1.
பலவீனமானவையென
நினைத்து
முழு பலத்தையும்
பிரயோகித்த களைப்பில்,
இதுவரை மெளனமாகவேயிருந்த
உதடுகளின் பெரும்பலத்தை
அறியாமலேயே கடந்துவிடுகிறது
வார்த்தைகளாய் கொட்டித்தீர்த்த புயல்
2.
கொஞ்சநேரத்திற்கு முன்தான்
தாகத்தோடு அவ்வளவு நீரை
இருகைகளால் சிந்தாமல் அள்ளிப்பருகினேன்
இப்போது
உடையெல்லாம் நனைந்து
தொப்பறையாய் கிடக்கிறது
அறிவிப்பின்றி வந்த
மழையால்.
3.
இப்படி தலை துவட்டி விடுவாயென்று!
தெரிந்திருந்தால் -ஓடி ஒழிந்திருக்கமாட்டேன்
லேசான தூறல் மழைக்கும்.
4.
பத்துவிரல்களால் பதறியடித்து பண்டிதம் செய்வதை அறிந்தபின்தான்,
மழைக்காலமெனத் தெரிந்தும்
வீட்டிலேயே வைத்துப்போகிறேன்
விடிந்ததிலிருந்தே நீ ஞாபகப்படுத்திய குடையை.
5.
கூட்டமாய் திரண்டு நகரும்
மேகங்களைக் கண்டு
வேகத்தை அதிகரித்து
இடத்தை நெருங்கும் கடைசிநிமிடத்தில் சிறைபட்டுக்கொண்டேன்
சொர்ரென பெய்யும் அடைமழையில்.
6.
முன்னொரு நாளில்
உன் உபசரிப்பில் திக்குமுக்காடிய மழைத்துளிகள்தான்
மீண்டும் வீட்டுக்கு வருகிறது
நீ கொடுத்தனுப்பிய
குடையை குளிப்பாட்டியவாறு.
7.
கடும் வறட்சியினால்
ஊரைக் காலி செய்து
சாரை சாரையாய்
வெளியேறிய சனங்களோடு
அகதிகளாய் போன
வளர்ப்பு பிராணிகள் எதுவும்
எட்டிக்கூடப் பார்க்கவில்லை
இத்தனை மழைபெய்த பிறகும்.
00
கோவை ஆனந்தன்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகிலுள்ள குமாரபாளையம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1981 ஏப்ரல் 22 ல் பிறந்துள்ளார்,ஆரம்பகால கல்வியை அவரது கிராமத்திலும், கிணத்துக்கடவு அரசுப்பள்ளியிலும் பயின்றார், பிறகு கோவையிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் இயந்திரவியல் துறையில் தொழிற்கல்வி முடித்துள்ளார்.தற்போது தனியார் நிறுவனத்தில் பணியிலுள்ளார்.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக விவசாயத்தை பாடு பொருளாக கொண்டு எழுதப்பட்ட “வேர்களின் உயிர்” கவிதைத்தொகுப்பே இவரது முதல் கவிதைத் தொகுப்பாகும். விரைவில் ஹைக்கூ தொகுப்பொன்றும், சிறுகதை தொகுப்பொன்றும் விரைவில் வெளிவர உள்ளது.