1.
சூழ்நிலையறியாமல்
ஒரு கதவு திறப்பதும் மூடுவதுமாகவே இருக்கிறது
பிரசவ அறைக்கு வெளியில்
ஓராயிரம் தவிப்புகளுடன்
அலைமோதும் ஒருவனை பார்த்த பிறகும்.
–
2.
–
உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ள
மூன்று பேருக்கும்
ஆண் குழந்தைகளாகவே அறுவை சிகிச்சை முறையில் பிரசவமாக,
இதுவரை ஆண் குழந்தைதான் பிறக்குமென்று அதீத நம்பிக்கையிலிருந்த
நான்காவது கர்ப்பிணியின் கணவன்
பெண் குழந்தைதான்
பிறக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறான்
முந்தைய மூன்று பேரின் குழந்தைகளையும்
பிரசவ அறைக்குள் மாற்றியிருப்பார்களோ
என சந்தேகிக்கும் கிழவியின்
வெளியுலகமறியாத வார்த்தையால்.
–
3.
–
ஜன்னலோர இரண்டாவது இருக்கையில்
தனியாய் கிடக்கும் கைக்குட்டை
கடைசி இருக்கை வரையிலும்
களேபரம் செய்கிறது
இளைஞர்களாய் நிறைந்த நகரப்பேருந்தில்…
–
4.
–
நான்கு வழிச்சாலைக்காக
மரங்களை வெட்டி வீழ்த்தப்பட்ட
அதே இடத்தில்தான்
வீழ்ந்து கொண்டிருக்கிறது
விதி மீறிய வாகன ஓட்டிகளும்
விதி மீறாத வாகனங்களும்.
–
5.
–
தெளிவுபடுத்துகிறேனென
சொல்லிக்கொண்டு
குளத்தினுள் அமிழ்ந்து கிடக்கும் சேற்றைக்
கிளறும் கைகளின் எல்லா ரேகைகளிலும்
தெள்ளத்தெளிவாய் தெரிகிறது
மீன்பிடிப்பதற்கான அறிகுறி.
–
6.
–
சிதிலமடைந்த சுவரை
ஒப்பனை செய்யும் வெளிப்பூச்சுகள்
சுவரெங்கும் பரவிக்கிடக்கும்
கீறல்களில் தெரியும் கானுயிர்களை மட்டும்
அப்படியே விட்டு வைத்திருக்கிறது
குழந்தைகளின் நினைவாக …..
–
7.
–
மின்னணு தராசுகளை
கையாளும் போதுதான்
மிகத் துல்லியமாக தெரிகிறது சிலரது குணங்களும்…
++
கோவை ஆனந்தன்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகிலுள்ள குமாரபாளையம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1981 ஏப்ரல் 22 ல் பிறந்துள்ளார்,ஆரம்பகால கல்வியை அவரது கிராமத்திலும், கிணத்துக்கடவு அரசுப்பள்ளியிலும் பயின்றார், பிறகு கோவையிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் இயந்திரவியல் துறையில் தொழிற்கல்வி முடித்துள்ளார்.தற்போது தனியார் நிறுவனத்தில் பணியிலுள்ளார்.