1.
பாட்டிலில் அடைபட்டிருந்ததை
பருகி முடித்தபின்தான்
உற்றுப் பார்த்தான்
“மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்ற
வாசகத்தோடு மெதுவாய் உயிரைக் குடித்துக்கொண்டிருப்பதை…
2.
என்றோ ஒருநாள்
இடப்பட்ட ஒரு பிடி கவளச்சோறுதான்
இன்றும் நன்றியோடு
வாலை ஆட்டிக்கொண்டு ஓடிவருகிறது
அலுவலகத்திற்கு அருகிலுள்ள
குப்பைத் தொட்டியிலிருந்து…
3.
தொடர் சிகிச்சையில்
குணமாகி வீடு திரும்பிய
சரீரத்தின் மீதுதான்
எத்தனை வலிகள் மொய்க்கிறது
நலம் விசாரிப்பென்ற பெயர்களில்…
4.
அப்பா அடையாளம்
காட்டிய ஆற்றைதான்
பிள்ளைகளிடம் காண்பிக்கிறேன்
குளமென்று!
அவர்கள் பிள்ளைகளுக்கு
நாளை என்னவாயிருக்கும்???
5.
பந்தயக் குதிரைகளுடன்
தயார் நிலையிலிருக்கும்
மைதானத்தில்தான்
பதட்டத்தோடு அலைகிறது
பணப்பெட்டிகள்
6.
பரிதாபப்பட்டு
துரத்தாமல் இருந்திருந்தால்
இவ்வளவு தொலைவுகள்
பயணிக்கும் வாய்ப்பினை
நழுவ விட்டிருப்பேன்.
7.
இரத்தக் காயத்தோடு
திசைகளைத் தொலைத்து
நம்பிக்கையோடு -என் தோளில் தஞ்சமடையும் அச்சிறு பறவையிடம்
எப்படி புரியவைப்பேன்
நானும் உயிர் பயத்தில் திரிபவன்தானென்று…
++