கொங்கு இலக்கியப் பிதாமகன் ஆர்.ஷண்முகசுந்தரம்

’ஆர்.ஷண்முகசுந்தரம் என்கிற கொங்கு நாட்டு எழுத்தாளரின் கதைகளை எல்லாம் படித்துப்பார்த்து, வியந்து ரசித்து, அதைப்பற்றி ஓயாமல் எழுதிக் கொண்டிருந்த ஒரே ஜீவன் க.ந.சு.தான்’ என்பார் தஞ்சை ப்ரகாஷ். ‘ப்ரகாஷுக்கென்ன, க.நா.சு. எதை எழுதினாலும் வியப்பார், யாரைப்பற்றி எழுதினாலும்- அவருடைய எழுத்து உன்னதமானது என்கிற அபிப்ராயம் கொள்வார்’ என்று ப்ரகாஷையும் க.நா.சு. வையும் பிடிக்காதவர்கள் மறைவாக முணுமுணுப்பதைப்போல, இந்த ஷண்முகசுந்தரம் விஷயத்தை அவ்வளவு எளிதாகப் பேசிப் புறந்தள்ளிவிட முடியாது. ‘ஷண்முக சுந்தரம் ஒரு இலக்கியச் சாதனையாளர் என்றும், வட்டார இலக்கியம் படைத்ததில் இந்தியாவுக்கே முன்னோடி’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் வியந்து போற்றிய எழுத்துப்பிரம்மாக்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

க.நா.சு. என்றாலே அந்தக்காலத்தில் பல எழுத்தாளர்களுக்கு உதறல் எடுக்கும். அந்த அளவுக்கு, சாரமற்ற எழுத்துக்களை அடித்துத் துவைத்துக் காயப்போடுகிறவராக, சமரசமற்ற எழுத்தாளராக, விமர்சகராக விளங்கியவர். இன்னும் சில எழுத்தாளர்களுக்கு, தங்களுடைய படைப்புகளைக் குறித்து க.நா.சு. நல்லவிதமாக ஒரு வார்த்தையாவது சொல்லமாட்டாரா என்கிற ரகசிய அரிப்பும், ஏக்கமும் இருந்து கொண்டிருந்தது. அப்பேர்ப்பட்ட க.நா.சு. தன்னுடைய கட்டுரை ஒன்றில் கூறுகிறார் : “ஷண்முகசுந்தரத்தின் இலக்கிய நினைப்புகள் வாழ்க்கையில் இருந்து, வாழ்க்கை அனுபவத்திலிருந்து பிறந்தவை. புத்தகங்களிலிருந்து பிறந்தவை அல்ல. ஒரு Robust Common Sence என்பார்களே அது அவருக்கு அதிகம். அதைவைத்து அவரால் பல கலாபூர்வமான விஷயங்களை அளவிட முடிந்தது”

இங்கு க.நா.சு.குறிப்பிடும் Robust Common Sence ‘வலுவான பொதுஅறிவு’ என்று பொருள்./ திருப்பூரிலும் கோபியிலும்- மீண்டும் திருப்பூரிலும் மாறிமாறி ஷண்முகசுந்தரம் பயின்றாலும் அவர் உயர்நிலைப்பள்ளிக் கல்வியைத் தாண்டவில்லை. குறை கல்வி பெற்றவர்தான் 22 வயதில் ‘நாகம்மாள்’ என்கிற முன்னுதாரணமான நாவலை எழுதினார். ஒரு உருதுமுஸ்லிம் பெரியவரிடம் இந்தி, பார்சி மொழிகளைக் கற்றுக்கொண்டு 120 வேற்றுமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துத்தந்தார். சத்யஜித்ரே திரைப்படமாகத் தயாரித்து இயக்கிய ‘பதேர் பாஞ்சாலி’ இந்திய சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று. அதன் அசல் வடிவம் ஒரு வங்காள மொழி நாவல். விபூதிபூஷன் பந்தோ பாத்யாய என்பவரால் எழுதப்பட்டது. ‘பதேர் பாஞ்சாலி’ நாவலை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர் ஆர்.ஷண்முகசுந்தரம். சரத்சந்திரர் என்று நம்மால் குறிப்பிடப்படும் சரத்சந்திர சட்டோபாத்யாய வங்காள மொழியின் இலக்கிய மேதை. அவருடைய எல்லா நாவல்களையும் ருசித்து ரசித்து ரசனை உணர்வு மேலோங்க ஷண்முகசுந்தரம் மொழிபெயர்த்தார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதையும் அவர் விட்டுவைக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக அவற்றுள் ஜேக்‌ஷாபரின் ‘முன்னோடிகள்’ (The Pioneers) மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. 120 வேற்றுமொழி நூல்களை மொழிபெயர்த்துள்ளபோது, நிச்சயமாக அவற்றுள் கணிசமானவை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகவும் இருக்க வாய்ப்புள்ளது. மிகக்குறைந்த காலகட்டத்தில் செறிவான முறையில் அவர் இந்த மொழிபெயர்ப்புப் பணிகளை நிறைவேறியுள்ளார் என்பதை நினைக்க, ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அவருடைய இச்சாதனை தமிழ்ச்சூழலில் பொருட்படுத்தப்படவே இல்லை, அதுதான் உணமை.

ஆர்.ஷண்முகசுந்தரம் என்றால், அவரை ஓரளவு அறிந்து வைத்துள்ள குறைந்தபட்ச தமிழிலக்கியவாதிகளுக்கு அவர் எழுதிய ‘நாகம்மாள்’ நாவலே நினைவில் நின்றிருக்கும். நான் முதலில் அவருடைய மொழிபெயர்ப்புப் பணிகளைக் குறித்து சுருக்கமாகவேணும் குறிப்பிட முயற்சித்தமைக்குக் காரணம், தமிழன் இன்றளவும் பின்தங்கியிருப்பது மொழிபெயர்ப்புத்துறையில் தானே என்கிற ஆதங்கத்தினால். குறை கல்வியறிவு மட்டுமே வாய்க்கப்பெற்ற ஷண்முகசுந்தரத்தால் தன்னார்வத்தின் மூலம் பிறமொழிகள் கற்றுத்தேர்ந்து 120 நூல்களைத் தமிழுக்கு மொழிமாற்றித் தருவதற்கு இயன்றிருக்கிறதென்றால், எல்லா நவீன தொழில்நுட்ப மிகை வசதிகளும் பெற்றிருகின்ற நம்மால் ஏதும் செய்ய இயலாமற்போனதற்காக வெட்கப்படத்தானே வேண்டியிருக்கிறது. எனினும் குறைந்த அளவிலேனும் தமிழுக்காகச் சிலர் தம்மை மொழிபெயர்ப்புப்பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஒரு மொழிபெயர்ப்பு என்பது எப்படி இருக்க வேண்டுமென்று- ஷண்முகசுந்தரம் தன் அனுபவ அறிவுடன் சொல்லும் யோசனை இங்கு குறிப்பிடத்தக்கது.

“மூல ஆசிரியரின் உள்ளக்கிடக்கை இன்னதென இனம் காணும் பண்பு இன்றியமையாதது. மூல ஆசிரியரே மொழிபெயர்க்கப்படும் மொழியில் எழுதுவாரானால் எப்படி எழுதுவாரோ அப்படி எழுத வேண்டும். கூடிய அளவுக்கு இருமொழிப் பண்புகளையும், வாழ்க்கை, இலக்கிய மரபுகளையும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு நம்மொழி இடம் கொடுக்குமோ அந்த அளவுக்கு எழுதும் பக்குவம் வரவேண்டும். முதலில் எழுதும்போதே தப்பும் தவறும் இல்லாமல் அடித்தல் திருத்தல் இன்றி எழுதும் பழக்கம் கைவரப்பெற்றால் தான் சிந்தனைப் போக்கில் ஒருமையும் ஒழுங்கும் உண்டாகும்”

மொழிபெயர்ப்புக்காக பிறமொழி நூல்களை வாசித்தபோது அவை தமக்குள் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்து ஷண்முகசுந்தரம் உணர்வு பூர்வமாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கின்றார். குறிப்பாக வங்காளமொழி எழுத்தாளர்கள் அவர்மேல் நிறைய பாதிப்பை, செல்வாக்கைச் செலுத்தியுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

“சரத்சந்திரர், பங்கிம் சந்திரர், தாகூர், விபூதிபூஷன், தாரா சங்கர் போன்றோரின் வங்க நவீனங்களைப் படித்துப் படித்து இன்புற்றேன். சமூகத்தின் மீது வங்க நாவலாசிரியர்கள் வைத்திருக்கும் இறுக்கமான அன்பை உணர்ந்தேன். அவர்கள் கலையைக் கலையாக மட்டும் கண்டவர்கள் அல்லர். மற்றவர்களைக் காட்டிலும் சரத்சந்திரர் என்னை நிரம்பக் கவர்ந்தவர். வங்கத்தின் இதயநாடி வங்க நாட்டுப்புறங்களில் தான் துடிக்கிறது என்ற உண்மையை அவருடைய ஒவ்வொரு எழுத்தும் ஒலித்தது. அதனால்தான் அவருடைய ‘அசலா’ வை முதன் முதலில் மொழிபெயர்த்தேன்”

என்று அவர் தீபம் (அக்டோபர் 1970) இதழில் எழுதியுள்ளதைப் படிக்கும்போது நம்மால் இதைப் புரிந்துகொள்ள முடியும்.

21 நாவல்களையும், சிறுகதைகள் சிலவற்றையும் எழுதியிருந்தாலும் ஆர்.ஷண்முகசுந்தரத்தினுடைய ‘மாஸ்டர் பீஸ்’ என்று பெரும்பான்மையினரால் கருதப்படுவது ‘நாகம்மாள்’ நாவல்தான். நாகம்மாள் என்று உச்சரிக்கும் போதே அதன் தொடர்ச்சியாக ஆர்.ஷண்முகசுந்தரம் என்கிற பெயரும் வந்துவிடுகிறது தான். அவருடைய சிறந்த நாவல்கள் என வேறுசிலவற்றைக் குறிப்பிடுகிறவர்களும் இருக்கவே செய்தனர். உதாரணத்திற்கு நகுலன், ‘நாகம்மாளை விடவும் அறுவடை சிறந்த நாவல்’ என்று கூறியிருப்பார். சிட்டி-சிவபாதசுந்தரம் என்னும் இலக்கிய இரட்டையர் ‘அழியாக்கோலம்’ ‘சட்டி சுட்டது’ இரண்டு நாவல்களையும் முக்கிய ஆக்கங்கள் என்று குறிப்பிட்டிருப்பார்கள். சுந்தர ராமசாமிகு ‘நாகம்மாள்’ மட்டுமே பிரதானம். க.நா.சு.வுக்கோ ஷண்முகசுந்தரத்தின் அத்தனை எழுத்துகளும்.

“ஷண்முகசுந்தரத்தின் நாவல்களை அவை வெளிவர வெளிவரப் படித்ததுடன், பின்னர் கையில் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் படிப்பது என்பது எனக்குப் பழக்கமாகிப் போய்விட்ட ஒருகாரியம். அவற்றில் சிலவற்றைப் படித்த நினைவு மறக்காமல் மீண்டும் படிக்க வேண்டும் என்ற தாகத்துடன் பல தடவைகள் தேடிப்பிடித்துப் படித்ததும் உண்டு” என்று நாகம்மாள் நாவலின் மறுபதிப்புக்கு எழுதிய முன்னுரையில் க.நா.சு. வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

நாகம்மாள் நாவலில் அப்படி என்னதான் விசேஷம் என்று பார்க்கப்போனால், கதையைப் பொறுத்தமட்டிலும் சாதாரணம் தான். சிவியார்பாளையம் எனும் கிராமத்தில் சின்னப்பன் என்கிற ஒரு விவசாயி. அவன் மனைவி ராமாயி. சின்னப்பனின் விதவை அண்ணி ஒருத்தி- அவள்தான் நாகம்மாள். நாகம்மாளின் மகள் முத்தாயா. இவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். குடும்பம், விவசாயம் இரண்டையும் திறம்பட நிர்வகித்து வருகிறாள் நாகம்மாள். இந்தக்குடும்பத்துக்கு எதிரி மணியகாரர். மணியகாரரின் ஏவல் கெட்டியப்பன். கெட்டியப்பன் ஒரு போக்கிரி. மணியகாரருக்கு சின்னப்பனின் குடும்பத்தை இரண்டாக்கி, அவர்களுக்குச் சொந்தமான நிலபுலன்களை அபகரிக்க வேண்டுமென்று ஆசை. ஆகவே ஏவல் கெட்டியப்பனை அதற்கு பயன்படுத்துகிறார். நகைமுரணாக நாகம்மாளுக்கு கெட்டியப்பன் மீது ஒருவித ஈடுபாடு. அதையே சாக்காகக் கொண்டு கெட்டியப்பன் நாகம்மாளை மூளைச்சலவை செய்து, பாகப்பிரிவினை கேட்கத் தூண்டுகிறான். நாகம்மாளும் சின்னப்பனிடம் கேட்கிறாள். இருவருக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது அங்கு வந்த கெட்டியப்பன் தன் கைத்தடியால் சின்னப்பனின் மண்டையில் தாக்குகிறான். சின்னப்பன் இறந்துவிடுகிறான். நாகம்மாள் எதுவும் செய்யத் தோன்றாமல் மெளனமாகிறாள்.

நாவலின் கதைப்போக்கை இவ்வாறு சுருக்கமாகச் சொல்லிவிட்டாலும், இந்த சுருக்கத்துக்குள் அடங்கிவிடாத விசாலமான தன்மைகள் கொண்ட நாவல் நாகம்மாள். தேச விடுதலைக்கு முந்தைய, தொழில்மயமாகாத கொங்குப்பகுதி கிராமங்களில் கால் பதித்தவாறு ஷண்முகசுந்தரம் இந்நாவலை நடத்திச் செல்கிறார். கீரனூர், ஒரத்துப்பாளையம், சிவியார்பாளையம், வெங்கமேடு, தளாபாளையம், சாவடிப்பாளையம், ராசிபாளையம், கள்ளிவலசு போன்ற காங்கயம் வட்டத்திலுள்ள பட்டிக்காடுகளே இவருடைய கதைகளின் நிகழ்விடங்கள். இங்கெல்லாம் சின்னப்பனும், ராமாயியும், நாகம்மாளும், முத்தாயாக்களும் கூடவே கெட்டியப்பன்களும், மணியகாரர்களும்தான் வாழ்ந்திருக்க முடியும். 1940-களின் காலம் அப்படி. இன்றைக்கு அந்த குக்கிராமங்களெல்லாம் பேரூர்களாகிவிட்டன. தொழில் வளர்ச்சி பெருகிவிட்டதன் காரணமாக, எங்கு பார்த்தாலும் கும்பல் கும்பலாக வட இந்தியர்கள் அலைந்து திரியக் காண்கிறோம். தான் படித்து வளர்ந்த திருப்பூர் நகரத்தின் அசுர வளர்ச்சியை ஷண்முகசுந்தரம் காணாமல் போயிருந்தாலும், அதற்கான சகலவிதமான அறிகுறிகளையும் கண்டிருக்கக்கூடும். கண்முன்னால் தனது கிராமங்கள் உருமாறிக் கொண்டிருப்பதை ஒருவித பதைபதைப்புடன் தான் அவர் கவனித்திருக்க வேண்டும். அவர் கதர் சட்டையணிந்த காங்கிரஸ்காரராக, காந்தியின் ‘கிராமத்தை நோக்கித் திரும்பும்’ கருத்தின்மேல் பிடிமானம் கொண்டவராக இருந்தவர்.

சுதந்திரத்திற்கு முந்தைய கொங்கு கிராமங்கள் எவ்வாறு இருந்தன, அங்கிருந்த மனிதர்களின் பிழைப்பு எப்படியிருந்தது என்று நமக்குத் தெளிவாகக் காட்டும் ஆவணப்படம் போல ‘நாகம்மாள்’ நாவல் விளங்குவதுடன் தமிழ் இலக்கியம் என்றென்றும் பெருமிதப்பட்டுக் கொள்ளத்தக்க கலைப்படைப்பாகவும் மிளிர்கிறது. ஜோடனையற்ற அதன் சித்தரிப்புமுறை, மையக்கதாபாத்திரத்தின் செறிவான வார்ப்பு, மண்மணம் கமழும் எளிய, ஆனால் கூர்மையான உரையாடல்கள், அசலான கிராமத்தை வாசகரின் கண்களுக்கு முன் நிறுத்துதல் போன்ற உயர்ந்த அம்சங்கள் சராசரி கிராமியப் படைப்பாளிகளிலிருந்து நாகம்மாளை பலபடிகள் மேலே மேலே உயர்த்திக் காட்டியபடி இருக்கிறது.

வறண்ட நிலப்பகுதிகள், பருத்திக்காடுகள், வலசுகள், பட்டிகள், பாளையங்களிலிருந்து நாகம்மாளை நமக்குத் தந்தார் ஷண்முகசுந்தரம். வட்டார நாவல் எழுதுகிறேன் என்று அவர் எங்குமே பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை. காடுகளைப் பார்த்து வியந்து, காட்டை அளந்து திரிந்து வளர்ந்த காட்டானாகவே அவர் இருந்ததன் காரணமாகவே, நாகம்மாளை அவ்வளவு சத்துமானத்துடன் அவரால் உருவாக்க இயன்றிருக்கிறது.

“தமிழ் நாவல்களில் மட்டுமல்ல, இந்திய நாவல்களிலும் ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. கிராமிய சூழ்நிலைகளை முழுவதும் உபயோகித்து பிராந்திய நாவல் என்கிற துறையை முதன்முதலாக இந்தியாவில் உருவாக்கியவர் அவர்தான் என்று சொல்லலாம்” என்று க.நா.சு. தனது முன்னுரையில் கூறுவதும்-

“நாவல் உலகில் சஞ்சரிப்பது ஆசிரியருக்கு நெடுஞ்சாலையில் நடந்து செல்வது போன்று மிகச்சரளமான இயற்கையான காரியமாக இருக்கிறது. பாத்திரங்கள் ஆயாசம் எதுவுமின்றித் தம்போக்கில் எழும்பி வருகிறார்கள். அவர்களை ‘உருவாக்கும்’ காரியம் எதுவுமில்லை. நாகம்மாளும், பண்ணாடியும் வாழ்வு மீது ஆசிரியர் கொண்டுள்ள ஈடுபாட்டின் வெற்றி என்று சொல்லலாம். ஆசிரியருடைய கதாபாத்திரங்களில் மட்டுமல்ல, தமிழ் நாவல் கதாபாத்திரங்கள் என எடுத்துக்கொண்டாலும் கூட, நாகம்மாளுக்கு மிக முக்கியமான இடமுண்டு. எவ்வித ஒப்பனையும் செய்யப்படாமல் உயிர்ப்புடன் இயங்குகிறாள் அவள்” என்று சுந்தரராமசாமி தனது ‘ஷண்முக சுந்தரத்தின் கிராமங்கள்’ கட்டுரையில் தெரிவிப்பதும், நாகம்மாள் நாவல் குறித்த மதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. (சு.ரா. தனது கட்டுரையில் நாகம்மாளுடன் இணைத்துக் குறிப்பிடும் ’பண்ணாடி’ பாத்திரம் ஷண்முகசுந்தரத்தின் ‘சட்டி சுட்டது’ நாவலில் இடம்பெறுகிறது.)

‘நாகம்மாள்’ நாவல் வெளிவந்து கவனம் பெற, க.நா.சு. தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் அதைக்குறித்து எழுதிவந்தது ஒரு முக்கிய காரணம். இதைத்தான் சுந்தரராமசாமி, “தீராத பிடிவாதத்துடன் க.நா.சு. இவரைக் கவனப்படுத்தியிருக்காவிட்டால் நம்முடைய பரிபூரணமான புறக்கணிப்புக்கு இவர் ஆளாகியிருக்கக்கூடுமோ?” என்று தன்னுடைய கட்டுரையில் கேட்கிறார். நாகம்மாள் குறித்து இதுவரை எழுதப்பட்ட விமர்சனங்கள்/ மதிப்புரைகளில் க.நா.சு. எழுதிய முன்னுரைதான் எனக்குத் தனிப்பட்ட முறையில் சுவாரசியமாகப்பட்டது. நாகம்மாள் தனது கணவனின் தம்பி சின்னப்பனிடம் பாகப்பிரிவினை கேட்பதை இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையுடன் அவர் ஒப்பிட்டு எழுதியிருந்தார்.

“பிற்காலத்து சரித்திராசிரியர்கள், அரசியல்வாதிகள் இந்தியாவைத் துண்டாடும் காரியத்தில் மிக முனைப்பாக நின்று காரியத்தைச் சாதித்தது லேடி மவுண்ட்பேட்டன் தான் என்று அரசல்புரசலாகச் சரித்திரத்தை எழுதி இருந்தார்கள். நாகம்மாளுக்கும் லேடி மவுண்ட்பேட்டனுக்கும் வெகுதூரம் இருப்பது போல் தோன்றினாலும் துண்டாடுகிற தீர்மானத்தில் இருவரும் ஒன்றுதான்” என்று எழுதியவர், நாவலில் சின்னப்பன் கொலை செய்யப்படுவதை சிலப்பதிகாரத்தில் கோவலன் கொலை செய்யப்படுவதுடன் ஒப்பிடுகிறார்.

“கொலை விழுந்துவிடுகிறது. இந்தக்கொலையின் விளைவுகளைப் பற்றிப் பின்னர் ஒரு நாவலில் விவரிக்க இருந்தார் ஆசிரியர். ஆனால் இந்த நாவல் கிராமத்து வீணன் கையில் தம்பி கொலையுண்ணுவதுடன் இயற்கையாக முடிந்துவிடுகிறது. கோவலன் கொலையுண்டதற்கும் இதற்கும் ஒரு ஒற்றுமை- அநியாயமான கொலை”

நாகம்மாளுக்கும் இந்தியப்பிரிவினைக்கும், நாகம்மாளுக்கும் காப்பியப் பாத்திரமான கோவலனுக்கும் முடிச்சுப்போடும் க.நா.சு.வின் சிந்தனையைத்தான் நான் சுவாரசியம் என்று குறிப்பிட்டேன்.

1917-ல் பிறந்து 1977 வரை அறுபது ஆண்டுகள் வாழ்ந்து ஆஸ்துமா நோயின் காரணமாக இறந்துவிட்ட ஷண்முகசுந்தரம், வேளாண்மைத் தொழில் செய்யும் வசதியான குடும்பத்தில் பிறந்தார். குழந்தைப்பருவத்திலேயே தாயை இழந்து, தந்தைவழிப் பாட்டியிடம் அவர் சொன்ன நீதிக்கதைகளையும், புராணக்கதைகளையும் கேட்டு வளர்ந்தார். உயர்நிலைப்பள்ளியுடன் படிப்பு முடிந்துவிடுகிறது. இளைஞனாக உருமாறிக்கொண்டிருந்த அவருடைய சிந்தனையில் பெரும் மாற்றத்தை வாசிப்புப்பழக்கம் ஏற்படுத்துகிறது. மணிக்கொடி இதழ் குறித்து அறிந்துகொண்டு, அதை வாங்குவதற்காக கீரனூரிலிருந்து கோவைக்கு சைக்கிளிலேயே சென்று திரும்புகிறார். பிறகு மணிக்கொடி இதழில் எழுதவும் தொடங்கினார். அவருடைய முதல் சிறுகதையான ‘பாறையருகில்’ மணிக்கொடி இதழில் பிரசுரமானது.

அவருடைய சிறுகதைகள் ‘நந்தாவிளக்கு’ ‘மனமயக்கம்’ என இரண்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. நாவல்கள் அளவுக்கு, அவருடைய சிறுகதைகளைக்குறித்த கருத்துகள் பெரிதாக எழவில்லை. சிறுகதைகளையும் அவர் சிறப்பாகவே எழுதியிருக்கக்கூடும் என்று எனக்குப்படுகிறது. மணிக்கொடிக்கு அவர் எழுதியனுப்பிய முதல் கதையான ‘பாறையருகில்’ ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டது. ஒரு வ்யோதிகன், தன் காதலி முன்பு எப்போதோ தவறிவிழுந்த ஆற்றங்கரைக்குத் திரும்பத் திரும்ப வந்து நினைவுகளை மீட்டிப்பார்த்துச் செல்வான். 1930-களில் இப்படியானதொரு கதையை எழுத அவரால் இயன்றிருக்கிறது. இது அச்சு அசலாக மணிக்கொடி பாணி கதைதான். மெளனி, கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி ‘டச்’ இந்தக்கதையில் தெரிகிறது.

மணிக்கொடி எழுத்தாளர்களில் பலர் பெரும்பாலும் சிறுகதைகள் எழுதுவதிலேயே கவனம் செலுத்தியபோது ஷண்முகசுந்தரம் தான் முதன்முதலில் நாவல் எழுதினார். நாவல் எழுதுவதற்கு அவருக்கு உந்துசக்தியாக விளங்கியவர் கு.ப.ரா. என்றழைக்கப்பட்ட கு.ப.ராஜகோபாலன். ஷண்முகசுந்தரத்துக்குள் ஆழமாக இறங்கியிருந்த கிராமத்து வாழ்க்கையை மோப்பம் பிடித்துவிட்ட கு.ப.ரா., ‘நீங்கள் அறிந்து வைத்திருக்கிற கிராமத்து வாழ்க்கையை வீணாக்காமல் அப்பிடியே நாவலாக எழுதலாமே?’ என்று திரியைத் தூண்டிவிட்டார். அதை அப்படியே பற்றிக்கொண்ட ஷண்முகசுந்தரம் இரண்டே மாதத்தில் ‘நாகம்மாள்’ நாவலுடன் கு.ப.ரா. விடம் வந்து சேர்ந்தார். அதை வாங்கிப் படித்துப் பார்த்த கு.ப.ரா., ஒரு அச்சு அசலான கொங்கு கிராமத்தின் வாழ்க்கை நாவலாக விரிந்திருப்பது கண்டு பரவசமாகி அதற்கொரு முன்னுரையும் எழுதித் தந்தார்.

ஷண்முகசுந்தரத்தைப்பற்றி எழுதும் போது எப்படி கு.ப.ராஜகோபாலனையும், க.நா.சு.வையும் குறிப்பிடாமல் இருக்க முடியாதோ, அதேபோல ஷண்முகசுந்தரத்தின் உடன்பிறந்த தம்பி திருஞானசம்பந்தத்தையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஷண்முகசுந்தரம் திருமணம் செய்துகொண்டபோதும், அவருக்கு குழந்தைப்பேறு அமையவில்லை. இதனால் தம்பியின் நான்கு குழந்தைகளையும் அவரே பொறுப்பேற்றுக் கொண்டு வளர்த்தார். தம்பி திருஞானசம்பந்தமும் இலக்கிய ரசனை கொண்டவர். எழுத்தாளர். அண்ணனும் தம்பியும் இணைந்து ‘வசந்தம்’ என்னும் பெயருள்ள இதழையும், ‘புதுமலர்’ என்கிற பதிப்பகத்தையும் தொடங்கி நடத்தினார்கள். கல்கி, கம்பதாசன், ஆர்.கே.சண்முகம் செட்டியார் ஆகியோரின் நூல்களை புதுமலர் பதிப்பகம் வெளியிட்டது. அண்ணனும் தம்பியும் சேர்ந்து 1944 ஆ ஆண்டு கோவையில் ஜி.டி நாயுடுவின் இல்லத்தில் தமிழ் எழுத்தாளர்களின் முதல் மாநாடு கூட்டினார்கள்.

க.நா.சு., கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, கல்கி, சிட்டி, சி.சு.செல்லப்பா, புதுமைப்பித்தன் ஆகியோருடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தாலும், ஷண்முகசுந்தரத்துக்கும் க.நா.சு.வுக்கும் ஒருவித ஆத்மார்த்தமான பிணைப்பும் புரிதலும் இருந்தது. அது ஷண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை மீது க.நா.சு. கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் சார்ந்தது. க.நா.சு. வைத் தேடி வீட்டுக்குப் போய் அவர் இல்லாவிட்டால் தனது வெற்றிலைப் பெட்டியிலிருந்து ஒரு வெற்றிலையை எடுத்து கதவிடுக்கில் செருகி வைத்துவிட்டு வந்துவிடுவாராம் ஷண்முகசுந்தரம். அந்த வெற்றிலை க.நா.சு.வுக்கு விஷயத்தை விளக்கிவிடுமாம். எழுத்தாளர்களுக்குள் இப்படி ஒரு நட்பு.

‘சிலகாரணங்களை முன்னிட்டு சுமார் பத்தாண்டுகள் நான் எழுத்து வாழ்க்கையைத் துறந்து இருந்த போது அந்த மெளனத்தையும் உடைத்தெறிந்தவர்- க.நா.சு. தான்’ என்கிறார் ஷண்முகசுந்தரம்.

“என் சிந்தனை வளத்தின் தடைகுறித்து என் மனைவி கூட கவலைப்படாத நிலையில் அந்த அதிசய உள்ளத்திற்கு இவ்வளவு அக்கறை இருக்கிறதே என்பதை எண்ண எண்ண எனக்கே ஒரு மாதிரியாக இருக்கும், நெஞ்சமெல்லாம் நெகிழும்” என்று அவர் எழுதும்போது க.நா.சு.வின் ஆழ்ந்த அக்கறை வெளிப்படுகிறது.

மணிக்கொடி எழுத்தாளர், வட்டார நாவல்களின் முன்னோடி, நூற்றுக்கும் அதிகமான மொழிபெயர்ப்பு நூல்களுக்குச் சொந்தக்காரர் போன்ற பெருமிதங்கள் இருந்தாலும், ஆர். ஷண்முகசுந்தரம் குறித்த உரையாடல்கள் தமிழில் குறைவு. புதுமைப்பித்தன், கு.பா.ரா., ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, மெளனி வரிசையில் இருந்தே ஆகவேண்டிய பெயர்களில் ஒன்றான ஆர்.ஷண்முகசுந்தரம் இருட்டடிப்பு செய்யப்படுவதன் காரணம் என்ன என்று எனக்கு விளங்கவில்லை. அவருடைய நூல்கள் கிடைப்பதும் அறிதாக இருக்கிறது. நாகம்மாவைக்கூட தேடித்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது. அவருடைய மொழிபெயர்ப்புகள் மறுபதிப்பு செய்யப்படவில்லை. ஒருவேளை அரசு பெரிய மனம் கொண்டு, ஷாண்முகசுந்தரத்தின் நூல்களை நாட்டுடைமை ஆக்கினால் இந்தத் தடைகள் எல்லாம் உடைபடுமா தெரியவில்லை.

எழுத்தாளர் ஜெயமோகன் இலக்கிய முன்னோடிகள் குறித்து விரிவாகவும் விமர்சனப் பார்வையுடனும் ஒரு ஆக்கப்பூர்வமான நூல் எழுதியுள்ளார். ‘மண்ணும் மரபும்’ என்ற ஒரு துணைத்தலைப்பின் கீழ் அவர் கு.அழகிரிசாமி, ஜெயக்காந்தன், கி.ராஜநாராயணன் ஆகியோரைப்பற்றி எழுதியிருக்கும் வரிசையில் ஆர்.ஷண்முகசுந்தரமும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து. காலம் கடந்தும் கூட நம்முடைய எண்ணங்கள் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை.

திரைப்படத்துறையிலும் ஷண்முகசுந்தரம் -பங்களிப்பு செய்துள்ளார். 1961-ஆம் ஆண்டு பி.ராமகிஷ்ணா என்பவரின் இயக்கத்தில் நாகேஸ்வரராவ்- தேவிகா நடிப்பில் வெளிவந்த ‘கானல் நீர்’ என்னும் படத்துக்கு அவர் வசனம் எழுதியதாக ஒரு தகவல் உள்ளது. ஆனால் விக்கிபீடியா, அந்த படத்தின் உரையாடலை வலம்புரி சோமநாதன் எழுதியதாகக் கூறுகிறது. கானல்நீர் ‘படிதீதி’ என்கிற வங்காள மொழி படத்தின் மறு ஆக்கம். படி தீதி, சரத்சந்திரர் நாவலின்  திரைவடிவம். சரத்சந்திரரின் எல்லா நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்தவர் ஷண்முகசுந்தரம். எனவே ‘கானல் நீர்’ படத்தில் அவருடைய பங்களிப்பு நிச்சயமாக இருந்திருக்க வேண்டும்.

ஷண்முகசுந்தரத்தின் எல்லா நாவல்களையும் வாசித்து, அவற்றிலிருந்து ஒரு கொங்கு வட்டாரச் சொல்லகராதியை உருவாக்கலாம் என்று ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் ஷண்முகசுந்தரத்தை எழுதியுள்ள கவிஞர் சிற்பி கூறுகிறார். அது உண்மையும் ஆகும். கலியாணம் மூய்க்க, எத்தச்சோடு, ஈசரோசம், தண்ணிக்கொட்டம், தண்டுவன், பொழுதோட, பழமை, வேய்க்காணம், எடவாக போன்ற பலநூறு கொங்கு வட்டாரச் சொற்களை அவர் தனது நாவல்களில் பயன்படுத்தியுள்ளார். மாராக்காள், நாச்சாக்காள், வெங்கக்காள் என்று பட்டிக்காட்டு அக்காமார் பலரையும் அவருடைய படைப்புகளில் நாம் தரிசிக்கலாம்.

“வெளம்பா முண்ட வெறகுக்குப் போனா வெறகு

சிக்குனாலும் கொடி சிக்காது”

”தாயிக்கும் புள்ளைக்கும் என்னய்யா கெடக்குது

சட்டியோட பான முட்டாமையா போகும்?”

போன்ற பல சொலவடைகளை அவர் நாவலுக்குத் தேவையான இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.

கரிசல் இலக்கியம் என்றொரு வகைமையை உருவாக்கி எழுதி, பிரபலமாகி தன்னை நிறுவிக்கொள்ள கி.ராஜநாராயணனால் இயன்றது. அவரைக் கொண்டாட, அவரையே ‘சிந்தனைப்பள்ளி’யாகக் கொண்ட எழுத்தாளர்கள் பலர் இருந்தனர். இன்றைக்கு மாநில அரசே அவருக்குச் சிலை எழுப்பி மரியாதை செய்திருக்கிறது. இந்த மாதிரி கொடுப்பினைகள் எல்லாம் ஷண்முகசுந்தரத்துக்கு இல்லை. கி.ரா. அளவுக்கு அவருக்கு நீண்ட ஆயுளும் வாய்க்கவில்லை. கடைசிக்காலத்தில் பொருளாதார நெருக்கடிகளில் உழன்றிருக்கிறார்.

எழுத்தாளர் பெருமாள்முருகன் ‘ஆர்.ஷண்முகசுந்தரம் படைப்புலகம்’ என்று நூல் எழுதியிருக்கிறார். இலங்கையில் ‘நாகம்மாள்’ நாவல் நீண்டகாலமாகப் பாடத்திட்டத்தில் உள்ளதாக நண்பர் ஒருவர் முகநூல் பின்னூட்டத்தில் தெரிவித்தார். எங்கள் மண்ணின் இலக்கிய முன்னோடி என்பதற்காக கீரனூர் ஜாகீர்ராஜாவாகிய நான் இந்த எளிய கட்டுரையை எழுதியிருக்கிறேன். அதே உணர்வுடன் வா.மு.கோமு தனது இதழில் பிரசுரிக்கிறார்.

’இந்த மட்டுக்கு போதும் ஒரு எழுத்தாளனுடைய வாழ்க்கை’ என்று வாசகன் நினைப்பான்.

000

கீரனூர் ஜாகிர்ராஜா

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இயங்கிவரும் கொங்கு மண்டலம் சார்ந்த முக்கியமான படைப்பாளி. 10 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 7 தொகை நூல்கள் என தமிழுக்குத் தனது வளமான பங்களிப்பை வழங்கியவர். தொடர்ந்து முழுநேர எழுத்தாளராக இயங்கி வரும் கீரனூர் ஜாகிர்ராஜா தஞ்சையில் வசிக்கிறார். கனடா இலக்கியத் தோட்டம் விருது, தி இந்து நாளிதழ் வழங்கிய Lit for life விருது, ஆனந்த விகடன் வழங்கிய இரண்டு விருதுகள் உள்ளிட்ட பல சிறப்புகள் பெற்றவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வருகை தரு இலக்கிய ஆளுமை யாகத் தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியவர்.

மற்ற பதிவுகள்

One thought on “கொங்கு இலக்கியப் பிதாமகன் ஆர்.ஷண்முகசுந்தரம்

  1. சிறப்பான எழுத்தாளரைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்த அருமையான, சிறந்த கட்டுரை.

    அவரின் புத்தகங்கள் அரசுடமை ஆக்கப்பட்டாலோ அல்லது பதிப்புச் செய்யப்பட்டாலோ மகிழ்வும், சிறப்பும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *