1
நடப்பதெல்லாம்
நம் கையில் இல்லையென்று
வீடு திரும்பிக்கொண்டிருந்தோம்
அப்போது வேட்டைப்பார்வைகள்
கூடுளாய் தொங்கும் சாலையில்
துணிச்சலாக ஒரு ஒற்றை விளக்கு
தலையை நிமிர்த்திய படி
எதிர்க்காற்றில்
தஞ்சாவூர் பொம்மை போல
எல்லா திசையிலும்
கவிழ்ந்தும் எழுந்தும் ஆடிக்கொண்டு வந்தது
வழியெங்கும்
அடைக்கப்பட்டிருந்த மனக்கண்களில்
தன் வெளிச்சக்கீற்றை திணித்துக்கொண்டிருந்தது
அதன் ஒற்றை வாய்
அதிகாரத்தின் மறைவிடங்களை
வெளிச்சம் போட்டு காட்டிய படி
வந்துக்கொண்டிருந்தது
அதற்கு ஒரு நாக்குதான்
அரசாங்கத்திற்கு ஆயிரம் உதடுகள்
அது எப்போது வேண்டுமானாலும்
அணைந்து விடலாம்
அது எப்போது அணைந்ததென்று
கண்டு பிடிப்பது சுலபம்
அன்றைக்கு காலங்காலமாக
கடைபிடிக்கப்பட்டு வந்த
நம் மெளன விரதங்களை உடைத்துக்கொண்டிருப்போம்
அணைந்து போன அந்த விளக்கின் ஒளி
நம் உதடுகளில் ஒளிர்ந்துக்கொண்டிருக்கும்
2
நாங்கள் வாழ்ந்துக்கொண்டிருப்பது
அபகரிப்புக்குப்பின் எஞ்சிய நிலத்தில்
நாங்கள் உழுதுக்கொண்டிருப்பது
ஆக்கிரமித்தது போக எஞ்சிய வாழ்க்கையை
நாங்கள் பேசிக்கொண்டிருப்பது
வாய்ப்பூட்டு சட்டங்கள் வடித்த பிறகு எஞ்சிய வார்த்தைகளை
நாங்கள் வேர்பிடித்துக்கொண்டிருப்பது
புறக்கணிக்கப்பட்ட பின்னும்
உயிர்ப்போடிருக்கும் மொழியின் நிழலில்
ஆனால் நாங்கள் எஞ்சியவர்களல்ல
இந்த நிலத்தின் உரிமையாளர்கள்
ஜனநாயகத்தின் பங்குதாரர்கள்
3
அவள் கொடுத்த தேநீரை
குடித்த நொடியில்
எனக்குள் ஒரு ரகசியம்
ஒரு பட்டாம் பூச்சி போல பறந்துக்கொண்டிருந்தது
அந்த ரகசியம்
என் விரல்களிலிருந்து
தேநீர் கோப்பைக்குள் இறங்கியது
தேநீரில் பாலின் நிறத்திலிருந்து எழுந்த
அந்த பட்டாம் பூச்சி
தேநீர் சுவையிலிருந்து தேனை எடுத்தது
ஒரு பூவை திறப்பதை போல
அந்த ரகசியத்தை திறந்தது
அப்போதுதான் துளிர்த்த ஒரு காதல்
அந்த பட்டாம் பூச்சியின் சிறகில் ஒட்டிக்கொண்டு வந்தது
அந்தக்காதல்
ஒரு மீனைப்போல துள்ளியது
அது என் கண்களை
என் உதடுகளை
என் இதயத்தை
என் சிந்தனையை
என் கைகளை
என் கால்களை
குளமாக்கி நீந்திக்கொண்டிருந்தது
அந்த நீச்சல்தான்
எனக்குள் கிடந்த மலைகளை பறக்க வைத்தது
4
எளிமையை காட்டிக்கொள்ள
உன்னை ஒரு புழுவாக நினைக்கிறாய்
பாதகமில்லை ஆனால் உன் எண்ணம்
உன் திசையை நோக்கி
ஒரு கழுகை வரவழைத்து விட்டது
இப்போதாவது உனக்குள் இருக்கும்
உன் எலும்புகளுக்கு உயிர் கொடு
அதன் உதட்டில் வெயிலை ஊட்டு
அதன் இரைப்பையில் வெயில் இருக்கட்டும்
உன் நாடு உன் சதையில் எழுப்பப்பட்டதல்ல
அது உன் எலும்புகளால் கட்டப்பட்டது
உன் எலும்புகளை வலுவாக்கு
எலும்புதான் உன் நிலம்
எலும்புதான் உன் அடையாளம்
அடையாளத்தை எதற்காவும் விட்டுக்கொடுக்காதே
ஒரு கழுகால்
ஒரு திமிங்கிலத்தை தூக்கிச் செல்ல முடியாது
5
எந்த செடிகளும் பூக்களை தருவதில்லை
நாம் தான் பறித்துக்கொள்கின்றோம்
பறிக்கப்பட்ட பூக்கள்
செடியின் முகவரியை ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை
வேட்டையாடப்படும் விலங்குகளுக்கும்
அந்த தினத்தில்
ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டோமென்று தெரியவில்லை
இரண்டையும் யோசித்தவாறே
பசித்தலையும் முதலைகளின் குளத்தில்
நீச்சல் கற்றுக்கொள்ள இறங்குகிறது என் நம்பிக்கை
இன்றைக்கு வந்த செய்தித் தாளில்
தோதான செய்தி எதுவுமில்லை
சொத்துக்காக அப்பனைக்கொன்றான்
மகனெனும் பழைய செய்திதான்
இரண்டு பேரும் ஒரே சாதிதான்
ஏன் கொன்றான் தெரியவில்லை
கொஞ்ச நாட்களுக்கு முன்னர்
கீழ்ச் சாதி பெண்ணை
வன்புணர்வு செய்ய வேண்டுமென்று
பேசிக்கொண்ட சாதி மான்கள்தான் இருவரும்
சவப்பெட்டி மேல் கிடந்த பூவும்
கர்ப்பிணிபெண்ணின் கூந்தலில் இருக்கும் பூவும்
ஒரே செடியில் பறிக்கப்பட்டவையென்றால்
நம்ப மறுக்கிறார்கள்
இடத்தை வைத்து மணத்தை கூட்டுவதில்லை பூக்கள்
என்பது ஆறுதலாக இருக்கிறது
தன்னை மாலையாக்கிய விரல்களில்
பூவின் வாசனையை விட்டுச் செல்வது
பூக்களின் வாடிக்கை
ஆனால் விரல்களின் வாசனையை
தன் மீது படிய விட்டதில்லை பூக்கள்
++

கோசின்ரா
கோ.ராசேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் கவிஞர் கோசின்ரா. கடந்த பதினைந்து வருடங்களாக கவிதை எழுதி வருகிறார். இவருடைய அரசியல் கவிதைகள் பிரபலமானவை. சமூக எதார்த்தங்களின் மீது இவருடைய உக்கிரமான பார்வை கவிதைகளாகிறது. என் கடவுளும் என்னைப் போல கருப்பு என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. “சமூகத்தில் பிரச்னைகள் எழுகிற போதெல்லாம் என்னுடைய விமர்சனங்கள் கவிதைகளாக வெளிவருகின்றன” என்கிறார் .இவருடைய இரண்டாம் தொகுப்பு “ பூனையின் கடவுள்:”புது எழுத்து வெளியீடு