபோது வானில் பறக்கும் விமானங்கள், உடைந்தும் உடையாமலும் இருக்கும் கட்டிடங்களை அதிரச்செய்கின்றன.

ஆங்காங்கு கைவிடப்பட்டிருக்கும், தோட்டாக்கள் இல்லாத துப்பாக்கிகளைச் சில சிறுவர்கள், தேடி சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை கொடுத்தால் தின்பதற்கு யாரோ ஒருவர் ரொட்டி துண்டுகளைக் கொடுப்பதாக சொல்லியுள்ளார். அவசரத்தில் எங்காவது ஓடிவிடவும் மறைந்து கொள்வதும் சிறுவர்களுக்கு சிரமமில்லை.

குடும்பத்தில் ஒரு சிறுவன் இப்படி செய்ய தயாராகிறான். சில குடும்பத்தில் வெறும் சிறுவர்களைத் தவிர யாருமில்லை. உடன் வாழ்ந்தோர் உடல்களைக் கூட அவர்களால் முழுமையாகப் பார்க்க இயலவில்லை. எல்லோரும் கதறுகிறார்கள். எல்லோரும் ஓடுகிறார்கள். எல்லோரும் சிதறுகிறார்கள். எல்லோரும் சிதைகிறார்கள். எல்லோரும் சாகிறார்கள். ஒரு சிலரே தப்பிக்கிறார்கள்.

தப்பித்தவர்களும் சிலருக்கு பயன்படுகிறார்கள். தப்பித்தால் தொடர்ந்து அவர்கள் பயன்படுவார்கள். காலி துப்பாக்கிகள் கிடந்த இடத்தில்தான் அவனுக்கு ஒரு பொம்மை கிடைத்தது.

வீட்டில் தனியாக இருக்கும் தங்கைக்குக் கொடுக்கலாம். அப்பா அம்மாவை இழந்து அழுதுக்கொண்டிருப்பவளுக்கு இந்தப் பொம்மை ஆறுதலைக் கொடுக்கட்டும். ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் அந்தப் பொம்மையையும் எடுத்தான்.

தங்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். சில அடிகள் எடுத்து வைக்கவும் பொம்மை அதிரவும், அது வெடித்து, அவனும் சிதறவும் சரியாக இருந்தது…..

தப்பித்தலும் காப்பாற்றுதலும்

இப்போதுதான் சத்தம் அடங்கியது. காலையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தங்கள், குண்டு வெடிப்பு சத்தங்கள், விமானங்களின் சத்தமென எங்களை பீதியாக்கிக் கொண்டிருந்தன. இது யுத்தகால ஓய்வு நேரம் போல, பெரியதொரு வெடி சத்தத்தைத் தொடர்ந்து மயான அமைதி நிலவிக்கொண்டிருக்கிறது.

யுத்தத்தின் சத்தத்தைவிட, அது தரும் திடீர் அமைதி அபாயமானது. உயிர் பயத்தை முழுமையாகக் காட்டக்கூடியது. ஓடும் திசை தெரியாமல் திக்கு முக்காட செய்வது. யாரெல்லாம் செத்துவிட்டார்கள் என காட்டிக்கொடுப்பது.

வெடிக்கும் சத்தத்தைவிடவும் அடுத்து எங்கே வெடிக்கும் என்கிற முன்னமைதி நிச்சயம் அபாயமானதுதான்.

என்னால் காப்பாற்ற முடிந்த மனைவியையும் பிள்ளையையும் இறுக்கப் பிடித்துக் கொண்டேன். வெளியில் எங்கும் செல்ல முடியாது. வாசலில் குவிந்து கிடக்கும் உறவினர்களின் சடலங்களை நாங்கள் மீண்டும் பார்க்க முடியாது.

பக்கத்துவிட்டு பையன் ஒருவன். அடைக்கலம் தேடி வந்தான். அவனைக் காணவில்லை. அவன் வீட்டார் வந்து கேட்டால் என்ன பதில் சொல்லட்டும். சொல்ல முடியும்.

என் மகளைக் காப்பாற்ற முடிந்த என்னால் ஏன் அந்தப் பையனைக் காப்பாற்ற முடியவில்லை. என் மனைவியைப் பாதுகாத்த என்னால் ஏன் உறவினர்களை பத்திரமாக இடம் மாற்ற முடியவில்லை. நான் முயலவில்லையா. இயலாமையா. சுயநலமா. நானும் மனிதன் தானா…..

அதோ மீண்டும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. யுத்தம் தொடங்கிவிட்டது.

இனி மனசாட்சியின் குரலுக்கு மதிப்பில்லை. அதற்கான பதிலும் தேவையில்லை. எப்படியாவது என் மனைவியையும் என் மகளையும் காப்பாற்ற வேண்டும். அதற்கு நான் ஏதும் செய்ய வேண்டும்…

பாப்பா

ஒரு வாரமாக வெளியே செல்ல முடியாதச் சூழல். யார் தலை தெரிந்தாலும் துப்பாக்கி சூட்டுக்கு இரையாகிடுவார்கள். பல கட்டிடங்களின் சுவர்கள் துப்பாக்கி சூட்டில் உடைந்தும் சிதைந்தும் போயிருக்கிறது. வலுவற்றச் சுவர்களைத் தாண்டியும் மறைந்திருந்தவர்களை குண்டுகள் துளைத்துள்ளன.

வீட்டில் இருந்த அவசரகால உணவுகள் முடிந்து இரண்டு நாள்கள் ஆகிவிட்டன. ஏதாவது கிடைத்தால் அதை சாப்பிடுவதற்கு ஏற்றதாய் அம்மாவால் மட்டுமே செய்ய முடியும். இத்தனை நாள்களாய் அப்பா இல்லாமல் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டவர்தானே அவர். ஏழு வயது மகன் இரண்டு வயது மகள். காணாமல் போன கணவன். சிறிய வட்டத்தையும் யுத்தம் சிதறடித்துவிடுகிறது.

நேற்றையத் துப்பாக்கி சூட்டில் பயந்து பதுங்கி உறங்கிப்போனவர்கள்தான். கண்களைத் திறக்கிறார்கள். பசி திறக்க வைக்கிறது.

“அம்மா பசிக்குது…. ஏதாச்சும் இருந்தா கொடுங்கம்மா… நேத்தும் ஒன்னும் சாப்டல.. தங்கச்சி பாப்பா இன்னும் தூங்குதுமா… அம்மா.. தங்கச்சி பாப்பா அசைய மாட்டுது… மா… பாப்பா அசையல.. பாப்பா….பாப்பா….பாப்பா.. அம்மா…இங்க வாங்க மா… பாப்பா….”

நேற்றையத் துப்பாக்கி சூட்டில், ஜன்னலைத் தாண்டி வந்த தோட்டா அம்மாவின் இதயத்தில் தஞ்சம் புகுந்துவிட்டதை யாராவது அந்தப் பையனிடம் சொல்லுங்கள். என்னால் சொல்ல முடியாது. சொல்லவே முடியாது…..

00

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *