முதல் வாரம்.

***

-டாக்டர்.. நீங்க டாக்டர் தானே சார்! கழுத்துல தூக்குக்கயிறு தொங்குறப்பவே நினைச்சேன் நீங்க டாக்டராத்தான் இருக்கோணுமின்னு! நெசந்தானே பன்னிப்பயலே!

-என் கழுத்துல தொங்குறது உங்களுக்கு தூக்குக்கயிறா பழனிச்சாமி?

-ஆமாடா பன்னி! என்னையப்பார்த்தா உங்களுக்கெல்லாம் கேனப்பயல்னு தோணுதாடா? டாக்டராம். உனக்கு என்ன தெரியும்னு இங்க இத்தினீக்கூண்டு ரூம்ல ஏசியப்போட்டுட்டு க்கோந்திருக்கே? நாலு மாத்திரைகளை மெடிக்கல்ல போயி வாங்கச்சொல்லி காயிதத்துல கிறுக்கி அனுப்பிட்டா நீ டாக்டரா? டாக்டருங்கெல்லாம் என்ன பண்ணி வச்சிருக்கீங்க இப்ப?

சொந்தமா மெடிக்கல் கடை போட்டு உக்கோர்ந்தவனெல்லாம் ஈ ஓட்டீட்டு உக்கோந்திருக்கான் தெரியுமா? நீங்க என்னடான்னா உங்களுக்குன்னு ஒரு ஹாஸ்பிடல்.. அதுக்குள்ளயே உங்களுக்குனு ஒரு மருந்துக்கடை.. அங்கதான் நீங்க எழுதுற மருந்துக கிடைக்குமாம்.. உன்னோட கையெழுத்தும் அவளுங்களுக்குத்தான் புரியுமாம். என்ன இழவுடா இது? ஏண்டா அப்படி காசு சம்பாதிச்சு யாருக்குடா கொண்டி குடுக்கறீங்க? பன்னிப்பயலுங்களா! ஆமா தெரியாமத்தான் கேக்கேன்.. இந்த மருந்துகளை வியாபாரம் பண்ணா கொள்ளைத்த காசு லாபம் வருதாமே.. உண்மைய என்கிட்ட புட்டுப்புட்டு சொல்றே நீ இன்னிக்கி எங்கிட்டே! ஹாங்.

-நீங்க கோவமா இருக்கீங்களா பழனிச்சாமி?

-நானெங்க கோவமா இருக்கேன்? மொத்த உலவத்த நெனச்சா பரிதாபமா இருக்கு எனக்கு. சனம் பூராவும் உங்களை கடவுளா மதிச்சு காசைக்கொண்டாந்து நீட்டுறாங்க. நீங்க அதை செலவு பண்டத்தெரியாம சுத்தறீங்க.. ஆமா ஏண்டா உங்களுக்கெல்லாம் சக்கரை, ப்ரசரு, உப்புன்னு ஒன்னுமே இல்லியாடா? அதெப்படிடா செவச்செவன்னு உருளைக்கட்டையாட்டம் உக்கோந்திருக்கீங்க? ஏமாத்து வேலை பண்ணிச் சம்பாதிக்கனும்னு யாரடா சொன்னது உங்களுக்கு?

ஏண்டா ஒத்தெ கம்பெனிக்காரனா மருந்து தயாரிக்கிறான்? டிவி பாப்பியாடா நீயி? உனக்கெங்க நேரமிருக்கப்போவுது.. சொல்றங்கேளு நீயி.. உங்க ஒடம்புல தேமல் இருக்கா? அரிப்பு இருக்கா? செவப்பாவனுமா? எங்க சோப்பை வாங்கிப்போட்டு குளிங்க.. பத்தே நாள்ல எல்லாம் சரியாவும்னு சொல்றாண்டா டிவில! முட்டாக்.. (பீப்) மவனுவ.. ஏண்டா இதெல்லாம் தப்புனு எவனாச்சிம் டாக்டர்க கொரலு குடுத்தீங்களாடா? அட தொவைக்கிற துணிமணி சோப்பு கூட இவனுங்க விளம்பரத்தை பார்த்து வாங்கிட்டு வந்து தொவைச்சாத்தான் துணி வெள்ளையடிக்குமாமா!

போனவாரம் பல்லு வலின்னு போயி ரெண்டு ஸ்பெசலிஸ்டுகளை பார்த்தேன். ஸ்கேன் பண்ணி பார்த்துடலாம்னு பைசாவை புடுங்கிட்டான் ஒரு ஏப்மாரி. சிமெண்ட் வேற வச்சு அடைச்சு பல்லுக்கு கொப்பி போட்டுக்கலாங்கான் சார். அதுக்கு பைசா இவ்ளோன்னு சொன்னாம் பாருங்க அவன்.. நாளைக்கி பார்ப்பம்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். இன்னொருத்தென் சொல்றான்.. உங்க கடேசிப்பல்லுல துவாரமிருக்கு.. துவாரத்துக்குள்ள பூச்சிங்க இருக்குன்னும் சொல்லி.. அதெப்புடுங்கிட்டம்னா எல்லாம் பழையமாதிரி ஆயிடும்னு சொல்றான் சார். பல்லுப்போனா சொல்லுப்போச்சு!  

ஏண்டா பல்லு வலின்னு போயி நின்னவன் பல்லைப் புடுங்கி வீசுறதுலயே குறியா இருக்கானுவ? ஒரு கண்ணு மங்கலா இருக்கேன்னு பெருநகர் வரைக்கிம் போனேன். அங்க ரெண்டு பெரிய ஆஸ்பத்திரியில நுழைஞ்சு ஏகப்பட்ட டெஸ்ட் எடுத்தேன். காசு பூராம் போச்சு! எவனுக்கும் ஒன்னும் தெரியில! இவனுக வெள்ளைப்படலம் வந்தா சரிபண்ணி தாட்டி உடறவனுங்க.. பெருநகர்ல கூட்டங்கூட்டமா பன்னிங்க!

கொட்டை பிரச்சனைக்கி நானு இன்னம் போகலங்க டாக்டர். கொட்டையவே அத்து வீசீட்டு புதுக்கொட்டை வச்சிக்கலாம்னு சொல்லி.. எம்பட ஊட்டை வித்துட்டு வரச்சொல்லீருவானுங்க ஆய்தின்னிங்க! அட மனுசனாப்பொறப்பெடுத்து அடுத்த மனுசனை நம்பி போலாம்னு நினைச்சா.. பூராம் காசுபுடுங்கிப்பயலுங்களாவே இருக்கானுங்க!

சார் நீங்க எப்படி? என்னை வேணா கிடையாப்போட்டு ஒரு குத்து குத்துறதுன்னா குத்தி அனுப்பிடுங்க சார். எங்கிட்ட காசில்ல. கிட்னியை வித்துத்தான் காசு குடுக்கணும். அதுக்கு நீங்க எனக்கு டைம் குடுக்கணும். அங்கியும் ஏமாத்து வேலைங்க நடக்குதாமா சார்.. போனவாரம் பக்கத்தூட்டு சுப்பிரமணி தம் புள்ளையோட உடல் பிரச்சனைய சரிபண்ட ஒரு கிட்னியை குடுக்க பெங்களூரு போயி கடைசிக்கு எழுவத்தஞ்சாயிரம் வாங்கிட்டு வந்தான். ஏன் சார் .. ஒரு கொட்டெ 75 தானா? புளியாங்கொட்டை, வேப்பங்கொட்டை பொறுக்கி வச்சிருந்தாக்கூட படி முப்பது ரூவாய்க்கி ஊடு வந்து வாங்கிட்டு காசு குடுத்துட்டு போறாங்க சார்.

-பழனிச்சாமி.. நீங்க பேசுறதெல்லாம் சரிதான்னாலும்.. நீங்க இங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியுமா?

-தெரியும்டா பன்னிப்பயலே! எனக்கு பைத்தியம்னு எங்க ஊட்டுல இருந்து கொண்டாந்து .. இங்க பாரு என்னைய.. பார்றா.. பச்சைக்கலர்ல துணிய போர்த்திவுட்டுட்டு அவுங்க போயிட்டாங்க! இது பெரிய ஆஸ்பத்திரிதான். எனக்கு தனியா ரூமு குடுத்திருக்கீங்க! நான் உங்களை நம்பணும்ல?

இந்தப்பச்சைக்கோட்டை நான் போட்டுட்டு ஸ்டேஜ்ல போயி நின்னு கோமாளி வேஷம் போட்டாப்டி தமாஸ் காட்டனும்னு நினைச்சிருக்கீங்க போல! ஏன் சார் இந்த ஆஸ்பத்திரியில இருக்குற பூராப்பைத்தியகார பயல்களுக்கும் பச்சைக்கோட்டு மாட்டிவுட்டு அழகு பார்க்கறீங்க?

சுத்திலும் பெரிய பெரிய மரங்களா பூதங்களாட்ட ஆஸ்பத்திரியை சுத்தியும் நிக்குதுக. சாமத்துல வெளிய வந்தா அதுங்களை மனுசன் பார்ப்பானா? கொள்ளிவாய் பிசாசுங்களாட்டம் காத்துக்கு ஆட்டம் போடுதுங்க!

நியூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டுபுடிச்சாரு, புத்தர் போதிமரத்தடியில் க்கோந்து ஞானம் பெற்றார், பாபிலோன்ல நெகபுத் நெசார் தொங்கும் தோட்டத்தை அமைச்சாரு, அசோக சக்கரவர்த்தி சாலையோரங்கள்ல மரங்களை நடச்சொன்னாரு. படிச்சம்ல பள்ளிக்கூடத்துல! எந்தச்சாலையோரத்துல மரங்கள் இருக்கு இப்ப? பூராத்தையும் வெட்டித்தள்ளீட்டு சொய்ங் சொய்ங்குனு கார்ல பறக்குறானுங்க! ரோட்டைத்தாண்டி ஒரு மனுசன் அந்தப்பக்கம் போக முடியுதா? அப்படி பதனமா தாண்டிட்டா நிலாவுல கால் வச்ச சந்தோசம் பார்த்துக்கங்க!

என்னை காப்பாத்த எங்காயாளும் எங்கப்பனும் ஆளுக்கொரு கிட்னிய வித்தா எமுட்டுபணம் சேர்ந்துடும்? அதுகெல்லாம் வயசான கிட்னிகன்னு எவனும் நல்லவிலைக்கி வாங்கிக்க மாட்டானுங்க! உனக்கு கணக்கு தெரியுமா? எல்லாம் நாசமாயிடும்! அதனால நாஞ் சொல்றத நீ கேளு டாக்டர் மகராசா.. எனக்கு சிறப்பா ஒரு சாவு ஊசியை போட்டு படுக்க வச்சிடு!

நானெல்லாம் இனி நல்லவிதமா ஆயி.. நாலு எடத்துக்கு வேலைக்கிப்போயி.. எங்காத்தா அப்பனுக்கு சோச்சி போட்டு காப்பாத்தப்போறனா? அதுக்கெல்லா ஒரு முகராசி வேணும்ல. நீயே சொல்லு! ஊசியப்போட்டு உடு மொதல்ல நீயி.

காத்தால எங்கப்பனுக்கு போனுப்போட்டு தகவலை சொல்லிடு. இந்தமாதிரி உங்க கோல்டுசன் ராத்திரி கூவிட்டான்னு! குக்கீட்டு இருந்தான் கக்கீட்டு செத்தான்னு சொல்லு. என்னோட பாடியை தூக்கிட்டு போயி எரிப்பானுவளோ.. பொதைப்பானுவளோ.. எதையோ பண்ணிச்சாட்டாறானுங்க! உனக்கும் நிம்மதி எனக்கும் நிம்மதி! எப்பிடி எம்பட ஐடியா?

-பழனிச்சாமி.. இப்பிடி வாய் ஓயாம பேசிட்டேதான் இருப்பீங்களா? மொதல்ல அமைதியா இருங்க! அதுக்கு நாங்க இங்க மருந்து மாத்திரைகள் கொடுப்போம். சீக்கிரமா நீங்க சரியாயிடுவீங்க!

-நான் சரியாயிட்டா.. நான் எங்கிருக்கேன்? எப்பிடி இங்க வந்தேன்? இது எந்த இடமுன்னு எல்லாம் கேட்டுட்டு இருப்பேன் சார். எதுக்கு அந்த வம்பெல்லாம் எனக்கு? இதென்ன சினிமாவா? ரெண்டரை மணிநேரத்துல பாலு வித்து பணக்காரனாவுறதுக்கு? என் பேரு பழனிச்சாமி. எனக்கு இன்னொரு பேரு இருக்குன்னு நான் சொன்னா நீ சிரிப்பே டாக்டர்.

இரண்டாம் வாரம்.

***

பழனிச்சாமி தன் அறையின் ஜன்னல் கம்பிகளைப்பிடித்து உந்தி கால்களை உயர்த்தி கீழ்க்கம்பியில் வைத்து வெளியே வேடிக்கை பார்த்தபடியிருந்தான். இவனிருப்பது மூன்றாவது மாடியறை. தேக்குமரங்களின் வரிசை இவன் ஜன்னலுக்கும் வெளியே காற்றில் சலசலத்துக்கொண்டிருந்தது. கீழே காய்ந்து விழுந்திருந்த இலைகளை குச்சி சீமாறால் ஒரு பெண் கூட்டிச்சென்று குட்டானாய் குவித்தபடியிருந்தாள்.

கீழே சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த பச்சைநிற உடுப்பணிந்த ஒரு நபருக்கு உணவை வாயில் திணித்துக்கொண்டிருந்தாள் ஒரு அம்மா. தனக்கும் ஒரு வாய் சோறு வேண்டும் என பழனிச்சாமி கீழே அவர்களைப்பார்த்து கத்தினான். ஆனால் அந்தம்மா காதில் இவன் சப்தம் கேட்டதாகவே தெரியவில்லை.

“லேய் தொண்டு முண்டெ! இங்க ஒருத்தன் வறட்டுக்கத்து கத்திட்டு இருக்கேன் காதுல ஏறுச்சாடி! அவனுக்கு மட்டும் ஊட்டு ஊட்டுனு ஊட்டிட்டு இருக்கா பாரு! என்னைப்பாக்க வெச்சு திங்கறவன் வயிறு இன்னிக்கி சாமத்துக்குள்ள வெடிச்சுப்போயிரும்டி! வயிறு வெடிச்சிடுச்சுன்னா இங்கிருக்கிற டாக்டருங்களுக்கெல்லாம் அதை கோணூசியால தைக்கத் தெரியாது பார்த்துக்க! தெக்கால கடைசில சாவு குடோனு இருக்குமாட்ட இருக்குது. செத்த பொணத்தையெல்லாம் மீனு வண்டியில போட்டு உருட்டீட்டு போறாங்கள்ள இதுவழியா!”

“பழனிச்சாமி.. அங்க ஜன்னல்மேல ஏறீட்டு என்ன சத்தம் போட்டுட்டு இருக்கீங்க? இறங்கிவந்து உங்க பெட்ல உக்கோருங்க! டாக்டர் ரவுண்ட்ஸ் வர்றாரு. இப்படி பண்ணீட்டு இருந்தீங்கன்னா கால்ல சங்கிலி போட்டுருவாரு!” என்று மருத்துவமனை தாதி அறைக்குள் வரவும் பழனிச்சாமி ஜன்னலிலிருந்து இறங்கி குனிந்தவாக்கில் வாயில் ஒற்றை விரலை வைத்தபடி பெட்டுக்கு திரும்பிவந்து அமர்ந்தான்.

“டீச்சர், டாக்டரு வர்றாருங்களா டீச்சர்?”

“நான் டீச்சரில்லைங்க பழனிச்சாமி”

“சரி டீச்சரில்லை. வானத்துல இருந்து வந்த தேவதை தானே நீங்க! சும்மா சொல்லக்கூடாதுங்க தேவதை. அம்சமா இருக்கீங்க!”

“நர்ஸைப்பார்த்து இப்படியெல்லாம் நீங்க பேசக்கூடாது பழனிச்சாமி” என்றபடி ட்ரேவிலிருந்து ஊசியில் மருந்து ஏற்றி கையில் எடுத்துக்கொண்டு இவன் அருகில் வந்தாள். பழனிச்சாமி பெட்டில் குப்புற படுத்துக்கொண்டான்.

“வலிக்காம குத்துங்க தேவதை! வலிச்சுதுன்னா தேவதைன்னுகூட பாக்க மாட்டேன். காட்டுக்கத்து கத்துவேன். அப்புறம் என்மேல சங்கடப்படக்கூடாது”

“எறும்பு கிள்ளி வச்சா மாதிரி இருக்கும்” என்று சொல்லி அவன் இடுப்பில் ஊசியை இறக்கி விட்டு மீண்டும் ட்ரே இருக்கும் டேபிளுக்கே வந்தாள். அப்போது டாக்டரும் அறையினுள் நுழைந்தார்.

“சீக்கிரம் குத்தியுடுங்க தேவதை.. டாக்டர் வந்துடுவாரில்ல!”

“உங்களுக்கு ஊசி போட்டாச்சுங்க பழனிச்சாமி.. எந்திரிச்சு உட்காருங்க!”

“போட்டதே தெரியலை.. இனிமே தேவதை நீங்க மட்டும் தெனத்திக்கிம் வந்து ஊசி போடுங்க.. டாக்டர் சார். நீங்க எப்ப பூனையாட்டம் வந்தீங்க? வாங்க உக்கோருங்க! தண்ணி சாப்பிடறீங்களா சார்.. தேவதை.. டாக்டருக்கு சமையல் ரூம் போயி சொம்புல தண்ணி கொண்டாந்து குடு. டாக்டர் வெய்யில்ல வந்திருக்காரு பாவம். என்ன விசயமா இந்த பழனிச்சாமியை பாக்க வந்திருக்கீங்க டாக்டர்? பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கீங்களா? பத்திரிக்கை குடுக்க வந்தீங்களா?”

“பழனிச்சாமி.. நீங்க இங்க வந்து ஒருவாரம் ஆயிடுச்சு. இப்ப உங்களுக்கு எப்படி இருக்குது? முன்னத்தை விட உங்க உடம்பு இப்போ பரவாயில்ல. நல்லா சாப்பிடறதா ஆயாம்மா சொன்னாங்க. இங்க நிறையப்பேரு சரியா சாப்பிடறதேயில்ல. ஊட்டி விட்டாலும் மூஞ்சியில துப்பிடறாங்க. நீங்கதான் யார் உதவியும் இல்லாம சாப்பிடறதா சொன்னாங்க! வெரிகுட்!”

“நல்லா சாப்பிடணும் டாக்டர். அப்பத்தான் நீங்க குடுக்குற மாத்திரையை எல்லாம் சாப்பிடமுடியும். சோறு திங்காம உங்க மாத்திரைகளை முழுங்கினேன்னு வச்சுக்கங்க. கொடலு குந்தாமணியெல்லாம் ஓட்டையாயி மவுத்தாயிடுவேன்!”

“உங்க அம்மா வந்துட்டு போனதா சொன்னாங்களே! என்ன சொன்னாங்க அவங்க?”

“அவங்க என்னசார் சொல்லுவாங்க? நல்லா மருந்து மாத்திரை சாப்டுட்டு சீக்கிரமா குணமாயிட்டீன்னா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க. நான் ஸ்கூல் யூனிபார்ம் தெச்சுக்குடும்மான்னேன்!”

“என்னது ஸ்கூல் யூனிபார்மா? மறுபடியும் பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி படிக்கப்போறீங்களா?”

“இல்ல டாக்டர்.. எங்க வீட்டுக்கு முன்னாலயே ஸ்கூல் வேன் வருதாமா.. நிறைய குழந்தைகள் யூனிபார்ம்ல ஏறிட்டு போகுதுங்களாமா. நானும் அவுங்களோட போகணும்னு தான் எங்கம்மாட்ட யூனிபார்ம் தைக்கச் சொன்னேன். அங்க போனா ரைம்ஸ் சொல்லிக்குடுப்பாங்க.. அம்மா இங்கே வா! வா! ஆசை முத்தம் தா! தா!.. ஜாலியா இருக்கும். நீங்க ஏன் தேவதை என் கன்னத்துல ஒரு முத்தா குடுக்கக்கூடாது? குடுங்க.. சின்னப்பையனுக்கு குடுத்தா தப்பில்லை. டாக்டர் ஒன்னுஞ்சொல்ல மாட்டாரு. டாக்டர் நாளைக்கி வர்றப்ப எனக்கு கரடி பொம்மை வாங்கிட்டு வாங்க டாக்டர். நான் கரடியோட பேசிட்டு கட்டிப்பிடிச்சிட்டே தூங்கிருவேன்.”

“உங்க வயசு முப்பதாயிடுச்சுங்க பழனிச்சாமி. ஏன் இப்படியெல்லாம் ஆசைப்படறீங்க?”

“இல்ல டாக்டர். இங்க வந்ததுல இருந்து நான் சின்னப்பையனா மாறிட்டு இருக்காப்ல இருக்குதுங்க. இன்னும் ரெண்டுமூனு நாள்ல நான் குட்டிப்பாப்பாவா ஆனாலும் ஆயிடுவேன். அப்புறம் எனக்கு நீங்க இவத்திக்கி தொட்டல் கட்டி அதுக்குள்ள என்னை படுக்க வச்சு ஆராரோ பாடித்தான் தூங்க வைக்க முடியும்னு நினைக்கேன்!”

“நீங்க அப்படியெல்லாம் யோசிக்கவே கூடாது பழனிச்சாமி. இப்படியெல்லாம் நீங்க யோசனை பண்ணிட்டு பேசினதால தான் உங்க வேலையும் போச்சு. உங்களை வீட்டுல வெச்சு ஜமாளிக்க முடியாமத்தான் இங்க கூட்டிவந்து சேர்த்தாங்க உங்க வீட்டுல! நீங்க எதையும் யோசிக்காம அமைதியா மாத்திரை சாப்டுட்டு தூங்கணும்.”

“தூங்குனா கனவுல பூச்சாண்டி வருது டாக்டர்”

“நர்ஸ்.. அந்த பேப்பரையும் ரூல் பென்சிலையும் அவர்கிட்ட குடுங்க! பழனிச்சாமி நீங்க கனவுல பாக்குற பூச்சாண்டியை வரைஞ்சு காட்டுங்க..”

“எனக்கு இன்னும் அ, ஆ, இ, ஈ கூட தெரியாதுங்க டாக்டர். என்னைத்தான் இன்னும் ஸ்கூல்லயே சேர்த்தலையே.. அப்புறம் எப்படி பிக்காஸோ மாதிரி பூச்சாண்டி வரைஞ்சி காட்ட முடியும்? ரூல்பென்சிலையே எனக்கு பிடிக்கத்தெரியாது! படம் வரைஞ்சி காட்டுறதாமா! லூசு டாக்டர்கிட்ட வந்து மாட்டீட்டனாட்ட இருக்குது! அதவுடுங்க.. எனக்கு பக்கத்து ரூம்ல ஒரு சின்னப்பையன் இருப்பானாட்ட இருக்குதுங்க.. எந்த நேரமும் கேவிக்கேவி அழுதுட்டே இருக்கான் அவன். கேக்க பாவமா இருக்குது எனக்கு. இனி அழுதான்னா இங்க என்கிட்ட தாட்டியுடுங்க டாக்டர். நான் அவனை அழாம பார்த்துக்கறேன். ரொம்ப கரைச்சல் கொடுத்தான்னா படக்குனு கழுத்தை திருகி முடிச்சுடறேன்!”

மூன்றாவது வாரம்.

***

மூன்றாவது மாடியிலிருந்த பழனிச்சாமியின் படுக்கையில் வேறொரு பெரியவர் அட்டனங்கால் போட்டுப்படுத்திருந்தார். மருத்துவமனை தாதி அறைக்குள் நுழையும் முன்பாக மாடியிலிருந்து தவறிவிழுந்த பழனிச்சாமியை ஒருகணம் நினைத்து பெருமூச்சு விட்டுவிட்டு பெரியவரைப்பார்க்க அறைக்குள் நுழைந்தாள்.

000

வா.மு.கோமு

வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கும் மேற்கே 12 கிலோ மீட்டரில் இருக்கும் வாய்ப்பாடி என்கிற கிராமத்தை சேர்ந்தவர். 91ல் திருப்பூரிலிருந்து நடுகல் என்கிற சிற்றிதழை கொண்டு வந்தவர். சமீபமாக நடுகல் இதழ் மீண்டும் காலாண்டு இதழாக வெளிவருகிறது. 91ல் இலக்கியகளம் இறங்கியவரின் சிறுகதைகள் பல்வேறு சிற்றிதழ்களில் வெளியாகத்துவங்கின. மனதில் நினைத்தவற்றை எழுத்தில் சொல்ல சிறிதும் தயக்கம் காட்டாத எழுத்தாளர் என்ற பெயரை கூடிய சீக்கிரமே பெற்றவர். கள்ளி, சாந்தாமணியும் இன்னபிற காதல் காதல் கதைகளும், எட்றா வண்டியெ, மங்கலத்து தேவதைகள், 57 சினேகிதிகள் சினேகித்த புதினம், மரப்பல்லி, சகுந்தலா வந்தாள், நாயுருவி, சயனம், ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி, தானாவதி, ராட்சசி, குடும்ப நாவல்.. ஆட்டக்காவடி, கள்ளி -2, நெருஞ்சி என்கிற நாவல்களை வெளியிட்டுள்ளார். கொங்கு வாழ்வியலை அப்பட்டமாக காட்டும் எழுத்துக்குச் சொந்தக்காரர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *