அசோகவனம் மிகப்பரந்த நிலப்பரப்பை தாங்கியது என்று எல்லோருக்குமே தெரியும். அங்கு அனைத்து விதமான விலங்கினங்களும், பறவையினங்களும், மரம், செடி கொடிகளும் உயிர்பிழைத்து வந்தன. பெரும் மழைக்கு பஞ்சமில்லாமல் இருந்ததால் வனத்திலிருந்த குட்டைகளும், குளங்களும் எப்போதுமே நிரம்பி வழிந்திருந்தன. அசோக வனத்திற்கு பசுமை வனம் என்கிற இன்னொரு பெயரும் இருந்தது.

அந்த வனத்தில் சமீபமாக பூதாகரமான பிரச்சனை ஒன்று அரசரின் பெயரால் நடைபெற்று வந்தது. அசோகவனத்தின் அரசர் யாரென்று உங்களுக்கு தெரியாதல்லவா? நீங்கள் வழக்கம் போல காடு என்றால் சிங்கம் தான் அரசனாக இருப்பாரென்று நினைத்திருப்பீர்கள். இந்த அசோக வனத்தில் சிங்கங்களும் வாழ்கின்றன என்றாலும் அவைகளுக்கு அரசாளுவதற்கெல்லாம் நேரமில்லை.

அடர்ந்த வனங்களில் சிங்கங்கள் வாழ்வதென்பது சிரமமான காரியம். அதனாலேயே புலிகள் ஒரு காலத்தில் இந்த வனத்திலிருந்து இடம்பயர்ந்து போய்விட்டன. மரங்களடர்ந்த வனத்தில் ஒரு மான்குட்டியைப்பிடிப்பது கூட அவைகளுக்கு சிரமம் தான். தந்திரமாய் ஒளிந்திருந்தும், பதுங்கியும் பாய்ச்சல் காட்டி எவ்வளவு நாளைக்கு பசியைப்போக்கி வாழ்வது? புலிகள் கிளம்பிவிட்டன. சிங்கங்களிலும் பல குடும்பங்கள் இப்போது இங்கில்லை.

ஒன்றிரண்டு குடும்பங்கள் மட்டுமே இருந்தன. பதிலாக சிறுத்தைகள் இந்த வனத்தில் அதிகம் வாழ்கின்றன. அவைகள் எந்த நேரமும் மரங்களின் வாதுகளில் வழியாக உணவு தேடிவரும் விலங்குகளின் வரவை எதிர்பார்த்து படுத்தபடி கிடக்கின்றன. விலங்கானது மரத்தடியை நெருங்குகையில் மேலிருந்து ஒரே பாய்ச்சல் தான்.

அசோகவனத்தில் கொம்பன் யானை தான் அரசர். அதற்கும் இப்போது வயது ஆகிவிட்டது. இருந்தும் அதன் பிளிறல் சத்தம் இன்னமும் வனமே அதிரும் வண்ணமாக இன்றும் இருக்கிறது. வனத்தின் ஏனைய அனைத்து விலங்குகளும் ஏகமனதாய் முடிவெடுத்து கொம்பனை அரசராக தேர்ந்தெடுத்து இன்றோடு பத்து வருடங்களாகிவிட்டது.

அதற்காக அரசருக்கு விழா ஒன்றை ஏற்பாடு செய்ய வனவிலங்குகள் மற்ற யானைக்கூட்டத்தார்களிடம் பேசினபோது.. ‘வெட்டியான கொண்டாட்டங்கள் எல்லாம் அரசருக்கு பிடிக்காது. கூச்சல் போட்டுக்கொண்டு வெடி வெடித்தீர்கள் என்றால் அரசருக்கு கோபம் வந்துவிடும்.. அப்புறம் நீங்கள் சட்னி ஆகிவிடுவீர்கள்!’ என்று பெண் யானைகள் ஒரே பதிலைத்தான் கூறின. இதனால் விழா நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டு விட்டது. விழா என்றால் செலவாகுமே! என்று பயந்திருந்த பல விலங்குகளுக்கு இது மகிழ்ச்சியான செய்திதான்.

வனத்தின் வடக்குப்பகுதி ஓரமாக கடந்த ஒருவாரத்தில் சில சாவுகள் அரங்கேறிவிட்டன. அதைப்பற்றி அரசரிடம் தெரிவிப்பதற்காக நான்கு நாட்களாக இரவு பகல் பாராமல் நடந்தே வந்திருந்தன ஒரு செம்மறி ஆடும் ஒரு கரடிக்குட்டியும். அரசரை சந்திக்க வந்த நேரமானது.. பத்துவருடம் வெற்றிகரமாக அரசாண்டதால் வாழ்த்துச்சொல்ல வந்த விலங்குகள் என்று யானைக்கூட்டம் நினைத்து இரண்டையும் அமர வைத்துவிட்டன. இரண்டும் எவ்வளவோ கெஞ்சியும் பார்த்து விட்டன. நாள் முழுக்க காத்திருந்து மறுநாள்தான் அவைகள் இரண்டும் கொம்பனை நேரில் சந்தித்து, ‘அசோகவன அரசர்க்கு உங்கள் பிரஜைகளின் அன்பான வணக்கம்!’ என்றன.

“என்ன விசயமுன்னு சொல்றதை படக்குனு சொல்லிட்டு இடத்தை காலி பண்ணுங்கப்பா!” யானைக்குட்டியொன்று தும்பிக்கையை மேலே உயர்ந்தி சொன்னது.

கொம்பனின் உயரத்திற்கும் முன்னால் செம்மறி ஆடும் கரடிக்குட்டியும் புக்குட்டியூண்டாய் நின்றிருந்தன. சொல்லவந்த விசயத்தை எப்படி சுருக்கமாய் சொல்வது என்று இரண்டுமே குழம்பி நின்றிருந்தன.

”என்ன சொல்ல வந்தீங்களோ.. தைரியமா சொல்லுங்க!” கொம்பன் யானையின் அருகில் நின்றிருந்த பெண்யானை ஒன்று சொல்லவும் இரண்டும் கொஞ்சம் தைரியம் பெற்றன.

“அரசரே! நாங்க வனத்துல வடக்குப்பக்கத்துல இருந்து நாலு நாளா நடந்தே வர்றோம். இங்க வந்து உங்களை பாக்குறதுக்கும் ஒருநாள் ஆயிடிச்சு. ஆக அஞ்சு நாளாச்சு. வடக்கே எங்க ஏரியாவுல இந்த அஞ்சு நாள்ல பத்து விலங்குகளேனும் செத்துப்போயிருக்கும்”

“ஏன்? அங்க எதாச்சிம் தொற்று வியாதி பரவிடுச்சா?”

“தொற்று வியாதி பரவுற வனமா யானையம்மா நம்ம வனம்? அதெல்லாம் இல்லையம்மா.. ஒரு வயசான சிங்கமும், இன்னொரு வயசான நரியும் சேர்ந்துட்டு தினமும் சாயந்திரமா குண்டேரி மேட்டுல சபையை கூட்டுதுக!”

“ஐ! நான் குண்டேரி மேட்டுலதானம்மா ரெண்டு வருசத்திக்கிம் முன்ன பொறந்தேன்னு நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே.. அங்கேயாம்மா! ஐ!” என்று பெண் யானையொன்று மகிழ்ச்சியில் குதித்தது. அதை அடக்க கொம்பன் தன் முகத்தை திருப்பி ஒரு பார்வை பார்க்கவும் அது மிரண்டு அமைதியானது.

“அந்த சிங்கமும், நரியும் அப்படி என்ன சொல்லுச்சுங்க? தினமும் எப்படி குண்டேரி மேட்டுல சபையை கூட்டும்? அதும்மில்லாம அந்த ரெண்டும் எப்படி ஜோடி சேர்ந்துது?” கொம்பனின் அருகில் நின்றிருந்த பெண் யானை கேள்வியை முன்வைத்தது.

“யானையம்மா அதுங்க ரெண்டும் எப்படி ஜோடி சேர்ந்தாங்கன்னு எங்களுக்கு தெரியாது. ஆனா நம்ம அரசருக்கு ரெண்டு தந்தங்களும் வயசானதால கழண்டு விழுந்திடுச்சு.. தும்பிக்கையில ஒரு பெரிய ஓட்டை விழுந்திடுச்சு..”

“என்னது?” அதிர்வாய் கேட்டது பெண் யானை.

“அப்படித்தாம்மா அதுக ரெண்டும் சொல்லுதுக! நரிக்கூட்டம் தான் என்னைக்குமே தந்திரம் செய்யுமுன்னு எல்லோருக்குமே தெரியுமே!”

“ஓ! அப்படிச்சொல்லி என்ன காரியம் பண்ணுதுக ரெண்டும்?”

”இந்தக்காட்டுல அரசருக்கு மறுபடியும் கொம்பு வளரவும், தும்பிக்கை ஓட்டை சரியாகவும் முக்கியமான மூலிகை இருந்துது! அதை யாரோ அரசருக்கே தெரியாம எடுத்து மறைச்சி வச்சிருக்காங்க. அதைப்பற்றி யாரை விசாரித்தாலும் உடனே சொல்லியே ஆகணும். அப்படி சொல்லலைன்னா அப்பவே மரண தண்டனை கொடுக்கச்சொல்லி வனராஜா உத்தரவு போட்டிருக்காரு!”

“அப்படியா அதுக சொல்லுதுக? சரி மேல என்ன பண்ணுதுங்க?”

“அந்த சமயத்துல சபைக்கு வந்த எல்லா விலங்குகளையும் ரெண்டும் உத்து உத்து பார்த்துட்டு மான் நின்னிருந்தா அதை கூப்பிடுதுக! காட்டெருமை நின்னிருந்தா அதைக்கூப்பிடுதுக.. அங்கே யாருக்கு மூலிகையைப் பத்தி தெரியும்? எங்களுக்கு தெரியாதுன்னு சொன்ன உடனே சிங்கம் மரண தண்டனையை குடுத்துடுதுங்க யானையம்மா! வன அரசரின் சொல்ப்படிதான் இது நடக்குதுன்னு வேற சொல்லுது அந்தச்சிங்கம்! அப்புறம் அடுத்த நாளு சாயந்திரம் மூலிகையை பத்தி தெரிஞ்சிட்டு வாங்கன்னு அனுப்பி வச்சிடுதுங்க எல்லோரையும் அதுங்க! இப்படி பத்து நாளா குண்டேரி மேட்டுல சாவு விழுந்துட்டே இருக்குதுங்க வனராஜா! நீங்கதான் குண்டேரிமேட்டுல இனிமேலும் சாவு விழாதமாதிரி பண்ணனும். உங்க வன பிரஜைங்களை சாவுல இருந்து காப்பாத்தணும் வனராஜா!” என்று கரடிக்குட்டி சொல்லி முடித்தது.

கொஞ்சம் நேரம் யோசித்த யானையம்மா கொம்பனின் காதில் தான் யோசித்த விசயத்தை யானை மொழியில் கேட்கவும் கொம்பன் சந்தோசமாய் தலையை ஆட்டியது! அவ்விதமாய் யானை மொழியில் பேசிய விசயத்தை யானையம்மா செம்மறி ஆட்டின காதில் குசுகுசுப்பாய் சொன்னது. கேட்டுக்கொண்ட செம்மறி ஆடு மகிழ்ச்சியாய் தலையை ஆட்டிக்கொண்டது. பின்பாக யானைக்கூட்டத்திடம் செம்மறி ஆடும், கரடிக்குட்டியும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொண்டு வடக்கு நோக்கி பிரயாணத்தை துவங்கின.

திரும்பி வருகையில் அவைகளிரண்டும் மூன்றாவது நாளிலேயே தங்களின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டன. நான்காவது நாளில் குண்டேரி மேட்டில் ஏராளமான மான்களும், காட்டெருமைக்கூட்டமும் திமுதிமுவென ஒன்று சேர்ந்து சபைக்கு வந்திருந்தன.

சபை ஆசனத்தில் அமர்ந்திருந்த சிங்கத்திற்கும், நரிக்கும் அவைகளின் மினுமினுப்பான உடலைக்கண்டதுமே நாவில் எச்சில் ஊறியது. இத்தனை மான்களும், இத்தனை எருமைகளும் இந்த வனத்தில் உள்ளனவா? இதுங்க கூட்டத்தை பாக்கிறப்போ இன்னும் ஒரு வருசத்துக்கு நமக்கு உணவுக்கு பஞ்சமே இல்லையப்போவ்! என்றே இரண்டும் நினைத்தன. இப்படி எப்படி ஒரே நாளில் எருமைக்கூட்டமும், மான்கூட்டமும் சபையில் வந்து சாவதற்காக குவியும்? என்று இரண்டும் யோசிக்கவேயில்லை. இதெல்லாம் குட்டிக்கரடி மற்றும் செம்மறி ஆட்டின் ஏற்பாடுதான்.

இரண்டும் அரசரை சென்று சந்தித்து வந்த விசயத்தை மான்கூட்டத்திடமும், எருமைக்கூட்டத்திடமும் அதிகாலையிலேயே சென்று சொல்லியிருந்தன. அரசர் மிகப்பெரிய தந்தங்களோடுதான் இருக்கிறார் என்றும் இந்த சிங்கமும், நரியும் சொல்வது போல இல்லையென்றும், போக தும்பிக்கையில் எந்த ஓட்டையுமில்லை என்றும் கூறின. இத்தனை நாள் குண்டேரி மேட்டில் நடந்த விசயம் ஏமாற்று விசயமென எல்லா விலங்குகளும் புரிந்து கொண்டன.

சபை ஆரம்பித்த சமயத்திலேயே முந்திரிக்கொட்டையாய் செம்மறி ஆடு சிங்கத்தின் முன்பாக சென்று நின்று தன் சிறுவாலை ஆட்டியது.

“உன்னைய நான் கூப்பிடவே இல்லையே செம்மறி ஆடே! இப்படியெல்லாம் கூப்பிடுவதற்கு முன்னேயே வந்து நின்னு வாலை ஆட்டிக்காட்டக்கூடாது பெரியவங்க முன்னால! உன் குடும்பத்துல உனக்கு நல்லபுத்தி சொல்லிக்கொடுக்கலையா?”

“எனக்கு வனராஜாவோட தந்தங்கள் ஒரே நாள்ல வளர்றாப்டியும், அவரோட தும்பிக்கை துவாரம் ஒரே நாள்ல மறைஞ்சிடறாப்லயும் பண்ணுற மூலிகை இருக்குற இடம் தெரியும் சிங்கத்தாத்தா!” என்றது செம்மறியாடு.

“என்னது? மூலிகை இருக்குற இடம் உனக்குத்தெரியுமா?” அதிர்ச்சியாய் ஆசனத்திலிருந்து எழுந்தே விட்டது சிங்கம். வயதான நரிக்கோ ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. நம்மதான் மூளக்காரன்னு இருந்தா நம்மளவிட பெரிய மூளக்காரனா இருப்பாம்போல இருக்கே இந்த செம்மறியாடு!

“சரி அந்த மருந்து எங்க இருக்கு உடனே சொல்லு! நாங்க ரெண்டு பேரும் அதை எடுத்துட்டு உடனே வனராஜனை சந்திக்க கிளம்பணும்!” என்று சிங்கம் இதயப்படபடப்பு கொஞ்சம் குறைந்ததும் செம்மறியாட்டிடம் கேட்டது.

“ரொம்பத்தூரமா போகணுமா செம்மறியாடே.. வயசானதால என்னால ரொம்பதூரம் நடக்க முடியாது பாத்துக்க! ஆஸ்துமா பிரச்சனைவேற எனக்கு இருக்குது!”

“இங்கயே மருந்து இருக்குது நரிப்பெரியவரே! எங்கீமே நாம மூலிகைதேடி போக வேண்டியதே இல்லை! ஒரு வயசான சிங்கத்தோட இதயமும், வயசான நரியோட ஈரலையும் கலந்து பூசினா வனராஜன் கொம்பனுக்கு உடனே தும்பிக்கை ஓட்டை சரியாயிடும். அப்படியே கொம்புக ரெண்டும் ரெண்டு நாள்ல பழையபடி நீளமா வளர்ந்துடும்!” என்று சொன்ன செம்மறியாடு திரும்பி எருமைக்கூட்டத்திடமும், மான் கூட்டத்திடமும்.. ‘என்ன பார்த்துட்டு இருக்கீங்க? ரொம்ப நேரம் டைம் எடுத்துக்காதீங்க!’ என்று சொல்லிவிட்டு குண்டேரிமேட்டிலிருந்து ‘ம்மேஏஏஏ’ என்று கத்திக்கொண்டு ஓட்டமாய் இறங்கியது.

பிற்பாடு எருமைக்கூட்டத்திடமும், மான் கூட்டத்திடமும் சிக்கிய அந்த சிங்கத்திற்கும், நரிக்கும் நடந்த விசயத்தை நான் சொல்லவும் வேண்டுமோ!

000

கே.ஜெகதீஸ்வரி.

இது இவரது முதல் சிறுவர் கதை.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *