கருக்கு நாவல் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பாமா அவர்களின் மற்றுமொரு சிறந்த நாவல்.

சோளகர் தொட்டி நாவலுக்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த நாவல்.

அவ்வளவு எளிதாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் எளிதாகக் கடந்து விட இயலாது.

ஒரு புதிய மொழி இந்நாவல் வழியாக வெளிப்படுகிறது. தலித்திய பெண்ணிய மொழி. வெள்ளையம்மாளின் பேத்தி சொல்வதாக இந்நாவல் அமைந்துள்ளது.

பெண்களின் அத்தனை வாதைகளும் ரத்தமும் சதையுமாக விவரிக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு வலி.

ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்பது இன்னமும் தொடர்வதே காலத்தின் கொடுமை.

எப்படி இப்பெண்கள் இவ்வளவு வலியையும் தாங்கிக் கொண்டு இத்தனை வேலைகளைச் செய்கிறார்கள் என்பதே ஒரு அதிசயம்.

அதுவும் வளரும் அக்காக்கள் இன்னுமொரு அம்மாவாகி விடுகிறார்கள்.

குழந்தை வளர்ப்பிலேயே இந்த ஆண், பெண் பாகுபாடு தொடங்கி விடுகிறது. உதாரணமாக இந்த பத்தியைப் பாருங்கள்:

பெயல்களுக்குத்தான் மதிப்பு. அவனுக தின்னுட்டு தின்னுட்டு வெளயாடப் போவானுக. பொம்பளப் பிள்ளைகதான் வீட்ல இருந்து, சட்டி வட்டி வெளக்கி, தண்ணி எடுத்து, வீடு கூட்டி, வெறகு பெறக்கி, துணி தொவச்சு, இப்படி சதா வேல செஞ்சிக்கிட்டு கெடக்கனும். இந்த வேல முடிஞ்சா கைப்பிள்ளையைத் தூக்கிட்டு வெளாடப் போகனும். குழந்தைகள் மேல் திணிக்கப்படும் எவ்வளவு பெரிய வன்முறை இது.

தலித்துகளிலேயே பறையர்களுக்கு ஒன்று, சக்கிலியர்களுக்கு மற்றொன்று என எத்தனை மறுக்கப்பட்ட உரிமைகள்.

பின்னட்டை சொல்வது அத்தனையும் இந்நாவலில் உள்ளது:

தலித் பெண் குழந்தைகளின் பிறப்பு, வளர்ப்பு, விளையாட்டு, சடங்குகள், மதமாற்றம், வாழ்க்கை முறை, உழைப்பு, படிப்பு, கோவில், திருவிழாக்கள், நாடகம், பொழுதுபோக்கு, குடும்பக்கட்டுப்பாடு, குருட்டு நம்பிக்கைகள், பேய் பிடித்து ஆடுதல், கணவன் மனைவி சண்டைகள், பெண்களின் இழிநிலை, மணமுறிவு, மறுமணம் பற்றிய மரபுகள், ஆதிக்க சாதியினரின் அடக்கு முறைகள், தலித் இனப் பெருமைகள் போன்ற அச்சு அசலான வாழ்வனுபவங்கள் வாசகர் கண்முன் சித்திரங்களாக விரிகின்றன.

பேய் பிடித்து ஆடுதல் பற்றி மட்டுமே தனியாக ஒரு அத்தியாயம். உளவியல் காரணத்தை எளிமையாக விளக்குகிறார். ஆண்களுக்கு எத்தனையோ வழிகள். ஆனால் பெண்கள் உள்ளுக்குள் புழுங்கிப் புழுங்கி மனப் பிறழ்வுக்கு உள்ளாவதை பேய் பிடித்து விட்டது என கோடாங்கிகளை வைத்து சித்திரவதை செய்வது கொடுமை.

மருத்துவமனை இல்லாமல் பாட்டிகளே பேறு பார்த்து எத்தனை குழந்தைகளை நம் முன்னோர்கள் வளர்த்திருக்கின்றனர் என்பது ஒரு அதிசயம். காட்டு ராசாவின் பெயர்க் காரணம் நம்மை நடுங்கச் செய்கிறது. தனக்குத் தானே பேறு பார்த்து, குழந்தையை கையிலேந்தி வருவதற்கு எவ்வளவு உடல் மற்றும் மன திடம் வேண்டும்.

கணவனிடம் அடி வாங்குவது போதாது என, வேலை செய்யும் இடங்களில் ஆதிக்க சாதியினரின் சேட்டைகள். மரியம்மா செய்யாத தவறுக்கு, பஞ்சாயத்தில் தண்டனை வழங்கப் படுவது போல எத்தனையோ சம்பவங்கள்.

மத மாற்றம் செய்த பிறகும் அவர்கள் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் வரவில்லை என்பதே கசப்பான உண்மை.

பிள்ளைகள் பெரிய மனுஷி ஆனவுடன் நடக்கும் சடங்குகள் விவரமாக பதிவாகியுள்ளது.

ராக்கம்மாவின் ஆயுதம் அவளின் வாய்ப்பேச்சு. திருப்பியடிக்கும் உடல் திராணியில்லாமல், பேச்சையே ஆயுதமாகக்குகிறாள். இதுவே பெண்களின் பெரிய ஆயுதம்.

பாட்டியும் மற்ற பெண்களும் ஓட்டு போட்ட பிறகு பேசிக்கொள்வது ஆகச் சிறந்த நகைச்சுவை.

மைக்கண்ணியின் தீப்பெட்டி ஆபிஸ் அனுபவங்கள் கண்ணீரை வரவழைக்கிறது.

இத்தனைக் கஷ்டங்களுக்கு இடையிலும், இவர்கள் படிக்கும் பாட்டு மிகச் சிறப்பு. உதாரணமாக ஒன்று:

கார வீட்டுத் திருணையில

கறிக்கு மஞ்சள் ளரைக்கையிலே

என்ன பொடி தூவுனாரோ

இழுத்த ரைக்க முடியலயே‌

கல்யாணமன்று நடக்கும் அத்தனை சடங்குகளும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஆண் சாதி மாறிக் கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனால் பெண் அவ்வாறு செய்தால், அவள் படும் பாடு, நடுங்க வைக்கிறது.

அம்மாக்கமாரு என்று சொல்லப்படும் ஆதிக்க சாதிப் பெண்களின் நிலையை ஒப்பிட்டு ஆறுதலைடைகிறார்கள்.

இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்க, போதும் எனத் திடீரென நாவலை முடித்தது போலிருக்கிறது.

ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் ஆசிரியர் பெண்களுக்கு சொல்ல வரும் அறிவுரை தனியாகத் தெரிகிறது.

ஆசிரியரின் தன் வரலாற்றுக் கூறுகள் பல இடங்களில் தெரிகிறது.

நாவல் நடக்கும் காலம் பற்றி ஒரு குறிப்பு மட்டும் வருகிறது, ஓட்டுப் போடும் அத்தியாயத்தில் மட்டும்.

இது எல்லாவற்றிற்கும் தீர்வு ஒன்றுதான் எனத் தோன்றுகிறது.

சிறப்பான வாசிப்பு அனுபவம்.

00

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *