தன் மகனின் பொருட்டு உடல்முழுவதும் குத்துப்பட்டுச் சாகக் கிடக்கும் நண்பனின் நிலையை அவனுக்குத் தெரிவிக்கக் கூடாது என்று மருத்துவமனையின் வாயிலில் கிடந்து மன்றாடுகிறாள் நாயகனின் தாய். அவளை உதாசீனப்படுத்திவிட்டு அவனை அழைக்க முற்படுகிறார்கள் நண்பர்கள். ஆவேசம் கொண்டவள், “இங்க மட்டும் அவன் வந்தானா, கண்டவன் கையால குத்துப்பட்டு சாகறதை விட, நானே சோத்துல விஷயத்தை வச்சு அவனைக் கொல்லுவேன். இது சத்தியம்!” என்று ஆவேசம் கொண்டு கத்துகிறாள். சுற்றி நிற்பவர்கள் ஒரு கணம் திகைத்து நிற்கிறார்கள். “பைரி” திரைப்படத்தை இந்த இறுதிக் காட்சி முனையைப் பிடித்து படத்தினுள் ஊடுருவிச் செல்ல முனைகிறேன்.
அவன் தகப்பனைப் போல, இன்னும் சொல்லத் துவங்காமல் இருக்கும் முந்தைய மூன்று தலைமுறைகளைப் போல தன் மகனும் புறாப்பந்தயத்திற்குள் அமிழந்து சீரழிந்து போகக் கூடாதென கடன்பட்டு அவனைக் கல்லூரியில் சேர்க்கிறாள். ஆனால் அவனது எண்ணமும் வாழ்வும் புறாக்களைச் சுற்றியபடியே அமைகிறது. அவளது தொடர் எதிர்ப்பை சட்டை செய்யாமல் இரவும் பகலும் புறாக்களின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறான். தனக்கென மொட்டை மாடியில் தனிக்கூடு அடித்து சரியான புறாக்களை இணை சேர்த்துத் தன் கூட்டுப் பட்டாக்களை இறக்கி, “நெடுநேர பந்தயத்திற்குத்” தயார்ப்படுத்துகிறான். அவனுக்கான நேரம் அமைவது போலான தோற்றத்தில், பயிற்சியின் போது அவனது புறா சாதனை நேரத்தையும் தாண்டி தொடந்து பறக்கிறது. விஷயம் சக புறாவளர்ப்பு நண்பர்கள் வட்டத்தைத் தாண்டி எதிராளிகள் வரை சென்று சேர்கிறது. அதற்கான வினையும் எதிர்வினைகளும் நிகழத் துவங்குகின்றன.
இரத்தமும் சதையுமான கருவைக் கொண்டுள்ள கதை ஒரு நிலத்தில் மையம் கொண்டு நிகழ வேண்டும். அந்த மண்ணின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், பேச்சுமொழி, தெய்வ வழிபாடு என்ற அனைத்தின் சாரமும் அந்தக் கதையில் இறங்கியிருக்க வேண்டும். அப்போது தான் பார்வையாளன் தன்னை ஒப்புக் கொடுத்து கதைக்குள் பயணிக்க முடியும். பைரியில் இவையணைத்தும் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கின்றன. புறா, பந்தயம் என்று வானம் நோக்கி விரிகின்ற கதை, “அய்யா உண்டு” எனும் வைகுண்டர் வழிபாடு, படபடவென பொறிந்து தள்ளும் கதைமாந்தர்களின் தனித்துவமான வட்டார வழக்கு, மூர்க்கமான அவர்களின் வாழ்க்கை முறை போன்றவற்றால் நாஞ்சில் மண்ணில் இறுகப் பற்றி நிற்கிறது. அதுவே கதைக்கான உயிரோட்டத்தையும் விறுவிறுப்பையும் கூட்டுகின்றன.
புறா வளர்ப்பவர்கள் புறாக்களுக்கு வைத்திருக்கும் தண்ணீர் தொட்டியில் முகம் கழுவுவது, நோய் வந்த புறாக்களோடு அதன் இணையையும் சேர்த்துப் பிரித்துக் கொன்று குழம்பு வைக்கக் கொடுப்பது, பயிற்சிக்குப் பயன்படும் பைலட் புறாக்கள், பந்தயத்தின் போது உடன் பறக்கும் துணைப் புறாக்கள், வானில் பறந்து கொண்டிருக்கும் மற்றவர்களின் புறாக்களை “வேத்தடித்து” தன் கூட்டில் இறக்கித் திருடுவது, விவரம் தெரியாதவர்களிடம் சாதாரண புறாக்களுக்கு அநியாய விலை வைத்து அவர்கள் தலையில் கட்டி விடுவது, அதற்காகச் செய்யும் தகிடுதத்தங்கள் என்று புறா வளர்ப்பில் உள்ள அத்தனை நுணுக்கங்களையும், மறைமுக உண்மைகளையும் தொட்டிருப்பதில் அசலான படைப்பாக வந்திருக்கிறது “பைரி”.
”பைரி” நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படமாக வெளிவந்ததில் இருந்தே அதன் வளர்ச்சியைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். நெடுந்தூரப் புறாப்பந்தயத்தை மையமாகக் கொண்ட எனது “ஹோமர்” நாவல் எழுதியதும், நெடுநேர புறாப்பந்தயத்தை மையமாகக் கொண்ட அக்குறும்படம் வெளியானதும் ஏறக்குறைய ஒரே காலகட்டம். அதன் பிறகு நண்பர்கள் மூலமாக ”ஹோமர்” நாவலைத் திரைக்கதையாக மாற்றும் வேலை நடந்த காலகட்டத்தில் “பைரி”யும் பெரிய திரைக்கான கதையாக, படமாக உருவாகி வருகிறது என்ற தகவல் அவ்வப்போது வந்ததுண்டு. இப்படக்குழுவினரோடு நேரடிப் பரிச்சயம் இல்லாவிட்டாலும் “பைரி”யின் வளர்ச்சியை ஒருவித அணுக்கத்தோடும், விலகலோடும் கவனித்தபடியே இருந்தேன். “நண்பர்கள் இருவர் சேர்ந்து ஒரே கூட்டில் புறா வளர்க்கிறார்கள். அவர்கள் இருவருக்குமிடையே பகை மூளும் போது, புறாக்களைப் பிரித்துக் கொள்வதில் பிரச்சனை எழுகிறது. ஒருவன் தன்னை ஏமாற்றிவிட்டுத் தனக்குரிய புறாக்களை மற்றவன் எடுத்துச் சென்றுவிட்டதாக எண்ணுகிறான். எந்தப் புறா சென்றாலும் பரவாயில்லை, குறிப்பிட்ட ஒரு பந்தயப் புறா மட்டும் தனக்கு வேண்டுமென சண்டையிடுகிறான். இதனை முன்னிட்டு இருவருக்குமிடையே தீராப்பகை வளர்கிறது. தொடர்ந்து சண்டை, பிரச்சனை, குடும்பத்தினரின் தலையீடு எதுவும் சரிவராமல் இறுதியில் கொலையில் போய் முடிகிறது.” இதுதான் “பைரி” குறும்படத்தின் கதை. இரு நண்பர்களுக்குள்ளான பகையாக இருந்த எளிய முடிச்சை பல்வேறு அடுக்குகள் கொண்ட திரைக்கதையாக, உணர்வுப் பூர்வமான காட்சிமொழி கொண்டு அசலான ஒரு படைப்பாக உருவாக்கி இருப்பதைக் காணும் போது மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது. அதுவும் பல்வேறு புறச்சிக்கல்களைத் தாண்டி படம் முழுமையாகத் தயாராகி வெளிவந்து, அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது.
புறா ஷோக்குக்குப் புதிதாக வரும் நாயகன், அவனைப் புறா வளர்ப்புக்குக் கொண்டு வரும் ஆர்வக்கோளாறு நண்பன், புறாவளர்க்கும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் பண்ணையார், அதே புறாவளர்ப்பில் இருக்கும் ஒரு பொது எதிரி, நாயகனுக்கான கல்லூரி காதல், ஊரில் உடனிருக்கும் மாமன் வீடு என்பதோடு தலைமுறைகளாக தொடரும் புறா வளர்ப்பு, அதனால் விடாமல் துரத்தும் தீயூழ். அதன் பொருட்டு எப்படியாவது தன் மகனை இந்தப் புதைகுழியில் இருந்து மீட்க உக்கிரமாகப் போராடும் தாய். மகனையோ, மனைவியையோ ஒரு சொல் அதிர்ந்து பேசாத தந்தை இவர்களின் வாழ்வு ஓர் அடுக்கு என்றால், குளத்துக்காரியின் மகனாக ஊருக்குள் அறியப்படும் அந்த நண்பன் அமலின் பயணம் இன்னொரு அடுக்கு. நாயகன் இவனைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் இவனாக வலியச் சென்று நாயகனைத் தன் உயிர் நண்பனாக வரித்துக் கொள்கிறான். எவ்வளவு திருகுத் தனங்கள் செய்தாலும், நாயகனின் பொருட்டு அவன் வீட்டுச் செல்ல நாயாகக் குழைந்து தான் போகிறான். நாயகனின் தாய் இவனை எவ்வளவு பழித்தாலும் இவனால் அழுது தேம்பி, “அப்படி சொல்லாதீங்க அக்கா!” என்று கெஞ்சத் தான் முடிகிறதே தவிர, ஒரு அவச்சொல் பேச இவனுக்கு மனம் வருவதில்லை. ஊர் அவ்வாறு சொல்வது பற்றி கவலையின்றி இவனது அப்பா கூறும் ஒற்றை வரியில் பெயர், முகம் இல்லாத இவனது அம்மாவின் கதாப்பாத்திரம் மீது மரியாதை வந்து விடுகிறது. வானில் நெடுநேரம் சுதந்திரமாக பறந்தபடியிருக்கும் புறாக்களை வளர்த்துப் பராமரிக்கும் கால் நடக்க முடியாத ஒருவர் என்பது எவ்வளவு முரணான சித்திரம். திரைப்படத்தில் வரும் அமலின் அப்பா அப்படியானவர். அவருக்கிருக்கும் வைராக்கியத்தைப் பேசவும் திரைக்கதையில் வாய்ப்பு ஏற்படுத்தி இருந்தது அவ்வளவு இயல்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இருந்தது. அமலைப் பொறுத்தவரை, ஊருக்குச் சோக்காளி, அப்பனுக்கு உற்ற பிள்ளை, அதோடு நட்புக்கு உயிரைக் கொடுக்கும் கண்மூடித்தனமான நண்பன். ஒரு கட்டத்தில் சுற்றி இருந்தவர்கள் என்ன தடுத்த போதிலும், தன் நண்பனைக் கொல்லத் துணிந்தவனை கொல்ல வேண்டும் என்ற உணர்வெழுச்சியில் சென்று பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறான். பின் தன் உயிர்பயம் வரும் போது தன்னை எப்படியாவது காப்பாற்றும்படி பார்ப்பவர்களிடம் எல்லாம் மருகுகிறான். இப்படி அமலின் குடும்பம் இன்னொரு அடுக்காக திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறது. அமலாக நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் அக்கதாபாத்திரத்திற்கான முழு நியாயம் சேர்த்திருக்கிறார். இன்னொரு ஆச்சர்யம், பண்ணையாராக நடித்திருக்கும் “ரமேஷ் ஆறுமுகம்” உண்மையான கதாபாத்திரம். நிஜவாழ்வில் புறாப்பந்தயக்காரரான அவரை அப்படியே நடிக்க வைத்திருக்கிறார்கள். நாகர்கோவில் அறுகுவிளை கிராமத்தில் என்.ஆர்.பி. எஃப் என்று புறாப்பந்தய சங்கத்தை நடத்தி வரும் அவர், திரைப்படத்தில் வரும் 26.05 மணி பந்தய நேரத்துக்கான அசல் சொந்தக்காரரும் அவரே. அவர் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்றிருக்கிறார் என்பது இன்னொரு வியக்க வைத்த செய்தி.
“உபபாண்டவம்” நாவலில், மகாபாரத்தின் கதைகளை சூதன் சொல்வது போல எழுதப்பட்டிருக்கும். அது கதைக்கு ஒரு மாயத் தன்மை அளித்ததாக, கதை சொல்லலின் அடர்த்தியை அதிகப்படுத்தியதாகத் தோன்றும். அதே போன்றதொரு யுக்தி, பைரியிலும் உண்டு. நான்காம் தலைமுறை புறாப்பந்தயக்காரனான ராஜலிங்கத்தின் கதையை நாஞ்சில் நாட்டு மண்ணின் இசை வடிவமான வில்லுப்பாட்டின் மூலம் விவரித்திருக்கிறார்கள். கதைமாந்தர்களை பார்வையாளர்களுக்கு இயல்பாக அறிமுகப்படுத்தப் பயன்படும் ஒரு முறை இது. இதில் எவ்வித செயற்கைத்தனமும் இல்லாமல் இயல்பான பாட்டு மொழியில் வில்லிசையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதுவும் இறுதியில் அடுத்த பாகத்திற்கான தூண்டிலையும் வில்லிசைக்காரரே சொல்லி முதல் பாகத்தை முடித்திருப்பது சிறப்பு.
புறாப்பந்தயங்களில் மூன்று வகை உண்டு. வளர்க்கும் கூட்டில் இருந்து 500 கி.மி., 1000 கி.மி தாண்டி உள்ள துவக்கப் புள்ளியில் இருந்து பறக்கவிட்டால், முன்பின் தெரியாத நிலப்பரப்பு, தட்பவெட்பம், காற்றின் திசை ஆகியவற்றைத் தாண்டி புறாக்கள் தாங்கள் வளர்ந்த கூட்டை அடையும் போட்டியான “நெடுந்தூரப் பந்தயம்”. அத்தகைய போட்டிகளில் “ஹோமர்” வகைப் புறாக்கள் பயிற்றுவிக்கப்படும். மாறாக மற்ற இருவகைப் போட்டிகளில் ஒன்றில் வானத்தில் உயரத்தில் பறக்கும் கர்ணம் புறாக்கள் அந்தரத்தில் கர்ணம் அடித்து சாகசம் செய்யக் கூடியவை. மூன்றாவது தன் கூட்டைச் சுற்றி வானத்தில் வட்டமிட்டுப் பறந்தபடி இருக்கும் “நெடுநேரப் பந்தயம்”. இப்போட்டியில் தங்களுக்கு நன்று தெரிந்த நிலப்பரப்பின் மீது தனது சொந்தக் கூட்டை மையமாக வைத்து தொடர்ந்து இரவு பகலென இருபது மணி நேரத்திற்கு மேலாகப் புறாக்கள் பறந்தபடியே இருக்கும். தாகம், பசி மறந்து, உடல் மற்றும் மன வலிமையோடு, தரை இறங்காமல் அதிக நேரம் வானத்தில் தன் கூட்டின் மையத்தைவிட்டு விலகாமல் அதே சுற்றுப் பாதையில் ஒப்பீட்டளவில் அதிக நேரம் பறக்கும் புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இத்தகைய மூன்று வகைப் போட்டிகளிலும் புறா இனம், விதிமுறைகள், பயிற்சி என்று அனைத்தும் மாறுபட்டவையாக இருந்தாலும், ஒரு விஷயம் மட்டும் அனைத்துப் போட்டிகளுக்கும் பொதுவானது. அது கொலைப் பறவையான ” பைரி”யின் தாக்குதல். வானில் பறக்கும் புறாக்களுக்கான எமன் “பைரி”. கண்ணிமைக்கும் நேரத்தில் கொலைத் தாக்குதல் நடத்தி புறாக்களைக் கொன்று இரையாக்கி விடும். அப்படியும் பைரியின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் புறாக்கள் பதற்றத்திலும், அச்சத்திலும் அவற்றின் இயல்பான நினைவாற்றலில் இருந்து மனம் பிசகி திசை மாறிப் பறந்து சென்றுவிடும். அத்தகைய புறாக்கள் ஒரு போதும் நேரத்திற்கு வீடு வந்து சேர முடியாதவை. ஆக, பைரி அடித்தால் ஒன்று மரணம் அல்லது தன்னியல்பைத் தொலைத்த அலைக்கழிப்பு.
இப்போது மீண்டும் படத்துக்கு வருவோம். புறாப்பந்தயத்தை உயிராக் கொள்ளும் இளைஞர்களின் வாழ்க்கையைப் பேசும் கதையின் தலைப்பு ” பைரி”. அப்படியானால் இது புறா வளர்ப்பு, பந்தயம், வெற்றி என்ற வழமையான கதை இல்லை தானே. “பைரி” நான்காம் தலைமுறை முதல் பாகம் முடியுமிடத்தில்தான் “பைரி” யின் அசல் கதை துவங்குகிறதோ என்று தோன்ற வைக்கும்படியான முடிவு படத்தினுடையது. படத்தின் முதல் காட்சியில் அறுகுவிளை ஊரின் வடிவு நாடார் பேரனும், சரஸ்வதி-திருமாலின் புத்திரனுமான இராஜலிங்கம் என்று அறிமுகமாகும் நாயகன், அவனது காதல், தோல்வியுற்ற படிப்பு, இவை இரண்டிற்கும் மேலாக அவன் நினைக்கும் புறா வளர்ப்பு, அதில் அவன் தனி ஆளுமையாக உருவெடுக்கும் முன்பாகவே அலைக்கழிக்கப்படும் அவன் வாழ்வு, அவனின் பொருட்டு சாகக் கிடக்கும் அவன் நண்பன், நண்பனைக் கொலைத் தாக்குதல் நடத்தியவர்களை பழிவாங்க அவன் மீண்டும் ஊருக்கு வரப்போவதில்லை என்று அறிவிப்போடு முடியும் முதல் பாகம் என்று “பைரி” பார்வையாளர்கள் எதிர்பாராத இன்னொரு தளத்தில் பயணிக்கப் போகிறது என்று தோன்றுகிறது. படத்தின் பின்னொட்டாக வரும் காட்சித் துணுக்குகளும் அதையே தான் சொல்கின்றன. முதல் தலைமுறை – மார்ஷ் ஸ்காட் குடும்பம், இரண்டாம் தலைமுறை – தங்கமுத்து பண்ணையார் குடும்பம், மூன்றாம் தலைமுறை – வடிவு நாடார் குடும்பம், நான்காம் தலைமுறை – திருமால் – சரஸ்வதி குடும்பம், அவர்களின் மகனான “இந்திய புறாப்பந்தயக்காரர் லிங்கம் அவர்களின் பந்தயப்புறா 1.9 மில்லியன் டாலர் விலைக்குப் போனது” என்ற செய்தித் தாள் பதாகையோடு முதல் பாகம் முடிகிறது. அடுத்த பாகங்களில் “பைரி” என்ன செய்யப் போகிறது, காத்திருப்போம்.
”பைரி – பாகம் 1” அமேஸான் ப்ரைம் வலையரங்கில் கிடைக்கிறது,
(இக்கட்டுரையின் ஆசிரியர் பாலகுமார் விஜயராமன் ஹோமர், புறாக்காரர் வீடு, சேவல் களம், கடவுளின் பறவைகள் என பறவைகளை முக்கியமாக புறாக்களை மையமாகக் கொண்ட நாவல்கள், சிறுகதைகளை எழுதியவர்)
பாலகுமார் விஜயராமன் (1980)
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொலைத்தொடர்பு பொறியாளர்
சொந்த ஊர் மதுரை, தற்பொழுது ஒசூரில் வசித்துவருகிறார். மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்பு பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
இதுவரை 5 அச்சு நூல்களையும், 5 மின்னூல்களையும் எழுதியுள்ளார். பறவைகள், விலங்குகள், சூழலியல் சார்ந்த இவரது “கடவுளின் பறவைகள்” மொழிபெயர்ப்பு உலகச் சிறுகதைகள் தொகுப்பிற்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான வாசகசாலை விருது 2018ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆலன் கின்ஸ்பெர்க்கின் நெடுங்கவிதை “ஹௌல்” மற்றும் சில கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். இவர் மொழிபெயர்த்த, சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் “அஞ்சல் நிலையம்” நாவல் பரவலான கவனத்தையும், நேர்மறை விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் பெற்றது. காலச்சுவடு வெளியீடாக 2018ம் ஆண்டு வெளியாகிய இவரது நாவல் “சேவல்களம்” பண்டைய காலம் தொட்டு தமிழர் புறவாழ்வில் முக்கியப் பங்காற்றும் சேவல் சண்டை குறித்த நுட்பங்களைப் பேசுகிறது. கருவுறுதலின் போதான அக அலைச்சல், மகப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற கருக்களைக் கொண்ட இவரது புதிய சிறுகதைத் தொகுப்பு “நஞ்சுக் கொடி” இவ்வாண்டு இறுதியில் வெளியாக இருக்கிறது.