பதற்றமும், புதிய சூழ்நிலையை அனுகும் தடுமாற்றமும்,அந்த சூழ்நிலைக்கே உரித்தான பரபரப்பும் என எதுவும் இல்லாமல் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். இனிப்பு பதார்த்தம் மற்றும் காரவகை வாங்கி வந்தாயிற்று. மிக முக்கியமாக ‘பூ’தான் இந்த சம்பிரதாயத்துக்கு தேவை. பூவின் மணமும் தோற்றமும் அலங்காரத்தின் அங்கமாக இல்லாமல் இருந்திருந்தால் பெண்கள் இவ்வளவு அழகானவர்கள் என்பது தெரியாமல் போயிருக்குமோ? படைக்கும் போதே பூக்காரிக்கு என படைக்கப்பட்ட சிறிய முழங்கையால் அளக்கப்பட்ட இரண்டு மொழம் மல்லிகைப் பூ என அனைத்தும் மெத்தனப் போக்கில் தயார். புடவையும் அப்பப்போ மாற்றப்படும் பொருட்டு இந்த முறை சிகப்பு நிற புடவையைத் தேர்வு செய்திருந்தாள் கோம்ஸ் என அழைக்கப்படும் கோமேதகம். கத்தையான நீளமான குழலினைக் கொண்டவள் என்பதால் சவுரி முடி விற்பனையாளன் வர்த்தகத்தில் கொஞ்சம் சறுக்கல்.
வியாழக்கிழமை விருந்துண்ணல் ஆகாது. மந்தவாரம் மந்தமாக்கிவிடும் என்று சோமவாரம், புதவாரம், சுக்கிரவாரம் ஆகிய மூன்று நாட்களே உகந்ததென பெரியவர்களின் அறிவுறுத்தல். புதன் கிழமையையே முதலில் சிலமுறை தேர்ந்தெடுத்திருந்தனர். ஏமாற்றங்கள், சில புறக்கணிப்புகளுக்குப் பிறகு வெற்றி நிச்சயம் கிட்டும் என்று சுக்கிரவாரத்தில் அமல்படுத்த உடன்படிக்கைக்கு வந்தனர். பிறகு சோமவாரத்திற்கு சிலதடவை மாற்றப்பட்டது. இப்படி கிழமைகள் மாற்றினால் மனித மாண்புகள் மாறும். அதிர்ஷ்டங்கள் எட்டிப் பார்க்கும். நல்லவைகள் நடக்கும் என்ற பார்வையில் மாற்றிக்கொண்டே இருந்தனர். இந்தமுறை மீண்டும் சுக்கிரவாரத்திற்கான வாய்ப்பினை வழங்கியிருந்தனர்.
தரகர்களுக்குள்ளான புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பல பொய்கள் உண்மையாகும். சில உண்மைகள் மறைக்கப்படும், ஜாதகங்கள் சுக்கிரன் உச்சம் பெற்றவையாக தரம் உயர்த்தப்படும் இவ்வாறு பல சம்பந்தங்கள் ஏற்படும். பலது பிரச்சனைகளிலும் முடியக்கூடும்.
“பொண்ணு அம்சமா இருக்குமுங்க. நேர்ல வந்து பாத்தா வாண்டாம்னு சொல்ல மனசு வராது”
“இந்த மாதிரின்னு எதும் மாப்ள வீட்ல சொல்லிக்க வாண்டாம்”
என்று தரகர்களுக்குள் பேசிக்கொண்டு காரியத்தைச் சாதிக்க நினைத்தனர்.
அதனால் முதல் முறை கோமேதகத்தைப் பெண் பார்க்க வந்தபொழுது பெரும் சங்கடத்திற்கு ஆளாகினர் அவளும், அவளது பெற்றோரும். பெண் பார்க்க வந்திருந்த வீட்டாருக்கு கோமேதகத்தைப் பார்த்ததும் அதிர்ச்சி. “மொதல்லையே சொல்லமாட்டியா. புரோக்கரு பொழப்பு பொய் பேசுற பொழப்புனு காம்ச்சிட்ட” என்று மாப்பிள்ளையின் அப்பா தரகர்களிடம் பெண் வீட்டார் முன்பு கொஞ்சம் வெளிப்படையாகவே கடிந்து கொண்டார்.கோம்ஸின் அப்பாவும் “உண்மைய மறச்சி யாரையும் கூட்டி வராதீங்க. உள்ளத உள்ளபடி சொல்லுங்க” என்று வருத்தப்பட்டுக்கொண்டார். முதல் முறை இந்த மாதிரி பெண் பார்க்க வந்து இப்படி தான் அவமானப் பட்டதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. முதலில் ஏற்படும் புறக்கணிப்பு என்பது நம் மன பலத்தை பரிசோதித்துவிடும், பல புறக்கணிப்புகளுக்குப் பின்பு மனம் திடப்படும் அதுவேறு விஷயம். கோம்ஸ் ரொம்ப பயந்து போனாள் அழுது அழுது அந்த கார்மேகக் கன்னம் வீங்கியது. “எனக்கு கல்யாணம் வேண்டாம். இனிமேட்டு வரவங்களும் என்ன இப்பிடித்தான அசிங்கப்படுத்துவாங்க” என்று தன்னை நொந்து கொண்டு தாழ்வு மனப்பான்மையில் துடித்துக்கொண்டிருந்தாள். அதன் பிறகு அவளை சம்மதிக்க வைத்துப் பெண் பார்க்க வைப்பதற்கு வெகு நாட்கள் ஆகிற்று. பின் இதுதான் விஷயம் என்று தெரிந்து வந்தாலும் ஒருமுறை சும்மா போய் நேரில் பார்த்துவிட்டு வரலாம். நகை அதிகம் போட சொல்லிக் கேட்போம். ஒத்துக்கிட்டா பிறகு பார்ப்போம் என்று ஏராளமானோர் பெண் பார்த்துவிட்டு சென்றனர். பார்த்துவிட்டு வேண்டாம் என்று ஒதுக்குவதில் என்ன ஆனந்தம் கொண்டார்களோ? வரதட்சணை அதிகம் கேட்டவர்களை கோமேதகமே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். இவ்வாறு வருடங்கள் பல கழிந்தன.
குளித்து விட்டு, புடவை உடுத்தி அந்த புடவைக்குப் புது பரிணாமத்தை, தோரனையை, அழகியலைத் தர தயாரானாள். அவளின் மார்புக்கு சற்றே கீழ் தெரியும்படியான கண்ணாடி அறையில் இருந்தது. அதன் முன் நின்றாள். முடியின் ஈரத்தை உணர்த்த தலையில் துண்டினை கட்டி கொண்டையிட்டிருந்தாள். ஈரத்தை உணர்த்துவது ஒருபக்கம் இருக்கட்டும், அத்துண்டு உருவானதற்கான பிறவிப் பலனை அடைந்தது என அவளின் கூந்தல் அழகுக்கு பாராட்டுதல் தரலாம் தாராளமாக. காதோரம் கற்றை முடி கொஞ்சம் சுருண்டு தொங்க, நிர்வாணத்தை உடையாக அணிந்துகொண்டு அவளை அவளே ரசித்தாள். இன்றைக்கு வருபவனுக்காவது கொடுத்து வைத்திருக்குமா என்று தன் மார்பின் அழகை தடவி பார்த்தவண்ணம் ரசித்தாள். எதையும் திரித்து மாற்றி காண்பிக்க தெரியாத கண்ணாடியில் இவ்வாறு தன்னைப் பார்த்து ரசிப்பது இது முதல் முறை அன்று. ‘தனிமையில் நிர்வாணத்தை விடவா உடைகள் அழகு தரபோகின்றன’ என்பது அவளின் எண்ணம் மட்டுமில்லாமல் உண்மையும் கூட. இடது கன்னத்திற்கு இடது கைகளின் மருதாணி வைத்த விரல்கள் சென்றது. கன்னத்திலிருந்து கழுத்து வரை வருடினாள். கண்கள் மூடினாள். மீண்டும் வருடினாள் மெதுவாக மிக மெதுவாக புழுக்கள் நெளியும் வேகத்தைக் காட்டிலும் மெதுவாக.
இடது கண்ணுக்கு கீழிருந்து ஆரம்பித்து விடுகிறது கறுப்பு. ஆரம்பித்த வேகத்தில் முடிக்காமல் நீண்டு கொண்டே போய் தாடை வரை பரவியது, அங்காவது முடித்துவிட்டிருக்கலாம். ஆனால் கழுத்தின் மீது மையல் கொண்டு அதனையும் விழுங்கியவாறு பின் கழுத்து பாதிவரை பரவியவண்ணம் இருந்தது. அதன் பெயர் மச்சமாம், அதிர்ஷ்டத்திற்கு அடிக்கடி குறிப்பிடும் வார்த்தை கொண்ட அந்த வர்ணம் அளவுக்கதிகமாக முகத்தினில் பரவி இடது கண்ணுக்குக் கீழிருந்து ஒரு பக்கமாக கழுத்து வரை பரவிய இந்த பெரிய மச்சம் அவளுக்கு பேரதிர்ஷ்டத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். ஆனால் அது ஒரு குறையாக மாறிப்போயிருக்கிறது மற்றவர்களின் கண்களில். நான்கில் ஒரு பங்கு முகம் மச்சத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. சில சிறுவர்களுக்குத் தொடைகளில் இவ்வகையான பெரிய மச்சத்தைக் கண்டிருக்கிறாள் கோமஸ். அதே போன்று இவளுக்கு முகத்தில் இருக்கிறது. பௌர்ணமி அன்று நிலவினை உற்றுப்பார்த்தால் அவ்வளவு பிரகாசமாக இருக்கும் நிலவில் கூட கரும்பகுதிகள் தெரியும். அதனால் நிலவின் ஒளியோ அழகோ குன்றுவதில்லை. பெரும்பாலும் பெண்களை நிலவுடன் ஒப்பிட்டு உவமை கூறுவார்கள், ஆனால் நூறு சதவிகிதம் நிலவுடன் ஒப்பிட்டு உவமை கூற இவள் மட்டுமே பொருத்தமானவள்.
இந்தக் காரணத்தின் பொருட்டு அவளுக்குக் கல்யாணத் தடை நீங்காமல் இருந்தது. “மச்சக்காரிக்கு இந்தத் தடவையும் பெண்ணு பாக்க வந்துட்டு போனாங்க ஆனா ஒண்ணும் புடி கொடுக்கற மாதிரி தெரியல” என்று அக்கம் பக்கம் ஒவ்வொரு முறையும் குசலம் பேசுவதும் நின்றபாடில்லை. சிறுவயதிலிருந்தே அனைவரும் இவளை மச்சக்காரி என்றே செல்லமாகவும், கிண்டலாகவும் கூப்பிடுவது வழக்கம். கோமேதகம் என்ற பெயரின் கடினத்தன்மை, மச்சக்காரி என பயன்பாட்டிற்கு வந்ததற்குக் கூடுதல் காரணம். கோம்ஸ் என்று வெகு சிலரே அழைத்தாலும் அது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தெருவினில் இருக்கும் வாண்டுப் பையன்கள் கூட இவளை மச்சக்காரி என்று அழைப்பதே வழக்கம். இவளும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்களின் தொடைகளை மட்டும் நறுக்கென்று கிள்ளிவிட்டு ஓடிவிடுவாள்.
“அக்கம் பக்கத்துல, சொந்த பந்தத்துல இருக்கற புள்ளைங்களையெல்லாம் பத்தாவது தாண்ட உடுல யாரும், கூடவோ கொறச்சலோ யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணிப்புடறாங்க. இவளொத்த புள்ளைங்க நடக்க ஒண்னு, கையில ஒண்ணு, வயித்துல ஒண்ணுனு நல்லா அழகா குடும்பம் நடத்திக்கிட்டு இருக்குங்க” என்று கணவன் வீட்டில் சொல்லமுடியா கொடுமைகளை அனுபவித்தாலும் கூட, விட்டு வரக்கூடாது என்று தனது அம்மாக்கள் சொல்லிக் கொடுத்த கௌரவம் என்னும் அடிமைத்தனத்தைக் காப்பாற்றி வருகிறார்கள் எனத் தெரிந்திருந்தும் கூட தனது புதல்விக்குக் கல்யாணம் ஆகவில்லை என்ற ஆதங்கத்தில் புலம்புவாள்.
“இவள படிக்க வச்சது தப்பா போச்சு. படிச்சதும் போதாதுனு பேங்கு வேலைக்கு வேற போறா. பெருமையா இருந்தாலும் இத்தன படிச்சி நல்ல உத்தியோகத்துல இருக்கனால படிச்ச மாப்புள்ளையா பாக்கறதனாலதான் வரவன் பூரா இவள பாத்துட்டு வேணா வேணானுட்டு போறானுவ. படிக்காத, கையளவு நெலம் வச்சிட்டு பண்ணயம் பன்றவனையோ இல்ல இவ அப்பன் மாதிரி மில்லு வேலைக்குப் போய்ட்டு கையடக்கமா சம்பாரிக்கறவனையோ பாத்துக் கொடுத்துட்டா தங்கமாட்டம் கட்டிக்கிட்டு போய் பொழைப்பான். ஆனா இவளுக்குப் படிச்ச மாப்ள தான் வேணும்னா எப்புடி? ”
“ஒரே ஒரு புள்ளைய வச்சிக்கிட்டு சீரெழவு படறேன். இருக்கந்தின்னியும் எப்ப போவானு வெசனப்படுறேன், போய்ட்டானா எங்களுக்கு வேற நாதி இல்ல, அக்கம் பக்கம் ஒண்ணுமுன்னா நீங்கலாம் இருக்கற தகிறியத்துல இருக்கேன்” என்று அந்தத் தெருவில் உள்ள அனைத்துத் தாய்மார்களிடமும் விசனப்படாத நாளில்லை.
கோம்ஸிற்கு ஏழை பணக்காரன், வெள்ளை, சிகப்பு, கறுப்பு, உயரம், குட்டை என்று எந்த நிபந்தனைகளும் இல்லை மாப்பிளை படித்திருக்க வேண்டும் என்பதைத் தவிர.படிப்பின் அவசியம் அறிந்தே, பெண் பிள்ளைகளைப் பத்தாம் வகுப்பு தாண்டி படிக்க வைக்காத மாமனிதர்கள் கூட்டத்திலே கல்லூரி வரை அனுப்பி,வேலைக்கும் செல்ல ஊக்குவித்த தந்தைக்கு மகளாகப் பிறந்த அவள் படித்த வரனை எதிர்பார்ப்பதில் பிழை என்ன இருக்கப்போகிறது. அந்த ஒரு நிபந்தனையின் பொருட்டே அவளுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்று மனதார இல்லையென்றாலும் சும்மா பேச்சுக்குச் சொல்லி சொல்லி காண்பிக்கையில், “அஞ்சாவது தாண்டாத நீயி அந்தக் காலத்துலையே எஸ்எஸ்எல்சி படிச்ச மாப்புள்ளையா பாத்துக் கட்டிக்கிட்ட. நா மட்டும் படிக்காத மாப்பிள்ளைய கட்டிக்கோனுமா? என கோம்ஸ் நக்கலடிக்க அவள் அம்மா “உங்க அப்பா எஸ்எஸ்எல்சி ஃபெயிலுடி” என்று கூறி வெட்கப்பட்டு சிரிப்பாள்.
எந்தவித பயமும் பதற்றமும் இப்போதெல்லாம் இல்லை. வருபவர் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால், இதற்கு முன் கேட்டார் போல இதைக் காரணம் காட்டி நகை அதிகம் போடக் கேட்டால், தன்னை அலட்சியமாக பார்த்தால், முகம் சுருக்கினால், எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொண்டாலும் தன்னை வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே வேலைக்காரியாக இருக்க சொன்னால் என்று எதற்கும் அவள் வருந்தப்போவதில்லை. இந்தப் பெண் பார்க்கும் சம்பிரதாயம் வீட்டில் ஆரம்பித்ததிலிருந்து நடப்பவை யாவும் அவளுக்கு மனதைத் திடப்படுத்தும் பயிற்சிகளாகவே மாறிப்போயின. “எனக்கு வேலை இருக்கிறது அது போதும். அம்மா அப்பா காலத்துக்குப் பொறவு என்ன நானே பாத்துக்குவே” என்று கண்ணாடியில் தன்னைப் பார்த்தவாறு பேசி ஆறுதல் படுத்திக்கொள்வாள் குழந்தையைப் போல். “புடிச்ச மாதிரி கல்யாணம் ஆனாலுஞ்சரி ஆவுல்லினாலுஞ்சரி, வாழ்க்க போற போக்குல போவ வேண்டிதா” என சகமனிதர்களிடம் தன் பங்கிற்குத் தத்துவங்களை எடுத்துரைத்தாலும் மனதளவில் துணைக்கு ஏங்கினாள் என்பதே நிதர்சனம்.
கோமஸ் சரியாக நித்திரைக்கொண்டு பல நாட்கள் ஆகிற்று. கணவனுடன் கட்டில் இன்பம் கொண்டு ஆசைத் தீ அடங்கி ஆசுவாசம் பெற்று தூங்க தாமதமாகும் வயதில், தனியே தூக்கத்தைத் தொலைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதையே பெரும் போராட்டமாகக் கொண்டிருக்கிறாள். அவள் நிலை புரிந்தோ அல்லது புரியாமலோ அவளுக்கு என்று அந்தச் சிறிய நடுத்தர வர்கத்து மாளிகையில் தனியறை தற்செயலாக அமைந்துவிட்டது இந்தச் சில வருடங்களில். சில நேரம் அம்மாவுடனே படுத்துக் கொள்வாள். தனியாக தன்னைக் கையாளுவது சிரமம் என்றெண்ணி. சில நேரம் தாமாகவே தன்னை தனிமைப்படுத்திக் கொள்வாள். வெகு சில இரவுகளில் தன்னிலை மறந்து செயல்படுவாள். நடுசாமத்திற்கு மேல் தலையணையைத் தனக்குரியவனின் மார்பாக எண்ணி அதில் தலைவைத்துத் தூங்கிப் போவாள்.

அவளை விட சிறு வயது உறவுக்கார பெண்கள் மற்றும் அவளின் தோழிகள் என பெரும்பாலானோருக்குப் பிடித்தோ பிடிக்காமலோ, காதலித்தோ,கட்டாயத்திலோ, ஏதேனும் ஒரு முறையில் கல்யாணம் ஆகியிருந்தது. எல்லா பெண்களும் விருப்பப்பட்டோ படாமலோ அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து விடுவார்கள். சதா நேரமும் நோக்கியா 1100 போனில் பாம்பு கேம் விளையாண்டு அடுத்தடுத்த கட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கும் இவள், திருமணம் என்னும் கட்டத்திற்கு நகராமல் இருந்தாள். கிணற்று மீன் கடலை எங்கு சேர்வது போல் இவளது கல்யாணக் கனவு நிஜத்தில் கேள்விக்குறியாக இருக்கிறது. அவர்களைக் கணவர்களுடன், குழந்தைகளுடன் பார்க்கும் பொழுது அவளுக்கு ஏக்கம் இல்லாமல் இல்லை. முன்பு போல் அடிக்கடி உற்றார் உறவினர் தோழிகள் கூப்பிடும் விஷேசங்களுக்குச் செல்வது இல்லை. வீண் கேள்விகளையும், அறிவுரைகளையும் மற்றும் “அங்க ஒரு மாப்பிள்ளை இருக்கு, இங்க ஒரு வரன் இருக்கு, இந்தக் கோயிலுக்கு அமாவாச அமாவாச போய்ட்டு வா, அந்த சாமிக்கு விளக்கு போடு” போன்ற உபதேசங்களையும் தவிர்ப்பதற்காக.
குழந்தைகளின் தொல்லைகளுக்கிடையே ரகசிய கூடல் நடத்த, இரவில் நேரம் தெரியாமல் இருட்டினில் கிசுகிசுத்துப் பேச,காம கிரக்கத்தில் கணவன் இருக்கையில் காரியங்கள் சாதிக்க,மோட்டார் பைக்கில் பின்னிருந்து கட்டியணைக்க, காலில் நெட்டை எடுத்துவிட, காலையில் தான் அரை நிர்வாணமாய் சோம்பல் முறிப்பதைப் பார்த்து ரசித்து சில்மிஷங்கள் மேற்கொள்ள, தான் மட்டுமே உரிமை கொண்டாட, அனைவரின் மத்தியில் சைகையில் கொஞ்ச, மல்லிகைப்பூ வாங்கித் தர, தான் கைகள் பிடிக்க, தனது கால்கள் பிடிக்க, தோள் மீது சாய, தன் மடியில் சாய்த்துக்கொள்ள, முத்தமிட,முத்தம்பெற, சினுங்க, பொனங்க, அடக்க, அடங்கிப் போக என எல்லாவற்றுக்குமானவனாக வேண்டும் என்று தனக்கானவனுக்காகக் காத்துக்கொண்டு இருந்தாள்.
இன்றும் பெரியதளவில் கோம்ஸ்க்கு நம்பிக்கை இல்லை இந்த வரன் கைக்கூடும் என்று. ஆனால் கைகூடினால் பரவாயில்லை என்றும் நினைக்காமல் இல்லை. பெண் பார்க்க வருவதாகச் சொல்லி இப்போதெல்லாம் வங்கியில் விடுப்பு எடுக்க அவளுக்கு மிகவும் சங்கடமாக உள்ளதால் வேறு காரண காரியங்களைச் செல்லிக்கொள்கிறாள். இல்லையென்றால் கடைசியாக வந்த வரன் பற்றிய கேள்விகள் அடுத்த வரன் வரும்வரை “இப்போ வந்து பாத்தவங்க ஒத்துக்கிட்டாங்களா? இது முடிஞ்சிரும்ல, கவலப்படாதிங்க, இந்த டைம் நல்லது நடக்கும்” என்று அதப்பற்றிய பேச்சாகவே இருக்கும். ஏதோ ஒரு பொய்யினை சொல்லித்தான் இன்றும் விடுப்பு எடுத்திருக்கிறாள். காரணம் பொய் என்று வங்கியில் அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடும் என்றும் அவளுக்கும் தெரியும்.
மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டனர். அவர்கள் முன் காட்சித்தர தயாராகி விட்டாள் கோம்ஸ். சிவப்பு வண்ண புடவையை மேனி என்னும் அரங்கில் ஏற்றி அதற்குத் தரச்சான்றிதழ் கொடுத்து விட்டாள். நீண்ட ஒற்றை ஜடையில் மல்லிகைப்பூவை வைத்து அதற்குப் புத்துணர்ச்சி பூட்டிவிட்டாள். பூக்கள் அவளின் மேனியிலிருந்து புது வாசம் பெற்றுக்கொண்டன. மெல்லிய பவுடர் பூச்சு, சந்தனம், குங்குமம், வளையல்கள், சங்கிலி என ரொம்ப ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக தன்னை அழகுப்படுத்திக் கொண்டாள். எவ்வளவுதான் அலங்காரம் பண்ணினாலும் தன் முகத்தில் குடியிருக்கும் கருமையை மறைக்க முடியாது, அப்படியே மறைத்தாலும் தற்காலிகம்தான் அதற்கு ஏன் அவ்வளவு அங்கலாய்ப்பு செய்துகொள்ள வேண்டும் என்று எண்ணுவாள்.
முதல் சில முறைகளுக்குப் பின் “பொண்ணுப் பாக்க வராங்க” என்று அக்கம் பக்கத்தினர், நெருங்கிய உற்றார் உறவினர் யாருக்கும் பேச்சுக்குக் கூட தகவல் சொல்வதில்லை. நம்பிக்கையான இரண்டு மூன்று நபர்களை மட்டும் அழைத்துக் கொள்வர் சம்பிரதாயத்துக்காக. அலுப்புத் தட்டின பிறகு முதல் சில முறை இருக்கும் உற்சாகம், ஆர்வமெல்லாம் பிறகு எதிலும் வருவதில்லை கலவியில் கூட.
மருதாணிக் கைகளால், வந்திருந்த மாப்பிள்ளை அவரின் அம்மா மற்றும் சிலருக்கு டீ கொடுத்தாள். கொடுக்கும் சில நொடிப்பொழுதில் பயமோ பதற்றமோ இல்லாமல் மாப்பிள்ளையை நன்றாகக் கவனித்தாயிற்று. மாப்பிள்ளை தான் கொஞ்சம் தயங்கி தயங்கி உட்கார்ந்திருந்தார் போல் இருந்தது. அவள் அதை நன்கு கவனித்தாள். முதல் முறையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள். பதற்றத்தில் சூடான டீயினைக் குடித்து உதட்டையும் நாவையும் ஒருசேர சுட்டுக்கொண்டார். அது மேலும் சங்கோஜத்தை ஏற்படுத்தியது அவருக்கு.
டீ கொடுத்து விட்டு உள்ளறைக்குச் சென்ற கோம்ஸ் இதனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு மாப்பிள்ளையை மிகவும் பிடித்திருந்தது. அவரின் அந்தப் புதிய சூழ்நிலையை அனுகும் தயக்கத்தையும், உதட்டில் சூடுபடுத்திக் கொண்டதையும் மிகவும் ரசித்தவளாக இருந்தாள். நிறைய பேர் பெண் பார்க்க வந்திருந்தாலும் அவர்கள் எல்லோரும் மச்சத்தை உற்று உற்று பார்த்தார்கள். சிலர் தொட்டெல்லாம் பார்த்து சென்றிருக்கிறார்கள். கறுமைக்கேற்ற தங்கம் என்பது போல் அளந்து அளந்து நகைக்கான மதிப்பீட்டை கூட்டுவார்கள். ஆனால் இவர்கள் அவ்வாறு தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு ஒருவித மகிழ்வை தந்தது. அதுபோக மாப்பிள்ளை பற்றியும் அவரது வீட்டாரின் நன்மதிப்புகள் பற்றியும் கோம்ஸின் தந்தை நன்கு விசாரித்து தெரிந்து கொண்டதை முன்னரே வீட்டினில் பகிர்ந்ததின் வாயிலாக கோம்ஸிற்கு அவர்கள் மீது மிதமான ஆர்வம் இருந்தது. அவர் இத்தனை வருடங்களில் இவ்வாறு வந்தவர்களைப் பற்றி கணிந்து கூறி அவள் கேட்டதில்லை.
மாப்பிள்ளை பதற்றத்துனூடே கோம்ஸை கவனிக்காமல் இல்லை. முன்னழகு பின்னழகு என தனது பார்வையால் யாரும் அறியா வண்ணம் அளந்தார். கோம்ஸை அவருக்குப் பிடித்திருந்தது. நேரில் பார்த்தமாத்திரம் மட்டும் இல்லை, புகைப்படத்தில் பார்த்ததிலிருந்தேதான். இப்போதெல்லாம் தரகர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் கோம்ஸின் வண்ணப் புகைப்படம் வரன்களுக்காகப் புழக்கத்தில் வந்திருந்தது. முகத்தைக் கால்வாசி விழுங்கிய மச்சத்தை வைத்து கோமேதகம் என்னும் மேனகையை உதாசீனப்படுத்தி விட முடியாது என்பது மாப்பிள்ளையின் எண்ணம். அம்மாவும் “பரவால அதனால ஒண்ணும் கொறஞ்சி போயிடாது. படிச்ச புள்ளையா தங்கமாட்டம் இருக்குது. குடும்பத்துக்கும் ஒண்ணும் கொறச்சல் இல்ல. கயட்டப்பட்டு புள்ளைய படிக்க வச்சிருக்காங்க” என்று கருத்துகளைப் பகிர ஆனந்தப்பட்டார். கோமேதகத்தை நேரில் காணும் ஆவல் புகைப்படத்தைப் பார்த்ததிலிருந்தே இருந்தது. அப்பெரிய மச்சத்தைக் காரணம் காட்டி அவ்வழகியை அவன் இழக்க விரும்பவில்லை போல் இருந்தது அவனது மனம். கல்யாணம் மேடை, கட்டில் கூடல் என கற்பனைகள் சில நாட்களாகத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. எப்படியாவது கோமேதகத்தைக் கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று சில நாட்களிலே ஆவல் அவரை தொற்றிக்கெண்டது எனக் கூறினால் அது மிகையாகாது. நன்கு சமைத்த அசைவம் கூட சிலருக்கு ஒவ்வாமை. சிலருக்கு அலாதி பிரியம். அதுபோல நாம் பார்க்கும் பார்வைகளும் அனுகும் நடைமுறையும் வேறு வேறு. இத்தனை வருடங்கள் யாருக்கும் அவளைப் பிடிக்கவில்லை என்பதால் அவள் யாருக்கும் பிடித்தமானவள் ஆகாமலே போய்விடுவாள் என்று அர்த்தமாகிடாதல்லவா?
“எக்க ஊட்ல நானும் எங்க அம்மாவும் மட்டும்தான். இராசிபுரத்துல மெயின் ஏரியாவுல ரெண்டெடத்துல சின்னதா பேக்கரி போட்டுருக்கேன். தொழில் இப்பக் கொஞ்சம் பரவால நல்லா போய்ட்டு இருக்கு. ஒரு பிரச்சனையும் இல்ல. உங்க பொண்ண புடிச்சிருக்கு. அவுங்க வேலைக்குப் போகட்டும் தாராளமா. இத்தன வருசம் கஷ்டப் பட்டு படிச்சது ஊட்டோட இருக்கவா. நகை, ரொக்கம் என எதும் வேண்டாம். உங்க பொண்ண மட்டும் கொடுங்க அது போதும். அவுங்களுக்கும் புடிச்சிருக்கானு கேட்டு சொல்லுங்க” என்று பதற்றமாகக் காணப்பட்டவரின் மனநிலை சமநிலை எய்தி மாப்பிள்ளை தோரனையுடன் சொல்லி விட்டார். அவரின் அம்மாவும் சம்மதம் என்பது போலவே தலையசைத்துப் பேச ஆரம்பிக்கையில்…..
இதுவரை அவர்களின் காது, கேட்காத ஒன்றை மாப்பிள்ளை அறிவித்ததையொட்டி “என்னா இது, எதும் வேணாங்கறாப்டி, எதுனா கொறகிற இருக்குமோ” என்று பெண் வீட்டார் சிலர் அங்கு கிசுகிசுத்தனர்.
000

ஆரவ்
சொந்த ஊர் திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறேன். 2019 ல் இருந்து புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டு புத்தகங்கள் வாசிக்கத் தெடங்கினேன். மேலும் திருச்செங்கோடு வெளிச்சம் வாசகர் வட்டம் 2022 முதல் நடத்தும் புத்தகத் திருவிழாவில் தன்னார்வளராக இணைந்து எனது பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கிறேன். “புதுச் சட்டை” என்ற என் முதல் சிறுகதை திரு.பொன்குமார் அவர்கள் தொகுத்த நாமக்கல் மாவட்ட சிறுகதைகள் புத்தகத்தில் வெளியானது.