இரவு முழுக்க தூக்கமின்றி தவித்த வெள்ளத்தாயின் நெனப்பு முழுவதும் தன் பேத்தி சுமதிதான் நிறைஞ்சிருந்தாள். அவ இதுநாள் வர ஒருக்காக் கூட , “எனக்கு அது வேணும் ஆயா, இது வேணும் ஆயா”ன்னு கேட்டவளல்ல… ஆனா, ஏதோ படிக்க புஸ்தகம் வாங்கணும்னு “பதினஞ்சுரூபா வேணும் ஆயா” ன்னு இருந்திருந்து கேட்டுட்டதால, எப்படியும் கொடுக்கணும்ன்ற எண்ணத்தோடயே அன்னைக்கித்த வேலைக்குக் கிளம்பினாள் வெள்ளத்தாயி.

வெள்ளாத்தாயிக்கு ஒரேயொரு மவதான் மயிலி. அவ பொறந்ததுமே அவ அப்பன் போயிச் சேந்துட்டான். பெறகு வெள்ளத்தாயி தனியாளா ஆம்பள தொணையில்லாம கஷ்டப்பட்டு மவள வளர்த்து. அவளுக்கு நல்லயெடத்துல மாப்புள பார்த்து, நல்லபடியாவே கல்யாணத்த செஞ்சு வச்சா வெள்ளத்தாயி.

மகராசி மவ போன எடத்துல ஒரு சொல்லுப்படாம நல்லாப் பொழப்பா பொழைச்சாள், யாரு கண்ணுப் பட்டதோ… என்ன கெரகமோ..! தெரில..! மூணு பொண்ணுங்கள வரிசையாப் பெத்துப்போட்டுட்டு வேலைக்கிப் போன எடத்துல யான மிதுச்சுல செத்துப் போனாள்.

மருமவன் பேத்துகள நல்ல முறையில பார்த்துக்கிட்டாலும் கூட “ஆம்பள வளர்ப்புல புள்ளைங்க வாழ்க்க சுத்தப்படாது” ன்னு புள்ளைங்க நண்டும் சிண்டுமா இருக்கும்போதே அதுகள தூக்கிட்டு வந்தவ பெத்த புள்ளைக்கு மேலதான் பார்த்துக்கிட்டாள். அதுல பெரியவதான் சுமதி இப்ப பத்தாம் வகுப்பு படிக்குறாள். இளசுங்கள்ல வள்ளி எட்டாவதும், ராசாத்தி ஆறாவதும் படிக்குதுங்க.

முதுமை தன்னை முழுமையாக அரித்துத் தின்ற போதும் பேத்திகள கரையேத்த வெள்ளத்தாயி உசுரக் கொடுத்து வேல செய்வாள்.

என்னதான் கண்ணாளித் தனமா வேல செஞ்சாலும் வாசக்கூட்டற மாத்த வீட்டுக்குள்ளயா போடுவாங்க..! அப்படித்தான் வெள்ளத்தாயி பொழப்பும்.

நேரமே எழுந்தவ குப்பு கடல போயி டீயும் வருக்கியும் வாங்கிட்டு வந்து பேத்திகளுக்கும் கொடுத்து தின்ன வச்சிட்டு தானும் குடிச்சிட்டு முடியையும், ரவிக்கையையும் அள்ளி முடிஞ்சுக்கிட்டு ஓட்டமும் நடையுமாக மொதலாளி வீட்டப்பார்த்து நடந்தாள்.

“ஏய் எங்கத்தா போரவ..!” என முருகன் தாத்தா கூப்பிட்டது கூட காதுல விழாம போனவள, எதிரே வந்த ஒரு தொப்பிக் காரச் சிறுவன்தான் சொன்னான் ” ஏய் பாட்டி அந்த தாத்தா ஒன்னக் கூப்பிடறாரு”ன்னு.

“யாருப்பா..” என திரும்பிய வெள்ளத்தாயி ” என்ன மாமா… நீதேன் கூப்பிட்யாக்கு..”ன்னு கேக்க…

“ஆமாத்தா… நம்ம மொதலாளி வீடு குன்னூர்ல இருந்து வந்திருக்காக..!” என முருகன் தாத்தா சொன்னதும் ,

வெள்ளத்தாயின் நெனப்பிலிந்த பதினஞ்சு ரூபா துக்கம் கொஞ்சம் தணிஞ்சது “அட என்ங்க மாமா… மொதலாளி வூட்டுல ஏதும் விசேஷமா! ” என்றாள்.

“ஆமாடா ஆத்தா, நம்ம மொதலாளியோட கடசிப் பேரனுக்கு கல்யாணமாம்ல… சரி அதவிடு… இன்னேல இருந்து ஒரு மூணு நாளைக்கு நீ வந்து நரகல சுத்தம்பண்ணி விட்டுரு..!”ன்னு தன் மாறுகால் செருப்ப “தறக்குத்…. தறக்குத்… தறக்கு…” ன்னு இழுத்துக்கிட்டே வந்த வழியிலேயே நகர்ந்தாரு முருகன்.

வெள்ளத்தாயிக்கு ரொம்பவே சந்தோஷமா ஆகிச்சு. அவ தெனமும் சுத்தம் பண்ணப் போற மொதலாளி வீடுகளிலெல்லாம் மாசத்துக்கு ஒருக்காத்தான் கூலியேத் தருவாங்க, அப்படியே அவசரம்னாலும் இந்த வாரத்திக்கு யாரும் பதினஞ்சுரூவாலாம் தரமாட்டாங்கனு நெனைச்சிக்கிட்டு இருந்தவளுக்கு குன்னூர் மொதலாளிங்க வருகையென்னமோ பேரதிர்ஷ்டமாத்தான் பட்டுச்சு.

வேல மட்டுமல்லாம மொதலாளிமாருங்க கல்யாணங் காட்சினா நல்ல சோத்துக்கும் பஞ்சமிருக்காது.

தெனமும் காலையில நீசத்தண்ணிய குடிச்சிட்டுத்தான் வருவாள் வெள்ளத்தாயி. வந்ததும் எப்படியும் தம் வேலைகள முடிக்க உச்சி மத்தியானமாக்கிடும். மறுக்க மதியத்துக்கு மேல வேலைய ஆரம்பிச்சா எப்படியும் இருட்டிடும். ஆனால், இன்னிக்கின்னு காலேத்து வேலைய பத்துமணிக்கெல்லாம் முடிச்சிட்டாள்.

கூட்டி அள்ளுறதெல்லாம் வேகம், வேகமாச் செஞ்சாலும் நரகல ஊரடிலயோ, இல்ல ஊருக்குப் பக்கமா இருக்க கொளத்து மேட்டு ஓரத்துலயோ கொட்ட முடியாது. கூடை பிஞ்சு போயி தெரியாம கொட்டிட்டாக்கூட பக்கத்து வீட்டுக்காருங்க செருப்புப் பிய்யப் பிய்ய அடிச்சுப்போடுவாங்க… அதனாலயே, அந்த நரகல தன் சேலயிலயோ, துண்டுலயோ கட்டியாச்சும் செமந்து கொண்டுபோயி இருட்டுக்கொளம் பக்கமா யாருக்குந்தெரியாம கொட்டிட்டு வரணும். ஒரு நடை போயிட்டு வந்தாவே நாக்குத் தள்ளிடும்.

“என்னடா நம்ம பொழப்பு மயிறு”னு அப்பபோ வெள்ளத்தாயிக்கு தோணுச்சினாலும், தன் பேத்திங்கள நெனச்சிட்டா தான் சுமக்குறது மலம்னு தெரியாது. அந்த வாடையும் மணக்கும்.

எது, எப்படியோ குன்னூர் மொதலாளி வீட்டுக்கு போனமா, யார்ட்டயும் பேச்சக்கொடுக்காம சட்டு புட்டுன்னு வேலைய முடிச்சம்மா… காச வாங்கிட்டு பேத்திட்ட கொடுத்தோமான்னு இருக்கணும்…”ன்னே சென்று அங்கயும் தன் வேலையை படு வேகமாக முடித்தாள்.

பீயை அள்ளீட்டு போயி மட்டும் கொட்டுனா பத்தாது, சில்லாக்காரிங்க கொற சொல்லாத அளவுக்கு சுத்தமாவும் கூட்டி, அலசி விடனும்.

மத்தியானத்துக்கு மேல தொட்ட வேளைய முடிக்க வெள்ளத்தாயிக்கு சாய்ந்தரம் ஆகிவிட்டது. மனம் சுறுசுறுப்போடு இருந்தாலும் வழக்கத்துக்கும் மாறாக வெள்ளதாயின் உடல் வேர்த்து சூடாக இருந்தது.

” வா… வெள்ளத்தாயி… நல்லாயிருக்கயா..!” என்றவாறே பெரிய மொதலாளி அவளின் பக்கத்தில வந்தார்.

தலக் கிறுகிறுப்போடு “ம் ஏதோ உங்க புண்ணியத்துல இருக்கேன் சாமி..!” என்றாள்.

“இந்தா பத்துரூபா…” என நீட்டியவாறே, “நைட்டானதும் கொள்ளப் பக்கம் வந்துரு வெள்ளத்தாயி… அப்பறம், மிச்சமான சாப்பாட வாங்கீட்டு போயிரு..!”னு சொல்லிட்டே நகர்ந்தார் பெரிய மொதலாளி.

ஏக்கத்தோடு பத்துரூபாய வாங்கின வெள்ளத்தாயி… ” சாமி..!” ன்னு மொதலாளி காதுப் பட கூப்பாடு போட…

சிவந்த மொகத்தோடு திரும்பி ” அட என்னத்தா..!” என்றார் பெரிய மொதலாளி.

“இன்னும் அஞ்சு ரூபா சேர்த்துத் தந்தா நல்லா இருக்கும் சாமி.. எம்பேத்திக்கு படிக்க புஸ்தகம் ஒன்னு வாங்கணும்..!” ன்னு வெள்ளத்தாயி சொல்லச் சொல்ல

முழுசா காதுல வாங்கிக்கொள்ளாத பெரிய மொதலாளி ” ஏன் வெள்ளயம்மா நீயெல்லாம் மொகத்துக்கு நேரா சம்பளத்த சேத்திக் கேக்குற அளவுக்கு வந்துட்ட… உம்பேத்தி படிச்சு என்ன கலெக்டரா ஆகப் போறா..! ” என கடிந்தார்.

“சாமி… சாமி… புள்ள ரொம்ப ஆசப் பட்டு கேட்டா சாமி… பார்த்துக் கொடுங்க…” என வெள்ளத்தாயின் கெஞ்சலுக்கு ஊடாக

“என்னடா வம்பா போச்சு… வெள்ளயாத்தா இப்ப பேசாம போறயா… இல்லையா… இதுக்குத்தே அந்த பழனிமாவ கூப்பிடாமப் போச்சு..!” என முருகன் தன் மொதலாளிக்காக வால் ஆட்டினார்.

“சாமி… பெரிவக..!” என வெள்ளத்தாயி பேசப் பேச இடைமறித்த பெரிய மொதலாளி “யேய் பேச்சக் கொற வெள்ளயம்மா..!” ன்னு அஞ்சுரூவா நோட்டா தூக்கியெறிஞ்சிட்டு திரும்பிப் பாக்காம வீட்டுக்குள்ள போனாரு.

” ஒழைச்ச ஒழைப்புக்கு கூலி கேட்டா இவன் சொத்த எழுதிக் கேட்டது போல..! இந்தச் சீறு சீறுறான்… கீழ்சாதி… பீ அள்ளுறவள்னு எளக்காரமாபேசுறவனுக இடுப்பக் கிள்ளும்போதும், மொலைய அமுக்கும் மட்டும் கொஞ்சுறானுங்க…”னு சினத்தோடயே காச எடுத்து சுருக்குப் பையில போட்டுக்கிட்டு, தன்னோட பழுத்த கேசத்த அள்ளி முடிஞ்சி கட்டிக்கிட்டு, சாக்கெட்டு இல்லாத ரவிக்கையால தன்னுடைய ஒடம்ப மூடிக்கிட்டு மணமணக்கும் பிரியாணிச்சோத்த பொட்டலமாக் கட்டி தலையில வச்சி நடந்தவ கொஞ்ச தூரம்கூடப் போவள.! அவ மண்டை கிறு கிறுத்தது, கைகால்கள் வெட வெடத்தது, நிதானத்தை இழந்த வெள்ளத்தாயி மூச்சுப் பேச்சில்லாம விழுந்துவிட்டாள். அவள் கட்டி வச்சிருந்த பொட்டலச் சோற்றை இரண்டு நாய்களும், சில காக்கைளும் ருசிபார்க்கத்துவங்கின.

மணி அஞ்சாச்சு, ஆறாச்சு… புள்ளைங்க மூணும் பரிதவித்து வீதிலயே கண்ணவச்சுக் காத்திட்டு இருந்துச்சுங்க வெள்ளத்தாயின் வருகைக்காக… சுமதியின் கண்களெல்லாம் தான் வாங்கப்போகும் புஸ்தகம்தான் நிறைந்திருந்தது.

இளசுங்க ரெண்டுக்கும் பசி மயக்குத்துல ஆயா எப்ப வருவாளோ..! எப்ப நம்ம சாப்பிடவமோ..!”ன்னே கொலப் பசில துடிச்சிட்டு உக்காந்திருத்துச்சுங்க.

“தறக்கு… தறக்கு… தறக்கு”ன்னு யாரோ வர சத்தம் மட்டும் தூரமா கேக்குது… அதை கூர்ந்தும் ஆவலோடும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் பேத்திக மூவரும்.

வரது முருகன் தாத்தான்னு புள்ளைங்களுக்கு தெரிஞ்சதும் சின்னதுங்க ரெண்டு “ஆயாவக் காணோமே”ன்னு ஏக்கம் கொண்டாலும் பெரியவ சுமதிக்கு பயம் அதிகமானது.

முருகனுக்கு பின்னால நாலஞ்சு எளந்தாரிங்க யாரையோ தூக்கிட்டு வறமாதிரி தெரிஞ்சதுக்கு அப்புறமா ஓடினாள் சுமதி.

” ஒங்க ஆயா செத்துப் போயிட்டா..”ன்னு கூட்டத்தில ஒருந்து ஒருத்தர் கத்தினதுமே மயங்கி விழுந்தவதான். ரெண்டு நாள் கழிச்சுதான் சுய நெனவுக்கு வந்தாள். அதுக்கு அப்புறமா அவ வாழ்கைல நடக்கறது எதையுமே சுமதியால ஏத்துக்கவே முடில… கண்ணீர் ஒன்றுதான் அவளோட ஒரேயொரு ஆறுதல்.

இப்பபள்ளிக்கூடத்தை இடை நிறுத்திவிட்ட சுமதி இப்ப பழனியம்மா பின்னாலயே பீச் சட்டியத் தூக்கிட்டு வேகமா ஊரைத் தாண்டி கொளத்துக்குள்ளாற மெல்ல இறங்கிப்போய்க்கொண்டிருக்கிறாள்.

000

எஸ்.உதயபாலா ( 1992 )

தொடர்வண்டித் துறையில் தண்டவாளப் பராமரிப்பு பணியாளராக பணிசெய்து கொண்டிருக்கிறேன். கல்லூரி பருவத்திலிருந்தே எழுதத் துவங்கிய நான் இதுவரை நிலாச்சோறு,  லப் டப், முற்றுப்புள்ளி,  கீரனூர் சீமை, கருத்தீ ஆகிய ஐந்து கவிதைத் தொகுப்புகளையும் குடக்கூத்து என்ற ஒரு நாவலையும் எழுதியுள்ளேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *