கொத்தாளி-
எழுத்தாளர் முஹம்மது யூசுப் அவர்களின் ஆறாவது நாவல். சென்ற சென்னைப் புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் நாவல்.
தனது தேடல்தான் நாவலாகிறது என்பதை இந்த நாவலிலும் நிரூபித்திருக்கிறார் எழுத்தாளர் யூசுப் அண்ணன். நான் இவரின் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களையும் மணல் பூத்த காடு, கடற்காகம் போன்ற நாவல்களையும் வாசித்திருப்பதின் அடிப்படையில், ஒப்பீட்டளவில் இதில் அதிகமான தேடல்களைக் கொடுக்காமல் நாவலை நாவலாகவே கொண்டு சென்றிருந்தாலும் பேச வந்ததை, பேச வேண்டியதை மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறார். அதிகமான செய்திகள் இல்லாமல் இதுபோல் செய்திகளைத் தாங்கி வரும் நாவல் வாசிப்பில் ஈர்க்கவே செய்கிறது.
தனது முந்தைய நாவலான ‘நுழைவாயில்’ நாவலில் வரும் ‘தூத்துக்குடி மாவட்ட பட்டியலின சமூகம் மீது நிகழ்ந்த கொடியன்குளம் போன்ற கொடுமையைத் தவிர அவர்களுக்கென எந்த அடையாளமும் பொதுவில் இல்லை. முஸ்லீமை மதிக்கிறதில்லைன்னு சொல்றியே, இங்க பட்டியல் இன மக்கள் 18% இருக்காங்க. இந்த நிலத்துல அவுங்கதான் ரெண்டாவது மெஜாரிட்டி ஆளுங்க. ஆனா அவுங்க நிலமையை கொஞ்சம் நினைச்சிப்பாரு. உன்ன சீந்த ஆளில்லன்னு சொல்ற, அப்போ அவுங்க நிலமை, நீ உண்மையிலே ஏதாவது எழுதறதா இருந்தா அவுங்களைப்பத்தி எழுது’ என்ற வரிகளே இந்த நாவலை எழுதுவதற்கான திறவுகோல் எனத் தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார்.
நாவலின் ஆரம்பமே வேம்பன் என்னும் குற்றவாளியைப் பிடிக்க காவல்துறை உளவாளியை, வேலை தேடி வந்தவனைப் போல ஊருக்குள் அனுப்பும் காட்சிதான் என்னும் போது அவர் தன் முன்னுரையில் சொல்லியிருப்பது போல் ஒரு க்ரைம் நாவலை நமக்கு வாசிக்கக் கொடுக்கப் போகிறார் என்ற ஆவலை உண்டு பண்ணியது. அதை இறுதிவரை இறுக்கிப் பிடித்து நம்மையும் தொடர்ந்து வாசிக்க வைத்தது சிறப்பு.
‘கொத்தாளி’ பற்றிய செய்திகளுக்காக நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். ஆரம்ப அத்தியாயங்களில் கொத்தாளி பற்றிய நகர்வுகள் நாவலை பரபரவென்று நகர்த்திச் சென்று செந்தட்டி முன் நிப்பாட்டும் போது கதை வேறு பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறது.
இதில் வேம்பனின் தலைமுறைக்காக எழுத்தாளர் எடுத்துக் கொண்டிருப்பது மகாகவி பாரதியின் ‘ஆறிலொரு பங்கு’ என்ற சிறுகதையை, அந்தக் கதை தெற்கிலிருந்து வடக்கே பயணித்தால் இவர் அதை வடக்கிலிருந்து தெற்கிருக்கு நகர்த்திக் கொண்டு, அந்தக் காலத்திலேயே காதல் திருமணம் புரிந்து, அந்த ஊர்காரராய் மாற்றி, கதைக்கு நெருக்கமானதாய் மாற்றிக் கொண்டிருக்கிறார்.
கார்ப்பரேட் கொள்ளையர்கள் எல்லா இடத்திலும் விரவித்தான் கிடக்கிறார்கள். இவர்களுக்கு அரசியல் பின்புலமும் காவல்துறையின் பக்கபலமும் இருப்பதால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் வயிற்றில் சுலபமாய் அடித்து அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச இடத்தையும் பறித்துக் கொள்கிறார்கள். இங்கே நீதி, நியாயம் எல்லாம் பார்க்கப்படுவதில்லை, வீசும் காசுக்கு மட்டுமே வேலை நடக்கும். இப்படிப்பட்ட கொள்ளையனுக்குக் காவல்துறை சாமரம் விசு, சிவப்புக் கம்பளம் விரிப்பதுடன் அவனின் பேச்சைக் கேட்டு நிலத்தை இழக்கமாட்டேன் எனப் போராடுபவனை குற்றவாளியாகவும் ஆக்கி வைத்திருக்கிறது.
தங்கள் தாத்தாவின் சொத்தைத் தாங்கள் இழக்க மாட்டோமென மருதன் என்பவன் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவனைப் பார்த்திராத செந்தட்டி என்னும் நேர்மையான அதிகாரி அதை விசாரிக்கப்போக எறும்புப் புற்றில் தீவைத்தது போல அந்தப் பகுதியில் நடக்கும், நடந்து கொண்டிருக்கும் பெரும் நிலக்கொள்ளை வெளிச்சத்துக்கு வருகிறது. இதனால் புகார் கொடுத்தவனின் கால் போகிறது, அவனின் தம்பியைத் தீவிரவாதியாக்கி தனிப் போலீஸ் படை தேடுகிறது. முதலை என்னவோ மகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தன் பதவிக் காலத்தில் நல்லவனாக ஒரு அதிகாரி இருந்தால் ஒவ்வொரு இடத்துக்காகப் பந்தாடப்படுவதுடன் அவரின் ஓய்வுக்குப்பின் கிடைக்க வேண்டிய எதையும் கிடைக்க விடாமல் செய்வதில் அவரால் பாதிக்கப்பட்டேன் என்று நினைப்பவனைவிட, கூட வேலை செய்தவனுக்கு அவ்வளவு சந்தோசம். அப்படித்தான் நிகழ்கிறது செந்தட்டிக்கும். அதன் பொருட்டு அலைபவர், வீட்டில் கூட மரியாதை இல்லாத நிலையில் சென்னை செல்பவர் அங்கு தன் நண்பரின் உதவியால் இஸ்மாயில் என்னும் இளைஞன் வெலை செய்யும் அவுரி தொழிற்சாலையில் மாடியில் தங்குகிறார். அங்குதான் இருக்கிறார் காலை இழந்த மருதன்… அதுவும் அவர் தங்கிய அதே அறையில். இருவருக்குமான நட்பு பெரிய அளவில் இல்லை அதுபோக இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை.
மருதன் இருக்கும் இடத்தை அறிய மாயப்பெருமாளும் அவரது தம்பி மற்றும் அடியாட்களும் வேம்பனின் குடும்பத்துக்கு உதவும் பாயைக் கொன்று, மருதனையும் வெட்டிச் சாய்க்கிறார்கள். இந்த நிகழ்வுகளுக்குப் பின்தான் செந்தட்டிக்கு இது எதற்கான கொலை என்பது தெரிய வருகிறது.
பத்திரிக்கையில் இருக்கும் தன் நண்பன் மூலம் இதை உலகறியச் செய்ய நினைக்கிறார். அதற்காக அவர் என்ன செய்தார்..? வேம்பன் என்ன ஆனான்…? காவல்துறை கருப்பு ஆடுகளுக்கு மத்தியில் நேர்மையான ஒரு அதிகாரியாவது அந்த ஊருக்கு வந்தார்களா…? என்பதையெல்லாம் விரிவாகச் சொல்லும் நாவல்தான் கொத்தாளி.
செந்தட்டி, மருதன், வேம்பன், ரஹ்மான் பாய், இஸ்மாயில், மாடத்தி, கழுவடியான், கோகுல், வள்ளுவன், நந்தினி என எல்லாக் கதாபாத்திரங்களும் நமக்கு நெருக்கமான மனிதர்களாய்த்தான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே ஒரு வகையில் நிலக்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்டும் அவர்களுக்கு எதிரானவர்களாகவும் இருக்கிறார்கள். நாவலில் இவர்கள் தங்கள் வாழ்க்கையைச் சரியாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அதேபோல் கழுதையும் முக்கியமானதாக இருக்கிறது.
அவுரி வியாபாரம் பற்றி சற்றே விரிவாகப் பேசியிருப்பதுடன் அபின், சோலார் நிலக்கொள்ளை, சாதீய உள்ளடுக்கு, சாதீய கொடுமை, கார்ப்பரேட் ஊழல், அரசியல்வாதிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் சாமரம் வீசும் அரசு இயந்திரம், சாதிப்பார்வை, கொடியன்குளம் கொடுமைகள் என எல்லாமே நாவலில் நிறைந்து நிற்பதால் இந்நாவல் ஆவணப்படுத்துதலில் வெற்றி பெற்றிருக்கிறது. தன் தேடல் மூலம் ஒரு முக்கியப் பிரச்சினையை நாவலாக்கி ஜெயித்திருக்கிறார் எழுத்தாளர் முஹம்மது யூசுப்.
வேம்பன் தனி மனிதன் அல்ல… இங்கே பல வேம்பன்கள் இருக்கிறார்கள் எனபதை பாதி நாவலிலேயே சொல்ல ஆரம்பித்து இறுதிவரை எல்லாருமே பேசுகிறார்கள். ஒவ்வொருவரும் வேம்பனாய் வளர்ந்து நிற்கிறார்கள் என்ற செய்தி வாசிப்பவனுக்குக் கடத்தப்பட்டாலும் அது எதுமாதிரியான அமைப்பு, அந்த அமைப்பு இந்த நிலத்துக்காக மட்டும்தான் போராடுகிறதா என்பதை அழுத்தமாகச் சொல்லவில்லையோ என்று தோன்றியது. மேலும் வேம்பனைத் தீவிரவாதியைப் போலத்தான் நமக்குள் நிறுத்துகிறது இந்நாவல்.
கொத்தாளி வகையறா பற்றி பேசியிருக்கும் எழுத்தாளர் அதன் வேர் வரை தேடிச் சென்றிருக்கிறார் என்றாலும் கொத்தாளி குறித்த செய்திகள் இன்னும் இருந்திருக்கலாமோ எனத் தோன்றத்தான் செய்தது.
நாம் எப்போதுமே எழுத்தில் ஒரு சமரசம் செய்து கொள்வோம். அதாவது சாதி குறித்த பார்வையை முன் வைத்தாலும் அதை ரொம்ப விரிவாக நாம் கொண்டு செல்ல மாட்டோம். குறிப்பாக அதன் பொருளாதரப் பக்கத்தை நாம் எடுத்துக் கொள்ளவே மாட்டோம். அதேபோல் பொருளாதாரப் பார்வையில் எழுதப்படும் கதைகளில் தப்பித் தவறியும் கூட நாம் சாதியின் ஆழத்தைத் தொட்டுப் பார்ப்பதில்லை, இதில் எழுத்தாளர் நடந்த நிகழ்வுகளைக் கையில் வைத்துக் கொண்டு, பாரதியின் கதையின் பாத்திரத்தை வேராக்கி, அதன் போக்கிலேயே இரண்டு பக்கமும் சமமாய் பயணித்திருப்பது சிறப்பு.
கொத்தாளி வாசிக்க வேண்டிய நாவல்.
——————————-
கொத்தாளி (நாவல்)
முஹம்மது யூசுப்
யாவரும் பதிப்பகம்
பக்கம் – 254
விலை : ரூ. 290
பரிவை சே.குமார்.
இதுவரை எதிர்சேவை, வேரும் விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு என்கிற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன் பொற்கிழி விருது பெற்றிருக்கிறார்.