மூக்கில் ஒழுகிய சளியை உறிஞ்சி தொண்டைக்கு வந்த சளியை முழுங்கி பள்ளியின் மணி அடிப்பதற்காக காத்திருந்தான்.
சாயங்கால மணி அடித்தது.
தேன்கூட்டில் கல் அடித்தது போன்று மாணவர்கள் சிதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
நரம்பு பையில் அட்டை கிழிந்த புத்தகம், நெளிந்த தட்டு, தெரியாமல் எடுத்து வந்த சாப்பீஸ் இருந்தன.
பையை முதுகில் போட்டுக்கொண்டு மூக்கில் வந்த சளியை உறிஞ்சி ருசி பார்த்தவாறு வெறுங்காலில் நடந்தான். ஆண்டு முழுவதும் மூக்கில் சளி ஒழுகியவாறு இருப்பான்.
நண்பர்களோடு பேசாமல் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு தனியாக நடந்தான். பள்ளியில் தனக்கு தராமல் அவர்கள் ஜவ்வு மிட்டாய் தின்னு வெறுப்பேத்தியதையும், நாளைக்கு அதே மாதிரி தானும் அவர்களை பார்க்க வைத்துக் கொண்டே திங்கவேண்டும் என நினைத்துக் கொண்டான்.
கால்கள் சக்கரம் போல் சுழல வேகமாக நடந்தான். சட்டையில் அறுந்துபோன பட்டன்களுக்குப் பதிலாக ஊக்கு குத்தியிருந்ததால் ஒரு கை மேலேயும், இன்னொரு கை கீழேயும் இருந்தது. டவுசர் அருணாகயிறு உதவியால் இடுப்பில் நின்று கொண்டிருந்தது.
அந்த பெரிய வீட்டின் கேட்டில் ஏதோ சப்தம் கேட்க திடுக்கிட்டு பார்த்தான். கேட்டின் இடைவெளியில் தலையை நுழைத்து வெளியே வர முடியாமல் ஒரு நாய்க்குட்டி கத்திக் கொண்டிருந்தது. சுற்றிலும் பார்த்தான் . வீட்டில் யாரும் இருப்பது போல் தெரியவில்லை.
மெல்ல அருகில் போனான். பிறந்து ஒரு வாரம் இருக்கும். வெள்ளைவெளேர்னு சடையாய் இருந்தது. நாய் குட்டியா? முயல் குட்டியா? யோசித்தான்.
அது இவனைப் பார்த்து கத்தியது பயத்தைக் கொடுத்தது. குனிந்து தலையை தடவினான். மெத்துமெத்துன்னு இருந்தது. மூக்கு ஒழுகுவதை சத்தமாக உறியாமல் கட்டுபடுத்திக் கொண்டு மெல்ல உறிஞ்சினான்.
கேட்டை சற்று தள்ளி குட்டியை வெளியே எடுத்தான். பொம்மை போல இருந்த நாய்க்குட்டி கத்துவதை நிறுத்திவிட்டு வாலை ஆட்டியது. வீட்டின் உள்ளிலிருந்து யாரும் வருகிறார்களா என்ற பயத்தில் கண்ணை விரித்து கூர்ந்து கேட்டான்.
யாரும் வரவில்லை.
அதை முகத்தருகில் கொண்டு வந்தான். நாக்கை நீட்டி அவன் மூக்கை நக்கியது. மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டான். வீட்டிலிருந்து யாரோ வருவது போல் சப்தம் கேட்க பயத்தில் வெடவெடக்க குட்டியை நரம்பு பையில் போட்டுக்கொண்டே ஓட ஆரம்பித்தான்.
பயத்துடன் திரும்பி பார்த்தான். யாரும் வரவில்லை.
வீட்டு வாசலுக்கு வந்துதான் அதை வெளியே எடுத்தான். அது அதிகமாக சப்தம் போட்டது. மூன்றாம் வகுப்பு தமிழ்புத்தகம் மூத்திரத்தில் நனைந்து போயிருந்தது.புத்தகத்தை சட்டையில் துடைத்து விட்டு பைக்குள் வைத்தான்.
நாய்க்குட்டியின் சப்தத்தைக் கேட்ட நாட்டுநாய்கள் அதனை பார்த்து ஏரியா கெத்தைகாட்டி பயமுறுத்த கல் எடுத்து எறிந்தான். கத்திக் கொண்டு ஓடின.
குடிசையின் பின்பக்கம் கருவவிறகை வெட்டிக் கொண்டிருந்த அம்மா சப்தம் கேட்டு வந்தாள்.
அவன் கையில் இருந்தததைப் பார்த்துஆச்சர்யமாகக் கேட்டாள்.
டேய் சின்னவண்டு முயல் குட்டியாடா?
அம்மோவ்.. இது நாக்குட்டி.
கையில் எடுத்து பார்த்து இது ஏதடா? என்றாள்.
ஸ்கூல் போற வழில ஒரு பெரிய கேட் போட்ட வீடு இருக்கும்ல. அங்க வெளீல வர பாத்துச்சு. நாம வளக்கலாம்னு புடிச்சுட்டு வந்தேன்.
புதுசா யாரோ இப்பத்தான் குடி வந்துருக்காங்க போல.
நீ யார்ட்டயும் சொல்லாத. நாமளே வளத்துக்கலாம்.
குட்டி கத்த ஆரம்பித்தது.
பசி போலருக்கு. சோறு போட்டு குழம்ப ஊத்தி பிசஞ்சு எடுத்துட்டு வாம்மாவ்.
ஒரு பிளாஸ்டிக் மூடியில் கொண்டு வந்து வைத்தாள். மோந்து பார்த்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டது.
ரேசன் அரிசி சோறு வச்சா சாப்பிடாது போல.
டே. நம்பளே அதானே சப்படறோம். பக்கத்துல இருக்கற செவலநாய் எதப்போட்டாலும் திங்குது.
இது வெளிநாட்டு நாய் அம்மா.
கலர் சாப்பீஸை கல்லில் தேய்த்து தண்ணிர்விட்டு கூழாக்கி ஒரு ரூபாய் நாணய வடிவில் குட்டியின் நெற்றியில் பொட்டு வைத்தான். குட்டி ரொம்ப அழகாயிருந்தது.
இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராதுடா வண்டு. போயி விட்டுட்டு வந்துடு.
நாமளே வச்சிக்கலாம்மா. போக போக ரேசன் அரிசி சோறு சாப்பிடும். ம்மா. இதுக்கு ஒரு பேரு வை.
அவள் யோசித்து ” மணி ”என்றாள்.
இவன் கடுப்பாகி ஏம்மா செத்துப்போன அப்பா பேர வக்கிற. இது வெளிநாட்டு நாய். வெளிநாட்டு பேர் வச்சாதான் இதுக்கு காதுல விழும்.
அப்ப நீயே வை அம்மா கடுப்பில் சொன்னாள்.
ராக்கி.. ராக்கி.. கூப்பிட்டான்.
அது தலையைத் திருப்பி இவனைப் பார்த்தது.
டேய் சின்னவண்டு நீ ராக்கின்னு சொன்னதும் திரும்பி பாக்குதுடா. சொல்லி அதை ராக்கி ராக்கி என்று கூப்பிட்டுக் கொஞ்சினாள்.
அது ஏதும் சாப்பிடாமலே இருப்பது அவனுக்கு கஷ்டமாக இருந்தது. பக்கத்திலேயே படுக்க வைத்துக் கொண்டான். இரவில் நடுநடுவே எழுந்து பார்த்துக் கொண்டான். குளிருமோ என்று நினைத்து பொங்கலுக்கு ரேசனில் கொடுத்த அம்மா புடவையை குட்டிக்கு போர்த்திவிட்டான்.
கண் விழித்திருந்த குட்டியும் இவனையே பார்த்துக் கொண்டிருந்தது. நாளைக்கு ஸ்கூலுக்கு லீவு போட வேண்டியதுதான். இதோட வெளையாடனும். அம்மாட்ட என்ன காரணம் சொல்லி லீவ் போடறது. போனதடவை வயறுவலின்னு சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அம்மா எப்போதும் ஒரே மாதிரி இருக்கமாட்டாள். சில நேரம் இவனை அடித்து தரதரவென இழுத்து போய் ஸ்கூல் வாசலில் விடுவாள்.
பக்குவமாத்தான் சொல்லி சம்மதிக்க வைக்க வேண்டும். யோசித்துக் கொண்டே தூங்கிப் போனான்.
வரடீயை அம்மா போட்டு கொடுத்தாள். எழுந்து பல் விளக்கி விட்டு குடித்தான். குட்டி இவனையே பார்த்துக் கொண்டிருந்தது.
அம்மா.. இது எதுமே சாப்பிடாம இருக்கே. பால் வாங்கி கொடுக்கலாமா?
பாலா? இங்க குடிக்க கூழே இல்லே.கொப்பிளிக்க பன்னீர் கேக்குதாடா?
நாய்க்குட்டியின் வயிறை பாவமாகப் பார்த்தான். அம்மாவுக்கும் அதன் மீது பரிதாபம் ஏற்பட்டது. முந்தானையில் முடிஞ்சு வச்சிருந்த பத்துரூபாயை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
என்னடா.. புதுசா பாலெல்லாம் வாங்குற.. விருந்தாடி வந்துருக்காங்களா?
நாய்க்குட்டிக்கு செட்டியாரே.
நாய்க்குட்டிக்கா?
ஒரே ஓட்டமாக ஓடி வாய் உடைந்த மண்சட்டியில் பாலை ஊற்றினான். பால் வாசனை கண்ட குட்டி வேகமாக ஓடிவந்து பாலை நக்கி நக்கி குடித்தது.
அம்மா ஆச்சர்யமாக பார்த்துவிட்டு மனதுக்குள் கணக்கு போட ஆரம்பித்தாள். மூணுவேளைக்கு பால் வாங்கினால் அதுக்கே வர்ற காசில பாதி போய்டும். எல்லா நாளும் கூலி வேலை கிடைப்பதே கஷ்டம். இதில் எப்படி வளப்பது? முதல்ல இதைக் கொண்டுபோய் வுட்டுட்டு வரச்சொல்லணும். ஆனா இந்தப் பயகிட்ட எப்படி சொல்றது?
அவன் எங்கே போனாலும் குட்டியும் அவன் பின்னாலேயே ஓடிவந்தது. நாட்டு நாய்கள் அருகில் வந்தால் பயத்தில் குனிந்து பாவமாக உடலை குறுக்கி காலிடுக்கில் ஒளிந்து கொள்ளும். அவன் வெளியயிருக்க காட்டுக்குப் போனால் அவன் பின்னாடியே இதுவும் ஓடும். அதை தூக்கி வைத்துக் கொண்டு எல்லா இடத்திலும் திரிவான்.
அம்மா திடும்மென சொன்னாள். இத எங்கருந்து புடிச்சாந்தியோ அங்கய போய் வுட்டுடு. இதுக்கு பால் வாங்கி ஊத்தற அளவுக்கு நாம பெரிய ஆளில்ல. நமக்கு எதுக்கு இதெல்லாம்.
அவன் அழுதுவிடுவான் போலிருந்தான்.
இது அந்த வூட்ல எவ்ளோ சொகுசா இருந்துருக்கும். நம்மால பாவம் ஒரு உசிரு செத்துடக்கூடாதுல்ல.
அவன் நோட்டில் பென்சிலால் நாய்க்குட்டியின் படம் வரைந்து அதற்கு கீழே ராக்கி என்று பெயர் எழுதிக்கொண்டிருந்தான்.
டேய். நான் சொல்றது காதுல வுழுதா? இல்ல நான் கொண்டுபோய் வுட்டுட்டு வரவா?
குட்டி இவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்தது.
அவன் படம் வரைந்த பேப்பரின் பின் பக்கம் கொஞ்சம் சோறு எடுத்து தடவி காலண்டரில் ஒட்டினான்.
அம்மா நாய்க்குட்டியையே பார்த்துக் கொண்டிருந்தாள். நாயை விடுவதிலும் விருப்பம் இல்லை. செலவு செய்யும் அளவுக்கு சக்தியும் இல்லை.
அவன் குட்டியை பார்த்தான்.
இந்த ஒரே நாளில் வெள்ளையாக இருந்த அது அழுக்கு கலருக்கு மாறியிருந்தது. பால் ஊத்தலைன்னா செத்துடுமோ?
நடந்து போய் துணி துவைக்கும் கல்லில் அமர்ந்தான். குட்டி ஓடிவந்து இவன் காலருகில் நின்றது. குனிந்து எடுத்து அதன் முகத்திற்கு நேராக கேட்டான்.
பால் தான் குடிப்பியா?
மாடிவீடுதான் பிடிக்குமா?
எங்ககூடல்லாம் இருக்க மாட்டியா?
ரேசன் அரிசி சோறு சாப்பிடமாட்டியா?
அது கண்ணை சிமிட்டி மெல்ல வாலை ஆட்டி இவன் மூக்கோடு உரசியது.
ஒரே நாளில் கொஞ்சம் இளைத்து போனதுபோல் தெரிந்தது.
சட்டென எழுந்தான். குட்டியை தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
அவன் தோளின் பின்பக்கமாக அது குடிசையையே பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த பெரிய கேட் போட்ட வீடு திறந்திருந்தது. உள்ளே ஆட்கள் இருப்பதும், டிவி ஓடும் சத்தமும் கேட்டது. மெல்ல குட்டியை இறக்கி கேட் வாசலில் வைத்தான். அது நிமிர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தது
திரும்பி பார்க்காமல் நடந்தான். மூக்கிலிருந்த வழிந்த சளியை உறிஞ்சி தொண்டைக்குள் இழுத்துக் கொண்டான்.
000
என் பெயர் தமிழ் கணேஷ். தஞ்சையில் வசிக்கிறேன். தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் பணிபுரிந்து வருகிறேன். சிறுகதைகள் குறுங்கதைகள் எழுதி வருகிறேன். இணைய இதழ்கள் வாசகசாலை, நடுகல், சொல்வனத்தில் வெளிவந்துள்ளது. சில குறுபடங்களும் சினிமாக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன.