ஓரங்களில் ஈரம் சொட்டும் கூந்தலின் முடிச்சை உறுதி செய்துகொண்டே குளியலறையிலிருந்து வெளியேறி அறைக் கண்ணாடியின் முன் நின்ற ஸ்வாதி இறுகக் கட்டியிருந்த டவலை அவிழ்த்தாள். ஆளுயரக் கண்ணாடியில் ஈரத்தின் பளபளப்பு அடங்கிய உடல் பூரணமாய் தெரிந்தது. ஒரு கையால் டவலை சம்பிரதாயமாக பிடித்துக் கொண்டு வலது பக்க மார்பகத்தை அழுத்திப் பார்த்தாள். அடிமார்பில் நேற்று புலப்பட்ட கட்டி இன்று இன்னும் பெரிதாகியிருப்பது போல் தோன்றியது. மேலும் கையை நகர்த்தி அழுத்தி தெறிக்கும் வலியை உறுதிப்படுத்திக் கொண்டவளின் கண்களில் வாதை குறித்த பயம் சூழத் தொடங்கியிருந்தது.
‘இம்மாத ஊதியம் வந்ததும் டாக்டர் நஸ்ரினிடம் சென்று ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட வேண்டும்’
டவலை கொஞ்சம் தளர்த்தி பீரோவை நோக்கி நகர்ந்தபோது கவின் “ம்மாமா…” என அரற்றிக் கொண்டு உள்ளே வந்தான். சட்டென மீண்டும் டவலை இறுக்கிவிட்டு அருகில் ஓடினாள்.
“ம்மா.. ம்ம்மா.. ரூபி ரிமோட்ட ல்லான்னு..” என அழுதபடிக் கூறியவனின் அரும்பு மீசையிலும் கைகளிலும் சோற்றுப் பருக்கைகள் ஒட்டியிருந்தன.
“ஒண்ணுமில்லடா தங்கம்.. வா வா.. வா அவள பேசிக்கலாம்” என வெளியே அழைத்து வந்தவளின் மேலே அரற்றியபடி சாய்ந்தவன் கைகளிலிருந்த பருப்பு சாதத்தை டவலில் துடைத்தான்.
“டீ ரூபி.. ஏன்டி இப்படி பண்ற? நான் இப்ப ஆபிஸ் கிளம்பறதா வேணாமா?”
“ஒண்ணுமில்லம்மா.. எந்நேரமும் போகோவே வச்சிட்டு இருக்கான். நான் ஓகே கண்மணி பாக்கணும்” என்ற ரூபியின் நிமிர்ந்து பார்க்காதத் தோரணை எரிச்சலூட்டியது.
‘இடியட்’ என முணுமுணுத்தபடி அருகில் வந்து ரிமோட்டை பிடுங்கி போகோவுக்கு மாற்றினாள்.
“அவனுக்கு இந்த டிவின்னா எனக்கு என் ரூம்ல வேற ஒரு டிவி வாங்கி வச்சிடு” எனச் சீறியவளை முறைக்கத் திராணியின்றி நகர்ந்தவள் பொறுக்க மாட்டாமல் கத்தினாள்.
“உனக்கு செமஸ்டர் பீஸ் கட்டுற காசுல வாங்கி தரட்டுமா?” அதில் வாயை அடைக்கும் அவசரத் தொனி மிகுந்திருந்தது. ஆனால் அதையும் மீறி “அவனுக்கு மாசம் ஃபோர் தௌசண்ட் செலவு பண்றல்ல? என்னோட செமஸ்டர் ஃபீஸ் தான் உனக்கு கண்ண உறுத்துதா?” என ரூபி பதிலுக்குக் கத்தியதும் இவள் எதுவும் பேசாமல் மீண்டும் உள்ளறைக்குள் நுழைந்தாள். வாக்குவாதத்தை வளர்த்துவிடாத மௌனமொன்றை நூல்பிடித்து வரவைத்து தொற்றிக் கொண்டபடியே புடவை உடுத்தி வெளியே வந்ததும் ராகேஷ் சாப்பிட்டு கை கழுவிய தட்டு டேபிளில் இருந்ததை கவனித்தாள். அதை சிந்தாமல் எடுத்துச் சென்று சிங்க் தொட்டியில் போட்டுவிட்டு உணவை இரண்டு டிபன் பாக்ஸில் நிரப்பிக் கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தாள்.
ராகேஷ் ரூபியிடம் கண்டிப்பான குரலில் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டதும் உதட்டில் மென்னகை அரும்பியது.
“என்ன நினைச்சிட்டு அம்மாகிட்ட நீ சண்ட போடுற ரூபி? உனக்காக தானே அவ இவ்ளோ கஷ்டப்படுறா.. தம்பிக்கு வேற ட்ரீட்மெண்ட் செலவு எவ்ளோ பண்ணிட்டு இருக்கானு உனக்குத் தெரியும் தானே.. இனிமே இந்த மாதிரி பேசினா வாய உடைச்சிடுவேன்.. ஜாக்கிரதை!”
மிரட்டும் குரலில் பேசப் பேச ரூபி அதை கண்டுகொள்ளாமல் போனை நோண்டிக் கொண்டிருந்தாள்.
ராகேஷ் ஏதோ ஒன்றை சாதித்துவிட்டவன் போலத் திரும்பி ஸ்வாதியைப் பார்த்துக் குழைந்தான். அவள் வழக்கமாக டேபிளில் வைக்கும் இருநூறு ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அவசரமாக பைக்கை ஸ்டார்ட் செய்தான். இவள் செருப்பையணிந்து புடவைத் தலைப்பை சரிசெய்தபடி வாசலோரம் நின்றிருந்த ரோஜா செடியைப் பார்த்தாள். அதே ஒற்றை ரோஜா. தலையில் சூடிக்கொண்டு பைக்கை கிளப்பியவனுக்கு இடம்விட்டு வீதியிலிறங்கினாள். கொஞ்ச தூரம் நடந்தால் ஓமலூர் செல்லும் நெடுஞ்சாலை. அங்கிருந்து 20 நிமிடம் ஷேர் ஆட்டோ பயணத்தில் அவளது அலுவலகம்.
தடுமாறி ஆட்டோவில் ஏறி நெரிசலில் இடம்பிடித்தவளை ராகேஷ் கேட்டிருந்த ஐந்து லட்சமும் சேர்த்து அழுத்தியது. காலையில் பம்மிய ராகேஷுக்கு வேறு முகம். திருமணமான புதிதிலிருந்தே எந்த வேலைக்கும் செல்லாமல் பிசினஸ் செய்வதாகச் சொல்லி தோழர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி அதை இன்று வரை கடைபிடித்தும் வருகிறான். இன்றுவரை என்றால் மகள் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் இன்றுவரை. ஸ்வாதி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.
திருமணமான புதிதில் விசிஆர் கடை வைத்தான். இவள் அரசாங்கப் பணியிலிருப்பது அவனது தேவைகளை வெகுசுலபமாக அவனுக்கு பெற்றுத் தந்தது. அவனுக்காக இவள் லோன் எடுத்துத் தருவதும் அதை வைத்து பிசினஸ் செய்வதாக கடையொன்றை வாடகைக்கு எடுத்து பூஜை போடுவதும், அதற்குள் நண்பர்களோடு அமர்ந்து பார்ட்டி செய்வதும் நான்கே மாதங்களில் இழுத்து மூடிவிட்டு ‘பிசினஸ் லாசாகிடுச்சு.. நான் என்ன பண்றது?’ எனச் சாதாரணமாக இவளிடம் சொல்வதும் சலித்துப்போய் விட்ட விஷயங்கள். இப்படித்தான் அந்த விசிஆர் கடை பிறகு செல்போன் கடையாகி கொஞ்ச நாட்களில் ஜெராக்ஸ் கடையாகி இப்போது பழைய வாகனங்களை வாங்கி விற்கும் ஆபிஸாகி நிற்கிறது. ஆனால் கடைக்கான வாடகையைத் தருமளவு கூட லாபமீட்டுவதில்லை எனக்கூறி மாதம் பிறந்ததும் இவளிடம் பணம் கேட்பான்.
இப்போது அவையனைத்தையும் இழுத்து மூடிவிட்டு கல்யாணம், கருமாதிக்கு சேர், பந்தல் வாடகைக்கு விடும் கடையை தொடங்கப் போவதாகவும் அதன் பிறகு தான் யாரென உலகுக்குத் தெரியுமென்றும் கூறிக் கொண்டிருக்கிறான். ஐந்து வருடங்களுக்கு முன் இவனுக்கு கண் கண்ணாடி கடை வைத்துத் தர வாங்கிய லோன் சென்ற மாதத்தோடு முடிந்துவிட்டது அவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் மீண்டும் தனது பந்தல் கடைக்குத் தேவையான ஐந்து லட்சத்தைக் கேட்டு ஒரு வாரமாக தொந்தரவு செய்கிறான்.
ஸ்வாதியின் அலுவலகம் நெருக்கடிகள் மிகுந்த சந்தைவெளியின் பின்புறத்தில் அமைந்திருந்தது. அதன் எதிரிலேயே கரமணைத்த பெருமாள் கோயில். விசேஷ நாட்கள் தவிர வழக்கமான நாட்களிலும் அதன் முன்புறம் ஐந்தாறு பிச்சைக்காரர்கள் அமர்ந்திருப்பார்கள். அத்தெரு வழியே எப்போதாவது செல்ல நேர்பவர்கள் வாசலுக்கு இருபுறமும் கிடக்கும் நீண்ட கல்திண்ணையில் அமர்ந்தபடியோ அல்லது முகப்புத் தூணில் சாய்ந்து நின்றபடியோ நன்கு உடை உடுத்திய, பெண்ணொருத்தி ஸ்பரிசம் சொட்டும் குரலில் அவர்களுடன் சரிக்குச் சமமாகப் பேசியும், சாலை அதிரச் சிரித்தும் பணிநேரக் காலைப்பொழுதை கழித்துக் கொண்டிருப்பதை விநோதமாக பார்த்தவாறே கடந்து செல்வார்கள். ஆனால் அதுதான் ஸ்வாதிக்கு மிகவும் பிடித்திருந்தது. இதற்காகவே அரைமணி நேரம் முன்பாக அவள் அலுவலகம் கிளம்பி வந்துவிடுவாள். சமூகமும் குடும்பமும் தன் மீது மாறிமாறிச் சுமத்தும் எல்லாச் சுமையிலிருந்தும் விடுபட்டு பறத்தலின் கணக்கில் அவள் இதையும் சேர்த்திருக்கிறாள்.
எல்லோரிடமும் கைநீட்டுவதைப் போல அவர்கள் அவளிடம் கை நீட்ட மாட்டார்கள். அவளாகவே கையிலிருக்கும்போது தருவாள் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கும் அளவுக்கு சிநேகம் வளர்ந்திருந்தது. தினமும் பெருமாளை தரிசிக்கிறாளோ இல்லையோ அவர்களை சந்தித்து அன்றைய சுக துக்கங்களின் சேகாரத்தைப் பற்றி பேசிவிட்டு நகர்வது பழக்கமாகியிருந்தது.
அலுவலகத்தில் கூட்டிப் பெருக்கும் ஆயம்மா சாரதாவை அவளுக்கு மிகவும் பிடிக்கும். சாரதா வாரத்து செவ்வாய்கிழமைகள்தோறும் கொடிமல்லியை சரமாகக் கட்டி இவளிடம் நீட்டுவாள்.
‘எங்க வீட்டுக்கு முன்னாடி கூரைல படர வுட்டுருக்கோம் மேடம். வாங்கிக்கிங்க’ என மறுக்க மறுக்க கைகளில் திணித்து ‘உங்களுக்கு பூ வச்சிக்கிட்டா இன்னும் அழகா இருப்பீங்க மேடம்.. வச்சிக்கிங்க’ என
ஒவ்வொரு முறையும் சிரிப்பாள்.
அவள் கணவன் 14 வருடங்களாக கொத்துவேலைக்கு சித்தாளாக மட்டுமே செல்லும் உடல் வலுவுள்ளவன். நூல் மில் வேலைக்கு போய் வந்தவளுக்கு திடீரென பக்கவாதம் கண்டு படுக்கையில் விழுந்துவிட கடந்த மூன்று வருடங்களாகத்தான் எழுந்து நடமாடுகிறாள். அதில் ஒன்றரை வருடக் காலமாக எங்கெங்கோ பேசி இவர்களது அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்திருக்கிறாள். வலது கை இன்னும் சரிவர வராததால் அதை ஒருவாறு பழக்கி பின்னால் கட்டியபடி ஒரு கையிலேயே அலுவலகத்தை பெருக்குகிறாள்.
‘எப்படி சாரதா ஒரு கைல பூ கட்டுற?’
‘நான் எங்க மேடம் கட்டுறேன்? எம் பெரிய மவகிட்ட கெஞ்சுவேன். உனக்குலாம் மேடம் ஃபிரண்டான்னு கிண்டல் பண்ணிகிட்டே கட்டித் தருவா மேடம்’ என வெட்கப்பட்டாள்.
‘ஏன் சாரதா கொடி மல்லி தலைல வைக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்களே?’
‘அதெல்லாம் சும்மா மேடம். இப்ப வந்ததுங்க சொல்லிட்டுத் திரியுதுங்க.. மல்லில ஏது மேடம் நல்லது கெட்டது? மல்லி போதை மேடம்.. சாமி போதை மாதிரி ரொம்ப நல்லது. நீங்க வைங்க மேடம்’ என அவள் ஏதாவது நேர்மறையாகக் கூறுவதைக் கேட்க இதமாகயிருக்கும்.
சாரதாவை அவள் கணவன் தினசரி காலை நேரமாக சைக்கிளில் அமர்த்திக் கொண்டுவந்து விடுவான். மனக்கசப்பேறிய நாட்களில் முன்னமே பணிக்கு வந்துவிடும் ஸ்வாதியும் அவ்வப்போது கேட்பாள்.. ‘நல்லா வேலைக்கு போய்கிட்டு இருந்துட்டு இப்படி ஆகிட்டமேன்னு வருத்தமா இல்லையா சாரதா?’
சாரதா விரக்தியாய் சிரிப்பாள்.
‘அதெல்லாம் எப்பவோ கடந்தாச்சுங்க மேடம்.. அவருக்கும் நோஞ்சான் உடம்பு.. மூணு புள்ளைங்க.. உதவறதுக்கு ஒரு நாதியுமில்ல.. நான் வெளங்காம விழுந்தப்ப முடியாத நெலமைலயும் என்ன தூக்கிட்டு ஓடுனதும் செலவு பண்ணதும்.. சும்மா சொல்லக் கூடாதுங்க மேடம்.. அந்தக் கடன்லாம் வேற அடைக்க அது இன்னும் ஓடுது.. அதுக்குலாம் இப்படி அரக்குறை உடம்ப வச்சிட்டு நான் வேலைக்கு வர்றது புடிக்கல தான்… ஆனாலும் நான்தான் வீட்ல கெடக்குறதுக்கு இங்க வந்து சீமாரு புடிக்கலாம்னு அடம்புடிச்சி வர்றேன்’ எனச் சிரிப்பாள். உண்மையில் அழுகையை விடக் கொடுமையான வலியை அச்சிரிப்பு ஸ்வாதிக்குள் கடத்தியிருக்கும். பத்து நாட்களாக அவள் இல்லாததன் வெறுமையை இன்றும் பார்க்க நேருமோ என்ற ஸ்வாதியின் எண்ண ஓட்டத்தை ஆட்டோவின் சடன் பிரேக் கலைத்து நிறுத்தியது.
“என்னப்பா இந்த ஆளு..” என டிரைவர் முணுமுணுக்க வாகனத்தை மறித்தபடி ராகேஷ் பைக்கை ஒதுக்கி நிறுத்தியிருந்தான்.
“என்ன ஸ்வாதி இது? நான் போய் பெட்ரோல் போட்டுட்டு வர்றதுக்குள்ள கிளம்பிட்டியா? எறங்கு.. பைக்ல போலாம்” என்றவனை இறங்காமல் அருவருப்புடன் பார்த்தாள்.
“எவ்ளோ பாசம் பாரு.. தம்பி கூப்பிடுதுல்ல.. எறங்குமா” என யாரோ உள்ளிருந்துக் கத்த வேறு வழியின்றி இறங்கி அவன் பைக்கில் தொற்றினாள்.
“எதுக்கு இந்த டிராமா?”
“என்ன ஸ்வாதி? நான்தான் அன்னிக்கு நைட்டே சொன்னேனே.. முன்ன மாதிரி இல்ல.. மாறிட்டேன்னு. இன்னமும் டிராமானு சொல்ற பாத்தியா?”
அவள் எதுவும் பேசாமல் கூர்மையாகப் பார்த்தாள்.
“ம்.. அப்டினா நீ இன்னும் என்ன நம்பல.. ஆனா இன்னும் ஆறே மாசம் பாரு. இப்படிப்பட்ட பிசினஸ்மேன் மேலயா சந்தேகப்பட்டோம்னு நீ ரொம்ப பீல் பண்ணுவ பாரு..”
“எனக்கு எதுவும் வேணாம்.. கவினோட ட்ரீட்மெண்ட்டுக்கு தெரிஞ்சவங்க மூலமா பேசியிருக்கேன். மும்பைல ஒரு ஹாஸ்பிடல் சொன்னாங்க. அங்க போனா கண்டிப்பா முன்னேற்றம் தெரியுமாம். அதுக்கு வேற ஏழு லட்சம் வரைக்கும் ஆகும்”
“அதெல்லாம் ஒரு முன்னேற்றமும் வராது ஸ்வாதி. இப்படித்தான் ஹைதராபாத் கூட்டிக்கிட்டு போன.. பெட்ரூம்ல போய்கிட்டு இருந்தவன் இப்ப ஹால்ல பேண்டு வைக்கிறான்.. இதானா முன்னேற்றம்? அதெல்லாம் சித்தம் கருகிப்போச்சு.. வாழ்நாள் சாபம் ஸ்வாதி.. தீரவே தீராது”
அவனது சொற்கள் அனலாக மேனியெங்கும் பரவிக் கொண்டிருந்தன. அமைதியாக பல்லைக் கடித்தவாறு கம்பிகளின் பிடியை இறுக்கி கோபத்தை அதன்வழியே கடத்தத் தொடங்கினாள். இதற்குமேல் பேசினால் நடுரோட்டில் அது சண்டையாக உருவெடுக்கும். எதுவும் பேசாமல் அலுவலகம் முன்பு இறங்கிக் கொண்டவளைப் பார்த்து வலியச் சிரித்தான்.
“கோச்சிக்கிட்டியா ஸ்வாதி.. உண்மைய தானே சொன்னேன்”
“ம்ம்.. நான் ஒண்ணே ஒண்ணு தான் கேட்குறேன். இந்த தடவையாச்சும் பெரிய செலவு இழுத்து விடாதீங்க. ப்ளீஸ்”
அவள் குரலிலிருந்த கோபம் ஆழத்தில் மூழ்கி பரிதாபம் மிதந்து வந்திருந்தது. அவன் ஒரு நொடி சிரிப்பை நிறுத்திவிட்டு ஊன்றிப் பார்த்தான். அப்பார்வையில் தெறித்த குரூரம் அவளை கடந்தகாலத்துக்குள் இழுத்துச் சென்றது.
“புள்ளைங்க வளந்துடுச்சின்னு கை வைக்கிறத நிறுத்திட்டேன் பாரு.. திமிரு ஏறிடுச்சு உனக்கு. சரி பரவால்ல. நான் பேங்க் மேனேஜர்கிட்ட பேசிட்டேன். நாளைலருந்து அவர் 15 நாளைக்கு மெடிக்கல் லீவ் போடுறாராம். நீ லஞ்ச் ஹவர்ல பர்மிஷன் கேட்டு வை. நான் ஷார்ப்பா ரெண்டு மணிக்கு வந்திடுவேன். பிச்சைக்காரனுவ கிட்ட போய் லூசு மாதிரி பேசிட்டு இருக்காம நேரா ஆபிஸுக்கு போ” என்றபடி பைக்கை கிளப்பிக் கொண்டு போனவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தவாறு நின்றிருந்தவள் தளர்ந்த நடையோடு கோயிலை நோக்கி நகர்ந்து திண்ணையில் ஏறி அமர்ந்தாள்.
“என்னம்மா அதிசயமா வூட்டுக்காரரு வந்து விட்டுட்டுப் போறாரு..” என தாத்தா ஒருவர் பழைய துணியை தைத்தபடியே கேட்டார். அங்கிருக்கும் யாசகர்களில் மூத்த உருப்படி.
அவளுக்கு சென்ற சனிக்கிழமை இரவு ஞாபகத்துக்கு வந்தது. ராகேஷ்
இந்தத் தவணையின் முதன்முறையாய் ஐந்து லட்சம் கேட்டு தொந்தரவு செய்த அந்த இரவில் வாக்குவாதம் முற்றி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரிலிருக்கும் அவளது அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டாள். பெரும்பாலும் தனிமையில் வாழும் அம்மாவிடம் அவள் எதையும் சொல்வதில்லை. தனது தீராத வாதையை அவளிடம் தொற்றிவிட்டுவிடாத நிதானம் எப்போதும் அவளிடம் இருக்கும். இருந்தாலும் அன்று மீளமுடியாத துயரத்தோடு மடியில் சாய்ந்து அழுது விட்டாள்.
‘எல்லாத்தையும் தொலைச்சிட்டு எங்கயாச்சும் போய்டலாம் போல இருக்கும்மா..’ என அவள் சொல்லச் சொல்ல அம்மா அமைதியாய் தலையை கோதிவிட்டுக் கொண்டிருந்தாள். அன்றிரவு நன்றாக உறங்கிவிட்ட பின்பு நடுநிசியில் போன் ஒலித்தது. கலக்கத்தோடு எடுத்துப் பார்த்தாள். ராகேஷ் தான். எடுக்கும் முன்பே கட் ஆகவும் சந்தேகத்தோடு எழுந்து வந்து வெளி ஜன்னலை நோக்கினாள். அவன் தான். அவள் பார்ப்பதற்காகவே ஜன்னலை வெறித்தபடி நின்றிருந்தான். வியர்த்திருந்த முகத்தில் போதையின் உச்சம் ஆழ்ந்திருந்தது.
‘வா வீட்டுக்கு.. எனக்கு பசிக்குது’ தழுதழுத்தக் குரலில் பேசினான். பிள்ளைகளை எழுப்பாமல் அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்து பைக்கில் அமர்ந்தாள். அந்த நடுராத்திரியில் ஒரு விகாரமான மிருகத்தின் கள்ளமௌனத்தோடு அவன் தெரிந்தான். வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தியதும் அவளை படுக்கையறைக்கு நகர்த்தி பரபரவென உடைகளைக் கலைந்தான். இறுக உதடு பற்றியிட்ட முத்தத்தில் லிக்கர் வாசம் மிகுந்திருந்தது. படுக்கையில் தள்ளி மேலே விழுந்துப் பிராண்டியதும் காலையில் ஊறுகாய் சாடியை உருட்டிக் கொண்டிருந்த பூனை அவளுக்கு நினைவுக்கு வந்தது. சத்தமாக சிரித்து விட்டாள். அது அவனுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. ‘என்னடி சிரிக்கிற?’ என மார்பைப் பற்றி அழுத்தியதும் இவ்வளவு நேரம் காணாமல் போயிருந்த வலி மீண்டும் வந்துத் தொற்றியது.
மேலே கிடந்தவனின் பாரத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு உடைகளை எடுத்து அணிந்து கொண்டவளை கைப்பற்றி இழுத்தான்.
‘அதான் எல்லாம் நடந்துடுச்சில்ல.. அப்புறம் என்ன சிலுப்புற?’ எனக் கொஞ்சியவனிடமிருந்து நகர்ந்து வந்தாள். அவனிடமிருக்கும் மிகப் பழமையான மூடநம்பிக்கை இது. வலுக்கட்டாயமான உறவாகவே நடந்து முடிந்திருந்தாலும் அது சண்டையை முற்றுபெறச் செய்து அவளை சமாதானம் செய்து விடுமென அவன் தீவிரமாக நம்பினான்.
‘அப்படியா? யாருக்கு.. உங்களுக்கும் உங்களுக்குமா?’ என்ற அவளது பதிலின் எள்ளல் புரிவதற்குள் அவன் உறங்கிவிட்டிருக்க மேலே சுழலும் ஃபேனை பார்த்தவாறே அன்றைய இரவை நகர்த்தியது இப்போதும் கனத்திருந்தது.
நினைவிலிருந்து மீண்டு “காரியம் ஆவணும்னா கால புடிக்க வேண்டியது தான் தாத்தா” எனப் பெருமூச்சு விட்டபடியே தண்ணீர் பாட்டிலைத் திறந்தவளுக்கு இன்றும் சாரதாவைக் காணாதது உறுத்தியது. விசாரித்தபோது “தெரியல என்னான்னு.. அவ புருசன் மேற்கால வீதில காம்ப்ளக்ஸ் கட்டுற எடத்துல வேல செஞ்சிட்டு இருக்கான். கேட்டா தெரியும்” என்றார் தாத்தா.
அலுவலகம் திறந்ததும் தன் இருப்பிடம் சென்று அமர்ந்தவளுக்கு வேலை துளியும் ஓடவில்லை. இன்று மதியம் தன் கணக்கில் ஏறப்போகும் தொகையின் வழி தன்னை மீண்டும் விலங்கிடச் செய்யும் அடுத்த ஐந்து ஆண்டுகள் இப்போதே பயமுறுத்தத் தொடங்கியிருந்தன. சாரதாவின் கணவன் நினைவுக்கு வந்துப் போனான்.
ஒரு துப்புரவாளியின் கணவன் எத்தனை தூயவனாக இருக்கிறான்? அன்பினால் நெய்யப்பட்ட நாட்களை அவளது துயர்படிந்த வாழ்வின் மீது எத்தனை பாந்தமாய் போர்த்திவிடுகிறான்? அவளுக்கு சாரதாவின் மீது தீராதப் பொறாமையுணர்வு வளர்ந்திருந்தது.
மணி ஒன்றடித்ததும் உள்ளறைக்கு ஓடி அரை நாள் விடுப்பு கேட்டு வெளியே வந்து காம்ப்ளக்ஸ் இருக்கும் திசையில் நடக்கத் தொடங்கினாள். அவளைக் கண்டதும் சாரதாவின் கணவன் சுமந்திருந்த செங்கற்களை போட்டுவிட்டு அருகே ஓடிவந்தான்.
“என்னங்க மேடம்.. இங்க வந்துட்டீங்க? சொல்லியிருந்தா நானே வந்துருப்பேன்” எனப் பதறியவனிடம் தீர்மானமாய் “சாரதாவ பாக்கணும்” என்றாள்.
சைக்கிளைத் தள்ளியபடியே அவளை சந்துவீடுகள் நிறைந்த நெரிசலான பகுதிக்கு அழைத்துச் சென்றான். இதற்கு முன்பு கால் வைத்திடாத இடங்களில் ஆவலுடன் நடந்து வந்தாள்.
சாரதாவின் வீட்டுக்கூரை முன்புறம் மல்லியைப் போர்த்தியிருந்தது கண்டு இவளுக்குள் இனம்புரியாத நெகிழ்வு தழைத்தது. கதவைத் தள்ளிக் கொண்டு உள்நுழைந்தவன் ‘இந்தா.. எந்திரி. நீ ஒரு ஆளுன்னு உன்ன பாக்க மேடம் மெனக்கெட்டு வர்றாங்க பாரு..’ எனக் கூவியதும் உள்ளறையில் சலனம் ஏற்பட்டது. கட்டில் கயிறுகள் நெரிந்து யாரோ எழுந்து உட்காரும் சத்தம். மருந்து வாசத்தோடு மூத்திர நாற்றமும் சேர்ந்து அறைக்குள் பரவியிருந்தது.
முன்பிருந்ததை விட மேலும் மெலிந்த உடலோடும் சீவிக்கொள்ளாத தலையோடும் சாரதா காட்சிக்குப் புலனாகினாள். இவளைக் கண்டதும் அழும் குரலில்,
“ஐயோ மேடம்.. என்ன பாக்கவா வந்தீங்க?” என ஒற்றைக் கையை உயர்த்தி அழைக்க அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். அவள் கணவன் தயங்கி அருகில் வந்து கட்டிலுக்கடியில் குனிந்து மூத்திர டப்பாவை எடுத்துக் கொண்டு போனான். சற்றுநேரம் கழித்து வந்தவன் கையில் சீப்பு இருந்தது.
“தலைய பரக்கு பரக்குனு சொறிஞ்சியாக்கும்? எப்படியிருக்குது பாரு.. மேடம்லாம் என்ன நெனைப்பாங்க?” என்றபடியே அவளுக்குப் பின்னால் சென்று தலைவாரத் தொடங்கினான். ரப்பர் பேண்டை போட்டு முடிச்சிட்டு “நீ மேடத்துக்கிட்ட பேசிட்டு இரு. நான் கடைக்கு போயிட்டு வந்துடுறேன்” என்று வெளியே ஓடினான்.
இப்போது சாரதா சிறுமியால் ஜோடனை செய்யப்பட்ட பொம்மையைப் போலிருந்தாள்.
“அழகா இருக்க சாரதா. ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?” என்றதும் “போங்க மேடம்” எனச் சிரித்தவளிடமிருந்து மெல்ல அழுகை எட்டிப் பார்த்தது.
“செத்துப் போய்டுவனோன்னு பயமா இருக்கு மேடம்”
“அப்படிலாம் எதும் ஆகாது சாரதா.. உனக்கு நல்லாய்டும்”
“இல்ல மேடம். எனக்கு நல்லாவாதுன்னு டாக்டர் சொன்னாராம்”
“அதெல்லாம் சும்மா.. அப்புறம் நான் யார்கிட்ட டெய்லி பேசுறது? நீ வேணும்னா பாரு.. சீக்கிரமே வேலைக்கு வந்துடுவ” எனத் தெம்பூட்டும் சொற்களை தான் அள்ளியிறைப்பது தனக்கே ஆச்சரியமாகப்பட்டது. நிழல் தேடும் பறவையின் மேலேயே மேகமொன்று தன் சூலடைந்த கரிய நிறத்தோடு பின்தொடர்வது போன்ற வலிமையை அச்சொற்கள் அவளுக்குள்ளும் புகுத்திக் கொண்டிருந்தன.
விடைபெற்று எழுந்தபோது “இருங்க மேடம் டீ வாங்கியாறப் போயிருக்காரு” என்ற சாரதாவைப் பார்த்து மென்மையாகச் சிரித்தாள்.
அவளது மெலிந்தக் கைகளைப் பற்றினாள். சில்லென்றத் தொடுகையின்வழி ஆறாத ரணங்களுக்கான மருந்து இருவரிடையே பரிமாறப்படுவது இருண்ட அறையின் மீது கவிழ்ந்திருக்கும் அத்தருணத்தின் ஆழ்ந்த அமைதியில் மோதித் தளும்பத் தொடங்கியிருந்தது.
ஸ்வாதி வீட்டை விட்டு வெளியே வந்ததும் கொடியிலிருந்த ஒற்றை மல்லியை எட்டிப் பறித்தாள். ஒற்றை ரோஜாவை விட ஒற்றை மல்லி அழகாகத் தெரிந்தது. முகர்ந்து கொண்டே தெருவில் இறங்கி நடந்தாள். பையிலிருந்த போன் தொடர்ந்து அடித்தபடியிருக்க எடுத்துப் பார்த்தாள். ராகேஷ் நான்காவது முறையாக அழைத்திருந்தான். எடுக்காமல் முழுமையாக ஒலிக்க விட்டப்பின் சாரதாவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை ஸ்டேட்டஸில் வைத்தாள். ஏதோ ஒன்றிலிருந்து விடுபட்டதைப் போலிருந்தது. மார்பு வலி கொஞ்சம் கொஞ்சமாய் கரைவது போன்ற கற்பனை மெல்ல உருக்கொண்டு நடப்பதற்கான இதத்தைத் அதிகரித்துவிட்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால் யாருமற்ற வெளியில் அவளே கரைந்து காணாமல் போவது போன்ற பாவனை அந்த நடையில் தெளிவாகத் தெரிந்தது.
ந.சிவநேசன்.
ஊர் சேலம் மாவட்டம் ஆரியபாளையம் சிற்றூர். ஆசிரியர் பணி. கவிஞர் மற்றும் எழுத்தாளர். கவிதைகள் காலச்சுவடு, நடுகல், நீலம், ஆனந்தவிகடன், நுட்பம், குமுதம் தீராநதி, தி இந்து உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. கானங்களின் மென்சிறை, ஃ வரைகிறது தேனீ, இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை, மீன்காட்டி விரல் ஆகியவை கவிதை நூல்கள். சிறுகதைகள் பல்வேறு போட்டிகள் மற்றும் அந்திமழை, வாசகசாலை, கலகம், தகவு, சொல்வனம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய அமைப்பின் பன்முக மேடை போன்ற இதழ்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.