காணாமல் போய் வந்தவைகள்

“வானத்துல போயிட்டிருந்துச்சுல்ல நிலா.. கொஞ்ச நேரத்திக்கி முன்னால  நாம தான பார்த்துட்டே படுத்திருந்தோம்.. இப்பக் காணம் பாரு. எங்க தாண்டா போயிருக்கும் அது பழனிவேலு?” என்று தன்னருகில் தலைக்கு தன் கையையே மடித்துக்கொடுத்து படுத்திருந்த சிங்காரவேலனிடம் பழனிவேலு கேட்டான்.

“என்னது.. நெலாவக்காணமா? பெரிய பிரச்சனையாயிரும்டா பழனிவேலு. போலீஸ் வந்து நம்மை விசாரணை போட்டாங்கன்னா நீ உளறிக்கொட்டீருவியே.. அவங்க வந்து கேட்டாக்க எதாச்சிம் புளியமரத்து வாதுல போயி அப்பீட்டு இருக்கும் போங்க சார்னு சொல்லிடு!”

“நிலாவக் காணம்னாக்கூட நம்மைத்தான் அரெஸ்ட் பண்ணுவாங்களாடா பழனிவேலு? ஊருக்குள்ள சுந்தரி காணமப்போனப்பக்கூட அப்பிடித்தான் என்னை வந்து நாலு ஊனு ஊனி ‘எங்கடா போயிருக்கா? சொல்றா சொல்றான்னானுங்க! அப்புறம் பார்த்தா நாலு நாள் கழிச்சி மறுக்கா வந்துட்டா! என்னன்னு போயி அவ அம்மாட்ட கேட்டா சிங்காரவேலனை கூட்டீட்டு ஓடீட்டா.. அப்புறம் அவனொரு மொக்கெ பீஸ்னு தெரிஞ்சுட்டு எம்புள்ள ஊட்டுக்கு வந்துட்டான்னா! ஏண்டா அவகூட அப்புடி எங்கதாண்டா போயி மொக்கை பீஸானே?”

“வெளியூரு பையன் ஒருத்தனை கட்டிக்கப்போறேன்.. சாட்சிக்கையெழுத்து போட வாடான்னு என்னை கூட்டிட்டு போனாடா.. கலியாணம் கட்டிக்கிட்டா.. இருந்து மூனு நாளைக்கி விருந்து சாப்டுட்டு போடான்னு அவ சொன்னங்காட்டி அங்கயே டேரா போட்டுட்டேன். மூனா நாளு ரெண்டு பேருக்குள்ள சண்டையாயிடுச்சு! ‘போடா நீயும் உம்படதும்னு’ சொல்லிட்டு என்னை நம்மூருக்கு கூட்டிட்டு வந்து நம்ம ராட்டெப்புளியா மரத்துக்கிட்ட உட்டுட்டு ‘நான் முன்னால் போறன்னுட்டு’ போயிட்டா!”

“அப்புறம் எதுக்கு அவங்கம்மா உன்னெ மொக்கெ பீசுன்னு ஊருக்குள்ள சொல்றா?’’

“அதெ அவகிட்டத்தாண்டா ஒருநாளைக்கி போயி ஊட்டுல உக்காந்து கேக்கணும்.. அங்க பாரு.. நெலா புளியமரத்துல இருந்து பிச்சுட்டு மேல வந்துருச்சு.. அப்பாடா கேஸ்ல மாட்டாம தப்பிச்சோம்டா பழனிவேலு! கடவுள் என்னிக்கிம் நம்ம கையுட மாட்டாருன்னு சொன்னன்ல அன்னிக்கே!”

000

மேரே சப்புநோக்கி

பழனிவேலுவும் சிங்காரவேலனும் நகர்ப்புறத்தில் பேக்கரி ஒன்றில் அமர்ந்தபடி சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்துக்கொண்டே லெமன் டீ குடித்துக்கொண்டிருந்தார்கள். சிங்காரவேலன் அடிக்கடி தன் பேண்ட் பாக்கெட்டை தடவிப்பார்த்துக்கொண்டான். வெளியில் நிற்கும் அவனது பைக்கின் சாவியை பத்திரமாய் எடுத்துக்கொண்டு வந்தோமா? மேல் பாக்கெட்டில் போட்டேனா.. பேண்ட் பாக்கெட்டில் போட்டேனா? இந்த எழவு இப்பெல்லாம் அடிக்கடி ஞாபக மறதிப்பிரச்சனையாய் இருக்குது.. குழப்பமாயிருந்தான்.

“ஏண்டா சிங்காரவேலா… அன்னிக்கி டெல்லிக்கி பெட்ஷீட் ஏவாரத்துக்கு போயிருந்தியே போன காரியம் சுபமா முடிஞ்சுதா? அங்கவேற தமிழ் பேசுறதுக்கு ஆக்களே இல்லியாமே.. ஹிந்தி தான பேசுவாங்க எல்லாரும். எப்பிடி நீயி ஒப்பேத்துனே?”

“அவனுங்க மூஞ்சைப்பார்த்தாவே கண்டுக்குவானுங்க.. தும்மார நாம் கியா? அப்படிம்பானுங்க.. ஹிந்தி மாலும் நஹி! அப்பிடிம்பேன். இப்ப நாம முன்னயிருந்து கிரிக்கெட் மேட்ச் பாக்குறம்ல.. அதுல இந்தீலதான் பேசுறானுங்க.. இப்பவும் நான் கிரிகெட்டை தமிழ்ல பாக்குறதில்லடா பழனிவேலு.. தமிழ்ல மனுசம் பாப்பானா கிரிக்கெட்டு? நம்ம தமிழே மறந்துல்ல போயிரும்! அந்தக்கொடுமைக்கி ஹிந்தீல பார்ப்பேன். ’ச்சார் ரன் கலியே!’ம்பான்.. நாலு ரன்னு அடிச்சிட்டான்னு அப்பவே திலுப்பித்திலுப்பி காட்டுறான்ல.. அப்பிடியே கால காலமா பார்த்து ஒவ்வொரு வார்த்தையும் இதான் சொல்லுது.. சொல்ல வருதுன்னு தெரிஞ்சிட்டேன்! போதும் போதும். கூடவே என்னோட அரைகுறை இங்கிலீஷ் இருக்கில்ல.. உலகம் பூராவும் போயிட்டு வருவேன்.. தெரிஞ்சிக்க!”

“புரோட்டா, பூரி தின்னா இந்தி தெரிஞ்சாத்தான் சால்னா நெறையா ஊத்துவாங்கனுங்களாமே அவனுங்க சர்வருங்க.. நீயி பூரில மேல ஓட்டை போட்டு உருளக்கிழங்கு சாம்பாரை அதுக்குள்ள ஊத்தச்சொல்லுவியே இங்கேல்லாம்.. அங்க போயி என்ன பண்டுனே சிங்காரவேலா?”

“ஊத்தச்சொன்னேன் அதே மாதிரி.. நஹின்னான்! இடுப்புல இருந்த சூரிக்கத்திய எடுத்து பிளேட்டுக்கு அடியில வெச்சேன்.. உண்டுனா இங்கத்த விட சாஸ்தியா ஊத்தீட்டு போயிட்டான்!”

“அப்புறம் அந்த மாதிரி எடத்துக்கு போனியா?”

“போனேன்.. ஓட்டப்பல்லி ஒருத்தி ஹிந்தீல ஆயிரம் ரூவாய்னா! நானு ரெண்டாயிரம் தான் குடுப்பேன்னு பிடிவாதமா நின்னேன். மேடம் சிரிச்சிட்டே ‘வாங்க போலாம்னு’ கூப்பிட்டா! ம்! கிசுக்கணும்.. நூறு ரூவா பெறாததுக்கு ரேட்டு ஆயிரமாம்! எனக்கு ஹிந்தி தெரியலைன்னு ஏமாத்தீருவாளாம் ஓட்டப்பல்லி.. சும்மா கூப்பிட்டா கூட போகமாட்டேன் நானு.. ‘பாஞ்ச் ரூபீஸ் தான் இருக்குன்னு’ மேல்பாக்கெட்ல இருந்து அஞ்சு ரூவா தாளை எடுத்து காட்டுனேன். கோவம் வந்துடுச்சாட்ட இருக்கு ஓட்டப்பல்லிக்கி.. மாதார் சோத்துன்னு கத்துனா! போடீ ஓட்டப்பல்லி.. அப்படின்னுட்டு வந்துட்டேன்..

இந்த ஏவாரத்தையே முடிச்சவன் என்னோட பெட்ஷீட் ஏவாரத்தை ஹிந்திக்காரனுங்ககிட்ட முடிக்காம ஊருக்குத்திரும்பி வந்துருவனா? பச்செப்புள்ளையாவே இருக்கேடா பழனிவேலு.. போலாம் நட! ஏடா ஏட்டா.. ரெண்டு சாயா!”

000

உருமாத்தம்

பழனிவேலு தன் எலக்ட்ரிக் பைக்கை வழக்கமான இடத்தில் நிறுத்திவிட்டு சீட்டைத்தூக்கி உள்ளிருந்த டம்ளரில் சரக்கை ஊற்றி.. கொண்டுவந்திருந்த தண்ணீர் கேனிலிருந்து தண்ணீர் கலந்து ஊற்றிக்கொண்டான். ஆங்காங்கே மரத்தடியில் சிலர் அமர்ந்திருந்தபடி சரக்கு குடித்துக்கொண்டிருந்தார்கள். பழனிவேலு கடைசிக்கட்டிங் அடித்தால் இடத்தை காலி செய்துவிடலாம்.

சற்று தூரத்தில் டிவிஎஸ் எக்ஸெல் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரக்கென சாய்ந்து விழுந்தது! போதை மிகுதியில் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்ற மனிதர் அப்படியே சாய்ந்துவிட்டார். வண்டி அவர்மேலா கிடக்கிறது? ஆங்காங்கே குடித்துக்கொண்டிருந்தவர்கள் அமைதியாக திரும்பிப்பார்த்துவிட்டு காரியத்தில் இருந்தார்கள். நான்கைந்து நாய்கள் வாலை ஆட்டிக்கொண்டே விழுந்தவரிடம் ஓடி வந்து சுற்றிலும் நின்றன. பழனிவேலு தன் அலைபேசியில் ஜூம் செய்து அதை போட்டோ எடுத்தான்.

பின்பாக கிழக்கேயிருந்து நான்கைந்து பேர் வந்து அவரை தூக்கிவிட்டு நாயம் போட்டுக்கொண்டிருந்தார்கள். நாய்கள் பின்பாக கலைந்து ஓடிவிட்டன. பழனிவேலு தன் கட்டிங்கை முடித்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு காடு தாண்டி அவர்களிடம் சென்றான். கீழே வீழ்ந்தவர் மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு செல்வதாக பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தார். ’அதெல்லா நீங்க இந்தக்கண்டிசன்ல போக முடியாதுங்க மாப்ளே.. உங்கூரு சின்னானை வரச்சொல்லிட்டோம்.. இப்ப வந்துருவான்”

”அவனை என்ன மசுத்துக்கு கூப்புட்டீங்க? வந்ததீம் சரக்கு வாங்கிக்குடுன்னு நிப்பான்! அவனுக்கு யாரு அவுக்கறது?”

“ஏப்பா.. நல்லநேரத்துல கீழ விழுந்து அடிபடாம எந்திருச்சிட்டே.. காலு கையில் போயிருந்தா ஆஸ்பத்திரீல கெடந்துட்டு அங்க கேட்ட காசை நீட்டுவேயில்ல.. உங்கூரு பையன் தானே.. ஒரு கோட்டரு அவனுக்கு வாங்கிக்குடுத்தா நல்லது தானப்பா!” என்று பொதுக்கருத்தை முன்மொழிந்தான் பழனிவேலு. நேரம் இருள் சூழ்ந்துகொண்டிருந்தது.

மற்றொருவர்.. ‘நீங்க எந்த ஊருங்கொ?’ என்று பழனிவேலிடம் கேட்க, போதையில் இருந்ததால் ‘ஒடீசா’ என்றான். ‘இந்தப்பக்கத்துல அப்பிடி ஓரு ஊருப்பேரை கேட்டதேயில்லீங்களே நானு.. நெடச்சிலாபாளையத்துக்கு பக்கமாக்கீது இருக்குங்ளா?..” ‘இரு.. ஒரு போனு வருது.. பேசீட்டு வந்து சொல்றேன்..” சற்றுத்தள்ளி வந்த பழனிவேலு நண்பரிடம் பேசி முடித்துவிட்டு செல்போனை வண்டியின் ஷீட்டை உயர்த்தி உள்ளே போட்டுவிட்டு வடக்கே திரும்பி தியானத்தில் நின்றான்.

சற்று நிமிடத்தில் அவன் நாயாய் உருமாறி வாலை ஆட்டிக்கொண்டு கிழக்கே ஓடினான். சக நாய்கள் நின்றிருந்த இடம் நோக்கி ஓடியவன்.. ’ஏப்பா ஒரு மனுசன் கீழ வுழுந்து அப்பிடிக்கிடக்கான்.. மளார்னு உட்டுப்போட்டு ஓடியாந்துட்டீங்களே!” என்றான்.

“மொத நீ யாரு? ஏரியாவுக்கு புதுசா வேற இருக்கே?”

“நானு யாரா இருந்தா என்ன.. ஒரு நன்னி விசுவாசம் வேண்டாமா? தெனமும் உங்களுக்குனு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிட்டு வந்து வீசுறன்ல.. அப்ப மட்டும் ஆளைக்கண்டா ஓடியாறீங்க? நான் கீழ விழுந்திருந்தாலும் நின்னு பார்த்துட்டு வயித்துக்கு ஏத்துனா செரியின்னு அடுத்த ஆளுங்ககிட்ட ஓடியாந்துடுவீங்க தானே?”

“கீழ வுழுந்தான்ல.. அவனும் நல்ல மனுசன் தான்.. சித்த நேரம் முந்தி எனக்கு மீன் சில்லிகூட போட்டான். கீழ வுழுந்துட்டான்.. நாமளா ஆஸ்பத்திரிக்கி கொண்டோயி சேக்க முடியும்? அதெல்லாம் அவனுங்க பார்த்துப்பானுங்க.. நீயி உம்பட சோலியப்போயி பாரு! வெட்டிநாயம் பேசீட்டு எங்க வயித்துல மண்ணைப்போட்டுடாதே.. பழனிவேலுதான நீயி.. இருட்டாயிருச்சு.. வண்டீல பார்த்து பதனமா நீ நொறுங்காம ஊடு போயிச்சேரு..”

000

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *