அலுவலகத்தில் நுழைந்தது முதல் வேலையே ஓடவில்லை. மீண்டும் மீண்டும் அவளின் கேவியபடி அழுத முகம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ச்சே! என்ன இருந்தாலும் காலையில் நான் அப்படி சண்டை போட்டுக் கத்தியிருக்க கூடாது. எனக்கு இப்போதெல்லாம் சட்டென கோபம் வந்து விடுகிறது.
தேநீரில் சர்க்கரையில்லை என்ற உடனே சிலுப்பி கொண்டு எழுந்தது. ஆத்திரம். அனால் அதை நான் வெளிக்காட்டவில்லை.
சண்டை இவ்வளவு பெரியதாக போகும் என இருவருமே நினைக்கவில்லை. இட்லி சரியாக வரவில்லை அதனால் வெளியே இன்று டிபனை பார்த்து கொள்ளும்படி கெஞ்சலாகத்தான் கேட்டாள். அப்போதுதானா நாக்கில் சனி வந்து அமர வேண்டும்.
“மகாராணிக்கு அதை விட வேறென்ன வெட்டி முறிக்கிற வேலை” என் தொனி அவளை சீண்டியிருக்க வேண்டும்.
“உங்களுக்கு சமைச்சு கொட்டத்தான் எங்க வீட்ல என்னை பெத்து போட்ருகாங்களா என்ன”
“இல்லேன்னா என்ன பண்ணியிருப்ப.. ராக்கெட் விட்ருப்பயோ..”
“ஒழுங்கா படிக்க வெச்சுருந்தா பண்ணி இருப்பேன். எங்க வீட்லதான் அந்த கருமத்தை பாதியிலேயே நிறுத்தி உலகத்திலேயே இல்லாத பேங்க் மாப்பிளைன்னு அவசரமா கட்டி வெச்சுட்டாங்க. இங்க வந்து உங்களோட கஷ்டப்படணும்னு என்னோட விதி” கண்களில் கண்ணீர் மெதுவாக எட்டிப்பார்த்தது.
அத்துடனாவது நிறுத்தியிருக்கலாம்.
“ஆமா இல்லேன்னா உங்க வசதிக்கு மைசூர் மகராஜா வீட்ல இருந்து வந்து உன்னை கல்யாணம் பண்ணிருப்பாங்க பாரு”
“எனக்கென குறைச்சல். அப்படித்தான் போயிருப்பேன். என்னோட கெட்ட நேரம். ஒண்ணும் இல்லாத இந்த குடும்பத்துல வந்து வாழ்க்கைபட்டு கஷ்டப்படறேன்”
“பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு. கல்யாணம் ஆகி எழு வருஷம் ஆகியும் குழந்தை இல்லேனா உன்னை இந்நேரம் பொறந்த வீட்டுக்கு அனுப்பி..” சட்டென நாக்கை கடித்து நிறுத்தி கொண்டேன். அப்படி பேசி இருக்க கூடாது.
எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் அழுது கொண்டே உள்ளே போய் படுத்து கொண்டாள். இப்போது யோசித்தால் தவறு என்மேல்தான். உடனே போய் சமாதான படுத்தியிருக்க வேண்டும். பாழாய் போன ஈகோ.. சொல்லாமல் ஆபீசுக்கு கிளம்பி வந்து விட்டேன்.
எனக்கு ஒன்று என்றால் பதறி போவாள். கொஞ்சம் கால் வலிக்கிறது என்றால் நகர விட மாட்டாள். கல் உப்பும் சுடு தண்ணியும் தயாராக இருக்கும். காய்ச்சலுக்கு ஈர துணியும் தலைவலிக்கு சுக்கும் எனக்காக காத்திருக்கும்.
“என்னடா யோசனை பலமா இருக்கு..” என்றான் பக்கத்து சீட் பரந்தாமன். அலுவகத்தில் நல்ல நண்பன். எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வோம்.
நடந்ததை சுருக்கமாக சொன்னேன்.
“போடா மொதல்ல வீட்டுக்கு போன் போட்டு பேசு.. எங்க வீட்ல எல்லாம் மாசத்துக்கு பத்து நாளுக்கு மேல சாப்பாடு வெளியதான் என் ஓய்ப் ‘யு ட்யூப்’ பண்றேன்னு குடும்பத்தை கவனிக்கறதே இல்ல. நான்லாம் இல்லியா”
அவசரமாக அவளுக்கு போன் போட்டேன். ‘சுவிச்டு ஆப்’. லேன்ட்லைனை . யாரும் எடுக்கவில்லை.
“கெளம்புடா உடனே போய் பாரு.. எதவாது ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருக்க போகுது.”
“டேய்.. நீ வேற பயமுறுத்தாதடா..” மீண்டும் மீண்டும் விடாமல் முயற்சி செய்தேன். கொஞ்சம் பயமாக இருந்தது.
பதட்டத்துடன் கிளம்பினேன். கடவுளே! ஒன்றும் ஆகியிருக்க கூடாது. தெருக்கோடி பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டி கொண்டேன். வீட்டில் பூட்டு வரவேற்றது. எங்கே போயிருப்பாள். பரந்தாமன் சொன்னது போல…ச்சே ச்சே இருக்காது. அப்படி எதுவும் அசட்டுத்தனமாக முடிவெடுக்க மாட்டாள்.
நெருங்கிய தோழிகள் இருவரின் வீட்டிற்கு போனேன். உதட்டை பிதுக்கினார்கள்.
“என்ன சார் உங்களுக்குள்ள எதாவது சண்டையா” என்றார்கள் சந்தேகமாய்
“அதெல்லாம் இல்ல.. ப்ரெண்ட் வீட்டுக்கு போறேன்னு சொன்னா.. எந்த ப்ரெண்டுன்னு சொல்லல.. இந்த பக்கம் வந்தேன் அதான் செக் பண்ணேன்” என்று சமாளித்தேன்.
மணி நான்கு ஆகி விட்டது. என்ன செய்வது..அப்போதுதான் சட்டென ப்ளாஷ் அடித்தது. பொதுவாக பெண்கள் கோவித்து கொண்டால் அம்மா வீட்டிற்கு தானே போவார்கள் மரமண்டை பதட்டத்தில் எனக்கது தோன்றவில்லை. வண்டியை அங்கே விட்டேன்.
ஏமாற்றம். அங்கேயும் அவளில்லை. எதையோ சொல்லி சமாளித்து தேநீரை குடித்து விட்டு கொஞ்சம் நம்பிக்கை சுமந்து வீட்டிற்கு வந்து பார்த்தேன். அவள் வரவில்லை.
இனி என்ன செய்வது! நிஜமாவே புரியவில்லை. தெய்வமே.. என்னவளை எனக்கு திருப்பி கொடுத்து விடு.. இனிமேல் எப்போதும் சண்டையே போடமாட்டேன் என மனதிற்குள் நினைத்து கொண்டேன்.
அம்மாவிடமிருந்து.போன். குழப்பமாய் எடுத்தேன்.
“டேய் சங்கரா.. உடனே கிளம்பி வீட்டுக்கு வாடா.. காலையிலே சுகர் அதிகமாகி கீழே விழுந்துட்டேன். உன்னை தொந்தரவு பண்ண வேண்டாம்னு மருமகளை கூப்பிட்டு டாக்டர் வீட்டுக்கு போய்ட்டு வந்தேன்.. லேட்டாயிடுச்சு வந்து அவளை கூட்டிட்டு போடா”
“இதோ,,இப்ப இப்ப வந்துட்டேன்” மனம் லேசானது.
“சாரிங்க..போன் சுவிச் ஆப் ஆனத கவனிக்கல”
“அதனால என்னடா பரவாயில்ல..” என்ற என்னை ஆச்சர்யமாக பார்த்தாள். அம்மா கவனிக்காத நேரத்தில் மென்மையாய் கன்னத்தில் இதழ் பதித்தேன். மனதில் கோடை மழை விட்டிருந்தது.
ச.ஆனந்தகுமார்
பிறந்தது கோவை. வசிப்பது சென்னை. தனியார் பணி. கவிஞர் மற்றும் எழுத்தாளர். கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, காலச்சுவடு, தீராநதி, காக்கை சிறகினிலே, பேசும் புதிய சக்தி, வாசிகசாலை, படைப்பு-கல்வெட்டு,காற்று வெளி, தளம், அம்ருதா உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.
முடிவிலியின் நினைவு சங்கிலி மற்றும் மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள் ஆகியவை கவிதை நூல்கள்.
சிறுகதைகள் சில போட்டிகளிலும், கல்கி, குமுதம், சிநேகிதி மற்றும் ஆனந்த விகடன் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன.