1
எதுவும் வெளிப்படையானதல்ல
இந்த மலைத்தொடர்கள்
வழியும் ஆறுகள்
மண்ணில் விழாத ஆகாயம்
காலுக்கு கீழே இருக்கும் நிலம்
எதுவும் வெளிப்படையானதல்ல
கலைந்து போகும் மேகங்கள்
இருட்டு ஒளி ஓவியம் மொழி
காயங்கள் விடியல்கள் வீதிகள்
மறைந்து போகாத தழும்புகள்
எதுவும் வெளிப்படையானதல்ல
கதைகளும் கவிதைகளும் பழமொழிகள்கூட
கற்றுக்கொண்டு விட்டன
வெளிப்படையாக பேசுகின்றேன் என்பதில் கூட
ஏதோஒன்று ஒளிந்திருக்கிறது
2
சாபங்களை சேகரிக்கின்றவன் வருகிறான்
அவனுக்கு போக்கிடம் இல்லை
சாபமிட தினமும்
யாரோ ஒருவர் கிடைத்து விடுகிறார்
சாபமிட்டதற்காக நன்றி தெரிவித்து கும்பிடும் போது
அவனுக்கு மேலும் உப சாபங்கள் கிடைக்கின்றன
சில சமயம் அவனுடைய ஆடை அவிழ்ந்து விடும்
சரி செய்யாமல் கடந்து போகும் பெண்களை
பார்த்து சிரிப்பான்
சில சமயம் எதிரே வருகிறவர்களை கட்டிப்பிடிப்பான்
அவனுக்கு ஏன் சாவு வரவில்லையென்று சாபமிடுவார்கள்
எல்லாவற்றுக்கும் சிரிப்பை வைத்திருக்கின்றான்
சிரிப்பு அவனது தாய்மொழி
ஒரு குறும்புக்காரன் ஒரு பதாகையை அவனிடம் கொடுத்தான்
அதில் சாபங்கள் வாங்கிக்கொள்ளப்படும் என்று எழுதியிருந்தது
சிரித்தான் தன் தலை மேல் வைத்துக்கொண்டான்
வருகிறவர்கள் அதை படித்து விட்டு
சிரித்தப் படியே கடந்து சென்றார்கள்
அன்றைய தினம் யாரும் அவனுக்கு சாபமிடவில்லை
முதன்முதலாக அவன் அழத்தொடங்கினான்
கவலைப்படத்தொடங்கினான்
மற்ற மனிதர்களைபோல நடந்துக்கொண்டான்
காரணிகளை விட்டு விட்டு
எதிரே தெரியும் அவலங்களின் மீது
அவனும் சாபமிட கற்றுக்கொண்டான்
3
நாங்கள் பரம்பரை பரம்பரையாக
தைய்ராய்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள்
எங்கள் இரத்த மாதிரிகளில் அது தெரிந்தது
எத்தனையோ முறை இது போன்று
இரத்த பரிசோதனை செய்து உள்ளேன்
அதில் என்னுடைய சாதியோ மதமோ தெரியவில்லை
நான் எந்த ஊரைச் சேர்ந்தவன் என்றோ
எந்த மொழிக்காரன் என்றோ தெரியவில்லை
அதற்கு டி என் ஏ சோதனை செய்ய வேண்டும் என்றார்கள்
செய்து பார்த்தேன்
அதிலும் சாதி மதம் மொழி எதுவும் தெரியவில்லை
என்னுடைய டி என் ஏ எந்தக்கடவுளின் டி என் ஏ வோடு
ஒத்துப்போகிறதென்று தெரியவில்லை
கடவுளின் டி என் ஏ மாதிரிகள்
பூமியில் இல்லையென்றார்கள்
அதுவும் தெரியவில்லை
தற்சமயம் வரை தெரிந்த ஒன்று
நான் தைய்ராய்டு பரம்பரையை சேர்ந்தவன்
கொசுறு தகவல்
நான் திராவிடர்களின் இனத்தை சேர்ந்தவன்
ஒரு வரலாற்றுபேராசிரியர் சொன்னார்
பரம்பரை மாறி விடலாம்
இனத்தின் டி என் ஏ மாறுவதில்லை
4
எங்கள் கூட்டத்தில் கலந்து க்கொள்ள
எந்த நிபந்தனைகளும் இல்லை
கையில் எத்தனை வண்ணங்களிலும்
கயிறு கட்டி வரலாம்
கைகளில் கட்டி முடித்து விட்டால்
கால்களில் கழுத்தில் இடுப்பில்
எங்கு வேண்டுமானலும் கட்டிக்கொண்டு வரலாம்
கயிறுகளை திரியாக பிரித்து
எதையும் மாட்டிக்கொள்ளலாம்
அது தாம்புக்கயிறாகவோ
நெகிழி கையிறாகவோ இருந்தாலும் தோஷமில்லை
அவசரத்துக்கு கயிறு கிடைக்காதவர்கள்
அரைஞான் கயிற்றை மாட்டிக்கொண்டு வரலாம்
தலையில் முக்காடிட்டோ
முழுவதுமாக முகத்தை மூடிக்கொண்டோ வரலாம்
முக மூடிகளுக்கும் வண்ணம் தடையில்லை
ஆடை விசயத்திலும் கூட தடை விதிக்கப்பட மாட்டாது
எந்த அடையாளமின்றியும் நிர்வாணமாகவும் வரலாம்
கூட்டத்திற்கு வரும் போது
புலன்களை அடக்க வேண்டியதில்லை
விரும்பினால் அவிழ்த்து விடுங்கள்
எந்தத் தடையும் இல்லை
கூட்டத்தின் கதவுகள் அடைக்கப்பட மாட்டாது
கூட்டத்திற்கு வரும் போது செருப்பணிந்துக்கொண்டு வரலாம்
ஒரே ஒரு நிபந்தனை
உங்கள் மூளைகளை வெளியே கழற்றி வைத்து விட வேண்டும்
அதற்கு தனியாக மூளையகம் நுழைவு வாயிலில் இருக்கிறது
அதை ஒவ்வொரு கவுண்ட்ரிலும் இருக்கிற
மிருகங்கள் வாங்கிக்கொள்ளும்
பிடித்தமான மிருகத்திடம்
உங்கள் மூளையை கொடுத்து டோக்கன் வாங்கிக்கொள்ளுங்கள்
திரும்பி செல்லும் போது மறக்காமல்
மூளைகளை எடுத்து செல்லுங்கள்
ஏன் மிருகங்களுக்கு பதில் பிடித்தமான கடவுள்களை
நிறுத்தக்கூடாதா
ஒரு கூட்டத்திற்கு அப்படி நிறுத்தி பார்த்தோம்
திரும்பி வரும் போது மூளைகளை காணவில்லை
எல்லா மூளைகளைகளையும் கடவுள்கள் தின்று விட்டன
வாருங்கள் கூட்டம் தொடங்கி விட்டது
மூளைகள் இல்லாமல் உங்கள் ஆன்மாவை கடவுளை
கற்பனையை எப்படி தரிசிப்பீர்கள் என்று
அனைவரும் கூட்டத்தில் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்
5
உங்களுக்கு ஒரு கதை இருக்கிறதா
கதை இல்லாதவர்கள் வாழத் தகுதியற்றவர்கள்
கதையுள்ளவர்களின் தேசம் இது
உங்கள் முன்னோர்கள் ஒரு கதையிலோ
புராணத்திலோ இருந்திருக்க வேண்டும்
மான் மீன் குதிரை கழுதை நரி ஏதோ ஒன்றுக்கு
மூதாதையர்ளின் பிறப்பு இருக்கிறதா தேடுங்கள்
எரிமலைக்கும் பனிமலைக்கும்
பிறந்த கதையாவது இருக்க வேண்டும்
எப்படியும் புராண காலங்களை
கடந்துதானே மரபு வந்திருக்க வேண்டும்
புராணத்தில் உங்கள் கதைகளை
செருகாமல் விட்டிருப்பீர்கள் தேடுங்கள்
பூஜ்ஜியத்திலிருந்து வந்தீர்களா
அல்லது ஒன்றிலிருந்தா கண்டு பிடியுங்கள்
கல்லிலிருந்து வந்த அகலிகையின்
பரம்பரையாக கூட இருக்கலாம்
பாட்ட் சொல்வாள்
அவள் நல்லத்தங்களின் பரம்பரையென்று
ஆனால் பாட்டி
எந்த குழந்தையையும் கிணற்றில் தள்ளியதில்லை
பழைய கதைகளை
இன்றைய அறிவியலோடு ஒப்பிடாதீர்கள்
கதைகளின் வண்ணங்களை மாற்றிக்கொள்ளலாம்
நீங்கள் அடிமையாக இருந்தால் கூட பரவாயில்லை
ஆண்ட பரம்பரையென்று எழுதிக்கொள்ள்லாம்
கதைகளுக்கும் பரிணாமம் உண்டு
இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதைகள்
இருப்பத்தொன்றாம் நூற்றாண்டில் அப்படியேஇல்லை
கதைகளின் வாயை அடைத்து விடலாம்
நீதிமன்றங்கள்
பெரும் பானமை கருத்துக்கள் படியே முடிவெடுக்கின்ற்ன
உங்கள் கதைகளை தேடுங்கள்
++
கோசின்ரா
கோ.ராசேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் கவிஞர் கோசின்ரா. கடந்த பதினைந்து வருடங்களாக கவிதை எழுதி வருகிறார். இவருடைய அரசியல் கவிதைகள் பிரபலமானவை. சமூக எதார்த்தங்களின் மீது இவருடைய உக்கிரமான பார்வை கவிதைகளாகிறது. என் கடவுளும் என்னைப் போல கருப்பு என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. “சமூகத்தில் பிரச்னைகள் எழுகிற போதெல்லாம் என்னுடைய விமர்சனங்கள் கவிதைகளாக வெளிவருகின்றன” என்கிறார் .இவருடைய இரண்டாம் தொகுப்பு “ பூனையின் கடவுள்:”புது எழுத்து வெளியீடு