உறக்கமற்ற இரவொன்றில்
கிட்டத்தட்ட மயங்கிய நிலையில்
வீட்டு வாசலில் ஒரு முதியவரைப் பார்த்தேன்.
தள்ளாடி உள்ளே வந்தவர்,
கணேசண்ணன் மகந்தான என்றதும்
எனக்கு அத்தனை ஆச்சர்யம்.
அப்பெல்லாம்
இந்தப் பாத்திரத்துல
எத்தன வீட்டுச் சாப்பாடிருக்கும் தெரியுமா?
ஒங்க அம்மா கமலாக்காவோட
மீன் கொழம்புக்கு தனி ருசிப்பா
கண்கள் மின்ன
வாயில் நீரொழுகச் சொன்னவரின் கையில்
வெற்று அலுமினியப் பாத்திரம்.
சாகற வயசா ஒங்கம்மாவுக்கு?
கடவுளுக்கு கண்ணில்லையப்பா
நிறைந்த கண்களோடு சொன்னவரின் கண்களின்
கால நிலை மாறி
சட்டென்று எரிந்தது குரோதம்
இந்தச் சனியந்தானப்பா
எங்களையெல்லாம் கொன்னது.
அவரின் விரல் நீண்ட திசையில்
மெல்ல உறுமியது குளிர்பதனப் பெட்டி
எங்கே அவர்?
அதிர்ந்ததொரு குரல்
ராப் பிச்ச வந்திருக்கேன் தாயி
சோறு,சாம்பார்,மீன் குழம்பு,ரசம் என
கலவையான மணம் சுவாசங்களில் நிறைய,
கையில் பாத்திரத்தோடு வரும்
அம்மாவைப் பார்த்தேன்.
ஜி சிவக்குமார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது மதுரையில் நீர்வளத் துறையில் உதவி இயக்குனராகப் பணி புரிந்து வருகிறார். கவிதைகள், சிறுகதைகள்
வெம்புகரி என்ற சிறுகதைத் தொகுப்பு மற்றும் புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை, ஆத்மாநாமின் கடவுள், தோடுடைய செவியள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்