-ரவி அல்லது.
1.
பேரன் இரு சக்கர வாகனத்தில் இறக்கிவிட்டது உடம்பிற்கு ஏதுவாக அமைந்தது. இறங்கி பையிலிருந்த சாமான்களை எடுத்து கீழே வைத்தபோது காலை வேலைக்கு பலரும் வேகமாக சென்று கொண்டு இருந்தார்கள். எதிரே இருந்த பெரியார் சிலைக்கு யாரோ மாலைகள் போட்டிருந்தார்கள். பக்கத்தில் இருந்த சன்னாசி பீடியை கடைசி இழுப்பு அவசரமாக இழுத்துவிட்டு மண்ணில் அழுத்தி நெருப்பை அணைத்தான்.
ஊரிலிருந்து பேரன் பேத்திகள் வந்திருப்பதால் அவர்கள் புதிது புதிதாக உணவுகளை தயாரித்தார்கள். அது ஒரு புது சுவையாக இருந்தாலும் எண்ணெயில் வதக்கியதால் வயிற்றை ஏதோ செய்தது. எப்பொழுதாவது விடுமுறை கிடைத்தால் இங்கு வருவது அவர்களின் வழக்கம்.
வெயில் காலையிலேயே உக்கிரமாக இருந்தது. நான் வந்த பிறகு காத்தவராயன் வந்தான். நாங்கள் மூன்று பேர்தான் இப்போது மீதமாக இருக்கிறோம். முன்பொரு காலத்தில் ஏழு எட்டு பேர் இருந்த இடம் இது.
எங்களுக்கு ஆட்கள் வருவதே பெரும் பாடாக இருக்கிறது. சன்னாசிக்கு பிரச்சினை இல்லை. அவனுக்கும் போக்குவரத்து போலீஸ் லஞ்சம் கொடுக்கிற காசை அவனிடம் கொடுக்கச் சொல்வதால் சாயந்திரமானதும் குடிக்கிறதுக்கும் வீட்டிற்கும் அதில் ஒப்பேத்தி விடுவான். ஒரு முறை அதிகமான பேர் பணம் கொடுத்ததால் யாரோ கொடுத்தப் பணத்தை அவன் கொடுக்காமல் இருந்திருக்கிறான். அன்று டூட்டியில் இருந்த போலீஸ் எத்தனை பேர் எவ்வளவுப் பணம் என்பதைத் துல்லியமாக கணக்கு வைத்திருந்ததால் அவனை ஸ்டேசனுக்கு வரவழைத்து அடி பின்னி எடுத்துவிட்டார்கள்.
அவன் அதுபற்றிக் கவலைப்படமாட்டான். அடித்த போலீஸூம் அப்படி ஒன்று நடந்ததாகவே இல்லாமல் அவனோடு அடுத்த நாளே சிரித்துப்பேசிக் கொண்டு இருப்பார். எங்கையாவது காவாலிப்பயலுவ கஞ்சா அடிச்சு மாட்டினா இவனைத்தான் ஸ்டேசனுக்கு கூட்டிக்கிட்டு போவான்ங்க. அதுல சன்னாசிக்கு ஒரு பெருமை.
“சொல்றேன்னு கோவிச்சுக்காதண்ணே. ஊர்லேர்ந்து பசங்க வந்திருக்கும்போதும் நீ இங்க வரனுமா. அதுக மனசு எவ்வளவு கஷ்டப்படும்.”
மாதத்தில் ஒரு முறை இல்லை எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் புலம்புவது அவனது வழக்கம். பின்னே யாருதான் என் மீது கோபப்பட மாட்டார்கள்.
ஒரு வேளை வீராயீ இருந்தால் என்னைக் கத்தி கூச்சல் போட்டு வேலைக்கு வராமல் தடுத்திருப்பாளோ. நிச்சயமாக அவள் அப்படி செய்யக்கூடிய ஆள் இல்லை.என்னிடம் காசு பணம் இருக்கும்போதும் இல்லாதபோதும் என் மனம் கோணாமல் நடந்தவள். இன்னும் கொஞ்ச காலம் அவள் இருந்திருக்க வேண்டும். கண்டு முதல் காணும் போது காணாமல் போய்விட்டாள் செருக்கி முண்டை.
நான் காத்தவராயனை முறைத்தேன். எல்லாம் தெரிந்தவன் இவன் புலம்போது ஏனோக் கடுப்பாக இருக்கும். நான் எவ்வளவு திட்டினாலும் கோவப்படாதவன். வீராயீயும் என் மேல் கோவப்பட்டதாக நினைவில் இல்லை.இவன் கரிசனமாக பேசும்போது வீராயீ நினைவுவருவதால் இவன் மேல் எனக்கு தனிப் பாசம் உண்டு.
“இருக்கலாம்ன்னுதான் பார்த்தேன்டா. நான் ஒரு முறை வீராயீக்கிட்ட சொன்னேன்.நம்மப் புள்ளே புள்ளையோடு புள்ளைங்க பெரிசானாலும் என் வேலையை நிறுத்தக்கூடாதுன்னு. இது என் லட்சிய முடிவுடா. இனிமே இன்னொரு டைம் கேட்டே மூஞ்சியைப் பேத்திறுவேன்.”
நானும் அவனை அடிச்சதில்லை அவனும் என்னிடம் சொல்வதை நிறுத்துவதும் இல்லை.
ஒரு பையன் திருமணமாகி காஷ்மீரில் கலெக்டராக இருக்கிறான் இப்பொழுது ஊருக்கு வந்திருக்கும் பேரன் அரசாங்க பரிட்சை எழுதி அவனும் வேலைக்காக காத்திருக்கிறான். சொந்தமாக பங்களா, ஒரு காலணி, சென்னையில் வீடு அப்புறம் கடைகளுடன் கூடிய வணிக வளாகம் இருக்கின்ற நான் வீதியில் உட்கார்ந்து செருப்புத் தைத்தால் யாருக்குதான் கோவம் வராது.
என் மகனுக்கு என் மேல் கோவம் வரவில்லை.என்னை நன்கு புரிந்தவன் எனக்காக எதையும் செய்யக்கூடியவன். நான் எது செய்தாலும் அதில் நன்மைகள் இருக்குமென்று நினைக்கிறவன்.
அப்போதெல்லாம் கிழிந்ததை தைத்தால் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் கிடைக்கும். அளவுகள் கொடுத்து சிலப் பணக்காரர்கள் செருப்புகள் தைப்பார்கள். அதில் நல்ல வருமானம் வரும்.
இப்போது ஜவுளிகள் எடுக்கும்போது செருப்புகள் வாங்கி விடுகிறார்கள்.
செருப்பைத் தைப்பது குறைந்துவிட்டது. குடைகள் தைப்பதும் குறைந்துவிட்டது.
எங்கள் தெருவில் எல்லோரும் சின்ன வயதில் வேலைக்கு அனுப்பும்போது நான் தான் ராமசாமியைப் படிக்க அனுப்பினேன். அங்கு அவனுக்கு படிக்கின்ற சூழல் ஏற்பாகவே இல்லை. என்னிடம் கிழிந்த செருப்பை தைக்க கொடுக்கும் போதே ஒவ்வொருவரின் மிடுக்கும் அதில் தெரியும்.
ஒரு முறை ஒருவரின் தோல் செருப்பு இரண்டையும் சுற்றி முழுவதும் தைத்து கொடுத்து ஐந்து ரூபாய் கேட்டதற்கு செருப்பு காலோடு எட்டி உதைத்து விட்டார். நான் மல்லாக்க விழுந்தேன். பக்கத்தில் தைத்துக்கொண்டு இருந்தவர்கள் அப்படியே எழுந்தார்கள். எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை
கூடி இருந்தவர்கள் ‘பரதேசிப் பய பகல் கொள்ளயடிக்கிறான்’என்று அந்த ஆள் திட்டியதைத்தான் ஆமோதிப்பதாக நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
அப்போது எதிரில் பெரியார் சிலையெல்லாம் வராதக் காலம்.
எங்கள் எல்லோருக்குமே பெரிய அவமானமாக இருந்தது. போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுக்கலாமா என்று ஆலோசித்தோம் பிறகு வீதியில் இருக்கோம் ஏன் வம்பை வளர்க்கனும். ஒரு நாள் பொழப்பு இல்லை என்றால் அன்னைக்கு வீட்டில் கொலை பட்டினியாகக் கிடக்கனும்.
நாங்கள் இப்படியாக எங்கள் வறுமையை நினைத்து சூழ்நிலைக் கைதியாக காலங்களைக் நடத்தினோம்.
என்னால் இந்த அவமானத்திலிருந்து வெளிவர முடியவில்லை. சாராயத்தை குடிச்சிட்டு தினம் யாராவது நம்மல சீண்டிகிட்டே இருப்பான் நாம சும்மா இருக்கனுமா என்று ஆளாளுக்கு சீரினார்கள். இந்த சூழ்நிலையில் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதென்று முடிவெடுத்தேன். எனக்கு பின்னாடி நடப்பட்டு இருக்கும் இந்த கொடிக்கம்பு எங்களின் அடையாளமானது. நகரத்தின் வேறுபல இடங்கள் செருப்பு தைப்பவர்கள் என்னிடம் பழக ஆரம்பித்தார்கள்.
கட்சி அலுவலகத்திற்கு எப்பொழுதாவது போவதும் அவர்கள் கட்சி நிதிக்கு சீட்டு கொடுக்க இங்கு வருவதும் என்று மாறியதும் எங்கள் மீது இருந்த ஏலனப் பார்வை கொஞ்சம் மாறியது. போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மட்டமாக நடத்தியதும் மாறியது. எங்கள் தெருவில் உள்ள வயதானவர்கள் நான் சொல்லுவதை கேட்டு நடக்கவேண்டும் என்று தன் வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள்.
வீராயீயும் நானும் செருப்பால் உதைத்ததைப் பற்றி பேசியதை ஒரு நாள் ராமசாமி கேட்டுவிட்டான்.
அவனை அடுத்த நாள் ஸ்கூலில் விடுவதற்கு சைக்கிளில் செல்லும் போது (இது சைக்கிள் தான் ஏறி ஓட்டினால் கிறு கிறு என்று சத்தம் வரும் தள்ளிக்கொண்டு போனால் சத்தம் வராது. அதை ஒழுங்கு பண்ட்றதுக்கு ஐம்பது ரூபாய்க்கு மேல் வரும்ன்னு சொன்னாங்க. அதனால அதைத் தள்ளிக்கொண்டு செல்வது என் வழக்கம். அதில் பையை மாட்டிவிட்டு தள்ளி செல்வது ஒரு ஆள் துணையோடு இருப்பதாகவே இருக்கும். ராமசாமியை அதில் அமர வைத்து பள்ளிக்கூடத்தில் கொண்டு விடுவது எனக்குப் பிடித்தமானது என்பது அவனுக்கும் தெரியும்) அவன் என்னிடம் கேட்டான்
“ஏன்ய்யா. நான் பெரிய ஆளாக இருந்தால் நானும் உன் பக்கத்துல இருந்து தச்சிக்கிட்டு இருந்திருப்பேன். அவனை நான் அடிச்சிருப்பேன்ய்யா. என்னைய ஏன்ய்யா முன்னாடியே பெக்கல.”
அவன் கேட்டதில் பெத்தவனாக மகிழ்ச்சியாக இருந்தாலும் அவனும் பெரியவனாக வளர்ந்து செருப்புத் தைக்க வருகிறேன் என்றது மனதை அறுத்தது. அந்த வார்த்தைகள் அன்று முழுவது ஊசி குத்தி இழுப்பதுபோல ரணமாகவே இருந்தது.
அப்போது அவனிடம் மௌனமாக இருந்துவிட்டு அவனிடம் அடுத்தநாள் நான் சொன்னேன்.
“ஒரு விசயத்தை ஞாபகத்தில் வச்சுக்கடா ராமசாமி(எனக்கு ராமு என்று கூப்பிட விருப்பமில்லாமல் ராமசாமி என்றுதான் சொல்வேன்). நமக்கெல்லாம் படிப்புதான்டா ஆயுதம். அரசாங்கத்துல நிறைய சலுகைகள் இருகுங்கிறாங்க. அதை எல்லாம் பயன்படுத்தி எப்படியாவது படிச்சுர்றா. அங்கேயும் பல அவமானம் இருக்கும். அங்கையும் உனக்கு நாலு நல்லவங்க இருப்பாங்க. இல்லைன்னாலும் விடாம படிடா. இது ஒரு போர்டா. எனக்கு என் அப்பனுக்கு அந்த வாய்ப்பு இல்லை. உனக்கு கிடைச்சுருக்கு எப்போதும் யாரிடம் சண்டை போடாத. ஒதுங்கி ஒதுங்கி எல்லாத்தையும் படிப்பில காட்டு. அதுதாண்டா நம் அடையாளம். இந்தா தொங்குதே இந்தப் பை இது நாளைக்கு நம் பிள்ளைங்க புத்தகம் சுமக்கிறப் பையா மாறணும். இதையேக் கை மாத்தி செருப்புத் தைக்க விட்றக் கூடாதுடா.”
அதிலிருந்து அவன் வகுப்பில் முதல் மாணவனாக வந்தான்.அதிலும் சில வாத்தியார்கள் சாதியப்பாகுபாடு பார்த்தார்கள். நான் அவனை ‘வெற்றியடைகிறவரை கௌரவத்தை கொன்றழித்துவிடு’ என்றேன். பல நாள் அழுது கொண்டே தூங்குவான்.
****
2.
வெயில் உச்சியைத்தொட்டு தகித்துக்கொண்டு இருந்தது. இதுவரை யாரும் செருப்பு தைக்க வரவில்லை . எங்களுக்கெல்லாம் வெயில் எல்லாம் உடம்பில் பட்டுப் பட்டு தோளே பட்டுவிட்டது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் பேரன் வந்துவிடுவான். அவனை உணவை எடுத்து வரச்சொன்னேன். ராமசாமி போனில் திட்டினான்.’ நீங்கள் உங்கள் வேலைக்கு போங்கய்யா. சாப்பிடுறது புள்ளைகளோடு சாப்பிடுங்க. உங்க கூட பொழுதக் கழிக்கதான் ரொம்ப தூரத்திலிருந்து அங்க வர்றாங்க. நீங்கள் என்றால் அவுங்களுக்கு உசிருய்யா.’
அவன் அழுகிறான் என்பதை அறிந்து கொண்டேன். என் பேரப்பிள்ளைகள் என்னிடம் வளரவில்லை. அவர்களுக்கு என்னைப்பற்றி சொல்லிச் சொல்லி வளர்த்திருக்கிறான். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“தாத்தா இந்த செருப்பை தைச்சு குடுங்க. எவ்வளவு வரும்.”
பள்ளியின் சீருடையில் இருந்த பெண் பிள்ளைகள் கேட்டது.
இப்பொழுது வித விதமான மாடல்களில் செருப்புகள் வருகிறது. சில மாடலுக்கு பெவி குயிக் வைத்து ஒட்ட வேண்டும். சிலது ஒட்டி தைக்க வேண்டும். இது அடிப்பகுதி டோப்பா மாதிரி கழண்டுவிழத் தயாராக இருந்தது. பெரிய ஆளாக இருந்தால் என்பது ரூபாய் கொடுங்கள் என்று கேட்கலாம். பள்ளிக் கூட பிள்ளை என்பதால் நாற்பது ரூபாய் கேட்டேன்.
“அய்யோ… தாத்தா என்கிட்ட இருவது ரூபாய்தான் இருக்கு அது அம்மா முட்டை வாங்க கொடுத்தப் பணம். இலவச பஸ் வர்றதுனால இப்பல்லாம் வீட்லக் காசு தரமாட்டாங்க தாத்தா. நாளைக்கு வாங்கியாந்து தாரேன்.”
“சரிம்மா. ஸ்கூல் பிள்ளைங்கிட்ட கொடுக்கிறதை வாங்கிக்கறேன். இப்ப கொடுத்தாலும் சரி நாளைக்கு கொடுத்தாலும் சரி. இந்த உண்டியல் டப்பாவுல நீ எவ்வளவு போட முடியுமோ அதைச் போடு.”
அந்தக் குழந்தை பெரிய அவஸ்தையிலிருந்து விடுபட்டு கிளம்பிப்போனது.சிலர் அடுத்த நாள் வந்து காசைப் போட்டு இருக்கிறார்கள் சிலர் போடாமலும் இருந்திருக்கிறார்கள். இதைப்பற்றி அக்கரைப்படாமல் இருப்பதால் எனக்கு அவர்களைப் பற்றிய நினைவுகள் அதிகம் இல்லை.
இந்தப் பிள்ளை டியூஷனுக்கு போகும்போல பள்ளிக்கூடம் இருக்கின்ற பக்கம் செல்லாமல் கோயில் இருக்கும் சாலையில் செல்கிறது.
ராமசாமியை டியூசனுக்கு அனுப்பச்சொல்லி டீச்சர் அவனிடம் சொல்லி அனுப்பினார்கள். அவருக்கு அவர்களுடைய மாணவன் பள்ளியில் முதல் மார்க் எடுக்க வேண்டும். அந்தத் திறமை அவனிடம் இருப்பதை அவர்கள் தான் அறிந்து உற்சாகப்படுத்தினார்கள்.
அந்தக் காலகட்டத்தில் ரங்கராஜன் சார் தான் டியூஷன் எடுத்தார்கள். கணக்கும், இங்கிலீஷ்ம் அவருக்கு ஈடாக எவரும் எங்க வட்டாரத்தில் எடுக்க முடியாது. அவரிடம் அனுமதி பெற்று அவனை அனுப்பியது எளிதானதாக இல்லை. அவன் டியூஷன் முடித்து வரும்வரை பட்ட நிராகரிப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அவைகள் எங்களுக்கு வலித்தாலும் நாங்கள் சொரணையற்றவர்களாக பழக்கப்பட்டிருந்தோம்.
டியூஷனுக்கு மாதா மாதாம் பணம் கொடுக்க என்னிடம் எந்த வாய்ப்பும் இல்லை. எங்களில் சிலர் மட்டும் விவசாய வேலைகளுக்கும் வெளியில் வேற வேலைகளுக்கும் போகப் பழகி இருந்தார்கள்.எங்களை எல்லோரும் வேலைக்கும் பொசுக்கென்று கூப்பிடவும் மாட்டார்கள். நானும் வீராயீயும் வேறு வேலைகளுக்கு போனதுமில்லை. எங்களுக்கு விவசாய வேலைகளும் தெரியாது.செருப்பு தைப்பதிலையே வாழ்க்கை ஓட்டப் பழகி இருந்தோம். நான் குடிக்கப் பழகாமல் இருந்தது. வீராயீ கிடைக்கும் பணத்தில் குடும்பம் நடத்த போதுமானதாக இருந்தது.
மழை பெய்யும் அன்றைய நாட்கள் பெரிதாக வருமானம் இருக்காது. அதற்கு அடுத்தடுத்த நாட்கள் மழையில் நனைந்து செருப்பு அறுந்து போயி நிறைய ஆட்கள் வருவார்கள்.
ராமசாமி டியூஷன் பணத்திற்கு எங்களிடம் எந்த வழியும் இல்லை. வீராயீ செருவாட்டு காசு சேர்த்து வைத்ததை எடுத்து இரண்டு மாத டியூஷன் பணத்தை மொத்தமாக சாரிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். அதற்குள் வேறு ஏதாவது யோசிக்கவேண்டும் என்று அவர் வீட்டிலிருந்து கிளம்பும்போது அவர் வீட்டில் தோங்காய் முட்டாக குவித்துக்கிடந்ததை பார்த்தேன்.
அவரின் தோப்பு எங்கிருக்கிறதென்று விசாரித்து சென்றுப் பார்த்தால் டவுனை ஒட்டியே பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. நானும் வீராயீயும் கலந்து பேசி டியூஷன் காசுக்கு பதிலாக அந்த தோப்பை பராமரிப்பது என்று முடிவெடுத்தோம். ‘வாரத்தில் மூன்று நாட்கள் நீங்கள் நம்ப வேலைக்கு போங்க அதை வைத்து நான் குடும்பத்தை கவனிச்சுக்கிறேன்’ என்று வீராயீ தைரியம் கொடுத்தாள்.
வாழ்கையில் வீட்டுக்காரி பிடித்தமானதாக அமைந்தால் இங்கேயே சொர்க்கத்தைப் பார்க்கலாம்ன்னு சொன்னாப் பல ஆண்களுக்கு கோவந்தான் வரும். கோவம் அவர்களுக்கு வராமலிருக்கனும்ன்னா அவர்களுக்கு வீராயீ மனைவியாக கிடைச்சிருக்கனும். மாநிறத்தில் அவள் பேரழகி. ‘இந்தச் சாதியில இவ்வளவு அழகா யாருடா அவ’ என்று பலரும் பேசுவார்கள். பட்டுச்சேலை கட்டி அவளைப் பார்க்கும் ஆசை கடைசிவரை நிறைவேறவே இல்லை.
இரண்டு மாதத்திலையே தோப்பு வருமானம் கூடிவிட்டதாக சார் சொன்னார். நான்கு வேலியையும் சரிசெய்து தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சியதில் பசுஞ்சோலையாக தோப்பு மாறி இருந்தது. வாத்தியார் தோப்பு என்று எல்லோரும் சொல்லுமளவிற்கு அந்த இடம் அடையாளப்படுத்தப்பட்டது.
ராமசாமி டியூஷனில் சார் தனக்கு தனி கவனம் எடுப்பதாக சொன்னான். மகிழ்ச்சியாக இருந்தது. சார் வீட்டுக்கார அம்மாவிடம் எனக்கு மட்டும் தனி டம்ளர்ல தண்ணீர் சார் கொடுக்கச் சொன்னது என் காதில் கேட்டுச்சுய்யா என்றான். ‘டீக்கடையிலையே அப்படித்தான் தர்றாங்க. விடுடா ஒரு நாளைக்கு மாறும்டா. அது மாறனும்ன்னா படிக்கனும்டா இப்போ கௌரவத்தை பார்க்காத’ என்பேன்.
சார் தோப்பில் மாச மாசம் யாகம் நடத்துவார் அப்போது எங்களை வரவேண்டாம் என்று சொல்லிவிடுவார்.
பார்ட்டி ஆபீஸில் கூட்டம் போடும்போது சென்று வந்தது. எனக்குள் ஊர் அரசியல் உலக அரசியல் போராடுவது எல்லாம் புது உணர்வை எழுப்பிவிட்டது. கட்சி எனக்குள் வேறொரு ஆளை வளர்த்தெடுத்து வந்தது கட்சிக்கேத் தெரியாது. நான் கொஞ்ச வேறு நபராக மாறி இருந்தேன்.
நான் எனக்குள் எடுத்த முடிவு எதன் பொருட்டும் இங்கு கோபம் கொண்டு விடக்கூடாது.அதையே நான் ராமசாமிக்கும் பேசும் போதெல்லாம் சொல்லி வந்தேன்.
இன்னும் மூன்று மாதங்களில் ராமசாமிக்கு முழு ஆண்டு தேர்வு வர இருப்பதால் அவன் தீவிரமாக படித்துக்கொண்டிருந்தான். ‘கவலைப்படாதீங்க இந்த வருடம் அவன் மருத்துவக்கல்லூரியில் சேருவது உறுதி’ என்று அவன் வகுப்பாசிரியை என்னிடம் சொன்னார்கள்.
சார் தோப்பில் உழுந்து விதைத்தது களைகள் பறித்து உரம் போட வேண்டியது இருந்ததால் அதிகாலையிலையே வீராயீ தோப்புக்கு களைகள் வெட்டக் கிளம்பிவிடுவாள். இரண்டு கைகளாலும் கலக்கொட்டில் அவள் மண்ணைக் கிளறி வெட்டிப் புள்ளை அள்ளுவது பார்க்கவே தனி அழகாக இருக்கும்.
இப்படியாக கடந்துபோன நாள் ஒன்றின் மாலையில் நான் என் பையை வீட்டில் வைத்துவிட்டு தோப்பிற்கு சென்றபோது வீராயீயைக் காணவில்லை. அங்கம் பக்கம் விசாரிப்பதற்கு யாரும் இல்லாததால் சார் வீட்டிற்கு போயிருப்பாளோ என்று நினைத்தேன்.
ராமசாமி டியூஷன் நேரத்தில் அங்கு வரக்கூடாது என்று சொல்லி இருக்கிறான். அதனால் அவள் அங்கு சென்றிருக்க வாய்ப்பில்லை.
கவலையில் மனம் படபடக்க பானையில் தண்ணீரை எடுத்து முகம் கழுவி குடிக்கும்போது ஒரு வேலை கிணற்றில் வழுக்கி எதுவும் விழுந்திருப்பாளோ என்று தோன்றியதால் வேகமாக கேணியை நோக்கி ஓடினேன்.
சாயந்திர இருளில் கேணிக்குள் குப்புறக் கவிழ்ந்து கிடப்பது வீராயீயேதானா என்று நினைப்பதற்குள் தீபாவளிக்கு நான் ஆசையாக வாங்கிக்கொடுத்த அந்த சேலை அவள்தான் என்பதை உறுதி செய்துவிட்டது.
“வீராயீ… “
“வீராயீ….”
“வீராயீ…”
இப்பொழுது போல் எல்லாம் ரோடுகளில் ஆட்கள் நடமாட்டம் அப்போது இருக்காது. தெருவுக்கு சென்று ஆட்களை அழைத்து வந்து தூக்க நேரமாகும். அவளைப் பார்த்த பிறகு அப்படியே விட்டுட்டுப் போக மனமில்லை. இரண்டு முறை கேணியைச் சுற்றி வந்தேன். வண்டியில் மூட்டை, வைக்கோல் ஏற்றத் தேவை என்று சாரிடம் கேட்டுப் போன மாதம் அவர் வாங்கிக் கொடுத்த வரி கயிறு ஞாபகத்துக்கு வந்தது.
அதை எடுத்து பக்கத்தில் இருந்த மரத்தில் கட்டி உள்ளேத் தொங்கவிட்டபோது கயிறு வீராயின் மேல் உரசியபடி ஆடியது சற்றே ஆறுதலாக இருந்தது. கையில் மூன்று கயிறுத் துண்டுகளை எடுத்துக் கொண்டு கிணற்றுக்குள் இறங்கியபோது கால் ஊன்றிய சுவற்று மண் கேணிக்குள் விழுந்தது. கயிறு அழுத்திய இடத்தின் மேலிருந்து சருகுகள் என் மீது விழுந்து உள்ளேக் கொட்டியது. ஒவ்வொரு வலையாகத் தேடிக் காலை வைத்து கீழே இறங்க சிரமமாக இருந்தது. ஒரு சில வலையில் தவளைகள் இருந்து கிணற்றுக்குள் குதித்தது. ஒரு வலையில் பாம்பு கழட்டிய சட்டை இருந்தது.
கீலே இறங்க இறங்க வலைகள் இல்லாமல் கயிறின் பலத்தில் சுவரை உதைத்து இறங்க வேண்டியதாக இருந்தது.
தண்ணியில் குதித்து கயித்தைப் பிடித்துக் கொண்டு அவளைப் புரட்டிபோது என்னால் அழுகையை அடக்கவே முடியவில்லை.
‘வீராயீ..வீராயீ..’என்று கத்தி அழுதது கிணற்றுக்குள் எதிரொலித்தது.
அவள் மேல் இருந்த பூரானைத் தள்ளிவிட்டு தண்ணீரில் மூழ்கி அவளை முதுகில் தூக்கிப் பார்த்தேன். வாகாக அமையவில்லை. எடுத்துச் சென்ற கயிற்றில் ஒன்றை அவளது இடுப்பிலும் ஒன்றை அவளது முதுகிலும் கட்டிவிட்டு அதன் ஒவ்வொன்றின் இரு முனைகளை எனது முதுகில் சாய்த்து எனது மார்பில் கட்டினேன். கீழே இடுப்பில் உள்ள இரண்டு முனைகளை எனது வயிற்றில் கட்டிய பிறகு தலை ஒரு பக்கம் ஒருக்கனித்துக் கிடந்தது. அவளது தலைமுடியை இரண்டாகப் பிரித்து எனது கழுத்தில் கட்டியபோது நான் களைப்பாகிவிட்டேன். அய்யோ… என் நிலமை எந்தப் புருஷனுக்கும் வரக்கூடாதுடா சாமீ…
முதல் அடி உதைத்து ஏறும்போது ஒரு ஆட்டம் ஆடி சுவற்றில் மோதியபோது அவள் இறந்திருந்தாலும் அடிபட்டிருக்குமே என்று மனசு பதறியது. மெதுவாக மேலே ஏற ஏற எப்படி ஏறுவது என்ற லாவகம் பிடிபட்டு விட்டது. ஒரு ஐந்தடி தூரமிருக்கும் கட்டியது வழுக்கி அவள் என் உடம்பின் கீழே சற்று இறங்க,தொண்டையில் கட்டிய அவள் தலைமுடி எனது கழுத்தை அழுத்தியது. கழுத்து தொங்கினால் பரவாயில்லை என அதை அவிழ்த்து கயிற்றைப் பிடித்து மேலே வெட்டப்பட்டு துளிர்த்திருந்த பூவரசைப் பிடித்து கும்புற தவழ்ந்து வந்து அவளை அவிழ்த்துப் போட்டேன்.
மகராசி மேனியில் எந்தவொரு பங்கமும் இல்லாமல் தூங்குவது போலப் படுத்திருந்தாள். ‘சாமீ அவள இப்புடி அழகாப் படச்சி. ஏன்டா அவள என்கிட்டக் குடுத்தே.’
மேலேக்கிடந்த துண்டில் அவளைத் துடைத்து சேலையைச் சரி செய்தபோது அவள் கையில் வாசனை வந்தது.
அவள் ஏன் இப்படி இறக்க முடிவு எடுத்தாள் என்று தெரியவில்லை. தண்ணீர் இறைக்கும் போது விழுந்திருப்பாள் என்றாலும் அதற்கான வாளி பாத்திரம் எதுவும் காணவில்லை.
வண்டியை ஓட்ட ஆரம்பித்ததும் அங்கிருந்த ஆடுகள் கத்தியது மாடுகள் கட்டியிருந்த அச்சியைச் சுற்றி வந்தது. வண்டியை ஒலங்கையில் நிறுத்திவிட்டு தட்டியை இழுத்து சாத்திப் பூட்டியபோது நாய் வெளியே வண்டிக்கு கீழே நின்றது. அதைப் பிடித்து உள்ளே விட்டபோது அது ஒரு ஈனமான குரலில் ஊளையும் குரைப்புமாக ஒன்றைச் செய்தது. அது என்னிடம் ஏதோ சொல்ல வருகிறது என்று மட்டும் எனக்குப் புரிந்தது. அது வேலி வழியாக வெளியே வர முயன்றபோது அதட்டியதும் உள்ளேயேப் படுத்து விட்டது.
***
3.
ராமசாமி அழுது கொண்டே இருந்தான். அவனுக்கு முகம் வீங்கிவிட்டது. கேணியில் தண்ணீர் எடுக்கும்போது விழுந்துவிட்டதாகப் பேசினார்கள். நான் எதற்குமே பதில் சொல்லவில்லை. ஊரிலிருந்து வந்த வைடூரிக் கிழவி தான் ‘அழுதுர்றா… அழுதுர்ரா’ என்றது. அதுதான் எனக்கு வீராயீயைப் பொண்ணு பார்த்து முடிச்சு வச்சது. சார் தோப்பிளையே நான் அழுதுட்டதாலையோ என்னவோ எனக்கு அதன் பிறகு அழுகை வரவில்லை.
பந்தலில் உள்ளவர்கள் எல்லோரும் எழுந்து தூரமாக ஒதுங்கி விட்டார்கள். ராமசாமி மட்டும் வீராயிக்கு பக்கத்துல நின்னான். சார் வீட்டு அம்மா மாலை கொண்டு வந்தாங்க. அவரை அழைத்து வந்தவர் தூரமாகவே வராமல் நின்று கொண்டார்.அவுங்க முறைப்படி சேலை கட்டி இருந்தாங்க.
“இவுங்கல்லாம் நம்ம வீட்டுக்கு வருவாங்களாண்ணே.” என்றான் சன்னாசி. நான் அவனை முறைத்துவிட்டு எழுந்துபோனேன். மாலையைப் போட்டவர்கள் ராமசாமி கொண்டு வந்துப் போட்ட மர ஸ்டூலில் உட்காரப் போனவர்கள் திரும்பி வந்து மாலையைத் தூக்கி வலது கையைப் பிடித்து பிறகு இருகையையும் நேராக இழுத்து வைத்துவிட்டு மாலையை சரி செய்துவிட்டு உட்காந்தார்கள்.
நான் அங்கு சென்றதும் அழுகை வரத் துண்டில் வாயைப் பொத்தி அழுதேன்.வீராயியைத் துடைத்ததில் துண்டு ஈரமாகவும் அவள் கையிலிருந்த மணமும் அதிலிருந்தது. சார் வீட்டம்மா ஐந்நூறு ரூபாய் கொடுத்தார்கள். அப்போதைக்கு அது ரொம்ப பெரியப் பணம்.
“சாருக்கு உடம்பு சரி இல்லை ஒரு வாரம் டியூசன் இல்லைன்னு பசங்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தார்.”
“சரிங்கம்மா.”
“இந்த வருடம் முழு ஆண்டுத் தேர்வு வருது. அம்மாவை நினைச்சுக்கிட்டு படிக்காம இருந்திராதடா.”
“சரிங்கம்மா.”
அவர்கள் கிளம்பிப்போனதும் தெரு முழுவதும் அவர்களைப் பற்றிதான் பேசிக்கொண்டார்கள். அவர்களைப் போன்றவர்கள் எங்களைப் போன்றவர்களின் வீட்டிற்கு வருவது அன்றையக் காலக்கட்டத்தில் நடக்கக் கூடாத காரீயம்.
வீராயின் மயானக் காரியங்கள் முடிந்த அடுத்த நாள் இரவுதான் திடீரென ஞாபகம் வந்தது. தோப்பில் ஆடு, மாடுகளுக்கு யாரும் தண்ணீர் காட்டி இருப்பாங்களா வைக்கோல் போட்டிருப்பாங்களா. சாருக்கு உடம்பு சரியில்லைன்னு அம்மா சொன்னாங்களே. சார் நினைத்தவுடன் கோவம் வந்தது.
வீட்டிற்குள் ராமசாமிக்கு பக்கத்தில் வைடூரிக்கிழவி படுத்திருந்தது. குண்டானில் இருந்த பழையதை வாளியில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு தோப்பிற்கு சென்று பார்த்தால் அங்கு எல்லாமேக் கொலைப் பட்டினியில் கிடந்தது. தோப்பில் ஏதாவது காணாமல் போயிருக்கிறதா என்று சுற்றி ஒரு முறைப் பார்த்தேன். எல்லாம் அப்படியே தான் இருந்தது. இவர்கள் வீட்டில் திருடுவது பாவம் என்று சனங்க பயப்படுவார்கள்.
எல்லாவற்றிக்கும் தண்ணீர் காட்டி வைக்கோல் அள்ளிப்போட்டுவிட்டு ஆட்டிற்கு கடலைக் கொடியைக் போரில் புடுங்கும்போதுதான் நாயின் ஞாபகம் வந்தது. கடலைக் கொடியை அள்ளி ஆடுகளுக்கு போட்டுவிட்டு நிலா வெளிச்சத்தில் நாயைத் தேடினேன்.அதை எங்கும் காணவில்லை.
எந்தப் பக்கம் திரும்பினாலும் வீராயீ நிற்பதாகத் தோன்றியது.
கிணற்றிக்கு மேற்குப் பக்கம் உரச்சாக்கு மூட்டை போல் வெள்ளையாக ஏதோ தெரிய பக்கத்தில் போனால் நாய் இறந்து போய்க் கிடந்தது. என்னை கண்ணை உருட்டிப் பார்த்துவிட்டு அதோடு அதற்கு உயிர் பிரிந்துவிட்டது. பக்கத்தில் குனிந்து பார்த்தபோதுதான் பாம்பு ஒன்றைக் கடித்துக் குதறி கொன்று போட்டதைப் பார்க்க முடிந்தது.
தலையில் கையை வைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து இருந்தேன். ‘சாமீ எனக்கு ஏன் இத்தனை சோதனை.’
வீராயீதான் இந்த நாய் குட்டியாக இருக்கும்போது வழியிலிருந்து எடுத்து வந்து வளர்த்தாள். அவளோடவே அதுவும் போய்விட்டது. ஒரு வேளை அவளையும் பாம்பு தான் கடித்திருக்குமோ அதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றியது. அவள் இறந்ததை யோசித்தாலேக் கோவமாக வருகிறது. எப்படியாவது ராமசாமியைப் படிக்க வைத்துவிட வேண்டும் அதைத் தவிர வேற எதையும் யோசிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.
கொட்டகையில் மம்பட்டியை எடுத்து வந்து தென்னை மரத்துக் கீழே குழியைத் தோண்டி அதில் நாயையும் பாம்பையும் போட்டு அவைகளின் மேல் கொண்டு வந்தப் பழைய சோத்தை ஊத்தி மண்ணைத் தள்ளிவிட்டேன். இந்த நேரத்தில் வீராயிதான் இங்க அழைத்து வந்தாளா இல்லை இந்த நாய் அழைத்து வந்ததா என்று யோசித்தவாறேக் கிளம்பினேன்.
சார் தோப்பிற்கு இப்பொழுதெல்லாம் வராததால் எனக்குப் புது சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். தேங்காய் மூட்டை வீட்டிற்கு எடுத்து வருவதற்கும் உர மூட்டைகள் தோப்பிற்கு எடுத்துப் போவதற்கும் எனக்கு உதவியாக இருந்தது.
இந்த வருடம் ராமசாமி பள்ளியின் முதல் மாணவனாக தேர்வாகி இருந்தான். அவனுக்கு கண்டிப்பாக டாக்டருக்கு படிக்க வாய்ப்பு இருப்பதாக எல்லா வாத்தியாரும் பேசிக்கிட்டாங்களாம். சாருக்கு நன்றி சொல்லலாம் என்று நினைத்தால் வீட்டிற்குப் போகும்போதெல்லாம் அம்மாவைக் தான் பார்க்க முடிகிறது.
ராமசாமி நன்றி சொல்ல வீட்டிற்குப் போனபோதும் அம்மாவைத்தான் பார்த்தானாம். அவர்கள் காலில் விழுந்தபோது தொட்டுத் தூக்கிவிட்டார்களாம். ‘இனிமேல் யாரு காலிலும் விளாதேடா.’என்று ஐந்து ரூபாய் பணம் கொடுத்தார்களாம். ‘இன்றுவரை யார் காலிலும் விழுந்ததில்லை’ என்று எப்போதாவது ராமசாமி சொல்வான்.
வீட்டிலிருந்து பேரன் மதிய சாப்பாட்டிற்கு அழைக்க வந்துவிட்டான். வெயில் கொஞ்சம் கூடுதலாக வாட்டியது. ‘கால நிலை மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம் வெயிலும் அதிகமாக இருக்கும். குளிரும் அதிகமாக இருக்கும் ‘ என்று பேத்தி ஒரு முறை சொல்லிக் கொண்டு இருந்தது நினைவுக்கு வந்தது.
மதிய சாப்பாட்டை பேத்தி சிறப்பாக சமைத்திருந்தாள். அவர்கள் என்னிடம் கிண்டலும் கேலியுமாக சாப்பாடு போட்டு சாப்பிட்டபோது மனசு நிறைவாக மகிழ்ச்சியாக இருந்தது. வீராயீக்கு இதுக்கு கொடுத்து வைக்கலியே என்ற சிந்தனை வந்தது.
“தாத்தா நாங்க கேணிப்பாலம் போறோம். நீங்க ரெஸ்ட் எடுங்க. சாயந்திரம் ஐந்து மணிக்கு நான் கொண்டு வந்து விட்றேன். அதுக்கு முன்னாடி போகனும்ன்னு உங்களுக்கு தோனிச்சுன்னா எனக்குப் போன் பேசுங்க.”என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பிப் போனார்கள்.
ராமசாமி நான்காவது வருடம் டாக்டருக்குப் படிக்கும்போது ஒரு நாள் சாரிடம் உர மூட்டைக்குப் பணம் வாங்க வீட்டிற்குப் போனேன்.
“சார் ஊருக்குப் போயிருக்கார். உள்ளார வாய்யா.”
சார் வீட்டம்மா ஐய்யா என்று அழைத்தது ஒரு மாதிரியாக இருந்தது. வீராயீ துக்கத்தன்னைக்கு தவிர இதற்கு முன் அவர்களிடம் நான் பேசியதில்லை. அவர்கள் வீட்டுப் பெண்களை வெளியேயும் பார்க்க முடியாது.
“இல்லைம்மா இருக்கட்டும். பணம் கொடுத்தா நான் போயிருவேம்மா.”
“உள்ளே… வாய்யா.”
எனக்கு கூச்சமாக இருந்தாலும் தயங்கியபடி உள்ளேப் போனேன்.
“வீராயீ எப்படி செத்தான்னு உனக்குத் தெரியுமா.”
நான் இதை எதிர்பார்க்கவில்லை. தலையை நான் குனிந்து நின்றேன்.
“ராமசாமி தான் டாக்டராயிட்டானே.இப்பவாவது பேசுய்யா.”
நான் அழுதேன்.
“என்கிட்டே இரண்டு நாளைக்கு முன்புதான் சொன்னாள். நான் பேசி சரி செய்கிறேன் என்று அவளிடம் வாக்குறுதி குடுத்தேன். அதற்குள் அவள் இறந்துவிட்டாள். அவ துக்கத்துக்கு நான் வந்தப்போ அவளது கையை நான் சரி செஞ்சேனே நினைவு இருக்கா. அது ஏன்னுத் தெரியுமா.”
“…..”
“என் வீட்டு ஜவ்வாது வாசனை அவள் கையில வந்துச்சு. அதான் நான் மறுபடியும் கையை சரி செய்றது மாதிரி மோந்து பார்த்தேன். அவள் வலது கை முழுவதும் அந்த ஜவ்வாது வாடை இருந்தது.”
“நான் கேணியிலிருந்து தூக்கித் துடைக்கும் போதும் அந்த வாடை வந்ததும்மா.ரொம்ப நாள் அந்த துண்டை வச்சிருந்தேம்மா. நாம போர்வெல் போட்ட பிறகு கேணியைத் தூத்தோமே அப்போ அதுக்குள்ள அதைப் போட்டுட்டேம்மா.”
“வீராயீ செத்தனைக்கு அவன்கிட்டப் பேசினது. அதுலேர்ந்து இப்பவரையும் பேசல. சாகுறவரைப் பேசப்போறதா இல்லை. அமெரிக்காவுல இருக்கிற பசங்க.அவனிடம் ‘என்னப் பிரச்சினை.’ என்று எப்படி எல்லாமோக் கேட்டுப் பார்த்தாங்க. ‘உங்க அப்பாகிட்டேயே’க் கேளுங்கன்னு சொல்லிட்டேன்.”
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
“நான் சின்ன வயதில் பாட்டி வீட்டில் வளர்ந்தவள். பாட்டி தேவதாசி முறைக்கு எதிராக போராடியவர்கள். இவர்கள் அயோக்கியத்தனம் ஒவ்வொன்னையும் பாட்டி என்கிட்டே சொல்லிக் காட்டி வளர்த்தாள். அவள் என்னிடம் பேசுவதை மொட்டை கடுதாசி எழுதி தலைவர்களுக்குப் போடுவாள். அவர்கள் அதை அப்படியே மேடைகளில் பேசுவார்கள். சட்ட சபையில் பேசுவார்கள். எல்லாவற்றையும் பேப்பரில் காட்டுவாள். அவள் வெளி உலகிற்கு வந்திருந்தால் பெரிய அரசியல் தலைவராக வந்திருப்பாள். அவள் தாத்தாவிடம் பேசாததற்கு காரணம் எனக்கு மட்டும் தான் தெரியும். ஒவ்வொரு ஷனமும் தாத்தா அவளிடம் செத்துக் கொண்டிருந்தார். ஆனாலும் நாய் நக்கிக் தின்ட்றதை விடல.”
“….”
“என் பிள்ளைகளுக்கு சமத்துவ சாதத்தைத்தான் ஊட்டி வளர்த்திருக்கேன். என் மகளாக என் பாட்டி பொறந்துட்டாளோன்னு பல நேரங்களில் நான் நினைப்பேன்.”
அவர்கள் உள்ளே இருந்து மோர் கொண்டு வந்து கொடுத்தார்கள். வெள்ளிக் குவளையில் கொடுத்ததால் அதை வாங்கத் தயங்கினேன். அவர்கள் முறைத்ததால் வாங்கிக் குடித்தேன்.
“நான் ஏன் உன்னைய உள்ளேக் கூப்பிட்டேன்னுத் தெரியுமா.”
“தெரியாதும்மா”
“நான் தூரமாப் படுத்து பத்து நாளாவுது. எனக்கு எப்போப் படுத்தால் குழந்தை பொறக்கும்ன்னு என் பாட்டி எனக்குத் தெளிவாக சொல்லிக் கொடுத்திருக்கா. எனக்கு உன் குழந்தை வேணும். அதுவும் உன்னை மாதிரியே வேணும்.”
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
” அம்மா. நல்லவர்கள் தவறு செய்யக்கூடாது. நல்லவர்கள் நல்லவர்களாக இருப்பதுதான் மத்தவங்களுக்கு உதாரணம். உங்கப் புள்ளைங்கல மாறுபட்டு வளர்த்திருக்கீங்க. அவுங்க நாள இங்க நன்மைகள் விளையனும். எனக்கு வீராயீ மேல பாசம் இல்லைன்னு நினைக்கிறீங்களா. அவ செத்ததே ராமசாமி நல்லபடியாக படிக்கனும்ன்னுதாம்மா.”
“…”
“எங்க வீட்டு பொண்ணுங்களை மத்த சாதிக்காரனுங்க நாசம் பண்ட்றாங்க. எங்க பொண்ணுங்க. எங்ககிட்டே சொல்றதில்ல.எங்க ஆளுங்களும் தெரிந்தாலும் ஒன்னும் பண்ட்றதில்லை. அதுக்காக நாங்க உதுத்துப் போனவங்கன்னு அர்த்தமில்லை.எங்களப் போல கீழ்சாதிக்காரங்க உங்கள எதுத்து இங்க வாழ முடியாதுன்னு சூழ்நிலை இல்லாம இருந்துச்சுன்னா. எங்க பயலுவ உங்களப் போன்ற சாதிக்காரங்க வீட்டுக்குள்ள எல்லாம் புகுந்துருவாங்க.”
“….”
“எனக்கு என் புள்ளைப் படிக்கனும். அவன் இன்னும் ஆயிரம் பேரப் படிக்க வைக்கனும். அதுலேர்ந்து ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு இடத்துக்குப் போவாங்க. அங்கேர்ந்து அவுங்க ஒவ்வொருத்தரும் போர் புரிவாங்க. ஒருத்தர் அரசியல்ல.ஒருத்தர் சினிமாவுல. ஒருத்தர் பத்திரிகையில ஒருத்தர் நீதித்துறையில. இப்போதைக்கு எங்களைப் போன்ற கீழ்சாதிக்காரங்க படிக்கனும்மா. ராமசாமிக்கிட்ட எப்போதும் கௌரவத்தை எதிர்பார்க்காத தன்மானம் போகுதேன்னு கவலைப்படாத. நீ உனக்காக படிக்கல. உன் தலைமுறைக்காகப் படிக்கிறேடான்னுதான் அவனை நான் வளர்த்திருக்கேன்.”
“….”
“என் லட்சியம் ரொம்ப பெரிசும்மா. அதுக்கு முன்னாடி நான் எதப்பத்தியும் யோசிக்க முடியாது. உங்களைப்போன்ற சாமி சிலையாட்டம் பொம்பளை என்னை விரும்பி அழைக்கும்போது நான் விழகிப்போகிற அளவுக்கு ஜடமில்லைம்மா. என் லட்சியத்திற்கு முன்னாடி எதுவுமே எனக்கு பெரிசு இல்லைம்மா.”
சார் வீட்டம்மா என் காலில் விழுந்தார்கள்.
“நீங்கதானேம்மா ராமசாமியை யார் காலிலும் விழக்கூடாதுன்னீங்க.”
“என்னைய மன்னிச்சுருய்யா. எப்படிய்யா இவ்வளவு தெளிவா இருக்கே. என்னைய இப்படிப் புது மனுஷியா மாத்திட்டியேய்யா. அதான் கால் விழுந்தேன்.”
நான் பேசியதில் எனக்கே ஒரு தெளிவு கிடைத்திருந்தது. நான் இதுபோல் யாரிடமும் பேசியதில்லை.
நாம் ஆசைப்படும் தலைவர்கள் அவர்களின் ஆசைகளை மட்டும் நிறைவேற்றி இருந்தால் இங்கு இத்தனை மாற்றங்கள் வந்திருக்குமா என்று அடிக்கடி நினைப்பது இப்போதும் நினைவுக்கு வந்தது.
ராமசாமி டாக்டருக்கு முடித்து கலைக்ட்டராகும் பரிச்சை எழுதிக் கொண்டிருந்தபோது சார் மாரடைப்பில் இறந்துபோனதாக சொன்னார்கள். அமெரிக்காவிலிருந்து அவர் பிள்ளைகள் வந்திருந்தார்கள். சார் வீட்டம்மா என்னைக் ‘காரீயம் முடியும் வரை நீ இந்தப்பக்கம் வராதே’ என்றார்கள்.
தோப்பிற்கு அவர்களின் மகனும் மகளும் வந்தபோது மகன் என்னிடம் சொன்னார்.
“உங்களை வீட்டுப் பக்கம் வரவேண்டாம்ன்னு சொன்னது. சொந்தக்காரங்க உங்களை மட்டமாக டீல் பண்ணுவாங்கன்னுதான். உங்களை வரவேண்டாம்ன்னு சொன்னதாகச் அம்மா சொல்லச் சொன்னாங்க. பொதுவாக எங்கம்மா அவ்வளவு ஈஸியாக யாரையும் நல்லவங்கன்னு சொல்ல மாட்டாங்க. உங்களை ரொம்ப நல்லவங்கன்னு சொன்னாங்க.”
“உங்களுக்கு அவுங்க அம்மாவாக கிடைச்சதுக்கு நீங்க கொடுத்து வச்சிருக்கனும். உங்கள் இருவரையும் நல்லவிதமாக வளர்த்திருக்காங்க.”
“எதை வச்சு சொல்றீங்க. “
“ஒருரிடம் பேசிக் கொண்டு இருக்கும்போதே. அவர்களின் பேச்சும் செயலுமே அதைக் காட்டிக் கொடுத்துவிடும். அப்போது அவர்களின் பெற்றோர்கள் நினைப்பு வந்தாலே. அதுவும் கண்டுபுடிக்க. ஒரு அடையாளம். பல முறை எனக்கு உங்களிடம் பேசும்போது உங்கள் அம்மாவின் ஞாபகம் வந்தது.”
அவர்கள் சிரித்துவிட்டு தோப்பை சுற்றிப் பார்த்தார்கள். தூத்து மூடியிருந்த கேணியிடம் நின்று ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். எனக்குள் வீராயீ மறுபடியும் வந்து உட்கார்ந்து கொண்டாள்.
இப்படித்தான் ராமசாமி பெரிய படிப்பு படித்து அரசாங்க உத்தியோகத்தில் வேலை பார்க்கும்போது அவனைச் சுற்றி ஆட்கள் கையைக் கட்டி நின்று அவன் சொல்வதை கேட்கும் காட்சியைப் பார்க்க வேண்டும் என்பாள்.
ஒரு நாள் தோப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது சார் வீட்டம்மா அவரின் பிள்ளைகளோடு வந்திருந்தார்கள். தேங்காய் இளநீர் குடித்துக் கொண்டு இருக்கும்போது அவர்களின் மகன் பேசினார்.
“அங்கிள். நாங்கள் இன்னும் இரண்டு நாட்களில் அமெரிக்கா போகிறோம். வீட்டுக் கொட்டகையில் தோப்பிற்கு தேவையான சாமான்கள் இருந்தா எடுத்துக்கங்க. அம்மாவும் எங்கூட வர்றாங்க.”
“நல்லபடியாக போய்ட்டு வாங்கய்யா. அம்மாவைப் பத்திரமாகப் பார்த்துக்கங்க.”
“வீட்டை நாங்க வந்தாப் போனாப் தங்க இருக்கட்டுமேன்னு வச்சுருக்கோம் அங்கிள். இந்த மூன்று ஏக்கர் தோப்பை உங்க பேருக்கு எழுதிக் கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கோம்.”
“ஐய்யா உங்களுக்கு வீடு இங்க இருக்குன்னா. இந்த தோப்பும் உங்ககிட்ட தான் இருக்கனும்.”
“நாங்க வாங்கிற சம்பளத்துல இத வித்தா கால்வாசி கூட வராது அங்கிள். நாங்க விரும்பிதான் கொடுக்கிறோம். மறுக்காம வாங்கிக்கங்க. எங்களுக்கு சென்னையில் வீடு காலணி, காம்ப்ளக்ஸ் எல்லாம் இருக்கு அங்கிள்.”
நான் எதுவும் சொல்லாமல் மூடிய கேணியின் மேல் முட்டாகக் கொட்டி இருக்கும் மண்ணின் மேல் உட்கார்ந்தேன். அதன் மேல் பெயர் தெரியாத மரக்கன்று ஒன்று இரண்டடிக்கு வளர்ந்திருந்தது. இப்பொழுது அடிக்கடி இதன் மேல் உட்கார்ந்து இருக்கிறேன். அது மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
“உழைப்பவருக்கு அவர் உழைக்கும் இடத்தைக் கொடுக்கணும்னு உங்கள் தலைவர் சொன்னா ரசிக்கிறீங்க. அதையே செயலாக செஞ்சா மறுக்கிறீங்களே அங்கிள்.”என்று அவர் கையை நீட்டி மண் முட்டிலிருந்து இறங்க கை நீட்டினார். அந்தக் கையைப் பற்றியதும் ‘சார் வீட்டம்மா சகலத்தையும் கற்பித்துக் கொடுத்திருக்கிறார்கள்’ என்பதை தெளிவாக உணர முடிந்தது.
****
4.
ராமசாமி கலெக்டரானதும் எங்கள் வீட்டில் டியூசனுக்கு ஆள் போட்டு தெருப்பிள்ளைகளுக்கு கிளாஸ் எடுக்கச் சொன்னான். அதன் பிறகு இருந்த இடத்தில் வீடு கட்டிய பிறகு வீட்டிற்கு மேலேக் கொட்கைப் போட்டு அதில் டியூசன் எடுக்கச் சொன்னான். காலணி கட்டிபோது மொட்டை மாடியில் பெரிய தகர ஷெட் போட்டு கிளாஸ் எடுக்கச் சொன்னான். நூறு பேருக்கு மேல் அங்கு படித்தார்கள்.
ஒரு நாள் அவன் போன் செய்யும்போதுக் கேட்டேன்.
“ஏம்ப்பா காஷ்மீர்லையே வேலை பார்க்கிறே. டிவியில் ஏதாவது செய்தி பார்த்தாக்கப் பயமா இருகுய்யா.”
“அய்யா… நான் ஆந்திராவுல வேலை பார்க்கும் போது நக்சலைட் இருக்காங்களேன்னு சொன்னீங்க. அஸ்ஸாமுல தீவிரவாதி இருக்காங்கன்னுப் பயந்தீங்க. ஒரிசாவுலையும் இதையேத்தான் சொன்னீங்க.”
“நீதானேப்பா பிரச்சினை இருக்கிற ஊருக்கா விரும்பிப் போற.”
“ஆமய்யா. ஒரு விசயம் உங்களுக்குத் தெரியுமா. காஷ்மீர்ல இருக்கிற போராட்டக்காரர்கள். பாகிஸ்தான்ல இருக்கிறப் போராட்டக்காரர்கள் ஒவ்வொருத்தர்க்கிட்டையும் என் போட்டோ இருக்குய்யா.”
“ஐய்யய்யோ.. ஏன்ய்யா.”
“ஒவ்வொருவரும் படையில் சேரும்போதே என் போட்டோவைக்காட்டி இவரைப் பார்த்தால் கை கொடுத்து பாராட்டி விட்டு வாருங்கள். வாய்ப்புகள் இருந்தால் இரண்டு ரக்காத் தொழுது அல்லாஹ்விடம் துவாச் செய்துவிட்டு வாருங்கள் என்பதாக சொல்லப்படுகிறதாம் ஐய்யா. அதனால நீங்க கவலைப்படாதீங்க. நாம நல்லவர்களாக இருக்கிறதால்.நம்மைச்சுற்றியும் நல்லவர்கள் தான் இருப்பாங்க.”
இதற்கு முன்பு இருந்த அரசு ஸ்பெஷல் தீர்மானம் ஒன்றை இவனுக்காக நிறைவேற்றி வைத்துள்ளது. இவன் விரும்பினால் காஷ்மீரை விட்டு வேறு இடத்திற்கு போகலாம். அரசியல் கால்ப்புணர்ச்சிக்காக அவனை டிரான்ஸ்பர் செய்ய முடியாது. அதற்குப் பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதல் பெறவேண்டும்.
காலையில் இலவச மருத்துவம் பார்க்கிறான். அதன் பிறகு காலெக்டர் வேலை. இரவு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இங்கிருந்து வேலை பார்க்கும் கம்பெனிகள் இரண்டு வைத்திருக்கிறான் அதில் கொஞ்ச நேரம் வேலைகள் பார்ப்பான். அந்தக் கம்பெனிகள் சென்னையில்தான் இருக்கிறது.
இங்கு தோப்பிற்குப் பக்கத்தில் இடங்கள் வாங்கி அந்த இடத்தில் மொத்தம் முப்பது ஏக்கர் வைத்திருக்கிறான். அங்கு பில்டிங் கட்டி பள்ளி மற்றும் அரசு வேலைகளுக்கு பயிற்சிக் கூடம் வைத்திருக்கிறான். ஆயிரம் பேருக்கு மேல் படிக்கிறார்கள்.இங்கு சாப்பாடு தங்குமிடம் எல்லாமே இலவசம் தான். இங்கு படிக்கும் எல்லோருமே கீழ்நிலையாகப் பார்த்த சாதிப் பிள்ளைகள்தான்.
சட்டக்கல்லூரி இங்கு கட்டுவதற்கு முயற்சித்துக்கொண்டு இருக்கிறான். நீதிமன்றத்திற்குள் ஒதுக்கப்படவர்கள் போக ஒரே வழி இதுதான் என்று சொல்லிக் கொண்டு இருப்பான்.
கேணி இருந்த இடத்தில் இருந்த மரக்கன்று ஆப்பிரிக்காவில் உள்ள அரியவகை மரமாம். அது எப்படி இங்கு முளைத்தது என்று தான் எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். கேணிக்கு மேற்குப் பக்கம் மண் பாதையில் ஒரு சின்ன பாலம் இருந்தது. அங்கு மக்கள் பஸ்ஸைவிட்டு இறங்கி அந்தக் கரையில் நடந்து பக்கத்து ஊருக்குப் போவார்கள். தற்போது அந்த ஊருக்கு நேராக சாலை வசதி வந்துவிட்டதால் இந்தப் பாலம் எல்லாம் எப்போது என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு ஊரிலும் பஞ்சாயத்து குடிதண்ணீர் தொட்டி இருப்பதால் இந்தக் கேணியும் தேவையற்றதாக போய்விட்டது.ஆனால் இப்பொழுவரை இந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு கேணிப் பாலம் ஸ்டாப் தான்.பைபாஸ் ரோடு போட்டுவிட்டதால் இப்போது இதில் பேருந்துகளும் வருவதில்லை.
பேரப் பிள்ளைகள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு மாலையில் வைத்தியம் பார்க்க மக்கள் வீட்டில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்து இருந்தார்கள். கேணிப் பாலத்திலிருந்து வந்தப் பேரன் என்னைக் கடையில் விட்டு வருவதாகவும் பேத்தியை வரிசைப்படி ஒவ்வொருவராகப் பார்க்கச் சொன்னான்.
செருப்புகளை மூடி இருந்த ஷீட்டை எடுத்து பின்னால் போட்டு விட்டு பக்கத்தில் இருந்த சன்னாசியிடம்
“யாரும் தேடி வந்தாங்களாடா”
“நீ வரமாட்டேன்னு நினைச்சேன்.”
“ஏன்டா லூசு வரலைன்னா தான் கடையை எடுத்துட்டுப் போயிருப்பேனடா.”
“அத நான் யோசிக்கலப்பாரூ.”
தாழ்ந்த குரலில் அவனாகவேப் பேசிக்கொண்டான்.’நான் லூசா. ஒருக் குடும்பத்தில ஒருத்தன் லூசா இருப்பான். இங்க மொத்தக் குடும்பமே லூசா இருக்காங்கப்பா. இவங்க என்னைய லூசுங்கிறாங்க. பைத்தியக்காரங்க.’ என்று முனகிக் கொண்டே கடையை எடுத்துக் கொண்டு போனான். குடித்தால் நான் இருக்கும்போது கடையில் இருக்கக்கூடாது என்று அவனுக்குத் தெரியும். அதான் உடனேக் கிளம்பிப் போறான்.
கொஞ்ச நேரத்தில் எஸ்.பி சார் வந்து நின்றார். நான் எழுந்து நின்றேன் ‘உட்காருங்கய்யா’ என்றவர் வழக்கம்போல செக்கை டப்பாவில் போட்டுவிட்டுக் கிளம்பினார்.
அவர் புதிதாக டூட்டியில் ஜாயின் பண்ணபோது டவுனே நடுங்கியது. தள்ளு வண்டி கடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து ஸ்டேசனில் போட்டுவிட்டார். பத்து மணிக்கு மேல் ரோட்டில் யாரும் நடமாட முடியாது. பத்து மணிக்கு மேல் அரசியல் மீட்டிங் போட முடியாது என டவுனை வேறு மாற்றி வைத்திருந்தார். இரவு ஏழு மணிக்கு நான்கைந்து போலீஸூடன் கடைத் தெருவில் நடந்து வருவார். அவர் வட மாநிலத்திலிருந்து வந்ததால் போலீஸ்களில் ஒருவர் எப்போதும் ஹிந்தி தெரிந்தவராக இருப்பார்.அப்பொழுது எங்கள் வழியாக போகும்போது ‘இனிமேல் இங்க உட்காரக் கூடாது’ என்றார் .
“ஐயா நான் சின்ன வயசிலிருந்தே இங்கதான் இருக்கேன். அதுக்கு முன்னாடி எங்க அய்யா இங்கதான் இருந்தாரு. நாங்கள் தார்ரோட விட்டு கீழே இருக்கிற மண்ணுல தானே சார் உட்கார்ந்து இருக்கோம்.”
அவர் போலீஸ் பக்கம் திரும்ப விவரங்கள் தமிழில் கேட்டதும். ‘நாளைக்கு இங்க யாருமே இருக்கக் கூடாது’ என்று கத்தியபோது அவரைச் சுற்றி இங்கிருந்த கடைக்காரர்கள் அத்தனை பேரும் வந்து சூழ்ந்து கொண்டார்கள்.
“இங்க இருக்கின்ற அத்தனை கடைக்காரர்கள் பிள்ளைகளுக்கும் அவர்தான் ஸ்கூல்,காலேஜ் பீஸ் கட்டுறார் தெரியுமா சார்.
அவரிடம் விவரங்கள் சொல்லப்பட்டதும் காலைத் தொட்டு ஆசிர்வாதம் செய்யுங்கள் என்றார். அதன் பிறகு இந்த இடத்தைக் கடக்கும்போது காரை மெதுவாக போகச் சொல்லி சல்யூட் செய்வார். நான் பெரும்பாலும் குனிந்த தலை நிமிராமல் வேலைகள் செய்து கொண்டு இருப்பேன். தைக்க யாரும் வரவில்லை என்றால் படிக்கின்ற பிள்ளைகளுக்கு இலவசமாக காலணிகள் கொடுப்பதற்கு எப்பொழுதும் செருப்புகள் தயார் செய்து கொண்டே இருப்பேன்.
அன்றிலிருந்து எஸ்.பி அவர்கள் சம்பளம் வாங்கியதும் செக் ஒன்றை எனது டப்பாவில் அவர் இங்கு இருக்கும் வரை மாதா மாதாம் தவறாமல் போட்டுவிடுவார்.
வீட்டிற்குள் நுழைந்தபோது பேரப்பிள்ளைகள் நோயாளிகளைப் பார்த்து முடித்திருந்தார்கள். நாங்கள் எப்பொழுதும் போல ஒன்றாக சாப்பிட்டு முடிக்கும்பொழுது ராமசாமி போன் செய்தான்.
பேரனிடமும் பேத்தியிடமும் பேசிவிட்டு என்னிடம்
“நாளைக்கு காலையில ஊர்லதானேய்யா இருப்பீங்க.”
“ஆமய்யா.”
“நான் மணிப்பூர் மாறுதல் கேட்டேன். அவுங்க எனக்கு விருது குடுக்கிறதா பேசிக்கிறாங்கையா. நான் வேண்டாம்ன்னு சொல்லலாமான்னு யோசிக்கிறேன். வரலாற்று ஆவணத்துக்கு என் பெயரைக் கொடுக்க எனக்கு விருப்பமில்லைய்யா. இப்போ பலபேர் பெயரை வாடகைக்கு விட்டு பொழைக்கிறாங்க. அதுபோல என்னால் இருக்க முடியாது.அது அரசியல்ன்னு எல்லோருக்கும் தெளிவாகத் தெரியுது.”
“அது பத்தி எனக்குத் தெரியாது. எதிரிகளை எப்பொழுதும் உருவாக்காதே. அது உன் லட்சியத்தை அழித்துவிடும். உன் பாதையை திசை மாத்திவிடும். அவர்களை சமாளிப்பதிலையே வாழ்க்கையின் பெரும்பகுதி போயிரும். நாம் செய்து கொண்டிருக்கும் இந்தப் பணியின் பலன் இன்னும் பத்து இருபது ஆண்டுகளில் தெரியும். நீ புத்தகங்கள் எழுத வேண்டியதில்லை. இவர்களின் வாழ்க்கை மாறி இருப்பதில் உன் வரலாறு இருக்கும். விருதை ஏற்றுக்கொள். அதனால் எதுவும் ஆகிவிடாது.”
“இப்பதான் மனசு தெளிவாக இருக்குய்யா.”
“என் காலம் இன்னும் கொஞ்ச நாள்ல முடிஞ்சிரும். நீயும் உன் சந்ததிகளும் படிப்பில் பல துறைகளில் இருப்பார்கள். அவர்களில் பல பேர் நமக்கு எதிராக திருப்பப்படுவார்கள். விலை போன அவர்கள் நம்மை வேதனைகளில் தள்ளிக்கொண்டே இருப்பார்கள். நீயும் சரி,உன் பிள்ளைகளும் சரி, அவர்களின் பிள்ளைகளும் சரி ஒடுங்கிக்கிடப்பவர்களுக்கு படிப்புக்கொடுக்கிறதும். அவர்களுக்கு அரசு வேலைகளுக்கு பயிற்சி கொடுக்கிறது மட்டுமே நோக்கமாக இருக்கட்டும். வேறு எந்த பக்கமும் நம் கவனம் திசை மாறிவிட வேண்டாம். படிப்பையும் அதிகாரத்தையும் நாம கொடுத்துருவோம். அவர்கள் அதைக் கொண்டு தம் சமூகத்தை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று விடுவார்கள்.”
ராமசாமியிடம் பேசுவதை பேரப்பிள்ளைகள் கவனிப்பதை அறிந்துதான் நான் கொஞ்சம் கூடுதலாகப் பேசினேன். குழந்தைகள் பெற்றோர்களைப் பார்த்துதான் வளர்கிறார்கள் என்பதை இங்கு பலபேர் அறிந்திருக்கவே இல்லை.
நான் வெளியில் வரண்டாவில் கிடைக்கும் கயிற்றுக் கட்டிலில் வந்து படுக்கும்போது தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு
“வேறு எதுவும் வேணுமா தாத்தா.” என்றான் முன்னோடியான்.
“குயினி எங்கய்யா. இங்கதான் உட்கார்ந்து இருந்துச்சு. ஏதோ புத்தகத்தை செல்ஃப் தேடிக்கிட்டு இருக்கு. அதுதான் ஏதாவது படிச்சிக்கிட்டே இருக்குமே.”
“நீயும் ஏதாவது புத்தகம் படிச்சிக்கிட்டே இரு. ‘ஒரு புத்தகம் நம்மோடு இருக்கிறது.ஒரு தோழன் கூட இருக்கிற மாதிரி’ன்னு பார்ட்டி ஆபீஸில் தோழர் ஒருவர் அடிக்கடி சொல்வார்.”
அவன் ஆமோதித்தபடி வீட்டிற்குள் சென்றுவிட்டான். நான் இங்கிருந்து பார்க்கும்போது தரையில் படுத்து இருவரும் ஏதோ கட்டையானப் புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார்கள்.
****

5.
காலையில் நான் கடைக்கு கிளம்பும்போது இருவரும் தாங்களும் வருவதாகச் சொன்னார்கள்.
“நீங்க கார்ல வாங்க. நான் சைக்கிள்லப் போறேன்.”
“இல்லை தாத்தா பேசிக்கிட்டே மூனு பேரும் நடந்து போவோமே.” குயினி.
சைக்கிளைத் தள்ளிக்கொண்டு மூன்று பேரும் நடக்கும் போது எனக்கு ராமசாமியை பள்ளிக்கு அழைத்துச் போனது ஞாபகத்திற்கு வந்தது. நான் திரும்பி வீட்டைப் பார்த்தேன்.
“என்ன தாத்தா ஏதாவது எடுக்கனுமா.”
” இல்லைப்பா. நான் ராமசாமியை இப்போ போற மாதிரி சைக்கிளைத் தள்ளிக்கிட்டு பள்ளிக்கு கூட்டிட்டுப் போகும் போது ராமசாமி கலெக்டர் ஆபீஸூக்கு போற மாதிரி அப்படியே பூரிப்பா பார்த்துக்கிட்டிருப்பா. இப்ப அவன் கலெக்டராயிட்டான் அவதான் பார்க்க இல்ல.”
நான் மௌனமானதும் பிள்ளைகள் அமைதியாக நடந்து வந்தார்கள். நான் பேச்சை வேறு பக்கம் மாற்றினேன்.
“எப்போ ஊருக்குப் போறீங்க.”
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“நான் இன்னைக்குப் போறேன் தாத்தா.குயினி நாளைக்கு போகுது.”
“ஏன் தனித்தனியாக போறீங்க.”
“அத சொல்றோம் தாத்தா. நம்ம கிட்ட இவ்வளவு வசதிகள் வந்தும் நீங்க இன்னும் இப்படி வெயில்லக் கிடந்து செருப்புத் தைக்கனுமா தாத்தா. வயசாகிட்டதில்ல.”
“எனக்கும் அது தெரியும்ய்யா. நான் வீதியில இருக்கிறது ஒரு அடையாளம். என்னையப் பார்த்து நம்ம புள்ளைங்க வெறி கொண்டு படிப்பாங்க. காந்தி ஆடையில்லாம துண்டோட அலைந்தது மாதிரி. நான் செய்யுறது என் சமூகத்தின் மீதான ஆளுமை. ஒரு கிழவன் வெயில்லக் கிடந்து தன் பிள்ளைய டாக்டராக்கி கலெக்டராக்கி இருக்கான். நம்மல படிக்க வைக்கிறான்.நாம இன்னும் நாலு பேரைப் படிக்க வைக்கனும்ன்னு அவர்களுக்கு தோனும். நம்ம தெருவுல நான் செருப்புத் தைக்க கிளம்புறேன். எல்லாப் பிள்ளைகளும் பள்ளிக்குபோகுது. பல பேர் அரசாங்க வேலைக்குப் போறாங்க.நாடு முழுக்க கேணிப்பாலம் மாதிரி ஆரம்பிக்கனும். அதுதான் என் கனவு. நீ வேனா கேணிப்பாலத்துல பிள்ளைங்க கிட்டேப் போயிக்கேட்டுப்பாரு. அது என்ன சொல்லுதுன்னு பாரு.”
குயினிதான் சொன்னது.
“நான் பல பேருக்கிட்டே கேட்டு வீடியோவே எடுத்து வச்சிருக்கேன். அவர்கள் எல்லோருமே ஒரே மாதிரியான பதிலைத் தான் சொல்றாங்க. ‘எனக்கு படிக்கிறது புரியலைன்னா. தாத்தாவைத்தான் நினைச்சுக்குவேன். எனக்கு படிக்கும்போது தூக்கம் வந்துச்சுன்னா தாத்தாவைத்தான் நினைச்சுக்குவேன். ஏதாவது தவறு செய்யிற நினைப்பு வந்தாலே தாத்தாதான் முன்னால நிக்கிறார்’ன்னு ஒவ்வொருத்தரும் சொல்றாங்க.”
“நமக்கு முன்னாடி கார் மெதுவாக போகுது. நாம அதக் கடந்து முன்னாடிப் போவோமாய்யா.”
“அது போகட்டும் விடுங்க தாத்தா.உங்களுக்குன்னு எந்த ஆசையும் இல்லையா தாத்தா.”
“நான் வாழ்ந்து வந்த காலத்துல அதெல்லாம் யோசிக்கவே நேரமில்லைய்யா. அது பத்தி பேசவேண்டாம். கடந்துபோன கசப்பை நினைச்சு முகம் சுழிக்க வேண்டாம். என் ஆசை எல்லாமே இல்லாதவனுக்கு படிச்சிக் கொடுக்கனும். அதப்புடுச்சி அவன் மேல வரனும். ஒரு வேளை இன்னைக்கு நீங்க வாழ்கின்ற காலமாக இருந்தால் என் ஆசை வேறையாகக் கூட இருக்கலாம்ய்யா. உண்மைய சொல்லனும்ன்னா என் நாடி நரம்புகள் எல்லாம் படிப்புத் தவிர வேற இல்லைய்யா.”
சாக்கடையில் தண்ணீர் பாட்டில் ஒன்று குறுக்குவாக்கில் தேங்கியதில் சாப்பிட்ட வாழை இலை சிக்கி இருந்தது.அதன் மேல் இன்னும் குப்பைகள் சேர்ந்ததால் கழிவு நீர் வாய்க்காலின் தண்ணீர் சாலைக்குள் வருமாறு இருந்தது. அந்தப் பாட்டிலை எடுத்து ஓரமாக எடுத்துப் போட்டுவிட்டு பையிலிருந்த தண்ணீரில் கையைக் கழுவிவிட்டு நிறுத்திய சைக்கிளை தள்ளிக் கொண்டு போனதை பிள்ளைகள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
“நான் தான் எடுத்துவிட்றேன்னே. நீங்கள் ஏன் தாத்தா தடுக்குறீங்க.”
“நீ வெளுப்பான ஆடையாக போட்டிருக்கே. அதான் தடுத்தேன்ம்பா.”
நாங்கள் நடந்து வந்து சேர்ந்த பிறகு சைக்கிள்களை ஓரமாக நிறுத்திவிட்டு பையை எடுத்து கீழே வைத்து உட்கார்ந்தேன்.
“நீங்க கிளம்புங்கய்யா.”
“கொஞ்சம் நேரம் இருந்துட்டுப் போறோம் தாத்தா.”
எனக்குப் பக்கத்தில் சுருட்டி இருந்த சாக்கை இழுத்து முன்னோடியானும் உட்கார்ந்தான். சன்னாசி இன்னும் வரவில்லை. காத்தவராயனையும் காணவில்லை. கொஞ்ச நேரத்தில் யார் யாரோ எங்களைச் சுற்றி நின்றார்கள். நான் எதுவும் புரியாமல் முன்னோடியானிடம்
“என்னய்யா இது ” என்றேன்.
“வெயிட் பண்ணுங்க தாத்தா.”
அவனிடம் ஒருவர் மஞ்சள் நிறத்தில் பைலை கொடுக்க அதை வாங்கி மின்னோடியான் கையெழுத்துப் போட்டான்.
என்னை எழுப்பி நிற்கச் சொல்லிவிட்டு
“இது என் தாத்தா. இவரது அயராத உழைப்பில் என் அப்பா டாக்டருக்கு படித்து இப்போது கலெக்டராக இருக்கார். நானும் டாக்டருக்கு படித்து கலெக்டராக இன்று வேலைக்கு சேர்கிறேன். என் ஆசையை நிறைவேற்றிய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி”
கூடி நின்றவர்கள் எல்லோரும் கை தட்டினார்கள். புகைப்படம், வீடியோ எடுத்தார்கள்.
“தாத்தா மன்னிச்சிருங்க. நீங்க இதுக்கு ஒத்துக்க மாட்டீங்களோன்னுப் பயந்துதான். உங்க கிட்ட சொல்லலைத் தாத்தா. இது என்னோட சின்ன வயது கனவு தாத்தா. என் பிள்ளைகளுக்கும் இதை சொல்லிதான் நான் வளர்ப்பேன் தாத்தா. அவங்க கலெக்டர் ஆனாலும் அங்கப் பக்கத்தில் இருக்கிற செருப்புக் கடையிலிருந்து முதல் கையெழுத்துப் போடுங்க அப்படின்னு சொல்வேன். எதுவரைன்னு கேளு தாத்தா.”
” சொல்லுய்யா.”
“செருப்புத் தைக்க வீதியில் ஆட்கள் இல்லைங்கிற நிலை வர்ற வரைக்கும் தாத்தா.”
அவனைக் கட்டிப்பிடித்து ‘நீ என் கனவுடா. உன் ஆசையை மறுக்க முடியுமா. என்னைவிட உன் அப்பன் உன்னைய நல்லா வளர்த்திருக்கான்ய்யா.”
என் சட்டைப் பையில் இருந்து கருப்பாக ஒன்றை எடுத்தான்.
“என்னைய்யா இது.”
“மைக் தாத்தா. அதோ நமக்கு முன்னாடி வந்த கார் இருக்கே. அதுக்குள்ளார கேமரா வச்சு எடுத்துக்கிட்டு வந்தாங்க. அது பிபிசின் வெளிநாட்டு டிவி தாத்தா.”
நான் அந்த கார் இருக்கின்ற பக்கம் கும்பிட்டேன்.
கலெக்டர் டவாளி கையிலிருந்த பைலை வாங்கிக்கொள்ள அவனுக்கான கார் வந்து நின்றது. அதில் அவனும் குயினியும் ஏறினார்கள். குயினி கார்க் கண்ணாடியைத் திறந்து
“தாத்தா நாளைக்கு தான் நான் வருவேன். நாளைக்கு நைட்டே எனக்கு ட்ரையின்.”
“பத்திரமாகப் போய்ட்டுவாங்க தாயீ.”
அவர்கள் போனதும் கடைக்காரர்கள் ‘விழா மாதிரி நாங்கள் செய்ய மாட்டோமா’ என்று வருத்தப்பட்டார்கள். எனக்கு விவரம் தெரியாது என்று அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன்.
என் கனவு வேறு திசையில் என் பேரப்பிள்ளைகளின் வழியாக பயணிப்பதில் எனக்கு மன நிறைவாக இருந்தது.
செருப்புகள் தைத்து விட்டு நிமிர்ந்தபோது கடந்து போனவர்கள் என்னைப்பார்த்து சிலர் சிரித்தார்கள் சிலர் கும்பிட்டார்கள்.
மாலையானதும் வீட்டில் பையை வைத்து விட்டு கேணிப்பாலம் போனேன். வீராயீ கிணற்றில் உள்ள மரத்தை சுற்றி சிமெண்ட்டால் போட்டிருந்த திண்டில் படுத்து இருந்தேன். எனக்கு மட்டும் தான் இந்த இடத்தில் படுப்பதற்கு அனுமதி இருந்தது. எல்லா இடத்திலும் கேமரா வைத்து ராமசாமியும் பேரப் பிள்ளைகளும் அவர்களுடைய போனில் கண்காணித்தார்கள்.
நான் சைக்கிளில் பௌர்ணமி வெளிச்சத்தில் வந்து கொண்டு இருந்தபோது இரண்டு பசங்க என்னை நிறுத்தினார்கள்.
“ஐயா கேணிப்பாலம் இப்படியேதானேப் போகனும்.”
“ஆமாம். நீங்க எங்கேர்ந்து வர்றீங்க.”
“திருச்சிக்குப் பக்கத்தில் இருந்து வர்றேங்கய்யா.”
“ஏய்யா அங்கேர்ந்தா நடந்து வர்றீங்க.”
“ஆமய்யா.”
“சாப்பிட்டீங்களா.”
“இல்லைய்யா.”
ராமசாமி கண்டிப்புடன் சொல்லி இருந்தான்.’வயசாகிவிட்டதால எப்போதும் வெளியேப் போகும்போது தண்ணியும் பிஸ்கெட்டும் எடுத்துக்கிட்டு போங்கய்யா’ என்பான். அது இதுவரை பயன்படவில்லை. ஆனால் இப்போது அது பயன்பட்டதுபோல எதுவும் பயன் தரவில்லை.
அவர்கள் சாப்பிட்டு தண்ணீரைக் குடித்துவிட்டு சொன்னார்கள்.
“அப்பா செப்டிக் டேங்க்ல இறங்கி சுத்தம் செய்யும்போது விச வாயு தாக்கி இறந்துட்டாரு. அதைக் கேட்டு அம்மாவும் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க. கொஞ்ச நாள் ஸ்கூல விட்டுட்டு வேலைக்குப் போனோம். படிக்கிற ஆசை விடலைத் தாத்தா. என் ப்ரண்ட் தான் கேணிப்பாலத்துக்குப் போங்கடான்னு சொன்னான்.”
அவர்களிடம் எனது சைக்கிளைக் கொடுத்து காலையில் நான் அங்கு வந்து எடுத்துக்கொள்வதாக வழியைச் சொல்லி அனுப்பினேன். அவர்கள் யார் ஓட்டுவது என்று அவர்களுக்குள் எனக்குத் தெரியாமல் செய்கையிலையே ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டார்கள்.
நான் மெதுவாக அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன்.
“டேய் கேணிப்பாலம்ன்னா என்னவாடா இருக்கும்.”
“கேணியில் அறிவுங்கிற தண்ணியைக் குடித்து இயலாமைங்கிற பாலத்தைக் கடக்கனும்னுங்கிற அர்த்தத்துல வச்சிருப்பாங்க.”
“ஆதார் கார்டு, ரேசன் கார்டு இருக்காடா.”
“பாக்கெட்லப் பத்திரமா பாலித்தீன் கவர்ல சுத்தி வச்சிருக்கேன்டா.”
“சேர்துக்கிட்டா. ஊர்ல இருக்கிற ட்ரஸை எடுத்துக்கிட்டு வரலாம்டா.”
“அதெல்லாம் தான் கிழிஞ்சிருக்கேடா.”
அதன் பிறகு அவர்கள் பேசியது தெளிவாக கேட்கவில்லை. நானும் அவர்களுடன் சென்றிருக்கலாமோ என்று தோன்றியது. முயற்சி உடையனுக்கு வழியைக் காட்டினால் போது அவர்கள் இலக்கை அடைந்துவிடுவார்கள் என்பது இந்தப் பசங்களின் பேச்சில் தெளிவாகத் தெரிந்தது.
வயதிற்கான இயலாமையின் நடையாக இல்லாமல் நான் நடப்பது ஒரு இளைஞனைப் போல இப்போது மாறி இருப்பது. எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
*****

