1.

எங்கோ எப்போதோ

பெய்த ஒரு மழைக்காக

எவரோ எழுதிய ஒரு கவிதை…!

வாசித்து முடிக்கையில்

மன வாசலில் மழைத்துளிகள்..!

காகிதத்தில் ஒரு கவிதை…!

யாருக்குத் தெரியும்…

இது வாசிக்கப்படும் வேளையில்

அங்கேயும் வரக்கூடும்

ஒரு பெரு மழையும்

அழகிய கவிதை ஒன்றும்…!

2.

தலைப்புகளை வெறுக்கிறேன்…!

தலைப்புகளின் தலையீட்டில் தடையுறுகின்றது கவிதை…!

சிந்தனைச் சிறகுகளின் மேல்

சிறு பிள்ளையென அது

 அமர்ந்து கொள்கிறது…!

உணர்வும் மொழியும்

காதல் கொண்டு

புணர்வதே கவிதை..!

உணர்வுகளின்

கை கால்களில் விலங்கிட்டு

மொழியினைப் புணரச் சொல்கிறது

தலைப்பு…!

பெற்ற பிள்ளைக்கு

பெயர் வைப்பதை விட்டு விட்டு

பெயர் வைக்கிறேன்

பெற்றுக் கொடு என்கிறது தலைப்பு..!

கவிதை ஆச்சரியப் பரிசு…!

தலைப்போ அதன் ரகசியத்தை அம்பலப்படுத்துகிறது…!

தலைப்பில்லாத கவிதைகள்

படிப்பவனைப் பரவசமூட்டுகின்றன…

எதிர்பாராத முத்தம் போல..!

3.

மறந்து விட்டு

பேருந்திலிருந்து

இறங்கிப் போய்விட்டது

குழந்தை…!

விளையாடுவதற்கு

இன்னொரு

குழந்தையைத் தேடிக்

காற்றில்

அலைந்து கொண்டிருக்கிறது

பலூன் ஒன்று….!

4.

எப்போது உணவருந்த

அழைத்தாலும்

“அவனுக்கு முதலில் வை” என்பதே

அப்பாவின் தேசிய கீதம்…!

அவரில்லாத வீட்டில் ஒரு அமாவாசை…!

படையலிட்டு

மாடியில் வைத்துவிட்டேன்…!

நேரம் கரைந்ததேயன்றி

காகம் கரையும் குரல்

கேட்கவேயில்லை…!

“வந்துடுவார் வாடா” எனச் சொல்லி

பந்தியிட்டாள் அம்மா எனக்கு…!

மனக் கசப்போடு

இனிப்பெடுத்து

வாயில் வைத்தேன்…!

எட்டிப் பார்த்து விட்டு

அம்மா சொன்னாள்

“உங்க அப்பா வந்துட்டாரு டா”…!

கசந்த இனிப்பு

உவர்ப்பானது இப்போது…!

5.

எதிர்வீட்டுப்

பாத்திரங்களின்

விளிம்பினில்

பட்டுத் தெறித்த

மழைத்துளி ஒன்றில்

அழிந்து விட்டன

என் அத்தனை

மழைக் கவிதைகளும்….!

6.

  மதம்

அதிகாரத்தின் மீதான

ஆறாத ஆசை

ஆறாக ஓடிய வழியொன்றில்

தவறென்று சொல்லிக்

காலைத் தட்டி விட்டது கல்லொன்று…!

எடுத்து வைத்து மலர் தூவினேன்…!

பின்னால் வந்ததொருப் பெருங்கூட்டம்..‌.!

கடவுளானது கல்..!

தலைவனானேன் நான்…!

000

கௌ.அஸ்வின் பிரபு

பிறந்தது : மதுரை

வசிப்பது : திருப்பூர்

பணி.        : தினக்கூலி

படிப்பு.      :பத்தாம் வகுப்பு

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *