சிகாகோ ஏர்போர்ட் நுழைவு வாயிலில் வந்து நின்ற காரிலிருந்து பரத் இறங்கினான். பயணிகளை உதிர்த்துச் செல்ல இரண்டு நிமிடமே அனுமதிக்கப் பட்டிருக்க, வேகமாக சென்று டிக்கியை திறந்து டிராலி பேக்கை எடுத்தான். பின் சீட்டு கண்ணாடியருகே குனிய, டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த மனைவி வர்ஷா கண்ணாடியைக் கீழிறக்கினாள். சீட் பெல்ட்டுடன் அமர்ந்திருந்த ஆறு வயது மகனின் தலையைக் கலைத்து விட்டு, இரண்டு வயது மகளின் கன்னத்தைக் கிள்ளி விட்டு ‘பீ குட்” என்றான். பொம்மைகள் போல இருவரும் கையசைத்தனர்.
“பாய்” என்று மனைவியை நோக்கி கையசைக்க, “இந்தியாவில் கொரோனா இன்னும் முடியலையாம். பாத்து இருங்க. கால் பண்ணுங்க” என்றாள் ஆயிரமாவது முறையாய்.
தம்ஸ் அப் காட்டிவிட்டு செக்யூரிட்டியை நோக்கி நடந்தான். பாஸ்போர்ட், பிளைட் டிக்கெட், ஐடி கார்டுடன் கொரோனா நெகடிவ் சர்டிபிகேட்டைக் காட்டி உடல் பரிசோதனைகளைக் கடந்து ஏர்போர்ட் என்ற கண்ணாடி உலகினுள் நுழைந்தான்.
மெல்லிய குளிரும் மெட்டல் குரலும் வரவேற்க, எழுத்துகள் வரிவரியாய் உருண்டு கொண்டிருந்தன. உதடுகள் ஏகமாய்ச் சிவந்திருந்த பெண்ணிடம் டிக்கெட்டை காட்டி, இமிக்ரேஷனைக் கடந்து ஏர் இந்தியா பிளேனுக்குள் ஏறுவதற்கு இரண்டு மணி நேரம் ஆனது. பொம்மைகளைப் போலிருந்த பெண்கள் பிளேன் வெடித்தால் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்க, சீட்டைச் சரித்து சாய்ந்து அமர்ந்தான். இடப்புற வரிசையில் அமர்ந்திருந்த முதிய பெண் அவனது அம்மா சுஜாதா போலிருக்க மனம் திடுக்கென்றது. அம்மாவிடம் இரண்டு வருடங்கள் எப்படி பேசாமல் இருந்தோமென்று நினைக்க, அவன் மீதே வெறுப்பாய் இருந்தது.
—
மெதுவாக நடந்து ஈசி சேரில் அமர்ந்த சுஜாதாவிற்கு வயது 65 இருக்கும். வயதுக்கு மீறிய தளர்வை மனம் தந்திருந்தது. சென்னை கொளத்தூரிலிருந்த வால்கிரீன் அபார்ட்மெண்டின் முப்பதாவது மாடியில் அவளது வீடு இருந்தது. ஜன்னலுக்கு வெளியே வானம் கடல் போல் பரவியிருக்க, மேகம் அலையடித்துக் கொண்டிருந்தது.
அவளது கணவன் ரமேஷ் இறந்த பின்னர் வீடு முழுதும் தனிமையே நிரம்பியிருந்தது. கோவிட் ஊரடங்கிற்கு பின்னர் வேலைக்காரியும் நின்று விட, வாழ்வு நொண்டியடித்துக் கொண்டிருந்தது. போன் செய்தால் கீழிருக்கும் குரோசரி ஷாப்பிலிருந்து தேவையானவை வரும். மற்ற நேரத்தில் நூடுல்ஸ், பிரட், ஜாம் என்று வாழ்வைக் கடத்திக் கொண்டிருந்தாள்.
வானில் இங்குமங்கும் பறக்கும் பறவைகளைப் பார்த்தபடி சற்று நேரம் இருந்தாள். ரிமோட்டை அழுத்தியதும் வலப்புற சுவரிலிருந்த டிவி உயிர் பெற்றது. யாரோ ஒரு இளவயது ஹீரோ காதலிக்கு தாஜ்மஹாலை கட்டுவதாக பாடிக் கொண்டிருந்தான். திருச்சி பிஷப் ஹீபர் காலேஜில் சுஜாதாவும், ரமேசும் காதலித்த போது ரமேசும் அவளுக்காக தாஜ்மஹால் கட்டுவதாக கூறியது ஞாபகம் வந்தது.
ஆங்கில லெக்சரராய் அவள் சேர்ந்த போது அவன் ஏற்கனவே மேத்ஸ் டிபார்ட்மென்டின் சீனியராய் இருந்தான். “உங்க கிளாஸை நான் எடுத்துக்கட்டுமா?” என்று துவங்கிய பேச்சு, “எந்த ஹீரோ பிடிக்கும்?” என்று தொடர்ந்து “உங்களை லவ் பண்றேன்னு சொன்னா பிரச்னையா போயிரும். அதனால என்னைக் கல்யாணம் பண்ணி கண் கலங்காம பாத்துக்கிறீங்களா?” என்று முடிந்தது. மற்றொரு வகையில் துவங்கியது.
காதல் நாச்சியார் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் என்று பக்தியுடன் வளர்ந்தது. பெற்றோர்களுக்கு தெரிந்து அவர்கள் எதிர்க்க இரண்டு வருடங்கள் போராடி பார்த்து விட்டு முடியாமல் பம்பாய்க்கு சென்று விட்டனர். அங்கேயே திருமணம் செய்துகொண்டனர். ரமேசுக்கு காலேஜ் ஒன்றிலும் சுஜாதாவிற்கு பிரைவேட் கம்பெனி ஒன்றிலும் வேலை கிடைக்க வாழ்வு ரம்மியமாக சென்றது.
இரண்டு வீட்டுக்காரர்களும் இவர்களைத் தேடவில்லை என்பது பின்னர் தெரிந்தது. பிரெண்ட் ஒருத்திக்கு போன் செய்து விசாரித்தபோது அவளைத் தலைமுழுகி விட்டதாக அவளின் தங்கை கூறியதாக கூறினாள்.
பெற்றோரைப் பிரிந்து அவனுடன் சென்றதாலோ என்னவோ ரமேஷ் அவளை உயிராகத் தாங்கினான். திடீர் திடீரென பரிசுகளைக் கொண்டு வருவான். சிறிய ஆசைகளையும் நிறைவேற்றி அழகு பார்ப்பான். பார்க், பீச், தியேட்டர் என அவர்களின் கால்கள் பதிக்காத பொழுது போக்கு இடங்கள் கிடையாது. கிச்சனில் உதவுவதிலிருந்து, துணி துவைப்பது வரை கூடவே சுற்றி வருவான். அவனுக்காக அவளும் வாழ்ந்து பழகினாள். அவளுக்கு பிடிக்காதிருந்தாலும் அவனுக்காக மல்லிகை பூ வைத்துக் கொண்டாள். கையில் மெகந்தியுடன் அவனைக் கட்டிக்கொண்டு இரவில் படுத்திருக்க, மறுநாள் அவன் கன்னத்தில் மெகந்தியின் பூக்கள் பதிந்திருந்தது. காலேஜ்க்கு போய் வந்ததும் “நண்பர்களும், மாணவர்களும் கேலியும், கிண்டலுமாய் ஒரு வழி செய்து விட்டனர்” என்றான்.
பரத் பிறக்க இரண்டு மாதங்கள் இருக்கையில் சுஜாதா வேலையை விட்டாள். பெற்றோரைப் பிரிந்து ரமேசுடன் சென்று விட்டாலும் சுஜாதாவுக்கு எதையோ பறிகொடுத்த உணர்வு இருந்தது. தீராத தாகம் போல் உயிர் வருத்தியது. பரத் பிறந்ததும் உடலில் கங்கை ஊற்றெடுக்க, அவளின் தாகம் தீர்ந்தது. பரத்தைப் பார்க்கையில், ரமேஷை நேசிப்பதை விட அதிகமாக ஒருவனை நேசிக்க முடியுமா என்று வியப்பாள்.
—
பம்பாயில் அவனது அம்மாவுடன் இருந்த நாட்கள் பசுமையாக ஞாபகத்தில் இருந்தன. அவளைக் கட்டிப் பிடிக்கையில் கோவில் கர்ப்பகிரகத்தின் வாசமடிக்கும். வீட்டில் இருக்கும்போதும் அவள் நேர்த்தியாக கட்டியிருக்கும் காட்டன் புடவை, சாமி படத்திற்கு போக தலையில் வைக்கும் துண்டு மல்லி என்று அனைத்தும் ஞாபகம் இருந்தது. அருகிலிருக்கும் பார்க்கிற்கு செல்லுகையில் விரலைப் பிடித்துக் கொள்ள அவள் நீட்டும் மெஹந்தி விரல் ஞாபகம் இருந்தது.
ஒரு முறை அவள் வயிற்றிலிருந்த கட்டி ஆப்ரேஷன் செய்து நீக்கப்பட்டு ஐசியூவில் படுத்திருக்கையில் அழுது, புரண்டு அன்றிரவு அவனும் ஐசியூவில் படுத்துக் கொண்டான். தன்னுடன் படிப்பவர்களுக்கு மாமா, அத்தை என்று உறவினர்கள் இருக்க தனக்கு மட்டும் ஏன் எவருமில்லை என்று கேட்கையில் “நாங்கள் இருவரும் அனாதையாய் இருந்து திருமணம் செய்தவர்கள்” என்பாள் அம்மா. நிறைய சொந்தக்காரர்கள் இருக்கும் சினிமாக்களைப் பார்க்கையில் அவளுக்கு கண்ணீர் திரளும். பரத் அவளைக் கிண்டல் செய்து சிரிப்பான்.
வீட்டில் இருவரும் தமிழில் பேசியதால் பரத்துக்கு தமிழில் பேச மட்டும் தெரிந்தது. பரத் ஸ்கூல் முடித்து, எஞ்சினியரிங் நுழைவுத் தேர்வு எழுத, சென்னை ஐஐடியில் அட்மிசன் கிடைத்தது. “எவருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது” என்று பரத் நச்சரிக்க, அவனுடைய எதிர்காலத்தை வீணாக்க கூடாதென சென்னைக்கு வருவதற்கு பெற்றோர் சம்மதித்தனர்.
சென்னை வந்த சில மாதங்களுக்கு பின்னரே அம்மா வீட்டை விட்டு ஓடி வந்து காதல் திருமணம் செய்ததை சொன்னாள். இருவரின் சொந்தங்களும் திருச்சியில் இருப்பதாக சொன்னதை கேட்டு சந்தோஷப்பட்டான். அவர்களைப் பார்த்து வரலாமா என்று கேட்டதற்கு மறுத்து விட்டனர். குடும்பத்துடன் சென்னைக்கு வந்த பின்னரும் இரண்டு வருடங்கள் எவரையும் தேடிப் போகாமல் இருந்தனர்.
—
ரமேஷின் தம்பி சென்னையிலேயே இருப்பது தற்செயலாய் தெரிய வந்தது. அவர் ஒரு முறை வீட்டுக்கு வந்து அனைவரையும் பார்த்து விட்டு சென்றார். ரமேஷ் வீட்டை விட்டு ஓடியதால் தங்கைக்கு வரன் தேடுவதில் சிரமம் இருந்ததையும், பெற்றோர் இருவரும் இறக்கும் வரையில் அவனைப் பற்றி பேச விரும்பவில்லை என்பதையும் கூறினார். “வீட்டுக்கு வாங்க” என்று பெயருக்கு அழைத்து விட்டு சென்றார்.
சுஜாதாவின் பெற்றோரும் இறந்து விட்டனர் என்பது பின்னர் தெரிய வந்தது. அவளது தங்கை திருச்சியிலேயே வசித்து கொண்டிருக்க, சுஜாதா மட்டும் ஓரிரு முறை திருச்சி சென்று வந்தாள். திருச்சி காவிரி கரையில் நிற்கையில் எதற்காக அழுதாள் என்று இன்னமும் அவளுக்கு விளங்கவில்லை. சிறு வயதில் தந்தை, தங்கையுடன் வந்து குளித்ததை நினைத்தா, மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலுக்கு போட்டி போட்டுக் கொண்டு படியில் ஓடி தங்கையை உருட்டி விட்டு அடி வாங்கியதை நினைத்தா, மாதமொரு முறை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அம்மாவுடன் செல்கையில் சாமி பூவை அம்மா தலைக்கு வைத்து விடுவதை நினைத்தா, எதையெண்ணி அழுதாள் என்று தெரியவில்லை.
அவளை மீண்டும் சேர்த்துக் கொள்வதில் எவருக்கும் உடன்பாடில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. தங்கச்சி மட்டும் கண்கள் கலங்க சற்று நேரம் பேசினாள். “ஏண்டி போன?” என்பதை மட்டும் இரண்டு முறை கேட்டாள்.
சென்னை வந்ததும் “எல்லாரும் நல்லா இருக்காங்க” என்று சுஜாதா முடித்துக்கொண்டாள். ரமேஷ் சிலரிடம் போன் செய்து பேசி விட்டு அத்துடன் விட்டு விட்டான் என்பது தெரிந்தது. அவன் எதையும் சொல்லாமலிருக்க, இவளும் எதையும் கேட்கவில்லை. சென்னையோ, மும்பையோ இவர்களது வாழ்வில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்பது தெரிந்தது.
பரத் பிஜி படித்துவிட்டு “அமெரிக்காவில் வேலை கிடைச்சிருக்கு. போறேன்” என்று சொன்னபோது அதிகம் உடைந்தது ரமேஷ் தான். மகனுக்கு சிறகுகள் முளைத்தது தெரியாமல் “சென்னைலயே வேலைக்கு போ” என்று கண்டிப்பாக கூறிப் பார்த்தான். “நாலஞ்சி வருடம் போயிட்டு வந்துடுறேன்” என்று பரத் உறுதியாக கூற, “உன்னை விட்டா எங்களுக்கு யாரும் இல்லடா” என்று சொல்ல முடியாமல் அவர் தவித்தது பரத்துக்கு புரியவில்லை.
—
அமெரிக்காவில் பெரிய கம்பெனியில் வேலைக் கிடைப்பது குதிரைக் கொம்பு மட்டுமல்ல. பெருமையான விசயமும் கூட. பரத் சென்னையில் பிஜி முடித்தவுடன் அமெரிக்காவிலிருக்கும் கூகிள் கம்பெனியில் நல்ல வேலை கிடைக்க, போக வேண்டாம் என்று அப்பா தடுத்தது பரத்துக்கு கடுப்பாக இருந்தது. இருவரும் காரசாரமாய் பேசிக்கொண்டது அப்போது தான்.
அமெரிக்கா வந்ததும் அதன் வாழ்வு முறையும் சம்பளமும் பிடித்துப் போக மீண்டும் இந்தியா செல்ல மனமில்லாமல் போனது. நான்கு வருடங்களுக்கும் பின்னர் அவனுடைய கம்பெனியில் வர்ஷா வேலைக்கு சேர்ந்தாள். அவளும் சென்னையைச் சேர்ந்தவள் என்பது நெருக்கத்தை ஏற்படுத்த, இருவரும் காதலிக்கத் துவங்கினர்.
இருதரப்பு சம்மதத்துடன் சென்னையில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்தே வர்ஷாவுக்கும் அவனது பெற்றோருக்கும் ஏனோ ஒத்து போகவில்லை என்பதை பரத் புரிந்து கொண்டான். அவன் இஷ்டப்படி திருமணம் செய்து கொண்டது ரமேசுக்கு பிடிக்கவில்லை. காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவர் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.
—
மூச்சு விடுவது சிரமமாயிருக்க, ஈஸிச் சேரிலிருந்து எழுந்த சுஜாதா இன்ஹேலரைத் தேடியெடுத்து இரு முறை உறிஞ்சிக்கொண்டாள். நெஞ்சில் பனி உருகுவது போலிருந்தது. களைப்பாய் இருந்தது. கொஞ்சம் வெந்நீரைக் குடித்து விட்டு மீண்டும் ஈஸிச்சேருக்கு சென்றமர்ந்தாள்.
ரமேஷ் எப்போதும் அமர்வது அந்த ஈஸிச்சேரில் தான். பேசுவது தேவையில்லாமல் போன தருணங்களில் இதில் அமர்ந்து வெளியுலகைக் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய அமைதியில் ஒரு துயரம் இறுகியிருக்கும். “என்னங்க?” என்றால், சிரித்தபடி பேசுவான். அந்த பொய்யான மலர்ச்சி அவளின் மனதை கிழித்தெறியும். வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி வருந்துகிறானோ என்றெண்ணுவாள். ஒரு முறை வாய் திறந்து கேட்டும் விட்டாள். “யாருமே இல்லாத தனித்தீவுக்கு போவதாய் இருந்தாலும் உன்னைத் திருமணம் செய்வதை மட்டும் மாத்த மாட்டேன். இந்த ஜென்மத்துல நீ மட்டும் எனக்கு போதும். சொந்தம், பந்தம், மகன் எதுவும் எனக்கு தேவையில்லை” என்றான். அவளை தவிக்க விட்டு விட்டு அவளுக்கு முன்பாக சொர்க்கமெனும் தனித்தீவுக்கு சென்று விட்டான்.
வர்ஷாவின் பெற்றோர் பெரும் பணக்காரர்கள் என்பது திருமணத்திற்கு முன்பே இவர்களுக்கு தெரிந்தது. பங்களா, பாக்டரி என்று பெரிய இடம். “பரத்தின் வேலைக்காகவே வர்ஷா அவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். அவளைப் பொறுத்த வரையில் நாமிருவரும் தேவையில்லாத லக்கேஜ்” என்றான் ரமேஷ்.
திருமணம் முடிந்தவுடன் பெண்ணழைக்க இருவரும் சென்ற போது “இவர்களுக்கு வேற யாருமில்லை” என்று வர்ஷா கிண்டலடிக்க, அனைவரும் வெடித்து சிரிக்கையில் ரமேஷ் நொறுங்கிப் போனான். அந்த சம்பவத்தை “பரத்துக்கு சொல்ல வேண்டாம், வருத்தப்படுவான்” என்றான்.
இவர்களைப் புரிந்து கொண்ட வர்ஷா, பரத் இல்லாத சமயங்களில் சகஜமாக பேசுவது போல அவமானப்படுத்த, இருவரும் தள்ளியே இருந்தனர். “நீங்களும் எங்களோடு அமெரிக்கா வந்துருங்க” என்று பரத் கூறிய போது. அப்புறமா வர்றோம்” என்று கூறி விட்டனர். பரத் அமெரிக்கா சென்ற பின்னர் பத்து நாட்களுக்கு ஒருமுறை போன் செய்தான். அதுவும் மெதுவாக குறைந்து மாதமொரு முறை, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்றானது.
—
ஏர்ஹோஸ்டஸ் உணவுப் பாக்கெட்டுகளைத் தந்து விட்டு போக, ‘சிறு வயதில் அவ்வளவு பாசமாய் இருந்த பெற்றோர் ஏனிப்படி மாறினர்’ என்று பரத்துக்கு தோன்றும். வர்ஷாவுடன் அமெரிக்கா வந்த பின்னர் ஒவ்வொரு முறையும் போன் பேசும்போது தன்னுடன் வந்து இருக்கும்படி கூறியிருக்கிறான். “நாங்க எங்கடா வர்றது. நீ வேணும்னா ஒரு தடவை வந்து பாத்துட்டு போ” என்பதே பதிலாயிருக்கும். அப்படியென்ன இந்தியாவில் இருக்கு என நினைப்பான்.
வர்ஷா ஒன்பது மாதம் கருவுற்று இருக்கையில் “உதவிக்கு வாங்க” என்று கேட்டு பார்த்தான். ஆனால் அதற்கும் வராமலிருக்க, பரத்துக்கு வெறுத்துப் போனது. வர்ஷாவின் அம்மா ஐந்து மாதங்கள் தங்கி மகளைப் பார்த்துக் கொண்டார். “உங்க அப்பா, அம்மா எதுக்கு தான் வர்றாங்க” என்று வர்ஷா கூறும் போது பரத்துக்கும் விட்டுப் போனது. திடீரென ஒரு நாள் “அப்பா இறந்துட்டார்” என்று அபார்ட்மெண்ட் செக்ரட்டரி போன் செய்ய, பரத் மட்டும் புறப்பட்டு வந்தான்.
பக்கத்து அபார்ட்மென்ட்காரர்கள், ரமேஷின் தம்பி, அவரது மகன் என்று சொற்பமான பேரே இருக்க, தந்தையின் காரியம் மூன்றாம் நாளே முடிந்தது. “இப்பவாவது எங்க கூட வந்து இரும்மா” என்றான். “கொஞ்ச நாள் தனியா இருக்கேண்டா. வர்ஷாவோட அம்மா போனதும் வர்றேன்” என்று அம்மா கூறினாள். “தனியா எப்படி இருப்ப?” என்று கேட்டதுக்கு “தேவைப்பட்டா கொஞ்ச நாள் திருச்சி போயிட்டு வர்றேன்” எனக் கூறி விட்டாள்.
“சரி. உனக்கு எப்ப தோணுதோ வா” என்று கூறி அவளுடைய அபார்ட்மெண்ட் மெயின்டனன்ஸ், ஈபி பில் என்று அனைத்து தேவைகளையும் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மாற்றினான். “நீ வெளியவே போக வேண்டியதில்லை. ஒரு வேலைக்காரி வச்சிக்கோ” என கூறி விட்டு அமெரிக்கா திரும்பினான். மாதா மாதம் ஐம்பதாயிரம் அவளுடைய அக்கௌண்டிற்கு தானாக செல்லும்படி தனது அக்கௌண்டில் செட் செய்தான்.
நடுவில் அவனது போன் தொலைந்து போக அம்மாவுடன் போன் பேச முடியாமல் போனது. அவளுடைய நம்பர் நினைவில் இல்லாமலிருக்க அவளே போன் செய்யட்டும் என்ற வீம்பில் ஏழெட்டு மாதங்கள் சென்றது. வர்ஷாவின் அப்பா அபார்ட்மென்டுக்கு சென்று பார்த்து விட்டு “வீடு பூட்டியிருக்கிறது” என்று கூற, அம்மா திருச்சி போயிருக்கிறாள் என்பது தெரிந்தது. அவர் வாங்கித் தந்த போன் நம்பர் சுவிட்ச் ஆப் என்று வர, ‘வேற நம்பர் மாத்துனதை கூட சொல்ல முடியல’ என நினைத்தான்.
—
“டெலிவரி பாத்துக்க எங்கம்மா வர்றாங்க. நீங்க அப்புறமா வாங்கனு வர்ஷா போனில் சொன்னது பரத்துக்கு தெரிஞ்சிருக்காது” என்றான் ரமேஷ்.
“எப்படியோ குழந்தை நல்லா பிறந்தா சரி” என்றாள் சுஜாதா. குழந்தையின் போட்டோக்களையும், சில வீடியோக்களையும் பரத் அனுப்பி வைத்தான். ஓரிரு முறை சுஜாதா போன் செய்யும்போது “பரத் இல்லை” என்று கூறி கட் செய்து விடுவாள் வர்ஷா.
முதுமை நெருங்கும்போது கணவன், மனைவி என்ற சொந்தங்களைத் தாண்டி வேறு சில உறவுகளையும் மனம் எதிர்பார்க்கிறது கிளை மாற்றி அமரும் பறவைகளைப் போல. மனதின் துயரங்களை வெளிப்படுத்தாமல் மனதுக்குள் புதைப்பது எவ்வளவு மோசமானது என்பதை ரமேஷ் உணர்ந்த போது மாரடைப்பு உயிரைக் குடித்திருந்தது.
அன்று சுஜாதாவின் கல்யாண நாள். மனமெங்கும் துயர் சூழ்ந்திருக்க சிகப்பும், மஞ்சளும் கலந்த பட்டுப்புடவையை குளித்து விட்டு கட்டிக்கொண்டாள். ரமேஷ் இறந்த பின்னர் முதன் முதலாய் அடர் நிறத்தில் கட்டிய சேலை சிவந்த உடலுக்கு பாந்தமாய் இருந்தது.
பழைய ஆல்பத்தை எடுத்துக்கொண்டு ஈஸிச்சேரில் அமர்ந்தாள். ரமேஷ் அருகில் நின்று “இது அப்போ எடுத்தது”, “அதுக்கப்புறம் தான் நீ குண்டான” என்று சொல்லிக் கொண்டிருந்தான். இப்போதெல்லாம் எது நிஜம், எது கனவு என்று தெரியாமல் இருந்தாள். கண்களில் வழிந்த நீர் இளஞ்சூடாய் தோளில் சொட்டியது. கண்களை மூடிக்கொண்டாள். ரமேஷ் எதையோ சொல்லி சிரிப்பு மூட்டிக்கொண்டிருந்தான்.
—
பரத் சென்னையில் இறங்கி வெளியே வந்த போது நன்றாக விடிந்திருந்தது. பதினைந்து மணி நேர பயணம் நெட்டி வாங்கியிருக்க சூடாக குளித்தால் பரவாயில்லை என தோன்றியது. டாக்சி பிடித்து நேராக கொளத்தூர் வால்கிரீன் அபார்ட்மென்டுக்கு வந்து சேர்ந்தான். லிப்ட் ஏறி முப்பதாம் மாடியின் ஓரத்திலிருந்த வீட்டு வாசலுக்கு சென்று காலிங் பெல்லை அடித்தான். பதிலில்லாமல் இருக்க, வெளியில் பூட்டியிருப்பது போல் தெரிந்தது.
திருச்சியிலிருந்து அம்மா இன்னுமா வரவில்லை என்று நினைத்தவன் எதிர் வீட்டு காலிங் பெல்லை அடிக்க, கதவை திறந்தவர் “எஸ்” என்றார்.
“சுஜாதாம்மா பையன் நான்”
“ம்ம்..ஞாபகம் இருக்கு. சொல்லுங்க”
“அம்மா வெளிய போயிருக்காங்களா?”
“அவங்களை பார்த்து பல மாசம் ஆச்சே. சொந்தக்காரங்க ஊருக்கு போறதா ஒரு முறை சொன்னதா என் ஒய்ப் சொன்னா. போன் பண்ணி பாருங்க”
“ஸ்விட்ச் ஆப்னு வருது. சரி சார். நான் பாத்துக்கிறேன். தேங்க்ஸ்” என்று சொல்லி விட்டு வெளியே வந்தான். என்ன செய்வது என தெரியாமலிருந்தது.
அப்பாவின் காரியத்திற்கு வந்த போது அவனுடைய சித்தப்பா ஸ்டேட் பேங்க் ஜோனல் ஆபீசில் வேலை செய்வதாக கூறியது ஞாபகம் வந்தது. மீண்டும் டாக்சி பிடித்து மண்ணடி சென்று “சிவராமன் எங்கிருக்கார்?” என்று சித்தப்பாவைத் தேடினான். ஐடி கம்பெனியில் இருப்பது போலவே வெள்ளையும், நீலமுமாய் கேபின்கள் இருக்க ‘என்னா சொந்தங்கள்’ என்று நினைத்து கொண்டான்.
“வாப்பா. எப்ப வந்த?” என்றார் சிவராமன்.
“காலைல தான். வீட்டுக்கு போனேன். வீடு பூட்டியிருக்கு. அம்மா எங்க போனாங்கனு தெரியுமா?” என்றான்.
“போன் பண்ணி பார்த்தியா?”
“போன் ஸ்விட்ச் ஆப்னு வருது”
“போன் பண்ணி சொல்லிட்டு தானே புறப்பட்டு வந்த?”
“இல்ல” என்று தயங்கியவன் “அம்மாட்ட பேசியே ரொம்ப நாள் ஆச்சு” என்று பாதி உண்மையை கூறினான்.
“என்னா பையன் நீ. கூட்டிட்டுதான் போகலை. போன் கூடவா பண்ணாம இருப்ப?”
“கூப்டா எங்க வர்றாங்க? திருச்சி போயிருப்பாங்களா? அங்க இருப்பவங்க போன் நம்பர் இருக்கா உங்க கிட்ட?”
“உட்கார். திருச்சில விசாரிக்கிறேன்” என்றவர் “சிவா ஒரு டீ வாங்கிட்டு வா” என்று ஒருவனை அனுப்பினார்.
சிலரிடம் போன் செய்து பேசி விட்டு “அங்க இல்லையாம். ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்ந்திருப்பங்களா?’ என்றார்.
“நான் இருக்கும்போது அவங்க ஏன் அங்க போகணும்?”
“கதவை நல்லா தட்டி பார்த்தியா. உள்ள ஏதும் இருக்க போறாங்க?”
கதவு வெளியே தாளிடாமல் இருக்க நீள சாவியால் திறக்குமாறு துளை மட்டும் இருந்தது ஞாபகம் வந்தது. “ரெண்டு, மூணு தடவை காலிங் பெல் அடிச்சேன்”
“அட குளிச்சிட்டு ஏதும் இருந்தாங்களோ என்னவோ”
“சரி. மறுபடியும் போய் பாக்கிறேன்” என்று கூறி விட்டு அவருடைய நம்பரை வாங்கி கொண்டு கொளத்தூர் சென்றான்.
கேட்டருகே வாட்ச்மேனுடன் பேசிக்கொண்டிருந்த அபார்ட்மெண்ட் செகரட்டரி அவனை அடையாளம் தெரிந்து கொண்டு “வா தம்பி” என்றார்.
“அம்மா எங்க போனாங்கனு ஏதாவது தெரியுமா?”
“ஒரு நாள் லிப்டில் பார்த்தேன். அது ரொம்ப நாளுக்கு முன்னாடி ஆச்சே”
“வேலைக்காரி?”
“போன வருசத்திலிருந்து கோவிட் பிரச்னை இருந்ததால வேலைக்காரங்களை உள்ள விடலை. வாங்க பாக்கலாம்”
இருவரும் லிப்டில் முப்பதாவது மாடிக்கு சென்று காலிங் பெல்லை அழுத்தினர்.
கதவைத் திறந்த எதிர் வீட்டுக்காரர் “என்ன ஆச்சு?” என்றார்.
ஏழெட்டு முறை காலிங் பெல்லை அடித்த பரத் பொறுமையிழந்து கதவின் மேல் சாய்ந்து நகர்த்த மெல்லிதாக உள்ளே சென்றது.
“வெளிய லாக் பண்ணல. உள்ளிருந்து மேல் தாழ் போட்ருக்கு”
“கதவை உடைச்சுரலாம்”
“இருங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று கூறி விட்டு, “அம்மா.. அம்மா” என்றபடி பலமாக கதவைத் தட்டிப்பார்த்தார் செக்ரெட்டரி.
சத்தம் கேட்டு மற்ற வீடுகளில் இருந்து தலைகள் எட்டிப் பார்த்தன. நான்கைந்து முறை பரத் மோதிப் பார்த்தும் கதவு திறக்க மறுத்தது.
“நம்ம கார்பென்டரை கூப்பிடுங்க” என்றார் ஒருவர். சற்று நேரத்தில் பெரிய ஹாமரை எடுத்து வந்த கார்பென்டர் கதவின் மேல் பகுதியில் அடிக்க, கதவு படாரென்று திறந்தது. பரத் முதலில் சென்றான். ஹாலில் யாரும் இல்லாமலிருக்க, அருகிலிருந்த பெட்ரூமிற்கு விரைந்தான். ஈஸிச்சேரில் மஞ்சள் சிகப்பில் பட்டு சேலையணிந்த ஒரு எலும்புக்கூடு அமைதியாய் துயின்றது.
*************
(கொரோனா காலத்தில் பம்பாய் அபார்ட்மெண்டில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது..)
அசோக் குமார்.
சென்னை சுங்கத்துறையில் அதிகாரியாக பணிபுரியும் இவர் கதை, கவிதைகள் எழுதுவதில் பேரார்வம் கொண்டவர். இவருடைய வலைப்பதிவில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதை, கட்டுரைகளை எழுதி வருகிறார். இவருடைய கட்டுரைகள் டைம்ஸ் ஆப் இந்தியா, ஆனந்த விகடன் மின் நூலில் இடம் பெற்றுள்ளன. இவர் எழுதிய சிறுகதைகள் நுழைபுலம், சஹானா, அரூ, குவிகம் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
கரிகாலனை நாயகனாக கொண்டு 2022ம் ஆண்டு இவர் எழுதிய சோழவேங்கை கரிகாலன் என்ற நூல் கோவை விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு மூன்று விருதுகளை வென்றது. முதுகலை பட்ட ஆய்விற்கு எடுத்துக் கொள்ள பட்டுள்ளது. அந்நாவலின் தொடர்ச்சியாக இமயவேந்தன் கரிகாலனையும், மேலும் பறம்புத்தலைவன் பாரி என்ற நாவலையும் எழுதியுள்ளார்.