சுந்தரபுரி என்பது ஒரு சிறிய நாடு. அது மகத நாட்டிற்குக் கட்டுப்பட்டு வெகு காலமாகக் கப்பம் கட்டி வந்தது. ஆயினும் சுந்தரபுரி நாட்டின் மன்னன் ராஜ சிம்மன் மிகுந்த சுதந்திர உணர்வு கொண்டவன். வேறொரு நாட்டிற்கு அடிமைப்பட்டு கப்பம் கட்டுவதை அறவே வெறுத்தான்.

எனவே அவன் தன் அமைச்சர்களை அழைத்துக் கப்பம் கட்டுவதை நிறுத்தி விடுவது குறித்து தீவிரமாக ஆலோசித்தான். அமைச்சர்களும் அக்கருத்தை ஆமோதித்தார்கள். ஆகையால் இனி மகதநாட்டிற்குக் கப்பம் கட்டுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.

உரிய காலத்தில் சுந்தரபுரி நாட்டிலிருந்து கப்பம் வராததைக் கண்டதும் மகதநாட்டு மன்னன் தன் தளபதியை அழைத்து, “உடனே ஒரு பெரும் படையுடன் சுந்தரபுரி நாட்டிற்குச் செல்லும். நமக்கு சேரவேண்டிய கப்பத்தைக் கேளும். கொடுத்தால் சரி. இல்லாவிட்டால் ஆணவம் பிடித்த அந்த மன்னனைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு அந் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளும்” என்று கடுமையாக உத்தர விட்டான்.

அத்தளபதியின் பெயர் வக்கிரநாதன் என்பதாகும். அவன் மகாக் கொடியவன். மகத நாட்டு மன்னன் சுந்ததரபுரி மீது படையெடுக்கச் சொன்னதும் அவன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். மன்னன் குறிப்பிட்டதை விட இரண்டு மடங்கு பெரியதான படையை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

அக் கொடியவன் சுந்தரபுரி நாட்டை அடைந்ததும் அந்நாட்டு மன்னனிடம் சென்று கப்பம் எதுவும் கேட்கவில்லை. அந்நாட்டின் அரசாட்சியைக் கைப்பற்றும்படி தன் படைகளுக்கு உத்தரவிட்டான்.

மகதநாட்டுப்படை சுந்தரநாட்டுப் படையை விட பத்து மடங்கு பெரியதாக இருந்தது. எனவே அது வெகு சுலபமாக சுந்தரபுரியை அடிமைப்படுத்திக் கொண்டது.

கொடிய தளபதி வக்கிரநாதன் மன்னன் ராஜசிம்மனையும், அரசியையும் சிறையில் தள்ளினான். அவர்களுடைய ஒரே புதல்வியான இளவரசி கலாவல்லியை ஒரு மலையின் உச்சியிலிருந்து கீழேயுள்ள கடலில் வீசச் செய்தான்.

அதிர்ஷ்டவசமாக அவள் விழுந்த இடத்தில் ஆழம் அதிகமிருந்ததால் அவளுக்கு மரணம் ஏற்படவில்லை. திடீரென்று தனக்கும், தன் பெற்றோருக்கும் இப்படிப்பட்ட பயங்கர ஆபத்து ஏற்படுமென்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. விதியின் கொடுமையை எண்ணி மனம்நொந்தபடி அவள் கடலில் நீந்திச்செல்லலானாள்.

கடலின் இருபுறங்களிலும் கரைகள் தெரிந்தன. ஆனால் கரையேறினால் மீண்டும் கொடிய தளபதி வக்கிரநாதனின் ஆட்களிடம் தானே சிக்கிக்கொள்ள வேண்டும்? அவ்வாறு மீண்டும் சிக்கிக்கொண்டால் தளபதி தன்னைக் கொல்லாமல் விடமாட்டான் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள்.

ஆகையால் கடலில் நீந்திச்சென்றே அந்நாட்டின் எல்லைப் பகுதியைக் கடந்துச் சென்று வேறு ஏதாவது பாதுகாப்பான இடத்தை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் கடலில் வேகமாக அவள் நீந்தினாள்.

ஆனால் போகப் போக கடல் விரிந்துகொண்டே சென்றது. கண்களுக்குத் தென்படாத தூரத்தில் கரைகள் போய்விட்டன. அத்துடன் கடலிலும் பயங்கரமாக அலைகள் எழுந்தன.

அவற்றையெல்லாம் கவனித்ததும் இளவரசி கலாவல்லி பெரும் திகிலில் ஆழ்ந்தாள். தன்னால் கடலிலிருந்து கரை சேர முடியுமாவென்பதே அவளுக்கு சந்தேகமாகப் போய்விட்டது. மேலும் அவள் வெகு வேகமாக நீந்திக்கொண்டிருந்ததால் கைகள் சோர்வடைந்து போயின. தான் அக் கடலிலேயே மூழ்கி உயிர் துறக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு அவள் வந்தபோது… அதிர்ஷ்டவசமாக சிறிது தூரத்தில் ஒரு கப்பல் வருவது தெரிந்தது.

இளவரசி கலாவல்லி அளவற்ற மகிழ்ச்சி அடைந்தவளாக, “உதவி! உதவி! காப்பாற்றுங்கள்!” என்று கூவினாள்.

அது கப்பலிலிருந்தவர்களின் காதுகளில் விழவில்லை என்றாலும் நல்ல காலமாகக் கடலில் ஓர் இளம் பெண் தவித்துக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்து விட்டார்கள்.

அது ஒரு வியாபாரக் கப்பலாகும்.அக்கப்பலிலுள்ள மாலுமிகளின் தலைவன் கப்பலைக் கலாவல்லியினருகே செலுத்தினான். பிறகு அவனே கடலில் குதித்து கலாவல்லியை தூக்கிக் கொண்டு கப்பலுக்கு வந்து சேர்ந்தான்.

அக் கப்பலிலுள்ளவர்களிடம் கலாவல்லி தன் துயரக் கதையைக் கூறினாள். அதைக் கேட்டு அவர்களும் மிகுந்த பரிதாபமடைந்தார்கள். வெகு தூரத்திற்கப்பால் இருக்கும் சுண்டைக்காய்த் தீவிற்குத்தான் அக் கப்பல் போய்க் கொண்டிருப்பதாகவும் அத்தீவின் மன்னன் மிகுந்த இரக்க சித்தம் கொண்டவன் என்றும் அக்கப்பலின் மாலுமி கூறினான். அவனிடம் சென்று இளவரசி கலாவல்லி உதவிகோரினால் நிச்சயமாக, ஒரு பெரும் படையை அவளுடன் அம் மன்னன் அனுப்பி வைப்பான் என்றும் அவன் யோசனை தெரிவித்தான்.

அந்த யோசனையை ஏற்றுக் கொண்ட கலாவல்லி, அவர்களுடன் சுண்டைக்காய்த் தீவிற்குச் செல்வதென்ற முடிவிற்கு வந்து அவர்களுடன் பிரயாணம் செய்யலானாள்,

அவ்வியாபாரக் கப்பல் சுண்டைக்காய்த் தீவை நோக்கி மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது.

ஆனால் இரண்டு நாள் பயணத்திலேயே அது ஒரு மாபெரும் ஆபத்தைச் சந்திக்க வேண்டியதாகி விட்டது. அதாவது திடீரென்று வானம் கறுத்து மழை பெய்யவாரம்பித்தது. அத்துடன் பெரும் புயலும் வீசத் தொடங்கி விட்டதால் சிறிய வியாபாரக் கப்பல் நடுக் கடலில் சிக்கித் தத்தளிக்கத் தொடங்கியது.

புயலின் வேகம் மிகவும் அதிகமாகி விடவே அதன் வேகத்தைத் தாங்க முடியாமல் அக்கப்பல் டமாரென்ற பெரும் ஓசையுடன் இரண்டாகப் பிளந்து கொண்டது!

கப்பலிலிருந்தவர்கள் அனைவரும் கடலுக்குள் தூக்கி எறியப் பட்டார்கள். கலாவல்லி சட்டென்று கப்பலிலிருந்து சிதறிய பெரிய மரக்கட்டை ஒன்றை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

அச்சமயத்தில் கடலிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு மாபெரும் அலைகள் எழுந்தன. அவை கலாவல்லியை மட்டும் எங்கோ இழுத்துச் சென்றன. கடலின் கொந்தளிப்பு அடங்கியபோது தான் வெகு தூரத்திற்கப்பால் வந்து விட்டதை அவள் உணர்ந்தாள்.

வியாபாரக் கப்பலிலிருந்தவர்கள் பிழைத்துக் கொண்டு தன்னைப்போல் மரக்கட்டையைப் பற்றிக் கொண்டு கடலில் நீந்திக் கொண்டிருக்கிறார்களா அல்லது கடலில் மூழ்கிச் செத்துப் போனார்களா என்பதை அவளால் அறிந்துகொள்ள முடியவில்லை. அவள் மிகுந்த விசனத்துடன் மரக்கட்டையைப் பிடித்த வண்ணம் நீந்தலானாள்.

இரு தினங்களுக்குப் பிறகு கடலில் மெல்லிய அலைகளின் துணையுடன் ஒரு தீவின் கரையை அடைந்தாள். அத்தீவு மிகவும் அழகாகக் காணப்பட்டது. எங்கும் உயரமான மரங்களும், காட்டு மலர்கள் மலர்ந்திருக்கும் ராட்சஸச் செடிகளும் தென்பட்டன.

கரையேறித் தீவிற்குள் வந்த கலாவல்லி, அங்கே மனிதர்களே வாசம் செய்யாததுபோல் ஒருவித அமைதி நிலவுவதைக் கண்டு வியப்படைந்தாள். ஒருக்கால் கொடிய மிருகங்கள் மட்டுமே வாழக்கூடிய தீவிற்குத் தான் வந்துவிட்டோமோவென்ற சந்தேகமும் அவளுக்கு உண்டாயிற்று.

அவளுக்குக் களைப்பு மிகவும் அதிகமாயிருந்தது. எனவே அவள் ஓரிடத்தில் அமர்ந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டாள்.

அப்போது திடீரென்று மெல்லிய குரல்கள் கசமுச வென்று ஒலிப்பதை அவள் காதுகள் கவனித்தன. அவள் ஆச்சரியத்துடன் சுற்றிலும் பார்த்தாள்.

என்ன ஆச்சரியம்! ஓரடி உயரமுள்ள மூன்று குள்ளர்கள் அவளை நோக்கி வெகு வேகமாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் இருவருடைய கைகளில் மட்டும் இரு சிறிய வேல்கள் இருந்தன.

கலாவல்லி அதுவரை குள்ளர்களை நேரில் பார்த்ததில்லை. எனவே அவள் அவர்களை அளவுகடந்த வியப்புடன் நோக்கினாள். இதற்குள் அந்த மூன்று குள்ளர்களும் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆனால் அவளுக்கு எவ்விதத் தீங்கும் செய்ய முயலாமல் அவளை திகிலுடன் நோக்கினார்கள்.

அவர்களில் ஒருவன் அவளிடம், “நீ…நீ ராட்சஸப் பெண்ணா?” என்று தயக்கத்துடன் கேட்டான்.

அதைக் கேட்டதும் கலாவல்லி புன்முறுவலுடன், “குள்ளண்ணா! இதுவரை நீங்கள் மானிடப் பெண்ணையே பார்த்ததில்லையா? நானும் உங்களைப்போல் மானிட வர்க்கத்தைச் சேர்ந்தவள் தான்!” என்றாள்.

அந்த மூன்று குள்ளர்களின் விழிகளும் வியப்பால் விரிந்தன. “அப்படியானால் நீ எங்களை விழுங்குவதற்காக வந்தவள் இல்லையா?” என்று கேட்டார்கள்.

‘அதைக் கேட்டதும் யாரோ ராட்சஸர்கள் அவர்களை விழுங்கி அழிவை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவள் புரிந்து கொண்டாள். அவள் கனிவுடன் அவர்களை நோக்கி, “எனக்குக் காய்கனிகளை விழுங்கித்தான் பழக்கமே தவிர குள்ளண்ணாக்களை யெல்லாம் விழுங்கிப் பழக்கம் இல்லை” என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.

“அப்படியானால் நீ யார்? எங்கள் தீவிற்கு எப்படி வந்தாய்?’ என்று ஒரு குள்ளன் கேட்டான்.

அதன்பின் கலாவல்லி தன் துயரக் கதையையும், தான் பயணம் செய்த கப்பல் உடைந்து அலைகளால் அத்தீவிற்கு ஒதுக்கப்பட்டதையும் சுருக்கமாகக் கூறினாள்.

அதைக் கேட்டதும் மூன்று குள்ளர்களும், “அடடா! நீ ஒரு நாட்டின் இளவரசியா?” என்று பரபரப்புடன் கேட்டபடி மிகுந்த பணிவுடன் சற்று தள்ளி நின்று கொண்டார்கள்.

உடனே இளவரசி கலாவல்லி, “குள்ளண்ணாக்களே! எனக்கு இந்த மரியாதையெல்லாம் வேண்டாம். இது எனக்குப்பிடிக்காது. என்னை உங்கள் தங்கையாக நினைத்து அன்பு செலுத்துங்கள். அதைத்தான் நான் விரும்புகிறேன்!” என்றாள்.

கலாவல்லி கூறியதைக் கேட்டதும் மூன்று குள்ளர்களும் உற்சாகத்துடன் மீண்டும் அவளருகே வந்தார்கள். “தங்கச்சி! நீ இவ்வாறு கூறுவது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எங்கள் மன்னர் உன்னைக் கண்டால் மிகுந்த சந்தோஷமடைவார். புறப்படு அவரிடம் செல்வோம்” என்று சொன்னார்கள்.

இளவரசி கலாவல்லியும் அதற்கு ஒப்புக்கொண்டு அக் குள்ளர்களுடன் கிளம்பினாள். குள்ளர்கள் அவளை அத்தீவின் வழியே அழைத்துச் சென்றார்கள். ஆங்காங்கே மிகவும் சிறியதாகக் காணப்பட்ட குள்ளர்களின் குடிசைகள் அவளுக்கு விசித்திரமாகத் தோன்றின. அவளைக் கண்டதும் மற்ற குள்ளர்களும், குள்ளப் பெண்களும் மிகுந்த பீதியுடன் ஓட்டம் பிடிக்கப் பார்த்தார்கள்.

ஆனால் அதற்குள் மூன்று குள்ளர்களும் ஓடிச்சென்று கலாவல்லி மானிடப்பெண் தான் என்பதையும், அவளால் தங்களுக்கு ஆபத்து எதுவும் ஏற்படாது என்பதையும் எடுத்துக்கூறி அவர்கள் பயத்தைப் போக்கினார்கள். அதன் பிறகே அத்தீவு மக்கள் கொஞ்சம் தைரியமாக அவளருகே வந்து அவளை விசித்திரமாகப் பார்த்தார்கள்.

மூன்று குள்ளர்களும் கலாவல்லியை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். அத்தீவின் மன்னன் அவளை அன்புடன் வரவேற்று உண்பதற்கு பல்வகையான கனிகளைக் கொடுத்தான்.

அதன்பின் இளவரசி கலாவல்லி அம்மன்னனிடம் “என்னை முதலில் கண்டதும் இந்த குள்ளண்ணாக்கள் மிகவும் பயந்துபோய் விட்டார்கள். அவர்களை விழுங்க வந்திருக்கும் ராட்சஸப் பெண்ணோ வென்று நினைத்து விட்டார்கள். உண்மையிலேயே அவ்வாறு யாரேனும் இத்தீவு மக்களை விழுங்கியிருக்கிறார்களா?” எனக் கேட்டாள்.

மறுகணம் குள்ளர் மன்னன் முகத்தில் பெரும் சோகம் படர்ந்தது. “இளவரசி! அந்தத் துயரத்தை ஏன் கேட்கிறாய்? இத்தீவின் வடக்குக் கோடியில் கொக்குத்தலை ராட்சஸன் ஒருவன் வாழ்ந்து வருகிறான். அவன் சில தினங்களுக்கு ஒருமுறை தீவிற்குள் வந்து எங்களில் சிலரை விழுங்கித் தன் பசியைப் போக்கிக் கொள்வான். அந்த அக்கிரமத்தைத் தடுக்க எங்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை!” என்று நீண்ட பெருமூச்சு விட்டபடி கூறினான்.

அதைக் கேட்டதும் இளவரசி திடுக்கிட்டாள். “ஆ! என்ன கொடுமை இது? இதை ஒழிக்க ஒரு வழியும் இல்லையா?” என்று பதட்டத்துடன் கேட்டாள்.

“இருக்கிறது. ஆனால் அதை எங்களால் செய்ய முடியாது” என்று கூறிய மன்னன், “எனது முப்பாட்டனார் மந்திரக் கலையில் வல்லவராக இருந்தார். அவர் சிறிது காலம் ஒரு மலைக் குகையில் வாழ்ந்து வந்தார். அக் குகையைப் பத்திரமாக மூடி வைத்திருக்கிறோம். அதனுள்ளே ஒரு மந்திரவேல் இருக்கிறது. அது நீதியின் துணைவன். அக்கிரமத்தின் எதிரி. கொடுமை புரிபவர்கள் மீது அதை ஏவி விட்டால் நிச்சயமாக அது அவர்களை அழித்து விடும். ஆனால் அந்த மந்திரவேல் பிரம்மாண்டமானது. அதைத் தூக்கி வரும் சக்தி எங்களுக்கு இல்லை!” என்றான்.

கலாவல்லி சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, “மன்னா! அந்த மந்திரவேலை எனக்குக் கொஞ்சம் காட்டுங்கள்!” எனக் கேட்டுக்கொண்டாள்.

மன்னனும் மகிழ்ச்சியுடன் அதற்கு சம்மதித்து அவனுடைய முப்பாட்டனார் வாழ்ந்து வந்த குகைக்குக் கலாவல்லியை அழைத்துச் சென்றான். அக் குகையை மூடிக்கொண்டிருந்த பாறை அப்புறப்படுத்தப்பட்டது. கலாவல்லி உள்ளே சென்றாள்.

குகையினுள்ளே ஒரு பெரிய மேடை காணப்பட்டது. அதன் மீது மந்திரவேல் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது குள்ளர்களுக்கு பிரம்மாண்டமானதாக இருந்தாலும் அவளுக்குச் சாதாரணமாகவே தோன்றியது. அவள் மேடையினருகே சென்று மந்திரவேலைத் தூக்கிப் பார்த்தாள்.

அது கொஞ்சம் கனமாக இருந்தாலும் அவளால் அதைத் தூக்க முடிந்தது!

அதைக் கண்டதும் குள்ளர் மன்னனும், மற்ற குள்ளர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் புரிந்தார்கள். குள்ளர் மன்னர் கலாவல்லியிடம், “இளவரசி! கொக்குத் தலை ராட்சஸன் உன்னால் அழிய வேண்டுமென்று விதி இருக்கிறது. அதனால்தான் உன்னால் மந்திரவேலைத் தூக்க முடிகிறது. எப்படியாவது அக்கொடிய ராட்சஸனை அழித்து எங்களைக் காப்பாற்று!” என்று கேட்டுக் கொண்டான்.

இளவரசி கலாவல்லியும் உடனே மந்திரவேலை எடுத்துக்கொண்டு தீவின் வடக்குப்பகுதிக்குப் போய்ச் சேர்ந்தாள். அவளைக் கண்டதும் கொக்குத் தலை ராட்சஸன் ஆங்காரத்துடன் உறுமிக்கொண்டு ஓடிவந்தான்.

“இத்தனை நாட்களும் இந்தக் குள்ளர்களைத்தான் நான் விழுங்கி வந்தேன். என் வயிறே நிரம்பவில்லை. இப்போது நீ வந்திருக்கிறாய். இன்று எனக்கு சரியான வேட்டை. நீ இளம்பெண். உன் எலும்புகள் கடித்துத் தின்பதற்கு மிக்க சுவையாக இருக்கும். உன்னை இப்போதே மென்று தின்று என் வயிறை நிரப்பிக்கொள்கிறேன்!” என்று கொக்கரித்தான்.

ஆனால் இளவரசி கலாவல்லி கொஞ்சமும் பயப்படவில்லை. அவள் கம்பீரமாக, “ஆணவம் பிடித்த கொக்குத்தலை ராட்சஸனே! இத்தனை நாட்களாக இந்த அப்பாவிக் குள்ளர்களை அநியாயமாகப் பிடித்து விழுங்கி வந்திருக்கிறாய். ஆனால் உன் ஜம்பம் என்னிடம் சாயாது. உன் அக்கிரமத்திற்கு ஒரு முடிவு கட்டுவதற்காகவே இன்று புறப்பட்டு வந்திருக்கிறேன். உன் உயிரைப் பலிகொள்ளாமல் இங்கிருந்து செல்லப் போவதில்லை!” என்று ஆவேசமாக முழங்கினாள்.

அதைக் கேட்டு கொக்குத் தலை ராட்சஸன் ஒரு கணம் திகைத்துப் போனான். அதுவரை இம்மாதிரி யாரும் அவனை எதிர்த்துப் பேசியதில்லை. அவனுக்கு பிரமிப்பாகவும் இருந்தது. அதே சமயம் ஆத்திரமும் பீறிக்கொண்டு வந்தது.

அவன் விழிகள் சிவக்க இரு கைகளையும் உயர்த்திக்கொண்டு, “அற்ப மானிடப்பெண்ணே! இப்போதே உன்னைக் கொன்று உன் கொட்டத்தை அடக்குகிறேன்!” என்று கர்ஜித்தபடி இளவரசி கலாவல்லியை நோக்கி ஓடி வந்தான்.

அவன் அருகே வரும்வரை அமைதியாக இருந்த கலாவல்லி, கொக்குத் தலை ராட்சஸன் அருகே வந்ததும் மின்னல் வேகத்தில் தன் கையிலிருந்த மந்திர வேலை அவனுடைய கழுத்தில் பாய்ச்சினாள்.

கொக்குத்தலை ராட்சஸன் பயங்கரமாக அலறியபடி கீழே விழுந்தான். அப்படியும் அவனுடைய உயிர் போகவில்லை. கலாவல்லி மீண்டும் மந்திரவேலை அவன் கழுத்தில் செருகினாள். அதன் பிறகே அவன் தீனமாக முனகியபடி உயிர் துறந்தான்.

அதைப் பார்க்க கலாவல்லிக்குப் பரிதாபமாக இருந்தாலும் ஏதுமறியாத அப்பாவி குள்ளர்களை அக்கிரமமாக விழுங்கி வந்த ராட்சஸனுக்கு இது சரியான தண்டனைதான் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அப்போது திடீரென்று தன் தலைக்குமேல் ஏதோ நிழல் படர்வதை அவள் உணர்ந்தாள். உடனே திடுக்கிட்டுப்போய் நிமிர்ந்தாள். அவள் தலைக்குமேல் நாலைந்து ராட்சஸக் கழுகுகள் வட்டமிட்டுக் கொண் டிருந்தன.

அவற்றைப் பார்த்ததும் கலாவல்லிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஏனென்றால் மந்திரவேல் கொக்குத் தலை ராட்சஸனின் உடலில் பாய்ந்த நிலையில் இருந்தது. அதைப்பிடுங்கி வந்து அந்த ராட்சஸக் கழுகுகளைக்கொன்று விடலாமாவென்று யோசித்தாள்.

ஆனால் அந்த ராட்சஸக் கழுகுகள் கொக்குத் தலை ராட்சஸனின் பிரம்மாண்டமான உடலைத் தின்று தங்கள் பசியைப் போக்கிக் கொள்வதற்காக வந்திருக்கலாமென்று அவளுக்குத் தோன்றியது.

எனவே விரைந்து சென்று ராட்சஸனின் உடலில் பாய்ந்திருந்த மந்திரவேலைப் பிடுங்கிக்கொண்டு அந்த உடலை இழுத்து அப்பால் போட்டாள். ராட்சஸக் கழுகுகளும் உடனே கீழிறங்கி அந்த பிரம்மாண்டமான உடலைக் கொத்திச் சாப்பிடவாரம்பித்தன.

அதன்பின் கலாவல்லி குள்ளர் மன்னரிடம் சென்று கொக்குத் தலை ராட்சஸன் இறந்துவிட்ட விவரத்தைக் கூறினாள். அதைக் கேட்டதும் மன்னனும் மற்ற குள்ளர்களும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். தங்களை மாபெரும் அழிவிலிருந்து காப்பாற்றிய கலாவல்லிக்குப் பலவாறாக நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

இளவரசி கலாவல்லி சிறிது தினங்கள் வரை அக்குள்ளர்களுடனேயே தங்கி இருந்தாள். பிறகு தன்நாட்டிற்குச் செல்ல விரும்புவதாகக் குள்ளர் மன்னனிடம் தெரிவித்தாள்.

அதைக் கேட்ட குள்ளர் மன்னனும் அவள் பிரயாணம் செய்வதற்காக ஒரு கப்பலைக் கட்டித் தந்தான். பிறகு ஒரு சிமிழை எடுத்து கலாவல்லியிடம் கொடுத்து “இளவரசி! இதில் எங்கள் மூதாதையர் மிகுந்த பத்திரமாகப் பாதுகாத்து வந்த மந்திரத் திருநீறு இருக்கிறது. இதை யார்மீதாவது போட்டால் அவர்கள் சுண்டெலியாக மாறிவிடுவார்கள். மீண்டும் அவர்கள் சுயவுருவம் அடைய வேண்டுமென்றால் மீண்டும் இறைவனைத் தியானித்து இந்த மந்திரத் திருநீறைப் போட வேண்டும். உடனே அவர்களுக்கு சுய உருவம் வந்துவிடும்!” என்றான்.

இளவரசி கலாவல்லியும் குள்ளர்களிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சில தினங்களில் தன் நாட்டிற்கு வந்து சேர்ந்தாள். நேராக அரண்மனைக்குச் சென்று தளபதி வக்கிரநாதன் மீது மந்திரத் திருநீரைப் போட்டாள். உடனே அவன் சுண்டெலியாகி விட்டான்!

பிறகு கலாவல்லி சிறையிலிருந்த தன் பெற்றோர்களை விடுவித்தாள். அவள் தந்தை ராஜசிம்மன் மீண்டும் அந்நாட்டின் மன்னனானான்.

இதையறிந்து அளவற்ற ஆவேசமடைந்த மகத நாட்டு மன்னன் ஒரு பெரும் படையுடன் சுந்தரபுரி நாட்டின்மீது போர் தொடுத்தான். ஆனால் கலாவல்லி மந்திரத் திருநீறுடன் நேராக அவனிடம் சென்று, ‘மன்னா! இனி எங்கள் நாடு எந்த நாட்டிற்கும் கப்பம் செலுத்தாது. இது சுதந்திர நாடு. நீங்கள் மரியாதையாகத் திரும்பிச் சென்று விடுங்கள். இல்லாவிட்டால் இந்த மந்திரத் திருநீறை வீசி உங்கள் அனைவரையுமே சுண்டெலிகளாக்கி விடுவேன்!” என்று முறுத்தினாள்.

அதைக் கேட்டு பயந்துபோன மகத மன்னனும் பேசாமல் தன் படையுடன் திரும்பிச் சென்றான். இளவரசி கலாவல்லி தன் பெற்றோருடன் சுகமாக வாழ்ந்து வரலானாள்.

+++

இளையராஜா (1975)

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *