1.
சம்பாதிக்கத்
தெரிந்தவர்களைக் காட்டிலும்
சாப்பிடத் தெரிந்தவர்களால்தான்
பருக்கைகள்கூட வீணாவதில்லை
உயர்தர உணவகங்களில்…..
2.
பிள்ளைக்கு
சோறுட்டும் போதெல்லாம் நாள் தவறாமல்
வந்து விடுகிறது
இரண்டு காகங்கள்
ஒரு வேளை
முதியோர் இல்லத்தில் விடப்பட்ட தாத்தா பாட்டியாய்
இருக்குமோ!
3.
நிராகரிப்பதென முடிவெடுத்தபின்
தயக்கமெதற்கு
சட்டென்று முடிவெடுத்துவிடுங்கள்
புறக்கணிப்பதாய்….
4.
கரையோரம் வருவதும் போவதுமாயிருக்கும் மீன்களை
பார்த்த மரங்கள்,
கரையேற முடியாமல்தான் திரும்புகிறதென்று
ஒவ்வொரு இலைகளாய் உதிர்க்கிறது
நீராலானதுதான்
மீன்களின் உலகமென்பதை அறியாமல்…..
5.
நட்சத்திரங்களை மட்டுமல்ல
திரை நட்சத்திரங்களை
இரசிப்பதற்கும்
வறுமையில் இருப்பவர்கள்தான்
தேவைப்படுகிறார்கள்…
6.
கையேந்தி யாசகம்
கேட்பதென்று முடிவானபின்
ஒருபோதும் தடையாக இருப்பதில்லை
தெரியாத மொழிகளும்…
7.
குழந்தைகளும் உடமைகளும்
காணாமல் போகும்
திருவிழாக்களில்தான்
ப்ரியமானதொன்றை தெரிந்தே
தொலைத்துவிடுகிறோம்.


