இன்றும் கதவு தட்டப்படுகிறது. சரியாக இரவு மணி 11.35. கொஞ்சமும் மாறாத ஓசை லயம். அதற்கிடையில் சில நொடி அமைதி. மறுபடியும் சத்தம்.
‘டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…’
தான் எழுதிக்கொண்டிருக்கும் கதையை அப்படியே நிறுத்தினார். மடிக்கணினியையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்களைச் சுருக்கி, தான் எழுதியதையே பார்த்துக் கொண்டிருந்தார். காதில் ஏதும் விழவில்லை என தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.
‘டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…’
ஆம். அதே சத்தம். உறுதியாகக் கேட்கிறது. இதயம் வேகமாக துடிக்கத்தொடங்கியது. அவரால் தன்னை முழுமையாக ஏமாற்ற முடியவில்லை. கைகள் நடுங்கின. கால்கள் எழ மறுத்தன. ஆனால் ஏதோ ஓர் உந்துதல் அவரை எழ வைக்கிறது. வாசலில் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த ஓசை காதில் நுழைந்து மூளையை கட்டுப்படுத்திவிட்டது போல. மெல்ல எழுகிறார்.
‘டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…’
அச்சம் அவரைச் சூழத்தொடங்கியது. நகர்ந்தார். மிக மெல்லமாக வாசலை நோக்கி நடக்கலானார். மனதில் ஏதேதோ வந்து குழப்பியது. அவர் முழுமையாக அவரின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. இருக்க முடியவுமில்லை.
‘டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…’
வாசலுக்கு அருகில் இருந்த கைத்தடியை எடுத்துக் கொண்டார். அது கொஞ்சம் வலுவானதுதான். சமாளிக்கவும் பயம் காட்டவும் உதவும். இதுவரையில் யாரையும் இது கொண்டு அடித்ததில்லை என்றாலும் பாதகமில்லை. எதையாவது செய்யலாம். எந்தக் காரணம் கொண்டும் கைப்பிடியைத் தவற விடக்கூடாது. மேலும் இறுக்கமாக அதன் பிடியைப் பிடித்துக் கொண்டார். மூச்சிக்காற்றின் வேகம் உள்ளேயும் வெளியேயும் வந்துப் போய்க்கொண்டிருந்தது. அவருக்குள் அவரை கட்டுப்படுத்த நினைத்த எதனுடனோ நிழல் யுத்தம் செய்யத்தொடங்கினார். எதைவிடவும் தான் பலமிக்கவன் என்கிற எண்ணத்திற்கு வலு கொடுக்கின்றார்.
‘டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…’
வாசல் கதவின் கரடி துவாரத்திற்கு முகத்தைக் கொண்டுச் சென்றார். அங்கிருக்கும் பூதக்கண்ணாடியில் வாசலுக்கு அருகில் 180டிகிரி வரை பார்க்க முடியும். ஆனால் இன்று எல்லாமே இருட்டாக இருந்தது. அவருக்கு பீதி கொடுக்க, இதுவே போதுமானதாக இருந்தது. முகத்தை பின்னால் எடுத்து சில அடிகள் பின் வந்தார். உடல் ஒருமுறை அதிர்ந்தது. இல்லை. இல்லை. ஒன்றுமில்லை. ஒன்றுமிருக்காது எனச் சொல்லிக்கொள்கிறார்.ஆனால்,
‘டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…’
அந்த சத்தம் அவரை வியர்க்க வைத்தது. யாருமில்லை. ஆனால் யாரோ கதவைத் தட்டுகிறார்கள். யார் கதவைட் தட்டுகிறார்கள். நகர்ந்து வந்தவர். அருகில் இருந்த இன்னொரு வாசல் விளக்கை தட்டினார். கதவின் கீழ் வெளிச்சம் ஊடுருவியது. தைரியம் வந்தது. சில அடிகள் முன் வைத்து மீண்டும் கரடி துவாரத்தில் முகம் வைக்கப்போனார்.
டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…
அதற்குள் விளக்கு அணைந்துவிட்டது. முழுக்க இருள். ஸ்தம்பித்தார். கரடித்துவாரத்தில் எதுவுமே தெரியவில்லை. மறுபடியும் சில அடிகள் பின் வந்தார். வாசல் விளக்கை சிலமுறை முடக்கவும் சொடுக்கவும் செய்தார். விளக்கு மீண்டும் எரியத் தொடங்கியது. சில நிமிடங்கள் அங்கேயே நின்றார். விளக்கில் எந்த கோளாறும் ஏற்படவில்லை. உறுதி செய்துக் கொண்டார். அதோடு இந்த விளக்கை மாற்றி இரண்டு மாதங்கள்தான் ஆகியிருக்கும்.
‘டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…’
நின்றவாரே கவனிக்கத் தொடங்கினார். கதவுக்கு கீழ் ஊடுருவியிருந்த விளக்கின் வெளிச்சத்தில் எந்த அசைவும் இல்லை. அடிகளை மெல்ல மெல்ல முன் நகர்த்தினார்.
‘டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…’
அவரது புலன்களை தீட்ட ஆரம்பித்தார். பலமுறை தட்டப்பட்ட கதவின் சத்தம். ஒரே மாதிரியே இருந்திருக்கிறது. சத்தம் நிசப்தம் மீண்டும் சத்தம் என மிக நேர்த்தியாக ஏதோ இயந்திர வேலைபாடு போல அது அமைந்திருக்கிறது.
‘டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…’
அவரது மூக்கு கதவை உரசிக் கொண்டிருக்கிறது. அவர் உயரத்திற்கு கொஞ்சம் குனிந்துதான் கரடி துவாரத்தைப் பார்க்க வேண்டும். அதிலுள்ள பூதக்கண்ணாடியை பயன்படுத்தியே பல நாட்கள் ஆகியிருந்தது. இந்த வீட்டிற்கு வந்த மூன்று மாதங்கள் ஆகின்றன. இன்றுதான் கண்ணாடியைப் பார்க்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. பார்க்கிறார்.
டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…
யாரும் இல்லை. ஆனால் சத்தம் கேட்கிறது. கையில் பிடித்திருந்த கைத்தடியின் பிடியை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். ஒரு கை கதவின் தாழ்ப்பாளை மெல்ல திறந்தது. எதற்கும் தயாரானவராய் கதவை திறந்தார். கைப்பிடியை ஒரே ஓங்காக ஓங்கினார். அங்கு அதே சிவப்பு……..
நேற்று,
இரவு மணி 10.00
‘பள்ளியில் சில மாணவர்களை அதிகம்தான் திட்டிவிட்டேன். ச்..சே… பள்ளி மாற்றலாகி வந்து இத்தனை நாளாய்க் காத்திருந்த பொறுமையை ஒரே நாளில் இழந்துவிட்டேனே. இனி எனது பழைய பள்ளியில் என் நடத்தை குறித்து தீவிரமாக விசாரித்தால் என்ன ஆவது. ஆசிரியர் என்றால் கண்டிப்பும் இருக்கத்தானே வேண்டும். சும்மாவா அடித்தேன். இந்த வயசுலயே லவ் லெட்டர் கொடுக்கறானுங்க. இப்ப கண்டிக்காட்டி வேற எப்ப திருத்துவது. ராஜனையாவது மன்னிச்சிடலாம் இந்த செல்வம் பாலா அழகு இருக்கானுங்களே. அவனுங்கதான் ரொம்ப மோசம்..’ என தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார் ஆசிரியர் குமார்.
வழக்கமாக சாப்பிட வேண்டிய சில மருந்துகளை சாப்பிடுவதற்கான நேரம். கைபேசியின் அலாரம் அடித்தது. கையில் வைத்திருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, மடிக்கணினியில் இதுவரை தட்டச்சு செய்தவற்றை சேமித்தார். இப்படி பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது தனக்கு நல்லதல்ல என மருத்துவர் ஆலோசனை சொல்லியிருந்தார்கள். மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளைவிடவும் அவர்கள் எழுதிக்கொண்டுக்கும் மருந்துகள் மீதே குமாருக்கு நம்பிக்கை இருந்தது. நம் வேலையை நாம் செய்வோம். மருந்துகள் அதன் வேலையை செய்யட்டுமே.
‘டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…’
யாரோ கதவை தட்டுகிறார்கள். மணி 11.35. இந்த நேரத்தில் வீட்டுக்கதவை யார் தட்டுவது. கடந்த வாரம் சாப்பாடு ஆடர் கொடுத்ததற்கே இந்த வட்டாரத்தில் இரவுகளில் ‘புட் டெலிவரி’ இல்லை என்று சொல்லி விட்டதை நினைத்துக்கொண்டார். யாராவது பக்கத்துவீட்டிற்காக இருக்கும் என சொல்லிக்கொண்டு தன் அறைக்கு நடக்கலானார்.
‘டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…’
நின்றார். சத்தம் மிக நிச்சயமாக அவர் வீட்டு வாசல் கதவில் இருந்துதான் வருகிறது. அவசரமற்ற நிதானமான தட்டல் சத்தம். ஆனால், அழைப்பு மணி இருக்கிறதே. வழக்கமாக அதைத்தானே அழுத்துவார்கள். ஒருவேளை அழைப்பு மணி பழுதாகியிருக்கலாம்.
‘டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…’
நினைவுக்கு வந்தது மதியத்தில் யாரோ ஒரு வாண்டு அழைப்பு மணியை அடித்துவிட்டு ஓடியது. கதவுக்கு அருகில் இருந்ததால் உடனே திறந்து ஓடிக்கொண்டிருக்கும் சின்ன வாண்டுகள் கூட்டத்தைக் கண்டு கொண்டார். சமயங்களில் புதிதாக யாரும் குடியேறியிருந்தால் இப்படியெல்லாம் விளையாட்டுக்கு சிலர் சிறுவர்கள் செய்வார்கள்தான். சமீப காலமாகத்தான் குமார் இங்கு இருப்பதே இங்குள்ளவர்களுக்கு தெரிய ஆரம்பித்தது. பள்ளிக்கு காலையில் சென்று விடுவார். பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வருவதற்கு பொழுது சாயத்தொடங்கிவிடும்.
‘டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…’
குமார் வாசலை நோக்கி நடக்கலானார். கதவை திறந்தவர்க்கு ஒன்றும் புரியவில்லை. வாசலில் ஒரு கையில் சில சிவப்பு வண்ண பலூன்களை வைத்துக் கொண்டு…
பிற்பகல்.
மணி 3.00.
தமிழ்ப்பாட நேரம்.
“சுகுமாரி அழக்கூடாது.. அழாம சொல்லு.. அப்பதான என்ன நடந்துதுன்னு தெரியும் இப்படி அழுதா எப்படி.”
இடைநிலைப்பள்ளிக்கு சமீபத்தில்தான் மாற்றலாகி வந்திருந்தார் குமார். மூன்றாம் படிவ மாணவர்களுக்கும் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு மட்டும் தமிழ்ப்பாடம் எடுக்கின்றார். மற்ற படிவ மாணவர்களுக்கு தமிழ் மொழி பரிட்சை இல்லாததால் அவர்களுக்காக நேரத்தை பள்ளி நிர்வாகம் ஒதுக்கவில்லை. இருந்தும் தமிழ்ப்பாடம் படிக்க விரும்புகின்றவர்களுக்கு பள்ளிப்பாட நேரம் முடிந்தப்பின் கூடுதல் வகுப்பை குமார் நடத்துவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அன்றைய கூடுதல் வகுப்பில்தன சிக்கல் ஆரம்பமானது.
“சார் சுகுமாரியை செல்வம் லவ் பண்றானாம். லவ் லட்டர் வேற கொடுத்துட்டான்… ஸ்கூல் பூரா சொல்லி வச்சிட்டான்… சுகுமாரியோட சொந்தக்காரப் பிள்ளைங்கல்லாம் சுகுகிட்ட வந்து நிஜமான்னு கேட்கறாங்க.. அதான் வீட்டுல தெரிஞ்சி அடி விழும்னு நினைச்சி காலைல இருந்து அழுதுகிட்டு இருக்கா…” என்று சுகுமாரிக்காக குரல் கொடுத்து முடித்தாள் காயத்ரி.
கூடவே, செல்வத்தின் மற்ற நண்பர்களான ராஜன், பாலா, அழகு ஆகியோர் குறித்தும் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். நால்வருக்கும் தண்டனை கொடுத்தால்தான் ஒருவருக்கு இன்னொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். அந்த நால்வர் இருக்கும் இடத்தை குமார் தேடலானார்.
அடுத்து நடக்கவிருப்பதை அன்று வகுப்பில் இருந்த அனைவரும் ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ராஜன், பாலா, செல்வம், அழகு மட்டும் எந்த பயமும் இல்லாமல், மனசுல பட்டுச்சி கொடுத்துட்டோம் என்பது போல உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார்கள். அதும் இடைநிலைப்பள்ளியில் தமிழாசிரியர்கள் மாணவர்களை அடிக்க மாட்டார்கள். அடிக்கக்கூடாது. பெற்றவர்களே அடித்து வளர்க்காத பிள்ளைகளைப் போய் ஆசிரியர்கள் அடித்தல் தகுமா? அது பிறகு ஆசிரியர்களுக்குத்தான் பெரிய பிரச்சனையில் முடியும்.
குமாருக்கு இயல்பாகவே கோவம் வரும். அதிலும் தன் இனம் சார்ந்த பிரச்சனை என்றால் அதிகமாகவே கோவம் வந்துவிடும். இதற்கு முன் பணி செய்த பள்ளியிலும் கூட கோவத்தினால் மாணவனை அடித்து அது சிக்கலாகி, இப்பள்ளிக்கு மாற்றலாகி வந்திருக்கிறார். கொஞ்சமாவது பொருமையாக இருக்கலாம்தானே. முடியவில்லை. முடியாது என்பதுதான் உண்மை. நம்மவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் சில ஊடகங்களால் பெரிதாக காட்டப்பட்டு அதுதான் நாம் என சொல்லிக்காட்டப்படுவதை விரும்பாதவர்களில் குமாரும் ஒருவர். ஆனால் தினமும் டிக்டாக் வீடியோ செய்து “நான் ஏன் இந்த வீடியோ செய்யறேன் தெரியுமா..? என்பதையெல்லாம் செய்ய மாட்டார். அவருக்கு தெரிந்தது எழுதுவது. ஆமாம். பத்திரிகைகளுக்கும் இதழ்களுக்கும் தனது இணையத்தளத்திற்கும், சமூகம் சார்ந்த பல கட்டுரைகளை அவ்வபோது எழுதுவார். முகநூலில் கூட பல முக்கிய கேள்விகளை கருத்துகளைச் சமூகம் சார்ந்து வைப்பார்.
அவருக்கு இரண்டு முக நூல் கணக்குகள் உள்ளன. ஒன்று அவரது இயற்பெயரான குமார் என்று இருக்கும். இன்னொன்று, கோமாளி என்று இருக்கும். ஏன் என விளக்கம் அவருக்கேத் தெரியவில்லை. கோமாளி என்ற பெயரில் ஏதோ வசியம் இருப்பதாக அவருக்கே அவர் சொல்லிக்கொண்டார்.
தான் யார் என்று அடையாளம் காட்டிக்கொள்ளாமல்தான் சில கருத்துகளை மக்களுக்கு சொல்ல வேண்டியுள்ளது. சமயங்களில் கோமாளி முகநூலில் இருக்கும் கருத்துகளுக்கு எதிராகவே குமார் தன் கருத்துகளை அதன் பின்னூட்டத்தில் எழுதுவார். அரசாங்க வேலையில் சம்பளத்திற்கு வேலை செய்யும் குமாரும், முகநூலில் சமூகத்திற்காக எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் கோமாளியும் வேறு வேறு. ஆமாம் இருவரும் வேறு வேறு.
மணி 3.30
தமிழ்ப்பாட நேரம்.
குமாருக்கு கோவம் வந்துவிட்டது. நல்லவேளையாக அமர்ந்திருக்கும் மாணவர்கள் எல்லாம் தமிழ் மாணவர்கள்தான். சுகுமாரியை அங்கேயே நிற்க வைத்தார். துணைக்கு காயத்திரியும் நின்றுக்கொண்டாள். ராஜன், பாலா, செல்வம், அழகு நால்வரையும் வகுப்பின் முன் வந்து நிற்கச் சொன்னார். வகுப்பில் சலனம் மட்டுமே வந்தது வகுப்பின் முன் அந்த நால்வர் வரவில்லை.
குமார் அதட்டல் குரலில் அழைத்தார். ராஜன் முதலில் எழுந்துவிட்டான். அவனுக்கு கொஞ்சம் பயந்த சுபாவம். மற்ற மூவரும் ராஜனையே முறைத்துப்பார்க்கலானார்கள். பின்னர் மெல்ல எழுந்து ஆளுக்கு ஒருவித நடையுடன் வகுப்பின் முன் வந்து நின்றார்கள். எல்லோர் முன்னிலையிலும் சுகுமாரியிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். சுகுமாரியிடம் மன்னிப்பைக் கேட்டுவிட்டு, அவளுக்கு உதவியாக இருந்த காயத்ரியிடமும் செல்வம் மன்னிப்பு கேட்டான். அது காயத்ரியை பயமுறுத்தியது. அவள் அழத்தொடங்கினாள். சுகுமாரியை அவர்களின் தலையில் கொட்டு வைக்கச் சொன்னார். பின், ஆளுக்கு மூன்று ரோத்தான் அடிகளை கொடுத்தனுப்பினார்.
நிச்சயம் அது அவர்களுக்கு பெரிய அவமானம்தான். ஆனாலும் வெளியில் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. வகுப்பு முடிந்தது. மாணவர்கள் புறப்படத் தொடங்கினார்கள். அந்த நால்வரும் அங்கேயே இருந்து விட்டார்கள். அந்த அவமானம் இனி அவர்களை விட்டுப் போகாது. இத்தனை மாணவர்கள் மத்தியில் சுகுமாரி தங்கள் தலையில் கொட்டியது அந்த நால்வரில் ஆணவத்தை அசைத்துப் பார்ப்பதாய் ஆகிவிட்டது. இனி இதுதான் பள்ளி முழுக்க பேசு பொருளாக இருக்கும். உடனே இதற்கு ஏதாவது செய்து இதனை மறக்கடிக்க வேண்டும். கூடிப்பேசினார்கள். பலமாகத் திட்டம் தீட்டினார்கள்.
மாலை
மணி 5.00.
பேருந்து நிலையத்தின் பின்புறம். அதுதான் அவர்களின் மறைவிடம். சமயங்களில் அந்த மறைவிடம் மலாய்க்கார மாணவர்களாலும் சீன மாணவர்களாலும் எடுத்துக்கொள்ளப்படும். அதற்காகவே பல முறை அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் வந்ததும் உண்டு. ஒரு முறை அங்கு நின்றிருந்த சீன மாணவனை அவன் யாரென்று தெரியாமல் மிரட்டி அங்கிருந்து விரட்டிவிட்டார்கள். உள்ளிழுத்து விட்டுக்கொண்டிருக்கும் வெண்சுருட்டின் கடைசி புகையை ரசிக்க முடியவில்லை. புகைக்கு முன் பகை அங்கு நால்வரையும் சுற்றி வளைத்து நின்றது.
அடி வாங்கிச் சென்ற ஆச்சோங் அந்த வரிசையின் முன் நின்றுக்கொண்டிருந்தான். இப்போதுதான் தெரிந்தது. அது அடிவாங்கும் ஆச்சோங் அல்ல அடி கொடுக்கும் ஆச்சோங் என்று. செல்வம் ஆச்சோங்கை விரட்டும் போது, எந்த சலனமும் இன்றி செல்வத்தை ஆச்சோங் பார்க்கும் போதே கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். அப்பாவின் நண்பர் கண்ணில் மண்ணைத் தூவி இங்கு மறைந்து புகைப்பிடித்தவன் மூலம் இந்த இடம் யாருக்கு என கேட்கும் அளவுக்கு பகை வந்து நிற்கிறது.
வழக்கமாக இந்த சமயத்தில் சொல்லி வைத்தது போல வந்து நிற்கும் அபு இன்றும் அங்கு தோன்றினான். எங்கிருந்து வருகிறான், எப்படி வருகிறான் என்று யோசிக்கும் முன்பாக அங்கு வந்து நிற்பதுதான் அபுவின் பாணி. அதனால்தான் அவனை அப்பள்ளி மாணவிகள் ஷாரூக்கான் எனவும் அழைப்பார்கள்.
அபு, ஆச்சோங், செல்வம் மூவர் மட்டும் அமர்ந்து பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இல்லை அந்த மூன்று தலைகளும் அதனை ஏற்பாடு செய்துக் கொண்டார்கள். சக குண்டர் கும்பல் தலையை ஏதோ ஞாபகத்தில் அவமதித்து பேசியது தவறுதான் என செல்வமும் ஒப்புக்கொண்டான். ஆச்சோங்கும் வகுப்பில் நடந்ததைக் கேள்விப்பட்டு செல்வம் சொல்வதை ஒப்புக்கொண்டான். இருந்தாலும் அபு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஒரு நாள் நடந்த சம்பவம் என்றாலும்; இனி இவ்வாறு நடக்காமல் இருக்கு தத்தம் தொண்டர்கள் மத்தியில் ஏதாவது இப்போது செய்யவேண்டும் என நினைத்தான். மூவரும் இப்போது அருகருகில் வந்து ஏதோ காதை கடித்தார்கள். முதலில் அபு எழுந்து அவனது தொண்டர்கள் மத்தியில் நிற்கலானான். அடுத்து ஆச்சோங் எழுந்தான். செல்வத்தின் தொண்டர்கள் இருந்தாலும், அவனது மூன்று நண்பர் மீதே ஆச்சோங்கின் கண்கள் இருந்தன. செல்வம் எழுந்தான் இருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டான். தனக்கே உரிய பாணியில் நடந்து நண்பர்களிடம் சென்றான்.
அவனது நடையைப் பார்த்த பாலாவும் அழகும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மெல்ல பின் வாங்கினார்கள். ராஜன் மட்டும். ஏதும் புரியாமல் செல்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சிலர் இப்படித்தான். என்ன நடந்திருந்தாலும் ஏனோ ஒட்டிக்கொண்டே இருப்பார்கள். செல்வம் நேராக அங்கு சென்று, ராஜனின் தோளில் கையை வைத்து கூட்டத்தின் நடுவில் கொண்டு வந்து நிறுத்தினான்.
“மச்சான்.. எதுக்கும் பயப்படாத நான் இருக்கேன். தைரியமா நில்லு….” என்று கூறிய செல்வம் ராஜனின் பின்னால் நின்றுக்கொண்டான்.
நடக்கவிருப்பதை முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாமல் ராஜன் ஆச்சோங்கையும் அபுவையும் மாறி மாறி பார்க்கலானான். அபுவின் முகத்தில் சட்டென சிரிப்பு தெரிந்தது. காரணம் புரியாமல் ராஜன் அபுவை பார்க்கையில், ஆச்சோங் முகத்துக்கு நேராக நின்றுக்கொண்டிருந்தான். அபுவின் சிரிப்பை இவ்வளவு நேரமா பார்த்தோம் என நினைக்கவும், கன்னத்தில் பளீர் என அறை விழவும் சரியாக இருந்தது.
கன்னத்தில் கைவைத்த நிலையில் திரும்பிப் பார்க்கையில் செல்வம் மிக தூரத்தில் அழகு பாலாவுடன் நின்றுக்கொண்டிருந்தான். ஆச்சோங் ஏதோ சத்தமாக பேசிவிட்டு கூட்டதுடன் கிளம்பினான். அபுவும் அவன் பங்கிற்கு ஏதோ பேசிவிட்டு காணாமல் போனான்.
நேற்று இரவு மணி 11.45
டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…
யாரும் இல்லை. ஆனால் சத்தம் கேட்கிறது. ஒரு கை கதவின் தாழ்ப்பாளை மெல்ல திறந்தது. எதற்கும் தயாரானவனாய் கதவை திறந்தான். அங்கு சிவப்பு முகச்சாயம் பூசிய ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். அவன் சிரிக்கிறான். யார் அவன்.
பச்சை நிற தலைமுடி. தலை மேல் பந்து போல இருந்தாலும் காதுகளை பாதியளவு மறைக்கும் படியும் அந்த பச்சை தலைமுடி இருந்தது. முகம் முழுக்க வெள்ளைச் சாயத்தை பூசியிருந்தான். வாயில் இருந்து கன்னங்களைக் கடந்து காதின் நுனிகள் வரை சிவப்பு உதட்டுச்சாயம் பூசியிருந்தான். மஞ்சல் வெள்ளை கட்டங்கள் கொண்ட நீள் கை சட்டை அணிந்திருந்தான். அவன் அளவை விடவும் அது பெரியதாக இருந்தது. பாதி மஞ்சல் பாதி வெள்ளை காற்சட்டையும் சிவப்பு வண்ண வீங்கிய காலணியையும் அவன் அணிந்திருந்தான். ஒரு கையில் பிடித்திருந்த நூலில் சிவப்பு பலூன்கள் இரண்டு காற்றில் மிதந்துக் கொண்டிருந்தன.
அவனது கண்கள் !. அந்த கண்கள் குமாரை ஸ்தம்பிக்க வைத்தன. எந்த சலனமும் இல்லாமல் பார்ப்பவரை சலனப்படுத்தும் விழிகள் அவை. வெள்ளை நிறத்தில் வைத்திருந்த சாக்லெட் வண்ண பொட்டு. கையில் கைத்தடியுடன் அப்படியே நிற்கிறார் குமார். அவருக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அடுத்து என்னவென்றும் தோன்றவில்லை. ஆனால் அவன்; அந்த கோமாளி குமாரை வைத்தக்கண் வாங்காமல் பார்க்கலானான். ஒரு கண்ணில் கருணையும் மறுகண்ணின் கொலை வெறியையும் அந்த கோமாளி சுமந்திருந்தான். மறு கை மூடியிருந்தது. அதனை குமாரின் முன் நீட்டுகிறான். குமார் தன்னை ஏதோ ஒன்று…..
இன்று
இரவு மணி 11.40
அந்த கைப்பிடியை ஒரே ஓங்காக ஓங்கினான். அங்கு அதே சிவப்பு பலூன்களுடன் அவன் நின்றுக் கொண்டிருந்தான். தன் முன் ஒருவன் அடிக்க எதையோ ஓங்கி நிற்பதையும் பொருட்படுத்தவில்லை. சிவப்பு பலூன்கள் மெல்ல காற்றில் அசைய, தன் அசையாத கண்களால் குமாரையே பார்த்துக் கொண்டிருந்தான் கோமாளி. அவனது முகத்தில் புன்னகை. ஆனால் அந்த கண்களுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத புன்னகை அது.
இன்றும் குமாரின் முன் தனது ஒரு கையை நீட்டுகிறான். நேற்று போலவே அதில் சில மிட்டாய்கள் இருந்தன.
நேற்று
இரவு மணி 11.46
அதனை குமாரின் முன் நீட்டுகிறான். குமார் தன்னை ஏதோ ஒன்று வசியம் செய்துக் கொண்டிருப்பதாக குமார் துணுக்குற்றார். அதற்கும் அந்த கோமாளி நீட்டிய கையைத் திறப்பதற்கும் சரியாக இருந்தது. கைக்குள்ளே சிவப்பு நிற மிட்டாய்கள் இருந்தன. குமாருக்கு பயம் அப்போதுதான் தெளிந்தது. பக்கத்துவீட்டில் யாருக்கும் பிறந்த நாளாய் இருக்கும். அதற்குதான் மிட்டாய் கொடுக்க கோமாளியை அனுப்பியிருக்கிறார்கள் என புரிந்துக் கொண்டான். கோமாளிக்கு பின்னால் பார்க்க யாரும் இல்லை. குழந்தையிடம் பேசுவது போல, “சொல்லுங்க.. இன்னிக்கு யாருக்கு பிறந்த நாள்… சொல்லுங்க…” என கொஞ்சும் தொணியில் கேட்டார். பதில் வரவில்லை. கோமாளியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. கோமாளியைப் பார்த்து இயல்பானக் குரலில், யாருக்கு பிறந்த நாள் என கேட்டார். மொழி தெரியாமல் எதிரில் முழிப்பது போல அந்த கோமாளி தன் கண்களைச் சுருக்கிக் காட்டினான். ஆங்கிலத்திலும் கேட்டார். கோமாளியிடம் அதே மாதிரியான கண் சுருக்கம்தான் வந்தது. வாய் திறந்து பேசினால், முகத்தில் பூசியிருக்கும் வண்ணம் கலைந்துவிடுமோ என்னவோ என நினைத்துக் கொண்டார். நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார்.
உள்ளே சென்று சிரித்த முகமாகவே கதவை சாத்தினார். சில அடிகள் சென்றிருப்பார். மீண்டும் கதவை யாரோ தட்டுகிறார்கள்.
‘டக்டக்… டக்டக்டக்….. டக்டக்…’
இந்த முறை முகத்தில் இறுக்கம் தெரிந்தது. வேகமாக வந்து கதவை திறந்தார். இப்போது அங்கு யாரும் இருக்கவில்லை.
இன்று
இரவு மணி 11.45
நேற்று போலவே அதில் சில மிட்டாய்கள் இருந்தன. அதனை அந்தக் கோமாளி, குமார் முன் நீட்டினான். குமார் அந்த மிட்டாய்களை இப்போது எடுக்கவில்லை. “யார் நீ..?”, “உனக்கு என்ன வேணும்?”, “ஒழுங்கா சொல்றயா இல்ல… இதாலயே ஒரு சாத்து சாத்தவா..?”.
கோமாளியிடம் எந்த சலனமும் இல்லை. குமாரும் கோமாளியும் நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். குமாரைப் பார்த்துக் கொண்டிருந்த கண்கள் மெல்ல அவரது பின்னால் பார்த்தது. இப்போது கோமாளியின் முகத்தில் அசைவுகள் தெரிந்தன. கண்கள் அகலமாகின. கோமாளி எதையோ பார்த்துவிட்டது போல மெல்ல பின் வாங்கினான். அதே சமயம், குமாரின் பின்னால் ஏதோ விழும் சத்தம் கேட்கிறது. கையில் வைத்திருந்த கைப்பிடியுடனேயே அதே வேகத்துடன் திரும்பினார். அங்கு யாரும் இல்லை. ஆனால், அவரது மடிக்கணினிக்கு பக்கத்தில் வைத்திருந்த மருந்து பாட்டில் கிழே விழுந்து உருண்டுக் கொண்டு இருக்கிறது. இங்கு திரும்பி கோமாளியைப் பார்க்கிறார். கோமாளி அங்கில்லை. இப்போதுதான் பயத்தை குமார் முழுமையாக உணரத்தொடங்கினார். வாசலில் நின்றுக்கொண்டு, உள்ளே செல்வதா வெளியே செல்வதா என்கிற பீதி அவரை பீடித்துக் கொண்டது.
நேற்று
இரவு மணி 8.00
ராஜனுக்கு பயமாக இருந்தது. இவர்கள் போடும் திட்டமெல்லாம் நன்றாகத்தான் இருக்கும். ஒரு வேளை திட்டம் தோல்வியடைந்தால் மூன்று பேரும் கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் ராஜனை மாட்டிவிட்டுவிடுவார்கள் அல்லது, அவனை பலிகடாவாக்கிவிடுவார்கள். ஆசிரியரை பலிவாங்கவேண்டும் என்று திட்டமிட காரணம் செல்வம்தான். பாலாவும் அழகும் செல்வத்தின் குணத்தோடு ஒத்துப்போகக்கூடியவர்கள்தான். எப்படித்தான் இந்த கூட்டத்தில் ராஜன் வந்து சேர்ந்தான் என யாருக்கும் தெரியவில்லை. அது அவனுக்கும் தெரியவில்லை.
“குமார் சார், வீடு எனக்கு நல்லா தெரியும்… அவரு வீட்டுப்பக்கத்துல ரெண்டு மூனு வீடு காலியாதான் இருக்கும்..”
பாலா சொல்லி முடிக்கவும்,
“ஐயோ அவர் விட்டு கண்ணாடியா ஒடைக்க போறோமா..?”
என ராஜன் பயந்தவாக்கில் கேட்கிறான்.
“ச்சே..ச்சே.. அதெல்லாம் தப்பு…” என செல்வம் சொல்லவும். அழகுக்கு அது அதிர்ச்சியைக் கொடுத்தது.
“அவ்வளவு நல்லவனாடா நீ..?”
“அழகு… அது சொந்த வீடா இருந்தா கதையே வேற… வாடகை வீடு… கண்ணாடிய மட்டும் இல்ல.. வீட்டியையே கொளுத்திட்டு வந்தாலும் குமார் சாருக்கு ஒரு நட்டமும் இல்லை… புரியுதா..”
“அதான பார்த்தேன்… செல்வமா கொக்கா….?”
“ஹஹஹஹ..ஹா…ஹா… குமார் சாருக்கு நாம செய்யப்போறது… அவரை மட்டுமில்ல.. இந்த வட்டாரத்துல இருக்கறவங்களையே நடுங்கவிடனும்….”
எனச் சொல்லிக்கொண்டே தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து சிலவற்றை கீழே கொட்டினான். அதில் சில வண்ண பொட்டலங்களும் சப்பையான பலூன்களும் இருந்தன. நான்கு பேரும் திட்டமிட ஆரம்பித்தார்கள்.
இன்று
இரவு மணி 11.49
வாசலில் நின்றுக்கொண்டு, உள்ளே செல்வதா வெளியே செல்வதா என்கிற பீதி அவரை பீடித்துக் கொண்டது. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தேறியது. வீட்டிலுள் இருந்து சில சிவப்பு வண்ண பலூன்கள் மிதந்தவண்ணம் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. குமாருக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. இன்னும் மாத்திரைகள் சாப்பிடவில்லை. கைகள் நடுங்க ஆரம்பித்தன. இப்படியேப் போனால் மூச்சுப்பேச்சற்று விழுந்துவிடுவார்.
இன்னொரு முறை அப்படி விழுந்தால், அதன் பக்கவிளைவுகளை கணிக்க முடியாது என மருத்துவர் சந்திரன் எச்சரித்திருந்தார். சட்டென கைபேசி ஒலிக்கிறது. மருத்துவர் சந்திரனுக்கான பிரத்தியேக பாடல்தான் இப்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஏன் மருத்துவர் சந்திரன் இப்போது அழைக்கிறார். எங்கே இருக்கிறார். குமாருக்கு படபடப்பு அதிகமானது. மூச்சு சீராக இருக்கவில்லை. கையில் பிடித்திருந்த கைத்தடியும் கொஞ்சம் கொஞ்சமாக பிடியில் இருந்து நழுவத்தொடங்குகிறது.
“குமார்….”
“குமார்….”
இந்த நேரத்தில் யாராக இருக்கும். யார் கூப்பிடுகிறார்கள். பழக்கமான குரல் போல தெரிகிறதே என சூதாரித்துக் கொள்வதற்கு முன், குமார் கீழே சரிகிறார்.
2085 ஆண்டு
பிப்ரவரி 30
காலை மணி 6.00
சிவப்பு விளக்கு விட்டுவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது. கட்டிலை சுற்றிலும் சிலர் நின்றுக்கொண்டு கையில் வைத்திருந்த சாதனத்தில் எதனையோ குறித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்டிலில் ஒரு கண்ணாடி பொட்டலம் இருக்கிறது. அதில் பாதி பாதிக்கப்பட்டு பச்சை நிறமாக மாறியிருந்த மூளையை வைத்திருந்தார்கள். அதில் சில பகுதிகளில் மட்டும் சொருகியிருந்த ட்டியூப்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருந்தார் ஒருவர். கணினித்திரையில் இதுவரை நடந்த எல்லாமும் பதிவாகியிருந்ததை உறுதி செய்யும் நோக்கில் சில பட்டண்களை அழுத்தினார் இன்னொருவர்.
தேவையான எல்லாவற்றையும் கணினி சேமித்துவிட்டதாக சொல்லியது. கணினியில் இருந்து இதுவரை இருந்த நினைவுகளை ஒரு கோப்பில் தனியாக சேமித்துக் கொண்டார்கள்.
“இனி இந்த மூளை தேவைப்படாது. இதனை அழித்துவிடு….”
“டாக்டர்.. ஆனா அந்த கோமாளி யார்னு இன்னும் தெரியலையே..?”
“அவசியம் இல்லை. பயம்னா என்னன்னு தெரிஞ்சிக்க இவ்வளவு நினைவுகள் போதும். முழுமையா தெரிஞ்சிகிட்டா நம்மளை விட இதுங்க எல்லாம் தெளிவா யோசிக்க ஆரம்பிச்சிடும். அப்படி விடக்கூடாது. அது நமக்கு பாதுகாப்பில்லை.”
“சரிதான் டாக்டர். அடுத்து ?”
“காதல் ஆசை கொடுக்கும் வலியும் ஏமாற்றமும் எப்படி இருக்கும்ன்ற நினைவுகளை சேமிக்கனும்… அப்பதான் இதுங்க எதுவும் அந்த பக்கம் போகாதுங்க…”
“ஆனா…”
“உணர்வுகள் கொடுக்கக்கூடிய உட்சபட்ச வலியை, முன்கூட்டியே இதுங்களோட மூளையில் செலுத்திட்டா… எந்தக் காரணம் கொண்டு அந்த உணர்வுகளுக்கு அதுங்க எதுவும் மயங்காதுங்க… அதுமட்டுமில்ல… அதுங்க முழுக்கவும் நம்மோட கட்டுப்பாட்டுல இருக்கும்… நமக்கு அதுதான் வேணும்….”
சரியென்று தலையாட்டியவாறு அந்த மூளையை அழிப்பதற்காக எடுத்துச் செல்கிறார் ஒரு மருத்துவர். கண்ணாடிப்பேழையில் மூளையை வைத்தார். அதனை மூடினார். அந்த மூளையின் எண்களை ஒரு முறை சரிப்பார்க்கிறார். மூளையை அழித்துவிடுவதற்கான எல்லா விசைகளையும் தயாரா என பரிசோதிக்கின்றார். அவர் மனதில் சிறு சலனம்.
அந்தக் கோமாளிக்கு என்ன ஆனது..?. கடைசி விசையை இன்னும் அவர் அழுத்தவில்லை.
++
தயாஜி
மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னால் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். முழு நேர எழுத்தாளரான இவர் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை என்னும் இணைய புத்த அங்காடியையும் வெள்ளைரோஜா பதிப்பகம் என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.