1

*வேட்கை*

முறை சொல்லி

அழைக்கத் தெரியாத வயது

அப்பா அடிக்கடி திருத்திச் சொல்லியும்  

அனிச்சைக்குப் பழகியிருந்தன உறவுகள்

,

கார்த்திகை மாதம்

பிரசவிக்கப் போவதை

கருப்பசாமி கோவில்

ஒட்டுப்புல் காட்டிக் கொடுக்கும்.

,

பாலித்தின் பை நிரம்ப

ஒட்டுப்புல் உருவி

வீடு சேர்வது வருடாந்திர வழக்கம்.

,

முறைப் பெண்களுக்கு

தலையில் போட வேண்டுமென்பதே

உள்ளூர வேட்கை

யார் எதுவென்பது விளங்காததால்

கையில் சிக்குபவர்களுக்கு எல்லாம்

அன்று

முடி சிக்கு தான்.

,

வாழ்த்துக்களும் 

வசவுகளும் நிறைய வரும்.

,

திரும்பத் தேய்க்க

எண்ணுபவர்களிடமிருந்து

தேங்காய் எண்ணெய் பாதுகாக்கும்.

,

ஊர் கடையைச் சுற்றி

சிரட்டை தேடியும்

ஏற்றி வைத்த வீடுகளில்

மெழுகுவர்த்தி திருடியும்

இரவு எட்டு மணிக்குள்

தயாராகி விடுவோம்

கார்த்திகை கொண்டாட்டத்திற்கு.

,

டூவீலர் டயர் கொளுத்தி

வீதிகளில்

உலா  வரும்

ஊர் பசங்களுக்கு அன்றே சிவராத்திரி.

2.

*இன்னும் சொல்லாதவை*

,

பக்கத்து ஊர்

ஆட்டமென்பதால்

பொழுதைத் தாண்டி

நேரம்

கூடுதலாகியிருந்தது.

,

வீடு நுழையும் முன்பான

தினசரி அச்சம் அன்றும்

தோளேறி விட்டிருந்தது

,

வாசலில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த

பாதி பருகிய காபியில்

மீதியை ஈக்கள் சுவைத்துக் கொண்டிருந்தன.

,

புகையோடும்

அழுகையோடும்

அடுப்பங்கூடத்திலிருந்து

அம்மாவின் புலம்பல்

,

எப்போதுமான

கோபத்தோடு

அப்பா

சேரில் அமர்ந்திருந்தார்.

,

எதுவும் சொல்லாத போதும் அரங்கேறியிருப்பதை 

அனுமானித்துக் கொள்ள முடிந்தது.

,

கொஞ்ச நேர

அமைதியை உடைத்த அம்மா

மாறா காப்பியை எடுத்துட்டு வா

சூடு பண்ணி்த் தாரேன்

என்றாள்.

,

கொடுப்பதற்கு முன்பே

எச்சிலோடு விழுங்கியிருந்தேன்

இன்னும் சொல்லாததையும்..

,

3

 *உண்டியல்*

,

பள்ளி விடுமுறை

சேக்காலிகளின் அழைப்பு

விடியலை

துரிதப்படுத்தியிருந்தது.

,

ஆறிப்போன கடுங்காப்பியை

மீண்டும்

சூடேற்றி நீட்டினாள்

அம்மா

,

நாக்கில் இனிப்பு

கரையுமுன்பே

மைதானம் நோக்கிக்

கால்கள் எத்தனித்ததன

,

வாங்கித் திண்ண

காசு வாங்குவது எப்போதும் வழக்கம்

அதையும் அன்று

விழுங்கியிருந்தது

கிரிக்கெட்

,

ஆரம்பித்த ஐந்தாவது ஓவரே

பந்து பஞ்சர் ஆனது.

பதினைந்து நிமிடப்

புலம்பலுக்கு பின்பு

பங்கு பிரித்து

பந்து வாங்குவதென்று

கூட்டு முடிவு.

,

இருப்பு உள்ளவர்கள்

விலகி நிற்பதென்பது

எல்லா வயதிற்குமான வியாதி போலும்.

ஆர்வமுள்ளவர்கள் அவர்களால்

முடிந்ததை கொடுத்து உதவ

என்னைப் போன்றவர்கள்

எடுத்து வாரேன் என்று மெல்ல உருவி ஓடினோம்

,

தண்ணீர் குடிக்கப் போகும் சாக்கில்

வீடு சென்று தேடுவதென்பது

முன் யோசனை

,

யூகித்த இடமெல்லாம்

துலாவியும்

சில்லரை தேறவில்லை.

,

விறகடுப்பு அருகே

பாதிக்கும் குறைவாக

மூடி இருந்தது கடுகு டப்பா.

திறக்கும் முன்பே தெரிவித்து விட்டது

பணம் இருப்பதற்கான அறிகுறியை

,

பந்து வாங்குவதற்கான

என் பங்கு ரெடி.

திரும்பத் திருடுவதற்கான

காரணமும் ரெடி.

,

தொடர் வருகையால்

ஒரு கட்டத்தில்

கடுகு டப்பா எனது

உண்டியலாகவே மாறியிருந்தது…

000

க. மணிமாறன்

சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் மார்க்கநாதபுரம் கிராமம். முதுகலை நுண்ணுயிரியல் பயின்று தற்போது பல்லடத்தில் பணிபுரிந்து வருகிறேன்.

என்னுள் நூறு கனா எனும் ஒரு கவிதை தொகுப்பை 2022-ல் வெளியிட்டுள்ளேன். கடந்த இரண்டு வருடங்களாக புத்தக வாசிப்பு மற்றும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு நவீன கவிதைகளை கற்றுக் கொள்ளும் உழைப்பில் இலக்கியத்தில் இயங்கி வருகிறேன்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *