1.அப்பாவின்_நாட்கள்
நிலவு கதவு சாளரங்கள்
கட்டில் ஊஞ்சல் அலமாரிகளென
ஒவ்வொன்றாய் உருமாறி
பிள்ளைகளுக்கு முன்பே
பிள்ளைகளாய் வளர்த்த மரங்கள்
அவர்களது இல்லங்களை அலங்கரிக்க
எதற்குமே உதவாததென
கோடாரிகளால் -அன்று
நிராகரித்து விடப்பட்ட தீக்குச்சி மரத்தில்
குடித்தனமிருக்கும் பறவைகளோடுதான்
ஒவ்வொரு நாளும் நகர்கிறது
பிள்ளைகளால் நிராகரிக்கப்பட்ட
அப்பாவின் நாட்கள்.
2.
இது நன்செய்யா? புன்செய்யா?
எத்தனை அடியில் நீர் கிடைக்கும்?
நல்ல தண்ணீரா?
உப்புத்தண்ணீரா?என்று
எல்லா விவரங்களையும்
வினவும் பணக்கட்டுகளிடம்
உண்மை நிலவரங்களை
உறுபடுத்திய கருப்பு தேகத்தை
ஒரு நொடியில் கலவரப்படுத்தியது
அதி விரைவுச்சாலைக்காக
நிலங்களை கையகப்படுத்தும் செய்தி.
3.
கருப்பசாமி தோட்டம்
கந்தசாமி தோட்டம்
எதுவென்று கேட்கும்போதெல்லாம்
திருத்திருவென விழித்த ஊராரெல்லாம்
பட்டென்று பதில் சொல்கின்றனர்
எல்லா சாமிகளின் தோட்டங்களும்
ஒன்றாய் இணைந்து
வீட்டுமனைகளாய் மின்னும் -ஓர்
ஆங்கிலப் பெயரைச்சொல்லி
விசாரிக்கும் போது.
4.
மனிதர்களைப்போல்
எந்தப்பறவையும்
துதி பாடுவதில்லை
அசையும் சிறகுகளைப் பார்த்துதான்-தானும்
பறக்க கற்றுக்கொண்டேனென்று….
5.
அடைக்கலம் தந்த கிளைகளை எச்சங்களால் அசிங்கப்படுத்தினாலும்
எப்போதாவது
கழுவி பறவைகளையும் பரிசுத்தமாக்கி விடுகிறது
பெய்யும் மழை.…
6.
அறுபது வினாடிகள்
தடுத்து நிறுத்தும்
சிவப்பு விளக்கின் ஒளியில்
அழுக்கு படிந்த
கிழிந்த ஆடையுடன்
ஓடிவரும் சிறுமி
தன் வாழ்வுக்கான வெளிச்சத்தை
இரு கைகளை ஏந்தி யாசகம் கேட்கிறாள்,
ஐந்து ரூபாய் நாணயத்தை
அறை மனதுடன் சட்டைப்பைக்குள்
துழாவும் போதே
பச்சைவிளக்கு கண்ணிமைக்க
அங்கிருந்து விரையும் ஊர்தியை
உற்றுப்பார்க்கும் சிறுமிக்காக
இடப்பக்கத்திலிருந்து
வலப்பக்கமாய் குறுக்கிடும் சாலையில்
மீண்டும் ஒளிர்கிறது
சிவப்புவிளக்கு.
000
கோவை ஆனந்தன்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகிலுள்ள குமாரபாளையம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1981 ஏப்ரல் 22 ல் பிறந்துள்ளார்,ஆரம்பகால கல்வியை அவரது கிராமத்திலும், கிணத்துக்கடவு அரசுப்பள்ளியிலும் பயின்றார், பிறகு கோவையிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் இயந்திரவியல் துறையில் தொழிற்கல்வி முடித்துள்ளார்.தற்போது தனியார் நிறுவனத்தில் பணியிலுள்ளார்.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக விவசாயத்தை பாடு பொருளாக கொண்டு எழுதப்பட்ட “வேர்களின் உயிர்” கவிதைத்தொகுப்பே இவரது முதல் கவிதைத் தொகுப்பாகும். விரைவில் ஹைக்கூ தொகுப்பொன்றும், சிறுகதை தொகுப்பொன்றும் விரைவில் வெளிவர உள்ளது.