1.
அதிகாலை மூன்றுமணிக்கு
அந்தக் குயில் கூவத்தொடங்கிவிட்டது..
அப்போதுதான் நீயும் பேச ஆரம்பிக்கிறாய்..
ஆதி அந்தத்திலிருந்து
தோண்டித்தோண்டிக் கொட்டுகிறாய்..
மலைப்பாக இருக்கிறது
உன் நினைவும் பேச்சும்..
அது நம் தூக்கத்தைப் பறித்துவிடுகிறது..
பெரும் இழப்பின் வலியும் தவிப்பும்
அந்தக் குயிலின் குரலில் வழிந்தோடியது..
இருந்தாற் போலிருந்து உன்னிடமிருந்தும்
வருகிறது ஒரு கூவல்..
கோடிக் கோடிச் சூரியச்சுடராக
என்னைப் பிரகாசிக்கச் செய்வீர் ஆண்டவரே..
தொடர்ந்து சந்நதம் வந்ததுபோல
சம்போ மகாதேவா
என்ற சத்தம்
இருளைக் கிழிக்கிறது..
சில நிமிடங்களில்
மீண்டும் உறங்கிப்போகிறாய்
ஒரு மழலையைப் போல..
இப்போது
வேறு திசையிலிருந்து
விட்டு விட்டுக் கூவிக்கொண்டிருந்தது
அதே குயில்.
2.
காளான்கள் பூக்கும் காலம்.
வானத்தின் கருணைக்கு
சற்றும் குறைவில்லை
கொண்டிருந்த பேரன்பு..
தண்ணீராய் செலவழித்து
வளர்ந்தது
உயிர் வாழ்க்கை..
அன்பகத்திலில்லாமல்
போய்விட்ட பூமி
மரக்காளான்களாய் பூத்துத் தருகிறது
கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கும்.
3.
நொப்பும் நுரையுமாய் சுழித்தோடிய
பூம்புனலையே
நினைத்துக்கொண்டிருக்கிறாய்..
காட்டாற்று வெள்ளம் கூட
சில நாட்கள்தான்..
ஊற்றுச்சுரப்பு எப்படி நிகழும்
கொடித்தடமாய் போய்விட்ட
மணலற்ற நதியில்..
ஆனாலும்..
ஏதேனும் ஒரு பருவக்காற்றுக்கு
சில மேகங்கள் கருக்கொள்ளக்கூடும்..
சேலை நனையும் தூறல் கூட போதும்..
அரும்பரும்பாய் மொக்கு வைத்து
மணிமணியாய் பூப்பூத்து
பால்கதிர் பளபளக்கும்
ஒரு பாம்பின் படம் போல..
4.
அன்று
அது நிகழாமல் இருந்திருக்கலாம்
என்றாள் அவள்..
எது என்று நானும் கேட்கவில்லை..
எது என்று அவளும் சொல்லவில்லை..
5.
அந்தக் குயில் இரண்டொரு வார்த்தைகளோடு
நிறுத்திக்கொண்டது தன் பாடலை..
குளிரூட்டப்பட்ட அறையிலும்
என் பாதங்கள் எரிந்து கொண்டிருந்தன..
வருடங்கள் கடந்தாலும்
வருத்தங்கள் கரையவில்லை..
நீ கேட்கிறாய்
அன்றைய மதியம்
அவளைக் காண்பதற்காக
ஏன் நீ சென்றாய்..
நீ அங்கு வந்ததாக
அவள் என்னிடம் பகிர்ந்தபோது
நான் உடைந்து போனேன்..
மேலும் சொல்கிறாய்
அன்றைய இரவு
நான் அழுது கொண்டே இருந்தேன்..
மேலும் அழுத்தமாகச் சொல்கிறாய்
இப்போதெல்லாம்
உன்மீது எனக்கு எந்த பொசசிவ்னஸும் இல்லை..
ஏனென்றால்
எனக்கு
நீ புருஷனென்ற உணர்வே இல்லை
5.
கோடை ராகங்களைப்
பாடிக்கொண்டிருந்தன
மழைப்பூச்சிகள்
நீயும் கேட்கவில்லை..
நானும் சொல்லவில்லை
ஆனாலும் இருக்கிறது ஏராளம்
எப்படியும் நிகழத்தான் போகிறது
போய்விடவா
சற்று முன்பாகவே
விடைபெறுகிறேன்
தலையசைத்து
உன் கண் அசைவுக்கு
அந்த தீபம்
மெல்ல அணைவதைப்போல்
நானும் அகலவேண்டும்
ஒருநாள் இங்கிருந்து..
அரவணைக்கிறேன்
அதை அதை
அப்படியே.
கோகிலாராஜ்
நான், சுப்பு அருணாச்சலம் என்ற பெயரில் 1998 முதல் சிறுகதைகளும் கோகிலாராஜ் என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறேன். நெய்வேலி சொந்த ஊர்.
ரேகை பதிந்த வீடு எனது முதல் தொகுப்பு 2002 -ல் வந்தது. சுந்தரசுகன் எனது யுத்தம் என்ற முதல் கதையை வெளியிட்டது. பிறகு ஆனந்த விகடன், கணையாழி,செம்மலர், சதங்கை,தினமணி கதிர் முதலிய இதழ்களில் கதைகளும் கவிதைகளும் வெளிவந்தன.